வந்துகொண்டேயிருக்கிறது [நவீன] விருட்சம்!

அழகியசிங்கர்லதா ராமகிருஷ்ணன்மீண்டும் வருகிறது கணையாழி என்ற கட்டுரையைப் படித்தவுடன் ஏற்பட்ட மனநிறைவோடு தொடர்ந்து இருபதாண்டுகளுக்கும் மேலாக நண்பர் அழகியசிங்கர் – கவிஞர், சிறுகதையாசிரியர், விருட்சம் வெளியீடு பதிப்பாளர் – இலக்கியம் மீதுள்ள ஆர்வம் காரணமாய் வெளியிட்டுவரும் நவீன விருட்சம் (காலாண்டுச்) சிற்றிதழ் பற்றிய நினைவும் தவிர்க்க முடியாமல் வரவானது. அசோகமித்திரன், க.நா.சு, ஐராவதம், காசியபன், நகுலன், கோபிகிருஷ்ணன், ஸ்டெல்லா ப்ரூஸ் முதல் இன்றைய இளம் எழுத்தாளர்கள் வரை பலருடைய எழுத்தாக்கங்களையும் தாங்கி வெளிவந்துகொண்டிருக்கும் இலக்கியச் சிற்றிதழ் நவீன விருட்சம். ரா.ஸ்ரீனிவாசன், பெருந்தேவி, கிருஷாங்கினி, பிரம்மராஜன், வைதீஸ்வரன், ஞானக்கூத்தன், லாவண்யா, பாவண்ணன், ஜெயமோகன் என நவீன தமிழ்க்கவிஞர்கள்/படைப்பாளிகள் பலரும் விருட்சம் இதழ்களில் பங்களித்திருக்கிறார்கள். ரா.ஸ்ரீனிவாசன், என்.எம்.பதி போன்ற சிலருடைய தரமான படைப்பாக்கங்களை விருட்சம் இதழ்களில் மட்டுமே பரவலாகக் காணப்படுபவை. விருட்சம் இதழில் ஒரு சில எழுத்தாளர்களே விருட்சம் இதழ்களில் திரும்பத்திரும்ப இடம்பெறுகிறார்கள் என்று சிலர் குறைகூறுவதுண்டு. இது எல்லா இதழ்களுக்கும் பொதுவான ஒரு அம்சம் தான் என்று சொல்லமுடியும். இது குறித்து அழகியசிங்கரிடம் கேட்டபோது சிலர் நட்புக்காகவும், இலக்கிய ஆர்வம் காரணமாகவும் தொடர்ந்த ரீதியில் தம்முடைய எழுத்தாக்கங்களை அனுப்பித் தருகிறார்கள். அவற்றை வெளியிடுகிறேன். சிலரால் தொடர்ந்த ரீதியில் படைப்புகளைத் தர முடிவதில்லை. சிலர் விருட்சத்திற்குப் படைப்புகளைத் தர ஆர்வங்காட்டுவதில்லை. என்னைப் பொறுத்தவரை தரமான படைப்புகள் யாருடையதாக இருந்தாலும் நான் வெளியிட்டுவந்திருக்கிறேன். நீங்களும் படைப்புகளைத் தொடர்ந்து அனுப்பிவையுங்கள் நான் வெளியிடுகிறேன்” என்றார். எனக்குத் தான் தொடர்ந்த ரீதியில் அனுப்பிவைக்க இயலவில்லை.

தன்னுடைய கைக்காசைச் செலவழித்து அழகியசிங்கர் நடத்திவரும் இந்த இதழின் வடிவமைப்பு எளிமையானது; எனில், நேர்த்தியானது. இவற்றில் இடம்பெறும் கோட்டோவியங்கள் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது. ஓவியர் ஆதிமூலம், கவிஞர் வைதீஸ்வரன், யூமா வாசுகி என பலருடைய கோட்டோவியங்கள் விருட்சம் இதழ்களின் முகப்பு அட்டைகளாக இடம்பெற்றிருக்கின்றன.

விருட்சம் இதழில் வெளிவந்த கதைகள், கவிதைகள், கட்டுரைகள் போன்ற எழுத்தாக்கங்களும், பிறவேறு படைப்புகளும் விருட்சம் வெளியீடுகளாகத் தரமான விதத்தில் பதிப்பிக்கப் பட்டிருக்கின்றன. பேராசிரியர் கோ.கண்ணனின்(பார்வையின்மையையையும் மீறி படித்துப் பட்டம் பெற்று பேராசிரியராகப் பணிபுரிந்துவருவதோடு நவீன தமிழ்க்கவிதைகளையும் தொடர்ந்து எழுதிவருபவர். இவருடைய முதல் கவிதைத் தொகுதி ஓசைகளின் நிறமாலை) இரண்டாவது கவிதைத் தொகுதியான மழைக்குடை நாட்களை வெளியிட முடியுமா என்று நான் கேட்டபோது தயங்காமல் சரி என்று சம்மதித்து மிக நேர்த்தியாக அந்தக் கவிதைதொகுதியை வெளியிட்டவர். சமீபத்தில் க.நா.சு நூற்றாண்டுவிழாவை மனதில் கொண்டு ஆர்வமாய் அவருடைய கவிதைகள் சில அடங்கிய சிறு நூலை அச்சிட்டு அனைவருக்கும் இலவசமாக வினியோகித்துவருகிறார்!

அழகியசிங்கரின் இயற்பெயர் சந்திரமௌளி. இதுவரை இவருடைய மூன்று கவிதைத் தொகுதிகள் – யாருடனும் இல்லை – 1995, தொலையாத தூரம் – 2001, அழகியசிங்கர் கவிதைகள்), மூன்று சிறுகதைத் தொகுதிகள், ஒரு மொழிபெயர்ப்பு நூல் வெளியாகியுள்ளன. பல நூல்களின் தொகுப்பாசிரியராகவும் பங்களித்துள்ளார். இவருடைய சிறுகதையொன்றுக்கு (ஹிஸீநீறீமீ) கதா விருது கிடைத்துள்ளது. இவருடைய சிறுகதைகள் ஆங்கிலம், இந்தி, பஞ்சாபி இன்னும் சில இந்திய மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன.இலக்கியம் தொடர்பான பல கூட்டங்களையும் விருட்சம் சார்பில் தொடர்ந்து நடத்திவந்தவர் அழகியசிங்கர்.

இந்தியன் வங்கியில் உயர் அதிகாரியாகப் பணியாற்றிவருகிறார் அழகியசிங்கர். வாழ்வாதார ரீதியாய் பதவி உயர்வை ஏற்றுக்கொண்டவர் சில வருடங்களுக்கு முன்பு மயிலாடுதுறைக்கு மாற்றப்பட்டார். இப்பொழுது தன்னுடைய இலக்கியப் பணிக் காகவும், மிகவும் மூப்பெய்துவிட்ட தந்தைக்காகவும் ஒவ்வொரு ஞாயிறும் மயிலாடுதுறையிலிருந்து சென்னையிலுள்ள தன் வீட்டிற்கு வந்துபோய்க் கொண்டிருக் கிறார். இந்த அலைச்சல் விருட்சம் பணிகளை உரிய நேரத்தில் செய்யவிடாமல் அவரை மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் பெரிதும் அலைக்கழியச் செய்துகொண்டி ருக்கிறது. விளையாட்டு வீரர்களுக்கு அலுவலகங்களில் ஆயிரம் சலுகைகள். ஆனால், இருபதாண்டுகளுக்கும் மேலாக, பெரிய அளவில் எந்தவித அங்கீகாரமும் கிடைக்காத நிலையிலும் (பல பேர் எழுதும் தமிழ்ச் சிற்றிதழ்கள் பற்றிய வரலாறில் விருட்சம் பெயர் இடம்பெறுவதில்லை) இலக்கியப்பணி செய்துவரும் அழகியசிங்கருக்கு மூன்று வருடங்களுக்கு மேலாகியும் சென்னைக்கு மாற்றல் கிடைக்க வழியற்ற நிலையே நீடிக்கிறது. இலக்கிய நிழல் தரும் விருட்சம் பற்றி இனியேனும் இந்தியன் வங்கி

நிர்வாகம் அக்கறை கொள்ள வேண்டும்.

இப்பொழுது நவீன விருட்சம் வலைப்பூவும் தொடர்ந்து இயங்கிவருகிறது. முகவரி:

 

http://navinavirutcham.blogspot.com. தங்களுடைய படைப்புகளை இந்த வலைப்பூவுக்கு அனுப்ப விரும்புவோர் தொடர்புகொள்ள வேண்டிய முகவரி: navina.virutcham@gmail.com

ramakrishnanlatha@yahoo.com