15 மகன் திரும்பல
“நான் இருக்கும் போது உங்களுக்கு அந்த முயற்சி வேண்டாம்,உங்களுக்கு என்ன பிடிக்கும் என்று கோடிக்காட்டினா, குழம்பிப்போயிருக்கும் எனக்குச் சட்டென்றுச் சமையலைச் செய்ய ஏதுவா இருக்கும் இல்லே…?”
“பேசி…..நேரத்தை வீணாக்காம மளமளன்னு எதையாவது சமை…..அம்பிகை பசி வயிற்றைக் கிள்ளுது…..!” சமையலில் தனக்கு இதுவரையில் எதுவும் தெரியாது என்ற சிதம்பர ரகசியத்தை அப்பட்டமாக ஒத்துக்கொண்ட தினகரன் மனைவியின் முகத்தைப் பரிதாபமாகப் பார்க்கிறார்.களைப்புடன் வீடு திரும்பியிருக்கும் கணவர் முகத்தைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது.
“என்னங்க…..தேநீர் கலக்கித் தர்றேன். முதல்ல அதைக் குடிச்சிட்டுப் பேப்பரைப் படியுங்க, அரைமணி நேரத்திலே உங்களுக்குப் பிடித்தச் சமையலைச் செஞ்சிடுறேன்!” நவீன மின்சார கேத்தலில் ஏற்கனவே கொதித்திருந்த சுடுநீரில் அம்பிகை சில நிமிடத்தில் தேநீர் கலக்கிக் கணவரிடம் கொடுக்கிறார்.
இரவு மணி ஏழு. இன்னும் பார்த்திபன் வீடு திரும்பாமல் இருந்தான்.அம்பிகை சமையல் வேலைகளில் மும்முரம் காட்டினாலும் வாசலை நோக்கியே அவரது கவனம் முழுமையாக இருந்தது.காலையில் வேலைக்குச் சென்ற மகன் இன்னும் இல்லம் திரும்பாமல் இருந்ததை எண்ணி மனம் சஞ்சலம் அடைகிறார்.
மாலை முதலே மழை பெய்வதற்காக மேகம் கருத்துக் கொண்டிருந்தது! வானத்தில் சூழ்ந்திருக்கும் கருமேகம் போல் அம்பிகையின் உள்ளத்திலும் கவலைக் கீற்றுகள் சூழத்தொடங்கின! ஏனோ…..இனம் புரியாதக் கவலையில் தோய்ந்து அவர் மனம் அமைதி கொள்ள மறுக்கிறது!
அரை மணி நேரத்துக்குள் சமையல் ஆகிறது.சமைத்த உணவுகளை மேசை மீது எடுத்து வைக்கிறார். மகன் இல்லாமல் கணவர் மட்டும் தனியாக அமர்ந்து உணவு உண்பதைப் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இல்லை! மகனும் சேர்ந்து சாப்பிட்டால் சிறிய குடும்பம் எப்படி அழகாக இருக்கும்?
இரவு மணி எட்டாகிறது. அப்போதும் மகன் வீடு வந்து சேரவில்லை. அம்பிகை மனம் என்னன்னவோ எதிர்மறை எண்ணங்களால் சிக்குண்டு தவிக்கிறார்.மாலை முதலே இடி இடித்துக் கொண்டிருந்த வானம் இப்போது மழை மெதுவாகப் பெய்யத் தொடங்கியது.
இரவு ஒன்பதரை நெருங்கிய போது, மழையும் வலுவாகப் பெய்யத் தொடங்கியது. ‘வானத்தைப் பார்த்து ஏங்கி நிற்கும் பயிரைப் போல்’ அம்பிகை மகனின் வருகையை உறுதிச் செய்ய வாசலில் முழுமையாகக் கண்களையும் கவனத்தையும் பதிக்கத் தொடங்கினார்.கைபேசியில் அவர் பலமுறைத் தொடர்புக் கொண்டும் மகனிடமிருந்து எந்தவிதமானத் தகவலும் இல்லாததால் மேலும் கலக்கமடைந்தார்.
இரவு மணி பத்து. இன்னும் மகன் வீடு திரும்பவில்லை! அவன் வருவதற்கானத் தடயமும் ஏதுமில்லை! இடியும் மின்னலும் கூடிக் கனத்த மழையுடன் ‘சோ’ வென்று இசை சேர்த்துப் பொழியத் தொடங்கியது! மகனுக்கு என்ன ஆச்சோ? என்று கவலை இடியாக உள்ளத்தை ஊடுருவி மனக்கலக்கத்தால் விக்கித்து நிற்கிறார் அம்பிகை!
மகனின் வருகைக்காக வழி மீது விழி வைத்து இரவெல்லாம் வாசலில் காத்துக்கொண்டிருக்கிறார்.எனினும்,மகன் மட்டும்இன்னும் வீடு திரும்பவே இல்லை!
வெள்ளிக்கிழமை முன்னிரவு தொடங்கிய மழை மறுநாள் சனிக்கிழமை, பூமியை நையப் புடைக்க வேண்டும் என்று வானம் எண்ணியதோ தெரியவில்லை என்றைக்கும் இல்லாதத் திருநாளாக வானம் சரமாரியாக மழையைப் பெய்யச் செய்துப் பூமித்தாயை ஒரு கலக்குக் கலக்கிக் கொண்டிருந்தது!
காலை கண் விழித்தது முதல் இரவு வரை உழைத்தப் பின் உடல் அசதியால் மெய் மறந்து மக்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். ஊரே அடங்கி இருந்தது !
இரவெல்லாம் தூங்காமல் கண்விழித்திருந்த, அம்பிகைக்கு வயிற்றில் பாலை வார்த்தது போல், பார்த்திபன் கார் திடீரென வாசலில் வந்து நிற்கிறது! போன உயிர் மீண்டது போல், அம்பிகை அவசர அவசரமாக வாசல் கதவைத் திறக்கிறார். காரிலிருந்து பார்த்திபன் மெதுவாக வெளியே வருகிறான்!
“பார்த்திபன்…….பார்த்திபன்!………! உனக்கு என்னப்பா ஆச்சு? இவ்வளவு நேரம் நீ……எங்கப்பா போன…..?” இடைவெளி இல்லாமல் பதற்றமுடன் கேள்விகளை அடுக்குகிறார் தாயார்!
16நண்பர்கள்
அம்மா பதற்ற மிகுதியால் எழுப்பிய அத்தனைக் கேள்விகளுக்கும் பதில் கூறாமல் தட்டுத் தடுமாறி அவன் தன் அறையை நோக்கிச் செல்கின்றான்! .அவனுடன் அருகில் சென்ற போது பார்த்திபன் மீது மதுவாடை…….! தாயாரின் மூக்கைத் துளைத்தது! ஒருகணம் அவர் மூச்சு நின்றிவிடும் போலாகிவிட்டது!
மகனுக்குக் குடிப்பழக்கம் எப்படி வந்தது? ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுன்னு தோள் மீதும் , மார்பு மீதும் போட்டுப் பொத்திப் பொத்தி வளர்த்த மகன் இப்படி ஒரு குடிகாரனாக வந்து நிற்கிறானே என்று எண்ணிப்பார்க்கும் போது அவரது இதயமே சுக்கு நூறாக நொருங்கிப்போனது!
இவற்றையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த, தினகரனுக்குப் பிரமை பிடித்தவர் போல், இடிந்து நிற்கிறார்! தனக்கு இல்லாதப் பழக்கம் தன் மகனுக்கு எப்படி வந்தது? என்று மனதில் தொக்கி நின்ற கேள்விக்குப் பதில் காண முடியாமல் வெளியில் நனைந்து நிற்கும் தென்னை மரம் போல, அறையில் வாடிய மனதுடன் தன்னை மறந்த நிலையில் நீண்ட நேரம் நிற்கிறார்!
தன்குடும்பம் எந்த திசையை நோக்கிச் செல்கிறது? செல்லும் பாதை சரிதானா? இந்த ஊர் மக்கள் தன்னைப் பற்றி என்ன நினைப்பார்கள்? யாரோ…..திட்டமிட்டுத் தன் குடும்பத்தை அழிக்க முற்பட்டுவிட்டார்களா?
வளர்ந்துவிட்ட பிள்ளையை அதட்டி மிரட்டி வளர்ப்பது தகுமா? அதிலும் படித்துப் பட்டதாரியாக நல்ல வேலையில் பணியாற்றுபவன் . கைநிறையச் சம்பாதிப்பவன் . வீட்டுக்கு ஒரே பிள்ளை , பெற்றோர் படித்தவர்கள் பண்பு நிறைந்தவர்கள்.
நல்ல குடும்பத்தில் பிறந்த பிள்ளை குடும்பத்தின் பாரம்பரியத்தையும், பண்பாடுகளையும் பிள்ளைக் குழி தோண்டிப் புதைத்துவிடுவானா? பிள்ளை மீது வைத்திருந்த அலாதியான நம்பிக்கை இப்படிச் சிதறுண்டுப்போய்விட்டது…..! என்று எண்ணி அதிர்ச்சி அடைகிறார் தினகரன்.
வெளியில் தலைக்காட்ட முடியாமல் செய்துவிட்டானே என்று மனம் ஆத்திரம் கொள்கிறார். சனிக்கிழமை, மறுநாள் ஓய்வு என்பதால் , நண்பர்களோடு,சினிமா, நாடகம், ஆடல் பாடல், என்று நிகழ்ச்சிகளுக்குச் சென்று வீடு திரும்புவது, சற்று கால தாமதமாகும் என்பதெல்லாம் சாதாரணமாக நிகழும் நிகழ்வுதான் என்றாலும் இன்று, நேரம் கழித்து வந்தது ஒரு புறமிருக்க , மது அருந்தி குடும்பத்திற்குப் கெட்டப் பெயரை உண்டு பண்ணிவிட்டானே என்று நினைக்க நினைக்க அவருக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது!
மறுநாள் மகன் பத்து மணிபோல் படுக்கையை விட்டு எழுந்தான். எழுந்தவன் காலைக் கடன்களை முடித்துக் கொண்டு பசியாறுவதற்கு மேசைக்கு வந்தான். நேற்று நண்பர் ஒருவரிடம் பிறந்த நான் விழாவுக்குச் சென்றதாகவும் நண்பர்கள் மதுவை வற்புறுத்திக் கொடுத்து விட்டதாகக் காரணம் சொன்னான்.
முதல் தடவையாக அப்பா சற்றுக் கடுமையாகப் பேசுகிறார்!
“பார்த்திபன் ……..இனி அத்தகைய நண்பர்களோடுச் சேரக் கூடாது.வேலை முடிந்தவுடன் வீட்டிற்கு நேரத்தோடு வந்து விடவேண்டும்! என்ன……. சொல்றது விளங்குதா !” அப்பா ஆத்திரப் பட்டது அதுதான் முதல் முறை. அம்பிகைக்கூட கணவர் அப்படிப் பேசியது கண்டுப் பயந்து போகிறார்! “சரி அப்பா….. என்று பார்த்திபன் அமைதியுடன் கூறுகிறான்.
இறுக்கமான சூழலில் மூவரும் காலை பசியாறுகிறார்கள்! எல்லாரது முகங்களும் எதையோ பரிகொடுத்ததுப் போல் காணப்படுகின்றன! குடும்பத்தில்ஒருவர் செய்யும் தவறு ஒட்டுமொத்தமாகக் குடும்பத்தின் பெயர் கெட்டுவிடும் அல்லவா?
அப்பா கடுமையாகப் பேசிய பிறகு,பார்த்திபனின் போக்கில் மாற்றம் தெரிந்தது.இனி பிரச்னை ஏதும் எழாது என்ற நம்பிக்கைக்கு ஏற்படுகிறது.அம்பிகைக்கு இப்போதுதான் நிம்மதியாக இருந்தது!
இப்போதெல்லாம் அப்பா அம்மா மெச்சியப் பிள்ளைப் போல பார்த்திபனுக்குத் தான் உண்டு தன் வேலை உண்டு என்று தனக்குள்ளே போட்டுக் கொண்ட கட்டுப்பாட்டினால்,யாதொருச் சிக்கலுமின்றி அவனது காலம் ஓடியது.
ஓய்வு நேரங்களில் லேப்டொப்பில் அமர்ந்து விடுவான். ‘பேஸ்புக்’ வழி நண்பர்களோடு தொடர்பு கொண்டு பேசி மகிழ்வான்.எப்போது பார்த்தாலும் அவன் அறையில் லேப்டொப்பைப் பயன் படுத்தியவாறு இருப்பான்.
சில வேளைகளில் நண்பர்களின் திருமணம்,பிறந்த நாள் விழா, போன்ற நிகழ்வுக்குச் சென்று வருவான்.நெருங்கிய உறவு என்றால் குடும்பத்தோடு நிகழ்ச்சிகளுக்குச் சென்றுவருவோம். சில வேளைகளில் தனியாக நிகழ்வுகளுக்குச் செல்ல நேர்ந்தால் நிகழ்வு முடிந்தவுடனே வீட்டிற்குத் திரும்பி விடுவான். கண்டபடி நண்பர்களுடன் அரட்டை அடித்துக் கும்மாளம் போடும் நிலை அவனிடம் முற்றாக அற்றுப் போயிருந்தது!
குடும்ப உறுப்பினர்களிடையே நிலவிய அன்னியோன்னியமான உறவினால் அப்பா அம்மா பிள்ளை ஆகிய மூவரிடையே அணுக்கமான உறவு மீண்டும் வேரூன்றித் தழைத்து நின்றது! இப்போதெல்லாம் மகிழ்ச்சி குடும்பத்தில் தாண்டவமாடியது! காலையில் வேலைக்குச் செல்லும் முன்பாக மூவரும் ஒன்றாக அமர்ந்து பசியாறுவார்கள்.
இயன்றவரையில் மூவரும் வேலை முடிந்தவுடன் விரைவாக வீடு திரும்பியவுடன் இரவு உணவை ஒன்றாகச் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்கின்றனர்! இத்தகைய அருமையான சூழலைப் பல காலம் வீணாக்கிவிட்டோமே என்று எண்ணம் மூவரிடமும் இருந்திருக்க வேண்டும்.
உறவில் விரிசல் ஏற்படாமல் இருக்கக் கவனமுடன் பார்த்துக் கொள்கின்றனர்.
17 குடும்பதினம்
காலம் வேகமாகக் கரைகிறது! அமைதியானக் கடலில் பயணித்தப் படகு கடல் கொந்தளிப்பால், அலை மோதுவது போல், நன்றாகப் போய்க் கொண்டிருந்த தினகரன் குடும்பத்தில் மீண்டும் புயல்வீசத் தொடங்கியது!
நண்பர்கள் சிலர் மீண்டும் அவ்வப்போது, வீட்டிற்கு வருவதும், பல மணி நேரம் பேசி அரட்டையடிப்பதுமாக இருக்கிறார்கள்.மகன் கண் முன்னாடியே இருப்பதால் ஆறுதலாக இருந்ததால் அவர்களைத் தடுக்கவில்லை. சில வேளைகளில் சாப்பிடுவதற்காகப் பார்த்திபனை வெளியில் அழைத்துச் செல்வதுமாக இருப்பது பெற்றோருக்கு அறவே பிடிக்கவில்லை. சொன்னாலும் அவர்கள் கேட்பதாகத் தெரியவில்லை! மனத்தாங்களோடுப் பார்த்திபன் நடவடிக்கைகளைப் பெற்றோர்கள் உண்ணிப்பாகக் கவனிக்கலாயினர்!
“ வணக்கம் அண்டி……!”
“ஓ….! கோமகனா? வாப்பா….இப்படி உட்காரு…..!”
“ ஏதோ முக்கிய விசியம்….பேசனும்னு போன்ல சொன்னிங்களே….?”
“நண்பர்கள் சிலர் அடிக்கடி வீட்டிற்கு வருவதும்…..கூத்தும் கும்மாளமாக வீட்டின் அமைதியைக் கெடுக்கின்றனர்.குமார்னு ஒரு பையன்….அவன் பண்ற சேட்டை தாங்கமுடியல…..!”
“ஓ….அந்தப் பையனா…..!”
“என்னப்பா…..சொல்ற….?”
“அவன் கஞ்சா கேசுல ஜெயிலுக்குப் போனவனாச்சே….!”
“அய்யோ…..இப்படிப்பட்டவனல்லாம் இவனுக்குப் பிரண்டா இருக்கிறானே….!”
“அம்மா….நீங்க எதுக்கும் கவலைப்படாதிங்கம்மா….அதை நான் பார்த்துக்கிறேன்!”
“எப்படியோ……மகனைக் காப்பாற்றினா சரி….!”
“நான்….பார்த்திபனிடம் பேசுறேன்….!”
“சரிப்பா…..உன்னைதான் மலைப்போல நம்பியிருக்கேன்!”
சொல்லியது போல் பார்த்திபனிடம் கோமகன் பேசிப்பார்த்தான்.ஆனால்,பேசியதில் பயன் இல்லாமல் போனதில் வருத்தம் அடைந்தான்! பால்ய நண்பனாயிற்றே….அவனைக் காப்பாற்ற வேண்டுமே….! நேரிடையாகக் குமாரிடம் பேசிய போது வாய்ப் பேச்சு முற்றி கைகலப்பில் முடிந்தது! கோமகன் முகத்தில் ஐந்து தையல் போட வேண்டியதாயிற்று! கோமகன் காவல் துறையில் புகார் செய்தான்!
தான் பணிபுரியும் நிறுவனம் ‘குடும்ப தின’ நிகழ்வு ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தது. மூன்று நாட்கள் வெளி மாநிலத்தில் தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சிறந்த முறையில் பணிபுரிந்த ஊழிகளுக்கு நற்சான்றிதழ்களும், பணமும் பரிசுகளும் நிர்வாகம் வழங்குவதாக ஏற்படுகள் செய்யப்பட்டிருந்தன. செலவுகள் அனைத்தும் நிர்வாகம் ஏற்றுக்கொண்டது.பார்த்திபன் அந்நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டியிருந்தது!
கேமரன்மலையிலுள்ள பிரபல தங்கும் விடுதியில் நிகழ்வு ஏற்பாடாகி இருந்தது! பார்த்திபன் அந்நிகழ்வில் கண்டிப்பாகக் கலந்து கொள்ள வேண்டிய நிர்பந்தத்தால் பெற்றோர் பார்த்திபனுக்கு அனுமதி வழங்க வேண்டியதாயிற்று!
அம்பிகைக்குத்தான் மனம் மகிழ்ச்சியாக இல்லை மூன்று நாளைக்குப் பிள்ளையைப் பிரிய வேண்டி வருமே,என்ற கவலை அவரை வாட்டியது! நண்பர்கள் மகனைத் தப்பான வழியில் கொண்டுச் சென்றுவிடுவார்களோ என்ற ஐயம் அவரது மனதை ஒரு நிலைக்குள் வைத்திருக்கவில்லை!
மூன்று நாள், நிகழ்வுக்குப்பின்பு பார்த்திபன் நலமாக வீடு வந்து சேர்ந்துவிட்டான். எந்தவொரு மாற்றமும் இல்லாமல் , அவன் சாதரணமாக அம்மாவிடம் பழகினான். தனக்குக் கிடைத்தச் சிறந்த சேவையாளருக்கானப் பரிசுகளையும், பணத்தையும் அம்மாவிடம் காட்டி மகிழ்ந்தான். பிள்ளையின் வெற்றி பெற்றோருக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தரும் அல்லவா?
நிகழ்வுக்குப் பிறகு நண்பர்கள் அடிக்கடி வீட்டிற்கு வந்து பார்த்திபனை வெளியில் அழைத்துச் செல்வது பார்வதிக்கு அடியோடுப் பிடிக்கவில்லை. ஒரு நாள் பார்த்திபனைக் கேட்டுவிடுகிறார்.
“பார்த்திபன் …என்னப்பா இப்போது உன் நணபர்கள் அடிக்கடி வீட்டிற்கு வந்து உன்னை வெளியில் அழைத்துச் செல்கிறார்கள்…?”
“அம்மா… நீங்க இன்னும் என்னைச் சின்ன பிள்ளை என்றே நினைக்கிறீங்க….!” எனக்கு நண்பர்களே இருக்கக் கூடாதா?என்னைத் தவிற வீட்டிலே உடன்பிறப்புகள் யாரும் இருக்கிறார்களா..? நீங்களும் அப்பாவும் வேலைக்குப் போயிடுறீங்க..? வீட்டிலே எவ்வளவு நேரம்தான் தன்னந்தனியாகத் தொலைக்காட்சிப் பார்க்கிறது? பேப்பர் படிக்கிறது?” ‘லேப்டோப்’ முன்னாடி உட்கார்ந்திருக்கிறது?” வார்தையில் கோபக் கனல் பறக்கிறது!
இதுநாள் வரையிலும் உள்ளத்திலும் தேக்கி வைத்திருந்த தம் எண்ணக் கிடக்கை வெளியே கொட்டுகிறான். ஒரு கணம் தாயார் திகைப்படைக்கிறார்! பெற்றோரே பிள்ளைக்கு உலகம் என்றிருந்த எண்ணத்தில் மண் விழுந்து விட்டதே….! என்று மனம் துடிக்கிறார். தான் பெற்ற பிள்ளையாக இருந்தாலும் அவனுக்கும் தனியே ஆசாபாசங்கள் இருக்குமல்லவா…..?அவனின் ஆசைக்குக் குறுக்கே நிற்பது தவறு அல்லவா……?
மகனின் கருத்தை முதன் முதலாக அறிந்த தாயாருக்குக் கசப்பு மருந்தை விழுங்குவது போலிருந்தது ! மனதை ஒருவாறாகத் தேற்றிக்கொண்டு பேசுகிறார்,
“ பார்த்திபன் …. இப்ப அம்மா என்ன சொல்லிட்டேனு கோபப்படுரே? உன் நல்லதுக்குதானே சொல்றேன். காலம் கெட்டுப் போய் இருக்குது! நாம் தான்பா கவனமுடன் இருக்கனும்…..!” அம்மா என்றவகையில் தனக்குப் பட்ட ஞாயத்தைக் கூறுகிறார்.
“அம்மா என் நண்பர்கள் எல்லாரும் நல்லவர்கள்………..! அவர்கள் என்னைக் கெடுக்கும் அளவில் நான் நடந்து கொள்ள மாட்டேன். நீங்க இப்படி என்னைச் சந்தேகப்பட்டால், நான் வீட்டை விட்டுப் போயிடுவேன்” என்று சற்றும் எதிர்பாராதவிதமாக ஒரு குண்டைத் தூக்கிப் போட்ட போது, அம்மா அதிர்ச்சியில் உறைந்து போகிறார்! செய்வதறியாமல் வாயடைத்துப் போகிறார். அதர்ச்சியில் அவரது இதயம் வேகமாக அடித்துக் கொள்கிறது!
இனியும் மகனிடம் பேசுவது பெரும் மனச் சஞ்சலத்தைத் தரும் என்பதால் ஏமாற்றத்தால் ஏதும் பேசாமல் வாயடைத்து நிற்கிறார்…..! விதி எப்படியெல்லாம் மகனின் வாழ்வில் விளையாடுகிறது…!தம் தலைவிதியை எண்ணி நொந்து கொள்கிறார்!
நிலைமைக் கட்டுக்கடங்காமல் போவதை எண்ணி அப்பா தினகரன், அதர்ச்சியுடன் மனைவியைப் பார்க்கிறார்.அம்பிகை மிகவும் கவலை அடைந்தவராகக் காணப்படுகிறார்.
18 ஒரே பிள்ளை
“ஒரே பிள்ளை என்று செல்லம் கொடுத்து வளர்த்தது எவ்வளவு தவறாப் போயிட்டதப் பார்த்திங்களா…..?” கணவரிடம் வருத்தமுடன் கூறுகிறார்.
“கவலைப் படாதே, நீ….கொஞ்சம் அமைதியா இரு…..!” மனைவியை அமைதிப்படுத்துகிறார்.
“என்னங்க…..நம்ம நிலைமை இப்படியாயிடுச்சே…..நாம யாருக்கு என்னங்கத் துரோகம் செஞ்சோம்…..!” அம்பிகையின் கண்கள் கண்ணீரைச் சொரிகின்றன. இரும்பு மனம் கொண்ட மனைவி முதன் முதலாகக் கண்ணீர் வடித்ததைக் கண்டு மனம் கலங்குகிறார்.ஆதரவாக மனைவியை அணைத்தபடி ஆறுதல் கூறித்தேற்றுகிறார்.எனினும் மனைவி ஆறுதல் கொள்வதாக இல்லை! அவரின் எதிர்பார்ப்புகள் தவடு பொடியாகிப் போனதை நினைத்து மனம் உடைந்து போகிறார் அம்பிகை.அவரைத் தேற்ற தினகரன் மிகவும் சிரமப்படுகிறார்.
“ அம்பிகை…..இது நமக்குச் சோதனையான நேரம். கடவுள் நம்மைச் சோதிக்கிறாரு. இது போன்ற துயரமான நேரத்தில நாம பதறாமல் கடவுள் மேல பாரத்தைப் போட்டுட்டு அமைதியா இருக்க வேண்டியதுதான். நாம தாங்கும் அளவுக்குக்தான் கடவுள் சோதிப்பாரு. இதுவும் கடந்து போகும்” ஆறுதல் படுத்துகிறார் தினகரன்!
கணவரின் ஆறுதல்,மனைவிக்குக் காயப்பட்டப் புண்ணுக்கு மருந்து போட்டது போல் இருந்தது. அவர் கண்களிருந்து வழிந்தோடியக் கண்ணீரைத் தம் சேலைத் தலைப்பால் துடைத்துக் கொள்கிறார்.மனைவியை அணைத்தபடி தலையைத் தடவிக் கொடுக்கிறார் தினகரன். மனைவி சற்று ஆறுதல் அடைகிறார்.அது தினகரனுக்குச் சற்று நிம்மதியாக இருக்கிறது.மனைவி கவலையினால் கண்ணீர் விடுவதைக் காண அவர் சிறிதும் விரும்பவில்லை!
வயிற்றில் பத்து மாதம் சுமந்து பெற்றப் பிள்ளைத் ,தன் பேச்சை மீறியது மட்டுமல்லாது நம் கையை விட்டே சென்று விடுவானோ….? என்ற எண்ணம் மனதில் உதித்தபோது பல்வேறு எதிர்மறை எண்ணச் சிதறல்களால் சிக்குண்டு அந்தத் தாயுள்ளம் கண்ணீர் வெள்ளத்தில் மூழ்கியது! தன் பிள்ளை மீதுஇதுகாறும் வைத்திருந்த அசைக்க முடியாத நம்பிக்கை வெடித்துச்சுக்கு நூறாகிப் போவதை அந்தக் தாயுள்ளத்தால் தாங்கிக்கொள்ள முடியாமல் கண்ணீரில் கரைந்து போகிறார்.
‘பெற்ற மனம் பித்து ; பிள்ளை மனம் கல்லு’ என்று பெரியோர் சொல்லி வைத்த வாக்கு ஒரு போதும் பொய்ப்பதில்லை என்பது தன் வாழ்க்கையிலும் உண்மையாகிவிட்டதே….! அம்பிகையால் இந்த வாழ்க்கை நடைமுறையை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிக்கிறார். தனது குடும்பவாழ்க்கை நரகத்தில்தான் போய்முடியுமோ என்ற சந்தேகத்திற்கு இடம் கொடுக்கிறார். அவநம்பிக்கையினால் மேலும் துவண்டு போகிறார் அம்பிகை! தனது பிரச்னையை யாராவது தீர்த்து வைக்க மாட்டார்களா என்றும் பெரிதும் எதிர்பார்க்கிறார்.
பெற்ற தாயின் சொல்லும் வடித்தக் கண்ணீரும் , பார்த்திபனை ஒன்றும் செய்து விடவில்லை ! கேடு காலம் வந்தால் யாரையும் விட்டு வைக்காது! அதுதான் விதிபோலும். அம்பிகையால் அதனைக் கண்கூடாகக் காண நேர்ந்தது!
திடுமென பார்த்திபன் அடியோடு மாறியிருந்தான்! அவன் நடவடிக்கைகள் யாவும் விநோதமாக இருந்தன! யார் சொல்வதையும் கேட்கும் நிலையில் அவன் இல்லை! மென்மைப் போக்குடையப் பார்த்திபன்
கரடுமுரடாகிப் போன அவனது நடவடிக்கைகளால் அம்பிகை திகிலடைகிறார்!
இப்போதெல்லாம் வேலைக்குச் செல்லும் பார்த்திபன், இரவில் வெகுநேரம் கழித்து வீடு திரும்புகிறான். காரணம் கேட்டாலும் வாய் திறந்து பதில் எதுவும் கூறமாட்டான்! மௌனமே அவனது வாழ்க்கையாகிப் போகிறது! அவனை ஒன்றும் கேட்க முடியாத நிலையில் ‘அனலிலிட்ட புழு போல்’ துடிதுடித்துப் போகின்றனர் பெற்றோர் இருவரும். ஊர், உலகத்துக்கு அஞ்சி வெளியில் யாரிடமும் பேச முடியாமல் வாய்மூடி மெளனம் காக்கின்றனர்!
நல்லது கெட்டது என்று எதையும் சீர்தூக்கிப்பார்க்கும் மன நிலையில் அவன் அறவே இல்லை! பெற்றோரிடமும் அவன் பேசுவதுச் சுத்தமாக நிறுத்திக் கொண்டுள்ளான்! அதிலும் அப்பாவோடுப் பேசுவதை அவன் அடியோடு நிறுத்தியிருந்தான்! அவன் சம்பாதிக்கும் எந்த வருமானத்தையும் இப்போதுப் பெற்றோர்களின் கண்ணில் காட்டுவதில்லை !
சனி,ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறைக்காலங்களில் பார்த்திபன் வீட்டில் தங்குவதேக் கிடையாது! நண்பர்களோடு வெளியூருக்குச் சென்று விடுதிகளில் தங்குவதும், நண்பர்கள் வீடுகளில் தங்குவதுமாகக் காலத்தைக் கழிக்கலானான்! சொர்கமாகத் தெரிந்த வீடு இப்போது அவனுக்கு நரகமாகத் தெரிந்தது!
19 தடுமாற்றம்
வீட்டிற்குத் திரும்பும் நாட்களில் அவன் கண்கள் சிவப்பாகக் காணப்படும்.போதையோடு நிலைத் தவறிய நிலையில் ஒவ்வொரு நாளும் இல்லம் திரும்புவான். அவன் வீட்டில் நுழைந்தவுடன் அவன் உடம்பிலிருந்து மதுவாடை வீசும்.ஆனால்,குப்பென்று வேறுவிதமான துர்நாற்றம் வீசும்! அந்தத் துர்நாற்றம் மதுவாடையை விட மோசமாக இருக்கும்! கஞ்சாப் புகைப்பவன் போல்,தள்ளாடி நடக்கும் அவனது நடை அவனைத் தெள்ளத் தெளிவாகக் காட்டிக் கொடுத்தது!
அவனிடம் குடிகொண்டிருந்த நற்குணங்கள் யாவும் இப்போது எங்கோ பறந்து விட்டிருந்தன! அவனது தான்தோன்றித் தனமும் மட்டுமரியாதை அற்றுப்போன தடித்தப் பேச்சும், பெற்றோர் அவன் மீது வைத்திருந்த மதிப்பும் மரியாதையும் வெடிவைத்துத் தகர்த்த வானலாவியக் கட்டடம் போல் இடிந்து தரை மட்டமாகிப் போயிருந்தது!
ன்பைப் பொழிய வேண்டிய மகன், தங்கள் மீது நெருப்புத் துண்டுகளாக உமிழும் வெறுப்பு அம்பிகையின் கண்களில் இரத்தக் கசிவை ஏற்படுத்தியது! அம்மாவின் சமையலைச் சுவைத்துச் சாப்பிட்ட பார்த்திபன், வீட்டில் குடும்பத்துடன் ஒன்றாய் அமர்ந்து சாப்பிட்டுப் பல நாட்களாகின்றன! கண்முன்னே மகன் இருந்தும் தம் கையால் அவன் உணவு சாப்பிடாமலிருப்பது அம்பிகைக்குப் பெரும் வேதனையாக இருக்கிறது.எப்படி இருந்த குடும்பம் இப்படி ஆகிவிட்டதே! அம்பிகையால் இதனை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவித்துப் போகிறார்.
ஆரோக்கிய உணவு உண்ணாததாலும்,சரியானத் தூக்கமின்மையாலும் பார்த்திபன் உடல் நிலையில் பெரும் மாற்றம் தெரிந்தது. முன்பைப் போல் அவன் ஆரோக்கியமாக இல்லை! அவன் மெலிந்து காணப்பட்டான்! அவன் முகத்தில் தாடி மீசையைப் பார்க்க முடியாது. ஆனால்,தினம் சேவ் பண்ணாத அவன் முகத்தில் முடிகள் தாறுமாறாக வளர்த்திருந்தன! பார்க்கச் சகிக்க வில்லை! நினைத்துக் கொண்டால் எப்போதாவது முகத்தை மழித்துக் கொள்வான் போல் தெரிந்தது!
ஒழுங்காக அவன் வேலைக்குக் கூடச் செல்லாமல் வீட்டில் அடைப்பட்டுக்கிடந்தான்! மறைவாக வெளியில் புகைத்துக் கொண்டிருந்தவன் இப்போது வீட்டில் யாரைப் பற்றியும் கவலைப் படாமல் அவன் அறையில் விருப்பம் போல்,புகைக்கிறான்.அடிக்கடி நண்பர்களின் வருகை வீட்டில் தாராளமாக இடம் பெறுகிறது! எதையும் அவனிடம் கேட்க முடியவில்லை. இது அம்பிகைக்கு தலைக்குனிவையும் கவலையும் தருகின்றன.
அன்று வேலைக்குச் சென்ற பார்த்திபன், விபத்தொன்றில் சிக்குண்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தொலைபேசி மூலமாகத் தகவல் கொடுத்த போது அதர்ச்சிக்குள்ளான கணவனும் மனைவியும் அலறியடித்துக்கொண்டு மருத்துவமனையை நோக்கி மின்னலாய்ப் பாய்ந்து செல்கின்றனர்!
மருத்துவமனையின் அவசரப் பிரிவில் சேர்க்கப் பட்டிருந்த பார்த்திபனுக்குக் கால்,கை,உடல் பகுதிகளில் கட்டுகள் பெரியதாகப் போடப் பட்டிருந்தன! போடப் பட்டிருந்த கட்டுகளில் இரத்தக் கசிவு ஏற்பட்டிருந்தது! அதைப் பார்த்த அம்பிகைக்கு மயக்கமே வந்துவிட்டது. பெற்ற வயிறு பற்றி எரிந்தது!
அவன் படுக்கையைச் சுற்றிலும் காவல் துறையினர் சூழ்ந்து கொண்டிருந்தனர்! குடும்ப உறுப்பினரைத் தவிர வேறு யாரையும் பார்த்திபனைப் பார்க்க காவல் துறையினர் அனுமதி வழங்கவில்லை! இது அம்பிகைக்குப் பெரும் அதர்ச்சியாகவும் வேதனையாகவும் இருந்தன!
பார்த்திபனின் பெற்றோரிடம் காவல் துறையைச் சேர்ந்தவர்கள் பலவிதமான கேள்விகளைக் கேட்டு மேலும் திகிலையும் அச்சத்தையும் ஏற்படுத்திவிட்டனர்! காவல் துறையினர் தெரிவித்தத் தகவலைக் கேட்டுப் பெற்றோர் அதர்ச்சிகு மேல் அதர்ச்சி அடைகின்றனர்!
காரை நிறுத்துமாறு கட்டளைப் பிரப்பித்த பின்னரும் காரை நிறுத்தாமல் அதிவேகமாகக் காரை ஓட்டிச்சென்றதால் சந்தேக நபர்களைப் போலீசார் சுட்டதில் காரிலிருந்த நால்வரில் மூவர் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டதாகவும், அதில் பார்த்திபன் மட்டுமே அதிர்ஸ்ட வசமாகச் சொற்பக் காயங்களுடன் உயிர்த் தப்பியதாகவும் தகவல் சொல்லப்படுகிறது!
இது நாள் வரையிலும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டிருந்த கும்பலில் முக்கியமான மூவரைச் சுட்டு வீழ்த்தியது மூலம் அக்கும்பலைத் துடைத் தொழிப்பதில் வெற்றி பெற்றதாக் காவல் துறையினர் ஊடகங்கள் வழி பொது மக்களுக்குத் தகவல் கொடுக்கின்றனர்!
சிகிட்சை முடிந்த சில நாட்களுக்குப் பிறகு மருத்துவமனையிலிருந்து நேராகச் சிறைக்குக் கொண்டு செல்லப்படுகிறான் பார்த்திபன். போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் பார்திபனுக்குத் தொடர்பு இருப்பதை உறுதிப்படுதியக் காவல் துறையினர் பார்த்திபன் மீது நீதி மன்றத்தில் குற்றப் பதிவு செய்கின்றனர். நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு பல வாரங்கள் பார்த்திபன் மீது விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.பார்த்திபன் ஒவ்வொரு முறையும் குற்றவாளிக் கூண்டில் நிற்கும் போதெல்லாம் அம்பிகை அவமானத்தால் உடல் கூனிக்குறுகிப்போகிறார்.
[தொடரும்]