தமிழ் ஸ்டுடியோவின் சிறுவர்கள் ரசனை வளர்க்கும் திரைப்படங்கள் திரையிடல் – 7

தமிழ் ஸ்டுடியோவின் சிறுவர்கள் ரசனை வளர்க்கும் திரைப்படங்கள் திரையிடல் – 7நாள்: 01-02-2015, ஞாயிறு, மாலை 5.30 மணிக்கு.
இடம்: சாதனா நாலெட்ஜ் பார்க், பிளாட் நம்பர் 367, 32வது தெரு, 6வது செக்டார், கே.கே. நகர் தொடர்புக்கு: 7299855111 & 9840698236
திரையிடப்படும் படம்: தி கிட் (The Kid) (இயக்கம்: Charlie Chaplin)

நண்பர்களே தமிழ் ஸ்டுடியோ மற்றும் சாதனா நாலெட்ஜ் பார்க் இணைந்து ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக் கிழமை சிறுவர்களுக்கான சினிமா ரசனையை வளர்க்கும் பொருட்டு ஒவ்வொரு சிறுவர்களுக்கான திரைப்படங்களை திரையிட்டு விவாதித்து வருகிறோம். மிக மோசமாக தொலைக்காட்சிகளும், தமிழ் சினிமாவும் குழந்தைகள் மீது பிம்பங்களால் ஆன வன்முறையை செலுத்தி வரும் இந்த சூழலில் குழந்தைகளின் அக உலகை காக்க வேண்டிய அவசியம் நமக்கு இருக்கிறது. இதனை உணர்ந்து சிறுவர்களின் அக உலகின் நலனுக்காக அவசியம் இந்த திரையிடலில் அவர்களை பங்கேற்க செய்ய வேண்டியது நம்முடைய கடமை. எனவே பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுடன் இந்த திரையிடலுக்கு அவசியம் வரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

கதைச்சுருக்கம்:
இலவச மருத்துவமனையிலிருந்து கைக்குழந்தையுடன் வெளியே வருகிறாள் அழகான இளம்பெண் ஒருத்தி. அவளுக்கு ஆதரவு தர எவருமே இல்லாத நிலையில் குழந்தையை ஒரு மாளிகையின் முன்னால் நிற்கும் காரில் போட்டுவிட்டு சென்று விடுகிறாள். அதேசமயம் இரண்டு திருடர்கள் அந்தக் காரை திருடிக் கொண்டு போய்விடுகிறார்கள். பிறகு குழந்தை இருப்பதை அறிந்து கொள்ளும் அவர்கள், குறுகலான தெரு ஒன்றில் குழந்தையை போட்டுவிட்டு சென்றுவிடுகிறார்கள். ஒரு பூங்காவில் சோகமாக அமர்ந்திருக்கும் குழந்தையின் தாய்க்கு மனது மாறிவிட அவள் மாளிகைக்கு திரும்பி வருகிறாள். அந்த வீட்டின் கதவை தட்டி குழந்தையை பற்றி விசாரிக்கிறாள். காருடன் சேர்த்து குழந்தையும் காணமால் போனதை அறிந்து மயக்கமாகி விழுகிறாள்.

வாழ்க்கையில் எவ்வித குறிக்கோளும் இன்றி வாழும் சார்லி சாப்ளின், தெருவில் நடந்து வரும் போது குழந்தையை கண்டெடுக்கிறார். அந்த குழந்தையை தெருவில் போவோர் வருவோரிடம் சேர்த்துவிட முயல்கிறார். ஆனால் யாருமே ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. தவிர ரோந்து வரும் காவலரின் மிரட்டலால் பயந்துபோகிறார். குழந்தையின் உடையில் ஒரு கடிதம் இருக்கிறது.

அதில், ‘இந்த அனாதை குழந்தையிடம் பரிவு காட்டுங்கள்’ என்ற வாசகம் இருக்கிறது. குழந்தையை தன் வீட்டிற்கே கொண்டு செல்கிறார் சாப்ளின். வீடு என்றால் முதல் மாடியில் ஒரு சிறிய அறை. அதில் ஒரு மேஜை இரண்டொரு நாற்காலிகள், ஒரு ஓரமாக ஸ்டவ் அவ்வளவுதான். குழந்தைக்கு ஜான் எனப் பெயரிடுகிறார். நாளடைவில் ஜான் வளர்ந்து அழகான ஐந்து வயது சிறுவனாகிறான். சாப்ளினும், ஜானும் மிகவும் நட்புடன் வாழ்கிறார்கள். ஜானின் தாயார் ஒரு மாபெரும் நாடக நடிகையாகி செல்வச்செழிப்புடன் புகழ் பெற்று விளங்குகிறாள்.

அதேசமயம் தன் ஒரே குழந்தையின் நினைவாக ஏழைகளின் இருப்பிடங் களுக்கு சென்று அங்கு வசிக்கும் சிறுவர், சிறுமி களை கொஞ்சுகிறாள். அவர்களுக்கு பரிசுகளையும், பணத்தையும் வாரிவழங்குகிறாள். சில சமயங்களில் தன் மகனை நினைத்து கண்ணீரும் சிந்து கிறாள். சாப்ளினும், ஜானும் பிழைப்புக்காக வெளியே செல்கின்றனர். மாடி வீட்டு ஜன்னல் கண்ணாடிகளை உடைப்பது ஜானின் வேலை! அப்போது எதேச்சையாக அந்தப் பக்கம் வருவதுபோல் வரும் சாப்ளின், உடைந்த கண்ணாடிகளை அகற்றி புது கண்ணாடிகளை பொருத்தி காசு வாங்கிச் செல்வார். இதுதான் இவர்களது அன்றாடத் தொழில்!

ஒருநாள் காவல் அதிகாரி ஒருவரின் வீட்டு கண்ணாடியை ஜான் உடைத்துவிடுகிறான். இருவரையும் காவல்காரர்கள் துரத்துகின்றனர். எனினும் சாப்ளினும், ஜானும் சாமர்த்தியமாக தப்பித்து விடுகின்றனர்.

வழக்கம்போல் ஏழை குழந்தைகளை கொஞ்சும் இளம்பெண் ஜானை கண்டு அவனுக்கு ஒரு நாய் பொம்மையையும், பந்தையும் பரிசாக தருகிறாள். அவற்றை வைத்துக் கொண்டு ஜான் தெருவில் விளையாடும்போது ஒரு முரட்டுப் பையன் பொம்மைகளை பிடுங்கிக் கொண்டு ஓடிவிடுகிறான். உடனே ஜானுக்கும், அந்த பையனுக்கும் சண்டை நடக்க ஜானின் கை ஓங்குகிறது. இதை சாப்ளின் ரசித்து பார்க்கிறார். ஆனால் முரட்டு சிறுவனின் அண்ணன் பெரிய பலசாலி. தன் தம்பி உதை வாங்குவதைக் கண்டு கோபம் அடையும் அவன் சாப்ளினை அடிக்க வரு கிறான். அவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தும் அந்த இளம்பெண் ஜானுக்கு அடிப்பட்டிருப்பதாக சாப்ளினிடம் சொல்லி விட்டுதான் திரும்பவும் வருவதாக கூறிவிட்டு போய்விடுகிறாள்.

ஜானுக்கு சிகிச்சை அளிக்க வரும் டாக்டர், பையனுக்கும், உனக்கும் என்ன உறவென்று கேட்கிறார். சாப்ளினோ, கைக் குழந்தையாய் ஜான் இருந்தபோது கண்டெடுத்த கடிதத்தை டாக்டரிடம் காட்டி, எல்லாவற்றையும் தெளிவாக கூறுகிறார். டாக்டர் கடிதத்தை எடுத்து சென்றுவிடுகிறார். விஷயம் அரசாங்க அனாதை விடுதிக்கு தெரிகிறது. அவர்கள் காவலரின் துணையுடன் ஜானை வண்டியில் ஏற்றிக்கொண்டு செல்கின்றனர். ஆனால் சாப்ளின் வண்டியை துரத்திச் சென்று ஜானை மீட்டு ஒரு இரவு விடுதியில் தங்குகிறார்.

இதற்கிடையே ஜானின் தாயாரும், டாக்டரும் சந்திக் கின்றனர். அப்போது டாக்டர் அந்த கடிதத்தை அவளிடம் காட்ட ஜான் தான் தன்மகன் என்பதை அவள் அறிந்து கொண்டு சிறுவனை கண்டுபிடித்து தருபவர்களுக்கு ஆயிரம் டாலர் பரிசு தருவதாக செய்தித்தாளில் விளம்பரம் தருகிறாள். அந்த விளம்பரத்தை படிக்கும் இரவு விடுதியின் முதலாளி தூங்கிக் கொண்டிருக்கும் ஜானை தூக்கிக் கொண்டு போய் அவன் அம்மாவிடம் சேர்த்து விடுகிறார். சிறிதுநேரம் கழித்து விழித்த சாப்ளின், ஜானை காணாமல் போனதை அறிந்து அப்படியே சோகமாக தன் வீட்டு வாசலில் அமர்ந்தபடியே தூங்கிவிடுகிறார். அவருக்கு ஒரு கனவு வருகிறது. அதில் அந்த இடமே பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. அங்கு வசிக்கும் எல்லா ஆண்களும், பெண்களும், சிறுவர், சிறுமிகளும் பளிச்சென புதிய ஆடைகளில் சந்தோஷமாக இருக்கிறார்கள். அனைவரது முதுகிலும், வெண்ணிற இறக்கைகள் இருக்கின்றன.

ஜான் புதிதான வெண்ணிற ஆடையுடனும், இறக்கைகளுடன் வந்து சாப்ளினை எழுப்புகிறான். அங்கே நாயும் பறக்கிறது. அடுத்ததாக சாப்ளினை கடைக்கு அழைத்து செல்லும் ஜான், அவருக்கு இறக்கைகளை வாங்கி பொருத்துகிறான். ஆனால் இந்த சந்தோஷத்தை நீடிக்கவிடாமல், அந்த இடத்திற்கு வரும் சாத்தான்கள் எல்லோரையும் குழப்பிவிட சண்டை சச்சரவுகள் வெடிக்கின்றன. அந்த கலவரத்தில் சாப்ளின் குண்டடிபட்டு தன் வீட்டு வாசலில் வீழ்கிறார். அவரை காவலதிகாரி உலுக்குகிறார். சாப்ளின் தூக்கம் கலைந்து விழித்து பார்க்க நிஜமாகவே தன்னை போலீஸ் அதிகாரி உலுக்கியவுடன் எழுகிறார். அவர் ஜானின் தாயாரிடம் சாப்ளினை அழைத்துச் செல்கிறார். அவரும், ஜானும் சாப்ளினை வீட்டிற்குள் அழைத்துச் செல்வதோடு படம் முடிகிறது. இயல்பாகவே தன் சேட்டைகளின் மூலம் சிரிக்க வைக்கும் சாப்ளின், தன் நடிப்பாலும் கொடிகட்டி பறக்கிறார்.இப்படத்தில் சுட்டியாக நடித்த ஜாக்கி கூகன் உலக சினிமா வரலாற்றிலேயே முதல் குழந்தை நட்சத்திரம் என்பது குறிப்பிடத்தக்கது.

கதைச்சுருக்கம்: – ரா.மு, நன்றி: சுட்டிவிகடன்.

அன்புடன்
தமிழ் ஸ்டுடியோ.காம் (பதிவு எண்: 475/2009)
www.thamizhstudio.com
thamizhstudio@gmail.com