பயணியின் பார்வையில் (2)

முருகபூபதி1990   இல்   இலக்கியவாதிகளைத்தேடியது  போன்று  25  வருடங்களின் பின்னர்   நான்  தேடவில்லை.   ஆர்வமும்  இல்லை.   சோவியத்தில் மாற்றம்  – சிங்கப்பூரில்  மாற்றம் –  கியூபாவில்  மாற்றம்.   இப்படி உலகமே   மாறிக்கொண்டு  இணைய  யுகத்தில்  வாழும்பொழுது மனிதர்களும்    மாறிவிடுவார்கள்தானே….?

அண்மையில்  சிங்கப்பூருக்குச்  சென்று   நின்ற  இரண்டு  நாட்களுக்குள்    என்னால்  சந்திக்க  முடிந்தவர்கள்  சிலர்தான். குறிப்பாக    கண்ணபிரான்,   கனகலதா,   புஸ்பலதா  நாயுடு.   ஏனோ இவர்களை  தவிர்க்கமுடியவில்லை.   சிங்கப்பூர்  செல்லும் சந்தர்ப்பங்களில்    இவர்களை   எப்படியும்  நேரம்  ஒதுக்கி சந்தித்துவிடுவேன்.

( இந்தப்பயணத்தில்  சிங்கப்பூர்   தேசிய  பல்கலைக்கழக  மானுடவியல்    பேராசிரியரான  அமெரிக்காவைச்சேர்ந்த  பேனார்ட் பேட் , அதே  பல்கலைக்கழகத்தில்  விரிவுரையாற்றும்     சித்தார்த்தன்  ( பேராசிரியர்கள்  மௌனகுரு – சித்திரலேகா தம்பதியரின் மகன்)   ஆகியோரை    பின்னர்  மட்டக்களப்பில்  22-02-2015  ஆம்  திகதி மகுடம்  கலை   இலக்கிய  வட்டம்  நடத்திய  சந்திப்பில்  சந்தித்தேன். இது  எதிர்பாராத  சந்திப்பு)  மைத்துனர்  விக்னேஸ்வரன் சிங்கப்பூரில் எனக்கு  எல்லா வசதியும்    செய்துகொடுப்பவர்.

தமிழ்த்தேசியத்திலும்   கவியரசு  கண்ணதாசனிடத்திலும்  தீவிர பற்றுக்கொண்டவர்.    எனக்கு  கண்ணதாசன்  குடும்பத்தினருடனும் ஓவியர்  மணியன்  செல்வனுடனும்    நட்புறவை   உருவாக்கியவர். ( எனது   கங்கை மகள்  சிறுகதைத்தொகுதியில்    ஓவியர்  மணியன் செல்வனின்    ஓவியமே  முகப்பாகியது.) 

“மனிதரில்  ஒன்றுபட்டுச் சேர்ந்திருப்பீர்!
இங்குமழலைகள்  தமிழ்பேசச் செய்து வைப்பீர்…!!
தனக்கெனக்  கொண்டுவந்த தேதுமில்லை…!!!
பெற்றதமிழையும்  விட்டுவிட்டால் வாழ்க்கையில்லை…!!!!”
கவிஞர் கண்ணதாசன்

என்ற   வரிகளை  தமது  மின்னஞ்சல்  பதில்களில்  தவறாமல் பதிவுசெய்பவர்.

தென்றல்  விடு  தூது (கவிதை),  பலரது  பார்வையில்  கண்ணதாசன் (தொகுப்பு)  முதலான  நூல்களையும்  மனமொட்டுக்கள்  என்ற இசைப்பாடல்   இறுவட்டையும்   வெளியிட்டவர்.

கனகலதா    எனக்குச்சொல்லித்தான்  நான்   பேராசிரியர்  நுஃமான்  பற்றி   அவரது  70  வயது    பிறந்தநாள்  வேளையில்  எழுதினேன். அந்தக்கட்டுரை    தமிழ்நாடு  ரவிக்குமாரின்  மணற்கேணி   இதழ் மற்றும்    தேனீ,   கனடா  பதிவுகள்,   அவுஸ்திரேலியா  தமிழ்  முரசு முதலான   இணைய    இதழ்களிலும்  வெளியானது.    தொடர்பாடலுக்கு இந்த   இளம்தலைமுறை   ஊடகவியலாளர்  முன்மாதிரியானவர். நான்   தேசிய  நூலகத்தில்  சந்தித்த  இவர்கள்  தரப்பிலிருந்து மலேசியாவில்  கடந்த  ஜனவரி  இறுதி  முதல்  பெப்ரவரி  1   ஆம் திகதி   வரையில்  நடந்த  ஒன்பதாவது  உலகத்தமிழாராய்ச்சி மாநாடுதான்  பேசுபொருளாக  இருந்தது. தமிழ்    மாநாடுகளில்  ஆழமான  ஆய்வுக்கட்டுரைகள்  இருக்கிறதோ இல்லையோ….ஆனால்,  பொன்னாடைகளுக்கு    மாத்திரம் குறைவிருக்காது. பொன்னாடை     இல்லாமல்  ஒரு  தமிழ்  மாநாடா…?  என்ற கேள்வியை   எவரும்  என்னிடம்  கேட்கமாட்டார்கள். நாம்   பொன்னாடை  –  பூமாலை    இல்லாமலேயே   ஒரு   சர்வதேச மாநாட்டை     இலங்கைத்தலைநகரில்  நடத்திவிட்டோம்.   மலேசியா   9 ஆவது   மாநாடு  குறித்த  விமர்சனங்கள்தான்    அவர்களிடமிருந்து வந்தன.    வழக்கமாக எழும்  விமர்சனங்கள்தான்  அவை என்பதனாலும்    அந்த  மாநாட்டின்  பின்னணி  –  நடந்த  நிகழ்ச்சிகள் பற்றி   எதுவும்  தெரியாமல்  கருத்துச்சொல்லவில்லை. எனினும்   விக்னேஸ்வரன்  இல்லத்தில்  வந்து  தங்கியிருந்த பிரான்ஸிலிருந்து   வருகை   தந்த  பேராளர்  இலக்கிய  ஆர்வலர் ரவீந்திரன்   என்பவர்  சொன்ன  பல  வேடிக்கை   கதைகளை   கேட்டு ரசித்திருந்தேன்.

அரசின்   ஆதரவுடன்  இலக்கிய  மாநாடுகள்  நடத்த  முற்பட்டால் முதலில்  யாரைத்திருப்திப்படுத்துவது…?  என்ற  ஆழ்ந்த யோசனைதான்   மாநாட்டு  ஏற்பாட்டாளர்களுக்கு  வரும்.   இனி அதற்குமேல்    சொல்வதற்கு  என்ன  இருக்கிறது…?  என்று  எனது பதிலை   அவர்களுக்கு  இரத்தினச்சுருக்கமாகச்சொன்னேன். ஆயினும்  –  சிங்கப்பூர்  அரசும்  சிங்கப்பூர்  தேசிய  நூலகமும் சிங்கப்பூர்    கலைக்கழகமும்    அங்கு   தமிழ்  இலக்கிய  வளர்ச்சிக்கு வழங்கும்    ஆதரவு  மகத்தானது.    ஏற்கனவே   சிங்கப்பூர்  தமிழ் இலக்கிய   வரலாறு   (1872 – 2010) ,  சிங்கப்பூர்  தமிழ்  இலக்கிய தொகுப்பு   (1872 – 2009 )  சிங்கப்பூர்  தமிழ்ச்சிறுகதைகள்,   கவிதைகள், ஓர்   அடைவு   (1936 – 1960 – தொகுதி -01)  பி.கிருஷ்ணனின் இலக்கியப்படைப்புகள் – ஓர்   ஆய்வு,   நா. கோவிந்தசாமி    எனும் படைப்பாளி    ( கோவிந்தசாமி    மறைந்த  வேளையில்  அவர்   பற்றி சுந்தர ராமசாமியும்    காலச்சுவட்டில்     எழுதியிருக்கிறார்.) முதலானவற்றை     படித்திருக்கின்றேன்.

சுருக்கமாகச்சொல்வதானால்  இந்தத்தொகுப்புகள் ஆவணமாகத்திகழுகின்றன.

சிங்கப்பூரில்   2011    அக்டோபரில்    நடந்த  உலகத்தமிழ்  எழுத்தாளர்    மாநாட்டு  மலரில்  வாழ்த்துச்செய்திகள்தான் ஆக்கிரமித்திருந்தன.
சிங்கப்பூரில்   தமிழ்முரசு  ஸ்தாபகர் (அமரர்)  தமிழவேள்  கோ. சாரங்கபாணி   மிக    முக்கியமான  ஆளுமை.    அவரது  வாழ்வும்  பணிகளும்   புலம்பெயர்ந்து   சென்று  தமிழ்  வளர்க்க  எத்தனிப்பவர்களுக்கு  முன்மாதிரியானது.

சிங்கப்பூரில்   எனக்கு  கிடைத்த  செம்மொழி  இதழைப்படித்தேன். சிங்கப்பூர்    அரசியலில்  தமிழ்  மொழியின்  முக்கியத்துவம்  என்ற தலைப்பில்   இளம்   தலைமுறையைச் சேர்ந்த  நான்யாங்  தொழில் நுட்ப   பல்கலைக்கழகத்தின்  இயந்திர  பொறியியல்  துறை   நான்காம்   ஆண்டு  மாணவர்  சுந்தர்  என்பவர்    எழுதியிருக்கும் கட்டுரை   முக்கியமானது.

” இன்றைய   சிங்கப்பூர்ச்   சூழ்நிலையில்    தமிழ்மொழியின் நிலைத்தன்மையைத்   துடிப்புமிக்கதாக   வைக்கவும்   அதனை அரசியல்   கொள்கைகள்  மூலமாக  நிறைவேற்றவும்  தமிழ்  மொழி பேசும்  சிங்கப்பூர்  இளையர்கள்  அரசியலில்  பிரதிநிதித்துவம்  ஏற்று தமிழ்    மொழியின்  முக்கியத்துவத்தை   நம்  தமிழ்  பேசும்  மக்களிடம்   கொண்டுபோய்ச்  சேர்க்கவேண்டும் ”   என்று  அவர்   அந்தக்கட்டுரையில் வலியுறுத்துகிறார்.
ஆனால்,   அதற்கு  ஏற்ப  அங்குள்ள  படைப்பாளிகளும்  தமிழ் அமைப்புகளும்   தமிழ்  ஊடகவியலாளர்களும்  கடுமையாக உழைப்பார்களா…?  என்பதை    பொறுத்திருந்துதான்  பார்க்கவேண்டும்.

சிங்கப்பூருக்கு   செல்பவர்கள்  முக்கியமாக   முஸ்தபாவுக்கும் ஹனிபாவுக்கும்   செல்வார்கள்.   அத்துடன்  கோயில்  தரிசனம்.   அந்த பிரசித்தி   பெற்ற  கடைத்தொகுதிகளில்  யாவும்  பெறலாம். கோயில்களில்   பிரசாதம்  பெறலாம். வெளிநாடுகளிலிருந்து    வருகை தருபவர்களில்  தேசிய  நூலகத்துக்கு செல்பவர்கள்    எத்தனைபேர்..?  சில  புலம்பெயர்  எழுத்தாளர்கள்  அங்கு   வந்து  செல்வதை   அறியமுடிகிறது.

ஏற்கனவே   மல்லிகையில்  சிங்கப்பூர் தேசிய  நூலகம்  பற்றி விரிவாக    எழுதியிருக்கின்றேன்.   இதனை   ஒரு  நாளில் பார்த்துவிடமுடியாது.    பல  நாட்கள்  இங்கு  செலவிட்டால்  அரிய  பல   தகவல்களுடன்  வெளியே   வரலாம். இம்முறை   அங்கு  சென்றிருந்தபொழுது  உலக  வரைபடக்கண்காட்சி ஒரு    தளத்தில்  நடந்துகொண்டிருந்தது. சிங்கப்பூர்   எழுத்தாளர்களின்  படைப்புகள்  குறித்து  ஈழத்து  மற்றும் புகலிட   எழுத்தாளர்கள்  அதிகம்  எழுதவில்லை    என்பது  குற்ற உணர்வாகத்தான்   இருக்கிறது.   எனினும்  அவுஸ்திரேலியாவில்  நாம்  2009   இல்     நடத்திய  எழுத்தாளர்  விழாவுக்கு  வருகை   தந்து திரும்பிய   ஈழத்தின்  மலையக  மூத்த  எழுத்தாளர்   தெளிவத்தை ஜோசப்    சிங்கப்பூர்   இலக்கிய  உலகம்  பற்றி  விரிவான  தொடரை தினகரன்    வாரமஞ்சரியில்  எழுதியிருக்கிறார். இராம. கண்ணபிரான்  –  இருபத்தைந்து  ஆண்டுகள்,   உமாவுக்காக, வாடைக்காற்று ,   சோழன்  பொம்மை,   பீடம்  முதலான கதைத்தொகுப்புகளை   வரவாக்கியுள்ளார்.   அவற்றை தமிழ்ப்புத்தகாலயம்    வெளியிட்டிருக்கிறது.   இந்த  ஆண்டு தொடக்கத்தில்    வாழ்வு  என்ற   தலைப்பில்  ஒரு  கதைக்கோவையை    கண்ணபிரான்  தந்துள்ளார்.   இதனை   சிங்கப்பூர் தேசிய   கலைக்கழகம்  வெளியிட்டிருக்கிறது.  கனகலதா –  பாம்புக்காட்டில்   ஒரு  தாழை  (கவிதை)  நான் கொலை செய்த    பெண்கள்  (சிறுகதை)   ஆகிய  நூல்களை   வரவாக்கியவர். சிறுகதைத்தொகுப்பிற்கு   2008   இல்    விருதும்  பெற்றவர். எனக்கு   அண்மையில்  கிடைத்த  பறை   காலாண்டு    இதழ்    (ஜனவரி -பெப்ரவரி  – மார்ச்   2015)    ஈழ  இலக்கியச்சிறப்பிதழாக வெளியாகியிருக்கிறது.    இந்த  இதழ்  மிகவும்  தரமான படைப்புகளுடன்    வந்துள்ளது.   இதன்  ஆசிரியர்  வல்லினம்  நடத்தும் ம. நவீன்.    பறை    குறித்து  பின்னர்  தனியாக  எழுதவேண்டும்.

இந்த  இதழில்  பூங்குழலி வீரன்  என்பவர்  எழுதியிருக்கும் இலங்கையில்   தமிழ்க்கவிதைகள் :  ஒரு  பார்வை   என்ற கட்டுரையில்   பிரமிள்,  கருணாகரன்,  சேரன்,  சோலைக்கிளி,  அகிலன், தீபச்செல்வன்,   நபீல்,   வ.ஐ.ச. ஜெயபாலன்,   றஷ்மி,  றியாஸ்குரானா, ஆழியாள்,   புதுவை  இரத்தினதுறை முதலான  முக்கிய கவிஞர்களுடன்     கனகலதாவின்  ஆற்றலும்  பதிவாகியிருக்கிறது.

பிறப்பு   அடையாளத்தை   அவ்வளவு  எளிதில்  யாராலும்  துறந்துவிட    முடியாது.    எப்போதும்   ஏதோ  ஒரு  வடிவத்தில்   அது நமது    காலையும்  கழுத்தையும்  சுற்றியபடியே  இருக்கும்  என்ற குறிப்புகளுடன்   கனகலதாவின்  பின்வரும்  கவிதை   வரிகளை சிலாகித்து   சொல்லியிருக்கிறது    அந்தக்கட்டுரை.

கனவுகளைக்  கடந்த
வேற்று  நிலத்தில்
சாப்பாடு தூக்கம் வேலை
எல்லாமே நேராகிவிட்டதாக
சொல்கிறார்கள்
என்றாலும்
பிறந்த  இடம்
ஈழம்
என்றதும்
முன்னைக்கிப்போது  அதிகம்
மிரள்கிறார்கள்.

கனகலதா   சற்று  வித்தியாசமாக  சிந்திக்கும்  இளம் தலைமுறை படைப்பாளி.   நாம்  நீர்கொழும்பில்  கடந்த  பெப்ரவரியில்  வெளியிட்ட   நெய்தல்  நூலில்    லதா   எழுதிய  அரசமரம்  என்ற சிறுகதை    பல    உண்மைச்சம்பவங்களை   பின்னணியாகக்கொண்டு எழுதப்பட்ட    முக்கியமான  சிறுகதை.   அவருடைய  சிறுகதைகள் ஆங்கிலத்திலும்   வெளியாகியுள்ளன.

புஸ்பலதா  இலங்கை  தமிழக  மற்றும்  புகலிட  எழுத்தாளர்கள் சிங்கப்பூர்   வருகைதரும்  வேளைகளில்  சந்தித்து  உரையாடுபவர். தேசிய    நூலகத்திற்கு  அவரைப்பார்க்கச்செல்லும்  வெளிநாட்டு எழுத்தாளர்களுக்கு    ஆலோசனைகளும்  வழங்குவார்.

நான்    சிங்கப்பூர்  செல்லும்  வேளைகளில்  இவர்கள்   மூவரையும் சந்திப்பதற்கு    எப்படியும்  நேரம்  ஒதுக்கிக்கொள்வேன். கண்ணபிரானுடன்    உரையாடினால்  ஏராளமான  இலக்கிய தகவல்களை    அறிந்துகொள்ளமுடியும்.    விரல்  நுனியில்  அத்தனை தகவல்களையும்  வைத்திருந்து  ஒவ்வொன்றாக  தொடர்ச்சியாக உதிர்ப்பார்.

இந்த   ஆண்டு  இந்திய – சிங்கப்பூர்  இராஜதந்திர  உறவின்  ஐம்பது ஆண்டு  நிறைவு  காலம்.    அதனை   முன்னிட்டு  இரண்டு நாடுகளினதும்    நட்புறவை    மேம்படுத்துவதற்கு  சிங்கப்பூரிலிருந்து தமிழ்,  ஆங்கிலம்,  சீனம்,  மலாய்  மொழிகளில்  எழுதும் படைப்பாளிகளை   டில்லிக்கு  அழைத்திருந்தது  இந்திய  மத்திய அரசு.    இதில்  அங்கம்  வகித்தவர்கள்  17   பேர்.    தமிழ்  பிரிவில் தெரிவாகி    அனுப்பிவைக்கப்பட்டவர்கள்   கண்ணபிரானும்  கனகலதாவும்.

டில்லியில்   பெப்ரவரி   14  முதல்   23   வரையில்   நடந்த   உலகப்புத்தக    கண்காட்சியில்  இடம்பெற்ற  சிங்கப்பூர் அரங்கின் நிகழ்ச்சிகளில்    கலந்துகொள்ளச்செல்லவிருக்கும்  தகவலை இருவரும்    சொன்னபொழுது  வாழ்த்துத்தெரிவித்தேன். அவுஸ்திரேலியா   திரும்பிய  பின்னர்  இருவருடனும் தொலைபேசியில்    தொடர்புகொண்டு  அவர்களின்  பயண அனுபவங்களையும்    கேட்டுத்தெரிந்துகொண்டேன்.
சிங்கப்பூரில்    தேசிய   நூலகத்தின்   பத்தாவது   மாடியில் வெளிப்புறத்தில்    அமர்ந்து  உரையாடியபொழுது    எழுத்தாளர்கள் மத்தியில்    தொடரும்  உறவு –  ஊசலாட்டம் –  உராய்வு பற்றியெல்லாம்    பேச   நேர்ந்தது.

எழுத்தாளனின்   படைப்பை  படிப்பதுடன்  நின்றுகொண்டால் நல்லதுதான்.    யாருக்கும்  எந்தப்பிரச்சினையும்  இல்லை.   கருத்து – எதிர்வினை    சொல்லப்புறப்படும்பொழுதுதான்  சிக்கல்  உருவாகின்றது.    கருத்து  முரண்பாடு  தனிநபர்   பகையாகவும் மாறிவிடுகிறது. படைப்பாளிகளுக்கும்   பத்திரிகையாளர்களுக்கும்  தனிப்பட்ட  விருப்பு வெறுப்பு    அந்நியமாகியிருத்தல்  வேண்டும்.  ஆனால், முகநூல்கள்    எழுத்தாளனைக்கண்டால்   எட்டத்தில்   நில்   என்று சொல்லுமளவுக்கு    விபரீதங்களைத்தான்  தருகின்றது.

சிங்கப்பூரில்    சமீபத்திய  பயணத்தில்  நான்   சந்தித்த இம்மூவரிடத்திலும்   இந்த  விவகாரம்  குறித்த  தயக்கம்தான் இருந்தது.    வருபவர்களை  சந்திப்போம்.   விடைகொடுத்து அனுப்புவோம்.   அந்த  எல்லைக்குள்  நின்றுகொள்வோம்.   என்ற பதிலை    ஏகமனதாக  தெரிவித்தார்கள்.
சில    புகலிட  எழுத்தாளர்கள்  வருவார்கள்.   சிங்கப்பூரில்  வதியும் எழுத்தாளர்கள்   கையொப்பம்   இட்டு  தமது  நூல்களை   அன்பளிப்பு செய்வார்கள்.   ஆனால்,  அந்த  நூல்கள்  யாவும்  வெளியே   செல்லுமா என்பது    சந்தேகம்தான்  என்ற  ஐயப்பாடு  அவர்களின்  குரலில் தெரிந்தது.    பொதியின்  எடை   கூடிவிடும்  என்பதனால்  தாம் தங்கியிருக்கும்   நண்பர்கள்  வீட்டில்  விட்டுச்செல்வார்கள்.   ஆனால் சிங்கப்பூர்   எழுத்தாளர்  என்ன  நினைப்பார்  ஆகா… எனது நூல்களையெல்லாம்    வெளிநாட்டில்  படிக்கிறார்கள்.

சிங்கப்பூரில்    மட்டுமல்ல  இலங்கையிலும்   இதுதான் நடக்கிறது. எனது    நண்பர்  ஒருவர்  தாம்  தங்கியிருக்கும்  ஹோட்டல்களிலேயே சில   நூல்களை  விட்டு விட்டு   வந்துவிட்டதாகச்சொன்னார். இதனாலும்   வெளிநாட்டிலிருந்து  செல்பவர்கள்   எழுத்தாளர்களை சந்திக்கத்தயங்குகிறார்கள்.

நான்   அவுஸ்திரேலியாவுக்கு  புறப்படத்தயாரகியவேளையில்  ஒரு   cwtpdu; கட்டாரிலிருந்து    எனது    தங்கை  வீட்டிற்கு   ஸ்கைப்பில்  வந்து பூமாமா   ( பூபதிக்கு  இலங்கையில்  அப்படியும்  ஒரு  பெயர் )  பேக் எல்லாம்  அடுக்கிவிட்டாரா…?  என்ன… அவரின்  பேக்குகளில் புத்தகங்கள் தான் நிரம்பியிருக்கும்  என்ற  உண்மையை   தொலை தூரத்திலிருந்து    ஒப்புவித்தார்.

எது   எப்படியோ….   இந்த  இணைய யுகத்தில் முகநூலும் இணைந்துகொண்ட பின்னர் மாந்தர்களின்  மத்தியில் தொலைத்தொடர்பு நெருக்கத்தை ஏற்படுத்தியிருந்தாலும் மனதளவில் அந்நியப்பட்டுக்கொண்டுதான்  இருக்கிறார்கள்.  படைப்பாளிகளும் விதிவிலக்கல்ல. [தொடரும்]

letchumananm@gmail.com