என்னோடு வந்த கவிதைகள்—4

“கவிதையைப் புதிதாக்குவது பற்றி
என்னிடம் பேசாதீர்கள்
நான் உண்மையைக்             
கவிதையாக்கிக் கொண்டிருக்கிறேன்”  –
     டாக்டர் பாலா

- பிச்சினிக்காடு இளங்கோ ண்ணா பற்றிய கவிதை கிடைக்காத சோகம் இருந்துகொண்டேதான் இருக்கிறது. அண்ணாவைப்பற்றி எழுதுவதற்குமுன்பு கவிதைக்கும் எனக்குமான உறவு எப்படி இருந்தது. திடீரென்று எழுதிவிட்டேனா?. தொடக்கப்பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும்போது அதன் அறிகுறிகள் ஏதாவது தெரிந்ததா? என்று என் நினவுச்சுருளை அவிழ்க்கும்போது ஏதேதோ நினவுக்கு வருகின்றன. ஒரு மழைமாதத்தில் பிச்சினிக்காட்டைப் பார்த்தவாறு நண்பர்களோடு அமர்ந்து கற்பனையாகப்பேசிக்கொண்டிருந்ததும், நானே ஒரு கற்பனைக்கதையை உருவாக்கி புதிரின் சூடுகுறையாமல் ,தொய்வின்றி கதைச்சொல்லிக்கொண்டிருந்ததும் முகம் காட்டுகின்றன.  சிலிநாட்டுக்கவிஞர் நோபெல் பரிசுபெற்ற பாப்லோ நெரூடா பதின்மூன்றாவது வயதில் முதலில்  எழுதியது  கட்டுரைதான். அதுதான் முதலில் வெளிவந்தது. அதுபோல, கவிதை எழுதுவதற்குமுன்பு அதற்குரிய அடிப்படைகளான: கற்பனை,சொல்லாற்றல், சொல்லும் ஆற்றல், புனைதிறன் , சிந்தனை, கலைப்பார்வை, இப்படியும் இன்னபிறவுமென சில அறிகுறிகள் என்னோடு கலந்து பிறந்ததை உணர்கிறேன். எங்கள் ஊர் மொளைக்கொட்டு மாரியம்மனுக்கு மொளைப்பாரிபோட்டு இரவில் கும்மிகொட்டும்போது சித்தப்பா வைரப்பவிசுவராயர், அண்ணன் பெ..சந்திரன் அவர்கள் பாடிய கும்மிப்பாடல்கள்தான், தாலாட்டுக்குப்பிறகு நான் கேட்ட முதல் இசைப்பாடல்கள். கேட்பதோடல்லாமல் பெரியவர்களோடு சேர்ந்து கும்மிகொட்டியவன் நான். இரவிலேதான் கும்மிகொட்டுவோம். நிலவுதரும்  வெளிச்சம்தான் துணை. நள்ளிரவுவரை அது தொடரும். பெரியவர்களோடு களைப்பின்றி கும்மிகொட்டியதால் அவர்களுடைய பாராட்டு எனக்குக் கிடைத்தது. இன்றைக்கும் கிராமத்தில் நடக்கிற கும்மிவிளையாட்டில் நான் கலந்துகொள்கிறேன். அது தரும் உடல்நலம் மன நலம் எதற்கும் இணையற்றது.

கும்மிப்பாடல்களில் ஒன்று இதோ:

பாடகர்:
கள்ளுக்கடை ஓரத்திலே என்
தன்னான னானே ஓரத்திலே என்
தில்லாலே லேலோ ஓரத்திலே

மற்றவர்கள்:
கள்ளுக்கடை ஓரத்திலே என்
தன்னான னானே ஓரத்திலே என்
தில்லால லேலோ ஓரத்திலே

பாடகர்:
களைச்சு விழுந்த பையன்போறான் என்
தன்னான னானே பையன்போறான் என்
தில்லால லேலோ பையன்போறான்

மற்றவர்கள்:
களைச்சு விழுந்த பையன்போறான் என்
தன்னான னானே பையன்போறான் என்
தில்லால லேலோ பையன்போறான்

பாடகர்:
கள்ளூவாங்கி நான்தருவேன் என்
தன்னான னானே நான் தருவேன் என்
தில்லால லேலோ நான் தருவேன்.

மற்றவர்கள்:
கள்ளூவாங்கி நான் தருவேன் என்
தன்னான னானே நான் தருவேன் என்
தில்லால லேலோ நான் தருவேன்

பாடகர்:
களைக்காமத்தான் வீடுபோடா
தன்னான னானே வீடுபோடா என்
தில்லால லேலோ வீடு போடா

மற்றவர்கள்:
களைக்காமத்தான் வீடு போடா
தன்னான னானே வீடு போடா என்
தில்லால லேலோ வீடு போடா

இப்படி ,தோசைக்கடை,முறுக்குக்கடையென ஒவ்வொரு கடை ஓரத்திற்கும் போகும் பாடல். நான் பாட மாட்டேன். ஆனால் மனதுக்குள் சொல்லிக்கொண்டே கும்மி கொட்டுவேன். இதுபோன்று இன்னும் பலவகையான கும்மிப்பாடல்கள் இன்றும் எங்கள் கிராமத்தில் உண்டு. பெண்களும் கும்மி கொட்டுவதுண்டு.  பாடுகிறவர்கள் குறைந்து வருகிறார்கள். இன்றைக்கும் மறைந்த அண்ணன் பெ. சந்திரன், சித்தப்பா வைரப்பவிசுவராயர் பாடிய பாடல்கள்தான் முன்மாதிரி. அண்ணன் சந்திரன்தான் எங்களூர் டி.எம். செளந்தரராசன்,சீர்காழி கோவிந்தராசன். ஏகலைவனாக வளர்ந்தவர். நயத்தோடும் பாவத்தோடும் பாடக்கூடியவர். எந்தப்பயிற்சியும் இல்லாமல் எங்களூரில் நடைபெற்ற இசைக்கச்சேரியில் கலந்துகொண்டு கலக்கியவர்.

“சிந்தனை செய்மனமே” என்ற அம்பிகாபதி படப்பாடலும், “அமுதும் தேனும் எதற்கு” என்ற சுரதாவின் பாடலும், அவர்பாடிதான் எனக்கு அறிமுகம். இன்றைக்கும் டி.எம்.எஸ் பாடிய “சிந்தனை செய்மனமே” என்ற பாடலைக்கேட்கிறபோது வாயசைக்கும் நடிகர்திலகம் நினைவுக்கு வருவதைவிட எங்களூர் அண்ணன் மறைந்த சந்திரன்தான் நினைவுக்கு வருகிறார். இனியவை நாற்பது பாடிய பூதஞ்சேந்தனார். “முத்து ஏர் முறுவலர் சொல் இனிது” அதாவது முத்துபோன்ற பற்கள் தெரியச் சிரித்துப்பேசுதல் இனிது என்றதுபோல் முத்துச்சிரிப்புக்கும், இனிய பாட்டுக்கும் சொந்தக்காரர் அண்ணன் சந்திரன். அவர்தான் பின்னொரு நாளில் திருச்சி தியாகராசன் எழுதிய கவிதைத்தொகுப்பைப் படிக்கக்கொடுத்தார். அதில் இன்னும் நினைவில் இருக்கும் ஒருவரி”ஆற்றோடு போவதல்ல நீச்சல்”. திருச்சி தியாகராசன் சிறந்த கவிஞர். புகழ்பெற்ற திரைப்பாடல்களும் எழுதியிருக்கிறார். அவரைப்போலவே மூத்த நண்பர் பெ. அண்ணாமலை. இவரும் நயமிக்க திரைப்பாடல்களைப்பாடி கவிதைக்கண் திறந்தவர். கவிதை நயம் உணர்ந்தவர்; உணர்த்தியவர். குறிப்பாக “ பாவாடை தாவணியில் பார்த்த உருவமா” என்ற பாடலையும், கவி.கா.மு.செரிஃப் எழுதிய “வானில் முழுமதியைக்கண்டேன் வனத்திலொரு பெண்ணைக்கண்டேன்” என்ற பாடலைக் கேட்கிற போதெல்லாம் திரு அண்ணாமலையே நினைவுக்கு வருகிறார்.

மொளைக்கொட்டு மாரியம்மனுக்கு சித்திரை மாதத்தில்  தொண்டராம்பட்டு மாரியப்பன் குழுவினரின் நாடகம் ஒரு வாரத்திற்கு நடைபெறும்.  இது மழைவேண்டி நடத்துகிற நாடகம். வள்ளித்திருமணம், பவளக்கொடி,அரிச்சந்தரா போன்ற நாடகங்களில் திரைப்பாடல்கள் பாடுவது வழக்கம். ‘கொஞ்சிக் கொஞ்சிப்பேசி மதிமயக்கம்” என்ற பாடல் அப்படித்தான் எனக்கு அறிமுகம். இசைத்தட்டை ஒலிக்கவிடுகிறபோது பக்கத்தில் நின்று ஆர்வமாய்ப் பார்த்தநேரம் இன்னும் நினைவுப்பையில் இருக்கிறது. இசைத்தட்டில் அவ்வையாரை..ஒ..ள..வை..யார் என்று வாசித்துப் பின் திருத்திக்கொண்டதும் அப்படியே… மொளைப்பாரி புதன் கிழமை இரவு போடுவார்கள். புதன், வியாழன், வெள்ளி இரவு கும்மி விளையாட்டு உண்டு. சனிக்கிழமை தங்குமுளை எனச்சொல்லி இரவு கும்மி கிடையாது.ஞாயிற்றுக்கிழமை இரவு கும்மி. திங்கள் பகலில் கும்மிக்கொட்டி மாலையில் மொளைப்பாரியை பிச்சினிக்குளத்தில் பறித்துவிடுவார்கள். சிறுவர்கள் நாங்கள் அதை எடுத்து ஒருவரையொருவர் அடித்து விளையாடுவோம். இப்படி ஆண்டுக்கு மூன்று முறை மொளைப்பாரி போடுவது வழக்கம்.

அடுத்த ஊர்  தாமரன்கோட்டையில் சிவன்கோவில் திருவிழா நடைபெறும்போது அங்கே பலாப்பழமும் மாம்பழமும் அதிகமாக விற்பனையாகும். தேரோட்டம் தெப்பம் உண்டு. வைகாசியில் நடைபெறும் அந்தத் திருவிழாதான் சொந்தத்திரவிழாவாகக் கொண்டாடுவோம். அங்கே,கரகாட்டம்,கர்நாடக கச்சேரி, சமூக நாடகங்கள் உண்டு. சின்னவயதில் என் அம்மாயி( அம்மாவின் அம்மா) ஆத்தாபிள்ளை என்னை கர்நாடக கச்சேரி கேட்க அழைத்துப்போனதுண்டு. அதுவும் முதல்வரிசையில் இருந்து கேட்டதுண்டு. எதையும் செய்துகாட்டுகிற, சொல்லிக்காட்டுகிற அந்த வயதில் கர்நாடகக்கச்சேரியை அடுத்தநாள் மற்றவர் முன்னிலையில் நடத்தினேன். எல்லோரும் சிரித்தது அப்படியே நினைவில் சிரிக்கிறது. ஆண்டுகள் பல ஓடியபின்பு சிங்கப்பூரில் அந்த சின்ன வண்ண நினைவு என்னை உசுப்ப எழுதிய கவிதை இதோ:

கேட்டிருந்த வான்கோழி

மகுடிக்கு நாகம்
எனக்கு அடுத்தபடிதான்

புல்லாங்குழலுக்கு
ஏங்கி ஏங்கி
இழையானதுதான் மிச்சம்

வீணை, வயலின்
எல்லாம் என்னை
எல்லாம் மறக்கச்செய்யும்

அரித்வார் மங்கலம்
வளையப்பட்டி மேடையில்
கலகலத்துப்போகிறேன்

அறியாப்பருவத்தில்
அம்மாயி ஆத்தாப்பிள்ளையின்
கரம்பிடித்து
தாமரன்கோட்டை
“சட்டபடி”வேளாளரின் ஆதரவில்
கர்நாடகக்கச்சேரியின்
முன்வரிசையில் இருந்தது
சன்னமாய் இன்னும்
நினைவுச்சன்னலில்

அடுத்தநாள் பகலில்
கேட்டிருந்த வான்கோழியாய்
நான் கச்சேரி செய்ததை
அம்மாயி
பொக்கைவாய் மூடி
சிரித்ததும் அப்படியே…

இசைஞானம் இருக்கு
என்னும் செருக்கில்
திடீரென்று
சரிகமபதநி
சொல்லிப்பார்த்தேன்…

சொல்லமுடியாது
நான் விழுந்து
எழுந்த கதை.

“மானுடம் தன் மனதைக் கலைமூலமாகக் காட்டிக்கொள்கிறது.மானுடம் கலையிலேதான் நிறைவு பெறுகிறது; கலையிலேதான் தன்னை நினைவுகொள்கிறது; கலையிலேதான் நிம்மதி பெறுகிறது. கலைவழியாக மனிதன் தன்னை உணர்கிறான்; தன்னை உணர்த்துகிறான்” என்ற பேராசிரியர் தி.சு.நடராசனின் கூற்று எனக்குச் சற்று ஆறுதலாக அமைந்தது.

(வரும் )

pichinikkaduelango@yahoo.com