8ம் நாள் – தான்ஜீர்: மொரக்கோவின் வாசல் July 25, 2016
தான்ஜீரில் பழைய ரீயாட் (Riyad) ஒன்றை தங்கும் விடுதியாக மாற்றிய இடம் ஒன்றில் தங்கினோம். மிகச் சிறிய அறை. ஒரு ஈரோ 10 டினார்கள். ஒரு கனேடியன் டொலர் 7 டினார்கள். இலங்கை இந்தியாவை விட பண மதிப்பு கூடிய நாடு. இருப்பினும் ஐரோப்பாவின் விடுதி விலைகளுக்கு சரிசமனாகவே இங்கு அறவீடுகின்றார்கள். நாம் எதிர்பார்த்ததைவிட விடுதி விலைகள் அதிகம். ஆனால் மரக்கறிகள் மிக மலிவு. சமைத்து சாப்பிட இடமில்லாதது பெரும் குறையாக இருந்தது.
நமது பொதிகளை வைத்துவிட்டு வெளியில் கிளம்பினோம். முதல் வேளை தொலைபேசிக்கு சிம் காட் ஒன்று வாங்குவது. இரண்டாவது இரவு உணவிற்கு மரக்கறி சாப்பாடு சாப்பிடக் கூடிய கடை ஒன்றைத் தேடுவது. வெளியில் வந்தவுடனையே வாசிலில் நின்ற விற்பனையாளர்கள் நம்மை சூழ்ந்து கொண்டார்கள். தாம் மதீனா பார்க்க கூட்டிச் செல்வதாகவும் எங்கே போகவேண்டும் எனக் கேட்டு நமது பயணத்தை தீர்மானிப்பவர்களாக இருந்தார்கள். நாம் அவர்களிடமிருந்து மெதுவாக நழுவி நமக்கு கிடைத்த மதீனா வரைபடத்தின் உதவியுடன் நடந்தோம்.
போகும் வழியில் சிறிய உணவுவிடுதி. அதன் உணவு விபரங்களைப் பார்த்தோம். தான்ஜின் என்ற உணவில் பல வகைகளும் மற்றும் முட்டைப் பொறியலில் பல வகைகளும் இதைவிட மாமிச உணவு வகைகளுக்கான விபரங்களும் இருந்தன. Tripadvisorஆல் சிபார்சு செய்யப்பட்ட விளம்பரமும் ஒட்டப்பட்டிருந்தது. சரி வேறு உணவு விடுதிகளை கண்டு பிடிக்க முடியாவிட்டால் இந்தக் கடையில் வந்து சாப்பிடுவோம் என நினைத்துக் கொண்டு சென்றோம். ஒரு வீதியில் நிறைய சனம். கடைகள் திறந்து வீதி முழுக்க பலவிதமான வியாபாரிகள் தமது பண்டங்களை விற்றுக் கொண்டிருந்தார்கள்.
எல்லாவிதமான சாப்பாடுகளும் திறந்து விற்பனைக்கு இருந்தன. எந்தவிதமான உணவு பாதுகாப்பு விதிகளும் கடைப்பிடிக்கப்படவில்லை. ஈக்களும் மனிதர்களைப் போல உணவுப்பண்டங்களை சுற்றி குமிந்து இருந்தன. புதிதாக வரும் ஐரோப்பியர்களுக்கு அதுவும் தற்சமயம் ஸ்பெயினின் அழகிய நகரங்களான மலக்கா சிவிலி என்பவற்றிலிருந்து வருபவர்களுக்கு இது ஒரு கலாசார அதிர்ச்சியாக இருக்கும். ஆனால் எம்மைப் போன்ற ஆசிய நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு அப்படி இருக்காது என நினைக்கின்றோம். நாம் கனடாவில் வாழ்ந்தபோதும் இந்த இடம் நமது ஊருக்கு வந்த ஒரு உணர்வை ஏற்படுத்தியது.
இரவு எட்டு மணிக்கு அனைவரும் நோன்பு திறப்பதற்கு தம்மை தயார் செய்து கொண்டிருந்தார்கள். நாம் சிம்காட் வாங்க ஒரு கடைக்கு சென்றோம். அந்த முதலாளி இளம் பொடியன். அதிசயமாக நன்றாக ஆங்கிலம் கதைத்தார். விபரங்களைக் கேட்டுவிட்டு அடுத்த நாள் காலை வருவதாக கூறி சாப்பாட்டுக் கடையை நோக்கி வந்தோம். எமக்கான தெரிவுகள் அதிகம் இருக்கவில்லை. ஆகவே மரக்கறி தான்ஜின், முட்டைப்பொறியல் மற்றும் ஒரேஞ் பானம் ஆகியவற்றைச் சொன்னோம். முட்டைப் பொறியல் மஸ்ரூம் தான் இருந்தது. நாம் அது வேண்டாம் எனக் கூறி மிளகாய் வெங்காயம் தக்காளி என்பவற்றைக் கலந்து செய்ய சொன்னோம். அவர்களும் ஏற்றுக் கொண்டு செய்து தந்தார்கள். கடைகள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். தான்ஜின் சாப்பாட்டை மிகச் சூடாக மண் சட்டியில் இன்னுமொரு மண் சட்டியால் மூடிபடி கொண்டுவந்தார்கள். மூடியைத் திறந்தபோது ஆவி பறந்தது. மண் சட்டியில் மரக்கறி மற்றும் ஒலிவ் ஒயில் என்பவற்றை கலந்து மண் சட்டி மூடியால் மூடி அவித்திருந்தார்கள். நமது நாக்குக்கு பெரிய சுவையாக இருக்கவில்லை. இனி 18 நாட்களுக்கு இதுதான் நமது உணவு என்று அப்பொழுது நாம் உணரவில்லை. ஆனாலும் முதல் நாள் என்பதால் மகிழ்ச்சியுடன் சாப்பிட்டோம். இவ்வாறு சாப்பாடு ஒன்றை ஓடர் செய்தால் பாணும் பயறுக் கறியும் ஒலிவ் அச்சாறும் நம்மை வரவேற்க கொண்டு வந்து வைப்பார்கள். இது இவர்களின் பண்பாட்டின் ஒரு அம்சம்.
தான்ஜின் வட அந்திலாந்திக்கும் மத்தியதரைக் கடலும் சந்திக்கின்ற இடத்திலுள்ள மலைப்பிரதேசம். மெல்லிய குளிர் காற்று அடிக்க நாம் தொடர்ந்தும் நடக்காமல் சாப்பிட்டுவிட்டு அறைக்குச் சென்றோம். கொண்டு வந்த உடைகள் எல்லாம் அழுக்காகியதால் ஒவ்வொரு ஆடைகளாக கழுவி அறைக்குள் காயப்போட்டோம். குறைந்த எண்ணிக்கையான ஆடைகளையே கொண்டுவந்திருக்கின்றோம். நாள் முழுவதும் நடப்பதால் ஆடைகள் அழுக்காகும் வீதம் அதிகம். ஆகவே அடிக்கடி கழுவ வேண்டி ஏற்படுகின்றது. கிட்டத்தட்ட கடந்த 20 வருடங்களாக நமது ஆடைகளை இயந்திரமே கழுவியது. ஆகவே நமது ஆடைகளை கழுவுவதும் இப் பயணத்தில் புதிய ஒரு அனுபவமாக இருந்தது.
காலையில் தங்கிய இடத்தில் உணவு கிடைத்தது. வீச்சு ரொட்டி, கேக், ஓரேஞ் பானம். தேநீர். மற்றும் பாண். சாப்பிட்டுவிட்டு சிம் காட் வாங்க சென்றோம்.நேற்று மாலை உரையாடிய கடை மூடியிருந்தது. ஆகவே இன்னுமொரு கடையில் அந்த வியாபாரிக்கு ஆங்கிலம் தெரியாதபோதும் ஒருவாறு விளங்கப்படுத்தி வாங்கினோம். இப்படியான கடைக்காரர்கள் தமது கடைக்கு ஆட்கள் வருவதை வரவேற்பவர்களாக இருக்கவில்லை. ஏனோதானோ என்றுதான் பதிலளிப்பார்கள். நாம் சிம் காட்டின் உதவியுடன் நகரத்தின் வரைப்படத்தைப் பயன்படுத்தி அடுத்த நாள் சேவ்செவோன் செல்வதற்கான பஸ்ஸிற்குப் பதிவு செய்ய நடந்து சென்றோம். மத்திய பஸ் நிலையத்தில் பல பதிவு செய்யும் இடங்கள் இருந்தபோதும் shirleyயின் தகவல் சேகரிப்புகள் சிடிஎம் (CTM) பஸ் நல்லம் எனக் கூறியதால் அதைப் பதிவு செய்தோம். அங்கிருந்து பத்து டினாருக்கு வாடகை வாகனம் பிடித்து மதீனாவில் உள்ள நல்ல கடை என்று சிபார்சு செய்யப்பட்ட ஒன்றுக்கு வந்தோம். அதைத் தேடி தேடி களைத்ததபோது இன்னுமொரு பயணி உதவி செய்தார்.
அது ஒரு பிரான்ஸ் நாட்டுக்கார பெண்ணினது கடை. கடையில் வேலை செய்பவர் மட்டுமே இருந்தார். நாம் நீண்ட நேரம் காத்திருந்தும் நம்மை வந்து ஒன்றும் கேட்கவில்லை. நமக்கோ பசிக்களை. என்ன சாப்பாடு இருக்கின்றது எனக் கேட்டோம். அவருக்கு ஆங்கிலம் தெரியாது. கடையில் பெரிதாக ஒன்றையும் காணவில்லை. நாம் பக்கத்துக் கடைகளில் சாப்பிட என்ன இருக்கு என்று தேடினோம். இனிப்பு பண்டங்களே இருந்தது. அதில் சிலவற்றை வாங்கி சாப்பிட்டோம். வெளியில் வந்தபோது முதல் சென்ற கடையிலிருந்து ஒரு பெண்மணி அழைத்தார். கடையின் சொந்தக்கார பெண்மணியை தொலைபேசி அழைத்து வரும்படி கூறியிருக்க வேண்டும். நாம் மரக்கறி சாப்பாடு என்ன உள்ளது எனக் கேட்டோம். அவர் இரண்டு சாப்பாடுகளை சொன்னார். நாம் விலையைக் கேட்டோம். அது பயங்கர விலையாக இருந்தது. பசித்தபோதும் அவ்வளவு காசு கொடுத்து சாப்பிட விரும்பவில்லை. சில நேரம் சாப்பாடு பிடிக்காவிட்டாது அநியாயம். என்பதால் வேண்டாம் எனக் கூறிவிட்டு சென்றோம். போகின்ற வழியில் ஒரு நுதன சாலை இருப்பதாக தொலைபேசியில் காட்டியது. அதை காட்டிய கட்டிடத்தை சுற்றி சுற்றி தேடியபோது எல்லாப் பக்கமும் மூடியிருந்தது. ஒரு வீட்டிலிருந்த ஆணிடம் கேட்டபோது அவர் வீட்டுக்கார பெண்ணை அழைத்தார். அவர் நல்ல ஆங்கிலம் கதைத்தார். இன்று அணைத்தும் மூடியுள்ளது. எல்லோரிடமும் கேட்காதீர்கள் ஏமாற்றுவார்கள் என்று எச்சரிக்கையும் செய்து அனுப்பினார். நேற்றிரவு சாப்பிட்ட கடையில் சென்று சாப்பிடுவோம் என்று வரைபடத்தின் உதவியுடன் மதீனாவினுடாக தயங்கி தயங்கி சென்று கண்டுபிடித்தோம். ஏனெனில் மதீனாவிற்கு உள்ளட்டால் வெளியே வருவது என்பது மிகப் பெரிய பிரச்சனை. இங்குதான் எங்கள் முதல் அனுபவம் ஆரம்பமாகியது.
வெய்யில் எரி்த்தபோதும் பார்ப்பதற்கு இரண்டு இடங்கள் இருக்கின்றது என அறிந்தோம். அந்த இடத்திற்கு சென்றால் அது நாம் நேற்று மாலை சென்ற இடம். காய்ந்து போயிருந்த இடம் ஒன்றை பார்ப்பதற்கு அழகான பூந்தோம் மற்றும் நீர்த் தாடகம் என்று எழுதியிருந்தார்கள். அந்த ஏமாற்றத்தினால் இனி ஒன்றையும் பார்ப்பதில்லை எனத் தீர்மானித்து பக்கத்திருந்த மரங்கள் இருந்த சரிவொன்றில் சென்று நிழலில் இளைப்பாறினோம். ஆண்கள் மட்டுமே மர நிழல்களில் நித்திரை கொண்டோ அல்லது சுற்றிவர இருந்து உரையாடிக் கொண்டோ இருந்தார்கள். சிறிது நேரத்தின் பின் என்ன செய்வது எனத் தெரியவில்லை. மொரக்கோவின் அனைத்து நகரங்களிலும் பழைய நகரம் மதீனாவாகும். இப்பொழுது புதிய நகரம் ஒன்றையும் அமைக்கின்றார்கள். அங்கு மோல் இருக்கின்றது. அங்கு செல்வோம் என முடிவெடுத்து வாடகை வாகன சாரதியுடன் விவாதித்து பணத்தை உறுதி செய்து கொண்டு சென்றோம். அது ஒரு மூன்று மாடிக் கட்டிடம். பல கடைகள் மூடியிருந்தன. சாப்பாட்டுக் கடைகள் மட்டும் திறந்திருந்தன. சீன ஜப்பானிய உணவகம் ஒன்றிருந்தது. அவர்களிடம் மரக்கறி சாப்பாடு இருக்கின்றதா எனக் கேட்டோம். இல்லை என்றார்கள். மரக்கறிகளையும் சோற்றையும் பிரட்டி பிரைட் ரைசாக தரமுடியுமா எனக் கேட்டோம். சரி என்றார்கள். மேலும் ஒரு விண்ணப்பம் செய்தோம். மரக்கறிகளை சின்னதாக வெட்டிப் போடுங்கள் என. அதற்கும் அவர்கள் உடன்பட்டு சிறிது நேரத்தில் செய்து தந்தார்கள். நல்லதொரு சாப்பாடு சாப்பிட்ட திருப்பதியில் பல தடவைகள் நன்றி கூறிவிட்டு பக்கத்திலிருந்து கடற்கரைக்கு நடந்து சென்றோம்.
இப்ொழுதுதான் கடற்கரை பாதைகளை செப்பனிட்டு புனரமைக்கின்றார்கள். இப்படியே நடந்து சென்று நேற்று மாலை சென்ற தொலைபேசிக் கடைக்குச் சென்றோம். அந்த இளைஞனிடம் இன்று காலை வாங்கிய சிம்காட் நல்லதா எனக் கேட்டோம். ஏனெனில் அது ஒழுங்காக வேலை செய்யவில்லை. அவர் நல்லது என்றார். அவரிடம் இன்னுமொரு பெயரில் ஒரு சிம் காட் இருந்தது. அதை வாங்கவா எனக் கேட்க வேண்டாம் நீங்கள் வாங்கியது நல்லது என நேர்மையாக சொன்னார். இப்படியும் மனிதர்கள் இருக்கின்றார்கள் என்பது மகிழ்ச்சியை தந்தது. நாம் எதற்கும் பயன்படட்டும் என மற்ற சிம் காட்டையும் வாங்கினோம். பின்புதான் கண்டுபிடித்தோம் நாம் வைத்திருந்த ஒரு தொலைபேசியில் ஏதோ ஒரு பிரச்சனையால் ஒழுங்கா வேலை செய்யவில்லை என. இன்னுமொரு தொலைபேசி இருந்தமை நமக்கு நன்மையளித்தது.
அடுத்த நாள் காலை சாப்பிட்டுவிட்டு வீதிக்கு வந்து பஸ் நிலையத்திற்கு கார் பிடித்து சென்றோம். இலங்கை இந்தியாவில் இருப்பதை போல பஸ் நிலையம். பயணிகளை கூவிக் கூவி அழைத்தார்கள். சீடிஎம் பஸ்சிற்கான கட்டணம் சதாரணமாக செல்லும் வாகனங்களுக்கான கட்டணங்களை விட ஒரு மடங்கு அதிகம். சொகுசு வாகனம். அதிவிரைவாகவும் செல்லக்கூடியது. ஆனால் நமது சுமைகளை பாதுகாப்பாக பஸ்சில் வைப்பதற்கும் 5 டினார்கள் பணம் எடுப்பார்கள். நமது பயணம் மலைப்பாதைகளினுடாக செவ்செவ்வோனை நோக்கி சென்றது.
50 வது நாள்: ஸ்டொக்லமிலிருந்து ஹெல்சிங் நகருக்கு… July 28, 2016
நாம் தங்கியிருந்த சுவீடன் கிராமத்திலிருந்து (skinnskatteberg) அங்கு சந்தித்த சுவீடன் நாட்டவருடன் அவரது காரில் ஸ்டொக்லம் (Stockholm) பயணமானோம். இவர் ஒரு பயணி. மாலை ஏறுபவர். நமக்கு கற்றுத்தந்த மொழியில் “பீத்தப்பறங்கி”. தான் ஸ்டொக்லோம் செல்வதாகவும் எம்மை ஏற்றிச்செல்வதாகவும் அவரே சொன்னார். இவர் சுவீடனில் பிறந்த போதும் அமெரிக்காவில் சில காலம் வாழ்ந்தவர். இந்தியாவிற்கு அடிக்கடி பயணம் செய்பவர். இலங்கைக்கும் இரண்டு தரம் பயணம் செய்துள்ளார். அவரை நான் சுவீடிஸ் இந்தியன் என்றே கூறுவேன். அவருடன் சுவீடனின் வாழ்க்கை மற்றும் அவரது சொந்த வாழ்க்கை தொடர்பாக உரையாடிக் கொண்டு வந்தோம். அவரது தொழில் மரவேலை. இப்பொழுது நம்மை இறக்கவிட்டு தமது சொந்தக்காரர் ஒருவருக்கு மரங்களைப் பயன்படுத்தி வீட்டின் பின் இளைப்பாற நிழல் கட்டிடம் ஒன்றைக் கட்டுவதற்காக செல்கின்றார்.
நாம் ஸ்டொக்லம் நகரின் மாநகர புகையிரதநிலையம் ஒன்றில் முழு நாள் கடவுச்சீட்டு ஒன்றை வாங்கிக் கொண்டு நகரின் மத்திக்கு சென்றோம். சிறந்த புகையிரத வலைப்பின்னலைக் கொண்ட நகரம். புகையிரத நிலையத்தில் வேலைசெய்வோர் நமது கேள்விகளுக்கு அலுப்புப்பாராமல் விளக்கமாக கூறி வழிகாட்டினார்கள். இந்த நாட்டில் அனைத்தும் நெருப்பு விலை. தங்குமிட விலையும் அவ்வாறே. வழமையாக இரண்டு பேர் ஒன்றாக ஹொஸ்டலில் தங்கும் செலவிற்கு ஒரு ஹொட்டலை பதிவு செய்யலாம். ஆனால் சுவிடனில் அவ்வாறும் செய்யமுடியவில்லை. ஆகவே ஒரு ஹொஸ்டலில் இரண்டு படுக்கைகளைப் பதிவு செய்தோம். வழமையைப் போல மதியம் 12 மணிக்குத்தான் வந்து சேர்ந்தோம்.
இணைய வசதி இல்லாததால் சாப்பாட்டுக் கடைகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆட்களிடம் கேட்டு சென்றும் கண்டுபிடிக்க முடியவில்லை. கடைசியாக ஒரு இடத்தில் இலவச இணையவசதி இருக்க அதனுடாக தேடிப்பார்த்தோம். பத்து நிமிட நடை தூரத்தில் மூன்று இந்தியன் கடைகள் இருந்தன. அங்கு சென்றால் இரண்டு கடைகள் மூடியிருந்தன. மூன்றாவது கடை திறந்திருந்த மகிழ்ச்சியில் உள்ளே சென்றால் சமைப்பவர் சென்றுவிட்டார் . மூன்று மணியாகிவிட்டது கடையை மூடுகின்றோம் என்றார்கள். வேறு வழியின்றி போகும் வழியில் தாய் உணவகம் ஒன்றில் முட்டை மரக்கறி சோற்றுப் பார்சல் ஒன்றை வாங்கினோம். மிகவும் கொஞ்ச சாப்பாடு. அரை வயிறு தான் நிறைந்தது. அதன் பிறகு ஸ்டக்லொம் மத்திய பஸ் நிலையத்தை நோக்கி நடந்தோம். வானம் இருட்டியது. மழை அடித்துப் பெய்தது. கடைகளுக்குள்ளாள் நடந்து தரிந்தோம்.
மழைவிட்டபின் ஸ்டக்லொமின் பழைய நகருக்கு பஸ் எடுத்தோம். அது ஒரு சிறிய தீவு. நடந்தும் செல்லலாம். ஆனால் நாம் களைத்துவிட்டபடியால் பஸ்சில் சென்றோம். பழைய நகரங்கள் எல்லாம் கல்லுப்பதித்த ஒடுங்கிய வீதிகளாகவே இருக்கின்றன. இதன் சின்ன மாறுதல்தான் மொரக்கோவின் மதினாக்கள். வீட்டுத் தயாரிப்பான ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிட்டோம். அதற்கான கோனை நமக்கு முன்னாலையே உருவாக்கினார்கள். இரண்டும் மிக சுவையாக இருந்தது. அழகான பேக்கரிகள் பல இருந்தன. ஆனால் சின்ன சின்ன பன்கள் கூட அதிகம் விலை. சுவையாக இருக்கலாம் ஆனால் அந்தளவு காசு கொடுத்து வாங்க மனமில்லை. ஆகவே மலிவான கடைகளில் அதே பன்னை வாங்கி சாப்பிட்டோம். நண்பர் யாழினி இங்கு கல்வி கற்றபோது எப்படி வாழ்ந்திருப்பார் என நினைத்துக் கொண்டோம்.
பின்லாந்து தீவுகளின் நாடு. ஸ்டொக்லொம் தீவுகளின் நகரம். இதன்பின் பஸ் எடுத்து பக்கத்தில் இருந்த இன்னுமொரு தீவுக்குச் சென்றோம். அதன் முடிவிடம் வரை சென்று அங்கிருந்து இன்னுமொரு பஸ்ஸை எடுத்து உட்கார்ந்தோம். ஒரு நாள் பஸ் பாஸ் (day pass) இருப்பதன் நன்மை இது. போகும் வழியில் இரண்டு இந்தியன் உணவகங்களைக் கண்டோம். இந்த பஸ் போகும் இடமெல்லாம் சென்று மீண்டும் இந்தியன் உணவகம் இருந்த இடத்திற்கு வந்தோம். ஒரு கடையில் அதிக விலையாக இருக்க மற்றக்கடையும் விலையாக இருக்கும் என நினைத்து தவிர்க்கப் பார்த்தோம். ஆனால் கொண்டு செல்வதற்கு (take out) மலிவாக போட்டிருந்தார்கள். 8 டொலருக்கு பன்னீர் புரியாணி ஒன்றை வாங்கி வீதியிலிருந்து சாப்பிட்டோம். அதன் பின் சிறிது தூரம் நடந்து விட்டு பஸ் எடுத்து மத்திய புகையிரத நிலையத்திற்கு வந்தோம். அதிகாலையில் விமான நிலையம் செல்ல இந்த ஒரு நாள் பயணச்சீட்டில் எந்தப் புகையிரதத்தை எங்கே இருந்து எடுக்க வேண்டும் என விசாரிக்க சென்றோம்.
நமக்கு பின்லாந்துக்கு செல்வதற்கான விமானம் காலை 7 மணிக்கு உள்ளது. ஆகவே விமான நிலையத்தில் ஆறு மணிக்கு முதல் நிற்க வேண்டும். இதற்கு மராஸ்ட (Marsta) புகையிரத நிலையத்திற்கு அதிகாலை 4.45ற்கு செல்கின்ற முதல் புகையிரதத்தில் ஏறவேண்டும். அந்த நேரத்திற்கு பஸ் இருக்காது. ஆகவே நடந்து தான் வரவேண்டும். இப்பொழுது நாம் தங்கும் இடத்திற்கு நடந்தே சென்று பார்த்தோம். பத்து நிமிடங்கள் தேவை. இப்பொழுது சுமையில்லாமல் நடப்பதால் விரைவாக வந்துவிட்டோம். சுமையுடன் சென்றால் இன்னும் கொஞ்ம் அதிக நேரம் தேவை என நினைத்தோம். அதிகாலையில் நேரத்ததுடன் எழும்புவதற்காக இப்பொழுது படுக்கச் சென்றோம்.
நாம் தங்குமிடம் ஒரு ஹொஸ்டல். நமது அறை எட்டுக் கட்டில்கள் உள்ள இடம். பெட்சீட்க்கும் 50 குரோணா (krona) மேலதிகமாக எடுத்தார்கள். அடுத்த நாள் விமானத்திற்கான இருக்கையை உறுதி செய்துவிட்டு நித்திரை கொண்டோம். இங்கு நித்திரை கொள்ள பல நிபந்தணைகள் உள்ளன. அதில் ஒன்று குறட்டை விடக்கூடாது என்பது. குறட்டை என்ன நாம் விரும்பி விடுகின்ற ஒன்றா? அது தானாக வருகின்றது. நம்முடன் சேர்த்து இரண்டு ஆண்களும் நான்கு பெண்களும் அந்த அறையில் நித்திரை கொண்டோம். ஆனால் அதிகாலை 3.45 எழும்பினோம். சத்தம் போடாமல் பின்லாந்திற்கான நமது பயணத்தை ஆரம்பித்தோம். வெளியே வந்தால் காலை ஆறு மணிபோல வெளிச்சம். புகையிரத நிலையத்திற்கு நடந்து சென்றபோது பஸ் ஒன்று வந்தது. அதில் ஏறினோம். அடுத்த தரிப்பில் இறங்க வேண்டுமாயினும் சுமையுடன் செல்லும் பொழுது இது வசதி. பஸ்ஸிலிருந்து இறங்கி புகையிரத நிலையத்தை நோக்கி சென்றபோது விமானத்தில் பணி செய்யும் பெண் ஒருவர் விரைவாக நடந்து சென்றார். அவரிடம் விமான நிலையத்திற்கான புகையிரதத்தைப் பிடிக்க எப்படி செல்ல வேண்டும் எனக் கேட்டோம். அவர் தன்னைப் பின்தொடரச் சொன்னார். அவர் ஏறிய புகையிரதததில் நாமும் ஏறினோம். அது உப்சலா (Uppsala) செல்கின்றது. விமானநிலையத்திற்கும் செல்லும் ஆனால் நாம் ஆளுக்கு 100 குரோணர் பணம் மேலதிகமாக கட்டவேண்டும். நமக்கான பயணச் சீட்டில் விமான நிலையத்திற்குப் பயணம் செய்ய அடுத்த புகையிரதத்தையே எடுத்திருக்க வேண்டும். ஆகவே அடுத்த புகையிரத நிலையத்தில் இறங்கி காத்திருந்து ஐந்து நிமிடங்களின் பின்பு அந்தப் புகையிரதத்தை எடுத்தோம். இதில் சென்றால் இடையில் ஒரு புகையிரதநிலையத்தில் இறங்கி மீண்டும் ஒரு பஸ் எடுக்க வேண்டும். அந்த பஸ் நிலையம் வயல்கள் அதைச் சுற்றிவர காடுகளும் நிறைந்த ஒரு வெளியில் இருந்தது. IMG_5446அதை நோக்கி நடந்தோம். அப்பொழுது காலை ஐந்தரை மணியாக இருந்தபோதும் ஏழு மணிபோல வெய்யில் எரித்தது. அந்த வெட்ட வெளியில் வயல்களின் மேல் பனி படர்ந்திருந்தது. உடனடியாக சேரனின், “பண்ணை வெளிகளில் பனி படர்ந்த காலை வேiளையில்” என்ற கவிதை பாடல் நினைவுக்கு வந்தது. அப் பாடலை நினைவுபடுத்திய காட்சியை கமராவுக்குள் சிறைபிடித்தேன். எந்தளவிற்கு ஒரு பாடல் ஒரு காட்சியுடன் நம் ஆழ்மனதிற்குள் பதிந்து இருக்கின்றது…..ம்….. என்ற எண்ணங்கள் மனதில் ஓட நாம் பஸ்சில் விமான நிலையம் நோக்கிப் பயணமானோம்.
பின்லாந்து – இரசியாவின் வாசல் July 31, 2016
பின்லாந்திற்கு (finland) காலை எட்டு மணிக்கு விமானத்தில் வந்து சேர்ந்தோம். நோர்வேஜியன் விமானம் மிகவும் மலிவாக பயணச் சீட்டு கிடைத்தது. குறைந்தது ஒரு மாதத்திற்கு முன்கூட்டியே பயணத்தை திட்டமிட்டிருப்பின் பயணச் சீட்டை மிக மலிவாக வாங்கலாம். ஐரோப்பாவிற்குள் நோர்வேஜியன், ரையன் ஏயார் போன்ற சில விமானங்கள் முன்கூட்டி பதிவு செய்தால் மிக மலிவாக பயணச் சீட்டுகளை தருகின்றார்கள். இல்லாவிடினும் மற்ற விமானங்களுக்கான விலைகளுடன் ஒப்பிடும் பொழுது மலிவானது. விமான நிலையத்திலிருந்து புகையிரதமும் பஸ்சும் உள்ளது. நாம் புகையிரதத்தை எடுத்தோம். புகையிரத நிலையத்தில் நமது சுமைகளை 4 ஈரோக்கள் கட்டி பாதுகாப்பாக ஒரு பெட்டியில் வைத்துவிட்டு வெளியே வந்தோம். நமது முதல் வேலை இரசிய தூதுவர் ஆலையத்திற்கு செல்வது. ஆனால் எப்படிச் செல்வது எனத் தெரியவில்லை. உல்லாசப் பயணிகளுக்கு தகவல்கள் கூறுவோர் வாசலில் நின்றனர். அவர்களிடம் கேட்டபோது வரைபடத்தையும் தந்து எங்கே உள்ளது எப்படி போக வேண்டும் என்பதையும் காண்பித்தார்கள்.
கையில் வரைபடம் இருந்ததால் குறுக்கு வழிகளைக் கண்டுபிடித்துச் சென்றோம். அங்கு சென்றபோது அவர்கள் நம்மை உள்ளே விடமால் முடிய வாசலின் சுவரிலிருந்த தொலைத் தொடர்பினுடாக உரையாடினார்கள். முன்கூட்டிய அனுமதியில்லாமல் சந்திக்க முடியாது என்றார்கள். நமது நல்ல காலம் ஆங்கிலம் தெரிந்த இரசியர்கள் உள்ளேயிருந்து வந்தார்கள். அவர்களிடம் எங்களை இரசிய விசா நிலையத்திற்கு (visa center) செல்லச் சொல்லி தொலைத் தொடர்பிலிருந்தவர் கூறினார். இரஸ்ய விசா எடுக்கும் நிலையம் காம்பி (Kamppi) என்ற இடத்தில் இருக்கின்றது. வரைபடத்தின் உதவியுடன் காம்பிக்கு நடந்து சென்றோம். அது ஒரு மோல் (Mall). நேற்றிரவு வாங்கிய மூன்று பன்களை அதிகாலையிலையே சாப்பிட்டுவிட்டோம். இப்பொழுது பசித்தது. ஒரு கடையில் மரக்கறி சன்விச் ஒன்றை ஐந்து ஈரோக்களுக்கு வாங்கிச் சாப்பிட்டோம். அதன்பின் இரசிய விசா நிலையத்திற்கு சென்று விசாவுக்குரிய விபரங்களை கேட்டோம். அவர்கள் விளக்கமாக பல விடயங்களைக் கூறினார்கள்.
நாம் சகல ஆவணங்களையும் கொடுத்தால் 7 வேலை நாட்களில் விசாவைப் பெறலாம் என்றார்கள். ஒரு ஆளுக்கு 81 ஈரோக்கள். இதில் 21 ஈரோக்கள் இவர்களது சேவைக்கானது. பாஸ்போட் மற்றும் விண்ணப்பத்தை தவிர நாம் தங்குகின்ற ஹோட்டலிலிரு்ந்து ஒரு உறுதிப் பத்திரமும் வழங்க வேண்டும். ஆனால் நாம் விசாவைப் பெறாமல் எந்த ஒரு ஹோட்டலையும் இன்னும் பதிவு செய்யவில்லை. மேலும் நாம் அங்கு வேலை செய்வதற்காக ஒரு இடத்தில் தங்கப் போகின்றோம். அவர்கள் தர மாட்டார்கள். ஏனெனில் தனிநபர்களிடம் இவ்வாறன உறுதிப் பத்திரத்தை வாங்கினால் குறிப்பிட்ட தனிநபர்களுக்கு அரசாங்கத்தால் பிரச்சனைகளை உருவாகலாம். இப் பிரச்சனைகளைத் தவிர்ப்பதற்காக இணையத்தில் பல சேவைகள் இருக்கின்றன. அதில் நமது விபரங்களை கொடுத்தால் நாம் ஏதோ ஒரு ஹோட்டலில் தங்குவதாகவும் கூறி அதற்கான உறுதிப் பத்திரத்தை ஒரு இலக்கத்துடன் தருவார்கள். இதற்காக அவர்கள் ஒருவருக்கு 30 ஈரோக்கள் பெறுகின்றார்கள். இது ஒரு வகையான சுத்துமாத்துதான். இதை இரசிய அரசாங்கமும் அறியும் என்றே நம்புகின்றேன். ஆனால் நமது சந்தேக மனதுக்கு இதில் அவ்வளவு நம்பிக்கை இல்லை. பணத்தைக் கட்டியபின் ஏமாத்தி விட்டால் என்ன செய்வது?
நாம் இரசிய விசா நிலையத்தில் மேற்குறிப்பிட்ட தகவல்களைப் பெற்றுக் கொண்டு வெளியே வந்தபோது இரண்டரை மணி. இந்தியன் உணவகம் ஒன்றைத் தேடிக் கண்டுபிடித்து சாப்பிட்டோம். நாம் விரும்பிய கறிகள் இல்லாவிட்டாலும் ஒன்பது ஈரோக்களுக்கு புவே (Buffet) இருந்தது. வயிறு நிறைய நன்றாக சாப்பிட்டோம். இன்று இரவு நாம் தங்கும் இடத்திற்கு செல்ல முடியுமா எனத் தெரியவில்லை. ஆகவே அவர்களுக்கு இன்று மாலை நாம் வரலாம் வந்து ஏற்ற முடியுமா என தகவல் அனுப்பினோம். அதேநேரம் அவர்களிடத்திற்கு போவத்திற்கு இருவருக்கும் சேர்த்து 50 ஈரோக்கள் செலவாகும். மீண்டும் விசா எடுக்க வருவதானால் மேலும் போய் வர என 100 ஈரோக்களை செலவு செய்ய வேண்டும். ஆகவே இன்று இங்கு தங்கி நாளை விசாவிற்கு விண்ணப்பித்து விட்டு செல்வோம் என முடிவு செய்தோம். நாம் செல்லவிருக்கின்ற இடத்திற்கும் தகவல் அனுப்பினோம் நாளை மாலை வரலாம் என தகவலை அனுப்பிவிட்டு உல்லாசப் பயணிகள் தகவல் (Tourist information center) நிலையத்திற்கு சென்றோம். இவர்கள் சிறப்பான பங்களிப்பை செய்தார்கள்.
நாம் தங்கும் இடத்தில் உள்ளவர்களுடன் நேரடியாக உரையாடினால் நல்லது என்பதால் தொலைபேசியைப் பயன்படுத்தலாமா எனக் கேட்டோம். அதற்கு 3 ஈரோக்கள் என்றார்கள். அதேநேரம் 7 ஈரோக்களுக்கு சிம் காட் ஒன்று உள்ளது. அதைப் பயன்படுத்தியும் கதைக்கலாம் என்றார்கள். நாம் சிம் காட் வாங்குவதே நல்லது என நினைத்து அதை வாங்கினோம். இப்பொழுது எங்களுக்கு இன்னுமொரு மூளை கிடைத்த மாதிரி. நாம் தங்கப் போகின்ற இடத்திற்கு நமது புதிய தொலைபேசி இலக்கத்தை அறிவித்து விட்டு இங்கு தங்குவதற்கான ஒரு ஹோஸ்டலைத் தேடினோம். இதுவே கொஞ்சம் விலை கூடத்தான் ஆனால் வேறு வழியில்லை. அதைப் பதிவு செய்து விட்டு கடற்கரை ஓரமாக நடந்தோம். சின்ன சின்ன கடைகள் திறந்து காலையிலிருந்து விற்பனை செய்து கொண்டிருந்தவர்கள் இப்பொழு மூட ஆரம்பித்தார்கள். நாம் அதைப் பார்த்துக் கொண்டு பெரிய தேவாலையம் ஒன்றைப் பார்க்கச் சென்றோம். அப்படியே நடந்து புகையிரநிலையத்தில் நமது பொதிகளையும் எடுத்துக் கொண்டு தங்குமிடத்திற்கு சென்றோம். தங்குமிடம் மாணவர் ஹோஸ்டல். இப்பொழுது விடுமுறைக்காலமாததால் உல்லாசப் பயணிகள் தங்குவதற்குப் பயன்படுத்துகின்றார்கள்.
சுமைகளை அறையில் வைத்துவிட்டு மீண்டும் நகரத்தைச் சுற்றிப் பார்க்கப் போனோம். இப்பொழுது நகரம் கொஞ்சம் கொஞ்சமாக அமைதியாகிக் கொண்டிருக்கின்றது. ஏழு மணியான போதும் வெளிச்சம் இருந்தபோதும் மனிதர்கள் குறைவாகவே இரு்ந்தார்கள். சில இடங்களில் மட்டும் இசைஞர்கள் இசைத்து நகரத்தையும் மாலைப் பொழுதையும் அழகாக்கிக் கொண்டிருந்தார்கள். நாம் ஒரு பீசா மற்றும் பலாவல் கடையைக் கண்டுபிடித்தோம். இன்று மாலை அனைத்தும் 5 ஈரோக்கள் என்றார்கள். ஒரு பீசாவையும் மூன்று ஈரோக்களுக்கு உருளைக்கிழங்குப் பொரியலையும் வாங்கினோம். நல்ல சாப்பாடு. சாப்பிட்டு விட்டு மெல்ல மெல்ல நடந்து இரவு தங்குமிடத்திற்கு சென்றோம். அறையில் வந்து இரசியாவில் தங்குவதற்கான உறுதிப் பத்திரத்திற்கு (visahouse) இணையத்தினுடாக விண்ணப்பித்தோம். பணத்தைக் கட்டிய இரண்டு நிமிடங்களில் நாம் தங்கும் ஹொட்டலின் பெயர், விலாசம். நம்மை அழைப்பவர்கள், மற்றும் அதற்கான உறுதி எண் என்பவற்றை அனுப்பி இருந்தார்கள். (உண்மையில் இந்த ஹொட்டலில் நாம் தங்கப் போவதில்லை. வெறுமனே விசாவிற்கான பொய்யான தகவல்கள்). இது எந்தளவு நம்பகத்தன்மை என்பது தெரியாததால் ஒருவரின் பெயரில் மட்டுமே பதிவு செய்தோம். மற்றவரின் பெயரை சேர்த்தபோது அது இன்னுமோரு விண்ணப் படிவத்தை நிரப்பும்படி கூறியது. அதற்கு மேலும் பணம் கட்ட வேண்டும் என்பதால் நாளை விசா நிலையத்தில் கதைத்துவிட்டு வி்ண்ணப்பிக்கலாம் என முடிவு செய்தோம்.
இரவு தாமதாக படுத்ததாலும் நேற்று அதிகாலையிலையே எழும்பியதாலும் நல்ல நித்திரை கொண்டு காலை ஒன்பது மணிக்குத் தான் எழும்பினோம். எழுப்பி குளித்து விட்டு சுப்பர் மார்க்கட்டில் பனிசையும் தேநீரையும் வாங்கி சாப்பிட்டுக் குடித்துவிட்டு விசா நிலையத்திற்கு சென்றோம். விசா நிலையத்தில் விசாரி்த்தபோது ஒவ்வொருவரும் தனித்தனியாக உறுதிப்பத்திரம் வழங்க வேண்டும் என்றார்கள். ஆகவே மீண்டும் இணையத்தினுடாக விண்ணப்பிக்க ஐந்து நிமிடங்களில் உறுதிப் பத்திரம் மின்னஞ்சலுக்கு வந்தது. இரசியாவில் இரண்டு நகரங்களுக்குப் போகின்றோம். ஆகவே இரண்டு நகரங்களிலும் தங்குமிடம் தொடர்பான தகவல்களை விசா விண்ணப்பத்தில் கேட்டிருந்தார்கள். நேற்றிரவு விண்ணப்பித்தபோது ஒரு இடத்தை மட்டுமே குறிப்பிட்டிருந்தோம். ஆகவே அவர்களுக்கு மின்னஞ்சல் எழுதி மற்ற இடத்தையும் சேர்த்து அனுப்ப முடியுமா எனக் கேட்க சில நிமிடங்களில் புதிய உறுதிப் பத்திரம் மின்னஞ்சலுக்கு வந்தது. இது நிம்மதி அளித்தபோதும் விசா வி்ண்ணப்பத்தை நிரப்புவது எரிச்சலைத் தந்து.
நாட்டின் அதிபர் முன்னால் (கேஜிபி) உளவுத்துறைத் தலைவராக இருந்தார் என்பதற்காக அந்த நாட்டிற்கு விருந்தாளிகளாக உல்லாசப் பயணம் வருபவர்களை இப்படி கேள்வி கேட்டு துன்புறுத்த வேண்டுமா? நாம் ஏற்கனவே செய்த இரண்டு வேலை இடங்களின் சகல விபரங்களையும் கேட்டிருந்தார்கள். பல்கலைக்கழக படிப்பும் படித்த இடங்களின் விலாசமும். மற்றும் கடந்த பத்து வருடங்களில் நாம் சென்ற நாடுகளின் விபரங்களையும் கேட்டிருந்தார்கள். இதைவிட வன்முறையில் ஈடுபட்ட சம்பவங்கள், சிறைச் சாலை சென்ற விபரங்கள், குற்றம் புரிந்த விபரங்கள், அம்மா அப்பாவின் விபரங்கள். இதை எல்லாம் எழுதி முடித்து அவர்களிடம் சமர்பித்து உறுதி செய்ய இரண்டறை மணியாகிவிட்டது. ஒருவகையான மன அழுத்தத்தை உருவாக்கியது. இப்பொழுது, “அப்பாடா” பெரிய மூச்சொன்றை விட்டுக்கொண்டு வெளியே வந்து கட்டிடத்தின் முன்னால் இருந்த சீன உணவகத்தில் மரக்கறி முட்டை கலந்து செய்த சோற்றுப் பார்சல் ஒன்றை வாங்கிக் கொண்டுவந்து வெளியே இருந்து சாப்பிட்டோம்.
காம்பியின் கீழ் தளத்திலுள்ள பஸ் நிலையத்திற்கு சென்று நாம் செல்ல வேண்டிய இடத்திற்கான பஸ்சிற்குப் பதிவு செய்தோம். நாம் செல்ல வேண்டிய இடத்திற்கான பஸ் மாலை 4.30ற்கு இரு்ந்தது. அதற்குள் நாமிருந்த ஹொஸ்டலுக்குச் சென்று நமது சுமைகளைத் தூக்கி கொண்டு வரவேண்டும். இதை எல்லாம் செய்து விட்டு நிம்மதியாக பஸ் நிலையத்திற்கு 4 மணிக்கு வந்தோம். இதற்கிடையில் கடையில் எதாவது சாப்பிட வாங்கி வர Shirley சென்றார். பஸ் 4.25 வந்து அனைவரும் ஏறிவிட்டனர். Shirleyயைக் காணவில்லை. எனக்குப் பதட்டமாகிவிட்டது. ஏற்கனவே சுமைகளை பஸ்சிற்குள் வைத்துவிட்டேன். ஆனால் பற்றுச்சீட்டுகள் shirleyயிடம். அவர் மெதுவாக நடந்து வந்தார். ஏன் தாமதம் என்று கேட்டதற்கு தான் இன்னும் நேரமிருப்பதாக நினைத்ததாக கூறினார். ஒருவாறு நிம்மதியாக பஸ்சில் ஏறி உட்கார்ந்து நமது அடுத்த புதிய அனுபவத்தைப் பெறுவதற்காக கிராமத்தை நோக்கிப் பயணித்தோம். அவர்களும் இன்று வரும்படியும் தாம் சந்தியில் வந்து ஏற்றுவதாகவும் நேற்று உறுதி செய்தார்கள்.
சரியாக ஒர வாரத்தின் பின்பு நமக்கு விசா கிடைத்ததாக உறுதி செய்தார்கள். ஒரு காலத்தில் கனவு கண்ட ஒரு நாட்டிற்கு செல்வது உறுதியாகியது.
அடுத்த பதிவில் பின்லாந்தில் நமது வாழ்க்கை அனுபவங்களை பதிவு செய்வோம்.
60ம் நாள்: பின்லாந்து: ரஸ்பெரியும் புளுபெரியும் August 1, 2016
ஹெல்சிங்கி பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்ட பஸ் ஒரு மணித்தியாலத்தின் பின்பு யாருமேயற்ற விரைவான வீதி ஓரத்திலிருந்த பஸ் நிலையத்தில் நின்றது. நாம் இறங்கி சுற்றும் முற்றும் பார்த்த பொழுது விரைவான வீதியை குறுக்காக மேலாக வெட்டிச் செல்லும் வீதியில் ஒரு கார் நின்றது. இதுதான் நம்மை ஏற்ற வந்தவரின் காராக இருக்கும் என நினைத்துக் கொண்டு சென்ற பொழுது அவரும் காரை விட்டு இறங்கி நமக்கு கை அசைத்தார். மனம் அமைதியடைந்தது. கார் அரை மணித்தியாலங்களுக்கு மேலாக தார் போட்ட காட்டுப் பாதைகளினுடாக போய் மண் பாதை ஒன்றுக்குள் திரும்பியது. அந்த சந்தியில் வாகனத்தை நிற்பாட்டி தமக்கான கடிதங்களை தபால் பெட்டியிலிருந்து எடுத்துக் கொண்டார். மேலும் கிட்டத்தட்ட பத்து தாபால் பெட்டிகள் இருந்தன.. வாகனம் தொடர்ந்தும் மண் பாதையில் ஐந்து நிமிடங்களுக்கு மேலாக பயணித்தது. பதை முழுவதும் காடுகளும் வயல்களும் நீர் ஏரிகளும் இருந்தன.
நாம் கரலோஜா (Karjalohja ) என்ற இடத்திலுள்ள இளந்துலி (http://elontuli.fi/en/) என்ற தங்குமிடத்திற்கு வந்தபோது ஒரு குழு தனது பயிற்சி ஒன்றை முடித்து வெளியேறிக் கொண்டிருந்தார்கள். நாம் அனைவரும் போகும் வரை காத்திருந்தோம். சிலர் நம்முடனும் வந்து விசாரித்த பின் வாழ்த்திவிட்டுச் சென்றனர். இரவு குழுவை வழிநாடாத்தியவர்களுக்கு இருந்த சாப்பாடுகளை மீளுருவாக்கம் செய்து வழங்கி எனது வேலையை ஆரம்பித்தேன். நாமும் இருந்ததை சாப்பிட்டு விட்டு நித்திரை கொண்டோம். குழுவை வழி நடாத்தியவர்களுக்கு காலை சாப்பாடும் செய்து கொடுக்கலாமா எனக் கேட்டார்கள். நான் காலையில் எழும்புகின்றவன் என்பதால் நான் அதை ஏற்றுக் கொண்டேன்.
காலை எழும்பி பழங்களைத் துண்டு துண்டாக வெட்டிவிட்டு ஓட்மில்லை அவித்தும் வைத்தேன். நாம் பானும் வாழைப்பழமும் சாப்பிட்டோம். குழு நடத்தியவர்கள் சாப்பிட்டுவிட்டு வெளிக்கிட்டனர். இனி இரண்டு கிழமைகளுக்கு எந்த குழுச் செயற்பாடும் இல்லாததால் மலசல கூடங்கள் அனைத்தையும் பயன்படுத்த தேவையில்லை. ஆகவே மேல் தளத்திலிருந்த மூன்று மலசலக் கூடங்களையும் சுத்தம் செய்து அதற்குப் பயன்படுத்த வேண்டாம் என்ற அறிவித்தலையும் தொங்விட்டோம். இதைச் செய்து முடிக்க 11.30 மணியாகிவிட்டது. நன்றாக களைத்துவிட்டோம். குளித்துவிட்டு ஏற்கனவே சமைத்து செய்து குளிருட்டிக்குள் வைத்திருந்த பழம் சூப்பையும் சோற்றையும் ஒன்றாக போட்டு சூடாக்கி சாப்பிட்டோம்.
மதியமளவில் பக்கத்திருந்த சலோ கிராமத்திற்கு நம்முடன் வேலை செய்கின்ற பின்லாந்து பெண் சென்றதால் நம்மையும் அழைத்துச் சென்றார்கள். ஒரு மணித்தியால பயணத்தின் பின் அந்த சிறிய கிராமத்திற்கு சென்றடைந்தோம். இந்தக் கிராமத்தில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் சந்தை கூடுவார்கள். நாம் போனவுடன் ஒரு பன்னும் தேநீரும் குடித்தோம். பின் அந்த இடங்களை சுற்றிப் பார்த்தோம். ஒரிடத்தில் நீண்ட வரிசையில் மனிதர்கள் தமது குழந்தைகளுடன் பெரிய பைகள் நிறைய சமான்களுடன் நின்று கொண்டிருந்தார்கள். சிறிது நேரத்தில் வாகனங்கள் தரிக்கும் இடத்தை நோக்கி வரிசை குழையாமல் ஓடி இடம் பிடித்தார்கள். தமது பைகளிலிருந்த சமான்களைப் பறப்பி குழந்தைகள் அதன் முன் உட்காந்திருந்தார்கள். சில சிறுவர்கள் தமது பெற்றோருடன் வந்து விற்கப்போட்டிருந்த சாமான்களைப் பார்த்து தமக்குப் பிடித்தமானதை வாங்கினார்கள். பெரியவர்களும் இச் சிறுவர் சந்தையில் சமான்களை வாங்கினார்கள். இதுவே இந்தச் சந்தையில் விசேசமான நிகழ்வு. இதைவிட மீன் பொறியலும் மாவில் சுட்ட தோசையில் ஜாமும் கலந்து விற்றார்கள். வித விதமான பாண் வகைகள் விற்பனைக்கு இருந்தன. மாலை வீட்டுக்கு வந்து மீண்டும் மதியம் சாப்பிட்ட சாப்பாட்டை சூடாக்கி சாப்பிட்டோம்.
இரண்டாம் நாள் காலை எழுந்து சாப்பிட்டுவிட்டு கீழ் தளத்திலுள்ள இரண்டு மலசலக்கூடங்களையும் மேலே நாம் பயன்படுத்துகின்ற இரண்டு மலசல கூடங்களையும் கழுவி சுத்தம் செய்தோம். கீழ் தளத்திலுள்ள ஒன்றுக்கு பயன்படுத்த வேண்டாம் என்ற அறிவித்தலை தொங்கவிட்டோம். இதன் பின் குளித்துவிட்டு சோறும் சம்பாறும் செய்தோம். அனைவரும் ஒன்றாக இருந்து சாப்பிட்டோம். மகிழ்ச்சியாக இருந்தது. மற்றவர்கள் சாப்பிட்ட களையில் நித்திரை கொள்ள செல்ல நான் எழுத ஆரம்பித்தேன். மாலையில் பக்கத்திலிருந்த நீர் ஏரிவரை நடந்து சென்றோம். மதியம் சமைத்த சோற்றையும் சம்பாரையும் ஒன்றாக குழைத்து சூடாக்கி உருளைக்கிழங்கு பொறியலுடன் இரவு சாப்பிட்டோம்.
மூன்றாம் நாள் கீழ் தளத்திலுள்ள அறைகளை சுத்தம் செய்தோம். பின் குளித்துவிட்டு நேற்று சமைத்த சோற்றை மரக்கறிகளை போட்டு பிரட்டி சலாட்டும் செய்து சாப்பிட்டோம். மாலை பக்கத்திலிருந்த காட்டிற்குள் புளுபெரி புடுங்குவதற்கு சென்றோம். இது ஒரு முதல் அனுபவம். வழமையாக பாதைகள் இருக்கின்ற காடுகளுக்குள் நடந்துதான் பழக்கம். இது பாதையில்லாத பாதைகளை உருவாக்கி சென்றோம். புளுபெரி புடுங்குவதற்கு வித்தியாசமான உபகரணம் உள்ளது. கன்றுகளை மென்மையாகப் பிடித்து உபகரணத்தை பழங்களின் கீழாக கன்றுகளினூடு செலுத்தி ஒரு குலுக்கு குலுக்க பழுத்த பழங்கள் கொட்டும். அல்லது அப்படியே மெல்ல இழுத்து எடுத்தால் பழங்கள் வரும். கிட்டத்தட்ட அம்மாக்கள் குழந்தைகளின் கண்ணங்களைப் பிடித்துக் கொண்டு தலையை வாறுவதைப் போல செய்ய வேண்டும். அப்படியே தொடர்ந்து செய்து உபகரணம் நிறைந்தவுடன் பெரிய வாளில் கொட்டுவோம். இப்படி இரண்டு இடங்களைத் தேடிக் கண்டுபிடித்து செய்தோம். ஒரு மணித்தியால வேலையில் நமது உபகரணம் பாதியளவே நிறைந்தது. மழை தூர ஆரம்பித்தபோதும் சிறிது நேரம் செய்துவிட்டு இருப்பிடம் வந்து சேர்ந்தோம். இரவு நாங்கள் இருவர் மட்டுமே. பின்லாந்துப் பெண் தனது அறையில் ஒதுங்கிக் கொண்டார். நாம் பழைய குக்குஸ் போன்ற ஒரு தானியத்திற்கு வெங்காயமும் தங்காளியும் கலந்து தூள்களையும் போட்டு பிரட்டி எடுத்தோம். அந்த அவித்த தானியத்தில் இன்னும் கொஞ்சத்தை எடுத்து கடலைகள் சிலவற்றுடன் சேர்த்து நெய்யும் ஊற்றி சிறிது வருத்தெடுத்தோம். ஷேளி உருளைக் கிழங்குகளைப் பொரித்தார். நேற்று சமைத்த சம்பாரையும் சோற்றையும் கலந்து சாப்பிட்டோம்.
நான்காம் நாள் காலை எழும்பி குளித்து சாப்பிட்டு விட்டு இன்னுமோரு காட்டுப் பிரதேசத்திற்கு சென்றோம். இங்கு நம் இருவருடன் மேலும் நான்கு பேர்கள் சேர்ந்து ரஸ்பேரி புடுங்கினோம். இதை நின்று கொண்டு புடுங்கலாம். ஆனால் பற்றைகளை விலத்தி விலத்தி செல்ல வேண்டும். மேலும் உண்ணி போன்ற ஒருவகை உயிரினம் நமது உடலில் ஒட்டி இரத்தத்தை ஊறிஞ்சும் என்றும் தொடர்ந்து ஊறிஞ்சினால் நமக்கு அன்டிபயட்டிக் அடிக்க வேண்டி வரலாம் என்றார்கள். நம்மிடம் இவ்வாறு வருத்தங்கள் வந்தால் நம்மைப் பாதுகாப்பதற்கு பயணக் காப்புறுதியும் இல்லை. இந்த உண்ணி நமக்கு பயத்தை உருவாக்கியதால் நாம் விரைவில் களைத்துவிட்டோம். இருந்தாலும் ஒரளவு புடுங்கினோம். மதியமளவில் எனக்குப் பசிக்கின்றது என்று கூற புடுங்கிற வேலையை விட்டுவிட்டு வந்தோம். மற்றவர்களுக்கும் நான் அவ்வாறு கூறியது மகிழ்ச்சியைத் தந்திருக்க வே்ண்டும்.
வரும் வழியில் ஒரு கடையில் பனிஸ் வாங்கி உடனையே கொஞ்சம் சாப்பிட்டு பசியாறினேன்.. தங்குமிடத்திற்கு வந்தபின் நாம் இருவரும் சேர்ந்து கரட் மற்றும் பச்சைக் கறிமிளகாய் சேர்த்து தங்காளிச் சாறுடன் பாஸ்தா செய்தோம். அதிசயமாக சுவையாக இருந்தது நமக்கே ஆச்சரியமாக இருந்தது. சாப்பிட்டு முடிய 2.30 மணியாகிவிட்டது. ஏனோ உடல் களைப்பாக இருக்க அறைக்குச் சென்றோம். பகலில் நான் நித்திரை கொள்வதில்லை. ஆனாலும் என்னை மீறி நித்திரை வர கொண்டேன். அரை மணித்தியாலங்கள் நல்ல நித்திரை. எழும்பியபின் சிறு வேலைகளை செய்து கொடுத்துவிட்டு நடக்க சென்றோம். வயல்களும் வயல்களின் முடிவில் காடுகளும் உள்ள இடம். வயல்கள் பச்சையாகவும் மஞ்சளாகவும் பரந்து கிடந்தன. வெட்டியவற்றை வெள்ளை பிளாஸ்சிட் போன்ற ஒன்றால் சுற்றி அழகாக அடுக்கியிருந்தார்கள். நடை பாதைகளில் இருந்த ரஸ்பெரிகளை ஷேளி புடுங்கினார். வழமையாக கண பணம் கொடுத்து வாங்கும் இந்தப் பழங்களை அவரே புடுங்கி சாப்பிடுவது அவருக்கு ஆனந்தமாக இருந்தது. ஆனால் தங்குமிடத்திற்கு சென்று கழுவித்தான் சாப்பிடுவார். மதியம் செய்த பாஸ்தாவை இரவுக்குச் சாப்பிட்டோம். 9 மணியளவில் புளுபெரி புடுங்கப்போன இருவர் திரும்பி வந்தனர். அவர்கள் கொண்டு வந்த புளுபெரியை ஒரு மணித்தியாலாமாக துப்புரவு செய்துவிட்டு இஞ்சித் தேநீருடன் அறைக்குச் சென்றோம்.12 மணிவரை எழுதிவிட்டு நித்திரைக்கும் போனேன்.
ஐந்தாம் நாள் காலையில் எழும்பி நீண்ட நாட்களுக்குப் பின் நான்கு பேருடன் சக்கரா மூச்சுத் தியானம் செய்தோம். இது பல காரணங்களுக்கான நான் விரும்புகின்ற தியானம். ஒவ்வொரு தியான முறைகள் தொடர்பாகவும் அதன் செயற்பாடு பயன் மற்றும் எனது அனுபவங்கள் தொடர்பாக எழுத வேண்டும் என நீண்ட நாட்களால் கனவு காண்பதுண்டு. பயணத்தை முடித்த பின் எழுத வேண்டும். நாம் தியானப் பயிற்சி செய்த அறையை சுத்தம் செய்துவிட்டு புளுபெரி புடுங்குவதற்குப் போனோம். இவ்வாறு ஒவ்வொறு நாளும் இந்தப் பழங்களைப் புடுங்குவதற்கு காரணம் அடுத்த கோடைக் காலம்வரை சேமித்து வைப்பதற்காகும். இதைக் கொண்டு பல குளிர்பானங்களையும் உணவு வகைகளையும் இவர்கள் சமைப்பார்கள். வீட்டுக்கு வந்தபோது இரண்டு மணியாகியிருந்தது. நல்ல பசி. குனிந்து குனிந்து புடுங்குவதால் இடுப்பு நோவும் ஏற்பட்டது. நேற்று செய்த பாஸ்தாவை சூடாக்கி சாப்பிட்டோம். நன்றாக இருந்தது. பின் ஏரியில் மூவரும் நிர்வாணமாக குளித்தோம். நிர்வாணமாக வானத்திற்கு கீழே சூரிய ஒளிக் கதிர்கள் நம்மைச் சூடாக்க தென்றல் மெல்லத் தடவிச் செல்ல ஏரி நம்மைத் தாளாட்ட குளிப்பது எவ்வளவு சுந்திரமானது. ம்…!
குளித்துவிட்டு வீட்டுக்கு வந்து மிச்சமிருந்த பாஸ்தாவை நான் சாப்பிட்டேன். Shirley சாலாட் செய்து சாப்பிட்டார். நாம் புளுபெரியை துப்பரவாக்கி அடைத்து வைக்க பின்லாந்து பெண் புளுபெரியில் பை செய்து நேற்று ஊறவைத்த பயறையும் அரிசையும் சேர்த்து அவித்து கிச்சடி செய்தார். இவர் இரண்டு முறை ஆறு மாதங்களாக தனது முன்னால் காதலனுடன் இந்தியாவில் மோட்டார் பைக்கிள் பயணம் செய்தவர். இந்த அனுபவத்தினுடாக இந்திய உணவு வகைகளை சமைக்க கற்றுக்கொண்டார். நான் சாப்பிட்டுவிட்டு எழுத ஆரம்பித்தேன். இரவு கிச்சடியை சூடாக்கி சாப்பிட்டோம். சுவையாகவே இல்லை. இன்று இரவு நாம் மூவரும் மட்டுமே. இந்த நிறுவனத்தை நடத்துபவர்கள் ஒரு குழு நிகழ்வுகளும் இல்லாததால் நீண்ட காலத்திற்குப் பிறகு சில நாட்கள் விடுமுறையில் சென்றனர்.
ஆறாம் நாள் காலை எழும்பி நடன தியானம் ஒன்றை செய்தோம். இது ஓசோவின் அடிப்படையில் இன்னுமோருவரால் உருவாக்கப்பட்ட தியான முறை. எனக்குப் பெரிதாகப் பிடிக்கவில்ல. இதற்கு மாறாக ஓசோவின் நடன தியானங்கள் பல அழகான இசையுடன் உள்ளன. காலை சாப்பிட்டுவிட்டு ஆறு அறைகளையும் அங்குள்ள படுக்கைகளையும் சுத்தம் செய்தோம். பின் நேற்றுப் பிடுங்கிய புளுபெரிகளை சுத்தம் செய்துவிட்டு குளித்து சாப்பிட்டோம். மாலைவரை கம்யூட்டருடன் இருந்துவிட்டு ஆறு மணி போல முட்டை பொறித்து பாணுடன் சாப்பிட்டோம். அதன் பின் பின்லாந்து பெண்ணின் நண்பர் ஒருவர் ஹெல்சிங்கியிலிருந்து வந்தார். அவரையும் கூட்டிக் கொண்டு புளுபெரி புடுங்கப் போனோம். இரவு ஒன்பது மணிவரை இரண்டறை வாளிகள் நிறைய புடுங்கினோம். நாமும் இப்பொழுது காடுகளுடன் கொஞ்சம் ஐக்கியமாகின்றோம். மனத் தடைகள் குறைந்து செல்கின்றன. பல விடயங்கள் பழக்கத்தில் இயல்பாகிவிடுகின்றன. சூரியன் இப்பொழுதுதான் அடிவானத்தை நோக்கி செல்ல ஆரம்பிக்கின்றது. இன்னும் வெளிச்சம் இருந்தது. வீட்டுக்கு வந்து அவற்றை வைத்துவிட்டு ஏரியில் நால்வரும் நிர்வாணமாக அரையிருட்டில் குளித்து விட்டு வீட்டுக்கு வர பத்து மணியாகிவிட்டது. பாணை சாப்பிட்டு தேநீர் குடித்துவிட்டு எழுத ஆரம்பித்தேன் நான்.
ஏழாம் நாள் காலை எழுந்து சாப்பிட்டுவிட்டு புளுபெரிகளை சுத்தம் செய்ய ஆரம்பித்தோம். இரண்டு வாளிகளையும் செய்து முடிய 12.30 ஆகிவிட்டது. அதன் பிறகு குளித்து விட்டு கிச்சடியை வெங்காம் தக்காளி தூள் போட்டு மீள்உருவாக்கம் செய்து சாப்பிட்டேன். சாப்பிட்டுவிட்டு எழுத ஆரம்பித்தேன். மாலை அறைகளையும் விறாந்தைகளையும் தண்ணீரால் சுத்தம் செய்தோம். பின் ஒரு மணித்தியாலம் குண்டலினி தியானம் செய்தோம். உடலிலுள்ள சக்திகளை சமப்படுத்தவும் மன அழுத்த சக்திகளை வெளியேற்றவும் நல்ல தியானமுறை இது. நீண்ட நாட்களுக்குப் பின்பு செய்வதால் மூட்டுக்கள் வலியை ஏற்படுத்தின. மூட்டுகளில் தான் நமது சக்திகள் தேங்கி நிற்கின்றன. இத் தியானத்தை செய்யும் பொழுது அவை அதிலிருந்து வெளியேறுவதால் இந்த வலி ஏற்படுகின்றது. இதன் பின் நாம் நடக்க சென்றோம்.
எட்டாம் நாள் புளுபெரிகளை சுத்தம் செய்துவிட்டு குசினியை தண்ணீரால் கழுவி சுத்தம் செய்தோம். தனது நண்பியை பயணம் அனுப்பிவிட்டு வந்தார் பின்லாந்து பெண். நாம் மலையளவில் புளுபெரி புடுங்கச் சென்றோம். ஷேளி இப்பொழுது இந்தப் பழங்களைப் புடுங்குவதில் சேர்ச்சி மட்டும் பெறவில்லை கழுவாமல் சாப்பிடுமளவிற்கு முன்னேறிவிட்டார். பின்லாந்தில் சூழல் பெரிதாக மாசடையவில்லையாம். ஆகவே பயப்பிடாமல் கழுவாமல் சாப்பிடலாம் என்றார்கள். நமது பழக்கதோசம் கொஞ்சம் தடையாக இருந்தாலும் அதையும் கடந்து சாப்பிட ஆரம்பித்தார். ஸ்கன்டிநேவியன் நாடுகளிலுள்ள தண்ணீரும் மிகவும் சுத்தமானவை. கடைகளில் தண்ணீர் போத்தல்கள் வழமையான பானங்களை விட அதிகமான விலையாகும்.
ஒன்பாதாம் நாள் காலை எழுந்து குளித்துவிட்டு சாப்பிட்டேன். இன்று நாம் தங்கும் இடத்தை நிர்வகிப்பவரின் பிறந்த நாள். என்ன செய்யலாம் என ஆசோசனை செய்தோம். நான் ஒரு நாள் வாங்கிவந்த வெள்ளை அரிசியில் பால் சோறு சமைத்து முந்திரியவத்தலால் பிறந்த நாள் எழுதி அழகுபடுத்தினேன். பின்னாலந்து பெண் பழங்களை கொண்டு கேக் செய்தார். அவர் சோறு அவிக்க நாம் பருப்பு பால் கறியும் உருளைக்கிழங்கு தக்காளி சேர்த்து குழம்பும் வைத்தோம். மதியம்போல 2007ம் ஆண்டு இத்தாலியில் மூச்சுப் பயிற்சி ஒன்றில் சந்தித்த நண்பர் என்னைச் சந்திக்க வந்தார். அவருக்கும் சாப்பிடக்கொடுத்தோம். பின் சுற்றியுள்ள இடங்களை காண்பிக்க செல்வதாக அழைத்துச் சென்றார். போகும் வழியில் தனக்கு இன்று பிறந்த நாள் என்பதைக் கூறினார்.
நூறாண்டுகளுக்கு முன்பு இரும்பு உற்பத்தி செய்த பிஸ்காஸ் என்ற கிராமத்திற்கு நாம் சென்றோம். இது முக்கியமான உல்லாசப் பயணிகள் இடம். பொருட்கள் அனைத்தும் வானத்து உயர விலை. எல்லா இடங்களையும் சுற்றிப் பார்த்தோம். நூறு ஆண்டுகளுக்கு முன்பு இரும்பு உற்பத்தி செய்தவர்கள் ஒரு நாளைக்கு பல மணி நேரம் வேலை செய்து அந்த இடத்திலையே சில மணிநேரம் நித்திரை கொண்டு ஞாயிற்றுக் கிழமை மட்டும் விடுமுறை பெற்று கடுமையாக உழைத்ததை அறிந்தோம். இன்று நமது நண்பருக்குப் பிறந்த நாள் என்பதால் மூவருக்கும் விருப்பமான மூன்று வகையான கேக்குகளை வாங்கி ஆனந்தமாக பங்கிட்டு உண்டோம். மாலை வீட்டுக்கு வந்தவுடன் ரவையில் நெய் ஊற்றி உடனடியாக கேசரி செய்து அதில் அப்பிள் பழத்தால் பிறந்த நாள் வாழ்த்துகள் எழுதி அழகுபடுத்தினோம். இதையும் மதிய சாப்பாடுகளையும் குழைத்து ஒன்றாக சாப்பிட்டோம். இன்று பிறந்த நாளுக்குரிய மற்றவர் வரவில்லையாததால் பால் சோற்றை சாப்பிடாமல் அவருக்காக வைத்தோம். இரவு பதினோரு மணிவரை ஆனந்தமாக நடனமாடினோம்.
பத்தாம் நாள் காலையில் எழுந்து நேற்று நண்பர்கள் புடுங்கிய கரன் பழங்களையும் நாம் முதல் நாள் புடுங்கிய பழங்களையும் துப்பரவு செய்தோம். மதியம் எனது நண்பரும் வர அவருடன் இருந்து இருந்த பழம் சாப்பாடுகளை சூடாக்கி நால்வரும் சாப்பிட்டோம். அதன்பின் பால்டிக் கடலருகில் இருக்கின்ற இரண்டு கிராமங்களைச் சுற்றிப் பார்க்க கூட்டிச் சென்றார். பின்லாந்துப் பெண்ணையும் அழைத்துச் சென்றோம். அங்கு ஒரு கிராமத்தில் ஐஸ்கீரிம் குடித்து இன்னுமொரு கடையில் திண்பண்டங்கள் வாங்கி சாப்பிட்டுவிட்டு அடுத்த கிராமத்திற்கு (Hanko) சென்றோம். இக் கடலின் எதிர் எதிர் முனைகளில் ஒரு பக்கம் சுவிடனும் மறுபக்கம் எஸ்தோனியா நாடுகளும் இருக்கின்றன. அமைதியான நீண்ட தூரத்திற்கு ஆழமில்லாத களப்பு போன்ற பால்டிக் கடலின் ஒரு பகுதியில் நீந்தினோம். வடமுனையின் ஏரி நீரும் சமுத்திர உப்பு நீரும் சேருவதால் தண்ணீர் கடலைப் போல அதிக உப்புச் சுவையாக இருக்கவில்லை. நீந்தி முடிய அந்த இடங்களிலுள்ள கற்பாறைகளின் மீது ஏறி நடந்தோம் நடனமாடினோம். சத்தம் போட்டோம். அமைதியாக இருந்தோம். சூரியன் இரவு எட்டு மணிக்கு கீழ் வானத்தை நோக்கிச் செல்ல நாம் அங்கிருந்த கடையில் இருந்த சில உணவுகளை வாங்கி சாப்பிட்டபின் நம் இருப்பிடத்தை நோக்கிப் பயணித்தோம். நண்பருக்கு நாம் முதன் முதலாக சந்தித்ததிலிருந்து என் மீது ஒரு விருப்பம். சிரிப்பு தியானத்தின் போது நான் சிரிப்பது தனக்குப் பிடிக்கும் எனக் கூறினார். பத்து மணியளிவில்தான் சூரியன் மறைய ஆரம்பித்தது. நமக்கும் நித்திரை வர ஆரம்பித்தது. இருப்பினும் முகநூலில் இன்றைய படங்களை ஏற்றிவிட்டு சிறிது எழுதிவிட்டு நானும் நித்திரை கொள்ளச் சென்றேன்.
பதினொராம் நாள் காலையிலையே முட்டை பொறித்து சாப்பிட்டோம். என்ன வேலை செய்வோம் எனத் தெரியாது. ஆகவே கொஞ்சம் நன்றாக சாப்பிட்டால் நல்லது எனச் சாப்பிட்டோம். ஷேளி நமது அடுத்த பயணத்திற்கான பதிவுகளை செய்யச் சென்றார். நான் மிகுதியிருந்த பழங்களைச் சுத்தம் செய்தேன். மதியம் போல உருளைக்கிழங்கையும் இனிப்பு உருளைக்கிழங்கையும் வெட்டி சில மணம் நிறைந்த பொருட்களைத் தூவி எண்ணையில் பிரட்டி அவனில் வைத்தோம். இன்று அனைவரும் சாப்பாட்டுக்கு சமூகமளித்தனர். இன்றுதான் அவர்களுக்கு வைத்த பால்சோற்றையும் மற்றும் உணவுகளையும் சேர்த்து சாப்பிட்டோம். மாலை ஒரு வேலையும் இருக்க வில்லை. எழுதிக் கொண்டிருக்கின்றேன். பெரிதாக ஒன்றையும் சமைக்கவில்லை. இருந்த பழம் சாப்பாடுகளை சாப்பிட்டோம். இரவு அனைவரும் பதினோரு மணிவரை நடனமாடிவிட்டு நித்திரைக்குச் சென்றோம். நான் இப் பதிவை திருத்திக் கொண்டிருக்கின்றேன். இப்பொழுது நடுநசி 12.30 ஆகிவிட்டது. இன்றுடன் இரண்டு மாதங்களை வெற்றிகரமாக முடித்துவிட்ோம். ம்…இன்னும் எவ்வளவு காலம் தொடர் ோம்.
நாளை காலை இங்கிருந்து புறப்படுகின்றோம். இளமையில் கனவு கண்ட பல கதைகளை வாசித்த அதனுடாக அந்த மண்ணுடனும் மனிதர்களுடன் வாழ்ந்த இரசிய நாட்டிற்கு நாளை இரவு பயணமாகின்றோம். இன்று இரசிய மனிதர்கள் மற்றும் அவர்கள் வாழ்வு தொடர்பாக நாம் கேள்விப்படுபவை எதிர்மறையானவையாகவே இருக்கின்றன. அது உண்மையா என அடுத்த பதிவில் எழுதுகின்றோம்.
இம் முறை ஒரு நாட்குறிப்பாகவே எழுதியுள்ளேன். எதை எழுதுவது எனத் தெரியவில்லை. ஆனால் பதிவு செய்வது முக்கியமானது என்பதால் எழுதுகின்றேன். உங்கள் கருத்துக்கள் விமர்சனங்கள் எனது எழுத்தை செப்பனிடும். ஆகவே தயங்காது உங்கள் விமர்சனங்களை முன்வையுங்கள்.
இன்று shirleyயின் அப்பா சாமிநாதன் அவர்கள் மரணித்த தினம். அவரை நினைவு கூரி இக் கட்டுரையை சமர்ப்பிக்கின்றோம்
இரசியா – காட்டில் மீண்டும் பிறந்தோம் August 14, 2016
இரசியாவிற்கு செல்வது என முடிவெடுத்தவுடன் செயின் பீட்டர்ஸ்பேக்கிலும் மாஸ்கோவிலும் ஒவ்வொரு வாரம் நமது சாப்பாட்டிற்கும் தங்குமிடத்திற்கும் வேலை செய்வோம் என முடிவெடுத்தோம். 2007ம் ஆண்டு இத்தாலியில் சந்தித்த ஒரு இரசிய நண்பருடன் தொடர்பு கொண்டபோது அவர் இரண்டு இடங்களிலும் இருவரின் தொடர்பைத் தந்தார். அவர்களுடன் தொடர்பு கொண்டபோது வரலாம் என்று கூறினார்கள். ஆனால் நாட்கள் நெருங்க நெருங்க அவர்களிடமிருந்து பதில் ஒன்றும் வரவில்லை. இரசியாவைப் பற்றி வாசித்த தகவல்களில் அடிப்படையில் நாம் சிலவற்றை உறுதி செய்து கொண்டு போகவேண்டியிருந்தது. ஆகவோ ஹோட்டல் ஒன்றை செயின் பீட்டர்ஸ் பேர்க்கில் பதிவு செய்தோம். இதேநேரம் செயின்பீட்டர்ஸ் பேர்க்கிலிருந்து அலெக்ஸ் என்பர் தம்முடன் வந்து வேலை செய்யலாம் என எழுதியிருந்தார்.
செயின் பீட்டர்ஸ்பர்க்கில் இரண்டு நாட்கள் நின்றுவிட்டு இரசியர்களுடன் காட்டில் வாழ சென்றோம். ஆரம்பத்தில் ஒரு வாரம் நிற்பது நோக்கம். ஆனால் இப்பொழுது மூன்று இரவுகள் நிற்பதுதான் நோக்கம். இதற்காக ஒரு இடத்தில் நித்திரை கொள்கின்ற பைகளை வாடகைக்குப் பெற்றுக் கொள்ள நகரப் புகையிரதம் எடுத்து பின் ஒரளவு தூரம் நடந்து சென்றோம். போகின்ற வழியில் “மோல்” போன்ற ஒரு இடம் இருக்க அதிலிருந்த கடை ஒன்றில் மரக்கறி “பிரைட்” சோறு வாங்கிச் சாப்பிட்டோம்.
நித்திரை கொள்கின்ற பைகளை வாங்கும் இடத்திற்கு சென்றபோது மிகவும் ஏமாற்றமாக இருந்தது. அது நான்கு பக்கமும் மதில் சுவர்கள் இருக்க உள்ளே பழைய சமான்கள் இரும்புகள் விற்கின்ற மற்றும் வாகனங்கள் திருத்துகின்ற இடங்கள் போலவும் இருந்தது. நமக்கு வாடகைக்கு தருகின்ற மனிதர் நம்மை ஒதுக்குப்புறமாக இருந்த அறை ஒன்றுக்கு கூட்டிச் சென்றார். உள்ளே பெட்டிகளில் பல வகையான “காம்பிங்” சமான்கள் இருந்தன. ஒரு பெட்டிக்குள் நித்திரை கொள்கின்ற பைகள் இருந்தன. அதைப் பார்த்துவிட்டு இவற்றை எப்ப கழுவினீர்கள் எனக் கேட்டோம். மாதத்தில் ஒரு தரம் கழுவுவோம் என்றார்கள். ம்…. நமது முடிவு இங்கு தீர்மானிக்கப்பட்டது. 800 ரூபில்களைக் இரண்டு இரவுகளுக்கு கொடுத்து இருந்தவற்றில் நல்லதாக இரண்டு பைகளைப் பெற்றுக் கொண்டோம். மேலும் ஒரு நாள் தேவைப்பட்டால் வந்து மிகுதிப் பணத்தை தருகின்றோம் எனக் கூறினோம். பாதுகாப்புப் பணமாக 2000 ரூபில்களையும் கட்டினோம். பொருட்களை திருப்பி ஒப்படைத்தபின் தருவதாக கூறினார்கள். அவற்றைப் பெற்றுக் கொண்டு நம்மை அழைத்துச் செல்கின்ற நண்பரை சந்திக்க பக்கத்திலிருந்த தீவிற்கு செல்ல வேண்டும். இன்னும் ஒரு மணித்தியாலங்களே இருந்தன. பஸ்சில் சென்றால் மட்டுமட்டாக நேரம் இருக்கும் என்பதானால் வாடகை வாகனத்தைப் பிடித்தோம்.
நாம் காட்டிற்கு புகையிரதத்தில் செல்வது நோக்கம். இருப்பினும் யாராவது மாஸ்கோவிலிருந்து வருகின்றார்களா என கேட்டபோது நண்பர் சேக்கிரோவை தொடர்புபடுத்தினார். அவர் குறிப்பிட்ட இடத்தில் சென்று காத்திருந்தபோது சொன்ன நேரத்திற்கு நண்பர் வந்தார்.. அந்த நண்பர் மிகவும் மென்மையானவர். பணிவானவர். இரண்டு குழந்தைகளின் தந்தை. நம்மை நன்றாக உபசரித்தார். ஓரிடத்தில் முகாமையாளராக வேலை செய்கின்றார். ஆங்கிலம் மிகக் குறைவாகவே தெரியும். இத்தாலியில் பல இரசிய நண்பர்களை சந்தித்திருக்கின்றேன். ஆனால் இவரைப் போல மென்மையான ஒருவரைக் கண்டதில்லை. காட்டிற்கு நண்பரின் காரில் பயணமானோம். நகரத்திலிருந்து வெளிக்கிட்டு லெனின் சதுக்கம் இருந்த தீவினுடாக சென்று ஏங்கல்சின் வீதியில் பயணித்து பின் ஒன்றரை மணித்தியாலங்கள் விரைவான வீதியில் சென்று ஒரு காட்டுப் பாதைக்குள் சென்றோம்.
மழை பெய்து மண் பாதை சகதியும் பள்ளமுமாக இருந்தது. சரியான பாதையில் வாகனங்கள் வருவதற்கு குறிகள் இட்டிருந்தார்கள். சிறிது நேரத்தில் உயர்ந்து வளர்ந்த பைன் மரங்களும் சிறிய ஆறும் ஒடுகின்ற இடத்தின் மத்தியில் பல கூடாரங்கள் அமைத்திருந்த இடத்தில் நின்றோம். மேகங்கள் கறுத்திருந்தபோதும் சிறிது வெளிச்சம் இருந்தது. மேற்கின் அடிவானத்திலிருந்த சூரியன் உயர்ந்த மரங்களின் உச்சியில் மஞ்சள் வெளிச்சத்தைப் பாச்சிக் கொண்டிருந்தது. நாம் சென்றபோது இரவு சமையல் செய்து கொண்டிருந்தார்கள். இந்த முகாமை ஒவ்வொரு வருடமும் ஒழுங்கு செய்கின்ற அலெக்ஸ் தன்னை அறிமுகம் செய்தார். இதன்பின் ஒவ்வொரு இடங்களாக கூட்டிச் சென்று காட்டினார்.
கடந்த பத்து வருடங்களாக இன்னும் சிறிது தூரத்தில் வடக்கு நோக்கி செல்கின்ற காட்டில் செய்தார்களாம். ஆனால் இப்பொழுது அரசாங்கம் அந்தக் காட்டை தேசிய காடாக அறிவித்துள்ளதால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆகவே இக் காட்டை தெரிவு செய்துள்ளார்கள். வழமையாக எந்த ஒரு காட்டிற்கு அனுமதி பெறாமல் உள்ளே சென்று இருக்கலாமாம். இந்தக் காட்டிற்கும் அனுமதி ஒன்றும் பெறத் தேவையில்லை. கிழமை நாட்களில் 30 பேரளவிலும் வார இறுதி நாட்களில் 50 பேர்களுக்கு மேற்பட்டவர்களும் ஒன்று கூடி சமைத்து பின் தியானம் செய்கின்றனர்.
பக்கத்தில் ஒடுகின்ற சிறிய ஆற்றில்தான் அனைவரும் குளிக்கின்றனர். இரசியாவில் பிரபல்யமாக இருக்கின்ற சூட்டு அறை ஒன்றையும் உருவாக்கியுள்ளார்கள். மலசலக் கூடம் ஒன்றை தற்காலிகமாக உருவாக்கியுள்ளார்கள். நாம் முன்பு நமது நாட்டில் அகதி வாழ்க்கையின் போது அல்லது நெருக்கடியான காலங்களில் செய்ததைப் போல ஒரு குழியை கிண்டிவிட்டு அதற்கு மேல் இரண்டு மரங்களைப் போட்டுவிட்டால் அதுதான் மலசலக்கூடம். கடந்த ஒன்டரை மாதங்களாகப் பயன்படுத்துகின்றார்கள். மணம் முக்கைப் பிழந்தது. ஆனாலும் சிறிது தூரத்தில் ஒன்றாகக் கூடி சமைத்து தியானம் செய்து ஆடிப் பாடுகின்றனர். இவ்வாறு ஒவ்வொரு கோடையிலும் ஒன்றரை மாதங்கள் காட்டில் வாழ்கின்றனர். எட்டு மணியளவில் ஓசோவின் உரை போடப்பட்டு இடை இடையில் நிற்பாட்டி அதை இரசிய மொழியில் மொழிபெயர்த்தார்கள். உரை முடிய அனைவரும் சாப்பிடச் சென்றோம். சில மரக்கறிகளைப் போட்டு சூப்போல ஏதோ ஒன்றை செய்திருந்தார்கள். ஒருவகையான தானிய அரிசியில் சோறு சமைத்திருந்தார்கள். கமைத்த பாத்திரங்கள் எல்லாம் கறியாக இருந்தது. நாம் கோப்பைகளை கழுவி அதில் இரண்டு சாப்பாடுகளையும் கொஞ்சம் கொஞ்சம் போட்டு சாப்பிட்டோம். கொஞ்சம் குளிராக இருந்தது. நிறைய நுளம்புகள் இருந்தன.
நாம் சாப்பிட்டுவிட்டு ஒவ்வொரு டென்டாக சுற்றிப் பார்த்தோம். ஒரிடத்தில் இரண்டு மனிதர்கள் தமது கொட்டிலுக்குள் நெருப்பு எரித்து குளிர் காய்ந்து கொண்டிருந்தார்கள். அவர்களுடன் நாமும் போய் இருந்தோம். நன்றாக இந்திய சினிமா பார்ப்பார்கள் போல. அதைப் பற்றி ஒருவர் சிரித்து சிரித்து கதைத்துக் கொண்டிருந்தார். சிறுவன் ஒருவன் நெருப்புடன் விளையாடிக் கொண்டிருந்தான். ஒன்பது மணிபோல ஆட ஆரம்பித்தார்கள். ஷேளி குளிராக இருப்பதாலும் நிறைய நுளம்புத் தொல்லையாலும் டென்டுக்குள் படுக்கச் சென்றார். நான் சிறிது நேரம் ஆடிவிட்டு படுக்கச் சென்றேன். ஆடிக் கொண்டிருந்தவர்கள் பதினொரு மணிபோல படுக்கச் சென்றார்கள். ஷேளி இரவு முழுக்க படுப்பதற்கு கஸ்டப்பட்டார். முக்கியமாக ஷேளிக்கு நித்திரை பையிலிருந்து வந்த மணம் சகிக்க முடியாமல் இருந்தது. நமக்கு கஸ்டமாக இருக்கும் என நண்பர் ஒருவர் கீழே விரிப்பதற்கு சில சமான்களையும் மேலும் இரண்டு நித்திரை பைகளையும் தந்தார். ஆனாலும் படுப்பதற்கு கஸ்டமாக இருந்தது. கடைசியாக ஷேளி எனது கைகளிலும் பின் மார்பிலும் தலையை வைத்து நித்திரையானார். நானும் நித்திரை கொண்டேன். வெளியில் நன்றாக மழை பெய்து கொண்டிருந்தது.
காலை ஏழரை மணிபோல டைனமிக் தியான இசை சத்தம் கேட்க எழும்பினோம். காலையில் டைனமிக் தியானம் செய்வது பல வகைகளில் உடலுக்கும் மனதுக்கும் நல்லது. எனக்கு குறைந்தது மூன்று நாட்களுக்காவது தொடர்ந்து செய்ய வேண்டும். அல்லது உடல் நோகும். ஆகவே செய்வதை தவிர்த்தேன். நாம் இருவரும் டென்டை விட்டு வெளியில் வந்து சிறிது தூரம் நடந்து சென்று சலம் பெய்தோம். பின் ஆற்றங்கரைக்கு வந்து முகத்தைக் கழுவினோம். தண்ணீர் குளிராக இருந்தது. கிழக்கின் அடி வானத்திலிருந்த சூரியனின் ஒளிக் கதிர்கள் மரங்களின் உச்சியில் பட்டு தண்ணீரில் தெரிந்தன. பனி தூரத்து மரங்களில் கீழ்ப் பகுதியில் படர்ந்திருந்தது. டைனமிக் முடித்து வந்தவர்கள் ஆற்றில் இறங்கி நிர்வாணமாக குளித்தார்கள். பார்ப்பதற்கு அழகாகவும் சந்தோசமாகவும் இருந்தது.
நாம் சமையலறையை நோக்கி சென்றோம். எரிந்த அடுப்புக்கு அருகிலிருந்து குளிர் காய்ந்தோம். ஒன்பது மணியளவில் ஓட்மில் உணவும் பானும் பட்டரும் தேநீரும் செய்து தந்தார்கள்.அதைச் சாப்பிட்டுவிட்டு அனைவருடனும் இருந்து அரைகுறை ஆங்கிலத்தில் உரையாடினோம். பின் காடுகளில் சுற்றித் திரிந்தோம். சிறுவர்கள் சுதந்திரமாக சுற்றித் திரிந்தார்கள். நெருப்புடன் விளையாடினார்கள். மண்ணில் பிரண்டார்கள். மரங்களுக்குள் ஓடித் திரிந்தார்கள். ஒருவரும் அவர்களைத் தடுக்கவில்லை. ஒன்பரை மணியளவில் நாதபிரம்மா தியானம் செய்தார்கள். நானும் பங்கெடுத்தேன். அமைதியான நல்லதொரு தியானம். நமது சக்திகளை இயற்கைக்கு வழங்கி புதிய சக்திகளைப் பெறுகின்ற தியான முறை இது. ஷேளி ஆங்கிலம் ஒரளவு உரையாடக்கூடிய இன்னுமொரு பெண்ணுடன் சுற்றித் திரிந்தார். தியானம் முடிய IMG_4476சமைப்பதற்கு ஆயத்தமானர்கள். நாமும் உருளைக் கிழங்கு கரட் மற்றும் வெங்காயம் என்பவற்றை கழுவி சுத்தம் செய்து வெட்டிக் கொடுத்தோம். பதினோரு மணிக்கு ஓசோவின் “மீண்டும் பிறத்தல்” தியானத்தை செய்ய ஆரம்பித்தார்கள். நமது குழந்தைப் பருவத்தை மீண்டும் வாழ்வது. நாம் விரும்பியதை செய்யலாம். குழந்தையாக இருக்கும் பொழுது நமக்குத் தடுக்கப்பட்டதை எல்லாம் செய்யும் சுதந்திரம் இது. சிரிக்கலாம் அழலாம். துள்ளலாம் பாடலாம். குதிக்கலாம். இவ்வாறு எதையும் ஒரு மணித்தியாலம் செய்துவிட்டு இன்னுமொரு மணித்தியாலங்கள் ஏற்பட்ட உணர்வுகள் எண்ணங்களுடன் அமைதியாக தியானத்தில் இருக்க வேண்டும். நல்லதொரு தியானம். ஒரு வகையான தெரப்பி. இரசிய காட்டில் மீண்டும் பிறந்தோம்.
தியானம் முடிய நமது சமான்களை அடுக்கினோம். நேற்று இரவு படுக்க கஸ்டப்பட்டதால் இன்று செல்வோம் எனத் தீர்மானித்தோம். மாஸ்கோவிலிருந்து வந்த ஜோடி ஒன்று ஒரு கிழமையாக தங்கியிருந்தார்கள். அவர்களும் இன்று புகையிரதத்தில் செல்வதாக கூறினார்கள். நாமும் காட்டுக்கால் நடந்து புகையிரதத்தில் செல்ல விரும்பினோம். அவர்களுடன் வருவதாக கூறினோம். இரண்டறை மணியளவில் சமைத்து முடித்திருந்தார்கள். சோறும் சூப்பும். அதைச் சாப்பிட்டுவிட்டு அனைவருக்கும் நன்றி கூறி விடை பெற்றோம். எல்லோரும் நிற்கும்படி கூறினார்கள்.
காடுகளுக்குள்ளால் நடந்து சென்றோம். ஜோடி ஏற்கனவே இந்தப் பாதையால் வந்தவர்கள். அவர்களுக்கு பாதை தெரிந்திருந்தது வசதியாக இருந்தது. இடையில் ஒரு ஆறு குறுக்கிட்டது. இதைக் கடப்பதற்று ஒரே ஒரு மரத்தை ஆற்றுக்கு குறுக்கால் போட்டிருந்தார்கள். அந்த மரத்துடன் ஒட்டியவாறு சிறு தடிகளை நட்டும் குறுக்காக தடிகளை கட்டி ஆணி அடித்தும் வைத்திருந்தார்கள். அதை இறுக்கிப் பிடித்து நமது பாரத்தை அதற்கு சுமத்தினால் அதையும் விழுத்தி நாமும் தண்ணீருக்குள் விழலாம். மாறாக அதை மெதுவாகப் பிடித்தும் பிடிக்காமலும் ஒற்றடியப்பாதையில் நடப்பது போல மெதுவாக நடக்க வேண்டும். நான் முதலில் சென்று பின்னால் வருபவர்களைப் படம் பிடித்தேன். நால்வரும் ஒன்றாக ஒரே நேரத்தில் வந்தால் பாலம் தாங்காது. ஒவ்வொருவராக மெதுவாக வந்து சேர்ந்தனர். இதன் பின் சிறிய பாலம் ஒன்றை மரத்தினால் கட்டியிருந்தார்கள். அதையும் கடந்து சிறிது தூரம் வந்தபோது புகையிரதப் பாதையைக் கண்டோம்.
புகையிரதப் பாதையை அடைந்து அதனருகால் நிலையத்தை நோக்கி நடந்தோம். மாஸ்கோவிலிருந்து ஒரு புகையிரதம் வந்து நின்று நம்மைக் கடந்து சென்றது. அதிலிருந்து ஒரு பெண் இறங்கி நம்மை நோக்கி நடந்து வந்தார். தானும் காட்டுக்குள் தியானம் செய்ய செல்வதாக கூறிச் சென்றார். நாம் நால்வரும் புகையிரதத்திற்காக காத்திருந்தோம். விரல் விட்டு எண்ணக்கூடிய சில மனிதர்கள் அருகிலிருந்த கிராமத்திலிருந்து வந்து காத்திருந்தார்கள். நாம் நேற்று வாங்கி வந்த வாழைப்பழத்தில் இரண்டில் ஒன்றை நண்பர்களுக்கு கொடுத்துவிட்டு மற்றதை நாம் சாப்பிட்டோம். குறிப்பிட்ட நேரத்திற்கு புகையிரதம் வந்தது. இது மாஸ்கோவின் புற நகர்களுக்கு செல்கின்ற புகையிரதம். நீளமாக கதிரைகளைக் கொண்டவை. பெரும்பாலும் வயது போனவர்கள் களைத்துப் போய் அமைதியாக இருந்தார்கள். கடந்த எழுபது வருட கால களைப்பு அல்லது புதிய வாழ்க்கை முறையின் கஸ்டங்களை எதிர்கொள்கின்ற கவலை அவர்கள் முகங்களில் தெரிந்ததுபோல ஒரு உணர்வு. கொஞ்ச நேரத்திலையே பரிசோதகர் வந்தார். பற்றுச்சீட்டு இல்லாதவர்களுக்கு பயணச் சீட்டுகளை வழங்கினார். நமது நண்பர் நாம் வாங்குவதற்கு உதவி செய்தார். இரண்டு பெண்கள் பான் பழ வகைகளை விற்றுக் கொண்டு வந்தார்கள். வாசலில் நின்று கத்தி கூறிவிட்டு ஒவ்வொருவராக பார்த்துக் கொண்டு நம்மைக் கடந்து சென்றார்கள். சிலர் அவர்களிடம் வாங்கிச் சாப்பிட்டார்கள். நாம் முயற்சிக்கவில்லை.
ஒன்றரை மணித்தியாலங்களின் பின்பு புகையிரம் லெனின் சதுக்கத்திலிருந்த புகையிரத நிலையத்தில் நின்றது. நண்பர்கள் மாஸ்கோ புகையிரதம் எடுப்பதற்காக வேறு ஒரு நிலையத்திற்கு சென்றார்கள். நாம் வெளியில் வந்து தேநீர் கேக் வாங்கிக் குடித்துவிட்டு அக் கடையில் இலவசமாக இருந்த வைபையைப் பயன்படுத்தி இரவு தங்குவதற்கான ஒரு ஹோட்டலை மிகவும் கஸ்டப்பட்டு நாம் செலவு செய்யக்கூடிய பணத்திற்குள் பதிவு செய்தோம். இப்படி அன்று தங்குவதற்கு பதிவ செய்யும் பொழுது அதிகமான பணத்தைக் கொடுக்க வேண்டி வரும்.
லெனின் சதுக்கத்திலிருந்த லெனினின் சிலையை பார்க்கச் சென்றோம். இதுவே இரசியாவில் நாம் பார்த்த முதலாவது லெனின் சிலை. சுற்றிவர பூந்தோட்டங்களாலும் தண்ணீர் தாடகங்களாலும் நிறைந்திருந்தது. வழமையான கூட்டங்களில் கையை உயர்த்தி உரையாற்றிக் கொண்டிருந்த லெனினின் உருவம் அந்த சிலை. இவர்களின் கடந்த எழுபது வருட காலங்கள் அனைத்தும் இவ்வாறு சிலையாகவே இன்று உறைந்து போய் இருக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. இவரது சிலை தீவிற்கு அப்பால் பெரும் நிலத்திலிருந்த புரட்சிக்கு முந்திய அரசர்களின் அகலமான உயரமான குளிர்கால அரண்மணையைப் பார்த்த படி தனித்து இருந்தது. பெரும் திரளான மக்கள் இந்த அரண்மனையையும் அங்கிருக்கின்ற அரசர்களின் சிலைகளையுமே பார்க்கச் செல்கின்றனர். ம்…
[பயணம் தொடரும் ]
வலைப்பதிவு ‘சூரியனை நோக்கி ஒரு பயணம்‘ https://ajourneytowardssun.wordpress.com