புலம்பெயர்தலும் , புலம்பெயர் இலக்கியமும் தமிழரும்!

மீள்பிரசுரம்: ‘கூர் 2011’ மலரிலிருந்து.
புலம் பெயரும் மானுட சமுதாயம் ...[இந்தக் கட்டுரை எழுத்தாளர் தேவகாந்தனை ஆசிரியராகவும், எழுத்தாளர் டானியல் ஜீவாவைத் துணை ஆசிரியராகவும் கொண்டு ஆண்டு தோறும் வெளிவரும் கூர் 2011 கனடாக் கலை இலக்கிய மலருக்காக எழுதப்பட்டது. மேற்படி மலரில் ஒரு சில பிழைகள் ஏற்பட்டு விட்டதன் காரணமாக அவ்விடங்களில் அர்த்தங்கள் மாறுபட்டும், மயக்கம் தருவதாகவும் காணப்படுவதால் இக்கட்டுரையினை இங்கு மீள்பிரசும் செய்கின்றோம். மலரில் வெளியான கட்டுரையில் காணப்படும் முக்கியமான குறைகளாக பந்திகள் ஒருங்கிணைக்கப்பட்டமை, வார்த்தைகள், வசனங்கள் தவறிப் போனமை மற்றும் அடைப்புக் குறிகள் சில இடம் மாறி இடப்பட்டுள்ளமை ஆகியவற்றைக் குறிப்பிடலாம். அத்துடன் புறக்கணிக்கக் கூடிய தவறுகளாக எழுத்து, இலக்கணப் பிழைகள் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். ஆயினும் கூர் 2011 கனடாக் கலை இலக்கிய மலர் மிகவும் காத்திரமானதொரு மலராக வெளிவந்திருக்கின்றது. கனடாத் தமிழ் இலக்கியவுலகில் தவிர்க்க முடியாததொரு தொகுப்பிதழ் ‘கூர்’ கலை இலக்கிய மலரென்று நிச்சயம் கூறலாம். – ஆசிரியர் ]

புலம் பெயரும் மானுட சமுதாயம் ...புலம்பெயர்தலென்பது மானுட இனத்துக்கு மட்டுமேயுரியதொன்றல்ல. இயற்கையில் பறவைகள், மிருகங்கள் மத்தியிலெல்லாம் அவற்றின் இருப்புக்கு ஆதாரமாகப் புலம்பெயர்தலிருப்பதைக் காணலாம். உடல்ரீதியிலான பருவ மாற்றங்கள், காலநிலை மாற்றங்கள், இனவிருத்தி தேவைகளெனப் பல்வேறு காரணங்களுக்காகப் பறவைகள், மிருகங்களெல்லாம் தாம் பிறந்த இடத்திலிருந்து புலம்பெயர்ந்து வருவதெல்லாம் அவற்றின் தப்பிப்பிழைத்தலுக்குரிய தேவைகளின் காரணமாகத்தான். புலம்பெயர்தலென்பது மானுட சமுதாயத்தின் வளர்ச்சிக்கு எப்பொழுதுமே உறுதுணையாகத்தானிருந்து வந்திருக்கிறது. இதனைத்தான் இதுவரையிலான மானுட வரலாறு எமக்கு உணர்த்தி நிற்கிறது. புலம்பெயர்தலுக்குப் பல்வேறு காரணிகள் இருந்த போதிலும் முக்கியமான காரணம் இருத்தலுக்கான தப்பிப் பிழைத்தலே என்று நிச்சயமாகக் கூறலாம். ஆதியில் மானுடர்கள் நாடோடிகளாக புலம்பெயர்ந்தார்கள். உணவுக்காக அவர்கள் அடிக்கடி புலம்பெயர வேண்டிய தேவை ஏற்பட்டது. பின்னர் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் காரணங்கள் மானுடரின் புலம்பெயர்தலை ஊக்குவித்தன. சங்ககாலத்தமிழர் வாழ்வை விபரிக்கும் சங்கத் தமிழ் இலக்கியங்கள் உழைப்புக்காகப் புலம்பெயர்ந்த தலைவனின், அவனை நினைத்து ஏங்கும் தலைவியின் உளநிலையினை விரிவாகவே விளக்கி நிற்கின்றன. அவ்விதம் உழைப்புக்காகப் புலம்பெயராமல் சோம்பி நிற்றலை எள்ளி நகையாடியது அக்காலகட்டச் சமுதாயம். மாதவியிடமிருந்து பிரிந்து மீண்டும் கண்ணகியை நாடிய கோவலன் அவளுடன் மதுரைக்குப் புலம்பெயர்ந்ததை விபரிக்கிறது சிலம்பு. அத்துடன் பல்வேறு காலகட்டங்களில் வேற்று நாட்டவர்கள் வர்த்தகம் நாடிப் புலம்பெயர்ந்து பண்டையத் தமிழ்கத்துக்கு வந்திருப்பதையும் ‘கலம்தரு திருவின் புலம்பெயர் மாக்கள்’ என்று மேலும் விபரிக்கும் (கடல் ஆடு காதை: வரி 130). புலம்பெயர் மாக்கள் என்ற பதத்தினை அப்பொழுதே இளங்கோவடிகள் கையாண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

உண்மையில் புலம்பெயர்தலைக் குறிப்பிடும் diaspora என்னும் சொல்லினை ஆராய்வது இச்சமயத்தில் சிறிது பயன்மிக்கதாக அமையக்கூடும். diaspora என்னும் பெயர்ச்சொல் புலம்பெயர்ந்த சமூகத்தைக் குறிப்பிடுவதற்காக இன்று பொதுவாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த அர்த்தத்தில் இடம் பெயர்தலைக் குறிப்பிடும் migration என்னும் சொல்லும்,  diaspora என்னும் சொல்லும் ஒரே பொருளையே கொண்டுள்ளன. சிதறுதல் அல்லது பரவுதல் என்னும் பொருளைத்தரும் கிரேக்கச் சொல்லான diaspeirein என்னும் சொல்லினை அடியாகக் கொண்டு உருவானதொரு சொல்லே diaspora. மேற்படி ‘டயஸ்போரா’ (diaspora) என்னும் சொல் வரலாற்றுரீதியாகப் பலவேறு சமயங்களில் பல்வேறு காரணங்களில் பாவிக்கப்பட்டு வந்துள்ளது.  கி.மு. ஆறாம் நூற்றாண்டில் இஸ்றவேலிலிருந்து பாபிலோனுக்கு வெளியேற்றப்பட்ட யூதர்களைக் குறிப்பதற்காக இந்த dispora என்னுக் சொல் பாவிக்கப்பட்டுள்ளது.  இன்றைய இஸ்ரேல்குக்கு வெளியே, பாலஸ்தீனத்துக்கு வெளியே காணப்பட்ட யூதச் சமூகங்களைக் குறிப்பிடுவதற்காக இச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இஸ்ரேலுக்கு வெளியே வாழ்ந்த யூதர்களைக் குறிப்பிடுவதற்காக இச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இஸ்ரேலுக்கு வெளியே காணப்பட்ட யூதக் குடியேற்றங்களின் நீட்சியினைக் குறிப்பிடுவதற்கு இச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

புலம்பெயர்தலென்பதென்பதொன்றும் ஈழத்தமிழர்களுக்கு மட்டுமேயுரியதொன்றல்ல. ஆனால் அவ்வப்போது படைப்பாளிகள் சிலர் உதிர்க்கும் கருத்துகள் சிலவற்றைப் பார்க்கும்போது அவ்விதம்தான் எண்ணத் தோன்றுகின்றது. தேசம.நெற் இணையத்தளத்தில் ‘புலம்பெயர் எழுத்தாளர்களே! எங்கள் அவலங்களை உங்கள் இருப்பக்காகப் பயன்படுத்தாதீர்கள் -செங்கை ஆழியான் ‘ என்றொரு கட்டுரை வெளிவந்திருந்தது. அதிலவர் ‘ ஈழத்திலிருந்து இடம்பெயர்ந்து ஆக்குகின்ற எழுத்துக்களை புலம்பெயர் இலக்கியங்கள் என்று அழைக்கின்றோம்’ என்று கூறுவார். அத்துடன் அக்கட்டுரையில் புலம்பெயர்ந்த மக்களையெல்லாம் கோழைகளென்றும், பயத்தினாலும், பொருள் தேடும் நோக்கினாலும் மேற்குநாடுகளுக்குப் புலம்பெயர்ந்தவர்களென்றும் குறிப்பிட்டிருப்பார். இவ்விதமாகப் பலர் மேலோட்டமான கட்டுரைகளை அவ்வப்போது புலம்பெயர் தமிழ் இலக்கியம் பற்றி உதிர்ப்பது வழக்கம்.  இவர் மட்டுமல்ல எழுத்தாளர் ஜெயகாந்தன் ஒருமுறை அதனைப் ‘புலம்பல் இலக்கியம்’ என்றார். மல்லிகை ஆசிரியரும் வாசகரொருவரின் கேள்விக்குப் பதிலளிக்கையில் ‘பிரச்சினைகளுக்குப் பயந்து பிறந்த நாட்டையும் வாழ்ந்த வீட்டையும் இனசனங்களையும் விட்டு பிரதேசம் ஓடும் காகக் கூட்டத்தைப் பற்றி நினைத்துத்தான் நான் அடிக்கடி பச்சாதாபப்படுவதுண்டு’ என்று பதிலளித்திருப்பதாக எழுத்தாளர் முருகபூபதியின் கட்டுரையொன்றில் படித்த ஞாபகம். கம்பவாரிதி ஜெயராஜ், கவிஞர் புதுவை இரத்தினதுரை போன்றோர் கூட புலம்பெயர்ந்தோர் பற்றி கிண்டலடித்திருக்கின்றார்கள். இவர்களெல்லோரும் புலம்பெயர்ந்த மக்கள் கூட்டததைப் பற்றிய கிணற்றுத் தவளைகளாக இருந்ததனால்தான் இவ்விதம் பதிலளித்திருக்கின்றார்கள். மேலும் சிலர் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் தமிழ் இலக்கியத்தைக் குறிப்பிடுவதற்காக மேற்குறிப்பிட்டவாறு ‘புலம்பெயர் இலக்கியம்’ என்று பொதுவாகக் குறிப்பிடுவார்கள். இதுவும் தவறானதொரு பதம். உண்மையில் வரலாற்றினை எடுத்துப் பார்த்தால் காலத்துக் காலம் பலவேறு நாடுகளிலிருந்தும் மக்கள் பலவேறு சமூக, அரசியல், பொருளியல் காரணங்களுக்காகப் புலம்பெயர்ந்திருகின்றார்கள். இவர்களெல்லாரும் காலத்துக் காலம் பலவேறு வடிவங்களில் (செய்யுள், உரைநடை என) புலம்பெயர் இலக்கியங்களைப் படைத்திருக்கின்றார்கள். இந்நிலையில் புலம்பெயர்ந்த தமிழர்கள் படைத்த இலக்கியங்களை ‘புலம்பெயர் தமிழர் இலக்கியங்கள்’ என்றுதான் குறிப்பிட வேண்டும்.

புலம்பெயர்ந்த தமிழர்களைப் பொறுத்தவரையில் ஆரம்பத்தில் ஆயிரக்கணக்கில் புலம்பெயர்ந்தவர்கள் தமிழ் இளைஞர்கள்தான். இவர்கள் புலம்பெயர்ந்ததற்கு முக்கிய காரணம் அங்கு நிலவிய அரசியல்தான். பொருளாதாரமும் காரணங்களிலொன்றுதானெறாலும் முக்கியமான காரணம் அரசியல்ரீதியானதுதான். தமிழ் இளைஞர்களைப் பொறுத்தவரையில் முக்கியமாக இருவிதமான அரசியல் நிலைகளை எதிர்நோக்க வேண்டியிருந்தது. ஒன்று இலங்கைத் தீவின் ஆட்சிக் கட்டிலிலிருந்த இனவாத அரசுகளின் அடக்குமுறை; பயங்கரவாத தடைச் சட்டங்கள் போன்ற கொடிய மானுட உரிமைகளை மறுதலிக்கின்ற சட்டங்கள். எழுபதுகளில், எண்பதுகளில் இலங்கை அரச படைகளினால் படுகொலை செய்யப்பட்ட தமிழ் இளைஞர்கள் பல ஆயிரங்களைத் தாண்டும். பலர் சிறைகளில் அடைக்கப்பட்டார்கள்; இன்னும் பலர் காணாமல் போனார்கள். அன்றைய காலகட்டங்களில் அடைக்கப்பட்ட பல தமிழ் இளைஞர்கள் இன்றும் வெலிக்கடை போன்ற சிறைகளில் வாடுவதொன்றும் இரகசியமான செய்தியல்லவே. அடுத்தது தமிழ் அமைப்புகளுக்கிடையில் நிகழ்ந்த மோதல்கள். அவற்றிலும் ஆயிரக்கணக்கில் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். அவ்வமைப்புகளைச் சேர்ந்த பல தமிழ் இளைஞர்கள் இம்மோதல்கள் காரணமாகவே புலம்பெயர்ந்தார்கள். அதே சமயம் இத்தகைய அமைப்புகளுக்கிடையிலான மோதல்களின் போது வீதிகளில் இளைஞர்களின் உடல்கள் எரியுண்டிருக்கும் சமயம் அங்கிருந்த புலம் பெயராமலிருந்த தமிழர்களில் சிலர் வெற்றிக் களிப்பில் மிதந்தவர்களுக்கு சோடா உடைத்துக் கொடுத்தார்கள். அப்பொழுதெல்லாம் அங்கிருந்த மக்களில் பெரும்பான்மையினர் கொலைசெய்யப்பட்டவர்களுக்காக நீதி கேட்கவில்லை. ஒருவித அச்சத்தில் ஒடுங்கிக் கிடந்தார்கள். அங்கிருந்த எழுத்தாளர்களும் அன்று அச்சத்தில் முடங்கிக் கிடந்தார்கள். அவற்றையெல்லாம் அச்சத்தின் காரணமாகப் படைப்புகளின் பொருளாக ஆக்கப் பயந்திருந்தவர்கள் புலம்பெயர்ந்தவர்களைப் பார்த்து எள்ளி நகையாடியது ஒருவித முரண்நகை. அவ்விதம் எள்ளி நகையாடியவர்களே பின்னர் ஆயிரக்கணக்கில் தமிழ் மக்களை யுத்தங்களில் கொன்று குவித்த இலங்கையின் ஆட்சிக் கட்டிலிலிருந்தவர்களிலிருந்து பல்வேறு விருதுகளை பணிவுடன், குழைந்து நின்று பெற்றது காலத்தின் கோலம். உண்மையில் இவ்விதம் சமூக, அரசியல், பொருளியற் காரணங்களுக்காக மக்கள் அவ்வப்போது புலம்பெயர்வதென்பது ஆச்சரியமானதோ அல்லது வெட்கப்படக் கூடியதோ அல்லவென்பதை வரலாற்றின் அடிப்படையில் புரிந்து கொண்டு ஆய்வுக் கண்ணோட்டத்துடன் ( ஒருவருக்கொருவர் குற்றஞ்சாட்டுவதை விட்டுவிட்டு ) அணுகவேண்டும். எல்லோருமே மானுடர்கள். குற்றமும், குறைகளையும் கொண்ட சாதாரண மானுடர்களென்பதை விளங்கிக்கொண்டு புரிந்து கொண்டு ஆய்வுக் கண்ணோட்டத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். இதுவே சரியான அணுகுமுறையாகவிருக்க முடியும்.  உண்மையில் புலம் பெயருமொருவரின் புலம்பெயர்தலுக்குக் காரணிகளாக அரசியலுமிருக்கும்; பொருளியலுமிருக்கும். இலங்கையிலிருந்து தமிழ் இளைஞர்கள் ஆயிரக்கணக்கில் 1979இல் புலம் பெயர்ந்ததற்கு அன்றைய ‘தம்மிஷ்ட்ட’ ஜனாதிபதி ஜே.ஆர். கொண்டுவந்த ‘பயங்கரவாத தடைச் சட்டம்’  பிரதானமான காரணமாகவிருந்தது. ஆனால் அவ்விதம் புலம்பெயர்ந்தவர்கள் அருகிருந்த இந்தியாவிற்குப் புலம்பெயர்ந்திருக்கலாம். ஆனால் அவர்களில் பெரும்பாலானவர்கள் செல்வச் செழிப்புள்ள மேற்குலகிற்கே புலம்பெயர்ந்தார்கள். அதற்குக் காரணம். நல்லதொரு எதிர்காலத்தை நாடித்தான். அதற்குக் காரணம் பொருளியல்தான். அன்றைய காலகட்டத்தில் பொருளியல் காரணங்களினால் மேற்குலகிற்குப் புலம்பெயர முடியாதவர்களில் பலர் தமிழகத்திற்குப் புலம்பெயர்ந்தார்கள். ஆனால் அவர்களில் பலர் இன்னும் பல சிரமங்களுக்கிடையில் அங்குள்ள அகதி முகாம்களில் வாழும் துர்ப்பாக்கிய நிலையினைத்தானே இன்றும் காண்கின்றோம். ஆயுதங்களுக்கு அஞ்சி ஈழத்திலிருந்த மக்கள் மெளனித்திருந்ததொன்றும் வெட்கப்படக்கூடியதொன்றல்ல. இது பொதுவானதொரு மானுடரின் இயல்புதான். அதுபோல்தான் அங்கிருந்த படைப்பாளிகளும் தம்மீது திணிக்கப்பட்டிருந்த அடக்குமுறைகள் அனைத்துக்கும் எதிராகத் துணிந்து குரல்கொடுக்க முடியாதிருந்தார்கள். அதுவும் வெட்கப்படக்கூடியதல்ல. எல்லோருமே லசந்த விக்கிரமதுங்க போன்றவர்களாகவோ ரிச்சர் டி சொய்சா போன்றவர்களாகவோ அல்லது ‘தராக்கி’ சிவராம் போன்றவர்களாகவோ இருந்து விடுவார்களென்று எதிர்பார்க்க முடியாது. இதுபோல்தான் ஈழத்தில் நிலவிய சமூக , அரசியல் அடக்கு, ஒடுக்குமுறைகள் காரணமாக வெளியேறியவர்கள்,  புதிய சூழலில் கிடைத்த சுதந்திரத்தை வைத்து படைப்புளைப் படைத்ததும், அதுவரை நிலவிய அரசியலை ஆய்வுசெய்ய விழைந்ததும் இயல்பானதொன்றே; வரவேற்கப்படத்தக்கதொன்றே. ஆனால் அவ்விதம் அணுகியவர்களும் அவற்றையும் உணர்ச்சிரீதியில், மாற்றுக்கருத்துகளை ஆக்ரோசத்துடன் கூற விழைந்ததுதான் ஆக்கபூர்வமாக இருக்க வேண்டிய அத்தகைய ஆய்வுகளின் முக்கியத்துவத்தையும் குறைப்பதாகவிருந்து விட்டது. அதே சமயம் புஸ்பராசா போன்ற ஒரு சிலரின் ஆய்வுகள் இந்தவிடயத்தில் ஆரோக்கியமாக அமைந்திருந்ததையும் மறுப்பதற்கில்லை.

புலம் பெயரும் பறவைகள் ...புலம்பெயர் இலக்கியமென்று பொதுவாகப் புலமபெயர்ந்த மக்கள் படைக்கும் இலக்கியங்களை அழைக்கலாமா என்பதில் கூடப் பலவகையான கருத்துகள் நிலவுகின்றன. உண்மையில் புலம்பெயர்ந்த மக்கள் ஒரு குறிப்பிட்ட நாட்டிற்கு மட்டுமே புலம்பெயரவில்லை. பலவேறு நாடுகளுக்குப் புலம்பெயர்ந்தார்கள். ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரையில் ஆஸ்திரேலியாவிலிருந்து வட அமெரிக்காவரைக்கும் பலவேறு சமூக, அரசியல், பொருளியல் மற்றும் பண்பாட்டுச் சூழல் நிலவும் சூழல்களுக்குள் தூக்கியெறியப்பட்டார்கள். இவ்வகையில் அந்தந்த நாடுகளில் கால்களை ஊன்றிக்கொண்டவர்களால் படைக்கப்பட்ட இலக்கியமும் அந்தத தேசங்களுக்குரிய தேசிய இலக்கியங்களில் ஒரு பகுதியே. இந்த வகையில் அந்தத்த நாடுகளில் நிலவும் சமூக, அரசியல், பொருளியல் மற்றும் பண்பாட்டுச் சூழல்களுக்கேற்ப அங்கு படைக்கப்படும் இலக்கியங்களும் விளங்கின; விளங்கும்.  இதனால்தான் ஈழத்துக் கலை, இலக்கிய விமர்சகர்களிலொருவரான கே.எஸ்.சிவகுமாரன் அடிக்கடி  ‘புலம் பெயர்ந்தோர் இலக்கியம்’ என்று கூறுவது பொருத்தமானதாகயில்லை. ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து வெவ்வேறு நாடுகளில் பல இளைஞர்கள் எழுதி வந்தாலும் அவற்றை ஈழத்து இலக்கியத்தின் ஒரு கூறாக நாம் எடுத்துக் கொள்வது சரியில்லை என்று நான் நினைக்கிறேன். அவர்கள் தமிழ் மொழியில் எழுதினாலும் அவர்கள் வெளிப்படுத்தும் அனுபவங்களும், சிந்தனைகளும் அவர்கள் புலம்பெயர்ந்து வாழும் இடங்களின் சித்திரிப்பாகவே நாம் கொள்ள வேண்டும். உதாரணமாக, பிரான்சிலிருந்து ஒருவர் தமது பிரெஞ்சிய அனுபவங்களையோ, அங்கிருந்து கொண்டு ஈழத்துச் சூழல் நினைவுகளையோ எழுத்தில் வடித்தால் அந்த எழுத்துக்களை ஈழத்துப் புலம்பெயர்ந்தோர் இலக்கியமென்று கூறுவதை விட ‘பிரெஞ்சு நாட்டு தமிழிலக்கியம்’ என்று கூறுவதே பொருத்தமானது. ஆங்கில மொழியை வெவ்வேறு நாடுகளில் ஆக்க இலக்கியத்திற்குப் பயன்படுத்தப்படும்பொழுது அந்த இலக்கியங்கள் அந்தந்த நாட்டு ஆங்கில இலக்கியங்களாகவே கருதப்படுகிறது. அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, கரீபியத் தீவுகள், நியூசிலாந்து, ஆப்பிரிக்கா கண்டத்தின் பல்வேறு நாடுகள், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலிருந்து குறிப்பிடக்கூடிய பல எழுத்தாளர்கள், ஆங்கிலேயரைப் போன்றே அற்புதமான ஆங்கில இலக்கியப் படைப்புகளைத் தந்துள்ளனர். இலங்கையில் பிறந்தாலும் ‘மைக்கல் ஒண்டாட்ஜி’, ‘ஷ்யாம் செல்வதுரை’ போன்றவர்கள் கனடா ஆங்கிலேய இலக்கியத் துறைக்கு வளம் சேர்த்துள்ளமையை இங்கு நினைவூட்டலாம்’ என்று கூறுவதைப் புறக்கணிக்க முடியாது. அதுவே சரியானதொரு நிலைப்பாடாகவும் தெரிகிறது.  இதனைப் புலம்பெயர்ந்த தமிழர்களின் இலக்கியம் பற்றி கட்டுரைகள், ஆய்வுக் கட்டுரைகள் எழுதும் அனைவரும் அவதானத்திலெடுத்துக் கொள்வது நல்லது.  அண்மைக் காலமாக சு. குணேஸ்வரன், டிசெ தமிழன் போன்றவர்கள் சிறிது ஆழமான கட்டுரைகளை இந்த விடயத்தில் எழுதி வருவதைக் காண்கின்றோம். ஆயினும் இவர்களும் ‘புலம்பெயர்ந்தோ இலக்கியம்’ என்ற பொதுவான கண்ணோட்டத்தில்தான் பலவேறு நாடுகளிலும் பரந்து வாழ்ந்துவரும் தமிழர்களால் படைக்கப்படும் தமிழ் இலக்கியம் பற்றிக் கூறி வருகின்றார்கள். இது புலம் பெயர்ந்த தமிழர்கள் படைக்கும் தமிழ் இலக்கியத்தின் முழுப் பரிமாணத்தையும் காட்டுவதாக அமைந்து விடாது. இதற்கு முக்கிய காரணிகளிலொன்று பலவேறு நாடுகளில் வாழும் தமிழர்கள் படைக்கும் இலக்கியப் படைப்புகள் பற்றிய விபரங்கள், படைப்புகள் இவர்களுக்குப் போதிய அளவில் கிடைப்பதில்லை. மேலும் இவர்கள் தமக்குக் கிடைக்கும் அச்சுருவில் வெளியான நூல்களை மட்டுமே பெரும்பாலும் கவனத்தில் எடுத்துக் கொள்கின்றார்கள் (ஆனால் தமிழகத்தைப் பொறுத்தவரையில், தமிழகப் பல்கலைக் கழக மட்டங்களில் ஆய்வுகளை மேற்கொள்ளும் மாணவர்கள் கணித்தமிழின் முக்கியத்துவத்தையும் ஏற்றுக்கொண்டு அவற்றையும் , அவற்றில் வெளிவந்த படைப்புகளையும் தமது ஆய்வுகளில் பாவித்துக் கொள்கின்றார்கள். ஈழத்தைப் பொறுத்தவரையில் பல்கலைக்கழக மட்டத்திலுள்ளவர்களும் தமக்குக் கிடைக்கும் நூல்களின் அடிப்படையில் மட்டும்தான் ஆய்வுகளை மேற்கொள்கின்றார்கள். கணித்தமிழின் முக்கியத்துவத்தை இவர்கள் உணர்ந்ததாக இன்னும் தெரியவில்லை. இந்நிலையின் இவர்கள் மாற்றிக் கொள்வது தமிழ் இலக்கிய ஆய்வுகளை மேளும் செழுமைப்படுத்துவதாக அமைந்துவிடும்.) மேலும் பல்வேறு நாடுகளுக்கும் இடம்பெயர்ந்து, நிலையூன்றி அந்தந்த நாடுகளில் இலக்கியம் படைக்கும் தமிழ் எழுத்தாளர்கள் மத்தியிலும் படைப்புகளை மையமாகவைத்து ‘எப்பொருள் யார்வாய்க் கேட்பினும்  அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு’ என்னும் பக்குவம் நிலவாத நிலைதான் காணப்படுகிறது. ஒருவருக்கொருவர் தமக்கென்று குழுமங்களை உருவாக்கி, தாம் சொல்வதே சரியென்னும் தொனியில் செய்ற்படும் பலரையே காண்கின்றோம். கனடாவிலிருந்து அண்மையில் இலங்கை சென்ற பெருங்கவிஞர் ஒருவர் , கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் ‘கனடாத் தமிழ் இலக்கியம்’ பற்றி நிகழ்த்திய உரையினை ‘ஞானம்’ இதழொன்றில் வாசித்தது ஞாபகத்திற்கு வருகிறது. எந்தவித ஆய்வுக் கண்ணோட்டமுமின்றி கனடாத் தமிழ் இலக்கியம் பற்றி அவர் குறிப்பிட்டிருந்தார். இதனை வாசிக்குமொருவர் அதனடிப்படையில் எதிர்காலத்தில் இன்னுமொரு ஆய்வுக் கட்டுரையினைப் படைத்து விடுவார். சு. குணேஸ்வரன் போன்றவர்களின் கட்டுரைகள் ஆழமாக இருந்தாலும் அவர்களும் பொதுவானரீதியில் ஆய்வுக்கட்டுரைகளைப் படைக்கின்றார்கள். அவற்றை வாசிக்கும்போது அவற்றை ஆக்கியவர்கள் நிறைந்த எண்ணிக்கையில் படைப்புகளைப் படித்துவிட்டுக் கூறுவதுபோன்றதொரு தொனிதான் அக்க்ட்டுரைகளில் தென்படுகிறது. உண்மையில் இவர்கள் தமக்குக் கிடைத்த ஒருசில படைப்புகளை வாசித்துவிட்டுத்தான் இவ்விதம் கூறுகின்றார்களென்பதே உண்மை. மேலும் தமிழகப் படைப்பாளிகளின் பின்னால் (அதிலும் குழுரீதியில்தான்) ஒளிந்து நின்றுகொண்டு தமது படைப்புகளைக் கொண்டுவருவதற்கு முனையும் பலரையும் காணலாம். (படைப்பாளிகள், படைக்காத கலை, இலக்கிய ஆர்வலர்கள் மற்றும் படைப்புகளை அறிமுகம் செய்யும் காவிகள் எனப் பலர்). புலம்பெயர் இலக்கியம் பற்றி ஆராய்ந்து ஆய்வுக்கட்டுரைகள் எழுத விளையும் ஆய்வாளர்கள் பொதுவாக எழுதுவதைத் தவிர்த்துவிட்டு ஒரு குறிப்பிட்ட நாட்டிற்குரிய புலம்பெயர் தமிழ் இலக்கியம் பற்றித் தேவையான தரவுகளைச் சேகரித்துவிட்டு அக்குறிப்பிட்ட நாட்டிற்குரிய தமிழ் இலக்கியம் பற்றி எழுதுவது ஒருவிதத்தில் பயன்தர வல்லது. உதாரணமாக ஆஸ்திரேலியாத் தமிழ் இலக்கியம் பற்றி விரிவான கட்டுரையொன்றினை, விரிவாக எழுதலாம். இதுபோல் கனடா, அமெரிக்கா, பிரான்சு, ஜேர்மனி, நோர்வே… எனத் தனித்தனி ஆய்வுக்கட்டுரைகள எழுதலாம். இதற்கு அந்தந்த நாடுகளில் வசிக்கும் படைப்பாளிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் ஆர்வலர்களெனப் பலருடன் தொடர்புகொண்டு பரந்த அளவில் தகவல்களைக் காய்த்தல் உவத்தலின்றிச் சேகரிக்க வேண்டும். இவ்விதமாக ஆவணங்கள் அதிக அளவில் சேகரிக்கப்படும்பொழுது,  ஆய்வுக்கட்டுரைகள் அதிக அளவில் வரும்பொழுது புலம்பெயர் தமிழ் இலக்கியம் பற்றிய விரிவான ஆய்வுக் கட்டுரைகள் வெளிவரும் சாத்தியங்களுள்ளன.

இன்னுமொரு விடயத்தைப் பற்றிப் புலம்பெயர் தமிழ் இலக்கியம் பற்றிப் புலம்புபவர்கள் கூறும் விடயங்களிலொன்று புலம்பெயர் தமிழ் இலக்கியப் படைப்புகள் கூறும் பொருள் பற்றியது. முன்னர் குறிப்பிட்ட செங்கை ஆழியானின் கட்டுரையினை ஒருமுறை இதற்குதாரணமாகப் பார்ப்பது பொருத்தமானது. புலம்பெயர்ந்த எழுத்தாளர்கள் இன்னும் தமது பழைய (பிறந்த மண்ணில் அவர்களடைந்த) அனுபவங்களை எழுதிக் கொண்டிருக்கின்றார்கள். மற்றது அவர்கள் புலம்பெயர்ந்த பின்னர் பார்வையாளர்களாக இருந்து கொண்டு ‘பார்வையாளர்களின் குறிப்புகளை’ எழுதிக் கொண்டிருக்கின்றார்கள்:

‘ அவர்கள் ஈழம் பற்றி எழுதியவை பார்வையாளர்களின் குறிப்புகளாக இருக்கின்றன. ஈழத்தின் துயரங்களை, இன்றைய வாழ்வியலை இத்துயரங்களுக்கிடையில் வாழாமல் பதிவசெய்ய முடியாது. பட்டினி தேசமாக மாறிவிட்ட யாழ்ப்பாணத்தின் துயரங்கள் தெரியுமா? தீ விட்டெரியும் கிழக்கின் அவலங்களைக் கற்பனையில் காணமுடியுமா? நாசி முகாம்களுக்கு இழுத்துச் செல்வது போன்ற அவலங்களை அனுபவிக்க முடியுமா? வீதிகளில் அவமே செத்துக் கிடக்கும் இளைஞர்களின் சடலங்கள் வெளியிடும் கனவுகளை உணர முடியுமா?’ ( கட்டுரை: ‘புலம்பெயர் எழுத்தாளர்களே! எங்கள் அவலங்களை உங்கள் இருப்பக்காகப் பயன்படுத்தாதீர்கள்!’ – செங்கை ஆழியான் )

உண்மையில் புலம்பெயர் தமிழ் எழுத்தாளர்களால் ஊரில் வாழும், வாழ்ந்த சொந்த பந்தங்களின் நிலையினை வெளிநாட்டிலிருந்தே உணரமுடியாதா? அவர்களது உறவுகளில் பலர் செங்கை ஆழியான் மேற்குறிப்பிட்ட பல்வேறு வகையான துன்பங்களைத் துயரங்களை உணர்வதற்கு அவர்கள் ஊருக்குததான் போக வேண்டுமா? அவர்களது உறவுகளுக்கு ஏற்படும் துயரங்கள், சோகங்கள் இவர்களையும் நேரடியாகப் பாதிக்கின்றன. ஏனெனில் இவர்கள் அவர்களுக்கு அந்நியரல்லர். அவர்கள் இவர்களது உறவுகள். மண்ணை, உறவுகளையெல்லாம் பிரிந்து , அந்நிய மண்ணில் பல்வேறு மன உளைச்சல்களுக்கு மத்தியில் வாழும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழ்ப் படைப்பாளிகளால் நிச்சயமாக மண்ணின் நிலையினைப் புரிந்து கொள்ள முடியும். அவர்கள் தங்கள் உளவியற் பாதிப்பினைத்தான் எழுத்தில் வடிக்கின்றார்கள். அவை வெறும் பார்வையாளர்களின் குறிப்புகள் மட்டுமேயென ஒதுக்கி விடுவது அவ்வளவு இலகுவானதல்ல.  ஏனெனில் புலம்பெயர்ந்த தமிழர்களொன்றும் ஆகாயத்தின் மூலம் வேற்று நாடுகளுக்குக் குதித்துக் குடியேறியவர்களல்லர். அவர்களும் இதே மண்ணில் ஒருகாலத்தில் வாழ்ந்தவர்கள்தான். இது போன்ற அனுபவங்களை ஏதோ ஒருவகையில் அனுபவித்தவர்கள்தான். எழுபதுகளில், எண்பதுகளில் புலம்பெயர்ந்தவர்களில் பலர் பெரும்பாலும் அன்றைய சூழலில் நிலவிய அரசியல் நிலைமைகளால் ஏதோ ஒருவிதத்தில் பாதிக்கப்பட்டவர்கள்தான். தமிழர்களென்றரீதியிலும் பாதிக்கப்பட்டவர்கள்தான். இந்திய, இலங்கை அரசுகளின் யுத்தங்களில் சிக்குண்டு பாதிக்கப்பட்டுப் புலம்பெயர்ந்தவர்கள்தான். அன்றிலிருந்து இன்றுவரையில் (1979இலிருந்து இன்றுவரையில்) மக்கள் புலம்பெயர்ந்து கொண்டுதானிருக்கின்றார்கள். இன்றுள்ளவர்கள், சென்ற சில வருடங்களில் நிலவிய கொடிய போர்ச்சூழலில் அகப்பட்டு நிலைகுலைந்தவர்களைப் போல்தான், இந்தியப் படைகளுக்கும், விடுதலைப் புலிகளுக்குமிடையில் ஏற்பட்ட யுத்தகாலத்தில் நிலவிய சூழலிருந்தது. தொண்ணூறுகளில் இலங்கை அரசுகளுடனான யுத்தங்களின்போதும் இதுபோன்ற அழிவுகள்தான் நிகழ்ந்தன. அளவின் அடிப்படையில் மாறுதலிருக்கலாம். ஆனால் நிகழ்ந்த துயரங்கள், சோகங்களெல்லாம் ஒரே விதமானவைதான். பாதிப்புகள் ஒரே விதமானவைதான். இது போல்தான் அமைப்புகளுக்கிடையில் நடைபெற்ற மோதல்களில், உள்முரண்பாடுகளில் பாதிக்கப்பட்ட இளம் சமுதாயத்தினர் நிலையும். ஆக புலம்பெயர்ந்து வெளிநாடுகளுக்குப் போனவர்களெல்லாரும் ஒரே காலகட்டத்தில் நாட்டைவிட்டு ஓடியவர்களல்லர். அதே சமயம் ஓடிய ஒவ்வொருவரும் ஏதோவொரு பாதிப்பினை உள்வாங்கியதனால்தான் பிறந்த மண்ணைவிட்டு ஓடவேண்டிய சூழலேற்பட்டது. அந்த வலி,  துயரம் அவர்களிறக்கும் வரையில் அவர்களை விட்டுப் போகப்போவதில்லை. நாட்டில் உண்மையானதொரு அமைதியான சூழல் திரும்பும்வரையில் இப்படியேதான் அவர்கள் திரிசங்கு வாழ்க்கை (அங்குமிங்குமாய், ஓரிடத்திலும் நிலைக்க முடியாத அலைவு வாழ்க்கை) வாழப்போகின்றார்கள். அவர்கள் படைப்புகளில் தொனிக்கும் குரல்களை வெறுமனே பார்வையாளர்களின் குறிப்புகளாக ஒதுக்கிவிட முடியாது. ஏனெனில் அவர்கள் பார்வையாளர்களல்லர். அவர்கள் அன்னிய மண்ணிலிருந்தாலும் பிறந்த மண் பற்றிய கனவுகளுடன், அனுபவங்களுடன், வலியுடன் வாழ்பவர்கள் அவர்கள். அவர்களது (புலம்பெயர்ந்த முதலாவது தலைமுறையினரது)  குடும்பங்கள் அன்னிய மண்வரையில் நீண்டு விட்டிருக்கின்றன. அவர்களை அவர்களது குடும்பங்களிடமிருந்து பிரிப்பது சாத்தியமற்றது.

மேலும் மேற்படி கட்டுரையில் செங்கை ஆழியான் பின்வருமாறும் கூறுவார்: ‘இன்னமும் எவ்வளவு காலத்திற்குத் தான் கேள்வி ஞானங்களையும் தம் முன்னைய அனுபவங்களையும் வைத்து எம்மவரின் தாங்கொணாத் துயரங்களைப் புனைகதைகளாகவும் கவிதைகளாகவும் வடித்துத் தமிழ்நாட்டின் அப்ளாசைப் பெறப்போகிறார்கள்? அவை ஈழத்துத் தமிழ் இலக்கியங்களல்ல. ஈழம் பற்றிய தமிழ் இலக்கியங்கள். அது அ.முத்துலிங்கத்திற்கும் பொருந்தும். அதே போல எஸ்.பொன்னுத்துரை, வி.கந்தவனம், அரவிந்தன், ஷோபாசக்தி, ஜெயபாலன், சேரன் முதலான ஆற்றல் வாய்ந்த புலம்பெயர் இலக்கியம் படைக்கும் அனைவருக்கும் பொருந்தும்’

இதுவுமொரு தர்க்கநியாயமற்ற கூற்று. மேற்படி கூற்றில் ஒருவித எள்ளலும், காழ்ப்புணர்ச்சியும் குடிகொண்டிருப்பதுபோல் தென்பட்டால் அதற்குக் காரணம் மேலுள்ளவாறு எழுதிய கட்டுரையாளரே. முதலில் இன்னமும் எவ்வளவுகாலத்திற்குத் தான் ‘கேள்வி ஞானங்களையும் தம் முன்னைய அனுபவங்களையும் வைத்து எம்மவரின் தாங்கொணாத் துயரங்களைப் புனைகதைகளாகவும் கவிதைகளாகவும் வடித்துத் தமிழ்நாட்டின் அப்ளாசைப் பெறப்போகிறார்கள்’ என்றால் இருக்கும்வரையிலென்றுதான் கூறவேண்டும். ஏனெனில் பொதுவாகப் புலம்பெயர்ந்த எழுத்தாளர்களின் படைப்புகளில் காணப்படும் பொதுவான பண்புகளில் சில: இழந்த , சொந்த மண்மீதான் கழிவிரக்கம்; இழந்ததை எண்ணிய ஏக்கம். அவர்களது படைப்புகளில் சொந்த மண்மீதான ஏக்கம், அங்கு நடைபெறும் நிலைமைகள் பற்றிய சிந்தனைகள் மற்றும் அவற்றின் விளைவான படைப்புகள் ஆகியன இயல்பான உணர்வுகள் , செயல்களே.  இதற்குதாரங்களாக அடிக்கடி பலர் குறிப்பிடுவது சேரன், ஜெயபாலனது இரு கவிதைகளைத்தான்.

“ஊரான ஊரிழந்தோம்…
ஒற்றைப்பனைத் தோப்பிழந்தோம்.
பாராள வந்தவரே!
உம்மையும் தான் நாமிழந்தோம்.
கடலே நீ இரையாதே!
காற்றே நீ வீசாதே!
நிலவே நீ அவியாதே!
நெஞ்சமெல்லாம் தீயாச்சே!
ஆற்றோரம் மணல் மேடு.
மணல் மேட்டில் பட்டிபூ!
பட்டிப் பூ பூத்திருக்கு.
யார் வரவைக் காத்திருக்கு” என்னும் சேரனது கவிதையொன்றில் வரும் வரிகள் இழந்த மண்மீதான கழிவிரக்கத்தையும், சோகத்தையும் அவற்றாலேற்பட்ட பாதிப்புகளையும் அற்புதமாக வெளிப்படுத்தும்:
 
” யாழ்நகரில் என் பையன்
கொழும்பில் என் பெண்டாட்டி
வன்னியில் என் தந்தை
தள்ளாத வயதினிலே
தமிழ் நாட்டில் என் அம்மா
சுற்றம் பிராங்போட்டில்
ஒரு சகோதரியோ ப்ரான்ஸ் நாட்டில்
நானோ
வழிதவறி அலாஸ்கா
வந்து விட்ட ஒட்டகம்போல்
ஒஸ்லோவில்”

என்னும் ஜெயபாலனின் வரிகள்  உலகின் பல்வேறு திக்குகளுக்குமாகத் தூக்கியெறியப்பட்ட ஈழத்தமிழர்கள் எந்தவிதமான சட்டரீதியான குடியுரிமை ஆவணங்களுமின்றி, எதிர்காலம் பற்றி நிச்சயமற்ற நிலையில், கனவுகளுடனும், மண் மீதான கழிவிரக்கங்களுடன், அந்தந்த நாடுகளில் நிலவிய சட்டதிட்டங்கள் சுமத்திய சுமைகளின் கனத்துடன் வாழும் வாழ்க்கையினை விபரிப்பது. மேலுள்ள கவிதை வரிகளைப் பார்த்தால் இன்னுமொரு விடயமும் புரியும். யாழ்நகரில் பையன்; கொழும்பில் பெண்டாட்டி; வன்னியில் தந்தை; தள்ளாத வயதில் பிராங்போட்டில் அம்மா;  சகோதரியோ பிரான்ஸ் நாட்டில்; நானோ வழிதவறி அலாஸ்கா வந்துவிட்ட ஒட்டகமாக ஒஸ்லோவில். இவ்விதமாக அகதியொருவரின் குடும்பம் பல்வேறு நாடுகளுக்கும் பரந்திருக்கும் பெரியதொரு குடும்பமாகப் பரிணமித்திருக்கிறது. இந்நிலையில் ஊரிலுள்ள ஒருவரின் துயரமும், சோகமும் அகதியின் துயரமும்தான். ஊரிலுள்ளவர்கள் அடையும் பாதிப்பு இவரையும் பாதிக்கிறது. மேலும் பல் ஊடகங்கள் வளர்ந்து வாழ்வின் பிரிக்க முடியாத அங்கங்களாக ஆகிவிட்ட நிலையில் தகவல்கள் எவ்வளவு விரைவில் காணொளிக்காட்சிகளுடன் உலகெங்கும் பரவிவிடுகின்றன. இவையெல்லாம் அகதியொருவரைப் பாதிக்கத்தான் செய்யும். அந்நிலையில் அவற்றை வெறும் வரிகளாக ஒதுக்கிவிடமுடியுமா? உண்மையில் வேற்றுநாட்டைச் சேர்ந்த புலம்பெயர்ந்த எழுத்தாளர்களின் படைப்புகள் பல (குறிப்பாக யூதர்கள் , பால்ஸ்தீனர்கள், ஈழத்தமிழர்கள், ஆபிரிக்கர்கள் போன்றோரின் ஆகியோரின் ) சொந்த அனுபங்களை வெளிப்படுத்தும் படைப்புகளே.  உண்மையில் பல்வேறு காலகட்டங்களில் மானுடர்கள் பல்வேறு காரணங்களுக்காகப் புலம்பெயர்ந்திருக்கின்றார்கள். வியாபார நிமித்தம் , பொருளியற்காரணங்களுக்காக தமது இராச்சியத்தினை விரிவுபடுத்துவதற்காக (நெப்போலியன், இராசஇராசசோழன், அலெக்ஸாண்டர், போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் மற்றும் ஆங்கிலேயர் போன்று) , நாட்டில் நிலவிய, நிலவும் அரசியல் காரணங்களுக்காக (ஆபிரிக்கர்கள்,  ஈழத் தமிழர்கள், ஆப்கானிஸ்தானியர்கள், ஈராக்கியர், செஸ்னியர்களென )..  இவ்விதமாகப் பல்வேறு காரணிகள் மானுடரின் புலம்பெயர்தலுக்கு இருந்தபோதிலும் இவர்கள் அனைவருக்கும் இருக்ககூடியதொரு பொதுவான இயல்பாக இழந்த மண்ணுடனான கழிவிரக்கத்தையும், அது தரும் சோகத்தினையும் கூறலாம்.

உண்மையில் புலம்பெயர் தமிழர் இலக்கியம் பற்றிய ஆய்வுகள் முறையாக, மேம்போக்காக அல்லாமல், செய்ய வேண்டியது அவசியம். அதற்கு வெறும் கிடைக்கும் ஒரு சில படைப்புகளை மட்டும் ஒரு மாதிரியாக வைத்துகொண்டு ஆய்வுகள் செய்யும் போக்கினைக் கைவிட்டு, ஆழமான தேடுதலுடன் கிடைக்கக் கூடிய தரவுகளைத் (தனிப்பட்டவர்கள் தொடக்கம் பல் ஊடகங்கள் வரையில்) திரட்டி விட்டு, அப்படைப்புகளை நன்கு வாசித்து,  புலம்பெயர்ந்து வாழும், வாழ்ந்த மானுடர்களின் புலம்பெயர் இலக்கியங்கள் (புனைவுகள் / அபுனைவுகள்) கூறும் பொருள் பற்றிய ஞானத்தினை நன்கு விருத்தி செய்து ஆய்வுகள் செய்வதவசியம். அவ்விதம் செய்வதன்மூலம் புலம்பெயர் தமிழர் இலக்கியத்தின் உண்மையான பண்பினை ஓரளவாவது அறிந்து கொள்ளக் கூடியதாயிருக்கும்.

ngiri2704@rogers.com