நிர்வாகக் குழு காலோசின் ராஜினாமா முடிவை மறுபரிசீலனை செய்யும்படி கொடுத்திருந்த இரு கிழமைகள் வைத்தியசாலையில் தற்காலிகமாகவேனும் ஒரு தலைமை வைத்தியர் நியமிக்கப்படவில்லை. தலைமை வைத்தியர் இல்லாமல் சகல வேலையும் வழமைபோல் நடந்து கொண்டிருந்தது. கப்டன் இல்லாத போதும் எந்தத் தங்கு தடையின்றிச் செல்லும் கப்பலைப் போல வைத்தியசாலை சீரான வேகத்தில் சென்று கொண்டிருந்தது. ஒவ்வொருவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வேலைகளைச் செய்வதால் அறுபது வருடமாக இந்த வைத்தியசாலை அவுஸ்திரேலியாவில் முன்மாதிரியாக நடந்து கொண்டிருந்தது. ஒவ்வொரு நாளும் வரும் நூற்றுக்கு மேற்பட்ட செல்லப்பிராணிகளைக் கொண்டு வருபவர்களைக் கவனித்து, அவற்றின் பிணி தீர்க்கும் உன்னதமான கடமையாற்றுவது என்பதாலும் மற்றும் இலாப நோக்கமற்று நியாயமான பணத்தில் இந்தச் சேவை நடப்பதாலும் மெல்பேனில் வாழும் பலருக்கு இந்த வைத்தியசாலையில் மரியாதையும் பற்றும் உள்ளது. சில செல்வந்தர்கள் தங்களது செல்லப்பிராணிகளைக் கொண்டு வந்து மணிக்கணக்காக காத்திருப்பார்கள். தங்கள் செல்லப்பிராணிணிகளில் அதிக அன்பு செலுத்தியவர்கள் தங்களது சொத்துக்களை இறக்கும் போது வைத்தியசாலைக்கு எழுதி வைத்துள்ளார்கள். பத்திரிகைகள், தொலைக்காட்சிகளில் காயமுற்ற செல்லப்பிராணிகள் இங்கு வைத்தியம் பெறுவது அடிக்கடி தகவல்களாக வெளிப்படுத்துவதால் பலரது கவனத்தைப் பெறும் இடமாகிறது. இந்த அளவு முக்கியத்துவம் பெற்ற இடத்தை தலைமை வைத்தியர் இல்லாமல் இரண்டு கிழமை நடத்தியது நிர்வாக குழு, காலோஸ் சேரத்தின் மேல் வைத்த மரியாதையை காட்டுகிறது என சுந்தரம்பிள்ளையால் புரிந்து கொள்ள முடிந்தது.
அன்று இரவு போலினுடன் வேலை செய்த போது ‘சிவா உனது நண்பர் ரிமதி பாத்தோலியசை காலோசின் இடத்திற்கு தெரிவு செய்யலாம் எனச் சிலர் பேசுகிறார்கள்’ சிறு புன்னகையைத் தவழவிட்டபடி சொன்னாள்.
‘அது நடந்தால் நான் வேறு இடத்தில் வேலை தேட வேண்டி இருக்கும்’
‘காரணமில்லாமல் ஒருவரை வேலையில் இருந்து நிறுத்த முடியாது“
‘காரணங்களைச் சுலபமாகத் தேடமுடியும். மேலதிகாரி தனக்கு விருப்பமில்லாத ஒருவரை மனரீதியாக துன்புறுத்தி வெளியேற வைக்கமுடியும். இப்படியாக பல விடயங்கள் நடக்கும் நாடுகளில் இருந்துதான் இங்கு வந்தேன்.’
‘நாங்கள் எல்லோரும் உனக்கு ஆதரவாக இருப்போம் கவலைப்படாதே“ என அவளது பூங்கொத்து போன்ற வலது கை விரலால்களால் சுந்தரம்பிள்ளையின் தலையில் ஆறுதலாகத் தடவினாள். தடவிய அவளது விரல்களில் அந்த மோதிரம் இருந்த அடையாளம் இன்னும் போகவில்லை. அவளது கைகளைப் பற்றியபடி ‘இன்னும் வெறுமையகவா இருக்கிறது?“
“அந்த இடத்தில் மறுகையால் நீவியபடி ‘இனிமேல் அவசரப்படப் போவதில்லை’ என்றாள்.
சுந்தரம்பிள்ளை சிரித்தபடி ‘பத்துவருடத்துக்கு முன்பு பிரமசாரியாக நான் அவுஸ்திரேலியாவுக்கு வந்திருக்கவில்லை என்பது எனக்கு மிக கவலையாக இருக்கிறது.’
‘நான் அப்போது பாடசாலையில் இருந்திருப்பேன்’ எனக் கூறி சிவந்த முகத்துடன் சிரித்தபடி எழுந்து இருவருக்கும் தேநீர் தயாரித்தாள்.
‘உன்னைப்போல் ஒரு தேவதைக்கு எப்படியும் ஒரு இராஜகுமாரன் எங்கோ பிறந்துதான் இருப்பான். அவன் வெள்ளைக் குதிரையில் வந்து உன்னை தூக்கிச் சென்று புதிதாக ஒரு வைர மோதிரத்தை உனது அழகான விரல்களில் அணிவிக்கத்தான் போகிறான். அப்பொழுது இந்த மோதிர அடையாளம் மறைந்து விடும்.’
‘என்ன இன்று வார்த்தைகள் கவிதைவரிகளாக உதிர்கின்றன’
‘இல்லை எனது மனத்தில் இருப்பதைச் சொல்கிறேன். உன்னைப்போல் ஒருத்தியை ஒருவன் அடைவதற்கு அதிஸ்டம் செய்யவேண்டும்.“
‘என்னை வேலை நேரத்தில் வெட்கப்பட வைக்காதே சிவா’ என முகம் சிவந்தாள்.
தேநீர் இடைவேளை முடிந்ததால் போலீன் ரிசப்சனுக்கும் சுந்தரம்பிள்ளை ஆலோசனை அறைக்கும் சென்றார்கள்.
இரவு எட்டரை மணிக்கு மேலாகி விட்டது. வைத்தியசாலையில் போலினையும் சுந்தரம் பிள்ளையையும் தவிர மனிதர்கள் எவருமில்லை. வழக்கமாக இரவில் நடமாடும் கொலிங்வூட்டைக் கூட காணவில்லை என நினைத்துக்கொண்டு சுந்தரம்பிள்ளை அறையில் இருந்து வெளியே வந்து நீளமான கொரிடோரில் மெதுவாக நடந்தபோது கொலிங்வூட் எதிரில் வந்தது.
‘என்ன போலின் மீது காதலா?’ என்றபடி இடது பக்கத்து காதை இடது முன்கால்களால் சொறிந்தது.
‘கோலங்வூட் நான் திருமணமானவன். இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள்’
‘பின் ஏன் அவளின் கையை பிடித்து வசனம் பேசியது?
‘அது உனக்கு எப்படித் தெரியும்?’
‘நான் அப்பொழுது மேசைக்கு கீழ் இருந்தேன்’
‘திரட்டு முண்டம்’;
‘நீங்கள் செய்தது மட்டும் திருட்டு இல்லையா?
‘இதைப்பற்றி உனக்குத் தெரியாது. பிளட்டோனிக் காதல் என்று சொல்வது. மனிதர்களால் மட்டும்தான் செய்யமுடியும். இது அடிமனத்தில் அல்லது கனவுலகத்தில் வைத்து காதலிப்பது. இங்கே உடலுறவோ தாம்பத்தியமோ நடப்பதில்லை. இவை எல்லாம் உனக்கு புரியாது. உனது விதையில் செக்ஸ் ஹோமோன் வந்து உனது மூளையில் படிவதற்கு முன்பே உனது விதையை வெட்டி எடுத்து விட்டார்கள்.’
‘நீங்கள் நினைப்பதைப் போல் நான் முட்டாளில்லை. இப்படி கையை பிடித்து கதைத்தவர்கள் பலர் ஒன்றாகியதை நான் பார்த்திருக்கிறேன். சில காலத்துக்கு முன்பு ஒரு வைத்தியரும் நேர்சும் இரவில் நின்று ஓவர்ரைம் செய்வதாக சொல்லிக் கொண்டு அதன் பின் இருவரும் தாம்பத்தியம் செய்தார்கள். அவர்கள் இன்பமாக இருந்த நேரத்தை கணக்கு வைத்து அதற்கு வைத்தியசாலையில் ஓவர்டைம் எழுதி எடுத்தது எனக்கு தெரியும். அவர்களது திருவிளையாடல் எல்லாம் பக்கத்தில் தெரிந்து கொண்டேன். அவர்கள் நடத்தையில் சிறிதும் நாகரீகம், நேர்மை என்பன இருக்கவில்லை. அந்தக்காலத்தில் அவர்கள் ஆடிய ஆட்டம் என்ன? இப்போது நினைத்தால் எனக்கு உடலில் எரிச்சல் வருகிறது.
‘நீ சில மனிதர்களைப் போல் மற்றவர்கள் சந்தோசத்தை கண்டு எரிந்து புழுங்கும் பிராணியாக இருக்கிறாயே. ஓவ்வொருவரும் தங்கள் இன்பத்தை தேடிப்போக வேண்டியவர்களாக இருக்கிறார்கள். அதுவும் அவர்களது மனச்சாட்சியைக் காவலனாக வைத்து அதற்கு அடங்கித் தங்களது சுகங்களைத் தேடுகிறார்கள். மற்றவர்கள் இன்பமாக இருப்பது நல்லது தானே? அதனால் உனக்கு என்ன பிரச்சனை வந்தது?“
‘இந்த வைத்தியசாலையில் வாழும் நான் இங்கு தரப்படும் உணவை உண்ணுகிறேன். இங்கு இருபத்தினாலு மணித்தியலமும் பாதுகாப்பாக வாழுகிறேன். எனக்கு உணவு, உறையுள் இரண்டையும் தந்த வைத்தியசாலைக்கு நன்றி உணர்வோடு இருப்பது தவறா? நீங்கள் எல்லோரும் உங்களது வேலைக்கு வேதனம் வேண்டுகிறீர்கள். அது போன்றுதான் இதுவும். நான் எனது நன்றியை இந்த வைத்தியசாலைக்கு காட்ட விரும்புவதில் உங்களுக்கு என்ன பிரச்சனை?
‘காலோசின் தலைமைப் பதவிக்கு உன்னை நியமித்தால் நல்லாத்தான் இருக்கும். என்ன மிருக வைத்தியர் என்ற பட்டம் உனக்கு இல்லை என்பதுதான் குறை.’
‘நக்கலாக இருக்கு. எனக்கு ரிமதி பாத்தோலியஸ் பொறுப்பை எடுத்தால் இந்த வைத்தியசாலை நாறப் போகிறது என கவலையாக உள்ளது’ என்றது.
அந்த நேரம் பார்த்து இரு இளைஞர்கள் ஒரு டோபமான் நாயை மெதுவாக நடத்தியபடி கொண்டு வந்தார்கள். அதைப் பார்த்த கொலிங்வூட் ‘இன்று இரவு நீங்கள் இரவு முழுவதும் இந்த வைத்தியசாலையில்தான். ஒழுங்காக நடந்தால் சரி. எனக் கூறிய படி அந்த இடத்தை விட்டு நகர்ந்தது.
அந்த நாயின் முலைகள் தொங்கி கொண்டும் வயிறு வீங்கியும் இருந்ததால் நிறை மாதமான நாய் என உடனே புரிந்து, அவர்களின் பின்னால் வந்த போலின் ‘சிவா இன்றைக்கு வீட்டை போனபாடில்லை. இது சிசேரியனினாகத்தான் இருக்கும்’ என்று சுந்தரம்பிள்ளையின் காதருகே கூறினாள்
டோபமானைப் பரிசோதித்துப் பார்த்து விட்டு ‘கருவாகிய நாள் தெரியுமா’ எனச் சுந்தரம்பிள்ளை கேட்டபோது, அந்த இளைஞர்கள் அண்ணன் தம்பியுமாக இருக்க வேண்டும்.
சிரித்தபடியே ‘எங்களுக்குத் தெரியாது. ‘நாங்கள் பார்க்கவில்லை’ என்று பதில் கூறினார்கள்.
இந்தப் பதில் திருப்தியாக இருக்கவில்லை. ‘இந்த கருவுக்கு சொந்தமான ஆண் நாய் உங்களுடையதா’ என மீண்டும் போலின் அழுத்தமாகக் கேட்ட போது ‘இல்லை சினோவி வெளியே சென்ற போது இது நடந்தது.’
கருமையான டோபமானுக்கு சினோவி என்ற பெயர் வைத்தவர்களிடம் வேறு கேள்வி கேட்டு பதில் பெறுவது கடினம் என நினைத்து ‘ இந்த நாய்க்கு சிசேரியன் செய்யவேண்டி இருக்கும் என நினைக்கிறேன். அதற்கு முன்பாக ஒரு ஊசி மருந்து கொடுத்து பார்க்க விரும்புகிறேன்.“
“உங்கள் சினேவி கடிக்குமா?’
‘நிட்சயமாக கடிக்காது.’
இரண்டு சகோதரர்களும் ஒரே குரலில் பதில் கூறினார்கள்.
சுந்தரம்பிள்ளை வயிற்றில் கைவைத்து பார்த்த போது வயிற்றின் இரண்டு புறத்திலும் பல குட்டிகள் நெளிந்தன. இதைவிட அடிப்புறத்தில் இருப்பவையையும் கணக்கு பார்த்தால் பத்துக்கு மேல் இருக்கும். இன்று இரவு இந்தக் குட்டிகளுடன் கழிந்துவிடும் எனப் போலின் சொன்னதில் தவறு இல்லை
என்று சொல்வியபடி வாயைத் திறக்க முற்பட்டபோது கையைக் கவ்வியது. வலியில் கையை உடனே இழுத்த போது அந்த இளஞர்கள் ‘சொறி’ என்றார்கள். நீளக்கை சட்டை மற்றும் அதன் மேல் வெள்ளை மேல் கோட்டு என இரண்டு துணிகள் கையைப் பாதுகாத்தபடியால் ஒரு பல்லு மட்டுமே கையில் பதிந்து இரத்தம் கசிந்தது.
‘கடிக்குமா எனச் சிவா கேட்ட போது கடிக்காது என்று ஏன் பதில் சொன்னீர்கள்’ என போலின் காட்டமாக கேட்டபோது ‘நாங்கள் எதிர்பார்க்கவில்லை’என்றார்கள்.
‘அப்படி என்றால் தெரியாது என பதில் சொல்லி இருந்தால் நாங்கள் கவனமாக இருப்போம்’ போலின் சொல்லிய போது இருவரும் சங்கடத்தில் தலையை குனிந்தபடி மீண்டும் ‘சொறி’ சொன்னார்கள்.
‘நாங்கள் விடயத்தை கவனித்துக் கொள்கிறோம் ஒப்பரேசனுக்கு முன் பணம் கட்டி விட்டுச் செல்லுங்கள். ஊசிமருந்து வேலை செய்யாவிடில் ஆபரேசன் செய்வோம்’ எனக் கூறி அவர்களை வெளியே அனுப்பினாள் போலின்.
சினோவிக்கு ஊசியைப் போட்டுவிட்டு நாய்களுக்கான கூட்டில் அடைத்து விட்டு நீண்ட இரவுக்கு தயாராகினான் சுந்தரம்பிள்ளை.
இரவு பன்னிரண்டு மணிக்கு மேல் ஒபரேசன் செய்த போது அந்த டோபமான் நாய்க்கு பன்னிரண்டு குட்டிகள் இருந்தன. அந்தக் குட்டிகளை சுற்றி இருக்கும் பிளசன்ராவில் இருந்து பிரித்து ஒவ்வொன்றாக அவற்றினது உடலை ரேக்கிஸ் ரவலால் துடைத்து அவைகளுக்குச் சுவாசத்தை உருவாக்கினாள் போலின். பன்னிரண்டு குட்டிகளும் உயிர்தப்பி கீச்சு மூச்சென கத்தத் தொடங்கி விட்டன. போலினுக்கு இரண்டு கைகள் போதவில்லை அப்பொழுது வைத்திய சாலையின் பாதுகாலர்களாகவும் சுத்தப்படுத்துபவர்களாகவும் இருக்கும் பமலாவும் அவரது கணவன் வில்மட்டும் உதவி செய்தார்கள்.
வில்மட் மிகவும் நகைசுவையாக கதை சொல்வதில் வல்லவர். அவரது கதைகள் பல வித்தியாசமானவை. பகல் நேரத்தில் மில்மட் பிரேதங்களை அடக்கம் செய்யும் கம்பனிக்கு வேலை செய்தார். அங்கு அவரது அனுபவங்களில் ஒன்று, ஒரு அம்பது வயதானவருக்கு காலை வேலைக்கு செல்ல புறப்படும் போது வீட்டில் இதயவலி வந்து வாசலருகே இறந்து விட்டார். அவரது மனைவி அந்த மனிதனின் பிரேதத்தை காரில் ஏத்தி காரை விளக்கு கம்பத்தை நோக்கி எஞ்ஜினை ஸ்ராட் பண்ணி ஓடவிட்டார். கார் விளக்கு கம்பத்தில் அடிபட்டு விபத்தாக மாறியது. அவுஸ்திரேலியாவில் வீட்டில் இருந்து வேலைக்கு வெளிக்கிட்ட பின்பு ஒருவருக்கு விபத்து நடந்தால் அதற்கு வேக் கேயர் என அரசாங்கம் இன்சூரன்ஸ் பணம் கொடுக்கும். இந்த முறையில் பணம் பெற நினைத்ததால் அந்தப் பெண் பிரேதத்தை வைத்து காரை ஓட வைத்தாள். இறுதியில் ஏற்கனவே இறந்த பிரேதமாகி விட்ட மனிதருக்கு கார்விபத்து நடந்தால் கூட இரத்தம் வெளிவராதது என போஸ்மோட்டத்தில் இலகுவாக தெரிந்து விட்டது. இறந்த மனிதர் கார் ஓட்டி இருப்பது இலகுவாக கொறுனருக்கு தெரிந்து. பெண் சிறைக்கு சென்றதோடு இனிமேல் வேலைத்தலத்தில் நடக்கும் விபத்துக்கு மட்டும்தான் இன்சூரன்ஸ் என சட்டம் மாற்றப்பட்டது. என்று வில்மட் சொன்ன கதையோடு ஆபரேசனை முடிக்கும்போது அதிகாலை நாலு மணியாகிவிட்டது.
நேற்று பகல் வேலை செய்த போது சிறிய தூறலாக பெய்த மழை அங்காங்கு துப்பியவாறு இருந்ததாலும் இரவு வேலையை முடிக்கும் நேரத்தில் பெருமழையாக வந்ததால் நனைந்தபடியே வைத்தியசாலை கார் நிறுத்தும் இடத்திற்கு ஷரன் ஓடி வந்தாள். அந்த நேரத்தில் பெய்யும் மழையை மனத்துக்குள் சபித்தாலும் தனது வீட்டை நினைத்ததும் அவை அதை விட கசப்பாக இருந்தது. அம்மாவின் வீட்டுக்குச் சென்று அங்கிருந்து மாக்கஸ்சை வீட்டுக்கு கொண்டு செல்ல வேண்டுமென்ற எண்ணம் மட்டும் இல்லையென்றால் வைத்தியசாலையில் இன்னும் சிலமணிநேரம் வேலை செய்திருக்க முடியும் என்று படுக்கையில் இருந்தபடி முதல்நாள் இரவை நினைத்தாள்.
இரவு குளிரில் நடுங்கிய மாக்கஸ்சை அம்மா வீட்டில் இருந்து கூட்டிக் கொண்டு வீடு வந்தவளது மனத்தில் இன்றாவது வீட்டில் கிறிஸ்ரியன் இருப்பான். நடந்த விடயங்களுக்கு மன்னிப்புக் கேட்டுக்கொண்டு அவனோடு ஒன்றாகக் கசப்புகளைக் கடந்து செல்லலாம் என்ற உணர்வு சிறிது முளைவிட்டது. மழையில் நனைந்த தேகத்திற்கும் ஏக்கமான இதயத்திற்கும் மெதுவான அவனது சூடான அணைப்பு கிடைத்தால் அதுவே போதுமானது என்று பழயவற்றை மறந்துவிட தயாராக இருந்தாள். சிறிய சைகையை காட்டினாலே சரணடைய நினைத்திருந்தள். அவன் ஒரு அடி முன்னே வந்தால் நான் ஒன்பது அடிகள் அவனை நோக்கி செல்லத்தயார் என வாய்விட்டு முணுமுணுத்தாள்
சிலமாதங்களின் முன்பு எனது வாழ்வு எவ்வளவு சுவையாக இருந்தது. கிறிஸ்ரியன் மாக்கஸை வீட்டுக்கு கொண்டு வந்ததுடன் இரவு உணவை சமையல் செய்து விட்டு எனக்காகக் காத்துக்கொண்டோ இல்லை மகனோடு விளையாடிக்கொண்டோ இருப்பான். இப்பொழுது பத்து மணிக்கு வீட்டுக்கு வருவதும் பின்னர் இரண்டு மணி நேரம் தொலைக்காட்சி பார்த்து விட்டு பன்னிரண்டு மணியளவில் வந்து கட்டிலில் படுத்து துங்குவதும் அவனது அன்றாட நிகழ்ச்சியாகிவிட்டது. வேலை முடிந்ததும் மாக்கஸ்சை அம்மா வீட்டில் இருந்து அழைத்து வந்து அவனை படுக்க வைப்பது ஷரனது நாளாந்த வழமையாகி விட்டது.
ஆவலுடன் நேற்று இரவு உள்ளே வந்தவளுக்கு வீடு முற்றாக இருளில் மூழ்கி இருந்ததை பார்த்ததும் அவன் வீட்டில் இல்லை என்பது புரிந்தது. இளகி இருந்த அவளது இதயமும் உடலும் துருவப்பனியில பல வருடங்கள் புதைந்து கிடந்த இறந்த மிருகத்தின் சடலத்தின் தன்மையை அடைந்தது. மாக்கஸை அவனது அறையில் படுக்கவைத்து விட்டு இரண்டு துண்டு பாணை பட்டருடன் மருந்து விழுங்குவது போல் தொண்டைக்குள் தள்ளி, தூக்கமாத்திரையை விழுங்கி விட்டு படுத்தாள். அப்படியே படுத்த சில நிமிடங்களில் கிறிஸ்ரியனை சந்தித்த இளம்பருவத்து நினைவுகள் கனவுகளாக வந்தது.
இன்று காலை கண் விழித்த போது படுக்கையில் அவன் இல்லை. அந்த காலை நேரத்தில் இரவு முழுவதும் பெய்த மழை தொடர்ந்து பெய்து கொண்டிருந்தது. ஜன்னல் வழியாக மழை மேக மூட்டம் தெரிந்தது. மழைநீர் மண்ணை நனைத்து எழுந்த வாசனை மூடிய சாளரங்கள் வழியாக மூக்கை மெதுவாக தடவியது. கூரை வழியே விழுந்த நீரின் சத்தம் கனமான மழை என்பதை அழுத்தமாக தெரிவித்தது. கலங்கியிருந்த மனத்திற்கு குளிரும் மழையும் சேர்ந்து தலைக்குள் வண்டுபோல்
குடைந்து எடுத்தன.
கிறிஸ்ரியனது நடத்தையை இனி பொறுக்கக் கூடாது. முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால் அவனை இன்று எப்படியும் முரண்பட்டு எதிர் கொள்ள வேண்டும் என மனத்தை ஒருமுகப்படுத்தி தீர்மானித்தாள்.
பெயருக்கு மட்டுமே கணவன்-மனைவி உறவு. இருவரும் உடலுறவு கொள்ளாமல் கிட்டத்தட்ட பல மாதங்கள் ஆகிவிட்டுது. வேறு பெண்ணுடன் தொடர்பு வைத்திருக்கிறானா என உறுதிப்படுத்த கடந்த சில நாட்களாக பல ஆய்வுகளை மேற்கொண்டு பார்த்திருக்கிறாள். வெளி உடைகளான பாண்டு சேட்டுகளில் மற்றய பெண்களிள் நீளமான தலைமயிர்கள், வித்தியாசமான வாசனைத் திரவியங்களின் நறுமணங்கள், உதட்டுச் சாயங்களின் அடையாளங்கள் போன்ற தடயங்கள் உள்ளனவா என்பதற்காக அவனது சேட்டுகள், பாண்டுகளை எடுத்து வெளிச்சத்தில் அங்குலம் அங்குலமாகப் பார்த்து விட்டு அத்துடன் அமைதியடையாமல் அவனது உள்ளாடைகளில் எதாவது தடயம் கிடைக்குமா என ஆராய்ந்தாள். உள்ளாடைகளில் வட்டங்கள், கோலங்களைத் தேடியதுடன் கொலை நடந்த இடத்தில் தடயங்களை தேடி மருத்துவ நிபுணர் ஆராய்வது போல் அவைகளில் உடலுறவு கொண்ட ஏதாவது அடையாளங்கள் இருக்கிறதா எனத் தேடினாள். கிறிஸ்ரியனின் கைத் தொலைபேசியின் பில்லை ஆராய்ந்து ஏதாவது புதிய இலக்கங்கள் அடிக்கடி வந்திருக்கிறதா என பார்த்து விட்டு அந்த இலக்கங்கங்கள் சென்ற மாதங்களில் பாவிக்கப்பட்டிருக்கிறதா என ஒப்பிட்டு பார்த்தாள். ஓரு இலக்கம் மட்டும் புதிதாக இருந்த போது அதற்கு போன் செய்த போது ஆண்குரல் கேட்டது. அந்த குரலுக்கு உடையவர் சில மாதங்களுக்கு முன்பு புதிய வீடு ஒன்றை வாங்கிக் கொண்டு சென்ற கிறிஸ்ரியனின் வேலைத்தல நண்பரான டக்ளஸின் குரல் என்பது புரிந்ததும் உடனே போனை மெதுவாக வைத்துவிட்டாள். சில மாதங்கள் கடன் அட்டையின் படிவங்களைத் தேட எடுத்து ஏதாவது ஹோட்டலில் பணம் செலவளித்திருக்கிறானா என்பவைகளை ஆராய்ந்தாள். அவளது எந்த ஒரு தேடுதலிலும் கிறிஸ்ரியனுக்கு புதிதாக பெண் உறவு இருப்பதை உறுதி செய்யவில்லை என்பது ஒரு புறத்தில் மழை வெள்ளத்தில் தோன்றும் நீர்குமிழி போன்று சந்தோசத்தை கொடுத்தாலும் மறுபக்கத்தில் தன் மீது காட்டும் அவனது உதாசீனத்தை அவை உறுதி செய்வதால் சாட்டையடியாக உடலில் விழுந்து காயப்படுத்தியது.
இவ்வளவு நாட்களும் தனது அழகால் அடிமையாக வைத்திருந்த அடிமை இப்பொழுது கை கால் தளைகளை உடைத்து அவன் விடுவித்துக்கொண்டது, அவளது அழகிய உடலை யாரோ நெருப்பால் சுடுவது போல் இருந்தது. நெருப்பு சுட்டால் அந்த இடத்தில்தான் எரிவு ஏற்படும்? தனக்கு ஏற்படும் எரிவை உச்சம் தலையில் இருந்து காலின் சிறுவிரல் வரையும் உணரமுடிகிறதே?.
இது பலமாதங்களாக உடலுறவுக்காக ஏங்குவதால் ஏற்படும் உணர்வாக இருக்கலாமா? இருக்காது. இது முற்றிலும் வித்தியாசமானது. இந்த உணர்வு உடல் முழுக்க ஈரத் துணியை முறுக்கி பிழிவது போல் இருக்கிறதே? காமத்தின் உணர்வுகளை என்னால் கண்டு கொண்டு தீர்த்துக்கொள்ள முடியுமே? இது அதுவல்ல.
அவளது மருத்துவ அறிவுக்கு காம உணர்வை பிரித்துப் புரிந்து கொள்ளமுடிந்தது. ஆனால் தனது உடலை கிறிஸ்ரியன் உதாசீனம் செய்ததால் ஏற்பட்ட ஈகோவின் தாக்கம் அவளது மருத்துவ அறிவுக்கு அப்பாற்பட்டிருந்தது. வழக்கமாக உடலுறவுக்கு அலையும் கிறிஸ்ரியன் தன்னை வெறுக்கும் போது தன் உடலைப் புறக்கணிக்கிறான் என்பதைப் புரிந்து கொள்வது அவளுக்கு கடினமாக இருந்தது. மாணவப் பருவத்தில் இருந்து அவனோடு உறவாக இருந்ததால் காமமும் கர்வமும் ஒன்றாக தீர்க்கப்பட்டது என்பதிலும் பார்க்க அந்த உணர்வுகள் கூர்மையாக செதுக்கப்பட்டது. இளவரசி போல் அவளது தேவைகளைக் கேட்காமல் தங்கத் தட்டில் வைத்து பரிமாறப்பட்ட விடயங்கள் இப்பொழுது குருட்டு பிச்சைக்காரிபோல் தேடித் தேடி ஏங்கும் நிலையில் இருப்பது அவளால் சகிக்க முடியவில்லை. அந்த வலி அவளது உடலின் ஒவ்வொரு உயிர் அணுவிலும் கலந்து அவளைப் பைத்தியமாக்கியது.
‘கிறிஸ்ரியனை உதாசீனம் செய்தது அவன் என் அந்தரங்கத்தைத் தேடி அவனை வரவழைப்பதற்காக நான் நடத்திய நாடகம், இப்பொழுது பொறுக்க முடியாத வலியாக மாறியிருப்பதை என்னால் தாங்க முடியவில்லையே. நான் பைத்தியக்காரியாகவோ, கொலைக்காரியாக மாறுவேனோ என்ற உணர்வு தாங்க முடியாதிருக்கிறதே’ என்று உள்ளுக்குள் வெம்பினாள்.
வேலைக்குச் சென்ற நாட்களில் வலி குறைந்திருப்பது போல் தெரிந்தாலும் ஓய்வு நாட்கள் அவளை உடைந்த கண்ணாடித் துண்டுகளாக உடலெங்கும் கீறித் துன்புறுத்தத் தொடங்கின. இப்பொழுது ஓய்வு நாட்கள் வராமல் இருக்காதா? தொடர்ந்து வைத்தியசாலையில் வேலை செய்தால் என்ன? காமம் ,ஈகோ , மற்றும் தனிமை என்பன பல தலைப்பாம்பாக கனவிலும் நனவிலும் கொத்துவதாக உணர்ந்தாள். ஒரு உணர்வில் இருந்து மற்றதில் அடைக்கலம் தேடும்போது அங்கு காயப்படுகிறாள். தீப்பிடித்த கப்பலில் இருந்து சமுத்திரத்துக்கு பாயும் அபலையாகினாள்.
கிறிஸ்ரியனை வார்த்தையால் முரண்பாடு கொள்ளும்போது அவனிடம் வார்த்தைகள் குறைவாகவும், வன்முறைகள் அதிகமாக வெளிவருவதையும் அனுபவத்தில் பார்த்திருக்கிறாள். வழக்கமாகவே குறைவாக பேசுவது அவனது வழக்கம். அதிலும் கோபம் வந்துவிட்டால் அவனிடம் வார்த்தைகளுக்குப் பஞ்சம் ஏற்பட்டுவிடும். அந்த பஞ்ச நிவாரணமாக அடி உதைகளை வினியோகிப்பான். இம்முறை நிச்சயமாக அடி உதைகளுக்கு தயாராக இருக்க வேண்டியதுடன் வீட்டை விட்டுப் போவதற்கும் தயாராக இருக்க வேண்டும். கடந்த முறை கன்னத்தில் அடித்ததால் கண்டிப்போன முகம் ஒரு பகுதி நிலத்தில் விழுந்து அழுகிப்போன அப்பிள் போன்றாகிவிட்டது. அந்த முகத்துடன் வேலைக்குச் சென்றதும் வேலைத்தலத்தில் தனக்கு பின்னால் மற்றவர்கள் ஊகித்து பேசியதும் மார்கஸ் விளையாட்டாக தேநீர் கோப்பையை எறிந்ததாக பொய் சொல்லியதையும் அவளால் மறக்க முடியவில்லை. நேரே கேட்டவர்களுக்கு பொய்களை கூறி சமாளிக்க முயற்சித்தாலும் அவர்கள் நம்பவில்லை என்பது அவர்கள் முகங்களில் தெளிவாக எழுதி ஒட்டியிருந்தது. அந்த நினைவுகள் மீண்டும் மனத்தில் தோன்றிய போது உடல் நத்தை கூட்டுக்குள் செல்வது போன்ற உணர்வு ஏற்பட்டது. இம்முறை அடிக்க முற்படும் போது முகத்தில் அடி விழாமல் கைகளாலோ குனிந்தோ பாதுகாக்க வேண்டும் என ஷரன் முடிவு செய்தாள்.
கட்டிலில் படுத்துக் கிடந்தவளை மார்கஸ் வந்து ‘மம்மி மம்மி’ என அவனது காலையாகாரத்துக்கு எழும்பிய போது தயக்கத்துடன் கட்டிலை விட்டு எழும்பி ‘உனது அப்பா எங்கே தொலைந்து விட்டார்?’ எனக் கடிந்தாள். அதே அறையோடு சேர்ந்த குளியலறையில் நின்று சவரம் செய்து கொண்டிருந்த கிறிஸ்ரியனுக்கு கேட்க வேண்டும் என்பதற்காகவே சிறிது அழுத்தமாக சொன்னாள். கிறிஸ்ரியன் அதைப் பொருட்படுத்தாமல் நின்றதால் சில நிமிடத்தின் பின்பு தயக்கத்துடன் படுத்திருந்த நைட்டியுடன் மேல் மாடியில் இருந்து கீழே உள்ள சமயலறைக்கு வந்து காலை உணவை மாக்கஸ்க்கு கொடுத்து விட்டு தனக்கு அவசரமாக ஒரு கோப்பியைக் கலக்கிக் கொண்டு மீண்டும் மேலே வந்த போது வேலைக்குச் செல்லத் தயாராக உடைகளை அணிந்து கொண்டு படுக்கை அறையில் கிறிஸ்ரியன் நின்றான்.
படுக்கையறையின் கட்டிலில் அமர்ந்தபடி கோப்பியை குடித்துக்கொண்டு ‘இன்றைக்கு இருவரும் பேசவேண்டும். வேலைக்கு போகாதே’
‘நான் எப்படியும் வேலைக்கு போய்தான் ஆகவேண்டும். நான் பார்ப்பது அத்தியாவசியமான வேலை. வேறு ஒருவரையும் உடனே அமர்த்த முடியாது. திடீர் என வேலைக்கு போகாதே என்றால் சரிவாராது.’
அவனது முகம் எதுவித உணர்வுகளையும் காட்டவில்லை.
‘இன்றைக்கு நீ வீட்டுக்கு வரும் போது நான் மாக்கஸ்சோடு அம்மா வீட்டுக்கு சென்று விடுவேன்’
‘நீ போவதென்றால் எனக்கு பிரச்சனை இல்லை. பிள்ளையை கொண்டு போனால் உனக்கு உயிர் சொந்தமில்லை’ என முகத்தை திருப்பியபடி சொல்லி விட்டு வெளியேறினான்.
‘எவ்வளவு நாள் இப்படிப் பயமுறுத்துவாய் எனப் பார்க்கத்தான் போகிறேன் பாஸ்ரட்’ என்று சொல்லியதும் வெளியே போனவன் உள்ளே வந்து அவள் கழுத்தைப் பிடித்த போது ஷரன் அவனைத் தள்ளி விட்டாள். கோப்பிக் கிண்ணம் நிலத்தில் விழுந்து சிதறி தரைவிரிப்பெங்கும் கோலமிட்டது . கட்டிலில் இருந்து விலகிச் சென்றவளை, தன்னை சுதாரித்தபடி அவளை எட்டி இடது காலால் கிறிஸ்ரியன் உதைத்தபோது அந்த உதை வயிற்றில் விழுந்தது. வயிற்றைக் கையால் பற்றிக் கொண்டு கட்டிலிலருகே இருந்த நாற்காலி ஒன்றில் அவள் சுருண்டதும் தனது பையை எடுத்துக் கொண்டு வெளியே சென்றான்.
எதிர்பார்த்ததைவிட தன்னால் தொடங்கிய வரையறுக்கப்பட்ட சண்டை அதிக அளவில் சேதம் ஏற்படாது முடிந்து விட்டது என்பதோடு முகத்தில் காயமோ கண்டலோ ஏற்றபடவில்லை என்பது ஷரனுக்கு திருப்தியை அளித்தது. இன்றய வேலை நாளை அவனால் நிம்மதியாக செய்யமுடியாயாது ஆக்கியது எனது போனஸ் புள்ளிகள் என்று சிந்தித்தபடி, சில நிமிடத்தில் கதிரையில் இருந்து எழுந்து நைட்டியை தளர்த்தி கீழே விட்டு நிர்வாணமாக நின்று நிலைக் கண்ணாடியில் வயிற்றில் உதை விழுந்த இடத்தில் எதாவது கண்டலாக இருக்கிறதா எனப் பார்த்தாள். வலியில்லாமல் போய் விட்டதுடன், அடையாளமும் இல்லை என்பதை உறுதி செய்தாள். கூடவே, மீண்டும் அடி வயிற்றில் மாக்கஸ் வயிற்றில் இருந்தபோது கர்ப்பத்தால் உண்டாகிய வெள்ளிக் கோடுகள் இப்பொழுது மழை காலத்தில் காட்டில் உருவாகிய சிற்றோடைகள் கோடையில் மறைவது போல் அடையாளமும் இல்லாமல் மறைந்து விட்டதையும் தனக்குள் பெருமிதம் பொங்க விரல்களால் அந்த இடங்களை தடவினாள். பின்பு சிரித்தபடி கீழே தரையில் போட்டிருந்த நைட்டியை படுக்கையில் சுழட்டி விட்டு குளியலறைக்கு சென்று காலைக்கடனுடன் சவரில் அரை மணி நேரம் குளித்தாள். அந்த நேரம் அவள் இனி என்ன செய்வது என எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திப்பதற்கு அவகாசத்தையும் கொடுத்தது.
ஒரு வெள்ளைச் சேட்டையும் நீல டெனிம் ஜீன்சை அணிந்து கொண்டு தனது விருப்பமான சில உடைகளையும் மற்றும் அத்தியாவசிய தேவையான பொருட்களையும் அவசரமாக இரண்டு பெட்டிகளில் அடைத்துக் கொண்டு கீழேவந்தாள். காலை ஆகாரத்தை வாய் முகம் என பூசி வைத்திருந்த மாக்கை இழுத்துக்கொண்டு குளியலறைத் தண்ணீரில் கழுவிவிட்டு காரில் புறப்பட்டவள் நேராகத் தாயின் வீடடில் மாக்கஸ்கையும் பெட்டிகளையும் இறக்கி விட்டு அருகே உள்ள பொலிஸ் நிலயத்துக்கு சென்றாள்.
கிறிஸ்ரியனால் அடிக்கப்பட்டதை புகாராக எழுதி கொடுத்த போது அங்கு உள்ள பொலிஸ் அதிகாரி உடனே அவனைக் கைது செய்ய முடிவு செய்த போது ஷரன் ‘அதற்காக நான் இதை செய்யவில்லை. எதிர்காலத்தில் எதாவது நடந்தால் எனக்கும் மாக்கஸ்கும் பாதுகாப்பு தேவை என்பதற்காக இதை எழுதிக் கொடுத்தேன். எனது கணவனாக இருக்க மறுத்தாலும் மாக்சின் தகப்பனாக இருப்பான் என நினைக்கிறேன. இந்தப் புகாரை என்னைப் பொறுத்தவரை முன் எச்சரிக்கை நடவடிக்கையாகயே செய்கிறேன்’ என அழுத்தமாகக் கூறிவிட்டு திருப்தியுடன் வெளியே வந்தாள்.
[தொடரும் ]
uthayam@optusnet.com.au