பூங்காவனத்தின் 14 ஆவது இதழ் தற்பொழுது வாசகர் கைகளில் கிடைத்துள்ளது. காலாண்டுச் சஞ்சிகையாக வெளிவரும் பூங்காவனம், தனது ஒவ்வொரு இதழிலும் மூத்த பெண் எழுத்தாளர்களின் முன்னட்டைப் படத்ததைத் தாங்கி வெளிவருவதோடு அவர்களது இலக்கியச் செயற்பாடுகள் பற்றிய விபரங்களை நேர்காணல் மூலமாக பெற்று, சஞ்சிகையின் ஆசிரியர் ரிம்ஸா முஹம்மதும், இளம் எழுத்தாளர் எச்.எப். ரிஸ்னாவும் வாசகர்களுக்கு இலக்கிய விருந்து படைத்து வருகின்றனர். இம்முறை சிங்கள மொழியில் இலக்கியம் செய்து அதனைத் தமிழ் மொழிக்குப் பரிசளித்து வரும், அநேகம் பேர் அறிந்திராத மூத்த இலக்கியப் படைப்பாளி திருமதி. கிச்சிலான் அமதுர் ரஹீம் அவர்களது புகைப்படத்தை பூங்காவனத்தின் அட்டைப்படம் தாங்கி வெளிவந்திருக்கிறது.
சமாதானத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி வலியுறுத்தி உலகில் யுத்த நிலைப்பாடுகள் அகன்று சமாதானம் மலர வேண்டும் என்ற கருத்தினை ஆசிரியர் தன் கருத்தாகத் தந்துள்ளார். பூங்காவனத்தின் உள்ளே திருமதி கிச்சிலான் அமதுர் ரஹீம் அவர்களுடனான நேர்காணலில் அவரது இலக்கியச் செயற்பாடுகளின் விபரங்கள் தரப்பட்டுள்ளன. நீர்கொழும்பைச் சேர்ந்த இவர் மலாய் இனத்தவராவார். இவரது தந்தை துவான் தர்மா கிச்சிலான் என்பவர், ஒரு காரியாவார் (குர்ஆன் ஓதுபவர்). இவர் மார்க்க உபன்னியாசகராக இருந்து அச்சுத் தொழிலிலும் ஈடுபட்டு வந்தார்.
நீர்கொழும்பு அல்ஹிலால் மத்திய கல்லூரியில் கல்வி கற்கும் காலத்தில்தான் திருமதி. கிச்சிலான் அமதுர் ரஹீம் இலக்கிய ஆர்வமும், கலையார்வமும், விளையாட்டுத் திறனும் கொண்டவராக இருப்பதைக் கண்டு கல்லூரி ஆசிரியை திருமதி. பியற்றிஸ் லூக்கஸ் பெர்ணாண்டோ அவர்கள் பயிற்சிகள் அளித்ததன் மூலம் ஆடல், பாடல், நடனம், நாடகம் என்ற துறைகளில் தனது முத்திரையைப் பதித்துள்ளார். இதுதவிர நீர்கொழும்பில் சிங்கள சினிமாவில் தயாரிப்பாளரும், இசையமைப்பாளரும், நாடகக் கலைஞருமான பிரபல நகைச்சுவை நடிகர் ஹியூகோ பர்ணாண்டோவின் தலைமையில் பயிற்சிகள் இடம் பெற்றதனாலும், காலஞ்சென்ற பிரபல சிங்கள நடிகை ருக்மணி தேவியின் தொடர்பினாலும் கலை ஆர்வம் கொண்டவராகக் காணப்பட்டார்.
இவர் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒடிஷன் ஆர்டிஸ்டாகக் காணப்பட்டதனால் ரூபவாஹினி, இலங்கை வானொலி நாடகங்களில் முஸ்லிம் நிகழ்ச்சி, சிங்கள மொழி நாடகங்கள், இளைஞர் இதய நாடகங்கள் எனப் பல்வேறுபட்ட நாடகங்களில் நடித்து தனது பாரிய பங்களிப்பைச் செய்துள்ளார். உயர் இரத்த அழுத்தம் காரணமாக ஏற்பட்ட பாரிசவாதம் கண்டு படுத்த படுக்கையாகி விட்டதனால், இவருக்கான நாடக ஈடுபாட்டுச் சந்தர்ப்பங்கள் கை நழுவிப் போய்விட்டன. இவர் வானொலிக்காக சிறுகதை, கவிதை, கட்டுரை, உரையாடல், நாடகங்கள் முதலியவற்றுக்கான பிரதிகள் எழுதி பங்களிப்பும் செய்துள்ளார். சிங்கள மொழித் தேர்ச்சி பெற்ற ஆசிரியராக இருந்ததனால் அமைச்சு காரியாலயங்களுக்கான மொழி பெயர்ப்புச் சேவையும் செய்திருக்கிறார். 1991 ஆம் ஆண்டு “சஹன” என்ற சிங்களப் பத்திரிகையில் சிங்களக் கட்டுரை ஒன்றினை எழுதியதன் மூலமாக அறிமுகமாகி, ஷஷமீப்புர|| சிங்களப் பத்திரிகையின் எழுத்தாளராகவும் திகழ்ந்துள்ளார். நூற்றுக்கணக்கான படைப்புக்களைத் தன் கைவசம் வைத்துக்கொண்டு அவற்றைப் புத்தகங்களாக பிரசுரிக்க வசதிகள் இன்றி தவித்துக் கொண்டிருக்கிறார். இவ்வாறான ஆளுமையுள்ள படைப்பாளிகளுக்கு உதவிக்கரம் நீட்டுவது இலக்கியப் புரவலர்களினதும், தனவந்தர்களினதும் கடமையாகும்.
2009 ஆம் ஆண்டு கலாபூஷண விருது பெற்றுள்ள இவர், ஞானம், அல்ஹஸனாத், ஓசை போன்ற சஞ்சிகைகள் தேசிய ரீதியாக நடாத்திய போட்டிகளில் பரிசுச் சான்றிதழ்கள் பெற்றிருக்கிறார். தற்பொழுது நோயாளியாகி அனாதரவற்ற ஒரு எழுத்தாளராக இருக்கின்றார் என்ற செய்திகளை அறியும் போது பரிதாபப்படாத உள்ளங்கள் இருக்க முடியாது.
மலரில் சூசை எட்வேடின் குரங்குப்பிடி, எஸ்.ஆர். பாலசந்திரனின் தேய்வத் தண்டனை, மருதமுனை றாபி எஸ். மப்ராஸின் நிவாரணி ஆகிய தலைப்புக்களிலான மூன்று சிறுகதைகளும், வவுனியா சுகந்தினியின் பணம் கொடுத்துப் பிணமாதல், அளம்பில் இராமசாமி ரமேஷின் எப்படி முடிகிறதோ?, மிஹிந்தலை ஏ. பாரிஸின் படுகொலை, கிண்ணியா எம்.எம். அலி அக்பரின் மனித காவோலைகள், பேராதனை கா. தவபாலனின் வலியாரும் மெலியாரும், திவித்துறை தர்ஷியின் காரணம் கண்டறிவோம், ஷெல்லிதாசனின் அவளுக்கு அவளே நிகர், பதுளை பாஹிராவின் புளியமரத்துப் புதிர்கள் ஆகிய கவிதைகளும் இடம்பெற்றுள்ளன. இதுதவிர கிண்ணியா எஸ். பாயிஸா அலி கவிதைகளும், கிண்ணியா பி.ரி. அஸீஸ், இரத்தோட்டை சந்திரசேகரன் ஆகியோரது ஹைக்கூக்களும் இடம்பெற்றுள்ளன.
கலாபூஷணம் ஸக்கியா சித்தீத் பரீத் அவர்களது பொது அறிவுக் களஞ்சியம் என்ற நூலுக்கு சிறந்ததொரு நூல் மதிப்பீட்டினை கலாபூஷணம் டாக்டர் தாஸிம் அஹமது தந்திருக்கிறார். மேலும், வழமைபோன்று கவிஞர் ஏ. இக்பாலின் இலக்கிய அனுபவ அலசல் இவ்விதழிலும் தொடர்கிறது. நுணாவிலூர் கா. விசயரத்தினம் எழுதியுள்ள இலக்கியங்கள் பேசும் உலகச் சமாதானம் என்ற தலைப்பிலான கட்டுரையும் இடம்பெற்றுள்ளது. நூலாசிரியர் வெலிப்பண்ணை அத்தாஸின் பூவும் கனியும் சிறுவர் பாடல்கள் பற்றிய நூலுக்கான விமர்சனத்தை நிலாக்குயில் எழுதியிருக்கிறார். 48 பக்கங்களில் சகல கலை அம்சங்களையும் உள்ளடக்கியதாக வெளிவந்திருக்கும் பூங்காவனம் சஞ்சிகையில் நூலகப் பூங்கா, வாசகர் கருத்துரையுடன், ஆசிரியரின் கவிதைகளுடனான கை குலுக்கல் ஒரு பார்வை நூல் வெளியீட்டின் புகைப்படங்களும் இடம் பிடித்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
சஞ்சிகை பெயர் – பூங்காவனம் (இதழ் 14)
பிரதம ஆசிரியர் – ரிம்ஸா முஹம்மத்
தொலைபேசி – 0775009222
ஈமெயில் – poetrimza@gmail.com
வெளியீடு – பூங்காவனம் இலக்கிய வட்டம்
விலை – 100 ரூபாய்
தகவல்: poetrimza@gmail.com