– தாயகம் (கனடா)வில் தொண்ணூறுகளில் தொடர்நாவலாகப் பிரசுரிக்கப்பட்ட எனது நாவலான 1983 தாயகம் சஞ்சிகை நின்று விடவே இடையில் எட்டு அத்தியாயங்களுடன் நின்று போனது. வெளிவந்த அத்தியாயங்களின் விபரங்கள் வருமாறு: அத்தியாயம் ஒன்று, அத்தியாயம் இரண்டு, அத்தியாயம் மூன்று, அத்தியாயம் நான்கு., அத்தியாயம் ஐந்து: பிரச்சினைக்குரிய தீர்வு?, அத்தியாயம் ஆறு: நடைமுறையும், தத்துவமும், அத்தியாயம் ஏழு: போரும், மனிதனும் , சூழலும்., அத்தியாயம் எட்டு: அகதி முகாம். இந்த நாவல் 1983 கறுப்பு ‘ஜுலை’க் கலவர நிகழ்வுகளைப் பதிவு செய்யும் நோக்கத்திற்காக எழுதப்பட்டது; முற்றுப்பெறவில்லை. ஒரு பதிவுக்காக வெளியான எட்டு அத்தியாயங்களும் மீள்பிரசுரமாகின்றன. இந்த நாவலினை மீண்டும் எழுதுவதற்கான நோக்கமெதுவும் தற்போதில்லை என்பதால் இந்தப் பதிவு முக்கியமானது. – வ.ந.கி –
அத்தியாயம் ஒன்று!
வாழ்க்கை சில வேளைகளில் சலிப்புற்றுப் போய்விடுகின்றது. இனம் புரியாத சோர்வும், தளர்வும் உடல் முழுக்கப் பரவிவிடுகின்றன. ஏனென்று புரியாததொரு ஏக்கம் , எதற்காக இந்தப் பிறப்பு? , பிறப்பின அர்த்தமென்ன? என்பன போன்ற விடை தெரியாக்கேள்விகளால் நெஞ்சு நிறைந்து விடுகின்றது. சிறு கிரகம். சிறு தீவு. இதற்குள் ஒரு வாழ்க்கை. பிறகேனிவ்விதம் மோதலும், இரத்தக்களரியும்… ஆனந்தமாக அனுபவிக்க வேண்டிய பொழுதுகளைச் சிதைத்துச் சீரழிக்கின்றோம். ஏன்? இனம், மதம், மொழி போன்ற விடயங்களில் மனிதர்கள் இன்னமும் மந்தைக் கூட்டம் போன்றுதான் செயற்படுகின்றார்கள். ஆறாவது அறிவைப் பாவிக்க விடாமல் உணர்வுகள் தடுத்து விடுகின்றன. சரி, பிழை எல்லாம் தெரிந்துதானிருக்கின்றது. ஆனாலும் அவற்றை உணர்ந்து வாழ முடிவதில்லை. அண்மைக்காலமாகவே மீண்டும் தமிழ் மக்கள் மீதான் ஆட்சியாளர்களின் அடாவடித்தனங்கள் தொடரத்தொடங்கி விட்டன. காந்தியம் போன்ற அமைப்புகள் தடை செய்யப்பட்டுத் தலைவர்கள் கைது செய்யப்பட்டு விட்டனர். ஆங்காங்கே படையினரால், காடையினரால் அப்பாவிகள் மீதான தாக்குதல்கள் தொடரத்தொடங்கி விட்டன. குடும்பத்தவரை நினைத்தால்தான் கவலையாகவுள்ளது. என்னையே நம்பிக் கனவுகளுடனிருக்கின்றார்கள். எத்தனை வருடங்கள் எங்களிற்காக அம்மா மாடாய் உழைத்திருப்பா. ஒரே மகனையும் கொழும்புக்கு வேலைக்கு அனுப்பிவிட்டு நாடிருந்த நிலையில், குமருகளுடன் கிராமத்தில் தவித்துக்கொண்டிருக்கும் அந்த உள்ளத்தை நினைத்தால்தான் கவலையாகவுள்ளது. கணவனையிழந்த நிலையில் , தன்னந்தனியாக, எவ்வளவு நெஞ்சுரத்துடன் எங்களை வளர்த்து வந்திருக்கின்றா. அந்தக் கருணைக்கு நாங்கள் எவ்விதம் கைம்மாறு செய்யப்போகின்றோம்? இதற்கிடையில் மல்லிகா வேறு. இவள் என்னுடன் வேலை பார்க்கும் சக ஊழியர்களில் ஒருத்தி. சிங்களப் பெண். கள்ளங்கபடமற்ற அவள் சொல்லும், செயலும் , நெஞ்சும் என்னை ஏனோ தெரியவில்லை ஈர்க்கத்தான் செய்து விடுகின்றன. இவள் விடயத்தில் நான் என்னை மிகுந்த சிரமப்பட்டுத்தான் அடக்க வேண்டியிருக்கின்றது. வாழ்க்கையைத் தொலை நோக்குடன் சிந்திப்பவன் நான். அதிலும் அதிகமாக சமுதாயப் பிரக்ஞையென்று சொல்லுகின்றார்களே அதில் கொஞ்சமும் என்னிடமுமிருப்பதாகக் கருதுபவன். நாடிருக்கும் நிலையில் எப்படியெப்படியெல்லாம் என் வாழ்க்கை சுழன்றடிக்கப்போகின்றதோ தெரியவில்லை. இந்த நிலையில் இவளை என்னுடன் இணைத்துப்பார்க்கவே முடியாமலிருக்கின்றது. யதார்த்தத்தில் சாத்தியமாகக் கூடிய விடயமாகவும் தெரியவில்லை.
ஏனோ தெரியவில்லை இன்று நேரத்துடனேயே எழுந்து விட்டேன். நித்திரையே வரமாட்டேனென்கிறது. நாலுமணியிருக்கும் இன்னும் பொழுது புலரத்தொடங்கவில்லை. மனதும் அமைதியாகவில்லை. கடந்த சில நாட்களாகக் காதில் விழுகின்ற கதைகளும் ஒரு வித நிச்சயமற்ற எதிர்காலத்தையே சுட்டிக்காட்டுகின்றன. யாழ் பல்கலைக்கழக மாணவிகள் சிலர் படையினரால் மானபங்கப்படுத்தப்பட்டதாகத் தகவலொன்று பரவியது. அதற்குப் பதிலடியாக பதின்மூன்று இராணுவத்தினர் திருநெல்வேலியில் வைத்துக்கொல்லப்பட்டதாக நேற்று செய்தி வந்தது. சிறில் மத்தியூ போன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடக்கம் அரச கட்டுப்பாட்டிலுள்ள அரசு சார்பான பத்திரிகைகள் போன்றவற்றால் தமிழர்க்கெதிராகத் தூவப்பட்டுவரும் துவேஷகரமான உணர்வுகள் ஏற்கனவே ஒருவித நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்தி விட்டன. இச்சமயத்தில் மேற்படி செய்திகள் ஏற்படுத்தப்போகின்ற தாக்கம் எவ்விதமாகவிருக்கப் போகின்றதோ?
பாஸ்கரன் குறிப்பேட்டை மூடி வைத்தான். குறிப்பெழுதுவது அவனது முக்கியமான நாளாந்தப் பணிகளிலொன்று. இரண்டாவது உலகப் போரில் நாசிகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வதைமுகாமொன்றினுள் மடிந்து போன யூதச் சிறுமியான ஆன் ஃபிராங் என்பவளின் நாட்குறிப்புகள் நூலாக வெளிவந்து உலகப் புகழ்பெற்று விட்டிருந்தது. The Diary of Anne Frank என்ற அந்த நூலைப் படித்திருந்தாள். நாசிகளுக்குப் பயந்து மறைந்து வாழ்ந்திருந்த காலகட்டத்தில் , நாலு சுவர்களுக்கிடையில் அகப்பட்டிருந்த நிலையில் , எழுந்த உணர்வுகளையெல்லாம் கிட்டி எனப்பெயரிட்ட அக்குறிப்பேட்டைத் தோழியாகப் பாவித்து அதில் கொட்டியிருந்தாள் அந்த யூதச்சிறுமி. அதைப் படித்ததிலிருந்து பாஸ்கரனுக்கும் குறிப்பேடு எழுதவேண்டுமென்ற ஆசை ஏற்பட்டது.
ஆன் ஃபிராங்கின் குறிப்பேட்டைப் போல் ஒரு காலத்தில் தனது குறிப்பேடும் உலகப் புகழ்பெற்ற இலக்கியமாக ஆகிவிடவேண்டுமென்ற ஆசையில் நிச்சயமாக அவன் எழுதவில்லை. குறிப்பேட்டை எழுதத் தொடங்கிய பின்புதான் அவன் அனுபவபூர்வமாக ஓர் உண்மையினைக் கண்டுபிடித்தான். அன்றாடம் அவன் நெஞ்சை அலைக்கழிக்கும் உணர்வுகளை எழுத்தில் வடித்தபோது அவன் மனதின் பாரம் குறைந்தது. முன்னைவிட வாழ்வின் போக்குகளை அதிக முனைப்புடன் , அதிகத் தெளிவுடன் எதிர்க்கும் பக்குவமான மனநிலை உருவானது. அதுவரை நம்பிக்கையற்றுச் சோர்ந்து, தளர்ந்து கிடந்த மனநிலை மாறி, உற்சாகமும், சுறுசுறுப்பும், நம்பிக்கையும் கலந்ததொரு மனநிலை முகிழ்த்துவிடும். ஆரம்பத்தில் பரீட்சார்த்தமாகத் தொடங்கிய அவனது குறிப்பெழுதும் பழக்கம் நாளடைவில் நாளாந்தக் கடமைகளிகொன்றாக ஆகிவிட்டிருந்ததற்குக் காரணம் மேற்படி போக்குதான். எழுதியவற்றை மீண்டுமொருமுறை வாசித்துப் பார்க்கும்போது மனம் மேலும் மேலும் உற்சாகத்துடன் , தென்புடன், துள்ளத்தொடங்கி விடும். ‘ப்பூ இவ்வளவுதானா’வென்றிருக்கும். இதற்குத்தானா மனதை இவ்வளவு நேரமும் கஷ்ட்டப்படுத்திக்கொண்டிருந்தோமென்று படும். அச்சமயங்களில் அவனது மனம் மிகுந்த உறுதியுடன், எந்தவிதத் தடைகளையும் , சவால்களையும் எதிர்த்துநிற்கும் பக்குவத்தைப் பெற்றுவிடும். அவனைப்பொறுத்தவரையில் இந்தக் குறிப்பேடு பல வழிகளிலும் அவனிற்கு உதவியாகவிருந்தது. எழுதும்போது மனப்பாரத்தைக் குறைத்தது. மீண்டும் வாசிக்கும் பொழுதோ மனதின் உறுதியை மேலும் மேலும் அதிகமாக்குவதில் துணையாக நின்றது. நிச்சயமற்ற காலத்துடன், சுவர்களுக்குள் வளைய வந்த சிறுமி ஆன்பிராங்கிற்கு எவ்வளவு தூரம் அவளது குறிப்பேடு உதவி புரிந்திருக்குமென்பதைப் பாஸ்கரனால் பாஸ்கரனால் அனுபவபூர்வமாக உணர முடிந்தது.
வெளியில் நகரத்தின் ஆரவாரம் மெல்ல மெல்லக் கேட்கத்தொடங்கிவிட்டிருந்தது. வாகனங்களின் இரைச்சல்கள் கேட்கத்தொடங்கின. பாஸ்கரன் தங்கியிருந்த வீடு விவேகானந்த ‘ஹில்ஸ்’ஸுக்’கண்மையிலிருந்தது. மலையகத்தமிழரான வர்த்தகர் ஒருரிற்குச் சொந்தமான வீடு வீட்டின் பின்புறமாகவிருந்த அறையொன்றில் தங்கியிருந்தான். குளியலறையும் வெளிப்புற வாசலுடன் இணைத்துக்கட்டப்பட்டிருந்தது. அந்த அறைக்குத் தனிப்பட்ட வாசலிருந்ததால் பாஸ்கரனுக்கு எந்தவிதப் பிரச்சினைகளுமேற்படவில்லை. தானுண்டு தன் வேலையுண்டு என்று நாட்களைக் கழித்துக்கொண்டிருந்தான். நேரத்துடன் புறப்பட்டு, நேரம் சென்று வருவதால் பெரும்பாலும் இவன் அக்குடும்பத்தவரைச் சந்திப்பதேயில்லை. ஓய்வு நாட்களில் மட்டும் சில சமயங்களில் கண்டிருக்கிறான். கால்களில் கொலுசும், முகத்தில் மஞ்சளுமாக அழகு திரண்ட இளம் பெண்ணொருத்தியை அச்சமயங்களில் கண்டிருக்கிறான். அவ்வர்த்தகரின் பெண்ணாகவிருக்கக் கூடுமெனப் பலமுறை எண்ணியிருக்கிறான். அண்மையில்தான் தெரிந்தது அது அவரின் மகளல்ல மனைவியென்பது. அந்தப்பெண்ணுக்கு வயது இருபத்தி ஐந்துக்குள்தானிருக்கும். அவருக்கோ ஐம்பதிற்குக் குறையாது. இதைப்பற்றியெல்லாம் வீணாக எண்ணி மனதைக் குழப்பிக்கொள்வது அவன் வழக்கமில்லை. முகங்கழுவி குளித்து, ஃபிளாஸ்கிலிருந்த தேநீரைக் கொஞ்சம் குடித்துவிட்டு வீதியில் இறங்கியபொழுது மணி ஆறரையைத் தாண்டி விட்டிருந்தது. ஆர்மர் வீதியிலிருந்த லக்சுமி விலாஸில்தான் அவன் காலை உணவை முடிப்பது வழக்கம். மத்யச் சாப்பாடு அவன் வேலை செய்யுமிடத்திற்கண்மையிலிருந்த கடையொன்றில் முடிந்து விடும். இரவுச் சாப்பாட்டைப் பொறுத்தவரையில் ஓரிடமென்று குறிப்பிட்டு சொல்ல முடியாது. வெள்ளவத்தையிலிருந்து கொட்டாஞ்சேனை வரை, சந்தர்ப்பத்திற்கேற்றபடி, எந்த இடம் வாய்ப்பாகவிருக்கிறதோ அங்கு சாப்பிடுவது அவனது வழக்கம்.
அத்தியாயம் இரண்டு!
ஆர்மர் வீதி, ஜிந்துப்பிட்டியை அண்டிய , சந்து பொந்துகளிலிருக்கும் பல்வேறு வகையான ‘ஜாப்னா ஹொட்டல்க’ளில் அடிக்கடி பிட்டும், இறால் குழம்பும் சுவைத்துண்டிருக்கின்றான். அதன் விளைவாக அடிக்கடி பூச்சி மருந்தும் (வயிற்றுப் பூச்சிக்காகத்தான்) குடித்துமிருக்கின்றான். இருந்தும் ‘ஜாப்னா ஹொட்டல்க’ளிடமிருந்து அந்நியப்பட்ட அவனால் முடியாமலிருந்தது. இந்த விடயத்தில் அவனது ஆழ்மனம் பகுத்தறியும் புறமனதைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. லக்சுமி விலாஸ் ஒரு கதவு மட்டுமே திறந்த நிலையில் காணப்பட்டது. கடைக்காரப் பையன்களின் முகங்களில் பயத்தின சாயை படர்ந்திருந்தது. அவர்கள் சொல்லித்தான் மருதானையிலுள்ள தமிழர்க்குச் சொந்தமான கடைகள் சில விசமிகளால் தீக்கிரையாக்கப்பட்ட விடயமே பாஸ்கரனுக்குத் தெரிய வந்தது. இதற்கிடையில் கடை முதலாளி சுந்தரம் அவனைக்கண்டு விட்டார். அவரது முகத்திலும் இலேசான கலக்கம் தெரிந்தது. அவன் அவரது முக்கியமான வாடிக்கையாளர்களிலொருவன். அதனால் ஏற்பட்ட பழக்கத்தின் விளைவாக அவன்மேல் ஒருவித மதிப்பு வைத்திருந்தார். “உள்ளுக்கு வா தம்பி. தம்பிக்குப் பால் போட்டு ‘ஸ்ட்ராங்கா ஒரு கப் கோப்பி கொண்டு வாப்பா” என்றவன் இவன் பக்கம் திரும்பினார்.
“தம்பி, … பொரளை மருதானைப் பக்கமெல்லாம் கடைகளை உடைச்சுப் போட்டாங்களாம். இந்த முறை கலவரம் பெரிசாக வருமென்று கதைக்கிறான்கள்”
இதற்கு என்ன பதில் சொல்வது என ஒரு கணம் பாஸ்கரன் யோசித்தான்.
அவனைப் பொறுத்தவரையில் இனக்கலவரங்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தான். இப்பொழுதுதான் முதல் முறையாக சந்திக்கவிருக்கின்றான். எழுபத்தேழு கலவரத்தைத்தொடர்ந்து யாழ்ப்பாணம் நோக்கி அகதிகளாகத் தமிழர்கள் படையெடுத்தபோது, ஸ்டான்லி கல்லூரியில் அமைந்திருந்த அகதி முகாம் வாசலில் நின்றபடி சோர்வும், தளர்ச்சியுமாக வந்து கொண்டிருந்த அகதிகளைப் பார்த்திருக்கின்றான். 58ஆம் ஆண்டுக் கலவரத்தைப் பற்றி நிறையக் கேள்விப்பட்டிருக்கின்றான். ஆனால் இதுவரை நேருக்கு நேர் இனக்கலவரமொன்றில் அவன் அகப்பட்டதில்லை. அரசாங்கள் நினைத்தால் இத்தகைய வன்முறைச் செயற்பாடுகளை முளையிலேயே கிள்ளியெறிந்து விடலாம். ஆனால் அரசுகளே தூண்டி விடுகின்றபோது.. என்று கூறவேண்டும்போலுணர்ந்தான்; ஆனால் கூறவில்லை. பதிலாக : ஒன்றுக்கும் பயபடாதீங்கோ. எல்லாம் சரியாய்ப்போயிடும்” என்று கூறி வைத்தான்.
ஏற்கனவே கலங்கிப் போயிருந்த சுந்தரத்தை மேலும் கலங்க வைக்க அவன் விரும்பவில்லை. கோப்பியைக் குடித்துவிட்டு “எதற்கும் கவனமாயிருங்கள்” என்று கூறிவிட்டு பாஸ்கரன் புறப்பட்டபோது அவரும் பதிலுக்கு “நீங்களும்தான் தம்பி” என்று கூறி வைத்தார். அவனது வார்த்தைகள் அவருக்குச் சிறிது ஆறுதலைத் தந்தன. பதிலுக்கு அவரது வார்த்தைகள் அவனுக்கு இதமாகவிருந்தன.
ஆர்மர் வீதி வழியாகச் சிறிது தூரம் நடந்துசென்றபொழுது அவன் ஒன்றினை அவதானித்தான்.. தமிழர்களுக்குச் சொந்தமான கடைகள் பல மூடப்பட்டுக் கிடந்தன. நகர் சோபையிழந்து காணப்பட்டது போல் தென்பட்டது. ஏதோ ஒருவித துயரம் கலந்த சூழல் எங்கும் வியாபித்துக்கிடப்பதுபோல் நெஞ்சு உணர்ந்தது. எதிர்ப்பட்டவர்கள் யாவருமே இவனைப் பெரிதாகக் கவனித்ததாகத் தெரியவில்லை. சிலரைப்பார்த்தால் அசல் தமிழர்களென்பது அப்படியே புரிந்துவிடும். இன்னும் சிலரைப் பார்த்தாலோ உரித்து வைத்த சிங்களவர்கள் என்பது விளங்கிவிடும். இன்னும் சிலரைப் பார்த்தால் அவர்கள் முஸ்லீம்கள் என்பது தெரிந்துவிடும். ஆனால் வேறு சிலரைப் பார்த்து மட்டும் அவர்களது இனத்தை அறிந்து விட முடியாது. பேசிப்பார்ப்பதன்மூலம்தான் அறிய முடியும். மற்றும் சிலரையோ அவ்வாறும் அறிய முடியாது. யாராவது அவர்களைத் தெரிந்தவர்களால மட்டும்தான் முடியக்கூடிய காரியமாக அவர்களை அறிதலென்பது இருந்து விடுகின்றது. பாஸ்கரனைப் பொறுத்தவரையில் அந்த வகையினைச் சேர்ந்தவன். தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மூன்று மொழிகளையும் சரளமாகப் பேசக்கூடியவன். அவனது தோற்றமும், சிங்கள மொழிப்பரிச்சயமும் எவ்வளவு தூரம் உதவக்கூடுமென்பதை இத்தகைய சமயங்களில்தான் உணர முடிகின்றது. இதனை அவன் நன்குணர்ந்தேயிருந்தான். தமிழர்களைக் கண்டதும் ஒருவித ஆவலுடன் வீதிகளில் கூடிக்கதைத்தபடியிருந்த சிங்களவர்கள் சிலர் பார்த்தார்கள். அத்துடன் தமக்குள் ஏதோ கதைத்துக்கொண்டார்கள். இவனை யாருமே பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. பாஸ்கரன் வேலை பார்க்கும் அரச திணைக்களம் விஜேயவர்த்தனா மாவத்தையிலிருந்தது. 155 பஸ்ஸில் காமினி தியேட்டர் அருகில் இறங்கிக் காரியாலயத்திற்கு நடப்பதுதான் அவன் வழக்கம். இன்று ‘பெற்றா’ வழியாகச் சென்று லேக் ஹவுஸ் நிறுவனப்பக்கமாக நடந்து செல்வதாக முடிவு செய்துகொண்டான். பெற்றா பஸ் நிலையத்தை அண்மித்தபொழுது காடையர் சிலர் கூடிக்கதைத்துக்கொண்டிருந்தார்கள்.
“யாழ்ப்பாணத்திலை எங்களுடைய பிள்ளைகளையெல்லாம் சுட்டுக்கொல்லுறான்கள். இவங்களையெல்லாம் அடித்துத் துரத்த வேண்டும்’ என்ற அர்த்தத்தில் அவர்கள் உரையாடல் அமைந்திருந்தது. அவன் காரியாலயத்தை அடைந்தபோது எல்லோரும் இவனையே அடிக்கடி பார்த்துக்கொண்டார்கள். வீதியில் வந்தபோது யாருக்குமே இவன் தமிழனென்பது புரிந்திருக்கவில்லை. மல்லிகா இவனைக் கண்டதும் சிறிது கவலையுடன் அணுகியவள் கூறினாள்: ” பாஸ்கி எதற்காக வேலைக்கு வந்தனீங்கள்? உங்களுக்கு விஷயமே தெரியாதா? பொரளையில் இரவே கலவரம் தொடங்கிவிட்டதாம். இந்த நிலைமையில் நீங்களும் வேலைக்கு வந்திருக்கத்தேவையில்லை.”
பாஸ்கரனுக்குச் சிரிப்பாக வந்தது. ‘கலவரம் இடம் பார்த்து வருவதில்லைஏ. ஆபத்து எங்கிருந்தாலும் ஒன்றுதானே’ என எண்ணிக்கொண்டான். கூறவில்லை. மல்லிகாவுக்கு அவனது சிரிப்பு சிறிது ஆத்திரத்தைத் தந்தது.
“பாஸ்கி, உங்களூக்கு எல்லாமே விளையாட்டுத்தான்” எனச்செல்லமாகக் கவலையுடன் , மெல்ல அவனைக் கடிந்துகொண்டாள் அவள்.
“பாஸ்கி, எனக்கென்றால் பயமாகவிருக்கிறது. ” மல்லிகாவின் குரலில் தொனித்த கவலையினை அவனால் உணர முடிந்தது.
“நீயெதற்குக் கவலைப்படுகிறாய் மல்லிகா? நானல்லவா கவலைப்பட வேண்டும்” இவ்விதம் இலேசாகச் சிரித்தபடியே கூறிய பாஸ்கரனை மல்லிகா இடைமறித்தாள்.
“பார்த்தீர்களா? உங்களுக்கு நான் எத்தனைதரம் சொல்லியிருக்கிறேன். இப்படி இனரீதியாக எங்களைப் பிரித்துக் கூறகூடாதென்று. நாங்களெல்லாரும் மனிதர்கள். ஆறறிவு படைத்த மனிதர்களல்லவா? :
மல்லிகா எப்பொழுதுமே பாஸ்கரன் விடயத்தில் அளவுக்கு அதிகமாக உரிமை எடுத்துக்கொண்டாள். அவளது உள்ளத்தை அவன் வெகுநாட்களாகவே அறிந்திருந்தான். தன் மனதைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதுதான் பெரிதும் கஷ்ட்டமான காரியமாக அவனுக்குப் பட்டது. மல்லிகா அவனுடன் நெருங்கிப் பழகுவதே ஒரு சிலருக்குப் பிடிக்காமலிருந்தது. இதற்கு முக்கிய காரணம் மல்லிகாவின் பேரழகுதான். சிவந்த சிறிய தோற்றம்.. காந்தக் கண்கள்.. அகன்று ஒடுங்கி விரிந்த உடல்வாகு.. இது போதாதா? இவ்விதம் ஏற்பட்ட புகைச்சல் கூடச் சிங்களத்தி தமிழனைப் பார்ப்பதோ என்ற காரணத்தினால் ஏற்பட்டது என்பதைவிட. மனிதப் பாலுண்ணியின் வரலாற்றில் காலங்காலமாக இருந்து வரும் பெண்ணை அடைவதற்கு முயலும் ஆண்களுக்கிடையில் ஏற்படுகின்ற போட்டி உணர்வு என்றுதான் கூற வேண்டும். மிருகங்களைப் பொறுத்தவரையில் அவை பகிரங்கமாகவே மோதிக்கொள்கின்றன. மனிதர்களைப் பொறுத்தவரையில் பெரும்பாலும் இத்தகைய உணர்வுகளை வெளிகாட்டுவதில்லை. சந்தர்ப்ப சூழ்நிலைகள் அமைந்து, மிருகமாகி விடுகின்ற கணங்களில் மட்டும் வெளிக்காட்டுகின்றார்கள்.
அக்காரியாலயத்தில் அவளைத்தவிர வேறு தமிழர்கள் சிலரும் வேலை பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர்களில் கணக்காளர் அரியரத்தினமும், அவரது அந்தரங்கக் காரியதரிசியாக வேலை பார்க்கும் யமுனாவும் மட்டும்தாம் வந்திருந்தார்கள். பாஸ்கரனைக்கண்டதும் அவர்களிருவரும் இவனை நோக்கி ஓடி வந்தார்கள். இருவரது முகங்களிலும் பயத்தின் சாயை கவிந்து கிடந்தது. அவர்களைப் பார்க்கப் பாஸ்கரனுக்குப் பாவமாகவிருந்தது. அதிலும் அரியரத்தினத்தைப்பார்க்கத்தான் மிகவும் கவலையாகவிருந்தது. அந்தக் கறுத்த முகத்தில் அசல் தமிழனென்ற முத்திரை தெளிவாகவே குற்றப்பட்டிருந்தது. கம்பீரமான மனுஷர் ஒடுங்கிப்போய் வந்தது மேலும் அவர்மேல் பரிவுபட வைத்தது. மான்குட்டியைப் போல் துள்ளித்திரியும் யமுனாவின் சோகம் கப்பிய தோற்றமும் நெஞ்சை நெகிழ வைத்தது. இவர்களெல்லாரும் என்னவர்களென்றொரு உணர்வு நெஞ்சின் ஆழத்திலிருந்து மேலெழுந்தது.
“பாஸ்கரன், பிரச்சினை பெரிசாகப் போகுது போலை படுகுது. பெரிசாக ஏதாவது துடங்கிறதற்கு முன்னாலை போறதுதான் நல்லது.”
இவ்விதம் அரியரத்தினத்தின் குரல் கவலையுடன் வெளிவந்தது.
“எனக்கென்றால் ஒரே பயமாய்க்கிடக்குது பாஸ்கரன். பிரச்சினை இப்பிடியென்று தெரிந்திருந்தால் வேலைக்கு வந்திருக்க மாட்டேன்:
யமுனாவின் குரல் சிறிதே தளுதளுத்தது.
“நீங்கள் ஒன்றைப்பற்றியும் கவலைப்படாதீங்கோ. அப்பிடிப் பிரச்சினை பெரிசாய் வந்தால் டிரெக்டரைக் கேட்டுப்பார்ப்போம். இத்தனை ஓபீஸ் கார்கள் இருக்கேக்கை அவற்றிலொன்றிலை எங்களைக் கொண்டுபோய் ராமகிருஷ்ண ஹோலிலை விடச்சொல்லிக் கேட்டுப் பார்ப்போம்”
இவ்விதம் அவர்களுக்குப் பாஸ்கரன் ஆறுதல் கூறிக்கொண்டிருக்கும்பொழுது அவன் மேல் மதிப்பு வைத்திருந்த பியோன் முகமட் ஓடி வந்தான். “மாத்தையா” என்றபடி வந்தவன் அவனைத் தனியாக அழைத்துச் சென்றான். “மாத்தையா உங்களை அடிக்க பிளான் பண்ணுகிறான்கள். மெல்லமாய் மாறுவதுதான் நல்லது.” அவர்களைப் பின்தொடர்ந்து வந்த மல்லிகாவும் அதனையே கூறினாள்.
“பாஸ்கி என்னுடைய வீட்டிற்கு வந்து தங்குங்களேன். பாதுகாப்பாயிருக்கும்.”
“பிரச்சினை வெளியிலை பெரிசாகிவிட்டால் எப்பிடிப் போறது. அரியரத்தினம் , யமுனா இவர்களை என்ன செய்யுறது. ” இவ்விதம் பாஸ்கரன் கேட்டான். மல்லிகாவின் முகத்தில் சிந்தனை ரேகைகள் வெளிப்பட்டன.
[தொடரும்]