பத்திரிகையாளர், எழுத்தாளர், அரசியல் விமர்சகர், நாடகக் கலைஞர் என பல்வேறு முகங்கள் கொண்டவர் ஞாநி சங்கரன். பரீக்ஷா நாடகக் குழுவை 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தி வருகிறார். அதன் மூலம் பல்வேறு சமூக நோக்குள்ள வீதி நாடகங்களையும், மேடை நாடகங்களையும் நிகழ்த்தியுள்ளார்.
1954ம் ஆண்டு செங்கல்பட்டில் பிறந்தவர். அங்குள்ள புனித சூசையப்பர் பள்ளியில் படித்தார். பின்பு கல்லூரிக் கல்வியை சென்னை கிறித்துவக் கல்லூரியில் படித்திருக்கிறார். இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் விளம்பர்ப பிரிவில் பணியாற்றியவர், இதழியல் பட்டயப் படித்து பின்பு அதே நாளிதழில் நிருபராகவும் பணியில் சேர்ந்தார். அதன் பிறகு பல்வேறு ஊடகங்களில் பணியாற்றிய காலத்தில் அரசியல் விமர்சனக் கட்டுரைகள் எழுதி அவருக்கென ஒரு தனி பாணியை உருவாக்கினார். அவருடைய ஞான பானு என்கிற பதிப்பகத்தின் மூலம் அவருடைய படைப்புகள் அனைத்தையும் புத்தகமாக கொண்டுவந்தார். பல்வேறு பத்திரிகைகளுக்கு கெளரவ ஆசிரியராகப் பணியாற்றியிருக்கிறார். கடைசியாக அவர் தினமலர் நாளிதழின் இணைப்புப் பிரதியான ‘பட்டம்’ இதழின் ஆலோசகராக பணியாற்றினார்.
சமீப காலமாக உடல்நிலை கோளாறு காரணமாக ஓய்வில் இருந்த எழுத்தாளர் ஞாநி, இன்று அதிகாலை 2.30 மணிக்கு மூச்சுத் திணறல் காரணமாக சென்னை கே.கே.நகரில் உள்ள அவரது இல்லத்தில் இயற்கை எய்தினார். சென்னை மருத்துவக் கல்லூரிக்கு அவரது உடல் தானம் செய்யப்பட்டது. பல்வேறு எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், சினிமா கலைஞர்கள், அரசியல்வாதிகள் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.