எல்லா மொழி விக்கிப்பீடியாக்களையும் நாளாந்தம் 500 மில்லியன் பயனர்கள் பயன்படுதுகிறார்கள். அண்ணளவாக 200 000 பயனர்கள் தொகுக்கிறார்கள். ஆனால் விக்கிப்பீடியர்களில் 13% ஆனவர்களே பெண்கள்.[1] இதில் தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ச்சியாகத் தொகுப்பவர்களில் 1% பயனர்கள் மட்டுமே பெண்கள். இந்த நிலை ஏன் பாதகமானது, குறைவான பங்களிப்புக்கான காரணங்கள் என்ன, பெண்கள் பங்களிப்பை எப்படி ஊக்குவிக்கலாம் ஆகிய விடயங்களைச் சுருக்கமாக விபரிப்பதே இக் கட்டுரையின் நோக்கம்.
பங்கேற்பதன் முக்கியத்துவம்
விக்கியூடகம் இன்று பரந்து பயன்படுத்தப்படும் ஒரு தகவல் ஊடகம். இதில் உருவாக்கப்படும் உள்ளடக்கத்தில் பெண்களின் பங்களிப்பு இருப்பது முக்கியம் ஆகும். எழுதப்படும் தலைப்புகள், எழுதப்படும் முறை, விக்கி செயற்படும் நோக்கு ஆகியவற்றில் பெண்கள் தங்களின் உள்ளீடுகளை வழங்க முடியும். இல்லாவிடின் பெண்கள் தொடர்பான தலைப்புக்கள் போதிய அக்கறை பெறாமல் போகும் வாய்ப்பு உள்ளது.[2]
பல மொழிகள், பண்பாடுகள், துறைகள், ஈடுபாடுகளைக் கொண்டவர்கள், கட்டற்ற அறிவு என்ற ஒரே இலக்கோடு இணையும் களம் விக்கியூடகம். அதில் பெண்கள், பெண்களின் குரல்கள், பங்களிப்புக்கள் சிறப்பாக இருக்க வேண்டும். விக்கி அனைவரையும் உள்வாங்கும் பங்கு கொண்டது, எனவே அதில் இணைவது, செயற்படுவது இலகுவானது.[3] பெண்கள் உரிமைகள், பெண்கள் இயக்கத்தின் செயற்பாடுகளின் ஒரு நீட்சியாக இது அமையும்.[4]
பங்களிக்க இருக்கும் தடைகள்
நுட்பத் துறையில் பெண்கள்
மருத்துவம், சட்டம், ஊடகவியல் உட்பட்ட பல கல்வி, தொழிற்துறைகளில் பெண்கள் பெரும் முன்னேற்றம் கண்டு உள்ளார்கள். ஆனால் கணினியியல், பொறியியல், தொழில்நுட்பம் போன்ற துறைகளில் பெண்களின் பங்களிப்பு மிகச் சொற்பமாகவே இன்னும் உள்ளது. விக்கியூடகங்கள் கணினி ஆர்வலர்களைக் கொண்டே முதலில் உருவானது. அதில் ஆண்களே அதிகம் இருந்ததால் பெண்கள் விக்கியூடகங்கள் பற்றி அறிவதற்கும் பங்களிப்பதற்கும் தொடக்கக் காலத்தில் இது ஒரு தடையாக அமைந்தது.
இணைய அணுக்கம்
தமிழ் நாட்டில் அனைத்து இடங்களிலும் இணைய வசதி என்பது இயலாததாக உள்ளது. அவ்வாறே இருப்பினும் இணையத்தைப் பயன்படுத்தும் பெண்கள் மிகவும் குறைவு. அவ்வாறு பயன்படுத்துவோரும் அறிவை முடக்கும் பிற ஊடகங்களில் பயனற்ற பலவகை அரட்டைகளில் ஈடுபடுவோரே அதிகம். இணையத்தைப் பயன்படுத்துவோருக்கும் விக்கிப்பீடியா பற்றிய அறிமுகம் இல்லாமல் இருக்கிறது. அதையும் மீறி பங்களிக்க வருவோருக்கு விக்கித் தொழில்நுட்பம் சிறிது கடினமாகவே உள்ளது.
இலங்கைச் சூழலைப் பொருத்தவரை தமிழ் விக்கியில் பெண்கள் பங்களிப்பு என்பது அறவே கிடையாது. தமிழகத்தை விட இலங்கையில் இணையப் பயன்பாடு என்பது குறைவாகவே உள்ளது. ஏனெனில் அவர்களுடைய அரசியல் சூழல் மற்றும் சமுதாயச் சூழல்கள் அத்தகைய ஒரு வாய்ப்புக்கு இடமளிப்பதில்லை. ஆயினும் புலம் பெயர்ந்து வாழும் இலங்கைத் தமிழ்ப்பெண்களுள் வளரும் நாடுகளில் உள்ள ஒரு சிலர் விக்கியின் பங்களிப்பாளர்களாகவே உள்ளனர்.
விக்கியின் தன்மை
பல பெண்களுக்கு விக்கியின் இடைமுகம் இலகுவாக இல்லை. நீண்ட உரையாடல் பக்கங்கள் அவர்களுக்கு அயர்ச்சியைத் தருகின்றன. பல விக்கிப் பக்கங்களும் ஆண் ஆதிக்கத் தன்மையில் எழுதப்பட்டுள்ளன.[5] விக்கி நடை, சொந்தக் கருத்துக்களுக்கு இடம் கொடாமை, தனித்தமிழ், கிரந்த எழுத்துகள் தொடர்பான விவாதங்களும் சிலருக்கு விக்கி ஆர்வத்தைக் குறைக்கிறது.
வேலைப்பளு
இன்றைய பொருளாதாரச் சூழலில் பெண்கள் வேலைக்குச் செல்வது என்பது தவிர்க்க முடியாததாகிறது. எனவே வேலைக்குச் செல்லும் பெண்கள் வேலை முடிந்து பிறகு இல்லப்பணிகளையும் பொறுப்பேற்றுச் செய்ய வேண்டி உள்ளதால் அவர்களுடைய வேலைப்பளுவின் காரணமாக இணையத்தில் நேரம் செலவழிப்பது என்பது இயலுவதில்லை. மேலும் தமிழ்ர்களின் வாழ்வியல் பின்னணி குடும்ப வேலைகளுக்காகவும் குடும்பப் பராமரிப்புக்கும் பெண்களையே சார்ந்திருக்க வேண்டிய கட்டாயச் சூழலில் உள்ளது. எனவே வேலைகளைக் குடும்பத்தினர் பகிர்ந்து கொள்ளாமை, தமிழ்ச் சூழலின் உணவு முறைகள், போன்ற காரணங்களால் பெண்களுக்கு இணையத்தில் நேரம் செலவிட முடிவதில்லை. கூடுதலாக தங்கள் குழந்தைகளின் பள்ளிப்பணிகளையும் வீட்டுப் பாடங்களையும் கவனிக்க வேண்டிய கட்டாயத்திற்கும் பெண்கள் தள்ளப்படுகின்றனர்.
சமூக பண்பாட்டுச் சூழல்கள்
சமுதாயம் ஒரு சில கட்டுப்பாடுகளைத் தாமாகவே பெண்களுக்கென விதைத்துள்ளது. இதனால் ஒரு பெண் இல்லத்தில் இணைய தளத்தில் நேரம் செலவழித்தால் இன்றைய திசை திருப்பும் ஊடகங்களின் செயல்பாடுகள் காரணமாகவும் இணைய மோசடிகளின் காரணமாகவும் பெற்றோர்களுக்கு அச்சம் ஏற்படுகிறது. எனவே அத்தகைய சூழலில் பெண்கள் பங்களிப்பதற்கு முதல் தடையாக பெற்றோர்களே இருக்கின்றனர். மேலும் ஊதியம் பெறும் பெண்கள் கூட ஒரு வரையறைக்கு மேல் செலவு செய்ய அவர்களது குடும்பத்தார் அனுமதிப்பதில்லை.
தன்னார்வம்
மேற்கண்ட ஒரு சில காரணங்களையும் தாண்டி தமிழின் மீதுள்ள மொழிப்பற்றும் தனது நேரத்தைப் பயனுள்ள வழிகளில் செலவழிக்க வேண்டும் என்ற நோக்கத்திலும் சில பெண் பங்களிப்பாளர்கள் தமிழ் விக்கியில் பங்களிக்க வருகின்றனர். இது விக்கிப்பீடியாவிற்கு பக்க பலம் என்றாலும் அவ்வாறு வரும்போது பிற விக்கிப்பீடியர்கள் அவர்களது கட்டுரைகளில் செய்யும் தொகுப்புகளையும் மாற்றங்களையும் பெண் பயனர்கள் விரும்புவதில்லை. மேலும் தலைப்பு மாற்றுதல், நகர்த்துதல், கட்டுரைகளை நீக்குதல் போன்ற மற்ற பயனர்களின் கருத்துகளோ, செயல்பாடுகளோ இவர்களுடைய ஆர்வத்தை குறைத்து விடுகிறது. இதற்கு விக்கிக் கொள்கைகளைப் புரிந்து கொண்டாலே போதுமானது.
மேற்குறிப்பிட்ட காரணங்களுக்கு அப்பால் பொதுவாகப் பெண்களிடம் விக்கிப்பீடியாவில் பங்களிப்பது குறித்த ஆர்வமின்மையே அதிகமாகக் காணப்படுகிறது. அவர்கள் சமூக ஊடகங்களில் திரையிடப்படும் தொடர் நாடகங்கள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், விவாதங்கள், திரைப்படங்கள் போன்றவற்றில் ஆர்வமாகத் தங்கள் நேரங்களைச் செலவழிக்கின்றனர். தமிழ் விக்கியில் பங்களிக்க வருவதனால் பலனெதுவும் பெறப்போவதில்லை என்பதும் அவ்வாறு வந்தாலும் தமிழ்த் தட்டச்சு தெரியாததும் இதற்கான காரணங்களாகும்.
பங்களிப்பு நிலை
தமிழ் விக்கிப்பீடியாவைப் பொறுத்த வரை பெண் பங்களிப்பாளர்களாக 2006 களில் பங்களிப்பைத் தொடங்கிய சந்திரவதனா, பின்னர் சிந்துஜா, கலை, பூங்கோதை, பார்வதி ஆகியோரைக் குறிப்பிடலாம். இலங்கையைச் சேர்ந்த சிந்துஜா இராகங்கள் தொடர்பாகவும் இசைக்கருவிகள் தொடர்பாகவும் ஏராளமான கட்டுரைகளைத் தந்துள்ளார். நோர்வேயில் இருந்து பங்களிக்கும் கலை ஒரு மருத்துவ ஆய்வாளர். இவர் மருத்துவம், உயிரியல் துறைகளில் விரிவான பங்களிப்புக்களைச் செய்துள்ளார். சந்திரவதனா யேர்மனியில் வாழும் ஈழத்து எழுத்தாளர். தமிழ்ப் பெண் வலைப்பதிவு முன்னோடிகளில் ஒருவர். ஈழப் போராட்டம், இதழியல், அணி இலக்கணம் உட்பட்ட பல துறைகளில் கட்டுரைகள் பங்களித்துள்ளார். கோவையிலிருந்து பங்களிக்கும் ஓய்வு பெற்ற கணித ஆசிரியர் பூங்கோதை கணிதத் துறையில் பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளார். மிக விரிவான, எளிதான, மாணவர்களுக்குப் பயன்படும் நூற்றுக் கணக்கான கணிதக் கட்டுரைகளை எழுதியுள்ளார். சேலத்தைத் சேர்ந்த ஆசிரியர் பார்வதி அவர்கள் தமிழ் இலக்கணம், தமிழ் இலக்கியம், தமிழர் கலைகள், கணிதம் உள்ளிட்ட துறைகளில் விரிவான பங்களிப்புக்களைச் செய்துள்ளார். கலை, பார்வதி ஆகியோர் நிர்வாகிகளாகவும் உள்ளனர். அண்மையில் தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டுக் கொண்டாட்டங்களில் ஒன்றான கட்டுரைப் போட்டியின் காரணமாக நந்தினி கந்தசாமி என்ற பெண் பங்களிப்பாளரும் ஆர்வமுடன் பங்களிக்கத் தொடங்கியுள்ளார்.
தமிழகத்தைப் பொறுத்தவரை பேராசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், எழுத்தாளர்கள், வலைப்பதிவாளர்கள் என மிகப்பரந்த வட்டத்திலிருந்து பெண் பங்களிப்பாளர்கள் பங்களிக்கின்றனர். ஆயினும் இவர்கள் தொடர்ந்து பங்களிப்பது இல்லை. இலங்கையில் இருந்து தமிழ்ப் பெண்களின் பங்களிப்பு அரிது, அல்லது இல்லை. புலம்பெயர் இலங்கைத் தமிழ்ப் பெண்கள் கணிசமாகப் பங்களிக்கின்றார்கள்.
ஊக்குவிக்க முன்னெடுக்கப்படும் செயற்திட்டங்கள்
விக்கியூடக அறக்கட்டளை பெண்களின் குறைவான பங்களிப்பை ஒரு சிக்கலாக அடையாளம் கண்டுள்ளது. பெண்கள் பங்களிக்க இருக்கும் தடைகளைக் களையும் வகையிலும், அவர்கள் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையில் விக்கியூடகம் பல செயற்திட்டங்களை முன்னெடுத்துள்ளது. தொகுக்க இலகுவான காண்புல இடைமுகம் (Visual Editor) தற்போது அறிமுகப்படுத்தப்படுகிறது. இது நுட்ப தடை ஒன்றைக் குறைக்கும். பெண்களுக்கான புலமைப் பரிசில்களை வழங்குகிறது. விக்கியில் ஏற்கனவே பங்களிக்கும் பெண் தொகுப்பாளர்கள் விக்கிப்பெண்கள் கூட்டகம் (WikiWomen’s Collaborative) என்ற ஒரு செயற்திட்டத்தை முன்னெடுத்துள்ளார்கள். ஒவ்வொரு ஆண்டும் விக்கிமேனியாவில் பெண்கள் எதிர்நோக்கும் சிக்கல்களை விக்கிப்பெண்கள் நண்பகலுணவு (WikiWomen’s Luncheon) நிகழ்வு ஊடாக உரையாடுகிறார்கள்.[6]
சில விக்கிகளில் பெண் பங்களிப்பாளர்கள் தமக்கென தனியே குழுமங்களை ஏற்படுத்திக் கொள்கின்றனர். வேறு சில விக்கிகளில் பெண் விக்கியர்கள் மாதமொரு முறை கூடி, செய்ய வேண்டிய பணிகள் குறித்து கலந்துரையாடுகின்றனர். மேலும் புதிய பெண் பங்களிப்பாளர்களை ஈர்ப்பதற்கும் அவர்களைத் தக்க வைப்பதற்குமான முயற்சியாக அவர்களுக்கான பட்டறை நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்கின்றனர். தமிழ் விக்கியில் பெண் பயனர்களின் எண்ணிக்கை குறைவும் அப்பயனர்கள் வெவ்வேறு ஊர்கள் மற்றும் நாடுகளில் இருந்தும் பங்களிப்பதன் காரணமாகவும் அவர்களை ஒன்றிணைப்பது என்பது இயலுவதில்லை. மாற்றாக சமூக வலைதளங்களை இதற்காகப் பயன்படுத்துவதும் தொடர்ந்து பயிற்சிப் பட்டறைகளை வழங்குவதும் தேவையான ஒன்றாக உள்ளது.
மேலும் பங்களிக்க வருவோர்களிடத்து இறுக்கமான சில விக்கிக் கொள்களை உடனடியாகக் கட்டாயப்படுத்தாமல் அவர்கள் விக்கிக் கொள்கைகளைப் புரிந்து கொள்ளும் வகையில் உதவிகள் செய்து அதன் பிறகு விக்கிக் கொள்கைகளுக்கேற்ப அவர்களைப் பங்களிப்பு செய்யும் வகையில் புதுப் பயனர்களுக்கு இடையேயான ஊடாட்டம் தொடர்பில் கவனம் கொண்டுவரப்பட்டுள்ளது. மாணவிகளுக்கான கட்டுரைப் போட்டிகள், பெண்களைப் பற்றிய, அவர்களுக்கு ஆர்வமூட்டக்கூடிய துறை சார் கட்டுரைகள் விரிவாக்கல் போன்ற திட்டங்களும் பரிசீலிக்கப்படுகின்றன.
தமிழ் விக்கியில் பங்களிக்கும் பெண்கள் சிறந்த முன்மாதிரிகளாக விளங்கிறார்கள். இருவர் நிர்வாகிகளாக செயற்படுகிறனர். பெரும்பாலான தமிழ்ப் பெண் பங்களிப்பாளர்கள் தமிழ் விக்கியூடகங்களை அறிமுகப்படுத்தும் பணியில் சிறப்புக் கவனம் எடுக்கிறார்கள். பூங்கோதை 2012 விக்கிமேனியாவில் கலந்து கொண்டு, நேர்காணல்களை வழங்கினார். 2012 விக்கிமேனியா நிகழ்வில் பங்கேற்றுள்ளார். 2012ஆம் ஆண்டுக்கான உலகளாவிய விக்கிமீடியா நிதி சேகரிப்பில் இவரது வேண்டுகோள் சிறப்பான இடம்பெற்றது. பார்வதி அவர்கள் பல்வேறு ஊடகங்களில் பரப்புரைப் பணிகளைச் செய்துள்ளார். 2013 விக்கிமேனியாவில் கலந்து கொண்டார்.
நிறைவுரை
தமிழ் விக்கியூடகங்களில் பெண்களின் பங்களிப்புக் குறைவாக இருக்க சமூகம் சார், விக்கி சார் காரணங்கள் பல உண்டு. விக்கியூடகங்களில் விக்கி சார் காரணங்கள் களையப்பட வேண்டும். அதற்கான பல்வேறு செயற்திட்டங்களை விக்கியூடக அறக்கட்டளையும், பல்வேறு விக்கிகளும் மேற்கொண்டுள்ளன. பல களங்களில் பெண்கள் கொண்டுவந்த மாற்றங்கள் போன்றே விக்கியிலும் இது மிகவும் சாத்தியமே. பிற களங்கள் போல் அன்றி, விக்கியில் பல்வகைத்தன்மையும், உள்வாங்கும் பங்கும் இதை இலகுவாக்கும். இதை இன்றைய தமிழ்ப் பெண் விக்கியர்கள் மிகச் சிறப்பாக மேற்கொண்டு வருகிறார்கள். அவர்களோடு இணைய மேலும் பலர் வருவீர்.
பார்வதிஸ்ரீ
பார்வதிஸ்ரீ, தமிழ்நாட்டின் சேலத்தைச் சேர்ந்தவர். அரசு நடுநிலைப் பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இளங்கலை, முதுகலைப் பட்டங்களும், பெரியார் பலகலைக்கழகத்தில் ஆய்வியல் நிறைஞர் பட்டமும் பெற்றவர். செப்டெம்பர் 1, 2011 முதல் விக்கியில் பங்களித்து வருகிறார். தமிழ் இலக்கணம், தமிழ் இலக்கியம், சிற்றிலக்கியம் அறிவியல் அறிஞர்கள், கணிதம் முதலியன குறித்த கட்டுரைகளை எழுதுவதில் ஆர்வமுடையவர். இவர் பங்களித்த கட்டுரைகளில் ஓணம், மதுரை சுங்குடி சேலை, தலையாட்டி பொம்மை, தமிழ் எழுத்துகளின் தோற்றமும் வளர்ச்சியும், பிள்ளைத்தமிழ், நெப்பந்திசு, சிலப்பதிகாரத்தில் சமயக் கோட்பாடுகள், பட்டினப் பாலை, நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ், செம்பகராமன் பிள்ளை, ஆனந்த ரங்கம் பிள்ளை, ஆர்தர் சி. கிளார்க், கப்ரேக்கர் முதலியன சிலவாகும். இவர் விக்கி நூல்கள், பொது போன்ற விக்கியின் பிற திட்டங்களிலும் பங்களித்து வருகிறார்.