– ‘பதிவுகள்’ இணைய இதழ் பற்றிய படைப்பாளிகள் மற்றும் வாசகர்களின் கருத்துகளை எதிர்பார்க்கின்ஏறோம். உங்கள் கருத்துகளை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பவும். – பதிவுகள் –
பதிவுகள் என்ற இணையப் பத்திரிகையுடனான எனது தொடர்பு நீண்ட காலத்திற்கு முன்பே ஆரம்பமானது. இலக்கியக் கூட்டங்களில் பதிவுகளின் ஆசிரியரை அடிக்கடி சந்தித்திருக்கின்றேன் ஆனால் இவர்தான் அதன் ஆசிரியர் என்பதைத் தொடர்பு படுத்திப் பார்க்கவில்லை. ஆனந்தவிகடன் பவளவிழா ஆண்டில் வெளிவந்த ஒரு இதழில் ‘பல்லிக்கூடம்’ என்ற சிறந்ததொரு கதையை வ.ந. கிரிதரன் என்பவர் எழுதிப் பணப்பரிசு பெற்றிருந்தார். அதிபர் பொ.கனகசபாபதி அவர்களுடன் உரையாடும் போது பதிவுகள் ஆசிரியர் தான் இவர் என்பதை அறிந்து கொண்டேன். எனவே அவருடன் தொடர்பு கொண்டு அவரைப் பாராட்டினேன். அவருடன் தொலைபேசி மூலம் உரையாடும் போது அவர் ஆனந்தவிகடனில் வெளிவந்த எனது கதைகளைப் பற்றிக் குறிப்பிட்டுப் பாராட்டியிருந்தார். அவரிடம் பாரபட்சமற்ற நிறையவே தேடல் இருப்பதை அப்போது புரிந்து கொண்டேன்.
ஒரு முறை அவருடன் தொலைபேசியில் உரையாடும்போது, அவர் என்னிடம் ‘விகடனுக்கான ஆக்கங்களைத் தபால் மூலமா அனுப்புகின்றீர்கள்’ என்று வினாவினார். நான் அதற்கு ஆம் என்று பதில் அளித்தேன். அந்தக் காலகட்டத்தில் நண்பர் சசிதரனின் பாமினி எழுத்துருதான் என்னிடம் இருந்தது. தமிழ் ஆரம் ஒளிநாடாவையும் பயிற்சி நூலையும் நான் முதலில் வெளியிட்ட போது எனக்கு ஒரு தமிழ் எழுத்துரு தேவைப்பட்டதால், பாமினி எழுத்துருவையே சசியிடம் இருந்து வாங்கியிருந்தேன். அப்பொழுது எழுத்துரு மாற்றிகள் பாவனையில் இல்லாத படியால் பாமினி எழுத்துருவில் மின்னஞ்சல் மூலம் விகடனுக்கு என்னால் அனுப்ப முடியாமல் இருந்தது. அப்பொழுது ‘அஞ்சலி’ என்ற எழுத்துருவில் ஆக்கங்களை அனுப்ப முடியுமா என்று ஆசிரியர வீயெஸ்வி அவர்கள் என்னிடம் கேட்டிருந்தார். அதன் பாவனை எனக்குத் தெரியாததால் நான் தொடர்ந்தும் தபால் மூலமே விகடனுக்கு ஆக்கங்களை அனுப்பிக் கொண்டிருந்தேன். காலதாமதத்தை எப்படி நிவர்த்தி செய்யலாம் என்று நினைத்த போது நண்பர் கிரிதரன் எனக்கொரு ஆலோசனை தந்தார். எழுத்துருவை யூனிக்கோட்டாக மற்றி அனுப்பலாம் என்ற ஆலோசனையை முதலில் தந்தது அவர்தான். தீபாவளி மலருக்கு அவசரமாக ஒரு உண்மைக்கதை தேவை என்று விகடன் ஆசிரியர் பீடம் கேட்ட போது அதை எழுதித் தாமதமின்றி யூனிக்கோட் எழுத்துருவில் என்னால் அனுப்பமுடிந்தது மட்டுமல்ல, அந்தக் கதை விகடன் தீபாவளி மலரில் வெளிவந்து பல வாகர்களையும் சென்றடைந்து பாராட்டைப் பெற்றுத் தந்தது. இப்பொழுதும் யாராவது 1983இல் நடந்த சம்பவத்தைக் கருவாகக் கொண்ட அந்தக் கதையைப் பற்றிக் குறிப்பிடும் போதெல்லாம் ‘பலன் எதிர்பார்க்காமல் உதவும் நண்பர் கிரிதரன்’தான் என் மனக் கண்ணில் தோன்றுவார்.
‘அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!’ என்ற நற்சிந்தனை கொண்ட நண்பர் கிரிதரனிடம் நல்ல சிறந்த பண்புகளை அவருடன் பழகும் போது அறிந்து கொண்டேன். யாருடைய மனமும் நோகாமல் குறைகளைத் துணிந்து தனது இணைப் பத்திரிகையில் எடுத்துச் சொல்லும் துணிவை மனதாரப் பாராட்டியிருக்கிறேன். தற்செயலாக நடந்தது போல இருட்டடிப்பு செய்து பழக்கப்பட்ட சிலருக்கு அவரது நேர்மை பிடிப்பதில்லை. மிரட்டிப் பார்ப்பது என்பது இந்த இலக்கிய வட்டத்தில் புதுமை அல்ல என்பதால், இதற்காகப் பல மிரட்டல்களையும் அவர் சந்தித்திருப்பார் என்றே நினைக்கின்றேன். இலக்கியத்தில் ஆர்வம் உள்ள சிலர் மிகவும் புத்திசாலித் தனமாகச் சில விடையங்களை வேண்டும் என்றே மறைத்து தமது பட்டியலைத் தயாரித்து வெளியிடும் போது நண்பர் கிரிதரன் தனது பதிவுகள் இணையத்தில் அவர்கள் விட்ட தவறுகளை ஆதாரத்தோடு சுட்டிக் காட்டத் தவறுவதில்லை. காரணம் தமிழ் இலக்கியத்தில் நல்ல அறிவுள்ளவராக அவர் இருப்பது மட்டுமல்ல, நிறைய வாசிப்பு அனுபவமும் அவரிடம் இருக்கிறது. என்னைப் போலவே அவரும் அம்புலிமாமா காலத்தில் இருந்தே வாசிக்கத் தொடங்கியிருந்தார். நான் தேடித்தேடி வாசித்த புத்தகங்களை எல்லாம் அவரும் வாசித்திருப்பதைப் பதிவுகள் மூலம் அறிந்து கொள்ள முடிந்தது. இப்பொழுதும் அவரிடம் நிறையத் தேடல்கள் இருப்பதைப் பதிவுகளில் வெளிவரும் பலருடைய வித்தியாசமான ஆக்கங்களில் இருந்து புரிந்து கொள்ள முடிகின்றது. எதையுமே உடனே ஆவணப்படுத்தப் படாவிட்டால் அதற்குச் சொந்தம் கொண்டாடப் பலர் கிளம்பிவிடுவார்கள் என்பதை எனது அனுபவத்தின் மூலம் நான் அறிந்து கொண்டிருக்கிறேன். பதிவுகள் இணையப் பத்திரிகை ஒரு ‘பதிவகமாகவும்’ இயங்குவது பெருமைக்குரியது.
ஈழத்தமிழர் பலரின் ஆக்கங்களை இங்கேதான் என்னால் இனங்கண்டு கொள்ள முடிந்தது. பதிவுகளில் எழுதும் பல எழுத்தாளர்களிடம் இருந்து எனது 25வது வருட கனடிய இலக்கிய சேவைப் பாராட்டி வெளி நாடுகளில் இருந்து வாழ்த்துச் செய்திகள் வந்தபோதே பதிவுகள் எங்கெல்லாம் கால்களைப் பதித்திருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. விட்டுப் போன பல உறவுகளையும், நட்புக்களையும் எனது எழுத்து மூலம், மின்னஞ்சல் உதவியோடு தேடித்தந்ததும் இந்தப் பதிவுகள் இணைய இதழ்தான். சுமார் 30 வருடங்களுக்குமுன் தெடர்பு விட்டுப்போன லண்டனில் உள்ள நண்பன் ஒருவன் பதிவுகள் மூலமே என்னை அடையாளம் கண்டு தொடர்பு கொண்ட சம்பவம் மறக்க முடியாதது. தொடக்க காலத்தில் ‘திண்ணை’ என்ற இணையப் பத்திரிகையும், ‘பதிவுகள்’ என்ற இணையப் பத்திரிகையுமே பலரது ஆக்கங்களையும் பாரபட்சமின்றி வெளியுலகிற்கு எடுத்துச் சென்றன. பல புதிய எழுத்தாளர்களை அறிமுகம் செய்து வைத்ததும் இந்தப் பத்திரிகைகள்தான். வேறு சில இணையத் தளங்கள் இயங்கினாலும் அவை குறுகிய வட்டத்திற்குள்ளேயே நின்று கொண்டதால் அவ்வளவாகப் பிரபலம் அடையவில்லை.
பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு பயிலும் பலர் இணைய இதழ்கள் பற்றி ஆய்வுகளுக்காக ஆராய்ந்திருக்கின்றார்கள். குரு அரவிந்தனின் பல ஆக்கங்கள் பதிவுகளில் இடம் பெற்றிருந்ததால், கலைமாணிப்பட்டப் படிப்பிற்காக ‘புலம்பெயர் இலக்கிய வரலாற்றில் குரு அரவிந்தன் அவர்களின் நாவல்கள் – ஓர் நுண் ஆய்வு’ என்ற ஆய்வு நூலுக்காக சுபாஷினி முத்துக்குமார் என்ற மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மாணவி ‘பதிவுகள்’ இணையகத்தை உசாத்துணை மின்னியல் நூலுக்காகப் பயன்படுத்தியிருந்தார். அதைத் தனது ஆய்வு நூலில் குறிப்பிட்டிருந்தார். இதேபோல, பதிவுகள் இணைய இதழில் ஆசிரியர் வ. ந. கிரிதரன் அவர்களின் பதிவையும் இங்கே தருகின்றேன். ‘எழுத்தாளர் அண்ணா கண்ணன் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் எம்ஃபில் ஆய்வுக்காக தான் எழுதிய ஆய்வில் பதிவுகள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். இவ்வாய்வு நூல் அமுதசுரபி வெளியீடாக வெளிவந்துள்ளது. மேலும் பலர் தமது பல்கலைக்கழகப் பட்டபடிப்பில் ‘தமிழ் இணைய இதழ்கள்’ ஆய்வுக்காக ‘பதிவுகள்’ பற்றியும் ஆராய்ந்துள்ளார்கள். சு. துரைக்குமரன் பி.லிட்., எம்.ஏ., ஆசிரியப் பயிற்றுநர், வட்டார வள மையம், புதுக்கோட்டை அவர்களும் பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்ள இந்தக் களத்தை எடுத்துக்கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இது பற்றி அவர் திண்ணை இணைய இதழில் கட்டுரையொன்றினை அண்மையில் எழுதியுமிருந்தார். எழுத்தாளர் சோழநாடனும் (ப.திருநாவுக்கரசு) இணையத்தில் தமிழ் பற்றிய ஆய்வு நூலொன்றினை வெளியிட்டுள்ளார். அதில் ‘பதிவுகள்’ இணைய இதழ் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பலர் அவ்வப்போது இவ்வாய்வு சம்பந்தமாக எம்முடன் தொடர்பு கொள்வதுமுண்டு. தமிழ் இலக்கிய உலகில் கணித்தமிழ் இலக்கியமும் ஒரு பிரிவாக ஏற்றுக் கொள்ளப்பட்டதையே மேற்படி ஆய்வுகளும், தமிழ் இணைய இதழ்கள் மீதான கவனமும் காட்டுகின்றன. இன்று கணித்தமிழ் இலக்கிய உலகில் இணைய இதழ்கள், வலைப்பூக்கள், விவாதக்குழுக்களெல்லாம் முக்கிய பங்கினையாற்றி வருகின்றன. குறுகிய காலத்தில் கணித்தமிழ் அடைந்துள்ள வளர்ச்சி நம்பிக்கையினையும், பிரமிப்பினையும் ஊட்டுகின்றது.’ முன்பெல்லாம் தபால் மூலம்தான் தகவல்களைப் பெற முடிந்தது. நவீன உலகில் பதிவுகள் போன்ற இணைய இதழ்கள் உசாத்துணைக்கு மிகவும் உதவியாக இருக்கின்றன.
நடுநிலையில் நின்று பாரபட்சமின்றி இயங்கிப் பல வாசகர்களைத் தேடித்தந்த பதிவுகளுக்கும், அதன் ஆசிரியர் வ.ந.கிரிதரன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி. தொடர்ந்தும் சிறந்த இணையப் பத்திரிகையாய்ப் பல்லாண்டு காலம் வெளிவர எனது வாழ்த்துக்கள்!
kuruaravinthan@hotmail.com