தமிழ் சினிமாவில் பெண்கள்: கே..பாரதி எழுதிய நூல் (வெளியீடு – விகடன் பிரசுரம்) – ஒரு சிறு அறிமுகம்

மார்ச் எட்டாம் தேதி சர்வதேச மகளிர் தினம்.

கே.பாரதிLatha Ramakrishnanபெண்களே முன்னேறுங்கள்! முன்னேறுங்கள்!! – எங்கள் தங்க வைர நகைகளை வாங்கியணிந்து விடுதலையை உணருங்கள்!!! இப்படி பெண்விடுதலையைப் பட்டவர்த்தனமாக வர்த்தகப் பொருளாக்கும் போக்கு ஒருபுறம். மறுபுறம் சின்னத்திரை, சினிமாத்திரைப் பெண் பிம்பங்கள் கடந்த பல ஆண்டுகாலப் போராட்டங்களுக்குப் பிறகு பெண்களுக்குக் கிடைத்த வளர்ச்சி-மேம்பாடுகளையெல்லாம் நலிவுபடுத்திவரும் போக்கு…. இன்று வாழாவெட்டி, மலடி போன்ற வார்த்தைகள் இல்லாத சின்னத்திரை பெரீ…ய்…ய தொடர்நாடகங்களே கிடையாது எனலாம். இரண்டாவது ‘எபிஸோடி’லேயே இருபது வயது நிறம்பாத இளங்கதாநாயகிப் பெண்பாத்திரத்தின் கல்யாணத்தைப் பற்றி ஒரு நாற்பது பேர் நடுக்கூடத்தில் நீட்டி முழக்க ஆரம்பித்து விடுவார்கள், ’நம்ம சாதி என்ன சொல்லும்’ என்று சோகப்படுவார்கள்; ஆவேசப்படுவார்கள். அதில் ‘சாதிபேதம் தவறு’ என்று வலியுறுத்துவதைக் காட்டிலும் வலியுறுத்துவதை ‘சாதி முக்கியமல்லவா’ என்ற தொனியே தொக்கி நிற்கும். அதாவது நடப்பு வாழ்க்கையை அத்தனை துல்லியமாகப் பிரதிபலிக்கிறார்களாம். சின்னத்திரை ராணி என்று கொண்டாடப்படும் ராதிகாவின் சீரியல்களில் எத்தனை வகை ரவுடிகள் ஊரில் இருக்கலாம் என்று வகுப்பெடுக்காத குறை. நினைத்தமாத்திரத்தில்  முதுகுப்புறமிருந்து பட்டாக்கத்தியை உருவியெடுப்பவர்கள் யாருமில்லையே என்று விஜய் தொலைக்காட்சி ‘ஆபீஸ்’ தொடர்நாடகத்தை நினைத்து ஆறுதலடையலாமென்று பார்த்தால், அதில் உதாரணப் புருஷனாக அடையாளங்காட்டப்படும் மேலதிகாரி விசுவநாதன் பாத்திரம் தனக்குக் கீழே வேலை செய்பவர்களையெல்லாம் ஒருமையில் அழைக்கிறார், போய்யா வாய்யா என்கிறார். இது தான் இயல்பு என்று ஏற்றுக்கொள்ளும்படி இளைய தலைமுறையினருக்கு அறிவுறுத்தப்படுகிறதோ, மூளைச்சலவை செய்யப்படுகிறதோ என்று தோன்றுகிறது. இருபத்தியைந்து ஆண்டுகளுக்கு முன்பு, தொழிற்சங்கம் வலுவாக , நான் முன்பு வேலை பார்த்த அலுவலகத்தில் புதிதாக வந்திருந்த மேலதிகாரியொருவர் என் சக ஊழியை ஒருவரை “பத்மா” என்று அழைக்க, “மரியாதை தாருங்கள் ஸார், மிஸஸ் பத்மா” என்று கூறுங்கள்” என்று அவர் அழுத்தமாய் கூறீயது நினைவுக்கு வருகிறது. பல வருடங்களுக்குப் பிறகு, தெனாலி படம் பார்க்க நேர்ந்த போது அதில் அண்ணா, அண்ணி, அவர்களுடைய குழந்தைகளோடு கதாநாயகி தொடையில் மேல்பாகம் தெரியும்படியான குக்குட்டைக் காற்சட்டையோடு வந்ததைப் பார்த்து அதிர்ச்சியாகவே இருந்தது.

இந்தச் சூழலில் கே.பாரதி எழுதியுள்ள ‘தமிழ் சினிமாவில் பெண்கள்’ என்ற நூல் முக்கியத்துவம் பெறுகிறது. (அவருடைய முனைவர் பட்டப் படிப்பிற்கான ஆய்வுப் பொருளும் இதுவே என்பது குறிப்பிடத்தக்கது). பெண்களுக்கான பத்திரிகை என்றாலே அதில் கோலக்குறிப்பு, சமையல் குறிப்பு, அழகுக் குறிப்பு ஆகிய அம்சங்களே பிரதானமாக இடம்பெற்றுவந்த 80களில் 1985 முதல் 87 வரை வெளிவந்த இலட்சியப்பெண் என்ற முன்னோடி மாதழின் ஆசிரியர்குழுவில் முக்கியப்பங்காற்றியவர் கே.பாரதி. ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பாக சுமார் ஆறு ஆண்டுகள் திரைப்படத் தணிக்கைக் குழுவில் இடம்பெற்ற அனுபவமும் அவருக்கு உண்டு. ஜனநாயக மாதர் சங்கத்தின் ‘மீடியா குழுவிலும் அவர் இடம்பெற்றிருந்தார். செறிவான சிறுகதையாசிரியரும் கூட.

இந்த நூலில் காணப்படும் அவருடைய முன்னுரையில் பின்வருமாறு கூறுகிறார் கே.பாரதி:

“மிக அதிகப்படியான தாக்கம் கொண்ட சினிமா என்ற ஊடகம் பத்திரிகை, தொலைக்காட்சி போன்ற மற்ற ஊடகங்களிலும் ஆக்கிரமித்துள்ள கணிசமான இடத்தைக் கொண்டே அதன் செல்வாக்கை அனுமானிக்கலாம்.”

“ஆரம்பம் முதலாக இன்றுவரை சினிமா என்பது ஆணின் மொழியாகத்தான் இருந்துவந்திருக்கிறது. பெண் இயக்குனர்கள் ஒரு சிலரைத் தவிர மற்றவர்களின் முயற்சிகள் தனிப்பட்ட அடையாளம் எதுவுமின்றி ஏற்கெனவே ஆண்கள்  வகுத்த வாய்ப்பாடுகளையே வழிமொழிந்திருக்கின்றன”

“படித்தவர் பாமரர் என்ற வேறுபாடின்றி அனைவரும் துய்க்கக்கூடிய இந்த ஊடகத்தின் வீச்சும் வலிமையும் அசாதாரணமானது. தமிழக அரசியலில் சினிமாவுக்கு வசனம் எழுதியவர்கள், தன்மைக்கு மேலும் வலிமை சேர்த்திருக்கிறது. சினிமாவை அதன் அரசியல், சமூக, பொருளாதார, கலாச்சாரப் பின்னணிகளை விலக்கிவிட்டு அணுக முடியாது. 1931 முதல் 2013 வரையிலான தமிழ் சினிமாவின் போக்குகளை அதன் பெண் கதாபாத்திரங்களுடனான சித்தரிப்பின் வாயிலாக மட்டுமே அணுகியிருக்கிறேன்.”

_ தேசிய இயக்க சினிமா, திராவிட இயக்க சினிமா, மிகையுணர்வு சினிமா, புதிய அலைப் படங்கள், மாற்றங்களும் பின்னடைவுகளும் என்ற ஐந்து அத்தியாயங்களில், ஏறத்தாழ 190 பக்கங்களில் ‘வழக்கு எண் 18/9, ஆதலினால் காதல் செய்வீர் போன்ற தற்காலப்படங்களையும் [அவற்றில் காணப்படும் நேர்மறையான அம்சங்கள் சிலவற்றையும்] குறித்து இந்த நூலில் ஆய்ந்தலசியுள்ளார் கே.பாரதி. ஆவேசத்தொனி அறவேயில்லாத எனில் அழுத்தமாகப் பெண்ணியக் கண்ணோட்டத்தில் தன் பார்வைகளை முன்வைக்கும் மொழிநடை அவருடையது.

தனது முன்னுரையில், “சினிமாவில் பெண்களின் சித்தரிப்பு என்றாலே எவரும் முதலில் சொல்லக்கூடிய கருத்து ‘சினிமா பெண்களை ஆபாசமாகச் சித்தரிக்கிறது என்பதாகத்தான் இருக்கும். இந்த ஒரு கோணத்தை முழுமையாகத் தவிர்த்துவிட்டு, கதையாடலில் பெண்கள் எவ்விதமாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதே இந்த நூலில் மையப்படுத்தப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ள நூலாசிரியர் “ஆபாசம் என்பது நபருக்கு நபர், காலத்திற்குக் காலம் மாறுபடுகின்ற ஒரு கண்ணோட்டம். இரட்டை அர்த்த வசனங்களும், ஆபாசச்சித்தரிப்புகளும் மிகவும் ஆதித்தன்மை வாய்ந்தது. தமிழ் சினிமா தொடங்கிய போதே அதனுள் ஊடாடிவிட்ட வர்த்தகக் கூறுகளைத் தவிர்த்துவிட்டு அதன் கதையாடல் முன்வைக்கும் கருத்தாக்கத்தை விவாதிப்பதே எனது நோக்கமாயிற்று” என்று தனது நூலின் குவிமையத்தைக் கோடிட்டுக்காட்டுகிறார். அவருடைய வார்த்தைகளிலிருந்தே சினிமாக்களில் பெண் காலங்காலமாக எந்த அளவுக்கு ஆபாசமாகச்சித்தரிக்கப்படுகிறாள், பண்டமாகக் கடைவிரிக்கப்படுகிறாள் என்பதும் அது குறித்து அவருக்கிருக்கும் எதிர்ப்புணர்வும் தெளிவாகிறது. அப்படியிருக்கும்போது, சினிமா பெண்களை ஆபாசமாகச் சித்தரிக்கும் விதம், அதன் சமூக ரீதியான விளைவுகள் ஆகியவை குறித்தும் ஒரு சிறு அத்தியாயமாவது இந்த நூலில் இடம்பெறச் செய்திருந்தால் நன்றாயிருந்திருக்கும் என்று தோன்றுகிறது. அதே போல், ‘ஆபாசம் என்பது நபருக்கு நபர், காலத்திற்குக் காலம் மாறுபடுகின்ற ஒரு கண்ணோட்டம்“ என்று அவர் குறிப்பிட்டிருப்பது ஒரு கோணத்தில் ஏற்றுக்கொள்ளத் தக்கதென்றாலும் இன்னொரு கோணத்தில் விவாதத்திற்குரியது.

சினிமாவையும் சினிமாக் கிசுகிசுக்களையும் பெரிதும் சார்ந்திருக்கின்ற வெகுஜன இதழ்கள், (சினிமா ரசனை என்ற பெயரில் தங்களுக்கு வேண்டியவர்களின்  சாதாரணப் படங்களையும் அசாதாரணப் படங்களாக முன்வைக்கும் சில மாற்றிதழ்களும் கூட) அதிகம் உள்ள நடப்புச்சூழலில் விகடன் பிரசுரம் இந்த நூலை வெளியிட்டிருப்பது கவனத்திற்குரியது. ”ஆணுக்கும், பெண்ணுக்குமான ஏற்றத்தாழ்வு குறித்த சமூகப்பிரக்ஞையை ஏற்படுத்துவதற்கான ஒரு சிறிய முயற்சியே இந்நூல் என்று தனது முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார் கே.பாரதி. உண்மையில் சிறப்புக் கவனம் பெற வேண்டிய முயற்சி இந்நூல். இளந்தலை முறையினர் (கடந்த தலைமுறையைச் சேர்ந்தவர்களும் கூட) சமூகப் பிரக்ஞை கூடிய சினிமா ரசனையில் தேர்ச்சி பெற உதவும் நூல் இது என்று கூறத்தக்கது.


கே.பாரதி                     

கல்கி பத்திரிகையில் உதவியாளராகப் பணியைத் தொடங்கியவர்,  ‘இலட்சியப்பெண்’, ‘மகளிர் சிந்தனை’ ஆகிய பெண்கள் பத்திரிகையில் ஆசிரியர் குழுவில் பணியாற்றியவர். பெண் _ வளர்ப்பும் வார்ப்பும் என்ற இவரது கட்டுரைத் தொகுப்பு நம் சமூகத்தில் நிலவும் பால் ஏற்றத்தாழ்வு களை விவாதிக்கிறது. வெகுஜனப் பத்திரிகைகளிலும் இலக்கிய இதழ்களிலும் சிறுகதைகள், கட்டுரைகள் போன்ற இவரது எழுத்து முயற்சிகள் தொடர்கின்றன. பச்சையப்பன் கல்லூரியில் வரலாற்றுப் பேராசிரியராகப் பணியாற்றிவருகிறார். மாநகராட்சிப் பள்ளிக்குழந்தைகளின் கல்வி வளர்ச்சிப் பணிகளில் ஈடுபாடு கொண்டவர். மறைந்த எழுத்தாளர் ஆர்.சூடாமணியின் பெயரில் இயங்கும் நினைவு அறக்கட்டளையின் அறங்காவலர். (*நூலிலிருந்து)

ramakrishnanlatha@yahoo.com