தாமோதரம்பிள்ளை சனாதனன் எழுதிய, “நவீனத்துவமும் யாழ்ப்பாணத்தில் காண்பியக் கலைப்பயில்வும் (1920-1990)” எனும் பெயரிலான நூல் மிக அண்மையில் வெளிவந்து, அதை வாசிக்க நேர்ந்தது. யாழ்ப்பாணத்தின் கலை வரலாறு பற்றியதாக அமையும் இந்த ஆய்வுநூல், காலனிய மற்றும் பின்காலனியகால யாழ்ப்பாணத் தீபகற்பம், நவீன கலைப் போசிப்பிற்கும், கலைச் செயற்பாட்டுக்குமான மையமாக அமையுமாற்றையும் அவற்றிற்கான பின்புலம் மற்றும் பேறுகளை புலமைசார் விசாரணைக்கு உட்படுத்துவதாயும் அமைந்துள்ளது. காலனியவாத, தேசியவாத முரண்களின் பின்புலத்தில் தோன்றிய நவீனமயமாதல் படிமுறையில், காண்பியக் கலையில் நிகழ்ந்தேறிய பன்முகத் தன்மைமிக்க அர்த்தம், அடையாளம், அழகியல் முதலாய மாற்றங்களைத் பல்துறைறைச்சங்கம ஆய்வொழுங்குநிலை நின்று யாழ்ப்பாணத்தை மையப்படுத்தியும், யாழ்ப்பாணத்துக்கப்பாலான இலங்கையின் ஏனைய பிராந்தியங்கள் மற்றும் இந்தியப் பிராந்தியங்கள் ஆகியவற்றோடும் ஊடாடியும் வாசிப்பதாய் இந்நூல் அமைகிறது.
காண்பியக் கலையின் கருத்துநிலையில் நிகழ்ந்த மாற்றங்களை, படைப்பு – படைப்பாளி – நிறுவனம் முதலாயவற்றுடன் தொடர்புறுத்தி ஆராயும் இந் நூல், பத்தொன்பதாம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தில் உருவாகிய மத்தியதரவர்க்கம் எனும் மேன்மக்கள் மற்றும் சைவ மறுமலர்ச்சி இயக்கம் முதலாக, ஆயுதப் போராட்டத்தின் எழுச்சி மற்றும் இராணுவ மயமாக்கம்வரையுமான சமூக வரலாற்று நிலவரங்கள், காண்பியக் கலைப்பயில்வில் ஏற்படுத்திய மாற்றங்கள் மற்றும் பெறுபேறுகள் குறித்தும் கவனஞ் செலுத்துகிறது.
காண்பியக் கலைக் கல்வி, அதன் பழக்கம், அது பற்றிய நுகர்வு முதலாய நிலைகளில் உண்டான மாற்றங்களினூடு சாதி முதல் தேசியம் வரையான பல்வேறு அடையாள அரசியற் கூறுகளில் உண்டான மாற்றங்களையும் இந் நூல் ஆராய்கிறது. அந்தவகையில் கலைப்பயில்வு மாற்றங்களினூடு அடையாள அரசியல் மாற்றத்தையும் இந் நூல் இனங்காட்டுகிறது.
யாழ்ப்பாண மத்தியதர வர்க்கம் தனது பொருளாதார மற்றும் அரசியல்சார் நலன்களினூடு, காலனியத்தின் விளைவாற் கிட்டிய ஓவியக் கல்வி மற்றும் மதமையக் கலையை மீள்வடிவமைப்புச் செய்ததைப் பற்றியும் இந் நூல் விபரிக்கிறது.
‘மரபும் நவீனத்துவமும் குலத்தொழிலாகக் கலையும்’, ‘நவீனத்துவமும் மாயக்காட்சிவாதமும்’, ‘காலனியமும் தேசியமும் காண்பியற் கலை பற்றிய கருத்தாடற்புலமும்’, ‘கலைப்பயில்வும் அரச உத்தியோகமும்: நடுத்தர வர்க்கமும் ஓவியத்தின் கருத்துரு மாற்றமும்’, ‘நவவேட்கையும் உருவவாதமும்’ ஆகிய ஐந்து இயல்களில் (அறிமுகம், முடிவுரை நீங்கலாக) அமைந்த இந்நூல், 208+xxiv பக்கங்களில் அமைந்துள்ளது.
அதிகம் வெளித்தெரியாதும் அறியப்படாதுமிருந்த முக்கியமான காலனியகால ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு, காண்பியக் கலைப்பயில்வை ஆராய்ந்திருப்பது நூலின் சிறப்பிற்கு வலிமை சேர்க்கிறது.
ஈழத்தில் மொழி மற்றும் இலக்கியவழி ஆய்வுக்கு, பலமானதும் புதியதுமான பாதையை இந்தநூல் திறக்கிறது. அந்தவகையில் தமிழியலாய்விலும் புதியதிசைக்கான வெளிச்சத்தினை இந் நூல் பாய்ச்சுகிறது. இந்த நூலில் உள்ள விடயங்கள் கலை இலக்கிய வரலாற்றுப் புலத்தில் தொடர்ச்சியான உரையாடலுக்குரியவை.
அரிதின் முயன்று இந்த நூலைத் தமிழில் அளித்தவர், புது தில்லி, ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கலைவரலாற்றுத்துறையில் கலாநிதிப்பட்டத்தைப் பெற்றுக்கொண்டவரும், புகழ் பெற்ற ஓவியரும், கலைவரலாற்று விமர்சகருமான யாழ். பல்கலைக்கழக நுண்கலைத்துறையின் கலைவரலாற்று விரிவுரையாளர் கலாநிதி தா. சனாதனன்.
நேர்த்தியான வடிவமைப்போடு அமைந்த இந்நூல் குமரன் புத்தக இல்லத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
ஈழத்து ஆய்வுலகில் புதிய சுவாசத்தைத் தரும் இந்த நூல், கலைவரலாற்று மாணவருக்கு மட்டுமல்லாது இலக்கிய, சமூக, பண்பாட்டு வரலாற்றாய்வாளருக்கும், கலையிலக்கிய இரசிகருக்கும் பயன்மிக்கது. அரிதின் முயன்று நூலைத் தமிழுக்களித்த நூலாசிரியருக்கு ஆய்வுலகு நன்றிக்கடன்பட்டது.
sellathuraisutharsan@gmail.com