வெற்றியின் இரகசியங்கள் (2) – அத்தியாயம் இரண்டு : மனத்தின் தன்மைகள் – அ. ந. கந்தசாமி –

அ.ந.கந்தசாமியின் வெற்றியின் இரகசியங்கள்அறிஞர் அ.ந.கந்தசாமிஅ.ந.கந்தசாமி நினைவு தினம் பெப்ருவரி 14!

– அறிஞர் அ.ந.கந்தசாமி எழுதித் தமிழகத்தில் பாரி பதிப்பக வெளியீடாக 1966இல் வெளியான நூல் ‘வெற்றியின் இரகசியங்கள்’. வாழ்வின் வெற்றிக்கு அறிவுரைகள் கூறும் சிறந்த தமிழ் நூல்களிலொன்று. இந்நூலில் அ.ந.க மனத்தின் தன்மைகளை, அது பற்றிய நவீன அறிவியற் கோட்பாடுகளையெல்லாம் மிகச்சிறப்பாக, துள்ளு தமிழ் நடையில் எழுதியிருக்கின்றார். அந்த வகையில் சிறந்த உளவியல் நூலாகவும் இதனைக் கொள்ளலாம். இந்நூல் ‘பதிவுகள்’ இணைய இதழில் தொடராக வெளிவரும். – பதிவுகள் –


மனிதனுக்கும் இதர உயிர்களுக்கும் இருக்கும் வேற்றுமை அவனுக்குச் சிந்திக்கத் தெரிந்திருப்பதுதான் என்று கிரேக்க அறிஞன் அரிஸ்டாட்டில் சொல்லியிருக்கிறான், ஆனால் ஒக்ஸ்போர்ட் சர்வ கலாசாலையைச் சேர்ந்த பேராசிரியர் ஹம்ப்ரீஸ் போன்றவர்கள் இதனை ஏற்றுக் கொள்ளவில்லை. சிந்தனை மனிதனின் ஏகபோக உரிமையல்ல என்றும் பூனை, நாய், கொரில்லா போன்ற மிருகங்களும் சிந்திக்கவே செய்கின்றன என்றும் இவ்வறிஞர்களில் பலர் பரிசோதனைகள் மூலம் நிரூபித்திருக்கிறார்கள். இது எப்படியாயினும் ஒன்றைமட்டும் எவ்ரும் மறுக்க முடியாது. இன்றுள்ள உலகப் பிராணிகள் யாவற்றிலும் அதிகமாகச் சிந்திக்கத் தெரிந்தவன் மனிதன்தான். மனிதனுக்கு அடுத்தபடி கொரில்லாக் குரங்கே அதிகமாகச் சிந்திக்கத் தெரிந்த பிராணி என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். ஆனால் மனிதனின் சிந்தனசக்திக்கும் கொரில் லாவின் சிந்தணுசக்திக்கும் எவ்வளவு வித்தியம்? ஒன்று மலை, மற்றது கடுகு, மனிதனின் சிந்தனசக்தியின் பீடம் மனம் என அழைக்கப்படுகிறது. இந்த மனம் எங்கள் தேகத்தைக் கட்டியாள்கிறதா, அல்லது தேகம் மனதைக் கட்டியாள்கிறதா என்பது பற்றி மனிதன் நீண்டகாலமாக வாதித்து வருகிறான். இந்த வாதத்தில் மிகப் பெரிய தத்துவ ஞானிகள் பலர் கலந்து கொண்டிருக்கிறர்கள்.

இதில் மனமே தேகத்தைக் கட்டியாள்கிறது என்று வாதிடுவோர் இலட்சியவாதிகள் என்றும், தேகமே மனதைக் கட்டியாள்கிறது என்போர் உலோகாயதவாதிகள் என்றும் பலவாருக அழைக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் இவ்வளவு வாதத்திற்குப் பிறகும் பிரச்சினை இன்னும் தீர்ந்த பாடில்லை. இன்றும் மனம் என்பது என்ன? அது உடலில் எங்கேயிருக்கிறது? மண்டைக்குள் இருக்கும் தேங்காய்ப் பருமன் உள்ள மூளையா மனம்? அல்லது அதில் ஒரு பகுதியா?  மேலும் மனம் என்ற வார்த்தைக்குள் சிந் திக்கும் சக்தி மட்டும் அடங்கவில்லையே! மனிதன் பிறந்த நாள் தொடக்கம் ஒரு பெரிய ஞாபகக் குவியலையும் தன் னுடன் சேர்த்து வைத்திருக்கிருனல்லவா? அதுவும் மனதுள்தான் கிடக்கிறது. நாம் படிப்பது, கேட்பது, அனுபவிப்பது மனப்பாடஞ் செய்வது, எல்லாமே அங்கே புதையுண்டு, கிடக்கின்றன. இவை எல்லாம் மூளையிலுள்ள சவ்வுகளிடையேயும் நரம்புகளிடையேயுமா கிடக்கின்றன?- இது போன்ற பல கேள்விகளுக்கு போதிய பொருத்தமான பதில்கள் இதுவரை கிடைக்கவில்லை. இதில் இருந்து ஒன்று தெரிகிறது. உலகத்தையே துலக்கிவிட்டதாக அல்லது துலக்க முடியும் என்று கருதும் மனிதன் இன்னும் தன் உடலையும் உள்ளத்தையும் சரிவர அறிந்து கொள்ளவில்லை என்பதுதான் அது. மனிதனே! உன்னை நீ அறிந்து கொள்!-என்று பண்டைக் காலத்திலிருந்தே சொல்லப் படுகிறது. இதில் நீ என்பது என்ன? நீ, நான், தான் என்ற வார்த்தைகள் மனதையா தெரிவிக்கின்றன? இது முற்ருக விடுவிக்கப்படாத ஒரு புதிராகத்தான் இன்னும் இருந்து வருகிறது. இருந்த போதிலும் “நீ நான், தான்? என்ற கருத்தில் மனிதனின் மனம்தான் பேரிடம் பெறும் என்று சிலர் கொள்வதில் ஓரளவு நியாயம் இருக்கத்தான் செய்கிறது. நான் அல்லது நீ என்ற வார்த்தை மனம், உடல், அவற்றை இயக்கும். சக்தி என்பவற்றின் சேர்க்கையைக் குறிக்கிறது என்று கொள்வது ஓரளவு பொருத்தமாகலாம்.

பிராய்ட்ஆகவே தன்னைத்தான் அறியும் முயற்சியில் மனத்தைப் பற்றிய ஆராய்ச்சியே முக்கிய இடம் பெறுகிறது. இதுவே இன்றைய மனேதத்துவ விஞ்ஞானமாக வளர்ச்சியடைந்துள்ளது, என்று கூறினால் அதில் தவறில்லை. மனதைப் பற்றி சிந்தித்து அதைத் துலக்க வேண்டுமென்ற முயற்சி நீண்ட காலமாக இவ்வுலகில் நடைபெற்று வந்தபோதிலும் நமது இருபதாம் நூற்றண்டில்தான் அம்முயற்சி விஞ்ஞானரீதியான அடிப்படையைப் பெற்றது. இதற்காகப் பெரிதும் உழைத்தவர்கள் மூவர் : ஒருவர் பிராய்ட். மற்றவர் அல்பிரெட் அட்லர். இன்னெருவர் கார்ள் ஜூங். இதில் பிராய்ட் மனிதனின் மன இயல்புகள் பெரும் பாலும் பாலுணர்ச்சியின் அடிப்படையிலேயே பூத்து விகசிக்கின்றன என்ற கருத்தை வெளியிட்டார். கார்ள் ஜுங் நனவு மனம், நனவிலி மனம் என்ற இருமனங்களில் நனவிலி மனதின் ஆழத்தை அளந்தறிவதில் தன் கவனத்தைச் செலுத்தினர். அல்பிரெட் அட்லரோ தாழ்வு மனப் பான்மை என்ற உணர்ச்சியே மனித வாழ்வின் போக்கினை நிர்ணயிக்கும் பெரிய சக்தி என்ற கருத்தை வளர்க்க முயற்சித்தார். இவர்களில் மனம் உடல் மீது ஆதிக்கஞ் செலுத்துகிறதா அல்லது உடல்தான் மனதின்மீது ஆதிக்கம் செலுத்துகிறதா என்ற கேள்விக்கு அட்லர் அளிக்கும் பதில் பின்வருமாறு : “தனிப்பட்ட மனிதனின் மனேதத்துவத்தில் மனம் உடல் என்ற இரண்டும் ஒன்றை ஒன்று ஜீவசக்தியுடன் பாதித்து நிற்பதைக் காண்கிறோம். மனிதனின்-அதாவது மனதினதும் உடலினதும் சேர்க்கையின்-நோயை நாம் தீர்க்க வேண்டியிருக்கிறது. மனமா, உடலா என்பதல்ல பிரச்சினை. மனமும் உடலும் உயிர்ப்பின் வெளிப்பாடுகளாயுள்ளன. அவை வாழ்க்கை என்ற முழுமையின் பகுதிகள். அவை முழுமையில் ஒன்றை ஒன்றைப் பற்றியும் பாதித்தும் நிற்பதை நாம் இப்பொழுது அறியத் தொடங்கியுள்ளோம்.?

ஆகவே மனம் உடல் மீது ஆதிக்கம் செலுத்துகிறதா அல்லது உடல் மனதின் மீது ஆதிக்கஞ் செலுத்துகிறதா என்ற கேள்விக்கு ஒரு நேரடியான பதிலை நம்மால் கூற முடியாவிட்டாலும் இரண்டும் ஒன்றையொன்று-மனம் உடலின் நிலையையும், உடல் மனதின் நிலையையும்-பாதிக்கிறது என்பதை ஒப்புக்கொண்டே ஆகவேண்டியிருக்கிறது எனவே மனதின் நன்னிலை உடலின் நன்னிலைக்கும் உடலின் நன்னிலை மனதின் நன்னிலைக்கும் அடிகோலும் என்பது தெளிவாகிறது. மனதைப் பற்றி மனோதத்துவ அறிஞர்கள் இந்நூற்றாண்டில் கண்டு பிடித்த ஒரு முக்கியமான விஷயம் அது இரண்டு தளங்களை உடையதென்பதாகும். இதில் முதலாவது தளம் எமக்கு நன்கு தெரியக்கூடியதாயிருக்கும் சிந்திக்கும் மனம், இதை நனவு மனம், வெளி மனம் அல்லது பிரக்ஞை மனம் என்று அழைக்கலாம். இந் நூலைப் பொறுத்தவரையில் இவற்றில் நனவு மனம் என்ற சொல்லே சிந்திக்கும் மனதின் சுட்டாக உபயோகிக்கப்படுகிறது. இரண்டாவது தளம் நமக்கு அறிவின் மூலமாக அல்லது ஆராய்ச்சியின் மூலமாகத் தெரியவந்துள்ள நனவிலி மனம். நாம் ஒரு கேள்வியைக் கேட்பது, அதற்கு பதிலளிப் பது ஒரு கட்டடத்தைக் கட்டுவது. கடைக்குப் போவது, காரோட்டுவது போன்ற செயல்களைப் புரிவதெல்லாம் எமது சிந்திக்கும் மனதின் அதாவது நனவு மனதின் உதவியால்தான். திட்டமிட்டுச் செய்யவேண்டிய செயல்கள் யாவற்றிலும் இந்த நனவு மனதின் சக்தியே மேலோங்கி நிற்கிறது. நனவு மனதின் முக்கிய பண்பு அதன் சிந்திக்கும் சக்தியேயாகும். இம்மனம் எம்மிடம் இருப்பதை அதன் இயக்கத்தால் நாம் தெளிவாக உணரக்கூடியதாயிருப்பதால் அதுபற்றி இங்கு அதிகம் எடுத்துரைக்க வேண்டியுள்ளது.

ஆனால் நனவிலி மனம் அப்படியன்று. அது உள்ளே புதைந்திருக்கும் மனம், உள் மனம், அதை உணருதல் சிறிது கடினம், ஆகவே அதுபற்றி விரிவான விளக்கம் இங்கு அவசியமாகிறது. நாம் துயிலும்போது உடம்பு அடங்குகிறது. சில உள் உறுப்புகளேத் தவிர மற்ற உறுப்புகள் யாவும் ஓய்வும் ஆறு தலும் பெறுகின்றன. எமது வெளி மனமும் சிந்திக்கும் சக்தியை இழந்து தூங்கி விடுகிறது. அப்படி எம் வெளி மனம் தூக்கத்தில் ஆழும்போது பஞ்ச புலன்களும் ஒடுங்குகின்றன. சுண் பார்ப்பதில்ல்ே, மூக்கு முகர்வதில்லை, வாய் ருசியை மறக்கிறது, காது இன்னிசையை ரசிப்பதில்: உடல் ஸ்பரிசத்தை அனுபவிப்பதில்லே, தூக்கங் கலந்த பின்னர் தான் மீண்டும் வெளி மனம் இயங்குகிறது. அப்பொழுது தான் பஞ்ச புலன்களும் மீண்டும் செயலாற்ற ஆரம்பிக்கின்றன. காது கேட்க ஆரம்பிக்கிறது. வாய் பேச ஆரம்பிக்கிறது. கேள்விகளுக்கு பதிலளிக்க முடிகிறது! விந்தணு சக்தி முகிழ்க்கிறது! ஆனால் இப்படி நனமெனம் தூங்கிக்கொண்டிருக்கும்போது எம் முன்னே இருக்கும் உள் மனம் அல்லது நனவிவி மனம் தூங்காது இயங்கிக் கொண்டே இருக்கிறது. நாம் தூக்கத்தில் கனவு காண்கிறோம் அல்லவா? எம் மனம் வெளி மனம் மட்டுமேயானுல் துரங்கும்போது நாம் எப்படிக் கனவு காண முடியும்? இதிலிருந்து எம் வெளி மனம் தூங்குகையில் இன்னோர் மனம் விழிப்புடன் இருந்து கனவின் அனுபவத்தைப் பெறுகிறது என்பது தெளிவாகிறது. அதுதான் நனவிலி மனம், இது இரவும் பகலும் தூங்காது செயலாற்றுகிறது. நனவு மனம் இயங்கும் விழிப்புள்ள நேரத்திலும் இது செயலாற்றுகிறது. தூக்கத்திலும் செயலாற்றுகிறது. உண்மையில் இது நாம் தாய் வயிற்றில் சூல்கொண்ட நேத்திலிருந்து மயானத்திற்கு போகும்வரை செயலாற்றுகிறது என்கிறார்கள் உளவியல் அறிஞர்கள்.

இந்நனவிலி மனதின் இயக்கத்தால் தூக்க நேரத்தில் கனவு காண்பதுடன் மட்டும் சிலர் நிற்பதில்லை நித்திரையிலேயே எழுந்து நடந்து பல வேலேகளேச் செய்தும் விடுகின்றனர். இதனைத் துயிலில் நடத்தல் (Somnambulism) என்று சொல்வார்கள் இதற்காளானவர்கள். நித்திரை கலையாமலேயே படுக்கையை விட்டெழுகிறார்கள் உடைகளை உடுக்கிறார்கள், மாடிப் படிகளில் ஏறி இறங்குகிறார்கள், சில செயல்களேப் புரிந்து விட்டு மீளுகிறார்கள், பின்னர் படுக்கையில் வந்து பழமை போல் படுத்தும் விடுகிறார்கள். அடுத்த நாள் இவை ஒன்றுமே அவர்களுக்கு ஞாபகமிருப்பதில்லை. சில சமயங்களில் மேசையில் பாதி எழுதிய கடிதம்தம் கை எழுத்திலேயே முற்றுப் பெற்றுக் கிடப்பதைக் கண்டு அவர்கள் ஆச்சரியப்படுகிறார்கள். இது எதனைக் காட்டுகிறது? அவர்கள் நனவு மன நிற்குத் தெரியாமலே இன்னோர் மனம் இயங்கி இவ்வேலைகளைப் புரிந்தது என்பதைத் தானே? இதுவே நனவிவி மனம், இந்த நனவிலி மனத்தின் இயக்கம் தாக்க நேரத்தில் மட்டுமல்ல மற்ற நேரங்களிலும் நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது என்று குறிப்பிட்டோர். இது எப்படி என்பதைக்கீழ்க்கண்ட உதாரணங்களிலிருந்து விளங்கிக்கொள்ளலாம்:

“உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு” என்றார் திருவள்ளுவர். ஒருவன் யாருடனோ சம்பாஷித்துக் கொண்டிருக்கிறான். அவனது வேட்டி கெட்டியாகக் கட்டப்பட்டிராததால் போலும், மெல்ல நழுவ ஆரம்பிக்கிறது. ஆனால் நனவு மனம் அதைக் கவனிக்கும் முன்னரே, அது சம்பாஷணையில் முற்றாக லயித்திருக்கும்போதே கை எப்படியோ பாய்ந்துவந்து வேட்டியைச் சரி செய்ய ஆரம்பிக்கிறது. இது நனவிலி மனதின் செயல். அத்துடன் நனவு மனமும் ஒத்துழைக்கவே வேட்டி கெட்டியாகக் கட்டப்பட்டு விடுகிறது.

அல்பிரெட் ஆட்லர்இன்னும், நாம் சிறுவயதில் படித்துப் பாடமாக்கிய பாடல்களை எவ்வித முயற்சியில்லாமலே இன்றும் ஒப்புவிக்கக் கூடியதாயிருக்கிறது-எவ்வித பிழையுமின்றி! சிலர் பல நூறு அடிகளைக் கூட இவ்வாறு ஒப்புவிப்பார்கள். ஒவ்வொரு வார்த்தையாகச் சிந்தித்துச் சிந்தித்துப் பாடல்களை நாம் ஞாபகப் படுத்துவதில்லை. முதல் வரியைச் சொன்னதும் முழுப் பாட்டையும் ஒரே மூச்சில் முழங்கி விடுகிறோம்.  சிந்தித்துச் சிந்தித்துச் சொல்லுவதே நனவு மனத்தின் பண்பு. ஆனால் பாடமாக்கிய பாடலைப் பொறுத்த வரையில் நனவிலி மனதில் நாடாபோல் பதிவுற்றுக் கிடக்கிறது பாடல், கம்ப ராமாயணத்தில் இந்தக் கவியைப் பாடு, சங்க நூலில் இந்தப் பாட்டை ஒது, பாரதியின் இந்தப் பாடலைப் படி என்று நனவு மனம் சொல்ல வேண்டியதுதான் தாமதம், அப்பாடல்கள் மனப் பாடமாக இருந்தால் நனவு மனதிலிருந்து வேகமாக வெளி வந்து விடுகிறது. இந்த விஷயத்தில் நனவிலி மனம் ஒரு திறமை வாய்ந்த டேப் ரெக்கோர்டர் போலச் செயலாற்றுகிறது!

சில மனோதத்துவ அறிஞர்கள் நாம் கண்டது, கேட்டது அனுபவித்தது எதுவுமே எப்போதுமே எம் நனவிலி மனத்திலிருந்து மறைவதில்லை என்று சொல்லுகிறார்கள், தகுந்த சூழ்நிலைகள் ஏற்படும்போது அவை நனவு மனதில் வந்து குவியும். இதனையே ஞாபகம் வருதல் என்ற பெயரால் அழைக்கிறோம். இது பற்றிப் பேசும்போது சில ஆண்டுகளின் முன்னர் தமது ஊரிலே நடந்த ஒரு சம்பவத்தை எனது நண்பர் ஒருவர் கூறினர். அவர் அறிந்த ஒரு கிழவிக்குப் பைத்தியம் பிடித்து பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்பட்டாளாம். பைத்தியம், குடிபோதை, தூக்கம் என்பன எல்லாம் ஏறக்குறைய ஒரே மன நிலைதான். இந்த மனநிலையில் ஒருவன், தான் செய்யும் காரியங்களை நன்கு அறிந்துகொண்டு செய்வதில்லை. நனவு மனம் வலிவிழந்த நிலையில் நனவிலி மனம் பூரண பலத்துடன் இயங்க ஆரம்பிக்கிறது. கிழவி விஷயத்திலும் இது நடைபெற்றது. முதலில் சம்பந்தா சம்பந்த மற்றுப் புலம்பிக் கொண் டிருந்த கிழவி திடீரென இலக்கண சுத்தமாக லத்தீன் மொழியில் பேச ஆரம்பித்துவிட்டாள். படிக்காத பட்டிக் காட்டுக் கிழவி இப்படிப் பேசுவது டாக்டர்களுக்கெல்லாம் ஆச்சரியமாகப் போய்விட்டது. அவர்களில் ஒருவர் இது எப்படி நிகழ்ந்தது என்ற ஆராய்ச்சியில் இறங்கினர். கிழவி சிறுவயதில் பள்ளிசென்றாளா என்ற விஷயம் விசாரிக்கப்பட்டது. அதன் பலனக ஒரு விஷயம் வெளிப் பட்டது. அதாவது அக் கிழவி ஏறக்குறைய நாற்பது வருடங்களின் முன்னர் லத்தீன் பண்டிதர் என்று கருதப் பட்ட ஒரு கிறிஸ்தவப் பாதிரியார் வீட்டில் வேலை செய்து வந்தாள் என்பதாகும். பாதிரியார் தமது அறையில் லத்தீன் வசனங்களைத் தினசரி பொழிந்து கொண்டிருப்பாராம். கிழவி அப்பொழுது குமரிதான் அதைக் கேட்டுக் கொண்டே தன் வேலைகளைச் செய்து கொண்டிருப்பாளாம். எப்படியோ அந்த லத்தீன் வார்த்தைகள் அவளது நனவிலி மனத்தில் இறங்கிக் குடிகொண்டுவிட்டன. நாற்பது வருடங்கள் கழியும் வரை நனவு மனத்தால் மறக்கப்பட்டிருந்த அந்த வார்த்தைகள் அவளுக்குப் பைத்தியம் பிடித்து நனவுமனம் பலமிழந்ததும் நனவிலி மனதில் முன்னே தள்ளப்பட்டு விட்டன. டேப் ரெக்கோர்டர் வேலை செய்ய ஆரம்பித்து விட்டது. ஆனால் டேப் ரெக்கார்டராக மட்டுமல்ல, சினிமாப் படம் போலவும் எம் நனவிலி மனம் இயங்குகிறது. நாம் சின்னவயதில் அனுபவித்த ஒரு சம்பவம், ஒரு கப்பலில் பிரயாணம் செய்திருக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். புதுமையான காட்சிகள் குழந்தையுள்ளத்தில் அழுத்தமாகப் பதிந்துவிடுகின்றன எழுபத்தைந்து வயதான பின்னர் கூட நினைத்தவுடன் அவை மனத் திரையில் காட்சியளிக்கின்றன. நீலவான மும் அலைமோதும் நீலக் கடலும் வெள்ளைப்பாய்களும், ஒங்கி எழுந்த பாய்க்கம் பங்களும், கறுப்புப் பட்டியுடன் கூடிய வெண் தொப்பி அணிந்த கப்பற் தலைவரும் அவர் அன்போடு தந்த பிஸ்கட் போன்ற உணவுவகைகளும் அப்படியே இன்பக் காட்சியாக மலர்ந்துவருகிறது எம் முன்னுக்கு! பிஸ்கட் நினைவுடன் வாயில் எச்சில்கூட ஊறிவிடுகிறது! இவை விழித்திருக்கும் போது எம் நனவிலி மனம் இயங்குவதற்குச் சில உதாரணங்கள்.

நாம் வாழ்க்கையில் எந்த நேரமும் ஏதாவது செய்து கொண்டேயிருக்கிறோம். நடக்கிறோம், வேலை செய்கிறோம், படிக்கிறோம், எழுது கிறோம், பேசுகிறோம், பாடுகிறோம். குறைந்த பட்சம் மூச்சுவிட்டுக் கொண்டோ கண்களை வெட்டிக் கொண்டோ இருக்கிறோம். இவற்றில் சில நாம் சிந்தித்துச் செய்வன. சில நாம் சிந்திக்காமலே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. படிப்பது நாம் சிந்தித்துச் செய்யும் வேலை. ஒரு நண்பரைக் கைகூப்பி வரவேற்பது நாம் சிந்தித்துச் செய்யும் வேலை. இவைகள் இச்சா நடவடிக்கைகள் (Voluntary actions) எனப்படும். ஆனால் நாம் மூச்சு விடுவது அப்படிப் பட்ட இச்சா நடவடிக்கையல்ல. நமக்குத் தெரியாமலே நம் சுவாசப்பை அதனைச் செய்து கொண்டிருக்கிறது. அது இயற்கை நடவடிக்கை (Reflex action) எனப்படும். பிராணயாமம் செய்தல் இச்சா நடவடிக்கை: பயத் தில் அல்லது கோபத்தில் அல்லது வேறு உணர்ச்சிப் பெருக்கில் நாம் பெருமூச்சு விடுதல் இயற்கை நடவடிக்கை.

கமலா அடுக்களையில் வேலை செய்துகொண்டிருக்கிருள். வேலைத் தடுமாற்றத்தில் அவளது கை நெருப்பில் பட்டு விடுகிறது. உடனே அவள் ‘என் கையில் நெருப்புப்பட்டுக் கொண்டிருக்கிறது. அது கையை எரித்துவிடும், ஆகவே கையை எடுப்பதே புத்தி’ என்றெல்லாம் நனவு மனதால் சிந்திக்க வேண்டியதில்லை. கை தானே இழுக்கப்பட்டு விடும். அது இயற்கை நடவடிக்கை. இந்த இயற்கை நட வடிக்கைகள் யாவும் நனவிலி மனதின் துரிதமான ஆணை” களின் மீது நடை பெறுகின்றன.
நனவிலி மனதின் மூன்று பண்புகளை இதுவரை எடுத்துச் சொன்னோம். அவையாவன கனவுகளால் இயற்கை நடவடிக்கைகளை ஆள்தல், ஞாபகங்களைப் பேணுதல் என்பன. ஆனால் இன்னும் பல காரியங்களும் எம் முடலில் நனவிலி மனதின் தூண்டுதலால் நடைபெறுகின்றன. எம்மை நாம் ஒரளவேனும் உணர்ந்து கொள்வதற்கு இவை உதவி புரிய வல்லனவாயிருப்பதால் அவற்றையும் நாம் இங்கு கவனிப்போம்.

கார்ல் ஜூங்நனவிலி மனம் ஒரு மனிதனிடம் எப்போது உண்டாகிறது? கருப்பையில் கரு சூல் கொண்ட உடனேயே அது ஒரு உயிருள்ள பொருளாகி இயற்கை நடவடிக்கைகளுக்கு ஆளாகிவிடுகிறது. கருப்பிண்டம் சிறிது சிறிதாக வளர்ச்சி அடைந்து பூரணம் பெறுதல் இயற்கை நடவடிக்கைகளாலேயே தாய்க்குக் கிடைக்கும் உணவூட்டப் பொருட்களால் உண் டாகும் உதிரமும் சதையும் சுரப்பி நீர்களும் கருப்பிண்டத்தில் சேர்வதால் தான் வளர்ச்சி உண்டாகிறது. இப்படிச் சேரச் செய்வது நனவிலி மனம். கருப்பிண்டம் வளர்ச்சியடைந்து நாளடைவில் உறுப்புகளுள்ள ஒரு உருவமாக மலர்கிறது; உயிர்ப்பு ஏற்படுகிறது. வயிற்றுக் குள்ளேயே குழந்தை புரண்டு விளையாட ஆரம்பிக்கிறது. இவை குழந்தை சிந்தித்துச் செய்யும் செயல்களல்ல. நனவிலி மனம் தோன்றுவிக்கும் இயற்கை நடவடிக்கை களால் இவை நடக்கின்றன. மனித உடலை உருவாக்கி வளர்ப்பதற்கு, மூச்சுவிடுதற்கு, இரத்த ஓட்டத்திற்கு யாவற்றுக்குமே நனவிலி மனமே காரணம். ஆகவே எம் உடலை உருவாக்குவது எமது நனவிலி மனமே என்று குறிப் பிட்டால் அதில் தவறில்லை. ஆனால் உடலை உருவாக்குவதோடு மட்டும் நனவிலி மனம் நிற்பதில்லை. அதில் ஏற்படும் பழுதுகளைத் திருத்துவதும் நோய்களை ஒட்டுவதும் நனவிலி மனம்தான். கமலா அடுக்களையில் காய்கறி நறுக்கும்போது கையைக் கத்தியால் வெட்டிக்கொண்டு விடுகிருள். உடனே உடலின் பலபாகங்களிலிருந்தும் வெள்ளை இரத்த அணுக்கள்(WhiteCorpuscles) படை எடுக்கின்றன. வெட்டுண்ட இடத்தில் நோய்க்கிரு மிகள் பெருந்திரளாக வந்து சூழ்வதே இதற்குக் காரணம். அவற்றைத் தடுத்துநிறுத்த பல்லாயிரக் கணக்கில் வெள்ளை இரத்த அணுக்கள் ஒரு சேனாசமுத்திரம்போல் திரண்டு போராடுகின்றன. அவைமட்டும் தகுந்த தருணத்தில் இவ்விதம் பாய்ந்துவராவிட்டால் சாவு நிச்சயம். அதைத்தடுக்க முடியாது. வெட்டின் அளவும் கையில் உள்ள அழுக்கு களின் அளவும் சுற்று வட்டாரத்திலும் உடலிலும் காணப் படும் நோய்க் கிருமிகளின் அளவும் சேர்ந்து எவ்வளவு நேரத்தில் இச்சாவு நிகழும் என்பதை நிர்ணயிக்கும். வெள்ளை இரத்த அணுக்களை இவ்வாறு திரட்டிப் போர்முனைக்கனுப்பும் தளகர்த்தன் யார்? நனவிலி மனம்தான் அத்தளகர்த்சின். ‘வெள்ளை அணுக்களே, விரையுங்கள்! வெட்டுண்ட இடத்தை அடையுங்கள்! கிருமிகளைக் கொன்று ஒழியுங்கள்!’ என்று அது ஆணையிட வெள்ளை அணுக்கள் துள்ளி எழுந்து செயலாற்றுகின்றன. சிலர் வெட்டுக்காயத்தை மருந்து சுகமாக்குகிறது என்றும் வைத்தியர் சுகமாக்குகிறார் என்றும் கூறக்கூடும். வெள்ளை அணுக்கள் இல்லாத உடலில் ஏற்படும் காயத்தை எவராலும் ஒருபோதும் சுகமாக்க முடியாது என்பதை அறியாததாலேயே அவர்கள் அவ்வாறு எண்ணுகிறார்கள். இவ்வெள்ளை அணுக்களோ நனவிலியின் ஆணையில்லாமல் இயங்கமாட்டா.

நனவிலி மனதின் இன்னேர் செயல் நம்முடைய அன்றாடப் பழக்கவழக்கங்களுக்கு அது காரணமாயிருப்பது தான். பழக்கங்கள் நல்ல பழக்கங்கள் தீய பழக்கங்கள் என்று இருவகைப்படும். இரண்டுக்கும் நனவிலி மனமே காரணம். நாம் காலையில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் எழுகிகிறோம். குறிப்பிட்ட நேரத்தில் காலைக் கடன் களை முடிக்கிறோம், உடுத்துகிறோம், வேலைக்குச் செல்கிறோம். இவை எல்லாம் நாம் திட்டமிட்டுச் செய்பனவல்ல. தாமாகவே நடக்கின்றன. இவை நல்ல பழக்கங்கள் வாழ்க்கை ஒரு நேர சூசிகையில் அமைந்து செல்லவும் காலம் வீணுகாமல் தடுக்கவும் இப்பழக்கங்கள் நமக்கு உதவுகின்றன. இப்பழக்கங்கள் இல்லாவிட்டால் நாம் வெவ்வேறு நேரத்தில் எழுவோம். அதனுல் வேலைகள் தடைப்படும். வாழ்க்கை குழப்பம் நிறைந்ததாய் இருக்கும். இதைத் தடுக்க நனவிலி மனம் நாம் அடிக்கடி செய்யும் வேலைகளைப் பழக்கங்களாக்கி ஏறக்குறைய இயற்கை நடவடிக்கைகள் போல் நடைபெறச் செய்துவிடுகிறது!

இங்கு நனவு மனம், நனவிலி மனம் என்ற இரண்டில் எது அதிகவலுவுள்ளது என்பதையும் நாம் தெரிந்து கொள் வது அவசியமாகும். வாழ்க்கையில் நாம் குடிப் பழக்கம், சூதாடும் பழக்கம் உள்ளவர்களையும், காமாந்த காரர்களையும் கண்டிருக்கிறோம். ஓயாது புகை பிடிப்பவர்களையும், மூக்குப் பொடி போடுபவர்களையும், அளவுமீறி உண்பவர்களையும், சினிமாப் பைத்தியங்களையும், பார்த்திருக்கிறோம். இவர்கள் எல்லாம் தம் வாழ்க்கையை நாசமாக்கிக் கொள்பவர்கள் என்பது எனக்கு மட்டுமல்ல, அவர்களுக்கே நன்குதெரியும். உண்மையில் எம்மைவிட அவர்கள் தான் இதை நன்கு தெரிந்து வைத்திருக்கிறார்கள். இருந்தும் அவர்கள் கெட்ட பழக்கங்களை நிறுத்தாது தொடர்ந்து பின்பற்றிக் கொண்டே இருக்கிறார்கள் ஏன்?

எனது நண்பர்களில் ஒருவர் செல்லையா, பட்டதாரி. அரசாங்க உத்தியோகம் ஒன்றில் அமர்ந்திருந்தார். நல்ல சம்பளம். ஆஜானுபாகு. தினமும் காலை எழுந்தவுடன் முகச் ச வரம் செய்து கொள்வார். குளிப்பார். அழகாக உடுத்திக் கொள்வார். நல்ல உணவுகளை உண்பார். இனிய வாசனைப் பொருட்களை அணிவார். அவரைப் பார்ப்பவர்கள் எல்லோரும் அவரால் கவரப் பெறுவார்கள் அவர் கையில் ஒரு கைக் கடிகாரம் அழகுறக் கொலுவீற்றிருக்கும் விரல்களில் வைர மோதிரம். அவரை ஒரு தடவை பார்த்த பெண்கள் மறு தடவை ஏறிட்டுப்பார்க்காது போகமாட்டார்கள். நல்ல பங்களா ஒன்றில் வசித்துவந்தார். சிறிய கார் ஒன்றையும் சொந்தமாக வைத்திருந்தார். உண்மையில் சமுதாய வாழ்க்கையைப் பொறுத்த வரையில் அவர் ஒரு நல்ல உதாரணமாகவும், வழிகாட்டியாகவும் மற்றவர்களுக்கு விளங்கினர். அவர் கல்யாணமானவர். மனைவி லட்சுமி அழகில் லட்சுமியே தான்! மூன்று குறுகுறுத்த பிள்ளைகளுக்கு அவர் தந்தை. உண்மையில் அவரது வாழ்க்கையைக் கண்டு பொறாமைப்படாதவர்களே இல்லை என்று சொல்லலாம்.

ஆனால் அதே செல்லையாவின் இன்றைய நிலையோ? இன்று அவரைப் பார்த்து யாரும் பொருமைப்படுவதற் கில்லை. பரிதாபப்படுகிருர்கள். அவரது வாழ்க்கை அவ்வளவுக்கு மாறிப் போய்விட்டது. இன்று அவர் குடிப்பழக்கத்திற்கு ஆளானவர். கண்கள் குழி விழுந்து, உடல் மெலிந்து சாய்ந்ததோற்றத்துடன் விளங்குகிறார். தினசரி குளிப்பதும் நின்றுபோய் விட்டது தினசரி சவரம் நின்றுபோய் விட்டது. கையில் முன்னர் போல் வைர மோதிரத்தைக் காணுகிறோம். உணவைப் பற்றி அவர் இலட்சியம் செய்வதில்லை. என்றும் எப்பொழுதும் குடிப்பதில்தான் நாட்டம். காரை விற்றுவிட்டார். பங்களாவும் கையைவிட்டுப் போய்விட்டது. நகரத்துக்கு வெளியே ஒரு மலிந்த வசதியற்ற வீட்டில் வாழ்ந்துவருகிறார், பணக்க கஷ்டத்தின் காரணமாக பிள்ளைகளில் இரண்டைப் பாட சாலைக்கு அனுப்பாது நிறுத்திவிட்டார். இப்போது அவர் வாசனைப் பொருட்களை உபயோகிப்பதில்லை. குடியின் நாற்றம்தான் கும் மென்றடிக்கிறது. இத்தனைக்கும் அவர் நல்ல அறிவாளி. அவரது இயற்கையான அன்புப் பண்புகளும் குறைந்து விடவில்லை, ஒருநாள் நான் அவரிடம் ” உங்கள் உடல் நலம் குன்றி வருகிறது. குடிப் பழக்கத்தை உங்களால் நிறுத்த முடியாதா? ஐந்து வருடங்களுக்கு முன்னர் எப்படி இருந்தீர்கள்? இன்று இப்படி நீங்கள் உங்களையே அழித்துக்கொண்டு வருகிறீர்களே, இது சரியா?” என்று கேட்டேன். அதற்கு அவர் அளித்த பதில் எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது. தான் ஒரு வாரமாகக் குடிப்பதை நிறுத்திவிட்டதாகவும் இனி ஒரு துளி சாராயத்தைக் கூடத் தாம் வாழ்க்கையில் தொடப் போவதில்லை என்றும் கூறினர் அவர். உண்மையில் குடியின் காரணமாகத் தான் பட்ட கஷ்டங்களையும் விபரமாக எடுத்துச் சொன்னர். குடிப்பழக்கத் தின் பயனக தனக்கு ஈரல் வியாதி சமீபத்தில் உண்டாகியதென்றும் ஆஸ்பத்திரியிலிருந்து அண்மையிலேயே வெளி யேறியதாகவும் குறிப்பிட்டார். இவ்வார்த்தைகளைக் கேட்டதும் நான் மிகவும் மகிழ்ச்சியுற்றேன். இனி அவர் குடிக்கமாட்டார். சீக்கிரமே அவர் வாழ்க்கை மறுமலர்ச்சி பெறும் என்று நான் எண்ணினேன். ஆனால் சில நாட்களுக்குப் பின்னர் நான் வீதியில் சென்று கொண்டிருந்தபோது நான் கண்ட காட்சி! வீதி ஒரத்தில் தள்ளாடித் தள்ளாடிச் சென்று கொண்டிருந்தார் செல்லையா. பழையபடியும் குடிபோதையில் காணப்பட்டார்.

இங்கு எம் முன்னால் ஒரு கேள்வி பிறக்கிறது. குடிப்பது கெடுதி பயக்கும் என்று நன்றாக உண்மையில் எம்மைவிட அனுபவ பூர்வமாக விளங்கிக் கொண்டிருக்கும் இம்மனிதர் மீண்டும் ஏன் குடிக்க ஆரம்பித்தார் என்பதுதான் அது. இதில்தான் நனவினி மனம் உண்மையில் நீ பிஎ மனத்தை விட நூறு மடங்கு சக்தி வாய்ந்தது என்பதை நாம் நன்கு காணக் கூடியதாயிருக்கிறது. எப்படி?

நண்பர் செல்லையாவின் சிந்திக்கும் மனம், அதாவது நனவு மனம் குடிப்பது கூடாதென்றுதான் சொல்லுகிறது. ஆனால் சாராயத் தவறணையை, “பாரை’க் கடந்து செல்லும் பொழுது அவரை அறியாமலே அவர் கால்களலவரை அங்கு இழுத்து விடுகின்றன. அவர் வாய் “இரண்டு ட்ராம் போடு’ என்று கூறிவிடுகிறது! கைகள் பையில் துழாவி அங்கிருந்து போதிய பணத்தை விடுத்துக் கொடுத்துவிடுகிறது! குடிக்கிறார். குடி போதையில் நனவு மேலும் மனம் பலவீனமடைகிறது. நனவிலி மனம் அவரை இன்னும் அதிகமாக அடிமையாக்கி விடுகிறது. ஆகவே கடைசிக் காசு கையிலிருக்கும் வரை குடித்து விட்டுத் தள்ளாடித் தள்ளாடிச் செல்கிறார் அவர்.

நனவு மனம் சிந்தனையின் விளையு ஆனால் அதனால் நனவிலி மனதை எதிர்க்க முடியவில்லை: நனவிவி மனம் உணர்ச்சிகளின் உறையுள். அது நனவு மனத்தை முறியடித்து விடுகிறது! அதன் சக்தி முன்னால் நனவு மனதால் ஒன்றும் செய்ய முடியவில்லை  சிந்தனைக்கும் உணர்ச்சிக்கும் நடக்கும் போரில் உணர்ச்சி சிந்தனையைச் சிதறடித்து விடுகிறது!

உண்மையில் நனவு மனதில் மட்டும் நாம் எதனையும் சாதித்துவிட முடியாது. நனவிலி மனதின் ஒத்துழைப்பு இல்லாவிட்டால் அது நனவு மனம் இடும் திட்டங்களே யெல்லாம் முறியடித்து விடும், குடிக்கக்கூடாது என்று செல்லேயாவின் வெளி மனம் திட்டமிட்டு என்ன பயன்?

~ஏன் குடிக்கக் கூடாது?” என்பது பற்றி ஒரு புத்தகமே எழுதக்கூடிய அறிஞராகத்தான் திகழ்கிறார் அவர். இருந்தும் நனவிவி மனதில் குடிக்கவேண்டும் என்ற உணர்ச்சி இருக்கிறது. “குடியாதே’ என்ற எண்ணம் அங்கு குடி கொள்ளவில்லை. நனவிவி மனதின் ஒத்துழைப்பை அவர் இது விஷயத்தில் பெற்றுல்தான் அவரால் இத்துறையில் வெற்றியைக் காண முடியும் இல்லாவிட்டால் மேலும் படிபடியாகச் சீரழிந்து ஒழிந்து போக வேண்டியதுதான்!

ஹரி புரூக்ஸ் என்ற ஆங்கில மனோதத்துவ எழுத்தாளர் நனவிலி மனதை நனவு மனதோடு ஒப்பிட்டு எழுதும் வார்த்தைகள் இங்கு நினைவு கூரத்தக்கன.

~வெளி மனிதன் முக மூடி அணிந்தவன். உண்மையான மனிதன் நனவிவி மனம் என்ற திரைக்குப் பின்னுல் உறைகிறான். நனவிலி மனத்துடன் நனவு மனதை ஒப்பிடும்போது நனவிலி மனதின் சக்திகள் மிகவும் அற்பமாகத் தெரிகின்றன. பரிணாம வளர்ச்சியின் பயனாக நனவிலி மனதிலிருந்து பிறந்ததே நனவு மனம். நனவு மனம் என்பது வீட்டின் முன்னறை. இவ்வறையில் நமது நனவிலி மனத்தின் முரட்டு சக்திகள், பட்டையிடப்படாதவை தெரிந்தெடுக்கப்பட்டு வெளியில் நாம் உபயோகிப்பதற்காக எம்மிடம் தரப்படுகின்றன. நனவிலி மனதைப் பற்றி நாம் அறியாத காலத்தில் எமது சிந்திக்கும் மனதிற்கும், அறிவுக்கும் நாம் அளவுக்கு மீறிய முக்கியத்துவம் கொடுத்து வந்தோம், அச் சிந்திக்கும் மனதையே நாகரீகத்தின் எல்லாக் கண்டுபிடிப்புகளுக்கும் காரணம் என்று கூறுதல், கர்த்தாவுக்குப் பதில் கருவிக்கு முக்கியத்துவம் அளிப்பதாகும். இது மூக்கில் நாம் அணியும் கண்ணுடியே நம் கண் பார்வைக்குக் காரணம் கண்ணல்ல என்று கருதுவதற்கு ஒப்பாகும். இருந்தாலும் நனவுமனத்தின் முக்கியத்துவத்தையும் நாம் குறைத்துக்கூற முடியாது. அதுவும் ஒரு சிறப்பு வாய்ந்த யந்திரமே. அது நமக்குச் சிந்திக்கும் சக்தியையும் தார்மீக அறிவையும் தருவது; தன்னைத்தான் உணர வேண்டுமென்ற ஊக்கத்தை அளிப்பது. கலையுணர்ச்சியைக் கொடுப்பது.இருந்தும் அது ஒரு யந்திரம்தான். அதனை இயக்கும் எஞ்ஜின் வேறு. மேலும் அது இதுவரை ஒரு எஞ்ஜினியராக மாறவில்லை. அது எம் வாழ்க்கையை நிர்ணயிக்கும் பொருட்களையோ, சக்தியையோ எமக்கு அளிக்கவில்லை. அவற்றை நனவிலி மனம் தான் அளிக்கிறது.”

புரூக்சின் இக்கருத்துக்கள் நனவிலி மனத்தின் சக்தியை நமக்கு நன்கு காட்டுகின்றன. நனவிலி மனமும் நனவு மனமும் முறையாக ஒத்துழைக்கும்போது தான் ஒருவன் வாழ்க்கையில் பெரு வெற்றி அடைகிறான் ,

[தொடரும் ]