சிங்களக் குடியேற்றங்களால் விழுங்கப்பட்டு வரும் தமிழீழ மண்! வடக்கில் 18,000 சிங்களக் குடும்பங்கள் குடியேற்றம்! தலைக்கு மேல் வெள்ளம்!

சிங்களக் குடியேற்றங்களால் விழுங்கப்பட்டு வரும் தமிழீழ மண்! வடக்கில் 18,000 சிங்களக் குடும்பங்கள்  குடியேற்றம்! தலைக்கு மேல் வெள்ளம்!  -  நக்கீரன் -ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்பது போல திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்துக்கு எதிராக தமிழர் தரப்பு காட்டுகிற எதிர்ப்பைப் பற்றிக் கிஞ்சித்தும் சிங்கள – பவுத்த பேரினவாத அரசு மனதில் கொள்ளாது மேலும் மேலும் சிங்களக் குடியேற்றத்தைத் துரிதகெதியில் முடுக்கி வருகிறது. முன்னைய காலத்தில் சிங்களக் குடியேற்றம் காதும் காதும் வைத்தாற் போல் ஓசைப்படாமல் மேற்கொள்ளப்பட்டது. அதுவும் பெரும்பாலும் அரசுக்குச் சொந்தமான நிலங்கள் சிங்களக் குடியேற்றத்துக்குப் பயன்படுத்தப்பட்டன. ஆனால் இன்று அது தலை கீழ் மாற்றம் பெற்றுள்ளது. இன்று சிங்கள – பவுத்த பேரினவாத அரசு  பகிரங்கமாக அறிவித்துவிட்டு தமிழர்களுக்குச் சொந்தமான நிலத்தில் சிங்களக் குடும்பங்களைக் குடியேற்றி வருகிறது. கேட்டால் அவர்கள் போர் காரணமாக இடம் பெயர்ந்தவர்கள் என்று சொல்கிறது. இரண்டு நாள்களுக்கு முன் செய்தி ஏடுகளில் வெளிவந்த செய்தியின் படி வடக்கில் 18,000 சிங்களக் குடும்பங்களைக் குடியேற்ற அரசு முடிவு செய்து அதற்கான ஆயத்தங்கள் செய்யப்படுகிறதாம். வரும் யூன் மாதத்திற்கு முன்னர் வடக்கில் 18 ஆயிரம் சிங்கள குடும்பங்களைக் குடியேற்றத் திட்டம்! என்ற தலைப்பிட்டு வெளிவந்திருக்கும் அந்தச் செய்தியின் படி வட மாகாணத்தில் எதிர்வரும் யூன் மாதத்திற்கு முன்னர் 18 ஆயிரம் தென்பகுதி சிங்களக் குடும்பங்களை குடியமர்த்தவும் அவர்களுக்கு பிரத்தியேகமாக நிரந்தர வீடுகளையும் காணிகளையும் வழங்கவும் சிறீலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இவ்விடயம் தொடர்பான சிறப்புக் கலந்துரையால் ஒன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது.

யப்பான் நாட்டின் இலங்கைக்கான சிறப்புத் தூதுவரின் அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்பு உயர்மட்ட அதிகாரிகளின் கலந்துரையாடலிலேயே இவ்விடயம் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இக்கலந்துரையாடலில் இவ்வாறு குடியேற்றப்பட உள்ளவர்களுக்கான பிரத்தியேகமான வீட்டுத்திட்டம் தொடர்பாக பல்வேறு தரப்பினரிடமிருந்து ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளன.

குடியேற்றப்படவுள்ள தென்பகுதிப் பெரும்பான்மையினரின் குடும்பங்களின் விபரங்களையும் வீட்டுத் திட்டம் தொடர்பான விபரங்களையும் பொது நிருவாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் ஊடாகத் திரட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இக்குடியேற்றத்திற்கான ஒழுங்கமைப்பு வேலைகளைக் கவனிப்பதற்கும் நெறிப்படுத்துவதற்கும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் சிறப்புக்  குழு ஒன்றினை அமைப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குடும்பத்துக்கும் சுமார் 9 லட்சம் பெறுமதியான வீடுகளை அமைத்துக் கொடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த வீடமைப்பு வேலைகளை நடைமுறைப்படுத்துவதற்கான அதிகாரத்தினை வீடமைப்பு அதிகார சபையினருக்கு வழங்குவது தொடர்பாகவும் இக்கலந்துரையாடலில் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது. வடமாகாணத்தில் கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் இவ்வாறு பெரும்பான்மை இனத்தவர்களான சிங்களவர்களை குடியமர்த்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு இப்பகுதிகளிலுள்ள அரச நிலங்களை பயன்படுத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. (செய்தி -ஞாயிற்றுக்கிழமை, 14 ஏப்ரல் 2013)
சுருக்கமாகச் சொன்னால் இந்தக் குடியேற்றுத் திட்டத்தை நடைமுறைப் படுத்த முழு அரச யந்திரமும் துரிதகெதியில் முடுக்கி விடப்பட இருக்கிறது.

இந்தக் குடியேற்றம் பற்றிய கலந்துரையாடல்  யப்பான் நாட்டின் சிறீலங்காவுக்கான சிறப்புத் தூதுவரின் அலுவலகத்தில் நடைபெற்றிருப்பது கவனத்தில் கொள்ளத்தக்கது. இந்தக் குடியேற்றத்திட்டத்திற்குத் தேவைப்படும் கோடிக்கணக்கான பணத்தை யப்பான் அரசு சிங்கள – பவுத்த இனவாத அரசுக்குக் கொடுக்க முன்வந்துள்ளது.  போர்க்காலத்தில் தமிழ்மக்களைக் கொன்று குவித்த சிறீலங்கா அரசுக்கு ஆதரவாக யப்பான் செயல்பட்டது.   அமைதி உடன்பாட்டை நடைமுறைப்படுத்த நியமிக்கப்பட்ட இணைத்தலைமை நாடுகளில்  யப்பான் நாடும் ஒன்றென்பது தெரிந்ததே.  அமைதிக் காலத்தில் யப்பானிய சிறப்புத் தூதுவர் யசூசி அகாசி பல தடமைகள் கிளிநொச்சி சென்று விருந்துண்டு மகிழ்ந்தவர்.  அதே நாடுதான் இப்போது சிங்களக் குடியேற்றத்துக்கு நிதியுதவி செய்ய இருக்கிறது. யப்பான் சிறீலங்காவேர்டு வைத்திருக்கும் நெருங்கிய நட்புக்கு அதுவொரு  பவுத்த நாடாக இருப்பது முக்கிய காரணமாகும்.

இது இவ்வாறிருக்க அம்பாரை மாவட்டத்தில் தமிழர்களுடைய காணிகளை அபகரிக்கும் நடவடிக்கைகளை இராணுவம், பவுத்த தேரர்கள் மற்றும் சிங்கள அதிகாரிகள் துரிதப்படுத்தியுள்ளார்கள்.  சம்மாந்துறை செயலகப் பிரிவில் உள்ள 70 ஏக்கர் காணியில் இராணுவ பாளையம் (cantonment) ஒன்றை நிறுவ நடவடிக்கை எடுத்துள்ளார்கள்.  இராணுவம்  இரவோடு இரவாக காணியைச் சுற்றி வேலி அமைத்துள்ளது.  அதற்கான அதிகாரம் சிவில் அதிகாரிகளிடம் இருந்து பெறப்படவில்லை. அண்மையில் அபிவிருத்தி என்ற பெயரில் தேயத்த கிருல்ல (தேசத்தின் முடிசூடல்) என்ற தொனிப் பொருளில் ஒரு கண்காட்சி அம்பாரையில் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்தே இராணுவ தளபதி அந்தக் காணியில் இராணுவ பாளையம் நிறுவப்படப் போவதாக மக்களுக்கு அறிவித்துள்ளார்.  இந்தக் காணி அபகரிப்புக்கு சம்பந்தப்பட்ட சிவில் அதிகார சபையிடம் இருந்து பெறப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முதலில் 20 ஏக்கர் காணியில் மட்டும் பாளையம் உருவாக்க முடிவாகி இருந்தது. இப்போது  70 ஏக்கர்  காணியில் உருவாக்க முடிவாகியுள்ளது. இந்தக் காணி  தமிழ்மக்களுக்குச் சொந்தமான பரம்பரைச் சொத்தாகும். அவர்கள் அதில் கமம் செய்து வந்துள்ளார்கள்.
இது ஒருபுறம் இருக்க தொட்டாச்சுருங்கி என்ற ஊரில் உள்ள 140 ஏக்கர் காணியைப் பவுத்த தேரர்கள் அபகரித்துள்ளார்கள். இந்தக் காணி வானொலி நிலையம் அமைக்க ஒதுக்கப்பட்டிருந்தது.

இவ்வாறு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் தமிழர்களுடைய காணிகள் அபகரிக்கப்பட்டு அவற்றில் சிங்களக் குடியேற்றம் அல்லது இராணுவ முகாம்கள், பாளையங்கள் நிறுவப்பட்டு வருகின்றன. அதற்கு எதிராகத் தமிழர் தரப்புக் காட்டும் எதிர்ப்புக்கள் எருமை மாட்டில் பெய்த மழை போல் ஆகிவிடுகிறது. வடக்கிலும் கிழக்கிலும் சிங்களவர்களைக் குடியேற்றும் நடவடிக்கைகள் துரிதகெதியில் எடுக்கப்பட்டு வரும் வேளையில் கற்றறிந்த பாடங்கள் மற்றும் மீளிணக்க ஆணையம் தமிழர்களுடைய காணியுரிமை பற்றிச் செய்த பரிந்துரைகளை கவனத்தில் எடுக்க வேண்டியுள்ளது.

மும்மொழிக் கொள்கை

(1) 2020 ஆம் ஆண்டளவில்  மும்மொழி தேசமாக்கும் அரசின் முன்னெடுப்பை ஆணையம் வரவேற்கிறது. இதனை அடைய வரவு செலவுத் திட்டத்தில் ஆசிரியர்களை பயிற்றுவிக்கவும் ஊழியர்களை அமர்த்தவும் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். (பரிந்துரை எண் எல்எல்ஆர்சி 8.239) 

(2) மொழி அடிப்படையில் ஆன தமிழீழ மக்களது அடையாளம்
எந்தவொரு மாவட்டமோ அல்லது மாகாணமோ மொழிஅடிப்படையில் வகைப்படுத்தக் கூடாது.  அரச பணியாளர்கள் நாட்டின் எந்தப் பகுதியிலும் கடமையாற்ற மும்மொழிகளிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். (பரிந்துரை எண் எல்எல்ஆர்சி 8.240)

(3) தாயகம் மற்றும் தமிழர்களது காணி உரிமை

சிறீலங்காவின் எந்தப் பகுதியும் எந்தவொரு இனக் குழுவுக்கும் சொந்தமானது அல்ல என்ற கருத்துச் சொல்லப்பட்டது.  பயங்கரவாத நடவடிக்கை காரணமாக வடக்கிலும் கிழக்கிலும் இருந்து சிங்கள மக்கள் துரத்தப்பட்டார்கள்.  அந்த மக்கள் மீண்டும் அங்கு கொண்டுசென்று குடியமர்த்தப்பட வேண்டும். ( பரிந்துரை எண் எல்எல்ஆர்சி 8.107)

(4) இன மத அடிப்படையில் மாணவர்களுக்குக் கலவன் பாடசாலைகளை நிறுவுதல்

பள்ளிக் கூடங்களில் வெவ்வேறு இனம், மதம் இரண்டையும் சார்ந்த மாணவர்கள் சேர்க்கப்படுவதை அரசு ஒரு முன்நடவடிக்கைக் கொள்கையாக (policy initiative) கடைப்பிடித்து அதனை ஊக்கிவிக்க வேண்டும்.  இது தொடர்பான கொள்கையை அரசு மிகக் கவனமாக உருவாக்க வேண்டும். (பரிந்துரை எண் எல்எல்ஆர்சி 8.250)

கற்றறிந்த பாடங்கள் மற்றும் மீளிணக்க ஆணைக்குழு  எந்த மாவட்டமும் மாகாணமும் ஒரு குறிப்பிட்ட இனத்துக்கு சொந்தமாக இருக்கக் கூடாது எனப் பரிந்துரை செய்துள்ளது. இது தமிழினத்தின் தாயகக் கோட்பாட்டை உடைக்கச்  செய்யப்பட்ட பரிந்துரையாகும்.  மும்மொழித் திட்டத்தின் கீழ் சிங்களம் படித்த சிங்களவர்களுக்குத்தான் வேலை வாய்ப்புக் கிடைக்கும். சிங்களம் படித்த தமிழர்களுக்கு வடக்கு  கிழக்கில் தானும் வேலை கிடையாது.

வடக்கில் 18,000 சிங்களக் குடும்பங்களைக் குடியேற்றுவதன் மூலம் கற்றறிந்த பாடங்கள் மற்றும் மீளிணக்க ஆணையத்தின் பரிந்துரைகளை சிங்கள – பவுத்த பேரினவாத அரசு  நடைமுறைப்படுத்துகிறது என்று எடுத்துக் கொள்ளலாம். இப்படி வெளிமாவட்டங்களில் இருந்து குடியேற்றப்படும் சிங்களக் குடும்பங்களுக்கு 9 இலட்சம் பெறுமதியான வீடுகளை அரசு தனது செலவில் அமைத்துக் கொடுக்க இருக்கிறது.  அதற்கு மேலாக தண்ணீர், மின்சாரம், பள்ளிக் கூடங்கள், மருத்துவமனைகள் போன்றவற்றை கட்டிக்கொடுக்கும் என எதிர்பார்க்கலாம்.

ஆனால் சிங்கள – பவுத்த பேரினவாத அரசு மீள் குடியமரும் தமிழ் மக்களுக்கு எந்தவொரு அடிப்படை உதவியைத்தானும் செய்து கொடுக்க மறுக்கிறது. அரசு தமிழ் மீள்குடியமர்ப்பாளர்களை மாற்றான்தாய் மனப்பான்மையோடு நடத்துகிறது.

அரசு தமிழர்களது  கண்ணுக்குச் சுண்ணாம்பும்  சிங்களவர் கண்ணுக்கு  வெண்ணெய்யும் வைத்து  ஓரவஞ்சகமாக நடந்து கொள்கிறது. தமிழர்களுக்குக் கஞ்சியும் சிங்களவர்களுக்கு பால்பாயாசத்தோடு பத்துவித கறி விருந்து வைக்கிறது. தமிழர்களுக்கு நுனிக் கரும்பு சிங்களவர்களுக்கு அடிக்கரும்பு.

திருக்கோணமலை மாவட்டம் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சம்பூர்ப் பகுதி மக்கள் 25.05.2006  ஆம் ஆண்டில் இராணுவம் மேற்கொண்ட பாரிய இராணுவ நடவடிக்கை காரணமாக இடம்பெயர்ந்தனர். இப்பொழுது இவர்கள் கிளிவெட்டி, பட்டித்திடல் மற்றும் மணல்சேனை ஆகிய ஊர்களில் உள்ள நலன்புரி முகாங்களில் வாழ்கிறார்கள். இம்மக்களின் வீடு வாசல்கள் உடைக்கப்பட்டு முற்றாகச் சேதமாக்கப்பட்டுள்ளன. வாழ்நிலங்கள் புற்களும் மரங்களுமாக வளர்ந்து காடாகக் காட்சியளிக்கின்றன.

ஏழு ஆண்டுகள் கழித்து 24 – 03 – 2013 இல் இப்பகுதியைச் சேர்ந்த நவரத்தினபுரம் மற்றும் கூனித்தீவு என்னும் சிற்றூர்களைச் சேர்ந்த மக்கள் மீள்குடியேற அனுமதிக்கப்பட்டுள்ளனர். நவரத்தினபுரம் மக்களுக்கு ஒரு குடும்பத்திற்கு தொடக்க உதவியாக உரூபா 10,000 வீதம் 139 குடும்பங்களுக்கு (139 10,000) உரூபா 1,390,000.00 வும் 293 குடும்ப உறுப்பினர்களுக்கு மாணவர்கள் உட்பட உரூபா 1,000.00 வீதம் உரூபா 293,000.00 வும் தேவைப்படுகிறது.

கூனித்தீவு மக்களுக்கு 89 தற்காலிக குடிசைகள் மற்றும் கழிவறைக் கூடம் கட்டிக்கொடுக்க உரூபா 12,905,000.00 தேவைப்படுகிறது.
வட – கிழக்கு தமிழரது மரபுவழித் தாயகம்,  அதனை ஆட்சி செய்ய  தன்னாட்சி உரிமை வேண்டும் என்று தமிழ் மக்கள் நீண்டகாலமாகப் போராடி வருகிறார்கள்.   தமிழர்களது தாயக மண்ணில் சிங்களவர்களைக் குடியேற்றிவிட்டால் தாயகக் கோட்பாடு தன்னாட்சி உரிமை தானாகவே அடிபட்டும் போகும் என்பது சிங்கள – பவுத்த அரசின் சிந்தனையாக இருக்கிறது.  இதனை தமிழர் தரப்பு புரிந்து கொள்ள வேண்டும்.

சிங்களக் குடியேற்றம் தமிழினத்தின் இருப்புக்கு பெரிய அறைகூவலாக இருக்கிறது. இருந்து வருகிறது. வெள்ளம் இப்போது கழுத்துக்கு மேலே பாயத் தொடங்கியுள்ளது. திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தினால் கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் சிறுபான்மையாக்கப் பட்டுவிட்டனர். கிழக்கு மாகாணத்தில் உள்ள 3 மாவட்டங்களில் இரண்டில் திருகோணமலை (35 விழுக்காடு) மற்றும் அம்பாரை (15 விழுக்காடு) தமிழர்கள் சிறுபான்மை ஆக்கப்பட்டுள்ளார்கள். மட்டக்களப்பு மாவட்டம்  (75 விழுக்காடு) மட்டுமே மிஞ்சி இருக்கிறது.

ஆனால் புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புக்கள் (TGTE, GTF, BTF, NCCT, CTC, USTPAC) தங்கள் நேரத்தையும் மனித வளங்களையும் பன்னாட்டு போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும் இனப்படுகொலை பற்றி விசாரணை நடத்தவேண்டும் வட – கிழக்கில் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் இடைக்கால நிருவாகம் வேண்டும் பன்னாட்டு பாதுகாப்பு பொறிமுறை வேண்டும் போன்ற கோரிக்கைகளுக்குச்  செலவழித்து வருகின்றன. இவை வேண்டாம் என்று நான் சொல்ல வரவில்லை. ஆனால் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தைப் பற்றி வாய் திறவாமல் போர்க்குற்றங்கள் பற்றி மட்டும் பேசுவதும் எழுதுவதும் தீர்வாகாது. ஆங்கிலத்தில் ஒரு பழமொழி இருக்கிறது. அறுவை வைத்தியம் வெற்றி ஆனால் நோயாளி இறந்துவிட்டார்!

தமிழ்மக்களது மண்பறிபோனபின் இடைக்கால நிருவாகம்,  பன்னாட்டு பாதுகாப்பு பொறிமுறை யாருக்குத் தேவை? சிங்களக் குடியேற்றம் வெறும் புலுடா இல்லை. அது இராசபக்சே அரசின் நீண்ட கால நிகழ்ச்சித் திட்டங்களில் ஒன்று. சிங்கள இனவாதிகளது திட்டமும் அதுதான். நாவற்குழியில் மீள்குடியமர்வு என்ற போர்வையில் 170  சிங்களக் குடும்பங்களுக்குக் கட்டப்படும் வீடுகள் சிங்கள வணிகர்களாலும் பவுத்த அமைப்புகளாலும் கட்டப்படுகின்றன. சிங்கள அரசு சிங்களவர்களுடைய குடிப்பரம்பலை அதிகரிக்க கூடுதல் பிள்ளைகளை பெறுமாறு ஊக்குவிக்கிறது. ஒரு குடும்பம் குறைந்தது 6 பிள்ளைகளை ஆவது பெறவேண்டும் என்று மஞ்சள் உடை அணிந்த பவுத்த தேரர்கள் பகிரங்கமாக வேண்டுகோள் விடுகிறார்கள். இராணுவம் மற்றும் காவல்துறையில் பணியாற்றுவோருக்கு பிறக்கும் 3 ஆவது குழந்தைக்கு உரூபா 100,000 பரிசு வழங்கப்படுகிறது.

வெள்ளம் தலைக்கு மேல் பாய்கிறது. சிங்கள அரசின் உண்மையான நீண்ட கால திரைமறைவுத் திட்டங்களைப் புரிந்து கொள்ளாது போராடுவதால் எந்தப் பலனும் இல்லை!

athangav@sympatico.ca