இலங்குநூல் செயல் வலர் – க.பஞ்சாங்கம்-11 : பேச்சும், பனுவல் வாசித்தலும்

நாகரத்தினம் கிருஷ்ணாஉயிரியக்கம் ஓசையால் உறவாடுகிறது. புலன் உணர்வுகளின் வெளிப்பாடுகள் அனைத்துமே ஒருவகையில் பேச்சின் உட்பிரிவுகள்தாம். நமது  பார்வைக்கும் உறவுக்கும் ஓசையும் மொழியும் தரும் உருமாற்றம் ‘பேச்சு’. மொழியைக் குழைத்தும் பிசைந்தும் கிடைக்கிற பேச்சுக்கு இலக்கியம் ஓர் நிரந்தர பிம்பத்தை ஏற்படுத்தித் தருகிறது பேச்சு செயல்பட சில அத்தியாவசியப் பொருட்கள் தேவை.ஓசை, உச்சரிப்பு, தொனி, கால பிரமாணம், பேசுபவர் கேட்பவர் இருவருக்குமிடையேயான உறவு, பேச்சில் தொடர்புடைய இரு மனிதர்களின் தகுதரம், இடங்கள் (உதாரனத்திற்கு நேருக்கு நேரா, ஆளுக்கொரு திசையில் இருந்துகொண்டா?) பேச்சுக்கு பேசுகின்ற நபரின் தேவை எந்த அளவிற்கு முக்கியமோ அந்த அள்விற்கு கேட்பவர் என்று ஒருவர் வேண்டும் இல்லையேல் அப்பேச்சால் எவ்வித பயனுமில்லை. நட்போ பகையோ இரண்டிற்கும் பேச்சு வேண்டும். எண்ணத்தை ஓசையுடன் பகிர்ந்து கொள்ள பேச்சு உதவும், அதே எண்ணத்தை மௌனமாக பகிர்ந்துகொள்ள எழுத்து உதவும். பேச்சு மொழி கேட்கும் தருணத்தில் மட்டுமே செயல்படமுடியும், மாறாக எழுத்து வடிவ பேச்சு எழுதிய தருணத்தைக் கடந்து நிற்கும். எடுத்துரைப்பில்  பேச்சு தவிர்க்கமுடியாததொரு தனிமம். எடுத்துரைப்பு குறித்த பேராசிரியரின் திறனாய்வு கட்டுரைகளில் எட்டாவது அத்தியாயத்தில் பேச்சும், அதனைத் தொடர்ந்து பனுவல் வாசிப்பும் இடம்பெற்றுள்ளன

கிரேக்கத்ததுவாதிகள் பிளாட்டோ, அரிஸ்டாடில் இருவரின் பேச்சுக்களைபற்றிய சிந்தனைகளுடன் கட்டுரை தொடங்குகறது. பேச்சு, பாவனையான பேச்சு என்ற இருவகையான பேச்சுகள் அவற்றின் உட்கூறுகளைப்பற்றிய சிலவிளக்கங்களும் நமக்குக்கிடைக்கின்றன. எழுத்திலக்கியத்தை பொறுத்தவரை பாவனைபேச்சு முக்கியம் பெறுகிறது. பாவனைபேச்சே நாடகம் எனச் சொல்லப்படுகிறது. அரிஸ்டாட்டில் கருத்தின்படி பாவனையானப் பேச்சு,  வார்த்தை சார்ந்தது மட்டுமல்ல, போலச் செய்தல் என்ற செயல்பாடும் அதற்குள் வருகிறது. ஆசிரியர் “போலச் செய்தலைப் பல்வேறுவகையில் பொருள்கொள்ள வாய்ப்பிருப்பினும், அதனில் நாடகமாந்தர்களின் உடலசைவு, பேச்சு, நடத்தல் போன்றவைகளை மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்ளலாம்”, என்கிறார். காட்சிப்படுத்துதல் பனுவல் என்று வருகிறபோது அதன் பங்குதாரர்களின் நிலமை என்ன? முதலாவதாக எடுத்துரைப்பாளர், இவர் காட்சிபடுத்துதலில் நிகழ்ச்சிகள் அல்லது உரையாடல்கள்  நேரடியாகக் காட்டப்பட்டதால் காணாமற்போய்விடுகிறார், வாசகர்கள் பனுவலில் தன் வாசிப்பின் மூலம் பார்த்ததையும் கேட்டதையும் குறித்து தானே ஒரு முடிவு மேற்கொள்ளும் உரிமை உடையவர்களாக இருக்கிறார்கள்.

இது தவிர இன்றைய நாவல் கலை என்ற ஒன்று உருவானதற்கு நாவலாசிரியர்கள் தங்கள் கதைக் காட்சிப்படுத்தவேண்டிய ஒன்று என்கிற சிந்தனைக்கு இடம்கொடுத்ததே காரணமென்ற தகவலையும் கட்டுரை ஆசிரியர் தருகிறார். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி, பிரெஞ்சு முடியாட்சி தமது செல்வாக்கை இழந்திருந்த காலம். பிரெஞ்சு நிர்வாசபையில் பிரபுக்களும், மதகுருமார்களும்  பொருளாதார நெருக்கடிகாலத்திலும் பெற்றிருந்த சலுகைகள் பொதுமக்கள் பிரநிதித்துவசபையையும் அவர்களுக்கு ஆதரவாக இருந்த ஒரு சில பூர்ஷ்வாக்களையும், ஒன்றிரண்டு மதகுருமார்களையும் எரிச்சலைடையச் செய்தன.  அதன் பின்னர் நடைபெற்ற பிரெஞ்சு புரட்சியையும் அதன் அரசியல் விளவுகளையும் அறிவோம். கலை இலக்கியத்தில் வேறொரு புரட்சிக்கு அது காரணமாயிற்று. படைப்பிலக்கியவாதிகள் முடியாட்சி, மதகுருமார்கள், பிரபுக்கள், அதீதக் கற்பனைகள், வியந்தோதல்கள்  அதாவது கற்பனாவாதவ் கூடாதென்று எதார்த்தவாதத்தின் பக்கம் ஒதுங்குகிறார்கள். சராசரி மாந்தர்களும் அவர்களுடைய பிரச்சினைகளும் புனைவுகளில் இடம்பெறத் துவங்கின. நேர்க்கூற்று முறை தவிர்க்கபட்டது. கதைமாந்தர்களூடாக பேசினார்கள். பேராசிரியர் குறிப்பிடுகிற காட்சிப்படுத்தும்போக்கு இக்காலகட்டத்தில்தான் புதினங்களில் அதிகம் காண முடிந்தது. பாவனையானப் பேச்சு என்பது வார்த்தைபேச்சு மற்றும் போலசெய்தல் என்று பார்த்தோம் – பொதுவில் இதனைக் காட்சிப்படுத்துதல் என வைத்துக்கொண்டு, இம்முறை கற்பனாவாத பேச்சுமுறையைக் காட்டிலும் சரியானதாவென்ற கேள்விக்கு, இரண்டிலும் சாதகப் பாதகப் பலன்கள் ஒரு பனுவலில் இருப்பதற்கு வாப்புகள் உண்டெனவும், எடுத்துரைப்பின் வெற்றி தோல்வி என்பது உத்திகளில் இல்லை அவற்றின் செயல்பாட்டிலேயே உள்ளன என்றும் தெரிய வருகிறது.

போலச் செய்தலில் ஏற்படும் சிக்கல்கள்

போலச்செய்தல் என்பது நாடகப் பேச்சு அல்லது காட்சிபடுத்துதல். இத்தலைப்பில் காட்சிப்படுத்தலிலுள்ள சிக்கல்களை பேராசிரியர் கூறியுள்ளார்.  ஒரு புனைகதை எடுத்துரைப்ப்பில் இடம்பெறும் நிகழ்வுகளை அப்படியே உள்ளது உள்ளவாறு (tel qu’il est) காட்சிப்படுத்தவியலாத சூழல் இருப்பதற்கு பனுவல் மொழியையும் குறியீட்டையும் நம்பியிருப்பதைக் காரணமாகச் சொல்கிறார். அதேவேளை மொழிகொண்டு ஏறக்குறைய ஒரு போலச்செய்தலை ( முழுமையானப் போலச்செய்தல் அல்ல) அதாவதொரு காட்சிபடுத்துதலை செய்யமுடியும் எனத் தெரியவருகிறது. அப்படி காட்சிபடுத்துகிறபோது எடுத்துரைப்பில் எடுத்துரைப்பாளர் தமது இடத்தைத் தொலைக்கிறார், விளைவாக அவர் கையிலுள்ள  காட்சிப்படுத்த உதவுகிற மொழிக் கேமரா, நாவலில் முக்கித்துவம் பெறுகிறது. காட்சிக்குதவுகிற இப் பாவனைமொழி கால அளவு, தகவல் அளவு என்பதுபோன்ற பல்வேறு அளவீடுக் கருவிகளைக்கொண்டு வெவ்வேறுவிதமான செயல்பாட்டுதளத்தில் இயங்குகிறது. அவை நேரடிப்பேச்சு, சுருக்கம், மறைமுகச்சொல்லாடல், சுதந்திரமான மறைமுகச் சொல்லாடல், நேரடிச் சொல்லாடல், சுதந்திரமான நேரடிசொல்லாடல், சுதந்திரமான மறைமுகச்சொல்லாடல் என வகைப்படுத்தப் பட்டுள்ளன. புனைவில் அதிகம் இடம்பெறும் சுதந்திரமான மறைமுகச்சொல்லாடலின் மொழி இயல்கூறுகளுக்கு உதாரணமாக  அறிவிப்பு சார்ந்த வினைச்சொற்கள், காலம் காட்டும் அமைப்பு, வினாக்கள், விவாத முறைக்கூறுகள் சொல்லப்பட்டுள்ளன. இதன் செயல்பாடுவகைகள் என நாம் அறியவருபவை:

1. பேசுபவர்களை அடையாளப்படுத்துவது மற்றும் என்னபேசவேண்டும் என்பதை வடிவமைப்பது
2. ஒரு பனுவலின் பன்முகத்தன்மையை (பேச்சாளர்கள் மற்றும் அவர்களின் அணுகுமுறைகளில்) பெருக்கிக்காட்டுதல்
3. மற்றொரு மாற்றமைப்பினை அதே பனுவலுக்குள் அடையாளங் காண உதவுவதால், பனுவலுக்குக் கூடுதலான அர்த்தச் செறிவை அளித்தல்.
4. சிந்தனையை மறுவுருவாக்கம் செய்துகொள்ள வழியமைத்துத் தருவதால் நனவோடை உத்திக்குப் பயனளிக்கிறது.
5. கதை மாந்தர்களின் தன்மைக்கேற்ப பனுவலுக்குள் ஒளிந்திருக்கும் படைப்பாளியின் நடவடிக்கைகளையும் மறுவுருவாக்கம் செய்ய துனைசெய்தல்.

பனுவல் வாசித்தல்:

எடுத்துரைப்பினை திறனாய்வுக்கு எடுத்துக்கொண்ட ஆசிரியர் இப்பகுதியில் வாசிப்பு அதன் தன்மைகள், இயங்கும் விதம், அதன் அடிப்படிப்படையில் கிடைக்கிற வாசகர்கர்களின் பன்முகத்தன்மை ஆகியவற்றை விளக்க முற்படுகிறார். ஒரு புனுவலைப் படைத்தலைப்போலவே, அப்பனுவலை வாசித்தலும் படைப்பிலக்கியத்தில் முக்கியத்துவம் பெறுகிறது என்பதனை மிகவும் தெளிவாகவும் விரிவாகவும் ஆசிரியர் இப்பகுதியில் சொல்லியிருக்கிறார். “ஒரு பனுவலை ஒரு பொருளில் இரண்டுதடவை வாசிக்க முடியாதென்பதின் அடிப்படையிலேயே” வாசித்தல் இயங்குதளத்தில் எடுத்துரைப்பு குறித்து திறனாய்வுசெய்தவர்கள் அக்கறை காட்ட காரணமாயிற்று. இங்கே, ” ஒரு பனுவல் வாசிக்கப்படுகிற தருணத்தில்மட்டுமே உயிர்ப்பினை பெறுகிறது எனவே ஒரு பனுவல் வாசகனின் பார்வையிலிருந்து பார்க்கப்படவேண்டும்” என்கிற ஐசர் என்பவர் கருத்தும் மிக முக்கியமானது. தனது சிந்தனையை, கற்பனையை தனக்குரிய மொழியில் நடையில் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஒரு படைப்பாளி பனுவலில் கொண்டுவருகிறார். அப்பனுவலில் தான் சொன்னதாக படைப்பாளி நினைத்ததையெல்லாம் அதே கனத்துடனும், அடர்த்தியுடனும், மென்மையுடனும் வாசிப்பவர் உள்வாங்கியிருப்பாரா என்பது கேள்வி.

“பனுவலின் உருவாக்கத்தில் வாசகர் பங்கெடுப்பதுபோலவே வாசகரை வடிவமைப்பதில் பனுவல் பங்கெடுக்கிறது” என்ற கருத்தும் சிந்திக்கத்தக்கது.  ஆக முழுக்க முழுக்க ஒரு படைப்பாளியால் அல்ல, ஒரு வாசகராலேயே பனுவலொன்றின் சிறுமையும் பெருமையும் தீர்மானிக்கப்படுகின்றன என்ற உண்மையை அண்மைக்காலத்தில் முன்வைக்கபட்ட எடுத்துரைப்பு சிந்தனைகள் தெரிவிக்கின்றன. வாசகரை முதன்மைப்படுத்தும் இந்த அணுகு முறையை பேராசிரியரின் கட்டுரை ‘நிகழ்தல்’ என்று சொல்கிறது. இருவகை நிகழ்வுகள் சுட்டிக்காட்டப்படுகின்றன.

1. தன்னிச்சையாய் சுயமாய் இயங்கும் நிகழ்வு
2. பலபடித்தாய் இயங்கும் நிகழ்வு

நிகழ்வை ஆற்றுகிற வாசகர்களை அவர்களின் அணுகுமுறையின் அடிப்படையில் வகைப்படுத்தியுள்ளார்கள்:

1. உண்மையான வாசகர்கள்
2. மேலான வாசகர்கள்
3. அறிவார்ந்த வாசகர்கள்
4. இலக்கிய வாசகர்கள்
5. மாதிரி வாசகர்கள்
6. உள்ளுணர்வு வாசகர்கள்
7. கொள்கைவாசகர்கள்

மேற்கண்ட ஏழுவகை வாசகர்கள் பல்வேறு திறனாய்வாளர்களால் சுட்டிக்காட்டபட்டவர்கள். சற்று ஆழ்ந்து பரிசீலித்தால் இன்னுங்கூட சில பெரும்பிரிவுகளையும், கிளைபிரிவுகளையும் அவற்றில் சேர்க்க முடியும். தொல்காப்பிய ஆசிரியர் காட்டுகிற வாசகர் ஓர் உதாரணம் : “கண்ணினும் செவியினும் திண்ணிதின் உணரும்  உணர்வுடைய மாந்தர்” -பனுவலோடு இரண்டறக் கலந்து ஒட்டிக்கிடக்கிற ஒருவர்.

வாசித்தலின் இயங்கியல்

ஏற்கனவே நாம் பார்த்ததைப்போன்று பனுவலின் மொழி, அதன் குறியீடு,  அதுசார்ந்த சிக்கல்கள், வாசகரின் அணுகுமுறைகள் ஆகியவற்றைப் பொருத்தது.. தொடக்கத்தில், வாசகரின் தனித்தன்மையை விரட்டிவிட்டு தனது போக்கிற்கேற்ப வாசகரை அது மாற்றுகிறதென்றும், சிறிது சிறிதாகத் தகவல்களைத் தருவதன்மூலம் எந்நேரமும் அவற்றை இணைத்துகொள்ளும்படியான சூழலை அமைத்துக் கொடுக்கிறதென்றும், அதனால் பல வாசிப்புப் படிநிலைகளுக்கு வாசகர்கள் போகமுடிகிறதென்றும், வாசித்தலின் இறுதிப்பகுதி பனுவல் குறித்த முடிவான ஒரு கருத்தினை எட்ட உதவுகிறதெனவும் தெரியவருகிறது.

ஒரு பனுவலுக்குள் படைப்பாளரைப் பொறுத்து பல்வேறு வாசிப்பு அணுகுமுறைகள் கிடைக்கின்றன. இது மிகவும் சிக்கலானது பனுவலில் படைத்தலுக்குத் தீர்மானமாக இவைதான் விதிகள், இலக்கனங்கள் என்றில்லை என்பதாலேயே வாசிப்பும் ஓர் திறந்த வெளியாக இருக்கிறது அங்கு புரிதலுக்குரிய முயற்சிகள் ஓயாமல் நிகழ்கின்றன. வாசிப்பும் விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டு வாசிப்பவரின் திறனுக்கொப்ப நிகழ்கிறது.

பனுவலை இயல்பானத் தன்மைக்குக்கொண்டுவருதல்:

புழக்கத்திலிருக்கிற சில சொல்லாடல்களோடு உறவுபடுத்திக்கொள்வதையே, ஒரு பனுவலை இயல்புத் தன்மைக்குக்கொண்டு வருதல் என்கிறார்கள், உதாரணம் ரொலா பார்த்தின் ‘சமிக்கை’.

சமிக்கை என்றால் என்ன? “ஏற்கனவே மன அமைப்பில் உறைந்துபோன தூரத் தோற்றம், ஏதோ ஒன்றின் பல்வேறுபட்ட சிதறல் கனவாகும். இவைகள் அனைத்தும் ஏற்கனவே வகுக்கப்பட்டவை, பார்க்கப்பட்டவை, செய்யப்பட்டவை, அனுபவிக்கப்பட்டவை. சுருக்கமாகச்சொல்வதெனில் ஏற்கனவே இருப்பவைகளை எழுப்பி விடுபவை (ந.இ.கோ பக்கம் 241)

எவ்வாறு ஒரு பனுவல் தொடர்ந்து வாசிக்கும்படி வாசகரைத் தூண்டுகிறது

“நான் இன்னும் முழுமையாக இந்தப்பனுவலை அறியவில்லை அல்லது உணரவில்லை’ என்று வாசகரைத் தவிக்க வைக்கிற பனுவல் தொடர்ந்து வாசிக்கும்படி செய்கிறதாம். இத்தவிப்பினை இருவகைகளில் பனுவல் உருவாக்குகிறதென்று அறிகிறோம்

1. காலம் தாழ்த்தல் 2. இடைவெளிகள்

1. காலம் தாழ்த்தல்

தகவல்களைச் சொல்லவேண்டிய இடத்தில் சொல்லாமல் தள்ளிப்போடுதலே காலம் தாழ்த்தல். தகவல்களை அதற்கு முக்கியத்துவத்திற்கேற்ப இருவகை கால அலகுகளால் பிரித்திருக்கிறார்கள்

அ. எதிர்காலம் சார்ந்தது ஆ. இறந்த காலம் சார்ந்தது
அ. எதிர்காலம் சார்ந்தது: அடுத்தது என்ன? என்ற வினாவை உயிர்ப்புடன் வைத்து, ஆர்வத்தைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ளும் பணியைப் பனுவல் செகிறது
ஆ. இறந்தகாலம் சார்ந்தது: முடிவைத் தெரிவித்துவிட்டு, முடிவின் காரணம், அதற்குப் பொறுப்பு யார்? புதிருக்கு விடைதேட இம்முறை உதவுகிறது.

2. இடைவெளிகள்

ஒரு பனுவலைத் தொடர்ந்து வாசிக்கும்படி செய்வதில் இடைவெளிகளுக்குப் பங்கிருக்கின்றன எனசொல்லப்படுகிறது. அதென்ன இடைவெளி? வாழ்க்கையை இயக்குகிற அனைத்திலும் இடைவெளிகள் இருக்கின்றனவென்றும் உதாரண்மாக இயறகைக்கும் மனிதனுக்குமான இடைவெளி, அறிவு இடைவெளி, உணர்வு இடைவெளி… போன்றவை.  எனவே இவற்றைபற்றி பேசுகிற பனுவலிலும் இடைவெளிகள் தவிர்க்க முடியாதவை பேராசிரியர்  ஐசர் கருத்தை மேற்கோள் காட்டுகிறார்:

“எந்தவொரு கதையும் முழுமையாகச் சொல்லப்படுவதில்லை. உண்மையில் தவிர்க்க முடியாத சில கூறுகளை நீக்கிவிட்டுச் சொல்வதன் மூலமாகத்தான் ஒரு கதை தனக்கான இயக்கத்தைத் தக்கவைத்துக் கொள்கிறது. கதையின் ஓட்டம் எப்பொழுது தடைபடுகிறதோ, கதை எப்பொழுது எதிர்பாராத திசையில் வாசகரை இழுத்துச் செல்லத் தொடங்குகிறதோ  அப்பொழுது எல்லாம், தன் சொந்த காரண காரண-காரிய அறிவு பலத்தின்மூலம் தொடர்பினை நிறுவிப் பனுவல் விட்டுச்சென்ற இடைவெளிகளை நிரப்பிக்கொள்வதற்கான வாய்ப்புக் கிடைக்கிறது” 

எனவே தகவல் இடைவெளி, காலம் தாழ்த்துதலினும்பார்க்க முக்கியத்துவம் வாய்ந்தது. தவிர இடைவெளியில் உள்ள கீழ்க்கண்ட பண்புகள் கவனத்திற்கொள்ளப்படவேண்டியவை.

– அது தற்காலிகமாகவும், நிரந்தரமாகவும் இருக்கிறது

– தற்காலிக இடைவெளி ஏதோ ஒரு இடத்தில் நிரப்பக்கூடியதாகவும், நிரந்தர இடைவெளி இறுதிவரை நிரப்ப முடியாமலும் போய்விடுகிறது

– வாசிக்கிற கணத்தில் ஈர் இடைவெளி தற்காலிகமா அல்லது நிரந்தரமா என்ற முடிவுக்கு வர இயலாதது

– தற்காலிக இடைவெளிகள் காலத்தின் நேரத்திற்கும் பனுவலின் நேரத்திற்கும் இடையிலுள்ள முரண்களால் உருவானவை

– பனுவலில் இடைவெளிகள் அதற்குரிய வளத்தோடு சிறப்பாக அமைந்திருக்கும்போது வாசிப்பு செயல்பாடு இயல்பாகவே இடைவெளியை நிரப்புகிறது.

ஆகப் பொதுவில் காலம் தாழ்த்த்துதலும் இடைவெளியும் வாசகர் ஆர்வத்தைத் தூண்டித் தொடர்ந்து பனுவலை வாசிக்க வைக்கின்றன.

-முற்றும்


பி.கு. ஏற்கனவே லூறியதுபோன்று இக்கட்டுரைகள், பேராசிரியரின் கட்டுரைகளுக்கான அறிமுகமேயன்றி முழுமையானவை அல்ல. அக்கடுரைகளின் முழுப்பயனையும் அடைய பேராசிரியர் நூலை வாசிக்கவேண்டும். நவீன இலக்கிய கோடுபாடுகள் தொகுப்பிலுள்ள் எடுத்துரைப்பு பற்றிய உண்மைகள் படைப்பிலக்கியத்தில் ஆர்வமுள்ள அனைவருக்கும் பயனுள்ள பகுதி, படைப்பாளிகள் வாசகர்கள் என்ற இரு தரப்பினருக்கும் உதவகூடியவை. படைப்பாளிகக்கு ஒரு பனுவலைத் தரமாக படைக்க உதவும் என்பதைப்போல வாசகர்களுக்கு ஓர் பனுவலை எப்படி வாசிக்க வேண்டும் என்பதற்கான வழிமுறையை அளிக்கும். பேராசிரியரின் கடல் போன்ற மொழிஞானத்தையும்  உழைப்பின் பயனையும் முழுமையாகப் பெற அவரது நூல்களை வாங்கிப் பயனடையுங்கள் – நன்றி:

க.பஞ்சாங்கம் கட்டுரைகள்: நவீன இலக்கியகோட்பாடுகள்
காவ்யா பதிப்பகம்
சென்னை -24

nakrish2003@yahoo.fr