இன்று ‘வாட்ஸ் அப்’பில் என் கடைசித்தங்கை தேவகி ஒரு செய்தியினைப் பகிர்ந்துகொண்டிருந்தார். அது முன்னாள் யாழ் நகர மேயர் இராசா விசுவநாதன் அவர்களின் மரணச்செய்தி. இவரது மரணத்தால் துயருறும் அனைவர்தம் துயரிலும் நானும் என் அம்மா சார்பில் கலந்துகொள்கின்றேன். அம்மா சார்பில் என்று கூறுவதற்குக் காரணமுண்டு. முன்னாள் மேயர் இராசா விசுவநாதனின் காலத்து மாநகரசபை நிர்வாகம் தனித்துவம் வாய்ந்ததாக நான் எண்ணவில்லை. உண்மையில் அக்காலகட்டத்தில் யாழ் மாநகரத்திலுள்ள பழமையின் சின்னங்களைப்பேணும் அவசியம் பற்றிய கட்டுரை ஒன்றினை ஈழநாடு (யாழ்ப்பாணம்) பத்திரிகையில் எழுதினேன். முழுப்பக்க அக்கட்டுரையை ஈழநாடு வாரமலர் முக்கியத்துவம் கொடுத்துப்பிரசுரித்திருந்தது. அதில் யாழ் பழைய சந்தையிலிருந்த கங்கா சத்திரத்தைப் பாதுகாப்பதன் அவசியம் பற்றியும் வலியுறுத்தியிருந்தேன். ஆனால் யாழ் மாநகரசபை அது பற்றிக் கவனத்திலெடுத்திருக்கவில்லை. அக்கட்டுரை வெளியாகிச் சிறிது காலத்திலேயே அக்கட்டடம் உடைத்தழிக்கப்பட்டது.
ஆனால் திரு.இராசா விசுவநாதன் அவர்கள்மீது அவரது அரசியலுக்கப்பால் எனக்கு மிகுந்த மரியாதையுண்டு. அவர் அக்காலகட்டத்தில் வெற்றிகரமான வழக்கறிஞராக விளங்கினார். என்பதற்காக அல்ல. பின். அம்மாவின் பால்ய காலத்திலிருந்து அவரது இறுதிவரை அவரது அன்புக்குரியவர்களாக விளங்கியவர்கள் விசுவநாதன் தம்பதியினர் என்பதற்காக. அம்மா யாழ் இந்து மகளிர் கல்லூரியில் ஆசிரியையாகப்பணி புரிந்த காலத்திலும் அவருக்குப் பிரியமாக இருந்த சிநேகிதிகளாக அவருக்குச் சிலர் இருந்தனர். அவர்களில் முக்கியமானவர் திருமதி விசுவநாதன். ‘விசுவநாதன் டீச்சர்’ என்றறியப்பட்ட இவரது பெயர் தவமணி. அவ்வப்போது அம்மா அவர்களிருவரைப்பற்றியும் எம்முடன் அவர்களுடனான தனது அனுபவங்களையும் பகிர்ந்துகொள்வதுண்டு. என் பதின்ம வயதுகளில் என் தந்தையாரை இழந்தபோது அச்செய்தியினை அறிந்து உடனடியாகவே மரணச்சடங்கில் வந்து கலந்துகொண்ட திருமதி விசுவநாதன் அச்சமயம் அம்மாவுக்கு மிகவும் உறுதுணையாகவிருந்து அம்மாவின், எங்களின் துயரத்தைப் பகிர்ந்துகொண்டார். அம்மாவின் துயரைத்தாளாமல் அவரும் அழுத அக்காட்சி இன்னும் நினைவிலிருக்கிறது.
வழக்கறிஞரான திரு. விசுவநாதனின் உதவியை நானும் ஒருமுறை பெற்றிருக்கின்றேன். யாழ் பொதுசன நூலகத்தில் காணாமல் போன எனது புது ரலி சைக்கிளைத்திருடியவன் அகப்பட்டபோது. அவ்வழக்கு சம்பந்தமாக எனக்காக யாழ் நீதிமன்றத்தில் ஆஜராகியவர் திரு. விசுவநாதன் அவர்களே. காலை முழுவதும் என் வழக்கு எடுக்கப்படாததால் தன் ஜூனியரான சட்டத்தரணியொருவரிடம் என்னைக் கவனிக்கும்படி கூறிவிட்டு அவர் சென்று விட்டார். அந்த ஜுனியர் சட்டத்தரணியே பின்னாளில் யாழ் பாராளுமன்ற உறுப்பினராக விளங்கிய யோகேஸ்வரன். இந்த சைக்கிள் திருட்டு பற்றி ஏற்கனவே என் முகநூற் பதிவின்றில் எழுதியிருக்கின்றேன். அவ்விதம் திரு. விசுவநாதன் எனக்காக ஆஜராகியதற்குக் காரணம் அம்மா. வழக்குக்கு முதல்நாள் என்னை அவர் வீட்டுக்கு அழைத்துச்சென்ற அம்மா சைக்கிள் திருட்டு வழக்கு பற்றிக் கூறியதும் , அவர் தயங்காமல் அதனைக் கவனித்துக்கொள்வதாகக் கூறினார். இதற்காக ஒருவிதத்தில் அவருக்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.
திரு. விசுவநாதனின் கூடப்பிறந்த தம்பிதான் யாழ் இந்துக்கல்லூரி ஆசிரியர் மகேந்திரன். அவர் என்னுடைய எட்டாம் வகுப்பு ஆசிரியராகவிருந்தவர். இவருக்கு பிள்ளைகள் நால்வர். மூத்த மகன் வி. உருத்திரகுமாரன் இவர் தமிழர் அரசியலில் இன்று நன்கறியப்பட்டவர். இவரும் சட்டத்தரணியே. அடுத்தவர் சிவகுமார். பேராதனைப் பல்கலைக்கழகப் பொறியியற் பட்டதாரி. சிவகுமார் யாழ் மத்திய கல்லூரி மாணவர். சிறிது காலம் என்னுடன் டியூசன் வகுப்பொன்றுக்கு வந்திருந்தார். மூன்றாவது பெண்பிள்ளை. பெயர் தர்மவதி. மருத்துவர். அடுத்தவர் கிருஷ்ணகுமார்.
தொண்ணூறுகளின் நடுப்பகுதியில் அல்லது இறுதிப்பகுதியில் என்று நினைக்கின்றேன் ஒரு முறை விசுவநாதன் தம்பதியினர் ‘டொராண்டோ’வுக்கு விஜயம் செய்திருந்தனர். அப்பொழுது மறக்காமல் அவர்கள் அம்மாவை வந்து சந்தித்ததுடன்., அக்காலகட்டத்தில் நடைபற்ற யாழ் இந்துமகளிர் கல்லூரியின்கனடாச்சங்க நிகழ்வொன்றுக்கும் அழைத்துச் சென்றிருந்தனர். இங்குள்ள புகைப்படம் அவர்கள் அம்மாவை அவரிருப்பிடத்தில் வந்து சந்தித்தபொழுது எடுத்த புகைப்படம். அம்மாவிடமிருந்த புகைப்படம். இப்படத்தில் இடமிருந்து வலமாக இருப்பவர்கள்: யாழ் இந்துமகளிர் கல்லூர் முன்னாள் ஆசிரியை திருமதி மகேஸ் கந்தையா, அம்மா (திருமதி நவரத்தினம் , ‘மங்கை’), திருமதி விசுவநாதன் & திரு . விசுவநாதன். இப்புகைப்படத்தில் அம்மாவின் முகத்தில் தென்படும் மலர்ச்சி அவருக்கு அத்தம்பதியினர் மீதிருந்த அன்பினை வெளிப்படுத்தும். அம்மா இருந்திருந்தால் நிச்சயம் திரு.இராசா விசுவநாதன் அவர்களின் மறைவுச்செய்தி கேட்டு வருந்தியிருப்பார். அம்மாவின் சார்பில், தனிப்பட்டரீதியில் கணவரை இழந்து வாடும் திருமதி விசுவநாதன் அவர்களின் , குடும்பத்தின் துயரில் நாமும் பங்கு கொள்கின்றோம்.
யாழ் முன்னாள் ‘மேயர்’ விசுவநாதன் பற்றிய மேலதிகத்தகவல்கள்:
சென்றவருடம் , 23.06.2019 அன்று , ஆஸ்திரேலியாவிலுள்ள அவரது இருப்பிடத்தில் ஒரு நேர்காணல் நடைபெற்றது. அதை நடத்தியவர்கள் குணரட்னம் பார்த்திபன் அவர்கள். காணொளியினை எடுத்தவர்கள் பி.தவபாலன் , அபிராம் எஸ்ஜி பார்த்திபன் ஆகியோர். இக்காணொளிக்கான இணைய இணைப்பு: https://www.youtube.com/watch?v=uwR5iKt3TsQ
இக்காணொளி திரு. விசுவநாதன் அவர்களின் தொண்ணூற்றி மூன்றாவது வயதில் இருந்தபோது எடுக்கப்பட்டது. வயதுக்குரிய குழந்தைத்தனம், தடுமாற்றம் (சில விடயங்களில்) இருந்தாலும், பல விடயங்களை நினைவு கூர்கின்றார். தெளிவாக நினைவு கூர்கின்றார். இக்காணொளி அவரைப்பற்றி, அவரது குடும்பத்தைப்பற்றிப் பல தகவல்களைத் தருகின்றன. அவ்வகையில் அரசியல் முக்கியத்துவமும், ஆவணச்சிறப்பும் மிக்க காணொளி. காணொளியில் கூறப்பட்டுள்ள விடயங்களில் முக்கியமான சிலவற்றைக் கீழே தொகுத்துத்தந்துள்ளேன்.
வட்டுக்கோட்டை அடைக்கலம் தோட்டம் என்னும் பகுதியைச் சேர்ந்த கந்தப்பா இராஜா என்பவரது மகனே இராஜா விசுவநாதன். ஆரம்பத்தில் யாழ் ‘கான்வெண்ட்’ (அப்பொழுது அங்கு ஆண்கள் , பெண்கள் எல்லோரும் படித்தார்கள்) மற்றும் ‘புனித சம்பந்தாசிரியர் கல்லூரி (சென் பட்றிக்ஸ்) ஆகியவற்றில் படித்திருக்கின்றார். பின்னர் சிறிது காலம் யாழ்ப்பாணக் கல்லூரியில் படித்திருக்கின்றார். அதன் பின்னரே யாழ் இந்துக்கல்லூரியில் சேர்ந்திருக்கின்றார். அங்கு அவர் மாணவர் தலைவராகவும் விளங்கியிருக்கின்றார். அப்பொழுது அங்கு அதிபராக இருந்தவர் குமாரசுவாமி அவர்கள். அங்கு படிக்கும் காலகட்டத்தில் அவர் நாடகம், விளையாட்டு மற்றும் மேடைப்பேச்சு ஆகியவற்றில் விருப்பத்துடன் ஈடுபட்டுள்ளார்.
தந்தையார் ஒரு மருத்துவர். ஆயினும் தந்தையார் இவரை இரு வழக்கறிஞராகப் பார்க்க ஆசைப்பட்டுள்ளார். அதன் விளைவாகவே திரு.இராசா விசுவநாதன் அவர்கள் சட்டம் படித்துள்ளார். சட்டப்படிப்பை முடித்து யாழ்ப்பாணம் திரும்பிய விசுவநாதன் அவர்கள் அங்கு அத்துறையில் பணியாற்றத்தொடங்கினார். யாழ் நீதிமன்றத்தில் கடமையாற்றினார். அதிகமாகக் குற்றவியல் துறை வழக்குகளிலேயே அதிகம் ஈடுபட்டுள்ளார்.
இவருக்கு பிள்ளைகள். மூத்த மகன் வி. உருத்திரகுமாரன் (இவர் தமிழர் அரசியலில் இன்று நன்கறியப்பட்டவர். ‘நாடு கடந்த தமிழீழம்; என்றால் நினைவுக்கு வருபவர்.). இவரும் சட்டத்தரணியே. அடுத்தவர் சிவகுமார். பேராதனைப் பல்கலைக்கழகப் பொறியியற் பட்டதாரி. மூன்றாவது பெண்பிள்ளை. பெயர் தர்மவதி. இவர் ஒரு மருத்துவர். இவரது கணவரும் மருத்துவரே. அடுத்தவர் கிருஷ்ணகுமார். இவரது மனைவியார் பெயர் தவமணி. இவரே யாழ் இந்து மகளிர் கல்லூரி விசுவநாதன் டீச்சர் என்று நன்கறியப்பட்டவர்.
இவரது அரசியல் பிரவேசம் பற்றிக் குறிப்பிடுகையில் இவரது மனைவியார் ஆரம்பத்தில் விசுவநாதன் அவர்கள் ஜி.ஜி.பொன்னம்பலம் தலைமையிலான இலங்கைத்தமிழ்க் காங்கிரஸில் இருந்த விபரத்தைக் குறிப்பிடுகின்றார்.
காணொளியில் குறிப்பிட்டுள்ள ஏனைய அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்:
1. இவர் காலத்தில்தான் யாழ் பொதுசன நூலகம் எரிக்கப்பட்டது. அதனை எரித்தவர் அப்போது யாழ்ப்பாணத்திலிருந்த அமைச்சர் காமினி திசநாயக்கா. அவர் தெற்கிலிருந்து அழைத்து வந்த இனவெறியாளர்கள் மூலம் நடத்தினார். அப்பொழுது அவர் யாழ் நாச்சிமார் கோயிலடியில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாடிக்கொண்டிருந்தார்.
2. தமிழர் விடுதலைக்கூட்டணித்தலைவர் சம்பந்தன் சட்டத்தரணி. அரசியலில் நீண்ட அனுபவம் வாய்ந்தவர்.
3. தான் மேயராக விளங்கிய காலத்தில் ஆணையாளர் சிவஞானம் போன்றவர்கள் இலங்கை அரசுக்குச் சார்பாகச் செயற்பட்டார்கள். எவ்வித அபிவிருத்தி நடவடிக்கைகளையும் செய்ய விடாமல் தடுப்பதற்கு அவரும் ஒத்துழைத்தார்.
4. நேர்காணலில் பாஸ்கரலிங்கம் போன்றவர்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.
5. இன்னும் பதினைந்து வருடங்களில் நிச்சயம் இலங்கைத்தமிழர்களுக்குச் சூடான் போன்று தீர்வு கிடைக்கும் என்பது இவரது உறுதியான நம்பிக்கை.
6. தமிழர்கள் ஒருபோதும் தமிழ் மொழியை மறந்துவிடக் கூடாது என்று காணொளியின் இறுதியில் கோருகின்றார்.
ngiri2704@rogers.com