புதிய கவிஞர் சுமதியின் ‘தளிர்களின் சுமைகள்’ கவிதை நூல்

ஒரு புதிய கவிஞரின் முதலாவது கவிதை நூல் இது. இளைப்பாறிய ஆசிரியரான சுமதி குகதாசன் எழுதிய தளிர்களின் சுமைகள் என்ற நூல் இது. நூல் பற்றிய எனது கருத்துக்களைக் கூறுவதற்கு முன்பாக இன்றைய கவிதைகள் பற்றிய சில கருத்துக்களை பகிர்வது நூலிலுள்ள கவிதைகளை அணுக உதவலாம் என எண்ணுகிறேன்.ஒரு புதிய கவிஞரின் முதலாவது கவிதை நூல் இது. இளைப்பாறிய ஆசிரியரான சுமதி குகதாசன் எழுதிய தளிர்களின் சுமைகள் என்ற நூல் இது. நூல் பற்றிய எனது கருத்துக்களைக் கூறுவதற்கு முன்பாக இன்றைய கவிதைகள் பற்றிய சில கருத்துக்களை பகிர்வது நூலிலுள்ள கவிதைகளை அணுக உதவலாம் என எண்ணுகிறேன்.
 
இலக்கியங்களின் அரசி கவிதை
 
கவிதையை இலக்கியங்களின் அரசி என்பார்கள். காலத்தால் முந்தைய இலக்கிய வடிவமும் அதுதான். நாட்டார் பாடல்கள், தாலாட்டுப் பாட்டு போன்ற வாய்மொழி இலக்கியங்கள் அதற்கு முந்தையவையாயினும் எழுதில் பதியப்பட்ட இலக்கியங்களில் அதுவே முந்தையது எனலாம். கம்பனும் இளங்கோவும் பாடி வைத்த அவற்றை இரசித்து மகிழாத இலக்கிய நெஞ்சங்கள் எதுவும் இருக்கமாட்டாது. எழுத்தறிவு இல்லாத காலங்களில் அவற்றைப் பாமர மக்கள் புரிந்து கொள்ள முடியாதிருந்தது. படித்தவர்களும் பழம் தமிழ் இலக்கியங்களை முழமையாக பொருள் உணர்ந்து இரசிப்பதற்கு பதவுரை, நயவுரை என நாட வேண்டியிருந்தது. ஆனால் பாரதியின் கவிதைகள்  தமிழ்க் கவிதை இலக்கிய படைப்புலகை முற்று முழுதாக மாற்றிப் போட்டன. இலகு தமிழில் எளிய நடையில் காதுக்கும் கருத்திற்கும் இனிய படைப்புலகின் முன்னோடி அவன்.

பண்டிதர்களின் இலக்கியமாக இருந்த கவிதை பாமரர்கள் கைகளில் புது வேகம் பெற்றது. சினிமாப் பாடல்களிலும் கவிதை வந்தது ஒரு பொழுதில். ஆனால் இன்றைய தமிழ் சினிமாப் பாடல்கள் புரியாத ஒரு புதிய மொழியில் பாடுகின்றன எள்பது வேறு விடயம்.
 
இன்றைய கவிதைகள்
 
சினிமாவிட்டு மீண்டும் பத்திரிகைகளில் வரும் கவிதைகளைப் பார்த்தால், இன்றைய கவிதைகள் பாரதி விட்டுச் சென்ற இடத்தில். வெகுதொலைவு சென்றுவிட்டன. இன்றைய காலகட்டத்தைப் பார்த்தால் பெரும்பாலான படைப்பாளிகளின் தேர்வுக்குரிய இலக்கிய வடிவமாகக் கவிதை இருக்கிறது.
 
சிறுதீவின் நாட்திசையின்றும் பெரும்புயலென கவிதை வீசுகிறது. ஆரவாரமாக பேரோசையாக கவிதை ஒலி எங்கும் ஒலிக்கிறது. கவிதைக்கு என்றே பல இதழ்களும் வெளியாகின்றன. நிறையக் கவிஞர்கள் எழுதுகிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் இளம் கவிஞர்கள்.

மிக நல்லாகவே எழுதுகிறார்கள். புதுப் புது வார்த்தைகள், புதிய விடயங்கள், புதிய சொல்லாடல் எனக் கவிதை உலகம் செழித்தோங்குகிறது. 

கவிதை நுகர்வுக்குத் தேர்ச்சி வேண்டியுள்ளது

ஆனால் இன்றைய பல நவீன கவிதைகளை ரசனையோடு நுகர்வதற்குத் தேர்ச்சி வேண்டியிருக்கிறது. பல படைப்புகளைச் சாதாரண வாசகனால் புரிந்துகொள்ள முடியாது. நவீன ஓவியங்களை பார்த்து இரசிப்பது எல்லோருக்கும் முடியாது என்பதைப் போன்றது இது. அவற்றுடனுடனான ஈடுபாடும், தொடர்ச்சியான நுகர்ச்சியும் இரசனையும் இன்றிப் புரிந்து கொள்வது கடினம்.
 
சுருங்கச் சொன்னால் சிறந்த கவிதைகள் என்பது சாதாரண வாசகனுக்கானது அல்ல என்பது போன்ற எண்ணம் ஏற்படுகிறது.
 
கடினமான படைப்புகள் என வகைப்படுத்துபவற்றில் இரண்டு வகையைச் சொல்லலாம்.

சொல்லப்படும் மொழியின் இறுக்கத்தால் புரிந்துகொள்ள சிக்கலானவை ஒரு வகை, புதிர்போல எழுதப்படும் கவிதைகளையும் இதற்குள் அடக்கலாம். புரிவதற்குச் சிரமமான கருவைக் கொண்டவை மற்ற வகை எனலாம். சில நுணுக்கமான விஞ்ஞான உண்மைகள், ஆழமான உளவியில் கருத்துக்கள், மருத்துவம், கல்வி, போன்ற துறைசார்ந்த விடயங்கள் போன்றவை எல்லா வகையான வாசகர்களுக்கும் ஏற்றதல்ல.

அதே நேரத்தில் சாதாரண வாசகனும் புரிந்து கொள்ளக கூடியவாறு எளிய தமிழில் எழுதப்படும் சிறந்த கவிதைகளும் உள்ளன என்பதை மறுக்க முடியாது.

இந்தப் பிரச்சனையை நன்கு புரிந்து கொள்பவர்கள் பத்திரிகை ஆசிரியர்களும் சஞ்சகையாளர்தான். சில கவிதைகளைப் பிரசுரிக்கும்போது சிலர் ‘என்ன புரியாத கவிதைகளைப் போட்டிருக்கிறீர்களே எனச் சலிபார்கள், வேறு விதமான கவிதைகளுக்கு இன்னும் சிலர் ‘தரமே இல்லாத கவிதைகளைப் பிரசுரித்திருக்கிறீர்களே’ எனக் குற்றம் சாட்டுவார்கள்.

ஆனால் இவர்கள் நல்ல கவிதைகளைதான் தேர்ந்திருப்பார்கள். இரண்டையுமே நல்லவைதான் அந்த வாசகத் தரத்தினருக்கு ஏற்றவை. பலதரப்பட்ட வாசகர்களையும் திருப்திப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது.
புரிந்து கொள்ளல் விடயத்தை விட்டுவிட்டு, பொதுவாக நல்ல கவிதையின் கூறுகள் என்ன?

நல்ல கவிதையானது ஒரு இனிய அனுபவம். வாசகனின் மெல்லுணர்வுகளை மீட்டி உள்ளத்தில் இசையாக நனைந்து ஊறவைக்கும் படைப்பு வடிவமாகும். கவிஞன் சுழியோடி மீட்டு வந்த நேர்த்தியான சொற்களின் புணர்வில் அகநிறைவைக் கொண்டுவரும்.
 
கவிதையானது கருத்துச் செறிவும் சுருக்கமுமானது. ஓசைநயம் இனிமை பயக்கும். கட்டுக்குள் அகப்படாத, வார்த்தைகளுகளுக்குள் சிறைப்படாத அதியுயர் அனுவபத்தை அதிலுள்ள கவித்துவம் கொடுக்கும். அது கொடுக்கும் மென்மையான புளங்காகிதத்தை, அது ஏற்படுத்தும் சலனத்தை வார்த்தைகளால் விபரிப்பது முடியததாகும். 
 
சுமதியின் கவிதைகள்
 
சுமதியின் கவிதைகள் எவ்வாறானவை? அவை எவற்றையெல்லாம் பேசுகின்றன.
 
எல்லாப் படைப்பாளிகளும் போலவே சுமதியும் தனது சமூகத்தில் பற்றுள்ளவர். அதன் முன்னேற்றத்தில் அக்கறையுள்ளவர். அதனால் தன்னையும் தன்னைச் சுற்றியுள்ளவர்களையும், சமூகத்தையும் உற்று நோக்குகிறார். உவப்புகளும் கசப்புகளுமான அனுபவங்களும் நிகழ்வுகளும் அவரது மனதைத் தொடுகின்றன. சிலவற்றை ரசிக்கிறார், சிலவற்றைப் பாராட்டுகிறார். சில அவரை முகம் சுழிக்க வைக்கின்றன. இவை அவரது படைப்புகளாக வெளிவருகின்றன.

ஆனால் அவரது பார்வை எப்பொழுதுமே ஒரேவிதமான தன்னிலை நோக்குக் கொண்டதல்ல. சமூகத்தில் அவருக்குப் பல்வேறுவிதமான பாத்திரங்கள் உண்டு. பாத்திரங்களுக்கு ஏற்ப அவரது பார்வையும் படைப்பாக்க முறைகளும் மாறுகின்றன. படைப்பகளுடே பயணிக்கும்போது கீழ்க்கண்ட போக்குகளை அவதானிக்க முடிந்தது.

•    தாய்மைத்துவ நோக்கு
•    ஆசிரியத்துவ நோக்கு
•    பொதுவுடைமை நோக்கு
•    பெண்ணிய நோக்கு
•    சாதாரண பொதுமகன் நோக்கு
 
எனப் பல. இவற்றில் சில ஒன்றோடு ஒன்று கலக்கும் ரசவாதங்களும் உண்டு. ஒன்றுக்கொன்று முரண்படுகிற நிநோதங்களும் உண்டு.
ஆசிரியத்து நோக்கு
 
மாணவம் என்ற கவிதை
 
“ஏணிப்படிகள் என
எண்ணிக் கால்வைக்க
உக்கி உருக்குலைந்து
சிதிலங்களாய்ப் போனதினால்
இன்னமும் இருண்டு கிடக்கிறேன்.
பள்ளிச் சிறைகளுக்குள்.”

பள்ளியில் மாணவன் ஏன் உருக்குலைந்து போகிறான். ஆசிரியர் சரியில்லையா? கல்விமுறை பொருத்தமானதாக இல்லையா? இல்லையேல் வேறு பிராக்குகளால் இவன் கல்வியில் நாட்டம் கொள்ளவில்லையா? சிந்திக்க வைக்கின்ற கவிதை.
 
எதையும் கவிஞர் சுட்டிக் காட்டவில்லை. நாம் எமது அனுபவங்களுக்கு ஏற்பப் புரிந்து கொள்ளலாம்.
 
இந்தக் கவிதையின் தலைப்பு மாணவன் என்பதைக் கூறினேன். அந்தத் தலைப்பை நீக்கிவிட்டுப் படித்தால் இது அங்கு கற்பிக்கும் ஆசிரியர், அதிபர், அங்கு பணியாற்றும் சிற்றூழியர் என எவருக்கும் பொருந்தக் கூடியது. பேராசிரியராகவோ, கணக்காளராகவோ, டொக்டராகவோ, பொறியிலாயராகவே ஆக வேண்டும் என்ற கனவுடன் கற்றவர் அது நிறைவேறாது பாடசாலைக்குள் வேறு தொழில் புரிய வேண்டிய நிலையில் ஏற்பட்ட மன உழைச்சலாகவும் கொள்ளலாம்.

தளிர்களின் சுமைகள் என்ற கவிதை பள்ளிப் பருவத்தில் அந்தச் சிறிசுகளும் ஏற்படும் சுமைகள் பற்றிய விபரிப்பாக இருக்கிறது. புத்தகச் சுமைகள், பாடங்களின் சுமைகள், தண்டனைச் சுமைகள், பெற்றோரின் எதிர்பார்ப்புகள், மாலைநேர ரியூசன், எனப் பலவிதமான சுவைகளை எடுத்துச் சொல்லும் ஒரு விழிப்புணர்வூட்டும் கவிதை எனலாம்.
 
இதேபோல ‘பட்டம்’, தண்டனை போன்ற வேறு பல கவிதைகள் ஆசிரியராகப் பெற்ற அனுபவத்தால் எழுந்த கவிதைகளாகும்.
 
தாய்மைத்துவ நோக்கு

தாய்மை மற்றும் பெற்றோராக இருக்கும்போது ஏற்படும் சில உணர்வுகளை. முற்றும் தலைமுறை இடைவெளி போன்றவற்றை வெளிப்படுத்தும் சில் கவிதைகள் நன்றாக இருக்கின்றன.

“கூட்டுக்குள்ளே
குருவியொன்று
சுpறகடிக்கத் துடிக்குது
சிறகிருந்தும்
பறக்கவிட
மனமும்தான்
பதைக்குது.”
 
பொத்திப் பொத்தி தான் அன்பாக வளர்த்த குழந்தை வளர்ந்து பெரியவனாகி தன்காலில் நிற்ககக் கூடிய ஆற்றலும் பெற்ற போதும் அது தன் வழியே தனிவழியே செல்ல் முயலும்போது எற்படும் தாயின் ஏக்கத்தைப் பிரதிபலிக்கிறது.
 
மற்றொரு கவிதை.
 
பாசத்தைப் பொழிந்து இன்புறும் தாய். ஆதனால் இன்புற்று ‘அம்மா நீ நல்லனி’ என பாராட்டும் மகன். இருந்தபோதும் காலம் நகரும், அப்பொழுது அவனின் வாழ்வின் தேவைகள் மாற்றமுறும், புதிய பற்றுக்கள் தேடிவரும்
 
“அம்மா நீ நல்லனி என்று
என மகனாவது
சொல்லக் கேட்டு
இன்புறும் எளிய மனமே
நாளை அவனும்
சொல்லாதிருக்கக் கூடும்
என்பதற்கு தயாராக இரு.”
 
ஆம் தாயானவள் தன் தளர் காலத்தில் புறக்கணிப்பிற்கு ஆளாவதைப் பொறுத்துக் கொள்ளத் தயாராக இருக்கத்தான் வேண்டும். எமது சமுதாய வழக்கில் பெற்றோரைப் பிள்ளைகள் கைவிட்டு விடுவதில்லை. தம்மால் இயன்றவரை பராமரிக்கவே செய்கிறார்கள். இருந்தபோதும் சுடுசொற்கள் வீசப்படுவது சாதாரணம். அதனால்தான் போலும் மகனின் செய்கைகளைக் கூறாது சொல்லைக் குறிப்பிட்டுள்ளார் கவிஞர்.
 
பொதுவுடமை நோக்கில்
 
பொதுவுடமை, முற்போக்கு கருத்துக்கள் பல கவிதைகளில் தெறிப்பதைக் காண்கிறோம்.யதார்த்தம் என்ற கவிதை இப்படிச் சொல்கிறது.

“வர்க்க பேதம் என்பது
பச்சை மண்ணும்
சுட்ட மண்ணும்.
பல தசாப்பதம் ஆகியும்
மனமும் ஒன்றவில்லை
மனவழுத்தமும் தீரவில்லை”.. என்கிறார்.
 
மார்க்ஸியக் கருத்துகள் பரவத்தொடங்கி பல வருடங்கள் ஆனபோதும் வர்க்க பேதம் இன்றும் நிலவுவதை வேதனையோடு மிகச் சுருக்கமாக சொல்லியுள்ளார்.
 
இதன் தொடர்ச்சியாக மற்றொரு கவிதையில் இதை மாற்றி அமைப்பது எப்படி என்பதைச் சொல்கிறார். ‘மேன்மை’ என்ற கவிதையில் அதற்கு முன்னோடிகளாக வாழ்ந்தவர்களது பெருமைகளைப் பேசி கொண்டிருந்தது போதும் என்கிறார் இவ்வாறு..

‘..பேசி வாழ்ந்த காலம் போதும் அவர்போல் நாமும் வாழ்வோம்..’
 
விருத்தி என்ற கவிதை
 
“விலங்காய் இருந்தவன்
பகுத்தறிவு தன்னுடன்
மனிதன் என்னும்
வடிவு கொண்டான்.
சிறிதேனும் அவன் தன்னில்
மாக்சியம் பூசினாலே
மனச்சாட்சி பேசுகின்ற
மாண்புறு பண்பாளனாவான்”
 
மனித வளர்ச்சியின் உன்னதமான இடத்தை அடைவதற்கு மாக்சிய சிந்தனைகள் கைகொடுக்கும் என கவிஞர் பாடுவது பொய்யான வார்த்தைகள் அல்ல. இன்று பலருக்கு மார்க்ஸீசம் என்ற சொல்லே வெறுப்பேற்றுசதாக இருக்கிறது. இதற்குக் காரணம் பல இடதுசாரிக் கட்சிகளின் உறுதியற்ற பச்சோந்திப் போக்குகள்தான் காரணமாகும். இருந்தபோதும் அதன் பலமுற்போக்குக் கருத்துகள் பலவும் இன்றைய வாழ்வின் அங்கமாகிவிட்டன என்பதே உண்மை.
 
பெண்ணியம் முற்போக்கிற்குள் அடங்கும் என்ற போதும் அது பற்றி சுமதியின் ஓரிரு கவிதைகளை சுட்டிக் காட்டுவது அவசியம் என எண்ணுகிறேன்.
ஆட்சி என்ற கவிதை இவ்வாறு மிக நாசூக்காக வீட்டிற்குள் நடக்கும் அடக்குமுறை பற்றிப் பேசுகிறது.
 
“பிழையான ஆட்சி
நாட்டிலே நடந்தால்
வீட்டிற்குள்ளே
பூட்டிக் கிடக்கலாம்
அதுவே வீட்டிலும்
என்றால்?”
 
வழமையாகப் பெண்ணியம் பேசுவோர் போல ஆர்ப்பரிக்கும் எதிர்க் குரலாக கிளம்பவில்லை. மாறாக அடங்கிக் கிடக்கும் ஆற்றமை கவிதையில் வெளிப்படுகிறது.

வாழ்வு என்ற மற்றொரு பெண்ணியக் கவிதை முக்கியமானது. இது சிந்திக்க வைக்கிறது. பல கேள்விகளை எழுப்புகிறது.

நெற்றியில் குங்குமமிட்டபோது
இருபதுகளில் தோன்றிது
நானொரு குடும்ப விளக்கென்று
இதனையே முப்பதுகளில்
என் மனதிலே தட்டியது
நானும் ஒரு சிவப்புவிளக்கோவென்று
 
பொட்டிற்டுப் பூச்சூடி 20வயதுகளில் பற்பல கனவுகளுடன் மணப்பெண்ணாக செல்லவிருந்த பெண்ணின் ஏக்கக் குரலாக இக்கவிதை எனக்குப் படுகிறது. பருவமான பின் திருமணப் பேச்சுக்கள், பெண்பார்த்தல் சடங்குகள் என வருடக் கணக்கில் காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கிறாள். பெண்பார்க்க வருவர்களுக்கெல்லாம் முகம் காட்டிய விரக்தியால் தன்னை சிவப்புவிளக்கு பெண்ணாக உருவகப்படுத்தும் குரலாக என ஒலிக்கிறது
 
இவரது கவிதையின் பண்புகள்
 
ஒரு புதிய கவிஞரின் முதலாவது கவிதை நூல் இது. இளைப்பாறிய ஆசிரியரான சுமதி குகதாசன் எழுதிய தளிர்களின் சுமைகள் என்ற நூல் இது. நூல் பற்றிய எனது கருத்துக்களைக் கூறுவதற்கு முன்பாக இன்றைய கவிதைகள் பற்றிய சில கருத்துக்களை பகிர்வது நூலிலுள்ள கவிதைகளை அணுக உதவலாம் என எண்ணுகிறேன்.இவற்றைத் தவிர ஏராளமான கவிதைகள் கவிஞரின் மனிதநேயத்தின் வெளிப்பாடக அமைகின்றன. குடி, பணப் பித்து, வரட்டுக் கௌரவம், அகதிகள், தில்லுமுல்லு செய்வோர் பற்றி என பல விடயங்கள் பற்றி எழுதியுள்ளார்.
 
பலவற்றைப் பற்றி எழுதியிருந்தாலும் ஆசிரியராக இருந்த அனுபவத்தால் எழுதிய கவிதைகள் எண்ணிக்கையில் அதிகமாக இருக்கின்றன. சிலாகிக்கக் கூடிய நல்ல கவிதைகள் பலவும் அந்த வழி வந்தவையே. இவர் தனது ஆசிரியர் தொழிலை வெறும் உத்தியோகமாகக் கருதிச் செய்யாது ஆத்மார்த்தமாகச் செய்திருக்கிறார். இதனால் மாணவர்களது சுமைகளையும் துன்பங்களையும் நிதர்நனமாக காண முடிந்திருக்கிறது.
 
அத்துடன் ஆசிரியர்கள் அதிகாரிகள் போன்றோரின் சுயருபங்களையும் கண்டிருக்கிறார். எனவேதான் இவரால் உணர்வுபூர்வமாக மட்டுமின்றி அறிவுபூர்வமாகவும் அக்கவிதைகளை அணுக முடிந்திருக்கிறது.

மார்க்சீயம், முற்போக்கு கருத்துகள் சார்ந்த படைப்புகளும் ஏராளமாக இருக்கின்றன. அவரது கொள்கைப் பற்றுதியும், சமூக முன்னேற்றம் மீதான ஆர்வமும் இவற்றில் தெளிவாகத் தெறிக்கின்றன. அதே நேரம் போலிமுகங்களையும், வேசதாரிகளையும் கண்டிக்கவும் தவறவில்லை.
 
இத்தொகுப்பிலே மொத்தமாக 41 கவிதைகள் அடங்கியுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை குறும் கவிதைகள். நாலு வரிகளிலும் ஏழு சொற்களிலும் தமது செய்தியைச் சொல்லிவிட்டு ஓய்ந்து விடுபவையும் இவற்றில் அடங்கும். ஒன்பது கவிதைகள் மட்டும் சற்று நீளமானவை.

இக் கவிதைகள் யாவும் நல்லதைப் போற்றுவதும், தீயதைக் காய்வதுமான அவரது கருத்துகளின் வெளிப்பாடாக இவரது படைப்பு வெளி அமைக்கின்றது. வெளிப்படையாகச் பல கருத்துக்களைச் சொல்கிறார். சொற்களில் மறைந்து நின்று தன்னிருப்பை, தனது உள்ளார்ந்த உணர்வுகளை மறைக்கும் கயமை இவரது படைப்புகளில் இல்லை.

ஓசைநயம் சில கவிதைகளில் இருந்தபோதும் ஓசை நயத்திற்காக, தன் எண்ணங்களை வெளிப்படுத்தும் சொற்களை தியாகம் செய்ய முயலவில்லை. இதனால் சில கவிதைகள் அலங்காரங்கள் இன்றி அம்மணமாக நிற்பதான உணர்வு ஏற்படுபதையும் குறிப்பிட்டே ஆகவேண்டும்.

‘இக் கவிதைகளை ஆழ்ந்து சிந்தித்துப் படித்தால் சொற்கடந்த அழகு. அதன் பொருட் செறிவு மேலெழும்’ என கவிஞர் இக்பால் தனது முன்னுரையில் குறிப்பிட்டிருப்தை இவ்விடத்தில் நினைவுபடுத்தலாம்.
 
‘ஒளிமிக்க பகுதியையே நான் வியந்துள்ளேன். இருளடைந்த பகுதியை எடுத்துணர இது பயனளிக்கும்’ என அவர் மேலும் சொல்வதில் நானும் முற்றாக உடன்படுகிறேன்.
 
படைப்புகளைச் சீர் பார்த்தல்
 
இருந்தபோதும் இலங்கை தமிழ் இலக்கியப் பரப்பில் எந்த நூலையும் வெளியிட முன்னர் எடிட்டிங் செய்யப்படாத குறையை இந்த நூலிலும் உணர முடிந்தது. சொன்னதை மீளச் சொல்வதிலிருந்து தவிர்த்தல், படைப்பின் கருத்தோட்டத்துடன் இணையாத பகுதிகளை விலக்கி இறுக்கத்தையும் செறிவையும் பேணுதல், மெருகேற்றத்திற்கு துணை புரிதல் போன்ற பல நல்ல அம்சங்களை எடிட்டிங் மூலம் பெற முடியும்.

‘எனது படைப்பிலிருந்து ஒரு சொல்லைத்தானும் மாற்ற இடமளியேன்’ என பல எழுத்தாளர்கள் மார்தட்டி கனல் பொறிக்கப் பேசிய காலங்கள் மலையேறிவிட்டது. பல மூத்த எழுத்தாளர்களும் கூட தமது படைப்புகளை வெளியிட முன்னர் மற்றொரிடம் காட்டிக் கருத்துப் பரிமாறும் பண்பு வளரத் தொடங்கியுள்ளது. இது மேலும் பரவலாக நடைபெற்றால் நூல்கள் வெளிவருவதற்கு முன்னர் பல குறைகளைத் தவிர்த்துக் கொள்ள முடியும்.
 
இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றத்தின் 25வது வெளியீடாக ‘தளிர்களின் சுமைகள்’ அமைகிறது. அதன் சார்பில் நீர்வை பொன்னையன் பதிப்புரையை எழுதியுள்ளார்.

அட்டைப்படம் அழகாக இருக்கிறது. அமைத்துக் கொடுத்தவர் திரு.ஞானகுருபரன் அவருக்கு எனது வாழ்த்துக்கள்.

கவிதைகளுக்கான ஓவியங்களை வரைந்தவர் தினக்குரல் சுhர்ந்த ஓவியர் பிரதீப்குமார் ஆகும். குவிதைகளின் உள்ளடக்கத்தை உணர்த்துமாற வரைந்திருக்கிறார். ‘தயாராயிரு’ கவிதைக்கு குழந்தையை மார்போடு அணைத்திருக்கும் தாயின் ஓவியம் எனக்கு மிகவும் பிடித்திருந்து. அதேபோல முதுகைக் காட்டியபடி தரையில் உட்கார்ந்திருக்கும் முகமறியாப் பெண்ணின் ஓவியமும் என்னைக் கவர்ந்தது. இது ‘வாழ்வு’ என்ற கவிதைக்கானது. ஓவ்வொருவரது இரசனையும் மாறுபடலாம். உங்களுக்கும் பல ஓவியங்கள் நிச்சயம் பிடிக்கவே செய்யும்.

திருமதி சுமதி குகதாசன் தோழர் காரத்திகேசனின் இளைய புதல்வி என்பதை இங்கு சொல்வது அவரது படைப்புலகை புரிந்து கொள்ள உதவலாம்.
 
22.01.2012 நூல் வெளியீடு விழாவில் ஏற்றிய கருத்துரையின் கட்டுரை வடிவம்.

kathirmuruga@hotmail.com

http://hainallama.blogspot.com/
http://suvaithacinema.blogspot.com/
http://msvoldpupilsforum.blogspot.com/
http://www.geotamil.com/pathivukal/health.html