தேசம்
1988ல் நான் வாரங்கல் ரயில்நிலையத்தை அடைந்தபோது எனக்கு வயது 26. இந்தியாவை தானும் கண்டடையத் துடித்து கிளம்பிய தனித்த பயணி. கடலில் சம்பிரதாயமாக குளித்தபிறகு என் பயணத்தை கன்னியாகுமரியிலிருந்து தொடங்கினேன். காளஹஸ்தியின் உடைந்த கோயில்களையும் திருப்பதியின் நெரிசலிடும் கூட்டத்தையும் கண்டபிறகு வடக்குநோக்கி செல்ல ரயில் பிடிக்கும்பொருட்டு வாரங்கல் வந்தேன் .என்னிடம் பணம் குறைவாகவே இருந்தது. ஜவகர்லால் நேருவின் நூற்றாண்டுக் கொண்டாட்டத்தை ஒட்டி அரசு சலுகைக் கட்டணத்தில் அளித்த நேருயாத்ரி என்ற பயணச்சீட்டும் வாரங்கல் ஒப்புநோக்க சின்ன ஊர்.ஆனால் ரயில்நிலையம் மட்டும் மிகப்பெரியது. அப்போது மணி பதினொன்று, ரயில்கள் காலையில்தான் வரும் என்றார்கள். என் பயணம் முழுக்க நான் எங்குமே வாடகை விடுதியறைகளில் தங்கவில்லை.பெரும்பாலும் இரவுகளை ஓடும் ரயில்களிலும், ரயில்நிலையங்களிலும் ,கோயில்களிலும் ,அபூர்வமாக கடைத்திண்ணைகளிலும் கழித்தேன். ஆகவே தூசிபடிந்த ஆளற்ற அந்த ரயில்நிலையக் கொட்டகை மிக வசதியான இடமாகப் பட்டது.
என்னை விரித்துக்கொள்ள நல்ல இடம் தேடி நடந்து கண்டடைந்தேன் .தூங்க ஆரம்பிக்கும் முன்பு வினோதமான ஒலிகள் கேட்டன. குழந்தைகளின் ஒலிகள் . அருகேயிருந்த உடைந்த காத்திருப்புக்கொட்டகையில் கிட்டத்தட்ட நூறு குழந்தைகளைக் கண்டேன் . பிளாஸ்டிக் தாள்களையும் பெரிய திரைப்படச் சுவரொட்டிகளையும் படுக்கையாக விரித்து கும்பல்கும்பலாகப் படுத்திருந்தார்கள். பதினைந்து முதல் ஒருவயதுவரை வேறுபட்ட பிராயம் கொண்ட சிறுவர்கள், சிறுமிகள் .சிலர் தூங்க பிறர் ஒருவரோடொருவர் பேசியபடியும் பூசலிட்டபடியும் இருந்தனர்.
அதில் ஒரு பதிமூன்றுவயது பையன் என்னைக் கவனித்து, சிரித்தபடி வந்து ” நேரமென்ன ?” என்று கேட்டான்.அவனது கரம் தற்செயலாக என் அந்தரங்க உறுப்பை தொட்டுச்சென்றது. உடனே அது மிக பயிற்சியுடன் செய்யப்பட்ட ஓர் அசைவென்று உணர்ந்துகொண்டேன்.
அவனை தள்ளினேன். அவன் புன்னகை மாறுபட்டது. அவன் குரல் தாழ்ந்தது. நான் பெண் குழந்தைகளையும் பெறமுடியும் என்று சொன்னான்.அப்போது பல குழந்தைகள் ஓடிவந்தன. ஏராளமான பிஞ்சு விரல்கள் என் நடுப்பகுதியை தீண்டத் துடித்தன. நான் அவர்களிடமிருந்து தப்பி கிட்டத்தட்ட ஓடினேன்.
குழந்தைகளின் ஒலிகள் வலுத்தன. திடீரென்று ஓரு பெரும் சண்டை வெடித்தது. நான் பாய்ந்தெழுந்து பீதியுடன் கவனித்தேன்.சில பெரிய பையன்கள் மற்ற குழந்தைகளை மூர்க்கமாக தாக்கினார்கள்.சில சின்னஞ்சிறு குழந்தைகள் இரக்கமின்றி அடிபட்டன. ஒன்றிரண்டு கொல்லப்படலாம் என்று எனக்கு தோன்றிவிட்டது. கையில் பெரிய லத்தியுடன் ஒரு ரயில்வே போலீஸ்காரன் உள்ளே ஓடினான்.
எதையுமே கவனிக்காமல் கண்மூடித்தனமாக குழந்தைகளை அடிக்க ஆரம்பித்தான்.கதறல்கள். கம்பு எலும்பில் படும் அமுங்கிய ஒலிகள். போர்க்களம்போல இருந்தது அப்பகுதி. அந்த குளிர்ந்த இரவில் ரத்தத்தின் அமில மணம் என்னை நடுங்கச்செய்தது. உடைந்த மண்டையுடன் ஒரு சிறுமி கூவியபடி என்னைத் தாண்டி ஓடினாள். தரையில் சிறு முத்துக்கள்போல ரத்த துளிகள் சிதறின.கொட்டகை காலியாயிற்று.
போலீஸ்காரர் என்னருகே வந்தார் .சிலகேள்விகளைக்கேட்டு நான் யாரென தெளிவுபடுத்திக் கொண்டு “குட்மானிங்” என்றார். அவருக்கு இயல்பிலேயே நல்ல மனிதர்களை அடையாளம் காணும் திறமை இருப்பதாகவும், அப்படி அடையாளம் கண்ட உடனேயே குட்மானிங் சொல்லிவிடுவது வழக்கமென்றும் சொன்னார். குழந்தைகளைப்பற்றி கேட்டேன். அவை விபச்சாரிகளின் குழந்தைகள் என்றார் .பிச்சை எடுத்தும், திருடியும், விபச்சாரம் செய்தும் வாழ்பவை. பகல்முழுக்க நகரிலும் ரயில்களிலும் அலைகின்றன. இரவில் இங்கே படுக்க வந்துவிடுகின்றன. அவற்றை உடனடியாக ஜெயிலுக்கு அனுப்பிவிடவேண்டுமென்று அவர் அதி தீவிரமாக வாதிட்டார். எப்படியானாலும் அங்கேதான் போகப்போகிறார்கள், ஏன் பெரிய குற்றம் செய்வதுவரை நாம் காத்திருக்கவேண்டும்?
அவரை தவிர்க்க நான் செயற்கையாக குரட்டை விட்டேன். அவர் என்னை எதைப்பற்றியும் கவலைப்படாமல் தூங்குமாறு சொன்னார். அவர் இருக்கும் இடத்தில் எந்த பிரச்சினையும் இருக்காது. நான் பெருமூச்சுவிட்டேன். அடியின் ஒலி என் தலையின் மெல்லிய நரம்புகளில் மீண்டும் மீண்டும் எதிரொலித்தது.
சற்றுநேரம் கழித்து குழந்தைகள் ஒவ்வொன்றாகத் திரும்பிவந்தன. ஒரு சிறுகுழந்தை மண்டையில் காயத்தில் தாளை ஒட்டி வைத்திருந்தது. அதன் அக்காவின் இடுப்பில் இருந்தபடி என்னை கண்ணீர் உலர்ந்த தடத்துடன் ஆர்வமாகப் பார்த்தது. மெல்ல மெல்ல சத்தம் அதிகரித்தது. பூசல்கள் வலுத்தன. மீண்டும் சண்டை. அதே போலீஸ்காரர் அதே லத்தியுடன் பாய்ந்துவந்தார். அடிகளை இம்முறை என்னால் தாங்கவே முடியவில்லை. கால்கள் தள்ளாடின. கொட்டகையின் மறுபக்கம் நாற்றமடிக்கும் பொதுக்கழிப்பிடமருகே சென்று படுத்துக் கொண்டேன். இரவு முழுக்க நான் தூங்கவில்லை. கொசுக்கடி. மூளைக்குள் அடியின் முடிவேயில்லாத அதிரல்கள்.
அதிகாலையில் எழுந்து திறந்த டீக்கடையில் முதல் டீ சாப்பிடச்சென்றேன். கொட்டகை அமைதியாக இருந்தது. தூங்கும் குழந்தைகளின் முகங்களில்நாம் அவற்றின் துக்கங்களைக் காணமுடிவதில்லை . அந்த அமுங்கிய மூக்கும் உப்பிய கன்னக்களும் அளிக்கும் களங்கமற்ற தேவதைத்தனம் மட்டுமே தெரிகிறது. அங்கே நின்று பார்த்தபோது எல்லா வகையான இந்திய முகங்களையும் கண்டேன். திராவிட, ஆரிய, மங்கோலிய முகங்கள். தமிழ் தெலுங்கு கன்னட மலையாளச் சாயல்கள் ……. ஆகவேதான் நான் எப்போதுமே இந்திய ஒருமைப்பாட்டுக்கு ஓட்டு போடுகிறேன்.
[ஆங்கில மூலக்கட்டுரை ‘தி சண்டே எக்ஸ்பிரஸ்’ நாளிதழில் வெளியானது. தமிழாக்கம்: அருண்மொழிநங்கை]
– பதிவுகள் செப்டம்பர் 2003; இதழ் 45 –