மே 13, 2014 , ம 18, சிங்கள இராணுவம் தமிழ்மக்களை ஆண், பெண், குழந்தைகள் எனப் பாராது குண்டுகள் போட்டுக் கொன்றொழித்த நாள். இந்த ஆண்டு 5 ஆவது நினைவேந்தல் ஆண்டாகும். சிங்கள இராணுவம், பாதுகாப்பு இடத்தில் ஓடிப் பதிங்கிக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு அந்த இடத்தைக் குறிவைத்து வானில் இருந்து குண்டுகளும் தரையில் இருந்து செல்தாக்குதல்களையும் மழை போல் பொழிந்து தமிழ்மக்களைச் சங்காரம் செய்த நாள். பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டார்கள். மருத்துவமனைகளைக் கூட கொடிய சிங்களப் படைகள் விட்டுவைக்கவில்லை. மருத்துவமனைகள் இராணுவ தாக்குதலுக்குரிய இலக்குத்தான் என்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய இராஜபக்சே கொக்கரித்தான். மக்களைக் காப்பாற்ற வேண்டிய அய்நா அதிகாரிகள் வன்னிக் களத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள். அவர்களும் தப்பினோம் பிழைத்தோம் என கொழும்புக்கு ஓடித் தப்பினார்கள். உலக நாடுகள் கண்ணை மூடிக்கொண்டன. காதுகளைப் பொத்திக் கொண்டன. தமிழ்மக்களின் அழுகுரலைப் பார்க்கவும் கேட்கவும் இந்த நாடுகள் மறுத்தன.
இன்று ஆண்டுகள் 5 கழிந்தாலும் அந்தப் போரில் ஏற்பட்ட வடுக்கள், வலிகள், மனக் காயங்கள் மாறவில்லை. அவை என்றும் மாறாது. தமிழ்மக்களைக் கொத்துக் கொத்தாகக் கொன்றுவிட்டு சிங்களம் தெற்கில் போர் வெற்றியைக் கொண்டாடுகிறது. இம்முறை போர் வெற்றி நாள் மாத்தறையில் கொண்டாடப்படுகிறது. தரைப்படை, விமானப்படை, கடற்படை ஆகிய வற்றின் அணிவகுப்புகள் இடம் பெறுகின்றன. வடக்கில் வெற்றிக் கொண்டாட்டத்தின் ஒரு கூறாக வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் மற்றும் முல்லைத்தீவு இராணுவ தலைமையம் ஆகியனவற்றின் ஏற்பாட்டில் மாகாண போர் வீரர் தினம் நேற்றுப் புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு அருகில் இடம்பெற்றிருக்கிறது. புதுக்குடியிருப்பில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபிக்கு வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ சந்திரசிறி தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் போரில் பங்கெடுத்த இராணுவத்தினருக்கும் கவுரவிப்பு செய்யப்பட்டது.
இதே சமயம் வழக்கம் போல் முள்ளிவாய்க்காலில் செத்துமடிந்த பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்கள் நினைவாக பொது அஞ்சலி செலுத்துவதற்கு இராணுவம் தடை விதித்துள்ளது. தடையை மீறுவோர் பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவர் என இராணுவம் மிரட்டியுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் இழுத்து மூடப்பட்டுள்ளது.
மே 18 யை வெற்றிவிழாவாகக் கொண்டாட சிங்களமக்களுக்கு உரிமை உண்டு. ஆனால் போர்க்காலத்தில் குண்டு வீச்சினாலும் செல்லடியாலும் இறந்துபட்ட பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்களை நினைவு கூர்ந்து அழுவதற்கு சிங்கள இராணுவம் தமிழ்மக்களுக்கு அனுமதி மறுக்கிறது. இந்தத் தடை இரண்டு இனங்களுக்கும இடையில் உள்ள பிளவை மேலும் அதிகரித்துள்ளது.
போர் நடந்த காலத்தில் வி.புலிகளுக்கு இராணுவத் தீர்வு, தமிழ்மக்களுக்கு அரசியல் தீர்வு என மகிந்த இராஜபக்சே கூறிவந்தார். அதனை எல்லோரும் நம்பினார்கள். குறிப்பாக இணைத்தலைமை நாடுகள் நம்பின.
விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் மே 19 ஆம் நாள் முடிவுக்கு வந்ததாக இலங்கை அதிபர் இராஜபக்சே அறிவித்ததைத் தொடர்ந்து அய்.நா. அவை பொதுச் செயலாளர் பான் கீ மூன் இலங்கைக்கு மே 26 ஆம் நாள் சென்றார்.
வன்னியில் போர் நடந்த பகுதிகளை உலங்குவானூர்தியில் பறந்து சென்று சுற்றிப் பார்வையிட்டார். இடம் பெயர்ந்த தமிழ் ஏதிலிகள் பெரும் எண்ணிக்கையில் தங்க வைக்கப்பட்டிருந்த மாணிக்கம் தோட்டத்து ஏதிலிகள் முகாமையும் அவர் பார்வையிட்டார்.
இதன் பின்னர், அதிபர் இராஜபக்சேயைச் சந்தித்து பான் கீ மூன் தீவிர ஆலோசனை நடத்தினார். இதன் பிறகு இரு தலைவர்களின் கூட்டறிக்கை ஒன்று வெளியானது.
அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி, இலங்கைத் தமிழர்கள் உள்ளிட்ட அனைத்துச் சமூகத்தினரது குறைகளைத் தீர்க்கவும் அவர்களது வேட்கைகளை நிறைவேற்றவும் இலங்கையின் நீண்ட சமூக பொருளாதார மேம்பாட்டுக்காக அரசியல் தீர்வு காண வாய்ப்புகளை உருவாக்கவும் இரண்டு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.
அதன்பின்னர் மகிந்த இராஜபக்சே கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஒன்றை மே 2010 இல் நியமித்தார். பெப்ரவரி 27, 2002 இல் எழுதப்பட்ட அமைதி உடன்பாடு தோற்றதற்கான காரணங்கள், சூழ்நிலைகள் யாவை? 26 ஆண்டுகாலப் போரினால் படித்த பாடங்கள் என்ன? அது தொடர்பாக எடுக்க வேண்டிய நிருவாக, நிறுவன மற்றும் சட்ட நடவடிக்கைகள் எவை? என்பதை ஆராயவே அந்தக் குழு அமைக்கப்பட்டது. பதினெட்டு மாதங்களாக விசாரணை செய்த கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அதன் அறிக்கையை ஆணைக்குழு நொவெம்பர் 15, 2011 அன்று ஜனாதிபதி மகிந்த இராஜபக்சேயிடம் கையளித்தது. அதே ஆண்டு நொவெம்பர் 15 அன்று அது வெளியிடப்பட்டது. ஆனால் இன்றுவரை அந்த ஆணைக்குழுவின் அறிக்கையில் காணப்பட்ட முக்கிய பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை. குறிப்பாக வடமாகாணம் சிவிலியன் ஆட்சிக்கு மாற்றப்பட வேண்டும் இராணுவத்தின் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும் பொதுமக்கள் நடத்தும் நிகழ்ச்சியில் இராணுவம் தலையிடக் கூடாது போன்ற பரிந்துரைகள் இன்றுவரை நடைமுறைப் படுத்தப் படவில்லை.
இனச் சிக்கலுக்குத் தீர்வு கண்டு மீளிணகத்தை உருவாக்க தன்னிடம் உள்ளுர் பொறிமுறைகள் இருக்கிறது என்று சிறீலங்கா கடந்த மூன்று ஆண்டுகளை இழுத்தடித்தது. இதன் பின்னரே அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் “சிறீலங்காவில் நடந்த போரின் போது இரு தரப்பாலும் இழைத்ததாகக் கூறப்படும் கடுமையான மனித உரிமை மீறல்கள் மற்றும் அது தொடர்பான குற்றங்களை முழுமையாக விசாரித்து (“A comprehensive investigation into alleged serious violations and abuses of human rights and related crimes by both parties in Sri Lanka.”)அறிக்கை சமர்ப்பிக்குமாறு மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளையை கேட்டுக் கொள்ளும் தீர்மானம் அய்.நா. மனித உரிமைப் பேரவையில் கடந்த மார்ச்சு மாதம் 27 ஆம் நாள் நிறைவேற்றப்பட்டது. இந்தப் பன்னாட்டு விசாரணை அநியாயமாகக் கொல்லப்பட்ட, கற்பழிக்கப்பட்ட, படுகாயப் படுத்தப்பட்ட அப்பாவித் தமிழ்மக்களுக்கு நீதி வழங்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
கடந்த 5 ஆண்டுகளில் இராணுவத்தின் ஆதிக்கம் வடக்கிலும் கிழக்கிலும் அதிகரித்துள்ளதேயொழிய எள்ளளவும் குறையவில்லை. வடக்கிலும் கிழக்கிலும் தொடர்ந்து இராணுவத்தின் காட்டாச்சியே நடைபெறுகிறது. மீளிணக்கத்துக்குப் பதில் முன்னைய பிணக்கு நீடிக்கிறது. புலிகள் மீளிணைகிறார்கள் என்ற கதையைச் சோடித்து வடக்கில் நிரந்தரமாகத் தங்கிவிட இராணுவம் திட்டமிடுகிறது.
வி. புலிகள் மீண்டும் பயங்கரவாதத்துக்கு உயிர் கொடுக்க ஒருங்கிணைகிறார்கள் என்று சொல்லி படைத்தரப்புத் தேடுதல் வேட்டையில் ஈடுபடுகிறது. சென்ற ஏப்ரில் மாதம் 12 ஆம் நாள் நெடுங்கேணியில் கோபி, அப்பன், தெய்வீகன் என்ற முன்னாள் புலி உறுப்பினர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். சுற்றிவளைப்பின் போது தப்பி ஓடினார்கள் அதனால் சுட்டோம் என்கிறது இராணுவம்.
அதற்கு முன்னர் ஜெயகுமாரியும் அவரது மகள் 13 அகவை விபூசிகா வாழ்ந்த வீட்டுக்குள் கோபி மறைந்திருந்ததாகவும் அவரைத் தேடி காவல்துறையினர் சென்ற போது சுட்டுவிட்டு அவர் தப்பி ஓடி விட்டாராம். பயங்கரவாதிக்கு அடைக்கலம் கொடுத்த குற்றத்துக்காக தாயையும் மகள் விபுசிகாவையும் கைது செய்து பூசா சிறையில் அடைத்துள்ளனர். அவரது மகள் மகள் விபூசிகா நன்னடத்தை வீட்டில் வைக்கப்பட்டுள்ளார். ஜெயகுமாரியின் இன்னொரு மகன் புனர்வாழ்வு முகாமில் இருந்து காணாமல் போயுள்ளார். புனர்வாழ்வு முகாமில் மகன் இருக்கிற படத்தோடு ஜெயகுமாரி காணாமல் போனவர்களைக் கண்டு பிடித்துத் தருமாறு கேட்டு நடந்த போராட்டங்களில் மகள் விபூசிகாவோடு கலந்து கொண்டார். இதைச் செரிக்க முடியாத இராணுவம் அவர்கள் இருவரையும் பொய்யான குற்றச்சாட்டில் பழிவாங்கியுள்ளது.
பல்லாயிரக்கணக்கான மக்கள் அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்தப்படவில்லை. மீள் குடியமர்த்தப் பட்டவர்கள் அடிப்படை வசதிகளின்றி, தொழில் வாய்பின்றி வறுமையில் வாடுகிறார்கள். வெளிநாட்டில் உள்ள 16 தமிழ் அமைப்புக்ககளையும் 424 தனிமனிதர்களையும் பயங்கரவாதிகள் என முத்திரை குத்துவதன் மூலம் நிலத்தில் உள்ள மக்களையும் புலத்தில் உள்ள மக்களையும் அரசு பிரிக்க முயற்சிக்கிறது.
அரசின் நடவடிக்கைகள் சிங்கள இனமும் தமிழ் இனமும் புவியியல் அடிப்படையில் ஒரே நாட்டில் வாழ்ந்தாலும் அவை வட துருவம் தென் துருவங்களாகப் பிரிந்து நிற்கின்றன என்பதைத் துலாம்பரமாகக் காட்டுகிறது.
தெற்கில் சிங்கள – பவுத்த அடிப்படைவாதிகளின் கையோங்கியுள்ளது. இந்த சிங்கள – பவுத்த அடிப்படைவாத அமைப்புக்களுக்கும் இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கங்களான தலிபான் மற்றும் அல்கொய்தா போன்ற அமைப்புக்களுக்கும் இடையில் வேற்றுமை இல்லை. இவை மதத்தின் பெயரால் இயங்கும் பயங்கரவாத அமைப்புகளாகும்.
பொது பல சேனா, இராவண சேனா, சிகல இராவய போன்ற அமைப்புக்கள் சட்டத்தை தங்கள் கையில் எடுத்துள்ளன. இந்த அமைப்புகளுக்கு அமைச்சர்களும் அதிகாரிகளும் தட்டிக் கொடுத்து ஆதரவு வழங்கி வருகின்றனர். குறிப்பாக பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய இராஜபக்சேயின் ஆசீர்வாதம் இந்த சிங்கள – பவுத்த தீவிரவாதிகளுக்கு இருக்கிறது. சட்டத்தை நிலைநாட்ட வேண்டிய காவல்துறை இவர்களுக்கு முன் கைகட்டி நிற்கின்றது. கடந்த ஏப்ரில் 23 ஆம் நாள் பொது பல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசாதேரரின் தலைமையில் சென்ற பவுத்த தேரர்கள் மாற்றுக் கருத்துடைய வட்டரகே விஜித என்ற தேரர் கைத்தொழில் மற்றும வாணிக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களது அமைச்சகத்தில் ஒளிந்து இருப்பதாகக் கூறி அதனை முற்றுகையிட்டார்கள். ஒரு பவுத்த தேரர் எவ்வாறு ஒழுக வேண்டும் என்ற இலக்கணங்களையும் மீறி அத்தே ஞானசார தேரர் ஒரு காடையன் போல் நடந்து கொள்கிறார். இதற்கு முன்னர் பவுத்த தேரர்கள் வெளிப்படையாகச் சட்டத்தைத் தங்கள் கையில் எடுத்தது கிடையாது.
இரண்டாவது உலகப் போரில் 600,000 யூதர்களை நாசி ஜெர்மனி சித்திரவதை செய்து கொன்றது. அய்ரோப்பாவில் வாழ்ந்த யூதர்களில் இது மூன்றில் இரண்டு பங்காகும். அதனை யூதர்கள் ஆண்டுதோறும் நினைவு கூர்ந்து வருகிறார்கள்.
முள்ளிவாய்க்காலில் இறந்து பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களை நினைவு கூரும் நாளான மே 18 இல் அவர்களைக் கொன்றொழித்த கொடியோரை நீதிமன்றத்தில் நிறுத்தித் தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும். கடந்த மார்ச்சு மாதம் அய்.நா. மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா கொண்டுவந்து நிறைவேற்றிய தீர்மானம் நம்பிக்கை தருகிறது. இந்தத் தீர்மானம் ஒரு சுயாதீனமான அனைத்துலக விசாரணைக்கு வழிவகுத்துள்ளது. எமது மக்களின் உயிர்களுக்கு விலை உண்டு. அவர்களது தியாகம் வீண்போகக் கூடாது.
முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட மக்களை நினைவு கூர்ந்து அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி எதிர்வரும் மே 18 (ஞாயிற்றுக்கிழமை) காலை 11.00 மணியில் இருந்து மாலை 5.00 மணிவரை பீட்டர் மற்றும் போல் விருந்து மண்டபத்தில் ( Peter and Paul Banquet Hall, 231 Milner Ave, Toronto, ON M1S 5E3 (Markham and Milner) நடைபெறும்.
இந்தத் தேசிய துக்கநாளில் குடும்பத்தோடு தவறாது கலந்து கொள்ளுமாறு தமிழ் உறவுகளை அன்புடன் அழைக்கிறோம்.
Thamil Creative Writers Association (TCWA)
56 Littles Road
Scarborough, ON
M1B 5C5
Canada
Telephone: 416-281-1165