புனைவுக் கட்டுரை: வரகு மான்மியம்

1

- ஆசி கந்தராஜா -கோயில் குருக்கள் தொலைபேசியில் தொடர்புகொண்டதாக மனைவி சொன்னாள்.

கோயில் கும்பாபிஷேகத்துக்கு வரகு வேணுமாம்!

‘வரகுக்கு, இங்கிலிசிலை என்ன பெயரெண்டும் ஐயர் கேட்டவர்…, கோயில் விஷயமப்பா…, சாட்டுச் சொல்லித் தப்பாமல் எடுத்துக் குடுங்கோ…’

மனைவியின் குரலில் கட்டளையின் தொனி இருந்தது. கோயில் குத்தம், குடும்பத்துக்கு கேடு வரும் என்ற பயம் அவளுக்கு. விவசாயப் பேராசிரியரான ஒருவர், வரகு எங்கே கிடைக்கும்…? என்ற தகவல் உட்பட, விவசாயம் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களிலும் சகலகலா வல்லவனாக இருக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு, அவுஸ்திரேலியாவிலே கோயில் மணியோசை எழுப்பும் குருக்களுக்கு!

கோயில் கோபுரத்தின் உச்சியிலே, அதன் உயரத்துக்கும் அகலத்துக்கும் ஏற்றவாறு ஐந்து, ஏழு, ஒன்பது, பதினொன்று… என ஒற்றை இலக்க எண்ணிக்கையில் கலசங்கள் உண்டு. கலசங்களுள் வரகு, நெல்லு, சாமை, குரக்கன் போன்ற தானியங்கள் கும்பாபிஷேகத்தின்போது நிரப்பப்படும். சில கோயில்களில், வரகை மாத்திரம் எல்லாக் கலசங்களிலும் நிரப்புவார்கள். இடியையும் மின்னலையும் தாங்கும் சக்தி வரகுக்கு உண்டென்றும், அது ஒரு இடிதாங்கியாக செயல்படுமென்றும் இதற்குக் காரணம் சொல்லப்படுவதும் உண்டு. இது விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. கோபுர கலசங்களிலுள்ள தானியங்கள், பன்னிரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் கும்பாபிஷேகத்தின் போது மாற்றப்பட்டு, புதிய தானியங்கள் நிரப்பப்படும் மரபினைக் கோயில் குருக்களும் உறுதி செய்தார்.

இந்தியாவிலுள்ள பிரபலமான கோவிலொன்றின் கும்பாபிஷேகத்துக்கு விவசாயத்துறைப் பேராசிரியர் ஒருவருடன் கடந்த ஆண்டில் சென்றிருந்தேன். அந்தக் கோயிலின் கட்டிட அமைப்பு பன்னிரண்டாம் நூற்றாண்டின் தமிழ்க் கட்டடக் கலை சார்ந்தது என்று சொன்னார்கள். சரியான தகவல் தெரியவில்லை. பேராசிரியரியரின் தந்தை அந்தக்காலத்தில் இந்தியத் திரைப்பட விநியோகஸ்தராய்க் கொழும்பில் வாழ்ந்தவர். தனது பட்டப்படிப்பை பேராசிரிய நண்பர் இலங்கையில் மேற்கொண்டபோது யாழ்ப்பாணத்துப் பெண்ணைக் காதலித்து திருமணம் செய்தவர். இந்த உறவின் காரணமாக எங்களுக்குள் நெருக்கம் ஏற்பட்டிருக்கலாம். பேராசிரியர் பணிபுரியும் பல்கலைக் கழக உபயத்தில், அவரே தெற்பை அணிந்து கும்பாபிஷேகத்துக்கு தலைமை ஏற்றதால், கோபுரத்தின் உச்சிக்குச் செல்லும் சந்தர்ப்பம் வாய்த்தது. பதின்மூன்று பாரிய கலசங்களிலிருந்த பல்வேறு வகையான தானியங்களை  மாற்றும் சடங்குகள் அங்கே நடந்தன. பின்னர், நடுவிலுள்ள பெரிய கலசத்தில் வரகை மாத்திரம் நிரப்பினார்கள். இரண்டு கலசங்களிலே ஒரு தானியம் என்கிற கணக்கில் மற்றைய கலசங்களில் ஆறு தானியங்கள் நிரப்பப்பட்டன.
 
‘வரகு இடிதாங்கியாக செயற்படுவதாகச் சொல்கிறார்களே, உண்மையா…?’ என்று என் சந்தேகத்தைப் பேராசிரியரிடம் கேட்டேன்.

‘…சொல்வதுண்டு. இதில் இருக்கும் உண்மைத்தன்மை ஆராய்ச்சிக்குரியது. தானியங்களை நிரப்புவதன் உண்மைக் காரணம் அதுவல்ல. இது ‘Germplasam conservation’ எனப்படும் பரம்பரை அலகுகளைப் பாதுகாக்க, சைவத் தமிழர்களான நமது மூதாதையர் செயற்படுத்திய நடைமுறை என்பது ஐதீகம். முற்றுமுழுதாக விதைகளை நம்பியே பண்டைய காலங்களில் விவசாயம் நடந்தன. விவசாயத்தில் விதைகளின் வாழுமையும் (viability) வீரியமும் முக்கியமானது. இதனால் விதைகளின் ‘முளைக்கும் திறனை’ நீடிக்க, நம்முன்னோர் சில முன்னேற்பாடுகளைச் செய்திருக்கலாம். நீங்கள்தான் பரம்பரை அலகுகளைப் பாதுகாக்கும் தொழில் நுட்பத்தில் நிபுணராச்சே! கலசங்களுள் இருந்தெடுத்த பழைய தானியங்களின் ‘முளைக்கும் திறனை’ எனது ஆய்வுகூடத்தில் சோதித்துப்பாருங்களேன், உண்மை தெரிந்துவிடும்’ என்றார் நண்பர்.

அநேகமான விதைகளுக்கு, அதன் முளைக்கும் திறன், ஓர் ஆண்டு காலம் மட்டுமே நிலைத்திருக்கும். முதல் வருடத்திலிருந்த வீரியம் அடுத்த வருடத்திலிருக்காது. மாங்கொட்டையின் முளைக்கும் திறன் மூன்று மாதங்கள் மட்டுமே. விளா, வில்வம், கறிவேப்பிலை, தோடை, எலுமிச்சை, நாரத்தை ஆகியன ஒரே குடும்ப தாவரங்கள். இவற்றின் விதைகளைப் பழத்திலிருந்து பிரித்த ஒருசில வாரங்களுக்குள் விதைக்க வேண்டும்.

இன்றைய விஞ்ஞான யுகத்தில் மழை, வெள்ளம், புயல், இடி போன்றவற்றினால் ஏற்படும் இயற்கை அழிவுகளினாலோ, யுத்தங்களினாலோ, அல்லது நோய்களினாலோ, பயிர்கள் அனைத்தும் அழிந்து போனால், பரம்பரை அலகுகளைப் பாதுகாக்கும் நிலையங்களிலிருந்து (‘Germplasam bank’) விதைகளையோ தாவரங்களையோ பெற்று விவசாயத்தைத் தொடர முடியும். இதற்கு இப்போது பல நவீன தொழில் நுட்பங்கள் உண்டு. பரம்பரை அலகுகளைப் பாதுகாக்கும் வங்கியில் விதைகளாகவோ, கலங்களாகவோ (Cell) அல்லது இழையங்களாகவோ (Tissue) இவை பாதுகாக்கப்படுகின்றன. திரவ நைதரசனில் -180 பாகை சதமளவு உறைநிலையில், இவற்றைப் பலநூறு வருடங்களுக்கு சேதமுமின்றிப் பாதுகாக்கும் முறையும் பயிற்சியில் உள்ளது.

கலசங்களிலிருந்து சேகரித்த தானியங்களுடன், ஆய்வு கூடத்துக்கு சென்று, தானயங்களின் முளைக்கும் திறனைப் பரிசோதித்தேன். பேராசிரியர் சொன்னது உண்மைதான். பன்னிரண்டு வருடங்களுக்குப் பின்பும், ஐம்பத்திரண்டு சதவீதமான வரகும், முப்பதுக்கும் நாப்பதுக்கும் இடைப்பட்ட சதவீத எண்ணிக்கையில் மற்றைய தானியங்களும் முளைக்கும் திறனைக் கொண்டிருந்தமை என்னை வியப்பிலாழ்த்தியது. கலசங்கள் செய்யப்பட்ட உலோகக் கலவை, பன்னிரண்டு வருடங்களாக தானியங்களின் முளைக்கும் திறனைப் பாதுகாத்து வைத்திருக்க வேண்டும் என்கிற முடிவுக்கு வரலாம். ஆனால் இன்றைய கோயில்களிலே வைக்கப்படும் கலசங்கள் அதே உலோகக் கலவையியில் செய்யப்படுகின்றனவா…? அல்லது அந்த உலோகக் கலவை என்ன…? என்பதற்கான சான்றுகள் எதுவும் எனக்குக் கிடைக்கவில்லை.
 
பேராசிரிய நண்பரின் உறவுப் பெண் ஒன்று குழந்தை வரம் வேண்டிச் சுற்றாத கோயில் இல்லை. இம்முறை பார்த்தபோது கருத்தரித்து மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார்.        ஐ.வி.எவ். (IVF – Invitro fertilization) முறைப்படி கருத்தரித்தாக பேராசிரியர் சொன்னார். ஐ.வி.எவ். மூலம் கருத்தரித்தலுக்கும், தாவரங்களின் பரம்பரை அலகுகளை பாதுகாக்கும் நடைமுறைதான் கடைப்பிடிக்கப் படுகின்றது. இங்கும் பெண்ணின் கரு முட்டை அல்லது ஆணின் விந்து திரவ நைதரசனில் பாதுகாக்கப்படும். இது ‘கருமுட்டை-விந்து’ வங்கி எனச் சொல்லப்படும். தம்பதிகளின் விந்தும் முட்டையும் ஆரோக்கியமாக இருந்து,  கருக்கட்டலில் மாத்திரம் சிக்கல் இருப்பின், தந்தை தாய் இருவரினதும் முட்டையும் விந்தும் பரிசோதனைக் குழாயில் கருக்கட்டப்பட்டு, தாயின் கருப்பைக்குள் வைக்கப்படும்.

‘கருக்கட்டிய கருவை வைப்பதற்கு தாயின் கருப்பை ஆரோக்கியமாக இல்லாவிட்டால் என்ன செய்வது…?’ என பேராசிரியரின் மனைவி கேட்டார். IVF சிகிச்சைக்காக இலங்கையிலிருந்து சென்னை வந்த என் உறவுப் பெண் ஒருத்தி இத்தகைய பிரச்சினையை எதிர்நோக்கியதை நான் அறிவேன்.

‘அதற்குத்தான் வாடகைத் தாய்மார்கள் உள்ளார்களே. இந்த வசதி இந்தியாவிலும் உண்டு. தம்பதிகளின் கரு, வாடகைத் தாயின் கருப்பையில் வைக்கப்பட்டு, குழந்தை வளரும். குழந்தை பிறந்ததும் ஒப்பந்தப்படி வாடகைப் பணத்தை கொடுத்துவிட்டால் குழந்தை உங்களுடையது.’

‘இதென்ன கோதாரியப்பா…’ என யாழ்ப்பாணப் பாணியில் சலித்துக்கொண்டார் பேராசிரியரின் மனைவி;.

‘இதுக்கே தலையில் கையை வைத்தால், இதுக்கென்ன சொல்லப்போறாய்…’ என பேராசிரியர் தொடர்ந்தார்.

‘கருமுட்டையை விற்பனை செய்யும் பெண்களும், விந்தணுக்களை விற்பனை செய்யும் ஆண்களும் இந்தியா உட்பட எல்லா நாடுகளிலும் உண்டு. கவர்ச்சிகரமான இந்த வியாபாரத்தில், அழகான இளம் பெண்களுக்கும், விடலைப் பருவத்து ஆண்களுக்கும் கிராக்கி அதிகம்.’

‘அதை வாங்கி என்னப்பா செய்யிறது…?’ 

‘குழந்தை இல்லாத தம்பதியினருள் பலருக்கு, ஒன்றில் ஆணின் விந்து அல்லது பெண்ணின் முட்டை, கருக்கட்டும் வல்லமையற்றதாக இருக்கும். இவர்களுக்காகத்தான் இந்த வியாபாரம். பெற்றோரின் உயிரணுக்கள் எதுவுமேயில்லாத, பிறரின் பிள்ளையைத் தத்தெடுப்பதிலும் பார்க்க, இந்த முறையில் விந்தையோ அல்லது முட்டையையோ வாங்கி ஐ.வி.எவ் (IVF) முறைமூலம், பரிசோதனைக் குழாயில் கருக்கட்டிப் பிள்ளை உருவானால், ஒன்றில் தாயினதோ அல்லது தந்தையினதோ உயிரணுக்கள் அந்தக் குழந்தையில் இருக்குமல்லவா?’

‘சோரம்போய் பிள்ளை பெறுவதுக்கும் இதுக்கும் என்ன வித்தியாசமப்பா…?’

‘வம்பிலை பிள்ளை பெறுகிறதென்று, உன்னுடைய யாழ்ப்பாணப் பாஷயில் வெளிப்படையாகவே சொல்லு…, நீ தமிழ்க் கலாரத்தில் ஊறிய மனுஷி. இப்பெல்லாம் பெண்கள் கலியாணம் கட்டாமலே ‘எனக்கு இன்னமாதிரியான குழந்தைதான் வேண்டுமென’ விந்தணுக்களை ‘விந்துவங்கியில்’ வாங்கி, பிள்ளை பெறுவது மேலைத் தேசங்களில் பெருமளவில் நடைபெறும் சமாச்சாரம்.”

‘அம்மான்ரை பாஷையிலை சொன்னால், இது கடையிலை கேக்செய்ய ஓடர் குடுக்கிற மாதிரித்தான்’ என இடையில் புகுந்து கொமன்ற் அடித்தான் பேராசிரியரின் மகன்.

‘பெண் ஓரினச் சேர்க்கையாளர்கள் இந்த முறை மூலம்தான் பிள்ளை பெற்றுக் கொள்ளுகிறார்கள். இவர்கள், எமக்கு இன்னஇன்ன இயல்புகள் கொண்ட ஆணின் விந்தணுதான் வேண்டுமென விந்து வங்கியில் வாங்கி, தமக்கு விரும்பியபடி குழந்தையைப் பெற்றெடுக்கிறார்கள்’ என இது பற்றி ஒரு அறிவியல் பிரசங்கம் செய்தார் பேராசிரியர்.

பேராசிரியரின் மனைவிக்கு எங்களுடைய உரையாடல் பிடிக்கவில்லை என்பது அவரின்  முகத்தில் தெரிந்தது. ‘உலகம் அழியப்போகுது…’ எனப் புறுபுறுத்தவாறே எங்களுக்கான சாப்பாட்டைத் தயாரிப்பதற்காகச் சென்றுவிட்டார்.

‘மாதத்துக்கு ஒரு கருமுட்டையே பெண்ணின் சூலகத்திலிருந்து(Overy) வெளிவரும். அது வெளிவரும் கால இடைவெளி ஆளுக்கு ஆள் வேறுபடும். பின்பு எப்படி இந்த கருமுட்டை வியாபாரம் இந்தியாவில் களைகட்டுகிறது?’ என தன் ஐமிச்சத்தை வெளியிட்டான் பேராசிரியரின் மகன். அவன் மரபியல் (Genitics) பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டு மாணவன்.

‘பன்றி, முயல், பூனை, நாய் போன்ற விலங்குகளுக்கு ஒரே தடவையில் பல முட்டைகள் உதிர்வதால் ஒரேதடவையில் பல குட்டிகளை ஈணுகின்றன… ஆனால் மனிதர்கள் அப்படியல்ல…’ என விளக்கம்சொல்ல முனைந்த என்னை இடைமறித்து, ‘மனிதர்களுக்கும் ஒரேசூலில் பல குழந்தைகள் பிறக்கின்றனவே…?’ என இடைக் கேள்வி ஒன்றைச் செருகினான் மகன்.

‘இது உடலுக்குள் நடைபெறும் எதிர்பாராத கோர்மோன்(Hormone) மாற்றத்தால் நிகழ்வது.  சூலகத்திலிருந்து அரிதாக பல முட்டைகள் உதிர்ந்தால், அவை விந்துகளுடன் இணைந்து கருக்கட்டும்போது மனிதர்களுக்கும் பல குழந்தைகள் கருப்பையில் உருவாகும். சில வேளைகளில் ஒரு முட்டை இரண்டாகப் பிரிந்து கருக்கட்டும் போது, ஒத்த உருவமுள்ள இரட்டைக் குழந்தைகள் (Identical twins) பிறப்பதுண்டு. இந்த ‘உடற்தொழில் இயல்பே’ கருமுட்டை வியாபாரத்துக்கு வழிவகுத்தது. கோர்மோன்களை செயற்கையாக ஊசிமூலம் ஏற்றும்போது ஒரே தடவையில் பல முட்டைகள் வெளிவரும். இதைத்தான் விற்பார்கள்’ என கூறினேன்.

‘முப்பது வயதுக்குட்பட்ட அழகான ஏழைப் பெண்களைத்தான் பணத்தைக்காட்டி இதற்கு இணங்க வைக்கிறார்கள். தொடர்ந்து இதைச்செய்த பெண்கள், கோர்மோன்களின் பக்க விளைவுகளினால் உருக்குலைந்து அலைவது பற்றி ‘சொல்வதெல்லாம் உண்மை’ என்ற தொலைக்காட்சியில் சமீபத்தில் காண்பித்தார்கள்’ என்று பேராசிரியர் விரிவாகவே விளக்கினார்.

என்னதான் விஞ்ஞான விளக்கங்களாக இருந்தாலும், எங்கள் சம்பாஷனையில் மகன் கலந்து கொண்டது பேராசிரியரின் மனைவிக்கு சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கலாம். ‘கதைச்சது காணும் சாப்பிட வாருங்கோ’ என அழைத்தார்.

நான் பேராசிரியர் வீட்டுக்கு போகும்போதெல்லாம்; அங்கு யாழ்ப்பாணத்துச் சமையல்தான். தமிழ் நாட்டில், இட்லியும் தோசையும் சட்னியும் சாம்பாரும் சாப்பிட்டு நாக்குச் செத்துப்போயிருக்கும் எனக்கு பேராசிரியர் வீட்டுச் சாப்பாடு எப்பொழுதும் விருந்தாகவே இருக்கும். அன்று குழாய்ப் புட்டும் நிறைய நல்லெண்ணை ஊற்றி வதக்கிய கத்தரிக்காயும், அதற்கு உவப்பாக நாட்டுக் கோழிக் குழம்பும் வைத்திருந்தார்.

பேராசிரியர் வீட்டு சாப்பாடு பற்றி, சாய்மனைக் கதிரையில் சாய்ந்தவாறே நனவிடை தோய்ந்த என்னைத் தட்டி எழுப்பி, கோயில் கும்பாபிஷேகத்தை நினைவூட்டினாள் என் மனைவி. இந்தத் தொல்லை இப்போதைக்கு நிற்கப் போவதில்லை. வரகு வீட்டுக்கு வருகிற வரை இது தொடர்ந்து இருக்குமென்பது எனக்கு நன்றாகவே தெரியும். கோயிலுக்கு தேவையான வரகை இந்திய பேராசிரிய நண்பரைத் தொடர்பு கொண்டுதான் பெற்றுக் கொடுக்க வேண்டும். இலங்கையில் வரகு இப்போது பயிரிடப்படுவதில்லை. சாமை மிக அரிதாக பயிரிடப்படுவதாக எனது பால்ய நண்பன் பாலன் சொன்னான். சலரோக வியாதிக்காரருக்கு குரக்கன் தேவைப்படுவதால் அது பரவலாக அங்கு பயிரிடப்படுவதாக அறியலானேன்.

உடல் உழைப்பற்ற சொகுசு வாழ்க்கையால் இப்பொழுது பலருக்கும் சர்க்கரை வியாதி. இதனால் குரக்கன்மா அவுஸ்திரேலியாவிலுள்ள இலங்கை இந்திய சரக்குக் கடைகளில் தாராளமாக வாங்கலாம். கேரளாவிலிருந்து ‘ராகிப்புட்டுமா’ என்ற பெயருடன் இறக்குமதியாகும் குரக்கன் மா நல்லதென்று என் மனைவி சான்றிதழ் வழங்குவதில் சலிப்படைவதேயில்லை.

சென்ற நூற்றாண்டின் அறுபதுகளுக்கு முன்னர், யாழ்ப்பாணத்தில் வரகு, சாமை, குரக்கன் ஆகிய சிறுதானியங்கள் பெருமளவில் பயிரிடப்பட்டன. இவற்றை பொதுவாக மிலற் (millet) என ஆங்கிலத்தில் அழைப்பார்கள். இவற்றின் பொதுப் யெர்கள் நாட்டுக்கு நாடு, இடத்துக்கு இடம் மாறுபடும். குரக்கனை கேரளாவில் ராகி என்றும் தமிழ் நாட்டில் கேழ்வரகென்றும் அழைப்பார்கள். இதற்கு ஆபிரிக்கன் மிலற் என்ற பெயரும் உண்டு. இதன் லற்ரின் விஞ்ஞானப் பெயர் Eleusine coracana. ஆங்கிலத்தில் பொதுவாக  Finger millet என்பார்கள். இவற்றின் கதிர்கள் ஐந்து கைவிரல்களைப்போலத் தோன்றுவதால் இந்தக் காரணப் பெயர் வந்திருக்கலாம். இதன் பூர்வீகம் எதியோப்பியாவின் மேட்டு நிலம் என்று விக்கிபீடியாத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரகை ஹிந்தியில் கோத்ரா (Kodra) என்பார்கள். ஆங்கிலேயர்களின் வாயில் கோத்ரா திரிபடைந்து Kodo millet ஆகியது, தெலுங்கில் இதை  Arikelu  என்றும், கன்னடத்தில் Harka என்றும் அழைப்பார்கள். கபிலர் தன் பாடலில் (115) ‘ஈன்றணிய மயிற் பேடையை ஒத்து’ வரகுக் கதிர் விளைந்திருந்தது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சாமையின் பொதுப்பெயரில் சில குளறுபடிகள் உண்டு. இதை கம்பு என தமிழ்நாட்டில் தவறாகச் சொல்வதும் உண்டு. சாமைக்கு Pearl millet, little millet   என்ற ஆங்கிலப் யெர்களை உசாத்துணை நூல்கள் சொல்கின்றன. Panicum Sumatrense என்பதே இதன் லற்ரின் விஞ்ஞானப் பெயர். இவை அனைத்தும் மூன்று மாதப் பயிர்கள். வரகு வளருவதற்கு மிகச்சிறிதளவு தண்ணீர் போதுமானது. அது தரிசு நிலத்திலும் வளரும். சாமை குரக்கன் ஆகிய பயிர்கள், யாழ்ப்பாணத்தில் புகையிலை வெட்டிய பின்பு தோட்டத்தில் பயிரிடுவார்கள். இவற்றிற்கு அதிகபட்சம் இரண்டு பட்டை இறைப்புப் போதும்.

மொட்டைக் கறுப்பன் நெல்லரிசியும் சாமியரிசியும் கலந்து ஆக்கிய சோறும், வேலம்பிராய் கடலில் பிடித்த விளைமீன் குழம்பும், முருங்கையிலை வறையும் எனக்கு மிகவும் பிடித்தமான உணவு. இதோடு கொஞ்சம் ஒடியல் புட்டையும் கலந்து விட்டால் அதன் சுவைக்கு நிகர் எதுவுமில்லை. இவையெல்லாம் எனது அம்மாவின் கைப்பக்குவத்தில் நான் சுவைத்துச் சாப்பிட்டவை. என்னுடைய மனைவிக்கு இவை புரியாது. அவளது பார்வையிலோ நான் ஒரு படித்த பட்டிக்காட்டான்!

தொண்ணுற்று இரண்டு வயதையடைந்த என்னுடைய அம்மா இன்றும் சிட்னியில் வாழ்கிறார். கடந்த இரண்டு வருடங்களாக அவருக்கு ‘அல்ஷைமர்’ எனப்படும் ஞாபக மறதி நோய். என்னைக்கூட அடையாளம் காணமாட்டார். ஆனால் பழையதெல்லாம் நல்ல ஞபகம். இந்த வியாதியின் இயல்பு இது. அவரை நிஜ உலகத்துக்கு கொண்டு வர முயலும்  பயிற்சிகளில் ஒன்றாக ‘அம்மா, என்ன சாப்பிட்டீர்கள்…’ என நான் கேட்பேன். ‘சோறும் குரக்கன் புட்டும் வெந்தையக் குழம்பும்’ என்பார் எப்பொழுதும். இவை இயல்பாகவே அவரது அடிமனதிலிருந்து வரும் வார்த்தைகளேயல்லாமல், சுய சிந்தனையில் வருவதல்ல என்பதைப் புரிந்து கொள்வேன்.

அம்மாவின் சகோதரியின் கணவன் – எனது பெரியையா – ஒரு விவசாயி. குழந்தையில்லை.  நாங்கள் கூட்டுக் குடும்பமாக கைதடியில் வாழ்ந்தோம். ஐயாவும் பெரியையாவும் சண்டை போட்டதை நான் பார்த்ததில்லை. ஒருவரை ஒருவர் மதித்து ஊரில் மிக மரியாதையாக வாழ்ந்தவர்கள். பிறைவசி (Privacy) நாடி தனிக்குடித்தனம் போகும் இந் நாள்களில் இவையெல்லாம் நம்பமுடியாத பழைய சமாசாரங்கள்.

சென்ற நூற்றாண்டின் அறுபதுகளின் நடுக்கூறு வரை யாழ்ப்பாணத்தில் புகையிலைதான் காசுப்பயிர். மண்ணின் தன்மைக்கேற்ப தாவடி, கோண்டாவில், இணுவிலைச் சுற்றியுள்ள கிராமங்களில் ‘சீவு காம்பு’ எனப்படும் சுருட்டுப் புகையிலை பயிரிடுவார்கள். மற்றய கிராமங்களில் தறிகாம்பு பயிரிட்டார்கள். தறிகாம்பு புகையிலைக்கு பனங்கட்டிப் பாணிபோட்டு, தென்னம் பொச்சும் பனை ஊமலும் எரித்து வரும் புகையில் உலரவிடுவார்கள். இதற்காகவே வீட்டுக்கு வீடு களிமண்ணாலான வட்டவடிவ ‘புகைக் குடிலில்கள்’ இருந்தன. தறிகாம்பு புகையிலை சுருட்டுச்சுத்தப் பயன்படாது. இது சீவு காம்பு போல நிண்டெரியாது என திறம் சுருட்டுக்களை மாத்திரம் புகைக்கும் என்னுடைய ஐயா சொன்னார். தறிகாம்பு புகையிலை வாய்க்குள் போட மட்டுமே பயன்படும். மலையகத் தமிழர்கள் மற்றும் சிங்களவர்களிடையே இதற்கு கிராக்கி அதிகம். பாடம் பாடமாக அப்போது இவை யாழ்ப்பாணத்துக்கு வெளியே அனுப்பப்பட்டன. ‘புகையிலை விற்றபின் கடனை அடைக்கிறேன்’ என்று சொல்லி அக்காலங்களில் காசு கடன் வாங்குவார்கள். பின்னர் ஸ்ரீமாவோ அரசு உள்ளுர் உற்பத்தியை ஊக்குவிக்க மிளகாய் உட்பட பல விவசாய விளைபொருட்களின் இறக்குமதியை நிறுத்தவே, மிளகாய் விலை திடீரென உயாந்தது. இதனால், மிளகாய் காசுப் பயிரானது. யாழ்பாண விவசாயிகளெல்லாரும் புகையிலை பயிரிடுவதைக் குறைத்து மிளகாய் பயிரிட்டுத் திடீர் பணக்காரர்களானார்கள். செத்தல் மிளகாய் விற்ற காசில் சிலர் உழவு மிசின் வாங்கினார்கள். மண் வீடுகள் கல்வீடுகளாக மாறின. வீட்டுக்கு வீடு நீர் இறைக்கும் யந்திரங்கள் வந்தன. அதுவரை தோட்டத்தில் பட்டை இறைப்புத்தான். பெரிஐயாவும் பட்டை இறைப்பில்தான் பயிர் செய்தார். கைதடி மண்ணிற்கு தறிகாம்பு புகையிலைதான் நன்றாக வளர்ந்தன. இருப்பினும் விவசாயத்தில் புரட்சி செய்வதாக நினைத்து, ஒருமுறை சீவுகாம்பு சுருட்டுப் புகையிலை பயிரிட்டு கையைச் சுட்டுக் கொண்டதுமுண்டு.

யாழ்ப்பாணத்தில் பல தோட்டங்களுக்கு நடுவில் ஒரு பொதுவான கிணறு இருக்கும். பட்டை இறைப்புக்கு நேரமெடுக்குமாதலால் இரவுபகலாக முறைவைத்து இறைப்பார்கள். பெரிஐயாவின் தண்ணி இறைப்புக்கு துலா மிரிப்பது கட்டையர். ஆழக் கிணறென்றால் இரண்டு பேர் துலா மிரிப்பதுமுண்டு. துலாமிரிப்பது இலேசுப்பட்டதில்லை. ஒரே சீராக மேலும் கீழும் ஏறி இறங்குமாறு, முன்னும் பின்னுமாகத் துலாவில் நடந்து வரவேண்டும். கரணம் தப்பினால் மரணம் என்ற நிலை. இரவு இறைப்பின்போது அலுப்பிலும் நித்திரையிலும் துலாவால் தவறி விழுந்து முடமானவர்களும் இறந்தவர்களும் பலர். ஆனால் கட்டையர் துலாமிரிப்பில் விண்ணன் என்று பெயரெடுத்தவர். அவர் நன்கு பாடுவார். சதிலீலாவதி படப் பாடல் தொடக்கம், காத்தவராயன் கூத்துப் பாடல்வரை ராகம் தாளம் தப்பாமல் பாடுவதில் அவரை யாரும் வெல்ல ஏலாது. இரவு நேர இறைப்பில் துலா மிதிக்கும்போது நித்திரையிலே கீழே விழுந்துவிடாமல் இருக்க, கட்டையர் காத்தவராயன் கூத்துப்பாடல்களை குரலெடுத்துப்பாடுவார். அவரின் பாட்டு இறைக்கும் மூவரையும் விழிப்பாக வைத்துக் கொள்ளும். பட்டைக் கொடி பிடித்து, கிணத்து மிதியடியில் நின்று தண்ணி இறைப்பது சோமர். பெரிஐயா பயிர்களுக்கு அளவாகத் தண்ணி விட்டு பாத்திகட்டுவார். தண்ணீரை வீணாக்காத சொட்டு நீர்ப்பாசனம் நடைமுறைக்கு வந்த இக்காலகட்டத்தில், பாத்திகளில் தண்ணீர் விடும் ‘வெள்ள நீர்ப் பாசனமே’ (Flood irrigation) இன்றும் குடா நாடெங்கும் பயன்பாட்டிலுள்ளது. இது எதிர்காலத்தில் குடாநாட்டை வறண்ட பூமியாக்கிவிடும் என்ற கவலை எனக்கு எப்போதும் உண்டு.

கட்டையர், சோமர் போன்றவர்களை, ஊரிலுள்ள ஒவ்வொரு கமக்காரர்களும், பட்டை இறைப்புக்காகத் தங்களுடன் வைத்துக் கொண்டார்கள். இவர்கள் பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களிடம் விவசாய நிலமில்லை. இவர்கள் தங்கள் உடலுழைப்பை நம்பி உயர்சாதிக் கமக்காரர்களைச் சார்ந்து வாழ்ந்தார்கள். இவர்களுக்கு நாட்கூலியோ மாதச்சம்பளமோ இல்லை. விளைபொருட்களும் சாப்பாடும் மட்டும் கொடுக்கப்பட்டது. அத்துடன் அவர்கள் வீட்டில் நடந்த நல்லது கெட்டதுகளையும் பார்த்துக் கொள்வார்கள். அநேகமாக பெரிஐயா அதிகாலை இறைப்பையே விரும்புவார். இறைப்பவர்களுக்கு அதிகாலையில் களைப்புத் தெரியாது. பெரிஐயா நாலுமணிக்கு எழும்பி, வீட்டு முற்றத்தில் நின்று உரத்துக் ‘கூ…’ என்பார். கட்டையரும் சோமரும் பதிலுக்குக் ‘கூ…’ என்பார்கள். அலை பேசியில்லாத அந்தக் காலத்தில் ‘கூ…’ தான், அவர்களின் தகவல் பரிமாற்றத்துக்கான சாதனம்.

பெயர்தான் கட்டையரே தவிர அவர் உருவத்தில் கட்டையில்லை. திடகாத்திரமான நெடிய உடம்பு. இப்பொழுதெல்லாம்‘Four pack, six pack’ உடம்புக்காக இளஞர்கள் ஜிம்முக்கு அiலைவார்களே…? கட்டையர் ஜிம்முக்கு போகாமலே வரகும் குரக்கனும் சாமையும் சாப்பிட்டு அத்துடன் உடல் உழைப்பும் சேரவே அவருக்கு ‘six pack’ உடம்பு தானாகவே வந்தது. அவர் கறுப்பென்றாலும் மினுமினுத்த கறுப்பு நிறம். விதி வசத்தால் அவர் இலங்கையில் பிறந்தார். மேலைத் தேசத்திலென்றால், வெள்ளைக்காரிகள் மத்தியியில் அவர் நல்ல மவுசுடன் வாழ்ந்திருப்பார்.

யாழ் குடாநாட்டில் தோட்டங்களுக்கு அருகே அண்ணமார், வைரவர், புதிராயர், வீரபத்திரர் போன்ற ஏதோவொரு சுவாமிக்கு கோயிலிருக்கும். எண்பதாம் ஆண்டுகள் வரை இச்சுவாமிகள் கல்லாக, மரத்தின் கீழ் மழையில் நனைந்தோ அல்லது ஓலைக் கொட்டிலிலோ குடியிருந்தார்கள். வருடத்துக்கு ஒருமுறை, அறுவடை காலங்களில் பொங்கலோ பூசையோ இக் கோவில்களில் நடைபெறும். கூடுதலாக அண்ணமார் கோயில்களிலே காத்தவராயன் கூத்தும் நடைபெறும். கைதடியில் காத்தவராயனாக வேஷம் கட்டுவது எங்கள் கட்டையரே. அவரிடமிருந்த நடிப்பாற்றல், பாடும் திறனெல்லாம் பெரியையாவுக்கு துலாமிரித்ததில் தொலைந்து போனதோ எனப் பிற்காலத்தில் நான் நினைத்ததும் உண்டு. இப்பெழுதெல்லாம் இந்த உபரிச்சுவாமிகள் ‘இன்னாரின் உபயம்’ என்ற பெயர் விலாசத்துடன், வெளிநாட்டுக் காசில், கோபுரத்துடன் கூடிய வர்ணக் கட்டிடங்களில், தினப் பூசைகள் கண்டு சுகமாக வாழ்வது தனிக் கதை.

புகையிலை வெட்டுவதற்கு முன்பு, எங்கள் ஊர் வழக்கப்படி பெரியையா தோட்டத்துக்கு நடுவே படையல் சடங்கினை மேற்கொள்வார். அன்று எங்கள் வீட்டுக் குசினி திமிலோகப்படும். பெரிய பெரிய மண் பானைகளில், வரகுச்சோறு, சாமைச்சோறு, மற்றும் எங்கள் வயலில் எங்களின் சாப்பாட்டிற்காகவே உரம் போடாமல், மாட்டுச் சாணமும் சாதாளையும் போட்டு விளைவித்த மொட்டைக்கறுப்பன் நெல்லரிசிச் சோறும் ஆக்கப்படும். வெங்கலப் பானையில் வரகு, சாமை, நெல் அரிசிகள் மூன்றும்  கலந்து பனங்கட்டி வெல்லம் சேர்த்து புக்கை வைத்தல் சமையலிலே அம்மாவின் பங்கு. எங்களின் வயலில் விளைந்த அரிசிச்சோறு சமைக்கும்போது உப்புபோட பெரியம்மா அனுமதிக்கமாட்டார். உப்புப் போட்டால் வயல் உவர்பத்திப்போகும் என்பது அவரது யாழ்ப்பாண மண்ணின் கலாசாரம்.

படையலுக்காக பலவிதமான மீன் வகைகள் கோவிலாக்கண்டி கடற்கரையிலிருந்தும் சாவகச்சேரி சந்தையிலிருந்தும் பெரிஐயாவுடன் சந்தைக்குப் போகும் சோமர் வாங்கிவருவார். கோவிலாக்கண்டி கொய் மீன் பெயர் பெற்றது. கொய் மீனில் நிறைய முள்ளிருக்கும். ஆனாலும், அதில் பச்சை மிளகாய் சின்ன வெங்காயம் அரிந்து போட்டு வைக்கும் தேங்காய்ப் பால் சொதியின் சுவை கலாதியானது. பெரிஐயா மீன் வாங்குவது மரியாதைக் குறைவு என்பது, பெரியம்மாவின் அபிப்பிராயம். அதனால் கூடப்போகும் சோமரே மீன் வாங்குவார்.

படையலுக்கு பெரியையாவின் தோட்டத்தில் விளைந்த பயத்தங்காய், பாகற்காய், கத்தரிக்காய், மரவள்ளிக்கிழங்கு, மற்றும் பல வகை மீன்கறிகள், குரக்கன் புட்டு, ஓடியல் புட்டு எல்லாம் அமர்க்களமாக எமது வீட்டுக் குசினியில் தயாராகும். இரவானதும், பனை ஓலைகளில் கோலிய தட்டுவங்களில் அவை பரிமாறப்பட்டு சுருட்டு, சாராயம், சுட்ட கருவாடு சகிதம் புகையிலைக் கன்றுகளுக்கு நடுவில் படைக்கப்படும். படையலிலே தண்ணீர் தெளித்ததும் அவை கட்டையருக்கும் சோமருக்குமுரியது. படையல் முடிந்து பெரிஐயா வீடு வந்ததும் நாங்கள் சாப்பிடலாம். சின்ன வயதில் பெரிஐயா வீடு வருவதற்கு முன்னர் நான் தூங்கிவிடுவேன்.

இப்பொழுதெல்லாம் நான் பேராசிரியராகி உலகமெல்லாம் சுற்றி ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் அரச செலவில் தங்கிச் சாப்பிட்டாலும், தோட்டத்துப் படையலின்போது நான் சாப்பிட்ட பெரியம்மாவின் மீன் கறிக்கும் அம்மாவின் புக்கையின் சுவைக்கும் ஈடு இணை எதுவுமில்லை என்று சத்தியம் செய்வேன். வரகு சாமை போன்ற சிறு தானியங்களும் நெல் அரிசியும் கலந்து சமைத்த சோறு சுவையானது மட்டுமல்ல ஆரோக்கியமானதும் கூட!

கோவில் குருக்கள் ஒரு விடாக்கண்டர். கோவில் கும்பாபிஷேகத்துக்கு வரகு வேண்டுமென்று நேரடியாக என்னைப் பல்கலைக்கழக தொலைபேசியிலே தொடர்பு கொண்டு சொன்னார்.

அடுத்த நாள் வந்தது மின்னஞ்சல்…

2

கென்யாவிலுள்ள யொம்மு கென்யாட்டா விவசாய பல்கலைக் கழகத்திலிருந்து அந்த மின்னஞ்சல் வந்திருந்தது!

உலக வங்கியின் ஆதரவுடன் நடைபெறும் சிறு தானியங்கள் பற்றிய ஆராய்சிக் கருத்தரங்கில் பங்குபற்றி, சிறப்புரையாற்றுமாறு என்னை அழைத்திருந்தார்கள். ஆபிரிக்க கிராமங்களில் வாழும் சுதேசிகளுக்கு இன்றும் சிறு தானியங்களே ஆதார உணவாகப் பயன்படுகின்றன. மழை குன்றி, நீத்தேக்கங்கள் படிப்படியாக உவர் செறிவு பெற்று ஆபிரிக்கா உட்பட வளர்முகநாடுகள் அனைத்திலும் பஞ்சம் தலைகாட்டும் இன்றைய சூழலிலே, சிறுதானியங்கள் உற்பத்தி செய்யப்படுவதின் அவசரத்தேவையை உலக வங்கி சரியாகவே கணித்திருந்தது.

கும்பாபிஷேகத்துக்கு வரகு பெற்றுக்கொடுப்பதற்கு, முருகனே இந்த அழைப்பை அனுப்பியதாக என்னுடைய மனைவி மனப்பூர்வமாக நம்பியதுடன் ‘வரகு வருகுது…’ என கோவில் குருக்களுக்கும் தொலை பேசியில் சொல்லி விட்டாள்.

வரகும் சாமையும் குரக்கனும் நாலாயிரம் வருடங்களுக்கு முன்பு, ஆபிரிக்காவிலிருந்தே இந்தியாவுக்கு கொண்டு வரப் பட்டதாக உசாத்துணை நூல்கள் தெரிவிக்கின்றன. அங்கிருந்தே இவை இலங்கைக்கு வந்ததாம். சிறு தானியங்களின் உற்பத்திக்கு சிறிதளவு நீர் போதுமானது. இதிலும் வரகு, உவர் நிலத்திலும் தரிசு நிலத்திலும் வளரும். கென்யா கிராமங்களில் சுதேசிகளால் காலம் காலமாக வரகு விளைவிக்கப்படுகிறது. வரகும் தினையும் அவர்களின் நித்திய உணவு வகைகள். வரகு வறட்சியை தாங்கும் சக்தி கொண்டது. வரகுக்கு பல அடுக்கு தோல்கள் உள்ளதால் பல வருடங்களுக்குச் சேமித்து வைக்கலாம். இதன் காரணமாகத்தான் கோயில் கோபுர கலசங்களில், வரகை சேமித்து வைக்கும் பழக்கம் வந்திருக்க வேண்டும் என ஊகிக்கலாம்.
 
புலம்பெயர் வாழ்க்கையில், அம்மாவும் நானும் மட்டுமே எங்கள் வீட்டில் தமிழ்க் கடைகளில் கிடைக்கும் குத்தரிசியில் ஆக்கிய நெல்லுச் சோறும், குரக்கன் புட்டும், ஒடியல் புட்டும், தனித்தோ கலந்தோ சாப்பிடுவதுண்டு. குத்தரிசி நெல்லுச் சோறு அவியும்போது, ஒருவகை நாத்தமடிப்பதாக மகன் அரவிந்தன் சொல்லுவான். அவன் பல்கலைக் கழகம் சென்ற பின்பு அவனுக்கு  Four pack அல்லது Six pack உடம்பு தேவை என்கிற மோகம் ஏற்பட்டது. இதைத்தான் இன்றைய இளம் பெண்கள் விரும்புவதாக அறிந்தேன். உடற்பயிற்சி நிலையத்தின் அறிவுறுத்தலின்படி நார்ச்சத்தும் புரதச்சத்தும் நிறைந்த குரக்கனும், வரகும்;, தீட்டாத நெல்லரிசிச் சோறும் இப்போது சாப்பிடத் துவங்கிவிட்டான். இன்றைய இளவல்கள், வீட்டிலுள்ளவர்களை விட வெளியிலுள்ளவர்களின் வார்த்தைகளையே பெரிதும் நம்பிப் பின்பற்றுதல் காலத்தின் கோலமாகும்!

‘சிறு தானியங்களின் மேல் ஏன் இந்த திடீர்ப் பாசம்?’ என ஒரு நாள் அரவிந்தனைக் கேட்டேன். 

‘வரகு, சாமை, குரக்கன் போன்ற சிறு தானியங்களில், புரதமும் நார்ச்சத்தும் மிக மிக அதிகம். அதே வேளை மாச்சத்து மிகவும் குறைவு. நூறு கிராம் சாமையில் 9.3 மில்லி கிராம் இரும்புச் சத்து உண்டு என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். உங்களுக்குத் தெரியுமா அப்பா, குரக்கனில் இருதய நோய்க்கு ஏற்ற ‘நிறைவுறாத கொழுப்பு’ நிறையவே இருக்கிறது…’ என கணினியில் தான் அறிந்த தரவுகளை அடுக்கிக் கொண்டே போனான் மகன்.

மகனின் பிரசங்கத்தை குசினி அறையிலிருந்து கேட்டுக் கொண்டிருந்த என்னுடைய மனைவியால் சிரிப்பை அடக்க முடியவில்லை. ‘வரகுக்கும் நீ போற ஜிம்முக்கும் என்னடாப்பு சம்பந்தம்?’ எனக்கேட்டாள்.

‘அம்மா, நான் ஜிம்முக்குப் போறது உடம்பிலுள்ள கொழுப்பைக் கரைத்து, தசைகளைப் பெலப் படுத்தி, அவற்றைப் பல அடுக்குகளாக மெருகேற்றி, உடம்பை நேர்த்தியாக வைத்துக் கொள்ள. இதற்கு வரகு நல்லதென ஜிம் பயிற்சியாளர் சொன்னார்… சும்மா சிரியாதையுங்கோ, உங்கடை மூட்டுவலிக்கும் வரகு சாப்பிட வேண்டுமெண்டு இணையத்திலை இருக்கு’ என சீரியஸ்ஸாகவே சொன்னான் மகன்.  

கென்யாவில், கென்யாட்டா பல்கலைக் கழகம், யொம்முக் கென்யாட்டா விவசாய தொழில் நுட்ப பல்கலைக் கழகம் என, கென்யாட்டாவின் பெயரில் இரண்டு பல்கலைக் கழகங்கள் உண்டு. கென்யாட்டா பல்கலைக் கழகம் மிகப் பழமையானது. ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது. இது ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நைரோபி நகரத்திலே பிரதான வளாகத்தைக் கொண்டுள்ளது. இது மருத்துவம் உட்பட பல பீடங்களையும் உள்ளடக்கிய முழுமையான பல்கலைக்கழகம்.   

‘யொம்முக் கென்யாட்டா விவசாய தொழில் நுட்பப் பல்கலைக் கழகம்’ 1981 ஆம் ஆண்டு யப்பானிய உதவியுடன், நைரோபியிலிருந்து 36 கிலோ மீற்றர் தூரத்தில், நைரோபி-திக்கா நெடுஞ்சாலை அருகே அமைக்கப்பட்டுள்ளது.

கென்யாவின் சுதந்திரத்துக்காகப் போராடியவர் யொம்முக் கென்யாட்டா. இந்தியாவின் மகாத்மா காந்திக்கு ஒப்பானவர். திறமையான பேச்சாளர். இருப்பினும் இவர்மீது, பத்தாம் வகுப்பு படிக்கும்போது எங்கள் பலருக்கு பயங்கர கடுப்பு. சொன்னால் நம்ப மாட்டீர்கள். அன்று தொடக்கம் இன்று வரை நாற்பது வருடங்களுக்கு மேலாக யொம்மு கென்யாட்டா, அடிக்கடி கனவில் வந்து என்னைப் பயமுறுத்துகிறார். இவர் கனவில் வராத வேளைகளிலெல்லாம் எலிசபெத் பெனற் (Elizabeth Bennet) என்னுமொரு கற்பனைப் பாத்திரம் என் கனவில் வரத் தவறுவதில்லை.

சகலருமே கனவு காண்கின்றனர். பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கும் கனவுகள் வருகின்றன. மனநல குறைபாடு உள்ளவர்கள் சிலரைத் தவிர எல்லோருமே கனவு காண்பதாக சில விஞ்ஞான ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. மிருகங்களும் கனவுகள் காண்பதாக கூறப்படுகிறது. எனது கனவு பற்றி எமது குடும்ப வைத்தியரைக் கேட்டேன். கனவுகள் ஆழ்மனப் பாதிப்புக்களின் படிமங்கள் என்ற தகவலுடன் தன் வைத்தியத்தை முடித்துக்கொண்டார்.

என்னுடைய கனவுகள் பற்றி இணையத்தில் ஆராய்ந்து, என் இணைய முகவரிக்கே மின்அஞ்சல் அனுப்பியிருந்தான் மகன் அரவிந்தன். அவன் ஒரு கணினிப் பொறியியலாளன். அண்ட சராசரங்களையும் கணினிக்குள்ளேயே அடக்கி வாழும் அவன் ஒரே வீட்டில் இருக்கும் என்னுடன் தகவல்களைப் பரிமாறுவதும் இணையத்தினூடாகத்தான். எலியோட்டமயமாக மாறியுள்ள புலம்பெயர் வாழ்வுக்கு நாம் செலுத்தும் விலை அது என நான் அமைதியானேன்.
 
கனவுகள், ஆழ்மனதில் படிந்து கிடக்கும் எண்ணங்களின் வெளிப்பாடுகள் என்றும், இயலாமைகளின் வெளிப்பாடுகள் என்றும், நமது ஆசைகளின் பிரதிபலிப்புகள் என்றும், நமது குணாதிசயத்தைக் கண்டுபிடிக்க உதவும் காரணிகள் என்றும் ஏகப்பட்ட விவாதங்களும் ஆராய்ச்சிகளும் உலக அளவில் பல நூற்றாண்டுகளாக நடந்து கொண்டே இருப்பதான பல தகவல்களை அவன் அனுப்பி வைத்தான். அதன்பிறகு மகன் அரவிந்தனின் தூண்டுதலினால் என் அடிமனதைத் துழாவும் வேலையிலே சில சமயங்களில் ஈடுபடலானேன்.

இந்தப் பிரச்சினை நான் பத்தாம் வகுப்பில் படித்தபோது நடந்தது. தமிழாசிரியான எனது தந்தை ஆங்கிலம் படித்தால்தான் பிற்காலத்தில் பிழைக்கலாம் என்ற எண்ணத்தில், கிறீஸ்தவ பாடசாலையொன்றில் சேர்த்துவிட்டார். அங்கு அரியபூஷணம் ஆசிரியர் எங்களுக்கு ஆங்கிலம் கற்பித்தார். ஐயாவைப் போல வேட்டி நாஷனல் அணிந்த ஒருவர் ஆங்கிலம் கற்பித்தது எனக்கு ஆச்சரியமாகவும் சந்தோஷமாகவும் இருந்தது. நல்லாசிரியர் என்ற சொல்லுக்கு முற்றிலும் தகுதியானவர். கல்விகற்கும் மாணவர்களின் தரமறிந்து ஆங்கில இலக்கணத்துடன் அவர் பாடங்களை ஆரம்பித்தார்.

எங்களின் காலகஷ்டம் அவர் தனது சொந்த ஊர்ப்; பாடசாலைக்கு மாற்றலாகிச் செல்ல, கொழும்பிலுள்ள பிரபல கல்லூரியொன்றிலிருந்து மாற்றலாகி ஒருவர் எங்கள் பாடசாலைக்கு வந்தார். வந்ததும் மொழிகளில் தான் பாண்டித்தியம் பெற்றவராக தம்பட்டமடிதுக் கொண்டார். அந்தக் காலத்தில் அவர், பொக்கற் இல்லாத முழுக்கை ‘சென் மைக்கல்’ ரெர்லின் சேட்டு அணிந்தே வகுப்புகளுக்கு வருவார். எல்லோரிலும் தான் உயர்ந்தவர் என்று காட்டிக் கொள்வதில் முனைப்பாக இருந்தார். எங்களின் போதாத காலம் அவரே எங்களின் ஆங்கில வகுப்புகளை நடத்தினார். அடிப்படை ஆங்கில இலக்கணத்தையே சரியாகப் புரிந்து கொள்ளாத எம்மில் பலருக்கு அவர் கற்பித்தது pride and prejudice என்ற ஆங்கில நாவல் இலக்கியமும், யொம்முக் கென்யாட்டா நிகழ்த்திய உரைகளும். pride and prejudice  புத்தகத்தை வாசிக்கும் போது அந்த நாவலில் வரும் பெண் கதாபாத்திரமான எலிசபெத் பெனற்றை ஆதியோடு அந்தமாக விவரிப்பதிலேயே எங்கள் பாட நேரம் முடிந்து விடும். அத்துடன் அவர் விட்டாரா…?  கென்யாட்டாவின் உரைகளை மனப்பாடம் செய்து வகுப்பில் ஒப்புவிப்பதைக் கட்டாயமாக்கினார். அகில இலங்கை ஆங்கில பேச்சுப் போட்டிக்கு எங்களை தயார் செய்வதாக அதற்கு அவர் காரணம் சொல்லிக் கொண்டார். இவ்வாறு எத்தனை ஆசிரியர்கள் தங்களின் பெருமைக்கும் அவதிக்கும் மாணவர்களைக் காலாதி காலமாகப் பலி கொடுத்தார்கள், இன்னும் பலி கொடுக்கிறார்கள் என்பது நான் ஆசிரியத் தொழிலுக்கு வந்த பின்புதான் சரியாகப் புரிந்து கொண்டேன். இதேவேளை, நல்லாசிரிய இலக்கணத்துக்கே உதாரணமாக விளங்கிய ஆசிரியர்களும் எங்களுக்குக் கற்பித்திருக்கிறார்கள் என்பதையும் நன்றிப் பெருக்குடன் நினைவு கூருகின்றேன்.

கிராமத்திலிருந்து படிக்கச் சென்ற எனக்கும் அப்போது காதல் வந்தது. அது என் முதல் காதல். எங்கள் வகுப்பில், ஆங்கில மொழியை வீட்டுச் சூழலிலேயே தம் வசப்படுத்திய ஒரு சிலருள் அவளும் ஒருத்தி. அவள் முன்னால் அந்த ஆங்கில ஆசிரியரால் நான் பட்ட அவமானங்கள் கொஞ்ச நஞ்சமில்லை. அந்த அவமானங்கள் தான் இன்றும் என் கனவில் வருகின்றன. இவ்வளவுக்கும் நான் கடை நிலை மாணவனல்ல. பிற்காலத்தில் ஜேர்மனியில் நான் ஆறேமாதத்தில், முன் பின் தெரியாத ஜேர்மன் மொழியைக் கற்று, அந்த மொழியிலேயே டாக்டர் பட்டத்துக்குரிய ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதியதுண்டு. அது மட்டுமல்ல, கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக ஜேர்மன் மற்றும் ஆங்கில மொழிகளில் உலக பல்கலைக் கழகமெங்கும் விரிவுரைகள் நிகழ்த்துகிறேன். இதை நான் பெருமைக்காகச் சொல்லவில்லை. ‘ஆசிரியர்களே, மாணாக்கரின் தரமறிந்து படிப்பியுங்கள்’ என்கிற என் அநுபவத்தைப் பகிர்து கொள்வதற்கே!

விவசாய பல்கலைக்கழக பிரதான மண்டபத்தின் முன் நிறுவியிருந்த, கென்யாட்டாவின் சிலைக்குக் கீழே, பழைய நினைவுகளில் ஆழ்திருந்த என்னை, முதுகில் தட்டி நிகழ்வுலகத்துக்கு கொண்டு வந்தார் ஒருவர். யொம்முக் கென்யாட்டா பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராகப் பணிபுரியும் ஒரேயொரு இந்திய வம்சாவளி. இவரை நான் பல்கலைக்கழக கன்ரீனிலும் பார்த்திருக்கிறேன். தனியொரு மேசையில் தனியகவே இருப்பார். கன்ரீனுக்கு நான் கென்யப் பேராசிரியர்களுடன் சாப்பிடச் சென்ற போதெல்லாம், மரியாதையின் நிமிர்த்தம் அவரைப் பார்த்துப் புன்னகைத்த போதும் பதிலுக்கு புன்னகைக்காத அவர், இப்போது தாமாகவே முன்வந்து வணக்கம் சொல்லியதற்கு ஏதோ காரணம் இருக்கலாம் என்பதை ஊகித்துக் கொண்டேன்.

‘வாருங்கள் அந்த வாங்கில் அமர்ந்து கொள்வோம்’ என என்னை அழைத்தார்.

‘கன்ரீனில் உங்களுடன் நான் பேசாததற்கு காரணமுண்டு. குறை நினைக்காதீர்கள். கென்யாவிலுள்ள இந்தியர்களின் நிலமை அப்படித்தான்…’ என்றார் அவர்.

‘இதைக் கொஞ்சம் விபரமாகச் சொல்லுங்களேன், அறிய ஆசை என்றேன்.

‘கென்யாவிலுள்ள, பன்னாட்டு நிறுவனங்களிலும் உலக வங்கி, FAO, UNO போன்ற உலக ஸ்தாபனங்களிலும் இந்திய உப கண்டத்தை சேர்ந்தவர்கள், ஒப்பந்த அடிப்படையில் உயர் பதவியிலுள்ளார்கள். இவர்கள் நிரந்தரப் பிரசைகளல்லர்.’    

‘கென்யப் பிரசைகளாக வாழும் இந்தியர்கள் எத்தனைபேர்?’

‘ஒரு இலட்சத்துக்கு சற்றே அதிகமானவர்கள் என்பது ஒரு கணக்கு. இவர்களின் வருகை 1896 க்கும் 1901ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் அமைக்கப்பட்ட, உகண்டா புகையிரதப் பாதையுடன் ஆரம்பமாகிறது. அப்பொழுது 32,000 இந்தியர்கள் ‘பிரிட்டிஸ் இந்தியாவிலிருந்து’ பிரித்தானியர்களால் கொண்டு வரப்பட்டார்கள். அடர்ந்த ஆபிக்க காடுகளினூடாக  புகையிரதப் பாதை அமைக்கும் மிகக் கடினமான பணியில் கிட்டத்தட்ட 2500 பேர் இறந்ததாகச் சொல்லப் படுகிறது. ஒவ்வொரு மைல் தூர பாதை அமைப்புக்கும், நாலவர் இறந்ததாகவும் இவர்களில் பலர் மனிதர்களை உண்ணும் சாவோ (Tsavo) என்னும் ஆதிவாசிகளால் கொல்லப்பட்டதாகவும், ரயில் பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்ட என்னுடைய தாத்தா சொல்லியதாக அம்மா சொன்னார்.’

‘இத்தகைய வேலைகளுக்காக, மலாயா இலங்கை போன்ற அண்டை நாடுகளுக்கும் தென் இந்தியாவிலிருந்து ஆள்களை அழைத்துச் சென்றதாக நான் அறிந்திருக்கிறேன். கென்யாவுக்கு வந்தவர்கள் இந்தியாவின் எந்த மாநிலத்தவர்கள்…?’

‘…குஜராத் மற்றும் பஞ்சாப் மாநிலத்தவர்கள். இவர்கள் ரயில் பாதை அமைக்கும் வேலை நிறைவடைந்ததும், கரையோர நகரங்களிலிருந்து இடம்யெர்ந்து  நைரோபியின் நியூரவுனில் (New town of Nairobi) குடும்பத்துடன் குடியேறினார்கள். இந்த நகரமே 1905ம் ஆண்டுவரை பிரித்தானிய காப்பரசின் (British protectorate) தலைநகரமாக விளங்கிற்று. இங்கு இந்தியர்களை வாழ அனுமதித்த வெள்ளையர்கள் கறுப்பர்களை அனுமதிக்கவில்லை. இந்தப் பாரபட்சமே இந்தியர்கள்மீது சுதேசிகளுக்கு ஏற்பட்ட துவேஷத்தின் வித்தாக அமையலாயிற்று.’

சிறிது நேரம் மொனமாக இருந்தவர் ஒரு சிகரெற்றைப் பற்றவைத்துப் புகைத்தவாறு தொடர்ந்தார்.

‘ஆயிரத்து தொழாயிரத்து இருபதுகளிலே, இந்தியர்கள் கென்ய கொலனியில் அரசியலில் ஆதிக்கம் செலுத்த முற்பட்டார்கள். கென்யாவில் முதலாவது புதினப் பத்திரிகையைத் துவங்கிய ஏ. எம். ஜீவான்ஜீ இதில் முன்னிலை வகித்தார். அவர் துவங்கிய  பத்திரிகைதான் இன்றும் கென்யாவில் ‘The Standard’ என்னும் பெயருடன் வெளிவருகிறது. அவருடன் என்னுடைய தகப்பனார் அரசியலில் ஈடுபட்டது மட்டுமல்லாமல், அவருடைய பத்திரிகையிலும் பணிபுரிந்தார். இந்தியர்கள் அந்த சதாப்தத்திலே வணிகத்தில் ஈடுபட்டு, கென்ய சுதேசிகளைவிட பொருளாதாரத்தில் மிகவும் பலம் பொருந்தியவர்களாக வளர்ச்சி அடைந்ததினால் வெள்ளையர்களின் காப்பரசுடன் பேரம் பேசக்கூடிய நிலையிலிருந்தார்கள். ‘

‘தங்களுடன் சரிக்குச் சமமாக மற்றவர்கள் பேரம் பேசுவதை பிரித்தானிய வெள்ளையர்கள் விரும்பியிருக்க மாட்டார்களே?’

‘சரியாகச் சொன்னீர்கள், அதுதான் நடந்தது. சட்ட மேலவையில் (Legislative council) இந்தியர்களுக்காக ஒதுக்கப்பட்ட இரண்டு ஆசனங்கள் இதனால் மறுக்கப்படது. இந்தியர்களின் எண்ணிக்கைக்கு இந்த இரண்டு ஆசனங்களே மிகக் குறைவானது. அதையும் பிரித்தானியர்கள் அடாவடியாகப் பறிக்கவே, இந்திய சமூகத்திலிருந்து பாரிய எதிர்ப்புக் கிளம்பப் பதட்ட நிலை உருவாகியது. அந்தக் காலத்தில்தான் இந்தியர்களால் ஒழுங்குபடுத்தி நடத்தப்பட்ட ஒரு கூட்டத்தில் வெள்ளையன் ஒருவனால் என்னுடைய தாத்தா சுட்டுக் கொல்லப்பட்டார்.’

அவர் சிறிது நேரம் மௌனமானார். தன்னுடைய தாத்தாவையும் ரயில்ப்; பாதை அமைக்கும் பணியில் அவர் அநுபவித்திருக்கக் கூடிய கஷ்டங்களையும் அவர் நினைத்துப் பார்த்திருக்கக்கூடும்.

‘1927ம் ஆண்டு நடந்த சட்ட மேலவைத் தெரிவிலே ஐரோப்பியர்களுக்கு கிடைத்த பதினொரு ஆசனங்களுக்கு நிகராக, இந்தியர்கள் ஐந்து ஆசனங்களைப் பெற்றுக்கொள்ளவே வெள்ளையர்கள் சற்றே அடங்கிவிட்டார்கள். என்னுடைய தந்தையும் சட்ட மேலவையில் ஓர் இடத்தைப் பெற்றிருந்தார்.”
 
‘சட்ட மேலவையில் கென்ய சுதேசிகளும் இடம்பெற்றிருந்தார்களா?

ஏனோ தெரியவில்லை, அவர் என்னை ஊடறுத்துப் பார்த்தார். பின்னர் மெதுவாகத் தொடர்ந்தார்.

‘வெள்ளையர்களும் இந்தியர்களும் வெகு தந்திரமாக, கறுப்பர்களுக்கு சட்ட மேலவையில் பிரதிநிதித்துவம் வராமல் பார்த்துக் கொண்டார்கள்…!’ அவர் இதை எனக்குச் சொன்ன பாணி இதையோர் சாதனை போலக் கருதுவதாகத் தோன்றியது. அத்துடன் சட்ட மேலவையின் மெம்பராக இருந்த ஒருவரின் மகன், சுதேசி கென்யர்களைக் குறிப்பிடும் பொழுதெல்லாம், வெகு தெளிவாகவே ‘கறுப்பர்கள்’ என்று அழுத்திச் சொன்னதிலிருந்து இந்தியர்களின் இன்றைய நிலைக்கான மூல காரணத்தை எளிதாக ஊகித்துக் கொண்டேன்.

‘இரண்டாம் உலக மகாயுத்தத்துக்கப் பின் ஐம்பதாம் ஆண்டுகளில், இந்தியர்கள் அரச உயர் பதவிகள் அனைத்தையும் வெகு இலகுவாக ஆக்கிரமித்துக் கொண்டார்கள். அவர்களுடைய வியாபார அறிவும் தந்திரமும் கென்யாவினதும் கிழக்கு ஆபிரிக்காவினதும் பொருளாதார வளர்ச்சிக்கும் செழிப்புக்கும் பெரிதும் கைகொடுத்தது. இந்த நிலையில்தான் தங்களின் நிர்வாகத்தை இலகுவாக்க, பிரிதானியர்கள் சுதேசிகளுக்கு எதிராக இந்தியர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள்.’

‘1963இல் கென்யா சுதந்திரம் அடைந்த பின்னர் இந்தியர்களுடைய நிலையில் எத்தகைய மாற்றம் ஏற்பட்டது?’

‘சுதந்திரத்துக்குப்பின் கென்யாவில் வாழ்ந்த இந்தியர்களுக்கும் ஐரோப்பியர்களுக்கும் கென்யா நாட்டின் பிரஜாஉரிமை பெற்றுக் கொள்வதற்கு இரண்டு ஆண்டுகள் அவகாசம் கொடுக்கப்பட்டது. கென்யா சுதந்திரம் பெற்றபோது ஒரு இலட்சத்து எண்பதினாயிரம் இந்தியர்களும் நாப்பத்து இரண்டாயிரம் ஐரோப்பியர்களும் கென்யாவில் வாழ்ந்தார்கள். இவர்களுள் இருபதினாயிரம் பேர் மட்டுமே குறித்த காலத்துக்குள் கென்ய பிரஜா உரிமை கோரி விண்ணப்பித்தார்கள். இது கென்ய சுதேசிகளுக்கு இந்தியர்கள்மீதும் ஐரோப்பியர்கள்மீதும் அவநம்பிக்கையையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியது. நாட்டுக்கு விசுவாசம் இல்லாமல், தங்களுடைய மண்ணின் வளத்தைச் சுரண்டுவதிலேயே இந்தியர்கள் குறியாக இருப்பதாக வெளிப்படையகவே கறுப்பர்கள் பேசத் துவங்கினார்கள்’

‘அவர்கள் சொன்னதில் தப்பேதும் இருக்கிறதா…?’ என் கேள்விக்குப் பதில் அளிப்பதைச் சாமர்த்தியமாகத் தவிர்த்தார்.

‘கென்ய பிரஜா உரிமை பெறாதவர்கள், அரச சிவில் சேவையிலிருந்து நீக்கப்பட்டார்கள். இதைத்தொடர்ந்து பலர் பிரித்தானிய கடவுச் சீட்டுப் பெற்றுக் கொண்டு பிரித்தானியாவில் குடியேறவே, எஞ்சியவர்கள் சுதேசி அரசினால் மறைமுகமாகப் புறக்கணிக்கப் பட்டார்கள்.’

‘மற்றவர்கள் ஏன் பிரித்தானியாவுக்குச் செல்லவில்லை?’

‘வணிக நிறுவனங்களை நடத்தியவர்களாலும், பெரும் சொத்துகள் வைத்திருந்தவர்களாலும் உடனடியாக அவற்றை விற்றுக் கொள்ள முடியவில்லை. அவர்கள் இங்கேயே தங்கிவிட நேர்ந்தது. இன்றும் கென்யாவின் பெரிய நகரங்களிலுள்ள கடைகள் இந்தியர்களுடையதே. அவர்கள் உள்ளே இருப்பார்கள். வெளியே வாடிக்கையாளர்களுடன் தொடர்புகொள்ளவென கறுப்பர்களை வைத்திருப்பார்கள்’ என்றவரின் கைத்தொலைபேசி சிணுங்கவே உரையாடல் துண்டிக்கப்பட்டது.

இன்றும் கென்யாவில் வாழும் இந்திய வம்சாவளியினர் பண பலம் உள்ளவர்களாகவும் கென்ய பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர்களாகவும் இருப்பதை நான் நேரடியாகவே அவதானித்துள்ளேன். Park land போன்ற பகுதிகளில் பாரிய வீடுகளில் அவர்கள் வாழ்கிறார்கள். இதை இந்தியக் கிராமம் என தாம் அழைப்பதாக எனக்கு உதவுவதற்கென பல்கலைக்கழகத்தால் நியமிக்கப்பட்ட மாணவன் சொன்னான். அந்த தொகுதியில் இருநூறு பாரிய வீடுகள் இருக்கும். வீடுகள் அனைத்தையும் உள்ளடக்கி உயரமான சுற்று மதில் கட்டி முன்னே பாரிய இரும்புக் கேற்று போட்டிருந்தார்கள். அதனருகே இரண்டு சுதேசிகள் காவலுக்கு நின்றார்கள். என்னுடன் வந்த மாணவனையும் அழைத்துக் கொண்டு கேற்றினூடாக உள்ளே செல்ல முயன்றேன். என்னை அனுமதித்த காவல்காரன் சுதேசி மாணவனை அனுமதிக்க மறுத்து விட்டான். இவ்வளவுக்கும் அவன் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டத்துக்கு ஆராச்சி செய்பவன். மிகவும் கௌரவமான உடையணிந்து வந்திருந்தான். ‘எங்களைப் பிரச்சனைக்குள் மாட்டிவிடவேண்டாம்’ என்று சொல்லி இறுதிவரை மாணவனை அவர்கள் உள்ளே அனுமதிக்கவில்லை. மிகவும் சங்கடத்தில் ஆழ்ந்த என்னைச் சமாதானப்படுத்த ‘இங்கு இது சகஜமானதுதான் சேர். எனது வாழ்நாளில் ஓரு முறையேனும் இந்தியக் குடியிருப்புக்குள் சென்றது கிடையாது’ என்று சிரித்துச் சமாளித்தான்.

மகள் தொலைபேசியில் அழைத்ததாக சொல்லிக்கொண்டு இந்திய வம்சாவளி விரிவுரையாளர் வந்தார்.

‘கன்ரீனில் என்னுடன் பேசாததிற்கு, இந்தியர்களின் நிலமை இது தான்… என காரணம் சொன்னீர்களே’ என்று அவர் தொடங்கிய இடத்துக்கே அவரைக் கொண்டுவர முயன்றேன்.

‘இன்றைய நிலமையில் கென்ய அரச சேவையில் இந்தியர்கள் யாரும் இல்லை. பல்கலைக் கழகங்களில் மிக அரிதாக ஓரிருவர் இருக்கக்கூடும். எனது ‘புள்ளியியல்’ அறிவு இவர்களுக்கு தேவை என்ற படியால் கடந்த பத்து வருடங்களாக ஒவ்வொரு வருட ஒப்பந்தத்தில் என்னை வைத்திருக்கிறார்கள். பதவி உயர்வோ, மேலதிக கொடுப்பனவுகளோ இல்லாத நிலையில் மாற்றாந்தாய் மனப்பான்மையிலேயே நான் இங்கு நடத்தப்படுகிறேன். இந்தநிலையில் உங்களுடன் பேசி உங்களையும் இந்தியர்களுள் ஒருவனாக அவர்கள் நடத்துவதை நான் விரும்பவில்லை’ என்று வருத்தத்துடன் சொன்னார்.

‘உங்கள் பிள்ளைகள் என்ன செய்கிறார்கள்?’ என்று நிலைமையைச் சுமுகமாக்கும் முயற்சியில் கேட்டேன்.

‘மகள் மருத்துவர். மகன் வழக்கறிஞர். அவர்கள் இந்தியர்கள் வாழும் பகுதியில் தொழில் நடத்துகிறார்கள். இங்குள்ள இந்தியர்களின் பிள்ளைகள் தாங்களாகத் தொழில் செய்யக்கூடிய தொழிலில் கல்வியையே கற்கிறார்கள். இன்னும் பலர் இந்தியர்களின் நிறுவனங்களில் பணிபுரிகிறார்கள்’ என்றார் சுருக்கமாக.

‘கென்ய அரசுக்கு சவாலாக குட்டி இந்திய அரசு என்று சொல்லுங்களேன்’ என்று நான் சொல்லிச் சிரிக்க, ‘அப்படித்தான் கென்யர்கள் நினைக்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்களேன் ‘ என்று அவரும் சிரித்தவாறு விடைபெற்றார்.

சிறு தானியங்களின் கருத்தரங்கும் மாநாடும் துவங்கியது. உலகெங்கும் சேகரிக்கப்பட்ட அனைத்து வகையான சிறு தானியங்களையும், அவற்றிலிருந்து தயாரிக்கப்பட்ட உணவு வகைகளையும் காட்சிக்கு வைத்திருந்தார்கள்.

நடு நாயகமாக வைக்கப்பட்ட வரகுக் கதிர்களையும் அதனருகே குமித்திருந்த வரகையும் கண்ட எனக்கு பரமானந்தம். உடனே எனது ஐபாட் அலைபேசியில் அதைப் படமெடுத்து மின்னஞ்சல் மூலம் மனைவிக்கு அனுப்பினேன்.

‘மகன் அரவிந்தன் தனக்கும் வரகு வேணுமாம். அவனுக்கும் சேர்த்து, உண்டணக் கொண்டு வாருங்கோ’ எனப் பதில் அனுப்பியிருந்தாள் மனைவி.

இறுதி நாளன்று மாநாட்டு ஒருங்கிணைப்பாளர்களிடம் வரகு பற்றிச் சொன்னேன். ‘உங்களுக்கு இல்லாதா? உங்களுக்கு சிரமமில்லாமல் நாங்களே வரகை விமான நிலயத்துக்கு பொதியாகக் கட்டிக் கொண்டுவருகிறோம்’ என்றார்கள்.

அடுத்த நாள் வரகுக்காக விமான நிலையத்தில் காத்திருந்தேன். பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் இரண்டு ஊழியர்கள் எனது பெயர் விலாசம் எழுதப்பட்ட வரகு மூட்டைய என்முன் வைத்தபடி, ‘இது உங்களுக்கு’ என சுவகியிலி மொழியுடன் சில ஆங்கில வார்த்தைகளைக் கலந்து சொன்னார்கள். பொதியை நிறுத்துப் பார்த்தேன். சாக்குடன் பத்தொன்பது கிலோ. விமானப் பயணத்திலே என்னுடன் எடுத்துச் செல்வதற்கு இருபது கிலோ பொதியே அனுமதிக்கப்பட்டிருந்தது. என் உடைகள் மற்றும் புத்தகங்களே அனுமதிக்கப்பட்ட எடைக்குச் சரியாக இருந்தது. சிட்னிவரை வரகைக் கொண்டு போக மேலதிக கட்டணம் 1890 டொலர்கள் என்றார்கள்.

என்ன செய்வது…? மூட்டையைப் பிரித்துக் கட்டுவதற்கும் நிறையைக் குறைப்பதற்கும், வரகைக் கொண்டுவந்தவர்களுடன் பேசிச் செய்வதற்கு மொழிச்சிக்கல். அடிக்கடி மனைவி வேறு என் ஞாபக்துக்கு வந்து பயமுறுத்தினாள். பறப்புக்கும் நேரமாகி விட்டது. வேறு வழியில்லை.

கிறடிற் காட்டில் பணத்தைச் செலுத்துமாறு மனைவி தயங்காமல் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தாள். எல்லாச் செலவுகளிலும் இறுக்கிப் பிடிக்கும் என்னுடைய மனைவி, வரகு கோயிலுக்கு என்றவுடன் வெகுவாகவே தாராளம் காட்டியிருக்கிறாள். 

‘சுண்டங்காய் கால் பணம் சுமை கூலி முக்காப் பணம்’ என்கிற யாழ்ப்பாணத் தமிழர் வழக்கிலுள்ள பழமொழி எனக்கு ஞாபகத்துக்கு வந்தது. இது மனதை உறுத்தவும், நான் எப்பொழுது பறப்புத் துவங்கும் என அந்தரப்பட்டேன்.

ஒருவாறு பறப்புத் துவங்கிற்று.

‘வரகுக்கு இங்கிலிசிலை என்ன பெயரெண்டு ஐய்யர் கேட்டவர்…!’ என்று மனைவி கேட்பதுபோல என் காதில் ஒலித்தது.

‘வரகை Kodo Millet, Indian Paspalum என்று ஆங்கிலத்தில் அழைப்பார்கள். லத்தீன் மொழியில் அதனுடைய விஞ்ஞானப் பெயர் Paspalum Scrobiculatum’ என்று கோயில் குருக்களுக்கு ஆங்கில வகுப்பெடுக்க என்னைத் தயார்படுத்திக் கொண்ட திருப்தியுடன் கண்களை மூடித் தூக்கத்தை வாலயப்படுத்த முனைந்தேன்.

அவுஸ்திரேலியாக் கண்டத்திலுள்ள கோயிலொன்றின் கலசத்திலே, ஆசியாக் கண்டத்தின் யாழ்ப்பாணவாசியான என் மனைவியின் உபயமாக, ஆபிரிக்காக் கண்டத்தின் கென்யா நாட்டிலே விளைந்த வரகு, பன்னிரண்டு ஆண்டுகள் வாழப்போகின்ற ஒரு மரபின் தொடர்ச்சியை ஊடறுத்து…,

வரகரிசியும், நெல்லரிசிப்பச்சையும், வெல்லமும் கலந்து ஒரு சக்கரைப் பொங்கல் செய்து, கைதடியிலே பெரியைய்யா வெள்ளாமை செய்த காலத்தின் மீள் உயிர்ப்புப் பெறும் ஒரு நாளினைச் சிட்னியில் உருவாக்கும் கனவுகளிலே, டொலர் இழப்பின் கனதி சற்று இலேசாக, வீடு நோக்கிய என் பறப்புத் தொடர்ந்தது

a.kantharajah@hotmail.com