ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள் ஐந்து!

1. பழுதடையும் எழுதுகோல்கள்‘

லதா ராமகிருஷ்ணன்

[ “படித்தவன் சூதும் வாதும் செய்தால்… போவான் போவான் அய்யோன்னு போவான்” -பாரதியார்]

மக்களாட்சியும் மதச்சார்பின்மையும் மாட்சிமை பொருந்தியவை என்று
24X7 முழங்கிக்கொண்டிருப்போர் சிலரின் மனங் களில்
மலிந்திருக்கும் மூர்க்கமான அதிகாரவெறி
ஆயிரம் வாள்களைக் காட்டிலும் அதிகூர்மையாய்
அங்கங்கே தலைகளைக் கொய்தபடியே……

அவரவருக்குத் தேவைப்படும்போது மட்டும்
அகிம்சை underline செய்யப்படும்.

‘பிரபலங்கள் சுதந்திரமாக நடமாட வழிவகுக்கும் கருவி யென

’புர்கா’வுக்குப் பதவுரை வழங்கியும்,
’ஜெய் ஸ்ரீராம்’ இந்த நூற்றாண்டின் குரூர வாசகம்’ என்று
மதிப்புரை யெழுதியும்

நிதமொருவிதமாய் வெறுப்பை வளர்த்து
எழுத்தில் மனிதநேயத்தையும் பெண்ணியத்தையும்

முன்னிறுத்திக்கொண்டிருக்கும்

படைப்பாளிகளும் உளர்.

அன்பையே வளர்ப்பதாகச் சொன்னவண்ணமிருக்கும்
என்புதோல் போர்த்திய உடலங்களாய்
முழுப்பிரக்ஞையிலான Selective amnesia வில்
மும்முரமாய் சில காட்சிகளை மட்டுமே
மீண்டும் மீண்டும் அதிகவனமாகப் பதிவேற்றுவதில்
முந்துவது யார்? _

மூத்த படைப்பாளியா?
முளைவிட்டுக்கொண்டிருக்கும் படைப்பாளியா?


2. இவர்கள் இப்படித்தான்

ஒரு கலவரத்திற்காகக் காத்திருக்கிறார்கள்
தங்கள் இரும்புக் கதவங்களுக்கு அப்பால் இவர்கள்.

கன்னுக்குட்டியளவு நாய் வைத்திருக்கக்கூடும்.
பெரும்பாலும் அது சிறுநீர் கழிக்க
அவர்கள் வீட்டுக்காவலாளிதான்
தன்னைத்தான் சபித்துக்கொண்டே
தெருவோர வீட்டுக் ’காம்பவுண்ட்’ சுவர்வரை
அழைத்துச்செல்வது வழக்கம் என்றாலும்
ஒரு கலவரநாளில் நாயின் விசுவாசம்
எஜமானருக்காக மட்டுமேயாகும்படியாக
‘ப்ரொக்ராம்’ செய்தாயிற்று.

கையில் காபி அல்லது வேறு பானக்
கோப்பையோடு
வசதியாக இருக்கையில் சாய்ந்தவண்ணம்
அவர்கள் சில அபாயகரமான சிந்தனைகளைப் பதிவேற்றிய பின்
அருகிலேயே அழைப்புவிடுத்துக்கொண்டிருக்கும்
படுக்கையில் சாய்ந்து
இரண்டு மணிநேரம் உறங்கிவிடலாம்.

‘வைரலாகிவிட்ட’ தங்கள் நெருப்புச் சிந்தனைகளால்
எங்கேனும் நிஜ நெருப்பு மூட்டப்பட்டிருக்குமானால்
பின், எழுந்ததுமே நெஞ்சு நிமிர்த்தி
வீட்டு வெளிவாயிலுக்குள்ளாகவே
வீர நடை பழகி
அதை ஒரு ஸெல்ஃபி எடுத்துப் போட்டுவிட்டால்
அப்பாடா! அதில் கிடைக்கும் நிம்மதியும் பெருமிதமும்
அருமையோ அருமை!

அரசியல்வாதிகளாவது

ஐந்துவருடங்களுக் கொருமுறை accountable.

அறிவுசாலிகளுக்கோ அவர்கள் வாழும் நாளெல்லாம்
FREEDOM OF EXPRESSION available.

அப்படித்தான் இன்றிங்கே யொரு கலவரத்தை எதிர்பார்த்துக்

காத்திருப்பவர்களில்
ஒருவர் சொன்ன காரணம்
கொஞ்சம் நியாயமானதாகவே இருந்தது:

”கலவரம் ஏற்பட்டால் ஒருவேளை நான்
காத்திரமான கவிதை யெழுதக்கூடும்”


3. கொஞ்சம்போல் கருணையும் துளி மனசாட்சியும்

24X7 பேசிக்கொண்டேயிருக்கும் ஒருவர்
மற்றவர்களைப் பேசக்கூடாது என்று
மிரட்டிக்கொண்டிருக்கிறார்
கருத்துச் சுதந்திரத்தின் பெயரால்.

சந்தேகமில்லாமல் காருண்யவாதிதான் அவர்
குரல்வளையை நெரிக்கவும்
கபாலத்தைப் பிளக்கவும்
கையும் கையாட்களும் துறுதுறுத்தாலும்
தனிமனிதர்களைத் தன் பெரும்படைகொண்டு
தாக்குவது சரியல்ல என்று
திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கும்
துளியூண்டு மனசாட்சிக்குக் கட்டுப்பட்டு
நடந்துகொள்கிறாரே!

சட்டம் குறித்த பயமும்
தன்னை மனிதநேயவாதியாக முன்னிறுத்தும்
முனைப்பும்தான் அவரை
அவ்விதம் நடந்துகொள்ளச் செய்கிறது
என்று நீங்கள் சொல்வதிலும் உண்மையிருக்கலாம்….

என்றாலும் நான்
என்னுடைய கற்பிதத்தையே நம்பிக்கொள்கிறேனே.


4. நவீன உலகின் நான்காவது தூண்

குறிப்பிட்ட சில காட்சிகளைத்
திரும்பத்திரும்ப ஒளிபரப்பிக்கொண்டிருக்கின்றன
தொலைக்காட்சிச் செய்திகள்.

ஒரு மனிதனை இருமுறை உதைத்த
காவல்துறை அதிகாரியின் கால்
திரும்பத்திரும்ப இருநூறுமுறைக்குமேல்
அதையே செய்துகொண்டிருக்கிறது இன்னமும்.

கோப்புக் காட்சி என்று தெரிவிக்காமல்
வசதியாக மறந்துவிடுவதில்
நாற்பது வருடங்களுக்கு முன்பு நடந்த கலவரம்
இன்று நடந்துகொண்டிருப்பதாய்

கிலிபிடித்தாட்டுகிறது பார்வையாளர்களை.

அதேசமயம்
பாமர மக்கள் வண்ணமயமாய்
விபத்துகளைக்
கண்டுகளிக்க முடிகிறது.

வறுமைக்கோட்டின் கீழுள்ள மக்களைக் காட்டி
அடியிலேயே
சரசரக்கும் பட்டுப்புடவை விளம்பரம்
இடம்பெறுகிறது.

குழந்தைகளின் உளச்சிக்கல்களை
ஒருபுறம்
மனோதத்துவ நிபுணர் எடுத்துரைக்க
மறுபக்கம்
சம்பந்தப்பட்ட ‘நியூஸ் சானலுடைய
எண்டர்டெயின்மெண்ட் சானலுடைய

மெகாத்தொடருக்கான ‘ டீஸரில்’
இரண்டு சிறுவர்கள்
ஒருவரையொருவர் குண்டாந்தடியால்
பின்மண்டையில்
ஓங்கியடித்துக்கொள்கிறார்கள்.

அது சும்மணாங்காட்டி காகிதக் கழி என்று

அரைச்சிரிப்போடு சொல்லும் அந்தத்
தொலைக்காட்சி நிறுவன அதிகாரிகளுக்கு
பார்க்கும் பிள்ளைகளுக்கெல்லாம்
அது தெரியாதே என்ற உண்மை
ஒரு பொருட்டேயில்லை என்றும்.

’துல்லியமான புகைப்படம்
நல்ல கவிதைகள் நாற்பதுக்கு சமம்’
என்று சொன்னால்
’அது சரி அல்லது தவறு’ என்று
அடுத்த பட்டிமன்றம்
அல்லது மக்கள் மன்றம்
நடத்த
அலைவரிசைகளுக்கா பஞ்சம்?


5. மனித நாகரீகமும் மூன்றாம் உலகப்போரும்

ஒரு
மோதலின்
துவக்கப்புள்ளி
மூன்றுபுள்ளிகள்
முற்றுப்புள்ளிக்கிடையே
மடிந்துவிடுபவர்கள்
பின்னெப்போதும் எழுந்துவருவதில்லை.

அறிந்தும்_

மரணப்படுக்கையில்
மூச்சுத்திணறிக்கொண்டிருக்கும்
மனிதம்
வெறுப்பும் வன்மமும் தோய்ந்த
வாசகங்களால் மட்டுமே
மீட்டுயிர்ப்பிக்கப்படும்
என்று
மறுபடியும் மறுபடியும்
மூளைச்சலவை செய்வோர்,
செய்யப்படுவோர்
மூன்றாம் உலகப்போரின்
கட்டியக்காரர்களாக…..

lathaa.r2010@gmail.com