அத்தியாயம் ஒன்று: காட்மாண்டு பள்ளத்தாக்கு
நேபாளம், இமயமலையின் தென் பகுதி அடிவாரத்தில் உள்ள நாடு. ஐம்பது மில்லியன் வருடங்கள் முன்பாக புவியின் வடகண்டம் தென்கண்டம் ஆகிய இரண்டும் கண்ட நகர்வினால் ஒன்றுடன் ஒன்று மோதியபோது ஏற்பட்ட அமுக்கத்தால் புவியின் மேற்பகுதி மேலெழுந்து 2900 கிலோ மீட்டர் நீளமான மலைத் தொடர் உருவாகியது.
அந்த மலைத்தொடரின் வடபகுதி திபேத் பீடபூமி. தென்பகுதியில் நேபாளம் மற்றும் இந்தியா உள்ளது. உலகத்தில் 14 மலைச்சிகரங்கள் 8000 மீட்டருக்கு மேற்பட்டவை அதில் எவரெஸ்ட் உட்பட 8 மலைச்சிகரங்கள் நேபாளத்தில் உள்ளன.
விமானத்தில் பறக்கும்போது யன்னல் கண்ணாடியூடாக பார்க்கும்போது, பனிபடர்ந்த அந்தச் சிகரங்கள் தொடர்ச்சியாக பளிங்கில் செதுக்கி வைத்திருப்பதுபோல் அழகான காட்சியாக தென்படும். அந்த மலைத்தொடரின் மேலுள்ள பனிப்படலத்தில் உதயசூரியன் பட்டு கண்ணாடியின் மேல் வைத்த வைரமாலையாக ஒளிரும் காட்சி எக்காலத்திலும் மனதை விட்டு அகலாது .
புவியின் அசைவியக்கத்தால் உருவாகிய பிரதேசமானதால் இங்கு தொடர்ச்சியான கண்ட நகர்வு நடந்து கொண்டிருக்கிறது. அத்துடன் இந்தச் சிகரங்கள் வளர்ந்து கொண்டிருக்கின்றன. இப்படியான தொடர் மாற்றத்தினால், இந்தப் பிரதேசத்தில் பூகம்பம் வருவது வழக்கம்.
நான் அங்கு சென்றபோது 2015 இல் ஏற்பட்ட பூகம்பத்தின் அழிவுகளை காட்மண்டு நகரத்தினருகிலேயே காணமுடிந்தது.
ஒரு காலத்தில் கடலாக இருந்த பிரதேசமென அறியப்பட்ட இந்நகரத்தில் வாழ்ந்த பல கடல் வாழ் உயிரினங்களது சுவடுகளை மியூசியங்களில் பார்க்கக்கூடியதாக இருந்தது. .அவுஸ்திரேலியாவில் இமய மலையில் இருந்து எடுத்த உப்பு பாளங்களில் இருந்து விளக்கு உருவாக்கப்படுகிறது. அவை காற்றின் மாசுகளை நீங்குமென அறிந்து ஒரு காலத்தில் கட்டிலருகே அத்தகைய ஒரு விளக்கை வைத்திருந்தேன் . இமய மலை, அதனது சிகரங்கள் பற்றிய படங்கள், நூல்கள் மற்றும் புனைவுகள் என்பன சிறு வயதிலிருந்தே என்னைப் பாதித்தவை. அறிந்தும் அறியாத ஒரு புதிராக மனதில் கூடு கட்டியிருந்தது. மற்றவர்களது கற்பனைகளின் மீது நான் கற்பனை செய்வதைவிட , நான் நேரில் காணும் காட்சியில் எனது எண்ணங்களை மற்றும் கற்பனைகளை மனதில் வரைபடமாக்க விரும்பியதால் அங்கு சென்றேன் . எனவே பல காலமாக எதிர்பார்த்திருந்த பயணம் இந்த நேபாளப் பயணம்.
இந்தியாவின் புதுடில்லி ஊடாக இந்தப் பிரயாணமிருந்தது. இந்தப்பயணமிருந்தது. ஏற்கனவே நிரப்பப்பட்ட விசா பத்திரமிருந்ததால் பயணம் இலகுவாக இருந்தது. பலர் பத்திரத்தை நிரப்ப அங்குமிங்கும் அலைந்தார்கள் . நாம் சென்ற நேரத்தில் கொரோனோ வைரஸ் அச்சுறுத்தல் தொடங்கிவிட்டதால், சீனர்கள் மட்டுமல்ல ஐரோப்பியர்களும் குறைந்திருந்தார்கள். இந்தியர்கள் பெரும்பாலும் தரைவழியே வாகனத்தில் வருவார்கள். இந்தியர்களும் சீனர்களுமே பெரும்பான்மையாக நேபாளம் வருபவர்கள்.
ஒரு தேசத்தை பார்ப்பது எப்படி ?
எனது 29 வருடங்களில் நான் வாழ்ந்த தேசமான இலங்கையிலே நான் பார்க்காத இடங்கள் பல உள்ளன. அதேபோல் தற்பொழுது 30 வருடத்திற்கு மேலாக வசிக்கும் அவுஸ்திரேலியாவில் பல இடங்களை இன்னமும் பார்க்கவில்லை. மனித வாழ்வு மிகவும் குறுகியது. நாம் வண்டிச் சக்கரத்தில் உள்ள பல்லிபோல்தான் வாழ்கிறோம்.
பத்து இடங்களை நேபாளத்தின் முக்கிய கலாசார முக்கியத்துவமான இடங்களாக யுனெஸ்கோவால் பிரகடனப்படுத்தியுள்ளார்கள். அவற்றில் முக்கியமானவைகளுடாக எமது பத்து நாட்கள் பயணமிருந்தது.
எனது பிரயாணத்தை ஒழுங்கு படுத்தியவர் நேபாளத்தைச் சேர்ந்த ஒரு முகவர். அவரிடம் பத்துநாட்களில் முக்கியமான இடங்களை பார்க்க ஒழுங்கு செய்து தரும்படியும், முடிந்தவரை வீதிப் பயணங்களைக் குறைக்கவும் எனவும் அது சாத்தியமில்லாதபோது ஜீப் போன்ற வாகனத்தை ஒழுங்கு படுத்தவும் கேட்டிருந்தேன் . ஏற்கனவே பாதைகளைப் பற்றிய எச்சரிக்கை எனக்குக் கிடைத்திருந்தது.
பல காலமாக உலகத்தின் ஒரே இந்து நாடாக அரச வம்சத்தால் ஆளப்பட்ட நேபாளம் தற்பொழுது மாவோ -கம்மியூனிஸ்டுகளின் வெற்றியின் பின்பு மதச்சார்பற்ற நாடாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இடதுசாரிகள் ஏற்படுத்திய சண்டையில் 30000 மக்கள் கொல்லப்பட்டார்கள். அரசகுடும்பத்தில் நடந்த கொலைச் சம்பவத்தின் பின்பு ஆட்சி மாற்றம் நடந்தது . ஆட்சியாளர்கள் மாறியிருந்தாலும் பெரிதான மாற்றம் அங்கு நடக்கவில்லை என்கிறார்கள்.
50000 மேற்பட்ட மாணவர்கள் அவுஸ்திரேலியாவுக்கு வருகிறார்கள். வயதான ஆணும் பெண்ணும் மத்திய கிழக்கிற்கு வேலைக்கு செல்கிறார்கள் . நேபாளத்தின் தேச வருமானம் முதலாவதாக வெளிநாட்டிலிருந்து வரும் பணத்திலும், இரண்டாவதாக உல்லாசப் பிரயாணிகளின் வருகையிலும் தங்கியுள்ளது. இப்படியான வருமானத்தில் உணவுப்பொருட்களை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்கிறார்கள்.
எனது பயணத்தில் நேபாளக் கலாசாரம் இந்து சமயத்தின் பல விடயங்களோடும் தீபேத்திய தாந்திரிய புத்த சமயத்தின் கலவையாகவும் தெரிந்தது. நாட்டின் கலாசாரம் மட்டுமல்ல நாட்டு மக்களிலும் கலவை தெரிந்தது . வட நேபாளத்தில் தீபேத்தியரைப்போல ஆசிய முக அமைப்பு . தெற்குப் பகுதியில் உள்ளவர்கள் இந்தியர்களைப் போல கறுப்பு நிறத்திலும் இடைப்பகுதியில் உள்ளவர்கள் இரண்டிற்கும் இடைப்பட்டு இந்திய முகத்துடனும் மஞ்சள் கலந்த தோல் நிறத்திலும் இருந்தனர். தற்பொழுது நேபாளிய மக்களில் 80 வீதம் இந்துக்களையும் 20 வீதம் புத்த சமயத்தினரையும் கொண்டிருப்பதாக அறிந்தேன் .
காட்மாண்டிற்கு அருகாமையில் உள்ள சுயம்புநாத் (Swayambhunath) என்ற இடமே நாங்கள் முதல் சென்ற பிரதேசம். இந்து மற்றும் புத்த கோயில்கள் பல ஒன்றாக அமைந்த இடம். ஐரோப்பியரின் வாயில் நுழையாத பெயரானதால் வழிகாட்டிகள், இங்கு அதிக குரங்குகள் நிற்பதனால், இதனை மங்கி ரெம்பிள் என்பார்கள் .
இங்குள்ள குரங்குகள் இந்தியா இலங்கையில் நான் பார்த்ததை விட தோற்றத்தில் பெரியனவாக இருந்தன. நிறத்திலும் வேறாகத் தெரிந்தன. இந்த இடம் தாந்திரிய புத்தமதத்தை சேர்ந்தது. புத்த மதமும் இந்து மதமும் பல இடங்களில் இரண்டறக்கலந்து இருப்பதினால் இரு மதத்தினரும் இங்கு வணங்குகிறார்கள். இங்குள்ள புத்த தூபத்தில் கண்களை – புருவங்களை நான்கு பக்கமும் வரைந்துள்ளார்கள் புத்த மதம் இங்கு திபேத்திய லாமா எனப்படும் குருக்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. சீனாவின் ஆக்கிரமிப்பின்போது தீபேத்தில் இருந்து இடம் பெயர்ந்தவர்கள் இங்கு வசிக்கிறார்கள்.
எந்த வணக்கத் தலத்திற்கும் தொன்மமான கதையொன்றிருக்கும் . அது புனைவா உண்மையா என்பது நமக்குத் தேவையற்றது. அதேபோல் இந்தப் பகுதி நீர் நிறைந்த தீவாக இருந்தது. அப்பொழுது ஒரு தீபம் சுயமாகத் தோன்றியது. பிற்காலத்தில் நீர்வடிந்துவிட்டபின் இந்த இடத்தில் ஆறாம் நூற்றாண்டில் தூபம் ஆரம்பிக்கப்பட்ட இந்த இடத்திற்கு அசோக மன்னன் சென்றதாகச் சொன்னார்கள்.
இங்கிருந்து படிகளில் மேல் சென்றபோது கீழே காட்மாண்டு பள்ளத்தாக்கு அழகாகத் தெரிந்தது.
மூச்சு வாங்கியபடி நூற்றுக்கணக்கான படிகளில் மேலே சென்றபோது வஜ்ஜிர ஆயுதமிருந்தது. இதுவரையில் இந்திரனிடம் மட்டுமே வஜ்ஜிர ஆயுதமிருந்தது என படித்த எனக்கு, அது புதுமையாக இருந்தது. அது வஜ்ராயின புத்த சமயத்தை குறிப்பதாக அறிந்தேன். அதை விட தூபாக்கள் பல ஒன்றாக இருந்தன. அவற்றில் ஒரே உயரமாக பல அடுக்கு கூரைகள் கொண்டிருந்தது நேபாளிய கட்டிடக்கலை என்றார்கள். இதுவே பிற்காலத்தில் சீனா, யப்பான் போன்ற நாடுகளுக்கு சென்றதாக சொன்னார்கள். இந்தியா போன்று பல இனக்குழுக்களால் ஆனது. அதில் காட்மாண்டு பள்ளத்தாக்கில் வசிப்பவர்கள் நேவார் (Newar) என்ற குழுவினரே முக்கியமானவர்கள்.
அதிலிருந்து நேபாளமென வந்திருக்கலாம்.
பாக்மதி ஆறும் பசுபதிநாத் ஆலயமும்
பாக்மதி ஆறு காட்மாண்டில் இருந்து கங்கைக்கு வந்து சேருகிறது. நேபாள நாகரீகம் இந்த நதிக் கரையிலே தொடங்குகிறதென்கிறார்கள். இதன் ஒரு கரையில் கங்கை ஆற்றில் இடம் பெறுவது போன்று இறந்தவர்களின் உடல்கள் கொண்டு வந்து எரிக்கப்படுகின்றன.
மறுகரையில் எப்பொழுது இறப்பு வரும் என ஜோதிடம் சொல்பவர்கள் நிறைந்துள்ளார்கள். ஆற்றம் கரையிலிருந்து பொசுங்கும் மனித உடலில் இருந்து வரும் மணமும் புகையும் என் மனைவியை அங்கிருந்து விரட்டியது . எனக்கு அருவருப்பை ஏற்படுத்திய போதும், வாழ்வின் நிரந்தரமற்ற தன்மையைக் கண்ணுக்கும் தெரிய வைத்து, சுவாசத்திலும் கலக்க வைத்ததனால் மனிதவாழ்வின் தாற்பரியத்தை புரிந்துகொள்ள முடிகிறது.
வாழ்வு நிரந்தரமற்றது என்பதை மயிர்குட்டிபோல் இலைக்கு இலை தாவும் என்பதை யாக்னவல்லியர் உபநிஷடத்திலும்(SAMSARA) புத்தபெருமான் நிலையற்றது என்று சொல்லியிருந்தார்கள்.
எரி வாயுவில் எரிப்பதற்கு வசதியாக அரசு தகனியை (incinerator) உருவாக்கியிருந்தாலும் ஆற்றங்கரையில் வைத்து மரக்கட்டைகளில் தகனம் செய்வது தொடர்கிறது. இது விடயத்தில் அரசாங்கத்தைத் தவறு சொல்லமுடியாது
இமயமலையின் பனிபாளங்களில் (Melting glaciers) தங்கியிராது மலையில் பெய்யும் மழையில் தங்கியிருப்பதால் . ஆற்றில் அதிக நீரற்று இருப்பதால் ஓடும். நீர் மனித சாம்பல் கலந்து பால் நிறத்தில் தெரிந்தது. நீரற்ற காலமானதால் ஆறு ஓடவில்லை. குட்டையாகத் தேங்கி நிற்கிறது. பிளாஸ்ரிக் கழிவுகளும் மற்றைய சாக்கடைகளும் ஆற்றை மேலும் புனிதமாக்கியது? . நான் பார்த்தபோது மூன்று பிரேதங்கள் எரிந்துகொண்டும் மற்றும் மூன்று கிரிகைகளுக்காகவும் காத்திருந்தன.
“ பிரேதங்களும் கியூவில் காத்திருக்கிறன “ என்ற நகைச்சுவை எனது மனைவிக்குப் பிடிக்கவில்லை.
எரிக்குமிடத்தில் உயர்சாதியினருக்கு ஒரு இடம் மற்றவர்களுக்கு வேறு இடமாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அங்கும் பிராமணர்களுக்குத் தனியான இடம். இறந்த பின்பும் சாதிப்பிரிவுகள் தொடர்கின்றன. அதைவிடப் புதினமாகத் தெரிந்தது ஒரு சாதிப்பிரிவினர் கட்டாயமாக ஓலமிட்டு அழவேண்டும் என்பது. அதை நான் நேரில் பார்த்தேன். வெள்ளை உடை உடுத்தவரகள் சத்தமாக அழுதார்கள்
இங்கு வந்து இறந்தால் மீண்டும் மனிதர்களாகப் பிறப்பார்கள் என்ற நம்பிக்கையினாலும் , இங்குள்ள ஜோதிடர்கள் எப்பொழுது இறப்பது என்பதைச் சொல்வார்கள் என்பதனாலும் ஏராளமான முதியவர்கள் இங்கு வருகிறாரகள்.
பாக்மதி ஆற்றின் அருகே இந்து மதத்தின் முக்கியமான சிவன்கோவில் – பல கோவில்களின் கலவையான பசுபதிநாத் கோவிலும் உள்ளது. . இந்தக் கோவிலில் லிங்கம் தானாகத் தோன்றியதாகச் சொல்லப்படுகிறது . அதற்காக ஒரு தொன்மமான கதையுமுள்ளது.
இடையனிடம் இருந்த பசு ஒன்று வெளியே மேய்ச்சலுக்குப் போய்வரும். தொடர்ச்சியாக அதனது மடியில் பாலிருக்கவில்லை. ஒரு நாள் மர்மத்தை அறிய இடையன் பசுவைத் தொடர்ந்தபோது அந்தப் பசு இங்கு வந்து பால் சொரிந்த படியிருந்தது. நிலத்தைத் தோண்டியபோது அங்கு ஒரு லிங்கமிருந்தது.
இந்தியாவிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள் . 518 ஆலயங்கள் உள்ளன. பிரதான ஆலயம் காவலுக்குட்படுத்தப்பட்டுள்ளது. இந்துக்கள் மட்டுமே உள்ளே செல்லமுடியும். நான் இந்துவென உட்சென்றேன். கோவிலின் முன்பாக மிகப் பெரிய நந்தி செப்பால் செய்யப்பட்டிருந்தது.
இங்கு படமெடுக்க அனுமதியில்லை. எனக்குக் காலில் கடித்தபோது தொலைபேசியை எடுத்துவிட்டு, காலை சொறிந்த போது ஒருவர் வந்து இந்தியில் பேசியதுடன், எனது தொலைபேசியை வாங்கி அதில் நான் பட மெடுத்திருக்கிறேனா..? எனப்பார்த்தார். எரிச்சலாக இருந்தாலும் பொறுத்துக்கொண்டேன். நேபாளியிலோ இந்தியிலோ திருப்பி பேசத் தெரியாது.
தமிழர்களுக்கு முக்கியமான விடயம் ஒன்று சொல்லவேண்டும். எமது நேபாளிய வழிகாட்டியிடமிருந்து பெற்ற தகவல் இது. இப்பொழுது தமிழ்ப் படங்களை நேபாளிகள் விரும்பி பார்க்கிறார்கள். இந்திப்படங்களில் உள்ள அக்க்ஷனிலும் பார்க்க வேகமாகவும் விறுவிறுப்பாகவும் தமிழ்ப்படங்கள் இருக்கின்றன என்று அவர்கள் சொன்னபோது எனக்குப் புல்லரித்தது. இமயமலைக்கருகே எமது புகழ் எட்டியிருக்கிறதே..?
பார்டன் நகரம்
காட்மாண்டு பள்ளத்தாக்கில் மூன்று அரசுகள் இருந்தன அவற்றில் ஒன்று இருந்த இடம் பார்டன் என்னும் நகரம். இதுவே நேபாளத்தில் பழமையான நகரம்.நாங்கள் இருந்த இடத்திலிருந்து காட்மாண்டு போக்குவரத்து நெருசலுடாக ஒரு மணி நேரப் பிரயாணமாக இருந்தது. அத்துடன் சிற்ப சித்திர மற்றும் கட்டிடக் கலைஞர்கள் இருப்பதால் அந்த இடத்தை லலிதப்பூர் என்கிறார்கள். இங்கு உள்ள கட்டிடங்கள் பெரும்பாலானவை 16ம் நூற்றாண்டில் நிர்மாணிக்கப்பட்டாலும் 6ம் நூற்றாண்டில் இருந்து வணக்கத்தலங்கள் கோவில்கள் எல்லாம் தொடர்ச்சியாக வழிபாட்டுத்தலங்களாக இருக்கின்றன. மல்லா ராஜவம்சமே இங்கு அமைத்தது. அரசமாளிகை, கோயில்கள், பகோடாக்ள், மற்றும் அரண்மனைக் குளிப்பகங்கள் எல்லாம் சேர்ந்து தர்பார் சதுக்கம் எனப்படும் இதுவும் யுனெஸ்கோவால் முக்கிய இடமாகப் பாதுகாக்கப்படுகிறது. கங்கையும் யமுனாவும் நேபாளம், இந்தியாவிலிருந்த இஸ்லாமிய அரசுகளால் இரு முறை படையெடுக்கப்பட்ட போதும் அவர்களின் அரசாட்சிக்கு உட்படவில்லை இந்தியா, இலங்கைபோல் மேற்கத்தியக் காலனித்துவத்துக்குள் போகவில்லை. பிரித்தானியர்கள், படையெடுத்து தோல்வி கண்டார்கள். பிரித்தானியப் படைகளை நேபாளிய மலைகள் தோற்கடித்தன எனலாம். பிரித்தானியர், நேபாளத்தின் சில பகுதிகளை ஒப்பந்தத்தின் மூலம் எடுத்துக் கொண்டார்கள் . தொடர்ச்சியான இந்து மதத்தின் தாக்கங்களை இந்தியாவை விட நேபாளத்தில் பார்க்க முடிந்தது. அதே வேளையின் அருகருகே புத்த சமயத்தின் தாக்கத்தால் இரண்டறக் கலந்த நிலை தெரிந்தது.
இங்கு பெண் தெய்வதத்திற்கான கோயில், தர்பார் சதுக்கத்தில் உள்ளது. புத்தரின் கட்டளையில் உருவாக்கப்பட்டதாக தொன்மக்கதை கதை உள்ளது அது விசேடமாகக் குழந்தைகளுக்கு வரும் நியுமோனியா எனப்படும் சுவாச நோயைத் தடுப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.
இங்கு மன்னன் அசோகன் தனது மகளான சாருமதியுடன் வந்து பல ஸ்தூபிகளைக் கட்டியதாக கதையுள்ளது. அரசர்களது மாளிகைகளைச் சுற்றிப் பல புத்த, இந்து தேவாலயங்கள் உள்ளது . மகாபாரத பீமனுக்கு இங்கு கோயில் உள்ளது. கங்கைக்கும் யமுனைக்கும் அவர்களது வாகனங்களுடன் சிலைகளை அமைத்துள்ளார்கள்.
2015 ஆண்டு நடந்த பூகம்பத்தில் பல கட்டிடங்கள் இடிந்துவிட்டது . தற்போது கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
நேபாளத்தில் வினோதமான சடங்குகள்
நேபாளம் என்ற பெயர் வந்து 250 ஆண்டுகளே. இந்தியாவைப்போல் பல சிறிய அரசுகள் இருந்த பிரதேசம் . கூர்க்கா பிரதேசம் என்ற நேபாளத்தின் வடபிரதேசத்தை ஆண்ட கடைசி மன்னன் பிருதிவி நாராயணன் ஷா தனது ஆட்சியில் முழுப்பிரதேசத்தையும் ஒன்றிணைத்து நேபாளத்தை இந்து நாடாக பிரகடனப்படுத்தினான். – அக்காலத்தில் இஸ்லாமியர்கள் இந்தியாவை ஆண்டார்கள். இதன் பின்பு முழு நேபாளம் கூர்க்கா நாடக சொல்லப்படுகிறது . இந்திய ராஜபுத்திர வம்சத்தில் வந்த பிருதிவி நாராயணனது வம்சமே பிற்காலத்தில் தொடர்ந்து நேபாள மன்னர்களாக இருந்தார்கள் .
நேபாளத்தின் காட்மாண்டு பள்ளத்தாக்கில் மட்டும் மூன்று அரசுகள் இருந்தன. காட்மாண்டில் இருந்து 11 கிலோ மீட்டரில் உள்ளது பக்ரபூர் . இங்கு பல ஆலயங்கள் மற்றும் அரண்மனைகள் உள்ளன. ஆனால் அரண்மனை தற்பொழுது மியுசியமாக உள்ளது.அந்த மியுசியத்தில் பல கடல்வாழ் உயிரினங்களின் எச்சங்கள் இருந்தன.
அரசமாளிகை மாளிகையருகே ஒரு மாளிகையுண்டு. குமாரி கார் அல்லது குமாரியின் மனை என்று ஒன்று உள்ளது . இது ஒரு அழகான சித்திர வேலைப்பாடுகள் கொண்ட வீடு. இங்கு ஒரு சிறிய இளவரசியாக வாழ்கிறாள். மூன்றிலிருந்து ஐந்து வயதில் ஒரு பண்டிகை நாளில் நேவாரிய இனத்தின் சாக்கிய பிரிவிலிருந்து ஒரு சிறுமியைத் தேர்ந்தெடுத்து அவளை இளவரசியாகப் பல வருடங்கள் கொண்டாடுவார்கள் . இன்னமும் அந்த பழக்கம் நேவார மக்களிடம் தொடர்கிறது.
இந்தப்பழக்கம் 200 நூற்றாண்டுகள் முன்பாகவே உருவாகியது. இதற்கும் ஒரு தொன்மக் கதையுள்ளது.
ஜயபிரகாஸ் என்ற மல்லா வம்சத்து மன்னனுடன் ஒவ்வொரு இரவும் அந்த நகரின் காவல் தேவதையுடன் தாயம் விளையாடிவந்தாதார் . அவருக்கு ஒரு நாள் அந்த காவல் தெய்வத்தின்மேல் காமம் வந்துவிட்டது . காவல் தேவதை அதன் பின்பு மன்னனிடம் வருவதில்லை .
தவற்றை உணர்ந்த மன்னன் பாவமன்னிப்பாகச் ஒரு சிறுமியை அவள் வயதுக்குவரும் வரையில் இளவரசியாக வணங்குவது ஒரு வழக்கமாகிவிட்டது. மன்னராட்சியற்ற காலத்திலும் இது நடக்கிறது இப்படி11 சிறுமிகள் நாடெங்கும் இருந்த போதிலும் பக்ரபூரில் உள்ள பெண்ணே இராஜகுமாரியாகக் கருதப்படுவாள் .
இந்த குமாரியின் இல்லம் சென்று 15 நிமிடங்கள் அவளைத் தரிசிக்க நாங்களும் நின்றோம் மாடியில் வசிக்கும் அவளை எமது வழிகாட்டி கூக்குரலிட்டு அழைத்தும் பார்த்தான். அந்த ராஜகுமாரி எங்களுக்கு காட்சியளிக்க வரவில்லை . எனக்குப் போர் அடித்தது வெளியே வந்துவிட்டேன் .
இதைவிட மிகவும் வினோதமான ஒரு பண்பாடு இவர்களிடம் உள்ளது, இந்த நேவாரிகளிடம். பெண் குழந்தைகள் வயதுக்கு வருமுன் விளாம்பழத்தை மணப்பார்கள்
ஏன் விளா பழம்?
தடிப்பான கோதுள்ளது. இதேபோல் பலமான கணவன் வரவேண்டுமென நினைக்கிறார்கள் ‘
இரண்டாவது முறையாக சூரியனை மணப்பார்கள்
பருவமடைந்து பெரிய பெண்ணாகியதுமே இளைஞர்களை மணப்பார்கள் . இதனால் இவர்கள் விதவையாகினாலும் அது குறைபாடாகத் தெரிவதில்லை . மீண்டும் திருமணம் செய்ய முடியும். ஒரு விதத்தில் மிகவும் முன்னேற்றமானதும் தற்காலத்துக்குப் பொருத்தமான சடங்காக எனக்குத் தெரிந்தது.
பல இளம் பெண்கள் கல்யாணம் பெண்களாக அலங்கரித்து தாய்மாருடன் வந்தார்கள். புகைப்படத்துக்களை எடுத்தார்கள் நாங்களும் எடுத்தோம் . புகைப்படத்துக்களை எடுத்த பின்பே எனது வழிகாட்டி மூலம் காரணத்தையறிந்தேன்.
பவுத்தநாத் தூபி
பவுத்தநாத் தூபி திபெத்திய அரசனால் கட்டுப்பட்டது . உலகத்திலே பெரிய துபா என்கிறார்கள் .வெள்ளை நிறத்தில் பிரமாண்டமானது சுற்றிபார்பதற்கு முன்பாக எங்களுக்கு அதற்கு எதிரே உள்ள உணவகத்தில் இருந்து பார்ப்பதற்கு இடம் கிடைத்தது . நான்கு பக்கத்திலும் தூபியில் வரைந்துள்ள கண்கள் எங்கள் கண்ணைக் கொள்ளையிடும்
தூபிக்குள் சித்தார்த்த புத்தரின் எலும்புகள் இருப்பதாகவும் அதைவிட சாக்கிய முனி பிறப்பதற்குப் பலகாலங்கள் முன்பு வாழ்ந்த காசியப்பா என்ற புத்தரின் எலும்புகள் உள்ளதாகவும் தொனமக்கதையுள்ளது . இங்கு புத்தர் என்பது ஞானம் பெற்றவர் என்று அர்த்தமாகும்.
மக்களுக்கு நீரற்றுப்போனபோது அரச குலத்தவரை பலியிடும்படி சோதிடர் சொன்னார் .அதனால் மன்னன், தனது தந்தையைக் கொன்றதால் ஏற்பட்ட குற்ற உணர்வில் உருவாக்கியது இந்தத் தூபி எனவும் தொன்மக் கதையுள்ளது
2015ல் பூகம்பத்தில் உடைந்து மீண்டும் திருத்தப்பட்டுள்ளது
நாகர்கோட்(Nagarkot)
நாகர்கோட், காட்மாண்டிலிருந்து 36 கிலோமீட்டர் தொலைவில் மலைமேல் பாதை முழுவதும் கிடங்கும் பள்ளமும் குலுங்கியபடி வாகனத்தில் சென்றோம். இடைவெளியில் திரும்பி வருவோமா என நினைத்தபடி இருந்தேன். பாதையோரத்து மரங்கள் புழுதி மூடி மரங்கள் பச்சைத் தன்மையற்று இருந்தன . மலை பகுதியெங்கும் வீடுகள் கட்டப்பட்டிருந்தது. புதிதாகக் கிராமங்கள் உருவாகின்றன.அதற்கேற்ப அரசாங்கத்தால் பாதைகள் அமைக்க முடியவில்லை அங்கு சென்றபோது மிகவும் குளிராக இருந்தது.
நாங்கள் தங்கிய இடம் விடுதிபோல் சிறிய கட்டிடம் . ஏராளமான மாணவர்கள் மாணவிகள் கல்வி சுற்றுலாவுக்கு வந்திருந்தார்கள்.
இரவில் வெளியில் அதிகம் தெரியவில்லை .இம்மலைத்தொடரும் அதனது சிகரங்களான எவரஸ்ட் – அன்னபூரணா- மனசு எல்லாம் பனி மூடியபடியிருந்தது. காட்மாண்டுவில் இருந்து வருபவர்களுக்கு இது கோடை வாசஸ்தலம் போன்றது
காலையில் ஆறரைமணியளவில் எழுந்து சூரியோதயம் பார்த்தபோது இமயமலைத் தொடர்மேல் சிறிதாக சுண்ணாம்பு தடவி கொழுந்து வெற்றிலை போட்ட பெண்ணின் உதடாகச் சிவந்திருந்தது.
பனிபடர்ந்த அந்த சிகரங்களில் அழகை பார்த்துக்கொண்டிரும்போது மெதுவாகச் சிவப்பு சூரியன் எட்டிப் பார்த்து பார்த்தது. ஒரு நிமிடத்தில் காலால் அடித்த பந்தாக சூரியன் மேலெழுப்பியது. இப்படியான ஒரு வேகமாக உதயமாகியதை இதுவரை நான் பார்த்ததில்லை.
மூன்றுமணிநேரம் இடுப்புவலி ஏற்படச் சென்றதற்கு அந்த கணமே பெறுமதியானது என நினைத்தேன் .திரும்பி வரும்போது கொஞ்சம் பரவாயில்லை. ஜீப்பை அனுப்பியிருந்தார்கள் .
[தொடரும்]
uthayam12@gmail.com