[‘பதிவுகள்’ மற்றும் நந்தா பதிப்பகத்தாரின் (கனடா) ‘தமிழர் மத்தியில்’ ஆதரவுடன் 2004இல் சிறுகதைப் போட்டியொன்றை நடாத்தியது. அப்போட்டியின் நடுவர்களாக பிரபல எழுத்தாளர்கள் அ.முத்துலிங்கம், என்.கே.மகாலிங்கம் ஆகியோர் இருநது பரிசுக்கதைகளைத் தேர்ந்தெடுத்தனர். அது பற்றிய விபரங்களையும், பரிசுக் கதைகளையும் ஒரு பதிவுக்காக மீள் பிரசுரம் செய்கின்றோம். – பதிவுகள்]
‘பதிவுகள்’/ ‘தமிழர் மத்தியில்’ ஆதரவுச் சிறுகதைபோட்டி முடிவுகள் 2004!
முதற் பரிசு (200 கனேடிய டாலர்கள்): ‘எல்லாம் இழந்த பின்னும்..’
எழுதியவர்: சாந்தினி வரதராஜன் (ஜேர்மனி)
இரண்டாம் பரிசு (100 கனேடிய டாலர்கள்): ‘நான், நீங்கள் மற்றும் சதாம்’
எழுதியவர்: ஆதவன் தீட்சண்யா (தமிழ்நாடு)
மூன்றாம் பரிசு (75 கனேடிய டாலர்கள்): ‘தீதும் நன்றும்’
எழுதியவர்: அலர்மேல் மங்கை (அமெரிக்கா).
நடுவர்கள் என்ன கூறுகின்றார்கள்….
பதிவுகள் நந்தா பதிப்பகத்தின் ‘தமிழர் மத்தியில்’ ஆதரவுடன் நடாத்திய சிறுகதைப் போட்டிக்கு உலகின் பல பாகங்களிலிருந்தும் கலந்துகொண்ட படைப்பாளிகள் அனைவருக்கும் எமது மனப்பூர்வமான நன்றி. போட்டிக் கதைகளைத் தேர்ந்தெடுப்பதற்கு நடுவர்களாக இருக்க முடியுமா எனக் கேட்டபோது, தயக்கமின்றி மகிழ்ச்சியுடன் சம்மதித்தார்கள் எழுத்தாளர்களான திரு.அ.முத்துலிங்கமும், திரு.என்.கே.மகாலிங்கமும். இவர்களிருவரைப் பற்றி ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகு மட்டுமல்ல, தமிழக இலக்கிய உலகும் நன்கறியும். பதிவுகள் நடாத்தும் சிறுகதைபோட்டி பற்றிக் குறிப்பிட்டதும் அதற்குரிய பரிசுப் பணத்துக்குத் தானே பொறுப்பு என மகிழ்ச்சியுடன் முன்வந்தார் ‘நந்தா பப்ளிகேஷன்ஸ்’ அதிபரான கட்டடக்கலைஞர் திரு. நந்தகுமார் இராஜேந்திரம். இவர்கள் அனைவருக்கும் எமது நன்றி.
தமிழ்ச் சிறுகதை உலகில் அறுபதுகளிலிருந்து இன்றுவரை சளைக்காமல் எழுதிவரும் அ.முத்துலிங்கத்தின் சிறுகதைத் தொகுதிகளை தமிழகத்தில் காந்தளகம், காலச்சுவடு மற்றும் அண்மையில் தமிழினி பதிப்பகங்கள் வெளியிட்டுள்ளன. இதுவரை இவரது ‘அக்கா’ (1964), ‘திகடசக்கரம்’ (1995), ‘வம்சவிருத்தி’ (1996), ‘வடக்கு வீதி’ (1998), ‘மகாராஜாவின் ரயில் வண்டி’ (2001) மற்றும் ‘அ.முத்துலிங்கம் கதைகள்’ (2003) ஆகிய சிறுகதைத் தொகுதிகள் வெளிவந்துள்ளன. தினகரன் தமிழ் விழா சிறுகதைப் போட்டியில் முதற்பரிசு, கல்கி சிறுகதைப் போட்டிப் பரிசு, லில்லி தேவசிகாமணி பரிசு( ‘திகடசக்கரம்’), தமிழ்நாடு அரசு முதற் பரிசு (‘வம்சவிருத்தி’), ஸ்டேட் பாங் ஒவ் இந்தியா முதற் பரிசு (‘வம்சவிருத்தி’), இலங்கை அரசின் சாகித்திய மண்டலப் பரிசு (‘வடக்கு வீதி) ஆகிய பரிசுகளையும் இவர் பெற்றுள்ளார்.
இவரது படைப்புகளைப் பற்றி எழுத்தாளர் அம்பை ” அ.முத்துலிங்கத்தின் கதைகள் நாம் அறிந்த உலகங்களுக்கு நம்மை நாம் அறியாத பாதைகளில் இட்டுச் செல்பவை. நாம் அறிந்த உலகங்களின் கதவுகளையும், சாளரங்களையும், காதல்களையும் ஓசைப்படுத்தாமல் மெல்லத் திறப்பவை” என்று குறிப்பிடுவார்.
அடுத்தவர் எழுத்தாளர் என்.கே.மகாலிங்கம். தமிழ் இலக்கிய உலகில் ‘பூரணி’ மகாலிங்கம் என அறியப்பட்டவர். இவரும் அறுபதுகளிலிருந்து இன்றுவரை தமிழ் இலக்கிய உலகில் தன் பங்களிப்பை சிறுகதை, கவிதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு, விமரிசனம் எனப் பல்வேறு வழிகளில் ஆற்றி வருபவர். ‘பூரணி’ என்னும் சஞ்சிகை இவரை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்ததன் காரணமாகவே இவர் ‘பூரணி’ மகாலிங்கம் என அழைக்கப்பட்டார். கனடாவிலிருந்து வெளிவரும் ‘காலம்’ சஞ்சிகையின் ஆசிரியர் குழுவில் இவரும் ஒருவர். அண்மையில் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்ட, நோபல் பரிசு பெற்ற நைஜீரிய எழுத்தாளர் ‘சினுவா ஆச்சிபி’யின் மிகவும் புகழ்பெற்ற நாவலான ‘Things Fall Apart’ நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பான ‘சிதைவுகள்’ நாவலைத் தமிழுக்கு மொழிபெயர்த்தவர் இவரே. இவரது ‘உள்ளொளி’ என்னும் கவிதைத்தொகுதி ‘காலம்’ வெளியீடாக வெளிவந்துள்ளது. இவர்கள் இருவரும் போட்டிக்கதைகளில் முதல் மூன்று பரிசுக் கதைகளையும் தேர்ந்தெடுத்துத் தந்தார்கள்.
நாம் போட்டிக் கதைகளைத் தெரிவு செய்வதில் பின்வரும் முறையினைக் கையாண்டோம். நடுவர்களிடம் எழுத்தாளர்களின் பெயர்களை நீக்கிவிட்டுக் கதைகளை மட்டுமே கொடுத்தோம். எழுத்தாளர்களின் பெயர்கள் எந்தவிதத்திலும் கதைகளைத் தேர்வு செய்வதில் பாதிப்பினை ஏற்படுத்தி விடக்கூடாதென்பற்காகவே அவ்விதம் செய்தோம். அதற்கு நடுவர்களும் மனப்பூர்வமாகச் சம்மதித்தார்கள். அதற்கும் எமது நன்றி.
போட்டிக்கு வந்த கதைகளைத் தெரிவு செய்வதில் நடுவர்கள் சிறிது திணறிப்போய் விட்டார்களென்றும் கூறலாம். பெரும்பாலான கதைகள் மிகவும் தரமாகவிருந்தன. எனவே போட்டிக்கு வந்த சிறுகதைகளில் சிறப்புச் சிறுகதைகளாகச் சில கதைகளைத் தேர்ந்தெடுக்கவுள்ளோம். அவை தேர்ந்தெடுக்கப்பட்டபின்னர் அதுபற்றிப் படைப்பாளிகளிடம் அறிவித்து, அவர்கள் சம்மதிக்கும் பட்சத்தில் அவற்றைப் பதிவுகளில் பிரசுரிப்போம். போட்டியில் கலந்துகொண்டு சிறப்பித்ததோடு, போட்டியினையும் வெற்றிகரமாக முடிப்பதற்கு உதவிய அனைத்துப் படைப்பாளிகளுக்கும், நடுவர்களாகவிருந்து பரிசுக் கதைகளைத் தேர்ந்தெடுத்த திரு. அ.முத்துலிங்கம், திரு.என்.கே.மகாலிங்கம் அவர்களுக்கும் மற்றும், முதல் மூன்று பரிசுக்கதைகளுக்குரிய பரிசுகளை வழங்கச் சம்மதித்த நந்தா பதிப்பக உரிமையாளர் திரு.நந்தா இராஜேந்திரம் அவர்களுக்கும் மீண்டுமொருமுறை எமது மனப்பூர்வமான நன்றி உரித்தாகுக. பரிசுபெற்ற படைப்பாளிகளுக்குப் பரிசுப் பணமும், சான்றிதழும் அனுப்பி வைக்கப்படும். பரிசு பெற்ற கதைகள் அடுத்த இதழில் வெளியாகும்.
புதிய உலகம்!
– நடுவர்கள் –
‘இளம் எழுத்தாளர் நாவலுக்கு முன் எழுதுவது, முதிய எழுத்தாளர் இரண்டு நாவல்களுக்கு இடையில் எழுதுவது’ என்று சிறுகதையை பற்றி சொல்வார்கள். இந்த போட்டியில் இளம் எழுத்தாளர்களும், முதிய எழுத்தாளர்களும் சரிசமமாக கலந்து கொண்டார்கள் என்பது கதைகளைப் படித்தபோது தெரிந்தது. உலகம் எங்குமிருந்து போட்டிக்கு கதைகள் வந்திருந்தன. எழுதியவர்களுடைய பெயர்கள் நடுவர்களுக்கு தரப்படவில்லை. இவற்றில் 50 சத வீதத்துக்கு மேலான கதைகள் மிகத் தரமானவையாக இருந்து உற்சாகமூட்டின. எழுத்திலே முதிர்ச்சியும், வடிவத்தில் இறுக்கமும், சொல்லவந்த விடயத்தில் வேகமும் இருந்தது. மொழி, நடை, உருவம், கரு என்று ஏறக்குறைய அனைத்து கதைகளும் தரமாகவே இருந்ததால் சிறந்ததை தேர்ந்தெடுப்பதற்கு நடுவர் குழு சில விதிமுறைகளை வகுத்துக்கொண்டது:
1) கருவிலே புதுமை இருக்கவேண்டும்
2) உலகைப் புரிவதில் ஒரு புது வெளிச்சம் தர வேண்டும்
3) ஏதோ விதத்தில் மனசை நெகிழவைக்க வேண்டும்
ஹெமிங்வே சொல்லுவார் சிறுகதையின் முக்கிய அம்சம் அதன் நடுப் பிரச்சினையை எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு வாசகர்களுக்கு சொல்லாமல் தள்ளிப்போடுவது என்று. சில கதைகளில் இந்த அம்சம் நல்லாக அமைந்து கதை முடிந்த பிற்பாடும் நடுவர்களுக்கு மையப் பிரச்சினை என்னவென்று தெரியாமல் மறைக்கப்பட்டிருந்தது. இன்னொரு கதை, நகைச் சுவையாக அமைந்து படிப்பதற்கு சுவாரஸ்யமாக இருந்தது, ஆனால் முடியும்போது ஒரு துணுக்கை வாசித்த நிறைவோடு முடிந்தது; கலையம்சம் கூடிவரவில்லை. இன்னும் சில கதைகள் பிரசாரத்தை தலையிலே காவி கதையை நசித்துவிட்டன. இன்னும் சில சூழல் மாசு அழிவு தரும் போன்ற பெரும் உண்மையை கண்டுபிடித்தன, ஒரு புது வெளிச்சமும் தராமல். சுனாமி பற்றி ஒரு கதை. என்ன சொல்ல வருகிறாரோ அதை மறைக்கவேண்டும் என்பது எழுத்தாளருக்கு தெரியவில்லை.
இனி தேர்வு செய்த கதைகளுக்கு வருவோம்:
முதலாவது: ‘எல்லாம் இழந்த பின்னும்’: ஜேர்மனியில் நடப்பது.இலங்கையில் இருந்து அகதியாக வெளிக்கிட்ட ஒரு பெண் துப்புரவுத் தொழிலாளியின் கதை. ஓலம் இல்லாமல் அந்தப் பெண்ணின் துயரம் சொல்லப்படுகிறது. ஜேர்மன் சீமாட்டியிடம் பார்க்கும் அடிமை வாழ்வும், இலங்கை சுகபோக வாழ்வும் மாறி மாறி காட்சியாகிறது. ஒரு நாள் மேற்கையும் கிழக்கையும் பிரிக்கும் ஜேர்மன் சுவர் உடைகிறது. பிரிந்த உறவுகள் சேர்ந்து விடுதலை கிடைக்கும்போது இவள் மனமும் பறக்கிறது. ‘வெளியே பாரம் தாங்காமல் மேகம் கீழே இறங்கிக் கொண்டிருக்கிறது’ என்று கதை முடிகிறது.
இரண்டாவது: ‘நான், நீங்கள் மற்றும் சதாம்’: இந்தியாவில் நடப்பது. மர்மமான பின்னணியுடன் ஒரு தோட்டக்காரன். அவனுடைய இறந்தகால வாழ்க்கை அவனுக்குள் பெரும் குற்ற உணர்வை ஏற்படுத்துகிறது. கணத்துக்கு கணம் மாறும் அவன் செய்கைகளை உளவியல் ரீதியாக நுட்பமாக இந்தக் கதை படம் பிடித்திருக்கிறது.
மூன்றாவது: ‘தீதும் நன்றும்’: அமெரிக்காவில் நடப்பது. சிறுவன் ஒருவனுடைய அம்மா ஒரு அமெரிக்க வெள்ளைக்காரனுடன் போய்விடுகிறாள். தனக்கு நடக்கும் துன்பம் எல்லாவற்றுக்கும் அவளே காரணம் என்று பையன் நினைக்கிறான். இறுதியில் ஒரு சம்பவம், மனிதர் கையில் எதுவுமே இல்லை என்பதுபோல நடக்கிறது. ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’ என்ற கணியன் பூங்குன்றனின் வார்த்தைகளை நினவூட்டிக்கொண்டு கதை முடிகிறது.
கதைகளைப் படித்தது நிறைவு கொடுக்கிறது. உலகின் மூன்று வெவ்வேறு பகுதிகளில் இருந்து வந்த இந்தக் கதைகள் ஒரு புதிய உலகை வாசகர்களுக்கு திறக்கின்றன.
– சிறுகதை நடுவர்
முதற் பரிசு: எல்லாம் இழந்தபின்னும்…………..
– சாந்தினி வரதராஜன் (ஜேர்மனி) –
அந்த வீட்டிலிருந்து வெளியே வரும்பொழுதுதெல்லாம் இப்படித்தான் அந்த முயலும் சிங்கத்தின் குகையிலிருந்து வெளியே வந்திருக்கும் என்ற நினைப்பு எப்பவும் வரும். வரும் வழியெல்லாம் முப்பது ஈரோவைப்பற்றிய கனவும் அது இருக்கா இருக்கா என்று ஜீன்ஸ் பொக்கற்றை தடவி பார்ப்பதும் வெளியே எடுத்துப்பார்த்து தொலைத்த நாட்கள் நினைவில் வர மனம் எதை எதையோ நினைத்து பெருமூச்சை வெளியே தள்ளியது. இப்¦;பாழுதெல்லாம் வாழ்வின் பிடிப்பு மெல்ல நழுவுவதுபோல் உணர்வு எழுந்து கொண்டே இருக்கிறது. எல்லாமே கொஞ்ச நாட்களில் சலிப்பு தட்டிவிடுகிறது. எப்பவும் வேலையையும் காசையும் அசைபோடும் மனசு எந்த வேலையென்றாலும் என்னைக்கேட்காமலே ஓம் என்று தலையாட்டுகிறது. எல்லா வேலையையும் ஒருநாள் தூக்கி எறிந்துவிட்டு எந்த அழுத்தமும் இல்லாமல் பழையபடி கவிதையை,கதையை அசைபோட்டபடி.
இப்படி பல முறை முடிவுகள் எடுத்திருக்கின்றேன். அப்பொழுதெல்லாம் இல்லாமை பல வழிகளில் மனவெளியில் தன் இருப்பை உணர்த்தி என் உறுதியை பொல பொலவென உடைத்தெறியும். ஆனால் இம்முறை அப்படியல்ல இனி இயலாது என்று கைகளும் கால்களும் கூட மறுக்கத் தொடங்கிவிட்டன. மனமோ வங்கிக்கடனை கணக்கு பார்த்து உடைந்து விழத்தொடங்கியது. என்ன செய்ய ? அம்மா புத்தகம் வாங்க நிறைய காசு வேணும். மகனின் குரல் திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டே இருந்தது. நான் உடைந்து விழும் பொழுதேல்லாம் காற்றோடு அடிபட்டு போகும் சருகைப் போல. வெள்ளைக்காரியும் என்னை அப்படித்தான் நினைத்திருக்கிறாள்
இல்லாவிட்டால் ஒரு சின்ன தவறுக்காக படிகளில் நடக்க முடியாவிட்டாலும் தவண்டு கொண்டு வாயில் துடைக்கும் துணியை கவ்வியபடி பாய்ந்து வந்த தோற்றம் ஏதோ ஒரு பெரிய நாய் என்னை கடித்து துப்புவதற்கு வருவதுபோல். ராகினி வீட்டு ஐ¢ல்லும் அப்படித்தான் வந்தது. அதுக்கு தன் குட்டிகளை நான் தூக்கிவிடுவேனோ என்ற பயம். ஆனால் வெள்ளைக்காரி தான் எஐமானியாகவும் நான் ஏதோ அடிமைமாதிரியும் அப்படித்தான் நினைத்திருக்கிறா. நான் பிறந்து வளர்ந்த என்ர மண்ணிலையும் கூனிக்குறுகி அவர்கள் கேட்கும் பொழுதெல்லாம் கர்ணணோடு ஒட்டிய கவசம் மாதிரி காவித்திரியும் அடையளா அட்டையை காட்டி களைத்து இவைகள் எல்லாம் வேண்டாம் என்றுதானே ஓடிவந்தனான். வந்த இடத்திலும்.
இந்த பொழுதுகளிலெல்லாம் அண்ணா பொகவந்தலாவிலிருந்து வீட்டு வேலைக்கு அனுப்பிய ஒவ்வொரு முகமும் என்னை பார்த்து சிரிப்பதுபோல் இருக்கும். அதிலும் கடைசியாக வந்த குமார். அவன் இப்ப கொழும்பில பெரிய மொத்த வியாபாரி. காலம் எப்படி எல்லாம் சுழன்றுகொண்டு ஓடுகிறது. ஏணிப்படியின் உச்சத்தில் இருந்த வாழ்க்கை என்ன நடக்கிறது என்று சிந்திக்கும் முன் மலைப்பாம்பின் வாய்க்குள் அகபபட்டு சட்டென்று கீழ் இறங்கிய விளையாட்டுப்போல் எல்லாம் நடந்து முடிந்துவிட்டது. இயலாமையும், இல்லாமையும் இணைந்து வேதனை தீயை வளர்த்தபடி இருக்க இவைகளிலிருந்து மீளமுடியாத மனசு பெரும் குரல் எடுத்து அழுகிறது.
இருட்டு எங்கும் இருட்டு. இலைகளை இழந்த மரங்களும், மெளனித்து கிடக்கும் வெளிகளும் வெறும் வெள்ளைச்சுவர்களும். சில சமயம் இந்த வெள்ளைச்சுவர்கள் என்னை நெரிப்பது போல் இருக்கும் பல சமயம் விரல்களை நீட்டியும் மடித்தும் என்னை குற்றவாளி ஆக்கும். இனி இயலாது வெள்ளைக்காரியின் வீட்டு சுவர்களும் கதவுகளும் கூட என்னை இப்படித்தான் அடிக்கடி முறைத்து பார்க்கும். அங்கு வேலை செய்யும் பொழுதெல்லாம் மனம் ஏதோ ஏதோ நினைத்து அழுதாலும். கை கூவர் பிடிக்க, கண் மணிகூட்டை பார்க்க, மனம் பெருக்கல் வாய்பாட்டை பெருக்கி பார்க்கும். இந்த மாதம் அண்ணாவுக்கு காசுஅனுப்பவேணும்.அனுவுக்கும் புத்தகம் வாங்க நிரம்ப காசு தேவை எண்டு சொன்னவர். கிறிஸ்மஸ் காசு ஜம்பது ஈரோ தருவா அதையும் சேர்த்து அனுப்புவம். இப்படி பல கற்பனைகள் முப்பது ஈரோவை சுற்றி சுற்றி ஓடும். கை படிகளை துடைக்கும்: வெள்ளைக்காரி கண்ணாடி முன்னால இருந்து கொண்டு ஒரு கண் என்னிலும் மறு கண் கண்ணாடியிலுமா இருப்பதை பார்த்தால் ஆறுகுள்ளரும் இளவரசியும் கதைதான் ஞாபகத்தில வரும் அதிலையும் இப்படித்தான் சூனியக்காரி இளவரசியை வீடுதுடைக்கவிட்டிட்டு எந்த நேரமும் கண்ணாடிக்கு முன்னால இருந்து கொண்டு கண்ணாடி கண்ணாடி இப்ப சொல்லு நான் அழக இல்லை அவள் அழகா? என்று கேட்டுக்கொண்டே இருப்பா. இவவும் அப்படித்தான் கேட்கிறவோ? நான் எனக்குள் சி¡¢ப்பதை பார்த்தால் போதும் நான் நினைக்கிறன் நீ எங்கோயோ போய்வராய் போல இருக்குது எனக்கு அப்பவும் சிரிப்புவரும். இந்த வெள்ளைக்காரர் எப்ப எப்படி இருப்பினம் என்று சொல்லவே முடியாது. போன கிழமை சிரிச்ச மனுசிதானே எண்டு சிரிச்சா இந்தக் கிழமை பிடரியை சிலுப்பிக் கொண்டு இருக்கும். கறுப்பிக்கு காசு வேணும் அவள் என்ன சொன்னாலும் வருவாள். இவள் அகதிதானே. இவளுக்கு மானம் ரோசம் ஒன்றும் இருக்காது இருக்கவும் கூடாது அப்படித்தான் மனதுக்கள் என்னைப்பற்றிய ஒரு வரைவிலக்கணத்தை வைத்திருப்பா. ஒரு நாள் வேலை செய்யும் பொழுது கேட்டாள். உனக்கு உன்ர நாட்டை பார்க்க ஆசை இல்லையே? ஏன் இல்லை ஒரு நாள் எண்டாலும் நான் பிறந்த வீட்டை பார்க்கவேணும். அப்ப என்னத்துக்கு இங்க வந்தனீ ? மனிதனுடைய உணர்வுகளை புரிந்து கொள்ள முடியாத ஜென்மத்திடம் என் உணர்வை கொட்டியதை நினைத்து வெட்கப்பட்டுபோனேன்.
ஓம் நான் ஏன் எல்லாவற்றையும் உதறிப்போட்டு இங்க வந்தனான்? ஏன் இப்படி ஒரு வேலைக்காரி வாழ்க்கைக்குள் உழன்று கொண்டு இருக்க வேணும். வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு போனால் அங்கேயும் அதே தும்புத்தடியும் மப்பண்ணிற தடியும் எனக்காக காத்துக்கொண்டிருக்கும். எப்படியெல்லாம் என்னை அம்மா வளர்த்தா. நினைவுகள் பெருக பெருக இனி இந்த வீடு இருக்கும் தெருவுக்குள் என் கால்கள் வராது என்ற நினைப்பும் சேர விறு விறுவென கால்கள் நடைபோட தொடங்கும். ஆனால் எங்கேயோ என் முதுகிலயோ, அல்லது புறங்காலிலையோ எங்கேயோ அந்த வீட்டு தும்புத்தடியும் மப்பண்ணிற தடியும் என்னோட ஒட்டிக்கொண்டே வரும்.
இப்படித்தான் எனக்குள் எழும் எல்லா உணர்வுகளும்.நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் பொய்யாகி போகும் பொழுது வாழ்க்கை வெறுத்து போய்விடுகிறது. வருவன் என்று சொல்லிவிட்டுத்தானே வந்தனான். கட்டிப்பிடித்து பின் கைகள் இறுகி, விரல் நுனி தடவி, கண்கள் கலங்கி, ஏங்கி அம்மா நின்ற காட்சி அப்போதும் கால்கள் தன் பாட்டில் நீட்சியான பாதையை நோக்கி நடைபோட்டன. இடைவெளிகள் நீள நீள மனம் பெருங்குரல் எடுத்து அலைபோல் அழுதிருக்கும். அலைகள் அழுவது யாருக்கும் புரியாது. இலைகள் உதிரும் பொழுது மரங்கள் மெளனித்து அழுவது போல்தான்அலைகளும். நடந்து நடந்து பாதைகள் இல்லாத இடமெல்லாம் பாதைகள் வகுத்த பொழுது எத்தனை முகங்கள் நடைபோடத் தொடங்கின. வேர்களின் முகங்களில் காலால் புழுதியை வாரி இறைத்தபடி நடந்தன. புழுதி அப்பிய முகங்களில் வழிந்த கண்ணீரால் புழுதியை கழுவவே முடியவில்லை. இப்பொழுது நான் வேராகி வேர்களில் முளைத்ததெல்லாம் மலர்கள் என முகிழ்த்து நின்ற பொழுது அவை நெருஞ்சி முட்களாக முகம் காட்டி சிரித்தன .அப்போதுதான் நான் முதல் முதலாக உடைந்து போனேன். மறுபடியும் என் வேர்களை தேடினேன் அழுதழுது தேடினேன். அவை அழுது, களைத்து, உக்கி,நெருப்போடு போன சேதி காலம் கடந்து………………………
கரை கடந்து, கடல் கடந்து விலகி வரும் பொழுது அலைகள் உடைந்து சிதறி அழுத பொழுது என் காதுக்கு கிட்டவே இல்லை. மல்லாந்து படுத்து தனக்குதானே துப்புகிறது என்றல்லவா நினைத்திருந்தேன்.யாரும் அறிய முடியாத ஆழத்தில் துயர்கள் நிரம்பி வழியும் பொழுது வெடித்து ஓவென பெரும் இரைச்சல் கொண்டு எழுந்து பாறாங்கற்களில் மோதி மோதி அழுதது.,அழுத அலைகள் கரைகளுக்கு வருவதும் பின் பெரும் துயர் சுமந்து திரும்பியதையும் அது யாருக்கம் சொல்லவே இல்லை. கணவர் என்ற பெரும் சுவர் எல்லாவற்றையும் மறைத்துவிட்டது. எல்லா நினைவுகளுமே குளத்தில் போட்ட கல்லாக அடங்கிக் கிடக்கிறது. அவை மேலெழும் பொழுது கலங்கிப்போகும் குளம்போல்தான் நானும்.
எந்த நினைவையும் என்னால் தூர வீசி எறிய முடியவில்லை.அவை எப்போதும் ஓர் மூலையில் பதுங்கியிருந்து சில சமயம் என்னை பார்த்து சிரிக்கும் பல சமயம் முறைக்கும். அது எலலோருடைய குரலிலும் என்னை கேள்வி கேட்கும். .யாழ்ப்பாணத்திலிருந்து வந்த அக்காவிடம் எதை எதையோ கேட்க மனம் துடித்தது. ஆனால் பாலைமரம் எப்படியிருக்கிறது? என்று மட்டும்தான் கேட்க முடிந்தது. கடந்தகாலங்கள் என்னை பிடித்து வைத்துக்கொண்டிருக்கிறதா? அல்லது நான் அதை பிடித்து வைத்திருக்கின்றேனா? எல்லவாற்றையும் உதறிவிட்டுத்தானே வந்தேன்.
பகலை தொலைத்த நாட்கள் அவை. வெறும் இருட்டுமட்டுமே பரவிக்கிடந்தது. எல்லாவற்றையும் தொலைத்த வெறுமை. மனிதர்களின் புரியாத மனம் குழம்பிப்போய் கிடந்தது
குழம்பிப்போய் கிடக்கும் வானத்தை போல. சில வேளைகளில் மட்டும் வெளிச்சம் பரவும் அதுவும் சில நிமிடங்களில் ஓடி ஒளிந்து கொள்ளும். இரவின் அமைதி தொலைந்து போயிருந்தது. ஏராளமான கனவுகளை தொலைத்து நடுங்கிய இரவில் வீடும,; காற்றும், அந்த ஊரும், சந்தியும் எல்லாவற்றையும் உள்வாங்கி தனக்குள் புதைத்து வைத்துக் கொண்டிருந்தது. யாழ்ப்பாண வீதிகள் அங்கு வாழ்ந்தவர்களின் மனதை பிரதிபலித்துக்கொண்டிருந்த காலம் வேற்று முகங்களினால் பறிக்கப்பட்டுக்கொண்டிருந்தது. எல்லா நிகழ்வும் நிரப்படாத இடைவெளியாய் நீண்டு கொண்டே போனது. காட்டிக் கொடுப்போரின் விரல்களும் எல்லா திசைகளிலும் நீள நீள காணமல் போவோரின் பட்டியலும் நீண்டு கொண்டே போனது. அதே விரல்கள் என் தோழியின் கணவர் முன் நீண்ட பொழுதுதான் எனக்குள் பயம் இன்னும் அதிகமாக படரத் தொடங்கியது. இலைகள் அசைந்தாலும், இரவு கவியத்தொடங்கினாலும், நாய்கள் குரைத்தாலும் எல்லாவற்றுக்குமே பயம். பயம் வாழ்க்கையை ஆதிக்கம் பண்ணத் தொடங்கியது. கற்பனைகளை சுமந்த முகங்களெல்லாம் மரண பயத்தை சுமந்தபடி உலவியதை பார்க்க வாழ்க்கையின் கொடுரம் புரியத்தொடங்கியது. சிரித்தும், கதைத்தும் கழிந்த வாழ்க்கை அடங்கி, ஒடுங்கி, நடுங்கி வாழமுயன்றபோது நாளைய வாழ்வு கேள்விக் குறியானது. கேள்விகள் நிறைந்து நிறைந்து வழியத் தொடங்கியது. அத்தனை முகங்களிலும் துயரமும், பயமும், கேள்வியும் மட்டுமே. போரின் நிஜமுகத்தை எதிர் கொள்ள என்னால் முடியவில்லை என் முகத்தை எங்கேயாவது ஒளிக்க வேண்டும்.
பனிப் புகார் என் அடையாளத்தை மறைக்கத்தொடங்கியது. வீட்டை விட்டு ஓடியகால்கள் பனிகளுக்குள்ளும், ஆற்றிலும் புதைந்து விறைத்தன.புதைந்த கால்களின் அழுகுரல் ஊரில் கேட்டது போலவே. ஆனால் இங்கு ஊர் அசையவே இல்லை.ஏது இயலாது என்று ஓடி வந்தேனோ அது இங்கேயும்……………………. வழமைபோலவே என் கால்கள் புதிய பாதையை நோக்கி நடந்து நடந்து முற்றுப்புள்ளியில் நின்றபோது அடையாளங்களை அழித்தும் ஒழித்தும் முகத்தில் பொய்களை அப்பியபடி இங்கேயும் விஷஜந்துக்கள் பற்களை நீட்டியபடி காத்திருக்கின்றன என்பதை அறியாத அப்பாவியாய்.
அப்போது எல்லாவற்றிக்கும் பெயர் இருந்தது. வீட்டுக்கும், அறைகளுக்கும், எங்களுக்கும். இப்போ வெறும் கற்குவியலும் மணலுமாக இருக்கும் வீட்டுக்கு என்ன பெயர்? இங்கு நாங்கள் இருக்கும் வீட்டுக்கு பெயர் அகதி முகாம். எனக்கும் அகதி பொம்பிளை விறாந்தை, கோல், குசினி, சாப்பாட்டறை, சாமிஅறை, படிக்கிறஅறை, படுக்கைஅறை எல்லாமே ஒரு அறை. அம்மாவுக்கு கடிதம் எழுதுவம் என்று நினைத்தவுடன் மனம் வரிகளை எழுதி எழுதி அழித்துக்கொண்டு இருக்கும். நான் நலம் அதுபோல் நமசிவாய பள்ளிக்கூடத்தில சிவஞான ரீச்சர் கடிதம் எழுதுவது எப்படி? எண்டு எப்ப காட்டித்தந்தாவோ அதில இருந்து இப்படித்தான் எழுதிறன். வெளியில போனாலும் வெள்ளைக்காரர் எப்பிடி சுகமா? ஏன்று கேட்டால் போதும் எங்கிருந்துதான் இந்த பொய் சிரிப்பு வந்து ஒட்டிக்கொள்கிறதோ தெரியவில்லை. எல்லாமே பொய்யாகி நான் உடைநது அழும்பொழுது வழியும் கண்ணீர் கூட பனியில் இறுகி நிற்கும்.
அழுவதற்கும் நேரம் இல்லாத வாழ்க்கை. எவர் கண்களுக்கும் புலப்படாத விலங்கு கால்களில் பூட்டப்பட்டுக்கிடந்தது.ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் நடந்து நடந்து அலுக்கும் மனதை இசைக்கும் கருவியாக பழைய நினைவுகள். நினைவுகள் தழும்பி தழும்பி பல சமயம் அதுவும் அழும். அம்மா, வீடு, ஜிம்மி என்னை அழவைக்க வேறு எதுவும் தேவையேயில்லை. என்மேல் யார்கை பட்டாலும் பாய்ந்து கடிக்கும் ஜிம்மி. அம்மா சொல்லுவா நீ ஜிம்மிவேணுமென்டு ஜில்லிட்ட கடி வாங்கினனிதானே அதனாலதான் உனக்கு ஆர் அடிச்சாலும் அவையளை கடிக்குது. எங்கட றோட்டில உள்ள எல்லாரும் சொல்லுவினம்.
இது நாய் இல்லை கடவுள்.
ஓம் நானும் அப்பிடித்தான் நினைக்கிறன் எண்டு அம்மாவும் சொல்லுவா. அது எப்பவும் இப்பிடித்தான் சா¢யா நாலுமணிக்கு அம்மாவோட சேர்ந்து கேற்றில காவல் நிற்க்கும். சந்தியில என்ரை வெள்ளை சாறி தொ¢ஞ்சா போதும் பாய்ந்து கொண்டுவரும் தண்ணி எடுக்க றோட்டில நிற்க்கிற எல்லாரும் சொல்லுவினம் சுகந்தி பள்ளிக்கூடத்தால வறாள்.
என்ர அம்மா மாதிரியே ஜிம்மியும் எப்பவும் என்னோடையே இருக்கும். எல்லாரையும் கடிக்கிற ஜிம்மி ஏன் கணக்கு மாஸ்ரை கடிக்கிதில்ல? விடியாத இருட்டில இருட்டு மாதிரியே இருக்கிற அவரின்ட நிழல் விறாந்தை யன்னல் கண்ணாடியால தெரியும். பிறகு ராகினி, கமலா வருவினம் எனக்கும் ராகினிக்கும் மடக்கை கணக்கு படிப்பிக்கத்தொடங்குவார்.மார்கழி மாதம் வந்தா போதும் பண்ணைப் பாலச்சத்தம், நல்லூர்மணி, பெருமாள்கோவில் சுப்பிரபாதம், எல்லாம் யாழ்தேவிகூட காதுக்க கூவும் அதில நாங்கள் நித்திரை தூங்கிறதை பாங்கொலி காட்டிக்கொடுக்கும். இறுக்கி குட்டுவார். ஆனால் ஜிம்மி பார்த்துக்கொண்டு சும்மா இருக்கும். சோதனை வந்தாபோதும் நானும் அக்காவும் சரஸ்வதி கலண்டருக்கு சண்டை போடத் தொடங்கிவிடுவம். பிறகு அம்மா பூபாலசிங்கம் கடையில இரண்டு மெய்கண்டான் கலண்டர் வாங்குவா. நான் கலண்டரில எனக்கு மட்டும் விளங்கிறமாதிரி ஏதாவது குறிப்பு குறிச்சுவைச்சிட்டு அதில கட்டியிருக்கிற சணலில பிடிச்சு ஆட்டிக்கொண்டு போவன். அக்கா சொல்லுவா எனக்கென்ன கடவுள் உன்னை கோபிப்பார். அக்கா எப்பவும் இப்பிடித்தான். நல்லா பொய் சொல்லிறன் எண்டு அம்மாட்டை கோள்மூட்டுவா. அம்மாவும் நல்லுர்ர் உதய பூஜைக்குபோற நேரமெல்லாம் திருஞர்ன சம்பந்தர் ஆதினத்துக்கு கூட்டிக்கொண்டுபோய் மணி அய்யரிடம் சொல்லுவா. சுவாமி இவள் வாய்திறந்தா பொய் சொல்லிக்கொண்டே இருக்கிறாள். அவரும் ஆதினத்தில பெரிய கரும்பலகையில ஒட்டியிருக்கிற படத்தை காட்டுவார். இங்க பார் பொய் சொன்னா என்ன தண்டனை கிடைக்கும் கண்டியோ? அதில அம்புலிமாமாவில வருகிறவை மாதிரி கொம்புவைச்சு பெரிய மீசைவைச்ச அரக்கர்கள் நகங்களை பிடுங்கிக் கொண்டு இருப்பினம். மற்றவை கொதிக்கிற எண்ணைக்குள்ள கைவைச்சு அமுக்குவினம். எனக்கு பயம்வந்திடும். அக்கா என்னை பார்த்து சிரிப்பா. பிறகு சுடச்சுட கற்கண்டு போட்ட பால்தீர்த்தம் தருவார். இரண்டு தரம் வாங்கி குடிச்சதுக்கு அம்மாட்டை நுள்ளுவாங்குவன். அக்கா அம்மா சொல்லிற மாதி¡¢யெல்லாம் கும்பிடுவா. ஆனால் நான் நாங்கள் வீட்டை போறதுக்கிடையில காப்புக்கடைக்காறன் பலுர்ன் கடைக்காறன், இனிப்பு விற்க்கிற பொரிகடலை வண்டில்காரன் எல்லாரும் எழும்பி கடையை திறந்திட வேணும் கடவுளே எண்டு முருகனிட்டை கேட்டுககொண்டே இருப்பன்.
அக்காவின்ர பள்ளிக்கூட சூட்கேஸ் உள்மூடியில சரஸ்வதி, பிள்ளையார் எல்லாரையும் ஒட்டிவைச்சிட்டு படிக்க முதல் கும்பிட்டிட்டுதான் படிக்கத் தொடங்குவா. சமயபாடத்தில கேள்வி கேட்டுக்கொண்டே இருப்பா. நா¢யை பா¢ ஆக்கினது ஆரெண்ட சொல்லு, திருமறைக்கதவை திறக்க பாடினது யார்? மூடப்பாடினது யார்? நீ முதல்ல சமயபுத்தகத்தை மூடு இவையளுக்கு வேற வேலை இல்லாமல் அற்புதங்கள் செய்தவை இவையாலதான் சமயபாடத்தில கேள்வி கூடிக்கொண்டே போகுது.அதுக்கும் அம்மாட்டை கோள்மூட்டி அடிவாங்கி தருவா. சோதனை முடிந்த பிறகு இரண்டு விரலில ஒண்டை தொடு என்டு நெடுகலும் கேப்பா. ரஞ்சன,; ராஜன், ரவி, பபா எல்லாரும் பிறேமக்கா வீட்டுக்கு பின்னால இருக்கிற சோனக வழவுக்க போய் வெடிக்கிற காய்க்கு எச்சில துப்பிப்போட்டு கண்ணை மூடிக்கொண்டு வெய்யிலில பிடிப்பம். அது வெடிச்சா பாஸ் அக்கான்ர காய் சத்தத்தோட வெடிக்கும். பிறகு பள்ளிக்கூடத்தால வரேக்க இந்த கல்லை வீடுமட்டும் காலால தள்ளிக்கொண்டு போன நான் பாஸ்பண்ணுவன் எண்டு சொல்லி தள்ளிக்கொண்டே வருவா அக்காவுக்கு எல்லாம் சா¢யாத்தான் இருக்கும். ஆனா சோதனை மறுமொழி மட்டும் மாறிவரும். பிறகு கொஞ்ச நாளைக்கு எனக்கு பிறேமக்கா வீட்டுக்கு போய் எங்கட வீட்டில இல்லாத திருவாத்தி பூ பிய்க்கிற வேலை இருக்காது. எனக்கு ஒரே யோசனையா இருக்கும் எல்லாம் சா¢யாத்தானே வந்தது. பிறகேன் அக்கா பாஸ்பண்ணேல்ல?
எந்தக்கேள்விக்கும் எனக்கு சா¢யா விடை கிடைப்பதே இல்லை. எந்த வேலை தேடிப்போனாலும் முன் அனுபம் இருக்கா…….?
நீங்க வேலை தந்தால்தானே முன் அனுபவம் வரும். வெள்ளையனின்ர முகம் மெல்ல சிவக்கும்
இந்த வேலைக்கு படிச்சனியோ?
உங்கட அரசாங்கம் என்னை மொழியே படிக்க விடேல்லை.
ஆனா உனக்கு வாய் பெரிசா இருக்கு.
எல்லாம் உங்கட ஆட்க்களோட பழகி பிடிச்சது
உனக்கு சரியான வேலை ஒன்று இருக்குது. காலையில கடை திறக்க முதல்வந்து கூட்டி துடைச்சிட்டு போ. இப்ப எனக்கு காது எரியும் ஏன் அதுக்கு முன் அனுபவம் வேண்டாமோ? என்ர கோபத்தை காதவில மட்டும்தான் காட்ட முடிந்தது. பகல் வருவதும் போவதுமாக இருந்தது. ஆனால் இரவுமட்டும் நிரந்தரமாக தங்கியிருந்தது. கடலையும் காற்றையும் தொலைத்து உயர்ந்த கட்டிடங்களுக்கிடையில் சிறு குப்பையாக வாழும் வாழ்க்கை சலிப்பும் வெறுப்பும் கலந்த கலவையாக. தொலைகாட்சி தன்பாட்டில் ஓடிக்கொண்டிருந்தது. அங்கேயும் வெள்ளைக்கா¡¢ கதிரையில இருக்க அமொ¢க்க கறுப்பு இன மனுசி மண்டியிட்டுவீட்டை துடைத்தக்கொண்டிருந்தாள். எ¡¢ச்சலுடன் சனலை மாற்றினேன். ஓட்டப்போட்டி வெள்ளையர்களுடன் கறுத்தவர்களும் விடதே விடதே என மனம் பதைபதைத்துக் கொண்டிருந்தது. படாசாலையால் வந்து பிள்ளைகள் கேட்கும் கேள்விகளுக்கு சில வேளைகளில் என்னிடம் பதிலே இருக்காது. நாங்கள் ஏன் அம்மா கறுப்பா பிறந்தனாங்கள்? இந்த சோப்போட்டு குளிச்சா வெள்ளையாவருவமோ? லூக்காஸ் இதுபோட்டுத்தான் குளிக்கிறவனாம். அதுதான் அவன் வெள்ளையா இருக்கிறானோ?. அம்மா ஏன் சாத்தானையும் கள்ளனையும் கறுப்பா காட்டினம்? பள்ளிக்கூடத்தில எல்லாரும் படம் கீறேக்க என்னை பார்க்கினம். எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்த பெரிய மகன். மை பமிலியை பற்றி எழுதவேணும் என்னுடைய அம்மா ஒரு புட்ஸ் பிறா (துடைக்கிறமனுசி) எண்டே எழுதிறது. மற்ற பிள்ளையள் எல்லாம் தங்கட அம்மா லேரா (ஆசிரியர்), பாங்கில புக்கள்ரா¢ன்(கணக்காளர்), எண்டு எழுதிக்கொண்டு வருவினம் எங்கட அம்மாவும் ஜ ஏ பி எல்லாம் படிச்சவ எண்டுதானே அப்பா சொன்னவர். பிறகேன் சுமிற்சிக் (ஊத்தை) வேலையெல்லாம் செய்யிறா? எங்களோட படிக்கிறவை ஆராவது கண்டிட்டா எங்களுக்கு வெக்கமா இருக்கு அம்மா. ஓம் என்கிறமாதிரி மற்றப்பிள்ளைகளும் என்ர முகத்தை பார்ப்பினம். பிள்ளைகளின் ஆதங்கங்கம் ஒவ்வொன்றாய் எதிரொலித்துக்கொண்டிருக்க. முள்ளந்தண்டில் குளிர் ஊசியை ஏற்றியபடி இருந்தது. கால்கள் சிங்கத்தின் குகையை நோக்கி தன்பாட்டில் நடைபோட்டது. காலம் என்னோடு வர மறுக்கின்றது. நானும் அதுவும் எப்போதும் விலகியபடி.
பள்ளிக்கூட யூனிபோமை கஞ்சிபோட்டு அலம்பி அயன்பண்ணி கசங்கமா கை முட்டாமல் றோட்டுக்கு வந்தா தேவிகாவின்ர அம்மா குப்பை லொறிக்குள்ள குப்பையை அள்ளிபோடும் பொழுது எழும் புழதியில் கோபம் வரும். என்னுடைய கோபம் தேவிகாவை அழவைக்கும். மரங்களும் வெள்ளைக்காரி மாதிரியே. சருகுகளை அள்ளிபோட்டிட்டு முதுகைதடவியபடி திரும்பி பார்த்த அடங்கா பிடரிமாதிரி தலையை உலுப்பி திரும்பவும் கொட்டிப்போட்டு என்னை பார்க்கும்.. அள்ளின சருகுகளை குப்பை வாளிக்குள் கொட்டும் பொழுது பாடசாலைக்கு போகும் ஒவ்வொரு சிறுவர்களின் பார்வையிலும் தேவிகா தொ¢வாள். கொட்டடி பள்ளிக்கூடத்தில் மாமரத்துக்கு கீழே வட்டமாக இருந்து கொண்டு முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்று அர்த்தமே புரியாது கத்தி கத்தி பாடமாக்கினதன் அர்த்தம் இப்பொழுதுதான்……………. ரொயிலற்றை கழுவும் பொழுது தண்ணீரைவிட கண்ணீரால் கழுவுவது அதிகமாக இருக்கும். வாளியின் கம்பிச்சத்தம் எதையெல்லாமோ நினைவுபடுத்தும். கோடியால் வந்து போகும் ஊத்தை துரை வந்திட்டான் என்று அம்மாவுக்கு அடையாளம் காட்டுவது இந்த வாளியின் கம்பிச்சத்தம்தான். ஒரு நாள் வாளியை வாங்கும் பொழுது ஊத்தை துரையின் விரல் என் கைமீது பட்டுவிட்டது என்பதற்காக இழுத்துவைத்து முழுகவார்த்த அம்மா. இப்போ எதைவைத்து என்னை முழுகவார்ப்பா? பொய்யாகி போன வாழ்க்கையில் இனி சொல்வதற்கு எதுவும் இல்லை கேட்பதற்கும் ஆரும் இல்லை.
தொலைகாட்சியில் பிரிந்த ஜேர்மனி ஒன்றான நாளைப்பற்றிய விமர்சனம் ஓடிக்கொண்டிருந்தது. வெள்ளைக்காரி ஒரு கையில் பாண்துண்டும் மறுகையில் கோப்பியுமாக மிக ஆர்வமாக பார்த்துக்கொண்டிருந்தா. நானும் ஒரு கையில் துடைக்கிற துணியும் மறுகையில் தும்புத்தடியுமாக ஓடிக்கொண்டிருந்தேன். ஒரு நொடியில் மதில் கீழே சரிந்து கொண்டிருந்தது. பலர் அதன் துண்டுகளை இடிபட்டு எடுத்துக்கொண்டிருந்தார்கள். இரண்டு பக்கமாக உறவுகளை பிரித்து வைத்திருந்த மதிலின் சரிவை வானங்கள் எழுந்து வெடித்து மகிழ்வை தெரிவித்துக்கொண்டிருக்க பிரிந்த உறவுகள் கட்டிப்பிடித்து ஆனந்தக் கண்ணீர் வடிக்க, எனக்கும் அழுகைவந்தது. இப்படித்தான் ஏ 9 பாதை திறக்கும் பொழுது இருந்தாக அண்ணா எழுதியிருந்தார். இதை மூடும் பொழுது எத்தனை உயிர்களின் இரத்தம் இந்த மண்ணில் சிந்தியிருக்கும். எத்தனை உறவுகள் பிரிக்கப்பட்டிருக்கும். எத்தனையோ நாட்களாக மெழுகுதிரியை ஏற்றிக்கொண்டு ஒரு ஓரத்தில் நின்று வயது முதிர்ந்த அன்னையர்கள் தங்கள் குழந்தைகளின் பெயர்களை சொல்லிச் சொல்லி அழைத்தார்களாம். அவர்களின் ஒப்பாரிகளை ஏக்கங்களை எல்லாவற்றையும் உள்வாங்கியும் இரங்காத சுவர் இப்போ மண்ணில் சாய்ந்து கிடந்தது. அந்தகாட்சியும,; பிள்ளைகளை இறுதிக்காலம் வரையும் காணது ஏக்கத்துடன் இறந்த அத்தனை அம்மாவைபற்றிய நினைவும் என்னை ஆக்கிரமித்துக்கொண்டிருக்க என்கையிலிருந்த பூனையின் கோப்பை என்னை அறியாமலே விழுந்து சிதறியது. ஓரு கணம் நடுங்கிப்போனேன். வெள்ளைக்கா¡¢யின் உள்ளிருந்து பிடா¢யை சிலுப்பிக்கொண்டு சிங்கம் எழும்பியது. என் உயிர் சிங்கத்தின் கோரப்பற்களுக்குள் அகபபட்டு துடிக்கும் காட்சி என் கண்முன்னே வி¡¢ந்தது. சிங்கத்தின் கண்கள் என் அச்சத்தையும், துயரையும் உள்வாங்கியபடி நெருப்பை கக்க தொடங்கியது. என்னுள் இருந்த இரத்தம் வேர்வையாக கொட்டியது. உடல் அனலின் பிடியில் சிக்கியது. இம்முறை அகதி வேலைக்காரியின் கையிலிருந்த தும்புத்தடியும், ஊத்தை துணியும் அதற்கான இடத்தில்போய் சுழன்று கொண்டு விழுந்தது. வெளியே பாரம் தாங்காமல் மேகம் கீழ்இறங்கிக்கொண்டிருந்தது.
இரண்டாம் பரிசு: நான் நீங்கள் மற்றும் சதாம்
-ஆதவன் தீட்சண்யா-
விழிப்படலத்தின்மீது கருமுழிபோல் சுழன்று கண்மூடவிடாது உறுத்திக்கிடந்த பூமியுருண்டையை தூக்கியெறிந்த மாயத்தில் உறக்கமென்ற பேரானந்த அமைதி தழுவிக்கொண்டது. தான் கண்டுபிடித்த கடிகாரத்திடம் இரவையும் பகலையும் ஒப்புக்கொடுத்துவிட்டு அந்த முள்ளின் நொடிப்பில் வாழப் பழகிவிட்ட நடப்புலக மனிதனில்லை நீ… தூங்கு மகனே… தூங்கு.. என்றபடி தனது றெக்கையின் பொன்னிற இறகுகளால் வருடியபடியே கடலுக்கும் வானுக்கும் ஒய்யாரமாய் தாலாட்டினாள் தேவதையொருத்தி. செகன்ட்ஷிப்டின் அலுப்பை தூங்கியே போக்கிக்கொள்ள வேண்டியதை அறிந்திராத அந்த கடிகாரஎந்திரம் பனிரெண்டு அடித்து யாருக்கும் பிடிபடாத காலம் எனக்கும் நழுவிப்போயிருந்ததை உணர்த்தி நகர்ந்தது. தாய் வயிற்றிலிருந்து பிரியும் துக்கத்தோடு எழுந்து கதவைத் திறந்தால் தாரக்நாத் நிற்கிறான்.
மாதமிரண்டு ஆகியிருந்தது நாங்கள் சந்தித்து. மெலிந்திருந்தான் முன்பிலும். சோர்வின் பிடியில் வாதையுறும் கண்களில் பீளையாய் தங்கியிருந்தது தூக்கத்தின் ரேகை . பதுங்கிடம் கிடைத்ததும் ஒளிந்து கொள்ளும் நிம்மதியின் பாவனை துளிர்க்கிறது இப்போது முகத்தில். கெண்டைச்சதை திரளும் துடியான நடை ஓடிப்போயிருந்தது. கொட்டிவிட்ட நீரைப்போல் ஓசையற்று உள்நுழைந்தான். எப்போதும் உட்கார தேர்ந்தெடுக்கும் மோடாவை தவிர்த்து சுவற்றில் சாய்ந்து கால்களை நீட்டி தரையிலேயே உட்கார்ந்துகொண்டான். உபசரிக்குமளவு அன்னியனில்லை அவன். நானெதுவும் சொல்லவில்லை.
தாடி இப்போது நீண்டு வளர்ந்திருந்தது கொசகொசத்து. கோயிலுக்கா என்றேன் சைகையில். அங்கே என்னயிருக்கு போக என்றான். கோயிலே கதி என்றிருந்தவன் இப்படி தீவிர சார்வாகம் பேசுகிறானே…? சிரித்துக்கொண்டேன். சிரிப்பின் உட்பொருள் அவனுக்கா புரியாது? பொருட்படுத்தாதிருப்பதாய் காட்டிக்கொள்வதன் மூலம் தனது சமநிலை குலையவில்லை என்று தெரிவிப்பனாக தாடியை மெல்ல வருடிக்கொண்டான்.
குளித்து தயாராகி வருவதற்குள் இரண்டு சிகரெட்டுகளை முடித்து மூன்றாவதை பற்றவைத்திருந்தான். நெளிந்தலையும் புகையூடே எதையோ தேடுபவனாக கவனங்குவிந்திருந்தது. பூப்போல சாம்பல் துளிர்ந்து கிடக்கிறது. அமைதியில் கரையவிட்டவனைப் போன்றிருந்தவனின் தோள்தட்டி உசுப்பினேன். சலனமற்ற பார்வையில் எந்த செய்தியுமற்று எழுந்துகொண்டான். அந்த கரிமண்டி மிஷினில் அரைபட இத்தனைநேர அலங்காரமா உனக்கென்னும் அவனது வழக்கமான கொச்சைத்தமிழ் கிண்டலில்லை இன்று. பூட்டிக்கொண்டு சாப்பிடக் கிளம்பினோம்.
நான் மட்டுமே சாப்பிட வேண்டியதாயிருந்தது. காபியோடு நிறுத்திக்கொண்டான் அவன். இதுபோன்ற ஓட்டல்கள் தேர்வுடையதாயில்லை எப்போதும் அவனுக்கு. கை கழுவுமிடத்திலிருக்கும் ஒடுங்கிய ஈயத்தம்ளரிலிருந்து எதுவுமே அவனுக்கு ஒம்பவில்லை. ஒரு இடத்தில் சாப்பிடவும் மறுக்கவும் அனந்தமான காரணங்களை அடுக்கமுடியுமா ஒருவனாலென்று ஆச்சர்யம் கொள்வேன். சுத்தமில்லாத இடத்தில் ருசியுமிருக்காது என்று தீவிரமாக நம்பினான். எதுவொன்றின் சுத்தமும் ருசியும் அதற்குள்ளேயே இருக்கும். அதை உன் மனசிலிருக்கும் சுத்தத்திலும் ருசியிலும் கலக்காதே என்பதை ஏற்பதில்லை அவன். கழுத்துக்கு கீழே போனால் நரகல், அதற்கெதற்கு இத்தனை ஆர்ப்பாட்டம்… பசியின் காந்தலாற்ற அப்போதைக்கு எதையாவது கொட்டிக்கொள்வதைத் தாண்டி உணவுக்கொள்கை ஏதுமில்லை எனக்கு. நடக்கமாட்டாதவன் சித்தப்பன்வீட்டில் பெண்ணெடுத்தக் கதையடா உன்னுடையது என்று பரிகாசம் செய்வான். இருக்கட்டுமே, இந்த சித்தப்பன் பெரியப்பன் அத்தை சித்தி உறவெல்லாம் ஆதியிலேயே மனுசனோடு இருந்ததில்லை என்பேன். தலையிலடித்துக் கொள்வான்.
என் வசிப்பிடமும் அவனுக்கு அசூயையால் நிரம்பியதே. காத்து கிடையாது. வெளிச்சமில்லை. பாச்சை மிலுமிலுக்கும் பொந்தென்று முகஞ்சுளிப்பான். வந்தாலே இருப்பின்றி தவிப்பான். சுவற்றில் காய்ந்து கிடக்கும் மூட்டைப்பூச்சி ரத்தம் இப்போதும் ஈரத்தோடு பொங்குவதான பதற்றம் கொள்வான். கிளப்பிக்கொண்டு வெளியில் போவதிலேயே குறியிருக்கும். ஏரிக்கரையிலோ ரயில்வே ஸ்டேசன் மரத்தடியிலோ வந்து உட்கார்ந்த பின்தான் சற்றே இயல்பு திரும்புவான். அம்பது நூறு அதிகமானாலும் அக்கம்பக்கம் படித்த நாகரீகமானவர்களுக்கு மத்தியில் நீ குடியிருக்கவேண்டும் என்பான் அடிக்கடி. நீலப்படம் எடுத்த டாக்டர் பிரகாஷ் கைநாட்டா? நாட்டையே திவாலாக்கின ஹர்ஷத் மேத்தாவும் டெல்ஜியும் படிக்காதவங்களா? லவ்வரைக் கொன்னு தந்தூரியடுப்புல எரிச்ச சுசீல் சர்மாவும் ஐம்பத்திநாலு பேரை ரயிலில் எரிச்சவங்களும் பதினாலுபேரை பெஸ்ட் பேக்கரியில உயிரோடு கொளுத்தினவங்களும் படிப்பறிவில்லாத பாமரர்களா? என்று எப்போதாவது நானும் எகிறுவதுண்டு. நாகரீகமானவங்கன்னு நான் சொன்னதை வசதியா மறந்திட்டு நீ பேசறே என்று வாதாடுவான். அப்படியானால் படிப்புக்கும் நாகரீகத்துக்கும் சம்பந்தமில்லேன்னு ஒத்துக்கோ என்பேன். வாதம் நீண்டு மனஸ்தாபமாகிவிடுமோ என்கிற எச்சரிக்கை இருவருக்குமே இருந்தது.
பத்துநிமிட சைக்கிள் மிதிப்பில் கம்பனிக்குப் போய்வர ஏதுவான தூரத்தில் இவ்வளவு குறைவான வாடகையில் ஓரிடம் கிடைப்பதே பெரும்பாடு. லாட்ஜ் போலுமில்லாமல் வீட்டுக்கான லட்சணங்களுமற்று ஒரு பெரிய ஹாலை குறுக்குச் சுவரெழுப்பி தடுத்ததுபோலிருந்ததில் ஆறுகுடும்பங்கள். மூன்று கழிப்பறைகளும் இரண்டு குளிப்பறைகளும் பொதுவிலிருந்தன. என் ரூம் தான் கடைசியில். அண்டையில் வாழ்பவர்கள் சுத்தபத்தமாக இல்லை என்பதே அவனது அதிருப்திக்கும் அசூயைக்கும் காரணம் என்பதை நானறிவேன். ஆனால், இயல்பிலேயே சுத்தபத்தமாகவும் இணக்கமாகவும் வாழ்வதன்வழியாக அவனது அபிப்ராயங்களை பொய்யாக்கிக் கொண்டிருந்தனர் எனது அண்டைவீட்டார்கள் என்பதிருக்கட்டும் ஒருபுறம். அவர்களென்ன ஆபீஸ்வேலைக்கா போய்வருகிறார்கள், மினுக்கும் தளுக்கும் குறையாதிருக்க…? சைக்கிள்ஷாப், லேத் பட்டறை, லாடமடிப்பது, குடைரிப்பேர், தோல்வியாபாரம், கறியறுப்பது…. என்று அழுக்கின் நியமத்தில் புழங்கியாக வேண்டியவர்களிடம் இன்னதுதான் சுத்தமென்று இவனாக எதிர்பார்ப்பது எத்தகைய அராஜகம்….? அதுவுமில்லாமல் சுத்தமென்றால் என்னவென்று வரையறுத்தாகிவிட்டதா…? யார் பார்வையில் எது சுத்தம்…? காலகாலமாய் நடந்துகொண்டிருக்கும் ஒரு விவாதத்தின் மீது உடனடியாய் தீர்ப்பெழுதும் அதிகாரம் யாருக்கிருக்கிறது…? எப்போதோ ஒன்றின்மேல் எதற்காகவோ உருவான கருத்தை எல்லாக்காலத்திற்கும் நீட்டிப்பதாயிருந்தது அவனது பிடிவாதம்.
அவனிருப்பது மத்திகிரி பிரிவு ரோட்டில். இங்கிருந்து ஆறு கிலோமீட்டர் தள்ளி. அங்கும் ஊருக்குள் இல்லை. வெளியொதுங்கி ஜனசஞ்சாரமற்ற காடு அது. பகிரங்கமற்ற வழிபலதிலும் கொள்ளை தீட்டிய பணத்தில் பெங்களூரிலிருக்கும் வடக்கத்தியான் ஒருவன் இந்தக் காட்டுக்குள் உருவாக்கியிருக்கும் பண்ணைவீட்டின் மேனேஜர், கேர்டேக்கர், பலநேரங்களில் வாட்ச்மேன் என்று சகல பதவிகளையும் ஒருசேர வகிக்கும் அந்தஸ்து ரேகையோடியது தாரக்நாத்தின் ஜாதகத்தில். வருடத்தில் ஓரிரு நாட்கள் தவிர எஞ்சிய காலத்தில் முதலாளியெனும் மகுடத்தையும் அவனே சுமக்கவேண்டியிருந்தது.
பெருஞ்சாலையின் சந்தடிகளில் அலுப்புறும்போது முதலாளி மனைவியுடனோ மனைவிபோல் யாருடனோ வந்து ஓரிருநாட்கள் தங்கிப்போவதுண்டு. முதலாளிச்சியும் வருவதுண்டு அதேரீதியில். அப்போது மட்டுமே வேலை முறியும் இவனுக்கு. மற்றநாட்களில் அவசியமேயற்ற டெலிபோனுக்கு பில் கட்டுவது, கழுதையுயர நாய்க்கு மாட்டெலும்பும் கறியும் வாங்கிவந்து தின்னடிப்பது, மிஞ்சியப்போதுகளில் அந்த செடியில் ஏன் பதினோரு பூ…இந்த மரத்தில் எப்படி நாற்பத்திரண்டு பழம் என்பதான யோசனைகளில் ஆழ்ந்துவிடுவான். காய்கனி வர்க்கங்கள் மிகும் காலங்களில் பக்குவம் பண்ணி பெங்களூரில் முதலாளி வீட்டில் சேர்ப்பது, அப்படியே பருத்த ஸ்தனங்களின் மேல்வெட்டு தெரிய மூடாக்கில்லாத சுடிதாரில் வெறிக்க வெறிக்க வளையவரும் முதலாளிச்சியை பார்த்துவிட்டு வந்து பொம்பளையா அவளென்று திட்டிக்கொண்டிருப்பதாக அவனது நித்யகர்மங்கள் தீர்மானமாகியிருந்தன. இப்படியான வேலைகளில் சலிப்புத் தட்டுமானால் ஓட்டை மொபட்டை துடைத்தெடுத்துக் கொண்டு என்னை பார்க்கவருவான். அல்லது இங்கு வந்த மூன்றாம் மாதத்திலேயே வாங்கிய முப்பதுநாளில் தமிழ் கற்பிக்கும் புத்தகத்தை புதிதெனக் கருதி படிப்பான்.
ஆனாலும் எட்டுமணிநேர வேலை, நாலுமணிநேர கட்டாய ஓ.டி என்று என்னைப்போல் அவதியுற வேண்டியதில்லை. இன்னவேலையை இப்போதே செய்தாக வேண்டுமென்று மிரட்டவும் அதிகாரம் கொள்ளவும் யாருமில்லை. வாங்கும் சம்பளத்தில் நயாபைசாவையும் செலவழிக்க வேண்டிய தேவையேதுமில்லை. ஆனால் காலியாகிவிடும். வாச்சாத்தி பெண்களின் வழக்கு செலவிற்கு, பம்பாய் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, குஜராத் கலவரங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, ஹரியானாவில் அடித்துக்கொல்லப்பட்ட ஐந்து தலித் குடும்பங்களுக்கு, அதற்கு முன்பு தாமிரபரணிக்குள் மூழ்கடித்து கொல்லப்பட்ட மாஞ்சோலை தோட்டத்தொழிலாளர் குடும்பங்களுக்கு, இலங்கை அகதிகள் முகாமின் குழந்தைகளுக்கு என்று சேமிப்பை செலவழித்துக் கொண்டிருக்கிறான். இப்படியான அவனது உதவிகள் அநேகமாய் என்னைத்தவிர பிறத்தியார் யாருக்கும் தெரிந்தவிடக்கூடாது என்பதில் வெகுகவனமாய் இருந்தான். படிப்பதற்கோ மருத்துவ சிகிச்சைக்கோ நிதியுதவி கோரும் எத்தனையோ வேண்டுகோள்களை பத்திரிகைகளில் தினசரி பார்க்க நேர்ந்தாலும் அதை பொருட்படுத்தமாட்டான். அவர்களுக்கு உதவிட வெறும் தயாளகுணமோ அல்லது குறைந்தபட்சம் டை கட்டிக்கொண்டு போட்டோ எடுத்துக் கொள்ளுமளவுக்காவது விளம்பரப் பிரியமோ உள்ள ஏராளமான தனிநபர்கள், அமைப்புகள் முன்வரக்கூடும். ஆனால் கலவரங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கு முன்னிபந்தனையாக ஒருவன் தன் சாதியை மதத்தை மொழியை இனத்தைமீறுகிற முடிந்தால் கைகழுவுகிற அரசியல் முடிவை மேற்கொள்ள வேண்டியுள்ளது. மட்டுமல்லாமல் கலவரங்களுக்கு காரணமான அதிகாரத்தை எதிர்க்கிற நடவடிக்கையின் ஒருபகுதியாகவுமே இப்படியான நிதியுதவியை கருதுகிறான்.
சுத்தமான காற்று… மாசுபடாத தண்ணீர்… இரைச்சலற்று அமைதியில் திளைக்கும் அந்த வீட்டிற்குள் வாழ்கிறோம் என்ற நினைப்பே போதுமானது ஒருவன் சந்தோசம் கொள்ள. எத்தனை இருந்துமென்ன, தனிமை பேரெதிரியாகி அவனை வாட்டியது. முளையடித்த மாடுபோல் இந்த அநாதிக்காட்டுக்குள் உளைவது எத்துணை வாதையானது என்பதை நீ அறிய நேரவில்லை என்பான்.
அவன் சொல்வதைப்போல் அது அநாதிவெளி தான். நூறு ஏக்கருக்கு மேலான விஸ்தீரணத்தில் காட்டுமரங்களின் முரட்டுவாசத்தோடு மலையடிவாரத்தில் பரவிக்கிடந்தது பண்ணை. மையத்தில் வெளிநாட்டு மோஸ்தரில் அரண்மனைப் பாங்கிலானது வீடு. ஆள்மயக்கும் நீச்சல்குளமும் உண்டு. கிழமேலாய் பிரியும் பாதைகளின் மருங்கிரண்டிலும் நெடிதுயர்ந்த மரங்கள். உலகின் மாறுபட்ட மண்பாகங்களிலும் விளைகிற தாவரஜாதிகள் யாவும்கூடி பண்ணை வினோத வண்ணத்தில் இரவும்பகலும் ஒளிர்ந்து கிடந்தது மாயலோகமாய். வேலியடைத்தாற்போல் சீரான இடைவெளியில் தென்னையும் கமுகும். வீட்டின் பின்வெளியில் படர்ந்திருக்கும் புல்வெளியிலிருந்து தொடங்கும் பழத்தோட்டம். பலா, முந்திரி, கொய்யா, மாதுளை, மா, சப்போட்டா…என்று சடைசடையாய் காய்ப்பிருக்கும். பழங்களுக்காகவே கூடிக்களிக்கும் பறவைகளின் உல்லாசமொழியைக் கூட ரசிக்கமுடியாதபடி தான் இறுகிவருவதாக அவன் பயம்கொண்டிருப்பதை சொல்கையில் குரல் உடைந்து அழுகையில் தோயும். பகலின் ஆரவாரம் சூரியனோடு அடங்கிப்போகும் இரவின் அந்தகாரத்தில் தூக்கமின்றி பைத்தியம்போல் அறைக்குள் உழன்று தவிக்கும் அவனுக்கு சுபிட்சத்தின் மார்க்கத்தை எந்த விடியலும் கொண்டுவரப்போவதில்லை என்று நம்பியிருந்தான்.
கர்நாடக தமிழக ஆந்திர எல்லையில் இருப்பதால் அந்தந்த மாநிலங்களில் பல்வேறு குற்றங்களுக்காக தேடப்படுபவர்கள் அண்டைமாநிலத்தின் பரப்பொன்றுக்குள் தப்பி ஒளிந்துகொள்வது எளிதாயிருந்தது. அப்படியானவர்கள் தேர்ந்தெடுக்கும் பாதுகாப்பான மறைவிடங்களாக இப்படியான பண்ணைவீடுகளிருந்தன. பகலிலும் இருள்மண்டியிருக்கும் அடர்ந்த புதர்களும் பம்மிப் படர்ந்திருக்கும் மரங்களும் அவர்களது நோக்கத்திற்கு எப்போதும் உதவியாயிருந்தன. இரண்டுமாதங்களுக்கு முன்னான அமாவாசைக்கு பிந்தைய இரவில் இவனது பண்ணையின் ஒரு புதருக்குள் வீசப்பட்டிருந்த பெண்ணொருத்தியின் சடலத்தை காலையிலேயே காகங்களும் கழுகுகளும் நிறக்கப் பறந்து கண்டெடுத்தன. இரவில் ஏமாந்துவிட்டதை மறைப்பதற்காக தனக்கு றெக்கையில்லாததையும் மறந்துவிட்டு அண்ணாந்து எகிறியபடி குரைத்துக்கொண்டிருந்தது நாய். இந்தப்பகுதியின் காடுகளிலும் ஏரிகளிலும் இப்படியான பிணங்கள் கண்டெடுக்கப்படுவது பரபரப்புக்குரிய விசயமில்லை. ஆனால் குரூரமாய் கொலையுண்ட பிணமொன்றும் தானும் ஒரேயிடத்தில் இருந்திருக்கிறோம் என்ற நினைப்பே அவனை திகிலடைய வைத்திருக்கும் போல. போலிஸ் வந்து பிரேதத்தை எடுத்துக் கொண்டு போய்விட்ட பிறகும் ஒன்பதாண்டு பழக்கத்தில் நான் ஒருநாளும் கண்டிராத பதற்றம் கொண்டிருந்தான் தாரக்நாத்.
ஆசுவாசம் கொள்ளவைக்கும் பொருட்டு அவனை மாந்தோப்புக்குள் அழைத்துவந்து சிகரெட்டை நீட்டினேன். வாங்கும்போது கை நடுங்கியது. பற்ற வைத்துக்கொள்ளாமலே வெறித்துப் பார்த்திருந்தவன் ‘காலையிலிருந்து ரெண்டு பாக்கெட்டாகிவிட்டது. தொண்டை எரியுது’ என்றான் கம்மியக் குரலில். பின், பசியில் தின்பவனைப்போல் நகம் கடித்தபடி ராத்திரிக்கு உன் ரூமில் வந்து படுத்துக்கட்டுமா என்றான். அன்றிரவு அவனுடனேயே பண்ணைவீட்டில் தங்கி தைரியம் சொல்லி தேற்றிக் கொண்டிருந்தேன். அவன் தூங்குவதைத் தவிர்க்க பிரயாசை கொள்பவனாகி என் கால்மாட்டில் வந்து அமர்ந்து கொண்டான் மௌனமாக. அயர்ச்சி மீதுற தூக்கத்திற்குள் விழுந்து கொண்டிருந்த என்னை உலுக்கி ‘நான் போலிசில் சரணடைந்துவிடட்டுமா’ என்றான். எனக்கு ஒடுங்கிவிட்டது சர்வமும்.
‘அந்தப் பொண்ணை நீயா கொன்றாய்?’
‘இல்லை….’
‘அப்புறமெதுக்கு சரணடையனும்?’
அமைதியாய் இருந்துவிட்டு, ‘யார் எவரென்று தெரியாத ஒரு பெண்ணின் கொலையைக் கண்டு இத்தனை பதற்றமடையும் நான், என்னோடு உறவாடி வாழ்ந்த எட்டுப்பேரை குத்திக் கொன்றேனே அதற்காக…’
‘முட்டாள்… என்ன உளறுகிறாய்…?’
‘உளறவில்லை. உண்மை. இத்தனை நாளும் உனக்கும் உலகத்துக்கும் சொல்லாத உண்மை.யாருக்கும் தெரியக்கூடாதென்று எனக்குள்ளேயே மறைத்துவைத்த உண்மை. எனக்குள்ளிருந்து என்னை வதைத்துக் கொல்லும் உண்மை.’
‘பிணத்தைப் பார்த்த அதிர்ச்சியில் புத்திபேதலித்துவிட்டதா உனக்கு…?’
‘ஆமாம். புத்தி பேதலிக்கும்போதுதான் பொய்சொல்லும் சாதுர்யம் மறைந்து உண்மை மேலெழுந்து வருகிறது.’
என்னால் மேற்கொண்டு பேசமுடியவில்லை. விரக்தியான சிரிப்போடு ‘ஆமாம், நீ நம்பித்தான் ஆகவேண்டும்… நானொரு கொலைகாரன்’ என்றான். இப்போது அவன் குரலில் பிசிறில்லை.
‘யாரவர்கள்…?’
‘எனது அண்டைவீட்டுக்காரரும் அவரது மனைவியின் வயிற்றிலிருந்த எட்டுமாத சிசு உள்ளிட்ட அவரது குடும்பத்தாரும் இன்னும் சிலரும்.’
இப்போது அவனைப் பார்க்க அச்சமாயிருந்தது. கண்களை மூடியபடி மௌனத்தில் மூழ்கியவன் ‘எதற்காக சாகிறோம் என்பதும் கூட அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. உண்மையில் அவர்கள் ஒருபாவமும் செய்யாத அப்பாவிகள்… ஆனால் அவர்கள் திரும்பிவரப்போவதில்லை…’ என்றான்.
‘அந்த அக்கா எவ்வளவு பிரியமானவள் தெரியுமா… என்னைவிட நாலைந்து வருடம் மூத்தவளாக இருக்கலாம். கல்யாணம் முடிந்து குடித்தனம் வந்த அன்றே எனக்கு பிடித்துப்போனது அவளை. பள்ளிக்குச்செல்லும் என் தங்கைக்கு அவள்தான் தினமும் சடை பின்னிவிடுவாள். அம்மாவுக்கு கண் ஆபரேஷன் செய்திருந்தபோது அவள்தான் எங்கள்வீட்டை பார்த்துக்கொண்டாள். அம்மா குணமாகி சமையல்கட்டில் புழங்க வரும்வரை அவங்க வீட்டிலிருந்துதான் சாப்பாடு வரும். அவளது கைப்பக்குவம் எப்படியான ருசி கொண்டது தெரியுமா?
தலைப்பிரசவத்தின்போது அம்மாதான் அவளுக்கு உடனிருந்து பார்த்துக்கொண்டாள். குழந்தையை தண்ணீர் வைத்து துடைத்துக் கிடத்தியிருந்தார்கள். ரோஸ் நிறத்தில் மிருதுவாயிருந்த உள்ளங்கையில் நான்தான் முதல்முத்தம் கொடுத்தேன். களங்கமற்றது அதன் சிரிப்பு. ஒரு கொலைகாரனைப் பார்த்து குழந்தையால் மட்டும்தான் சிரிக்கமுடியும். அந்த சிரிப்பில் சொக்கிப்போய்த்தான் மாலையில் நடக்கும் ஷாகாவுக்குப் போகாமல் பள்ளியிலிருந்து நேராக வீட்டுக்குவரத் தொடங்கினேன். எனது மாலைப்பொழுதுகளும் விடுமுறைகளும் அவனுக்குரியதாயின. தூக்கத்திலேயே உயிர் பறிபோவதற்கு நான்குதினங்களுக்கு முன்புதான் அவனது ஐந்தாவது பிறந்தநாளைக் கொண்டாடியிருந்தோம்.
ப்ளஸ் டூவில் பெயிலாகி தாறுமாறாய் யோசனையோடிய காலத்தில் அவளது அருகாமையும் ஆறுதலும் தான் தற்கொலை மனோபாவத்திலிருந்து என்னை மீட்டெடுத்தது. அவள் என்னை அப்போதே சாகவிட்டிருக்கலாம். அவளைக் கொல்வதற்காக சாவிலிருந்து என்னை மீட்டெடுத்து போஷித்துவந்தாள். அருள் நிரம்பிய அவளது கண்கள் இன்னும் என் ஞாபகத்தில் இருக்கிறது. அவளது வயிற்றில் கத்தியைப் பாய்ச்சும் போது கூட கண்ணா என்று கத்திக்கொண்டு சாய்ந்தவளின் கண்ணில் அந்த அருள் மருளவேயில்லை….’ விசும்பல் மீறி அழுகையில் கரைந்தான்.
தெய்வமெல்லாம் உங்க கட்சி மெம்பராடா.. கோயில்ல கொண்டாந்து கொடி கட்றீங்களே… நிம்மதியா போய் சாமி கும்புட்டுட்டுத் திரும்ப முடியல. எந்நேரமும் கோயில் வாசல்ல குண்டாந்தடியோடு… உன் சேர்க்கையே சரியில்லை … நெற்றியில் ரிப்பன் கட்டிச்சுற்றும் அந்த ரவுடிக்கும்பலோடு சுத்தறதை நிறுத்து… என்று ஓயாமல் சொல்லிக்கொண்டேயிருப்பாள் அம்மா.
நாங்க அப்படி காவலில்லேன்னா அவங்க கோயிலை இடிச்சிருவாங்கம்மா…
பொய் சொல்லாதடா… அவங்கக் கோயிலை இடிக்கணும்னு நீங்கதாண்டா வீட்டுவீட்டுக்கு கடப்பாறை கொடுக்கறீங்க… சும்மாகிடந்தவங்கள வம்பிழுத்துட்டு இப்ப அவங்க இடிச்சிருவாங்கன்னு பூச்சாண்டி காட்றீங்க… கோயிலுக்கு ஆபத்துன்னு சாமி கும்பிட வர்றவங்களையெல்லாம் உங்க கட்சியில சேத்துடலாம்னு நடக்குது இந்த சூதாட்டம்… என்று கிளிப்பிள்ளைக்கு சொல்றமாதிரி அம்மா புத்தி சொன்னாள். எனக்குத்தான் எதுவுமே மண்டையில் ஏறவில்லை அப்ப.
துணைக்கு யாருமற்று தனிமைப்பட்டதைப்போல் உணர்ந்தவன் நடுங்கும் கைகளால் சிகரெட்டை பற்றவைத்துக் கொண்டான். பொங்கிவரும் பேச்சை புகைமூலம் தடுக்கநினைத்து ஆழ்ந்து உள்ளிழுத்தான். நான் அவனது முகத்தையே பார்த்திருந்தேன். ஜன்னலுக்கு வெளியே வெறித்துப் பார்த்தபடி தொடர்ந்தான்.
அன்று முன்னிரவிலேயே தெருவில் நடமாட்டம் குறைந்துவிட்டிருந்தது. நடமாடிய ஓரிருவரும் கூட போலிஸ் விசாரிப்புக்கு பயந்து அடையாளம் காணமுடியாதபடி கம்பளியாடைகள் தரித்து வேகமாய் கடந்து மறைந்தனர். நேற்று மதியம் ரவுண்டானா அருகில் வெடித்தக் கலவரமும் அதையொட்டி நடந்த துப்பாக்கிச்சூடும் எங்கும் திகிலை பரப்பியிருந்தது. ரதயாத்திரையை வரவேற்க திரண்டிருந்தவர்களுக்கும் இன்னொரு பிரிவுக்குமிடையே மூண்ட கலவரத்தில் ஆறுபேர் வெட்டிக் கொல்லப்பட்டனர். கலவரத்தையடக்க நடந்த துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்கள் பதினாலுபேர் என்று போலிஸ் சொன்னாலும் கூடுதலாயிருக்கும் என்றே பேசிக்கொண்டார்கள்.
துள்ளத்துடிக்க ஏராளமானவர்களை ஜீப்பில் தூக்கிப்போனதாகவும் அவர்கள் இப்போது ஆஸ்பத்ரியிலும் இல்லையென்பதால் அனேகமாக போகும் வழியிலேயே உயிர் பிரிந்துவிட போலிசே எங்காவது குவித்து எரித்திருக்கும் என்றும் ரகசியம்போல் பேசிக்கொண்டனர் ஊர்மக்கள். கூட்டத்தில் என்பக்கத்திலேயே இருந்த மங்கத்ராம் நெற்றியில் குண்டடி பட்டு கீழே சாய்வதை நானே பார்த்தேன். ஆனால் அதற்கப்புறம் அவன் எங்குமே காணவில்லை. சேதியறியாத அவனது தாயோ அவனுக்கு ஒண்ணும் ஆகியிருக்காது திரும்பி வந்தவிடுவான் என்று சொல்லிக்கொண்டு சகஜமாயிருக்க பட்டபாடு மிகுந்தத் துயரமானது.காணாமல் போன தங்கள் வீட்டாள்கள் என்னவானார்கள் என்று மறைந்து மறைந்து தேடிக் கொண்டிருந்தனர். என்னதான் போலிஸ் குவிந்திருந்தாலும் இன்னொரு பெரிய கலவரம் மூளக்கூடும் என்று இருதரப்பிலும் பீதி நிலவியது.
நான் அவள் வீட்டுக்குப் போனபோது அவளும் ஊரிலிருந்து வந்திருந்த அவளது தங்கையும் இரவுச்சாப்பாட்டுக்கான தயாரிப்பிலிருந்தார்கள். ‘எங்கடா போய்த் தொலைஞ்சே நாலைந்து நாளாய்… அம்மாக்கிட்டயாச்சும் எங்கயிருக்கிறேங்கிற தகவலைச் சொல்லியிருக்கலாமில்ல… என்ன ஆச்சோ ஏதாச்சோன்னு பதறிப்போயிட்டோம் தெரியுமா… ‘ என்று கோபமும் கரிசனமுமாய் விசாரித்தாள். திட்டி முடித்ததும் ஆசுவாசம் கொண்டவளாகி ‘நீ இல்லாம உன் தோஸ்த்துக்கு ரொம்ப போரடிச்சிருச்சு. சாப்பிடாமக்கூட தூங்கிட்டான். அவனை எழுப்பு. நீயும் கை கழுவு சாப்பிடலாம்’ என்றாள்.
‘மாமா இன்னம் வரலையாக்கா…’
‘மாடியில என்னவோ எழுதிக்கிட்டிருக்கார். இரு கூட்டியாறேன். அவரும் கூட உன்கிட்ட ஏதோ பேசணும்னு சொல்லிக்கிட்டிருந்தார்.’
‘நீ இருக்கா, நான் போய் கூட்டியாறேன்…’
டிசம்பர் ஆறாம் தேதி நடக்கவிருக்கும் அம்பேத்கர் நினைவுநாள் நிகழ்ச்சியில் பேச குறிப்பெடுத்துக் கொண்டிருந்தார் மாமா. உள்ளூர் கல்லூரியில் பேராசிரியர். ஊரிலும் மாணவர்களிடமும் நல்ல மரியாதை பெற்றவர். என்னைப் பார்த்ததும் எழுதுவதை நிறுத்திவிட்டு சிகரெட் பற்றவைத்துக் கொண்டார். இத்தனை பேரைக் கொன்று கட்டப்படுவது கடவுளுக்கான கோயிலாயிருக்க முடியாது… சாத்தானின் வதைக்கொட்டடியாகத்தான் இருக்கும்… என்ற வரியோடு நின்றிருந்தது அவரது குறிப்பு. நீ எதிலும் மாட்டிக்கலையே கண்ணா என்று பதற்றத்தோடு விசாரித்தார். சில அமைப்புகளோடு எனக்கிருக்கும் தொடர்புகளை அவரறிவார். அவற்றின் பிரதிநிதியாக என்னை பாவித்து நீதிகேட்டு முறையிடும் தொனியில் ‘யாரோ எவரோ முன்பின் தெரியாத கொடியவர்கள் கையால் இன்றோ நாளையோ சாவதைவிட என்வீட்டில் ஒருவனாயிருக்கும் நீயே எங்களைக் கொன்றுபோடு….நிம்மதியாகவாவது செத்துப்போகிறோம்’ என்றார் உடைந்த குரலில். அதற்காகத்தான் நான் வந்திருக்கிறேன் என்பதை சொல்லமுடியவில்லை என்னால்.
மாமாவுக்கு பசியில்லையாம்… உங்களை சாப்பிடச் சொன்னார் என்றேன் படியிறங்கியபடியே. இதைக் கேட்டு வரவா இவ்வளவு நேரம்… சரி வா… நீயும் உட்கார் என்றாள் அக்கா. அவசரமாய் மறுத்தேன். வலுக்கோலாய் உட்காரவைத்தாள். இதென்னடா மாடியேறி இறங்கினதுக்கா உனக்கு இப்படி வேர்க்குது. ஸ்வெட்டரை கழட்டிட்டு சாப்புடு… என்கிறாள். எனக்கு நிலை கொள்ளவில்லை. ஐயோ… தன் புருசனை கொன்றுவிட்டு வந்திருக்கும் பாதகனை பாசத்தால் தண்டிக்கிறாளே புண்ணியவதி…. அழுகை முட்டிக்கொண்டு வருகிறது. கவனித்துவிட்டாள். ஏண்டா எதுவும் பிரச்னையா… மாமா எதுவும் திட்டினாரா… தலையை ஆதுரமாக கோதிக் கொடுக்கிறாள். அவளது நிறைவயிறு இரைகிறது. ஏழேழு ஜென்மத்துக்கும் எனக்கு மன்னிப்பு இல்லையக்கா… என்று சொல்லிக்கொண்டே……..
கதவைச் சாத்திக்கொண்டு நான் வெளியே வருவதைப் பார்த்ததும் ஆங்காங்கு பிரிந்து மறைந்திருந்த மூவரும் சமிக்ஞை ஒலியெழுப்பியபடி மாந்தோப்புக்கு விரைந்தனர். திட்டத்தின் அடுத்த பகுதி அங்கே சந்தித்து நிலையை பரிசீலிப்பதுதான்.
என்ன சகோதரா… வீட்டாள்கள் எல்லாரும் இருக்காங்களான்னு பார்த்துவர இவ்வளவு நேரமா… லேட்டாக ஆக டென்சனாயிருச்சு… என்று சலித்துக்கொண்டான் தாராசிங். அவன்தான் இங்கு தலைவன். நான் ரத்தத்தின் பிசுபிசுப்போடிருந்த கத்தியை நீட்டினேன். அவசரப்பட்டுட்டியே சகோதரா… அவங்களை மிரட்டி வச்சாப் போதும்னு நினைச்சேன். வீட்டில் பெண்களும் குழந்தைகளும் இருக்கும்போது பக்குவமா மிரட்டினால் அந்தாளு கொஞ்சம் அடங்கி மத நல்லிணக்கக்குழு அதுஇதுன்னு போகாமயிருப்பான்னுதான் எல்லாரும் இருக்காங்களான்னு பார்த்துவரச் சொன்னேன்… அதுக்காகத்தான் அவங்களுக்கு ரொம்ப வேண்டிய உன்னை அனுப்பினேன்… என்றான்.
பொய்… பசப்பாதே… உன்னோட ஹிட்டன் அஜென்டா என்னன்னு எனக்கு தெரியும். நான் தோது பார்த்து வந்ததற்கு பிறகு கும்பலாய் நீங்கள் வீட்டுக்குள் புகுந்து சூரத்தில் செய்தமாதிரி அவங்களை நிர்வாணமாக்கி தெருவிலே ஓடவிட்டு வீடியோ எடுத்துட்டு அப்புறமா சூலத்தால் குத்தி கொல்லணும்னு நீயும் கோபாலனும் போட்ட வக்கிரத் திட்டத்துல அவங்க மாட்டிக்கக் கூடாதுன்னுதான் எல்லாரையும் கொன்னுட்டேன்…
நாலுநாள் ஓசி பிரியாணி சாப்பிட்டதுக்கே இவ்வளவு விசுவாசம் காட்டுற நீ உன் தாய்நாட்டுக்கு நல்லது பண்ண தயங்கிட்டியே என்றவன் அவன் கொழுந்தியாளையாவது நீ எங்களுக்கு விட்டுவைத்திருக்கலாம் என்று ஓநாயைப்போல இளித்தான். அவர்கள் மூன்றுபேரும் ஒருவாகாய் நிற்க நான் எதிரில். வாக்குவாதம் முற்றி ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறும்போது அவர்களையும் கொல்வதைத் தவிர எனக்கு வேறுமார்க்கம் தெரியவில்லை.
விடிய விடிய கால்போன திசையில் நடந்தேன்.வெகுவாகப் பயின்று தேறியதொரு தொழில்முறை கொலைகாரனைப்போல் எட்டுபேரைக் கொன்றவனை பிணங்கள் தேலிவரும் இந்த கங்கை மட்டும் தூய்மைப்படுத்திவிட முடியுமா என்ற யோசனையற்று ஆற்றில் முங்கியெழுந்தேன். கவனமாய் கத்தியை கங்கைக்குள் வீசினேன் அதன் கறையாவது கழுவப்படட்டுமென்று. அதன்பின் தப்பியோடும் எண்ணம்கூட எனக்கில்லாமல் போய்விட்டது. கரையெங்கும் நிறைந்திருந்த கோயில்கள் தான் என்னை பீதியடைய வைத்தன. எத்தனைப்பேரின் உடல்களை சதுரித்து செங்கல்லாய் அடுக்கி கட்டப்பட்டிருக்கிறதோ என்ற பயம் விரட்டியது என்னை வேறுபக்கம். இலக்கின்றி ரயிலேறி ஊர்ஊராய் அலைந்து திரியும்போதுதான் ஜோலார்பேட்டை ஜங்ஷனில் உன்னை சந்திச்சேன்….
தனது நெடிய கதையை சொன்ன களைப்பும் துயரமும் தந்த ஆயாசத்தில் கண்மூடி தரையிலேயே படுத்துக்கொண்டான் . பொத்திவைத்திருந்த ரகசியங்களை வெளிக்கொட்டிவிட்டதில் ரத்தமற்று சோகை பீடித்தது போலிருந்தது முகம்.
நான் ஜோலார்பேட்டையில் சந்திக்கும் போதும் இதேபோல் தானிருந்தான். வண்டி மாறுவதற்காக நான் காத்திருந்த சமயத்தில் வடநாட்டிலிருந்து வந்த ஒரு வண்டியிலிருந்து டிக்கெட்டில்லாமல் பயணம் செய்வதற்காக இறக்கிவிடப்பட்டான். ரயில்வே போலிஸ்காரன் அடித்தபோது என்னையும் விட்டுவிட்டால் நீயும்தான் யாரை அடிக்கமுடியும் என்று இரக்கம் கொண்டவனைப்போல அடிக்கத் தோதாக உடம்பை காட்டிக்கொண்டு நின்றான். அவனது ஒத்துழைப்பினால் அவமானம் கொண்ட போலிஸ்காரனுக்கு அடிக்கமுடியவில்லை. திமிறும் குற்றவாளியை எகிறியடிக்கப் பழகியிருந்த போலிஸ்காரன் இவனை என்ன செய்வதென்று தெரியாத ஆத்திரத்தில் ஓடு ஓடு என்று லத்தியை வீசி விரட்டினான். அங்குமிங்குமாய் போக்குகாட்டி மறைந்தவன் எங்கிருந்தோ ஓடிவந்து நானிருந்த பெட்டியில்தான் ஏறினான். கிளம்பிவிட்ட வண்டியில் இத்தனை லாவகமாய் ஏறுமளவுக்கு அவன் பழகியிருப்பான் போலும்.
கழிப்பறைக்கு பக்கத்தில் ஒடுங்கி நின்றிருந்தான். அவனது ஏதோவொரு அம்சம் என்னை கவருவதாயிருந்தது. இன்னதென்று திட்டவட்டமாய் சொல்லத் தெரியவில்லை. பேச்சுக் கொடுத்தேன். அவனுக்கு தமிழ் தெரிந்திருக்கவில்லை. எனக்கு ஓரளவே தெரிந்திருந்த இந்தியைக் கொண்டு பேசிக்கொண்டோம். வீட்டைவிட்டு ஓடிப்போக நாலைந்துமுறை முயன்றும் தப்பிக்கமுடியாமல் பிடிபட்டுப்போன எனக்கு எங்கோ வடநாட்டிலிருந்து தப்பி இங்குவரைக்கும் வந்துவிட்ட அவனைப் பார்க்கும்போது பெரிய சாகசக்காரனாய் தெரிந்தான்.
எதையாவது திருடிக்கொண்டு ஓடிவிடுவானோ என்று உள்ளூர பதைத்துக்கொண்டே தான் அவனை ரூமுக்கு அழைத்துவந்தேன். குளித்தபின் எனது துணிகளை உடுத்தக் கொடுத்தேன். இந்திக்காரன் என்பதாலேயே இந்த பண்ணைவீட்டின் வாட்ச்மேனாக சேர்ந்துவிட முடிந்தது அவனால். நாளாவட்டத்தில் நம்பிக்கை கொண்ட முதலாளி அவனுக்கு மற்ற பொறுப்புகளையும் தந்தான். ஒன்பது வருசம் கழித்து இப்போது நானொரு கொலைகாரன் என்று சொல்லி அழுபவனை என்ன செய்வது?
என்னால் அவன்மீது எந்த அபிப்ராயத்துக்கும் வரமுடியவில்லை. சட்டப்படி அவன் கொலைகாரன் தான். கொலைகாரர்கள் எல்லோருமே தண்டிக்கப்பட்டுவிட்டார்களா? ஆயிரக்கணக்கானவர்களைகி கொன்றவர்களெல்லாம் இன்று அந்தஸ்தான பதவிகளில் இருக்கிறார்களே… தவிரவும் நோக்கத்தை வைத்து தீர்ப்பிட்டால் இவன் செய்தவை கொலைகள்தானா என்ற கேள்வியும் எனக்கிருக்கிறது. உன்னை யாரும் கண்டுபிடிக்கப் போவதில்லை. பயப்படாமலிரு… என்றேன். நான் யாருக்கும் பயப்பட்டு சரணடையும் முடிவுக்கு வரவில்லை. மறைந்து வாழ்கிறோம் என்ற நினைப்பே கொடுந்தண்டனையாய் வாட்டுகிறது. குற்றத்தை ஒப்புக்கொண்டு தண்டனை அனுபவிக்கும் போதாவது என்னால் நிம்மதியாக இருக்கமுடியும் என்று நினைக்கிறேன்…என்றான். ரொம்பவும் பதட்டமாயிருக்கிறாய். இப்போ எடுக்கும் எந்த முடிவும் சரியாயிருக்காது… என்றேன். நான் நன்றாக யோசித்துவிட்டேன் என்றான். அப்படியானால் உனக்கு அடைக்கலம் கொடுத்த குற்றத்திற்காக நானும்தான் உன்னோடு கம்பி எண்ண வரவேண்டும் என்றேன். பிறகு விடியும்வரை எதுவும் பேசிக்கொள்ளவில்லை. உண்மையில் நான்தான் பேச்சை தவிர்த்தேன். ஆனாலும் எந்நேரத்திலும் அவன் காவல்நிலையத்திற்கு ஓடி சரணடையவோ அல்லது சுயவாதை பொறுக்காமல் தற்கொலை செய்து கொள்ளவோ முயலக்கூடும் என்ற அச்சம் வாட்டியது என்னை.
அதற்குப் பிறகு போனில் பேசிக்கொண்டோம் ஓரிருமுறை. இரண்டுமாதம் கழித்து இப்போதுதான் வந்திருக்கிறான். என்ன குண்டு கை வசமிருக்கிறதோ தெரியவில்லை.
சாப்பிட்டு முடிக்கும்வரை காத்திருந்தவன் வெளியே வந்ததும் சிகரெட் பற்றவைத்துக் கொண்டான். சதாம் உசேனை கைது பண்ணிட்டோம்னு அமெரிக்காக்காரன் சொல்றதை நீ நம்பறயா…என்றான்.
அதான் டிவியில் காட்டினாங்களே… நீ பாக்கலியா… ?
பாத்தேன். என்னால நம்பமுடியல.
ஏன்?
அமெரிக்காக்காரனோட தில்லுமுல்லு தெரிஞ்சதாலத்தான். நிலாவுக்கே போகாம செட் போட்டு படமெடுத்து உலகத்தையே நம்ப வச்சிட்டதா அமெரிக்காவிலயே ஒரு விவாதம் நடந்துக்கிட்டிருக்குது தெரியுமா.. இன்னைக்கு கிராபிக்ஸ் அதுஇதுன்னு டெக்னாலஜி வளர்ந்திருக்கிற நிலையில சதாமை பிடிச்சிட்டோம்னு காட்டறது ரொம்ப ஈஸிதானே… அதிலும் மீடியா பூராவும் அவன் கையில ஸ்ட்ராங்கா இருக்கும்போது நம்பவைக்கிறது சாத்தியம் தான்.. என்றான்.
என்னாச்சு இவனுக்கு, இப்படி திடீரென்று துப்பறியக் கிளம்பிட்டான் என்ற யோசனை வந்துவிட்டது எனக்கு. அப்படியெல்லாம் நடந்துடக்கூடாதுன்னுதானே அவங்க டிஎன்ஏ சோதனையெல்லாம் பண்ணினாங்க…
என்ன பெரிய சோதனை… குளோனிங் மாதிரி ஆயிரத்தெட்டு டெக்னாலஜி வளர்ந்திட்ட காலத்துல…
பொழுதுபோகாமல் நிறைய யோசித்திருப்பான் போல. தன்னை நினைத்து உழப்பிக்கொள்ளாமல் அவன் இன்னொன்றை யோசித்திருப்பது நல்லதுதான் என்று திருப்திகொண்டவனாகி ‘அப்படின்னா, நான் அமெரிக்காகிட்ட பிடிபடலேன்னு சதாம் உசேன் சொல்லவெண்டியதுதானே…’
எதுக்கு சொல்லணும்… இப்ப என்னையே எடுத்துக்க… நான் காணலேன்னதும் அந்தக் கலவரத்துல நான் செத்துட்டதாகவோ அல்லது போலிஸ்கிட்ட மாட்டி அவங்க கொன்னு எறிஞ்சிருப்பாங்கன்னோ தானே ஊரும்உறவும் நம்பிக் கிடக்கும்… ஆனா நான் இங்கே செட்டிலாயிட்டேன் பாத்தியா.. என்னாலயே ஒளிஞ்சு வாழமுடியும்கிறப்ப ஒரு நாட்டையே ஆண்ட ராஜதந்திரியால தப்பிக்க முடியாதா…
தப்பிப்போகலையே… அதான் வகையா குழிக்குள்ள இருந்து மாட்டிக்கிட்டாரே.
இல்லை. அவங்களை திசைதிருப்ப சதாமே அவராட்டம் ஒருத்தரை தயார் பண்ணி மாட்டவிட்டிருக்கார்.
எனக்கு சிரிப்பு வந்துவிட்டது. என்னவோ சதாம் உசேனே உன்னைக் கூப்பிட்டுச் சொன்னது மாதிரி பேசறே என்றேன்.
உண்மைதான். அவரே என்கிட்ட சொன்னதுதான். எப்ப… ராத்திரி தூங்கறப்பவா… என்ற எனது கேலியை பொருட்படுத்தாமல் ‘இல்லை. அவர் இப்போ என்கூட பண்ணைவீட்டில்தான் இருக்கார்..’ என்றான் உறுதியான குரலில். அறையலாம்போல் கோபமும், புத்தி பேதலித்துவிட்டதா இவனுக்கு என்ற பதட்டமும் வந்துவிட்டது எனக்கு. நீ நம்பமாட்டேன்னு எனக்குத் தெரியும். அதனால்தான் கையோடு கூட்டிப்போக வந்தேன். கம்பனிக்கு லீவ் சொல்லிட்டு வா பண்ணைக்கு போகலாம் என்றான்.
இவனது பைத்தியக்காரத்தனம் எல்லையற்றதாக விரிந்தவிட்டதென்று தோன்றியது.அதற்குள் என்னையும் இழுத்து வீழ்த்தப் பார்க்கிறான் என்ற அச்சம் கிளம்பி தப்பியோடிவிடுமாறு விரட்டியது. இப்போதைக்கு பக்குவமாய் கழன்று கொள்ளும் வழியெதுவும் பிடிபடவில்லை. திடீரென்று லீவ் கிடைக்காது. நான் நாளைக்கு வருகிறேன் என்றேன். அவன் சமாதானம் கொள்ளவில்லை. வற்புறுத்தும் பாவனையில் நின்றிருந்தான். கட்டாயம் நாளைக்கு வந்திடுவே தானே.. என்றான் கொஞ்சநேரம் கழித்து.
தேற்றியனுப்பி வைத்தபிறகு எனக்கு பதட்டம் கூடிவிட்டது. இவனை என்ன செய்வது என்ற குழப்பத்தில் வேலைக்குப்போக பிடிக்காமல் ரூமுக்கு வந்து கதவை தாளிட்டுக்கொண்டு படுத்துவிட்டேன். தூக்கம் வரவில்லை. யோசிக்க யோசிக்க அவன் மீதிருந்த கோபம் வடிந்துபோனது. அவனை அழைத்துப்போய் மனநல மருத்துவர் ஒருவரிடம் காட்டுவதுதான் உடனடியாய் செய்தாக வேண்டியக் காரியம் என்று தோன்றியதும் பண்ணைக்கு கிளம்பினேன்.
முதலாளி வந்து தங்கியிருக்கும் காலங்களைத் தவிர மற்றநாட்களில் மூடப்பட்டேயிருக்கும் பண்ணையின் பிரதான வழி வழக்கத்திற்கு மாறாக திறந்திருந்தது. வெயிலை உச்சியில் தாங்கிக்கொண்டு நிழலை விரித்திருந்தன மரங்கள். குளுங்காற்றில் பூக்களின் வாசனை நிரம்பியிருந்தது. பின்வேலிக்கருகிலிருந்து குரைத்துக் கொண்டே வந்த நாய் கிட்டத்தில் வந்ததும் அடையாளம் கண்டு செல்லமாய் வாலாட்டிக்கொண்டு வினோதமான ஒலியுடன் குழைந்தது. வழிகாட்டுவதைப்போல் முன்னோடிய நாய் வீடு சமீபித்ததும் இனி உன்பாடு என்பதுபோல் பின்பக்கம் ஓடிவிட்டது. அவனைக் காணவில்லை. இங்கேதான் சுற்றிக்கொண்டிருப்பான். வரட்டுமென்று வராண்டாவில் உட்கார்ந்தேன்.
செய்தித்தாள்களும் வாரப்பத்திரிகைகளும் இறைந்துகிடந்தன. எல்லாவற்றிலுமிருந்து சதாம் உசேன் பிடிபட்ட படங்களையும் செய்திகளையும் கத்தரித்து ஒரு உறைக்குள் போட்டுவைத்திருந்தான். சிலதின் மீது குறிப்பெழுதியிருந்தான். ஏராளமான தாள்கள் கசக்கி எறியப்பட்டிருந்தன மேசையைச் சுற்றி. நான், சதாம் உசேன் வந்திருக்கிறேன் என்று தலைப்பிட்டு எழுதி அடித்துத் திருத்தி கசக்கி எறிந்திருந்ததை படிக்….
மடப்பயலே.. என்னடா ஆச்சு உனக்கு… கத்திக்கொண்டே ஒதிய மரத்தடிக்கு ஓடினேன். படுத்திருந்த நாய் விருட்டென்று எழுந்து ஓடியது வேறுபக்கம். மூடப்பட்டிருந்த இலைதழைகளை அப்புறப்படுத்தியதும் தெரிந்த மூங்கில்படலை நீக்கியதும் அதிர்ந்துவிட்டேன். ஆள் மறைக்குமளவு ஆழத்தில் குழி. பக்கவாட்டில் குடைந்தெடுக்கப்பட்ட வளையின் இருளில் கரைந்துவிட்டவனைப் போல ஒடுங்கி உட்கார்ந்திருந்தான். என்னைக் கண்டதும் போலிசும் வந்திருக்கிறதா என்று நடுங்கும் குரலில் கேட்டான். இல்லை, எழுந்து வா… என்றேன். இப்படி பதுங்கியிருந்ததால் தான் சதாமை பிடிச்சார்களாம்… நானும் இங்கேயே காத்திருக்கிறேன்… என்னை பிடிக்க ஏன் வரவில்லை என்று அழத் தொடங்கிவிட்டான். நீ வெளியே வா… நாமே அவர்களிடம் போகலாம் என்றேன். வந்த பிறகு அன்னிக்கு மாதிரி குழப்பக்கூடாது…. சரியா … என்று திரும்ப திரும்ப சொல்லியபடியே வெளியே வந்தான். ஓடியும் பதுங்கியும் களைப்புற்றிருந்த சதாமின் பரிதாபத்திற்குரிய தோற்றம் ஒருகணம் மின்னி கலைந்தது அவனில். வளைக்குள் நுழைந்ததில் உடம்பெங்கும் சிராய்த்து ரத்தம் காய்ந்திருந்தது. நான் மேலேறி குனிந்து அவனுக்கு கை கொடுத்தேன். அவன் குழிக்குள் இழுப்பதுபோல் கைநீட்டினான்.
மூன்றாம் பரிசு: தீதும் நன்றும்
– அலர்மேல் மங்கை –
ஸ்டேட் ரோடும், லிபர்ட்டி ரோடும் சந்திக்கும் முனையில் இருந்த ம்யூஸியம் அப் ஆர்ட் முன்னே கிடந்த கல் பெஞ்ச்சில் அமர்ந்திருந்தான் கெளதம். பல்கலைக் கழக மாணவர்கள் சிலர் சுறுசுறுப்புடனும், சிலர் மந்தமாகவும், சிலர் பிரகாசமாகச் சிரித்தபடியும், சிலர் உலகத்தின் பாரமே தன் தோளில் மட்டுமே என்பது போலவும் போய்க் கொண்டிருந்தனர். “இவர்களுக்கெல்லாம் வாழ்க்கை இந்த பல்கலைக்கழகமும், பாடங்களும், ஆண் தோழனும், பெண் தோழியும், விடுமுறை நாட்களில் சந்திக்கும் பெற்றோர்களும், உடன் பிறந்தவர்களும் மட்டுமா, இல்லை அதற்கு மேலும் வேறு தேடல்கள் உண்டா?,” என்று நினைத்தான். இதில் எத்தனை பேருக்குத் தாய் வேறு ஒருவனுடன் போயிருக்க முடியும்? எத்தனை பேருக்குத் தந்தை – நண்பனும், ஆசானும் போல் இருந்து வளர்த்த தந்தை இறந்து போயிருக்க முடியும்? யாருடைய முகத்திலும் துயரத்தின் அறிகுறி தெரியவில்லை. எல்லோரும் மாணவர்களாக அவரவர் கடமையை நோக்கிப் போய்க் கொண்டிருப்பது போலத்தான் தெரிந்தது. ஏதோ ஒரு அர்த்தமுள்ள வாழ்க்கையை நோக்கி அவர்கள் யாவரும் நகர்ந்து கொண்டிருப்பதாகத் தோன்றியது. அவனுக்கு மட்டுமே வாழ்க்கை அர்த்தமில்லாததாகவும், துயரம் நிறைந்ததாகவும் தோன்றியதும், மீண்டும் அன்றே தான் இறந்து விட வேண்டும் என்ற முடிவு உறுதியானது. ஆர்ட் ம்யூஸியத்தின் படிகளில் அமர்ந்து ஒரு ஆப்பிளைக் கடித்துக் கொண்டே ஏதோ புத்தகத்தை திருப்பிக் கொண்டிருந்த பெண் இவனைப் பார்த்து புன்ன்கைக்க முகத்தைத் திருப்பிக் கொண்டான்.
கடந்த ஒரு மாதமாக ஆர்ட் ம்யூஸியத்தில் ஜார்ஜியா ஓ’ கீபின் ஓவியங்கள் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப் பட்டிருந்தன. விக்ரம் கெளதமை போன வாரம்தான் வலுக்கட்டாயமாக அழைத்துப் போனான் ஓவியங்களைப் பார்க்க. கெளதமுக்கு ஓவியங்களில் எல்லாம் அவ்வளவாக ஆர்வமில்லை. விக்ரம் ஒவ்வொரு ஓவியத்துக்கும் முன் பத்து நிமிடங்களாவது நின்றான்.
“என்ன ஒரு வெரைட்டி அப் தீம்ஸ் பார். வித விதமான பூக்கள். அப்புறம் நியூ மெக்சிக்கோவின் சிவப்பு மண் மலைகள். அப்புறம் மிருகங்களின் எலும்புகள்…கலர் காம்பினேஷனைப் பார்த்தாயா? பூக்களின் நிறங்களையும், செழுமையையும் வரைந்த அதே கைகள் நியூ மெக்சிக்க மலைகளின் வறட்சியையும் வரைந்துள்ளதே! என்ன காரணத்துக்காக இப்படி வரைந்திருப்பார்னு நினைக்கிறே?,” என்றான். விக்ரம் மருத்துவ மாணவன்.நியூரோ சர்ஜனாகும் லட்சியம் அவனுக்கு. மனித மூளையின் ஆழத்தையும், வீர்யத்தையும் அவனால் வியக்காமல் இருக்கவே முடியாது.
“ப்ச,” என்றான் கெளதம் அஸ்வாரஸ்யமாக. விக்ரம் அதையெல்லாம் கண்டு கொள்வதாகக்த் தெரியவில்லை. ஒரு ஓவியத்தின் முன்னே தீவிர யோசனையுடன் நின்று கொண்டிருந்த ஒரு வெள்ளைக்கார தாடிக்காரர் ஆர்ட் ப்ரொபசராக இருக்க வேண்டும். அவருடன் விக்ரம் ஒரு அரை மணி நேரம் அந்த ஓவியத்தைப் பற்றி விவாதித்தான். அவரும் பொறுமையாக விளக்கிக் கொண்டிருந்தார். இவர்களுக்கெல்லம் இதற்கு நேரமும் இருக்கிறதே! மருத்துவ மாணவனுக்கு, ஓவியத்தில் என்ன ஈடுபாடு? ஆனால் விக்ரம் அப்படித்தான். அவனுடைய பலமும் அதுதான், பலகீனமும் அதுதான். பல விஷயங்களில் ஈடுபாடு கொண்டதால், அவனுடைய மருத்துவப் படிப்பில் அவனால் தீவிர கவனம் செலுத்த முடிகிறதா என்று கெளதம் எப்போதும் வியந்திருக்கிறான். நேரம் காலம் இல்லாமல் படிக்கும் மருத்துவப் படிப்பின் நடுவே அவனுக்கும் இதற்கெல்லாம் எப்படியோ நேரம் இருக்கத்தான் செய்கிறது!
ஒரு தாயும் மகனும், ஆர்ட் ம்யூஸியத்தின் படிகளில் ஏறிக் கொண்டிருந்தார்கள். இப்படித்தான் விக்ரமின் தாயும் அவனை ஆர்ட் ம்யூஸியத்துக்கும், பல்கலைக் கழக வளாகங்களில் நடக்கும் இலவச விரிவுரைகளுக்கும் அவனை அழைத்துச் சென்றதாக விக்ரம் கூறியுள்ளான்.
“எல்லா இந்திய அம்மாக்களும் தங்கள் பிள்ளைகளை பஜனை க்ளாஸிலும், ஸ்லோகக் க்ளாஸிலும் சேர்த்து விட்ட கால கட்டத்துல, என்னோட அம்மா என்னை ஆர்ட் ம்யூஸியத்துக்கும், ப்ளேனட்டொரியத்துக்கும், நோபல் ப்ரைஸ் வாங்கின விஞ்ஞானி பல்கலைக் கழகத்துக்கு வந்த போது அவருடைய லெக்சருக்கும் கூட்டி போனா. இன்னிக்கு நான் பலதரப் பட்ட விஷயங்களிலில் ஆர்வம் உள்ளவனா இருக்கிறேன்னா அதுக்கு அம்மாதான் காரணம்” என்றான் பெருமிதமாக. அப்போது அவனைப் பார்க்கப் பொறாமையாக இருந்தது கெளதமுக்கு. இப்போது ஆர்ட் ம்யூசியத்தின் படிகளில் ஏறிக் கொண்டிருக்கும் அந்தத் தாயையும், மகனையும் உற்று நோக்கினான். இவனும் ஒரு நாள் விக்ரம் போல இதே பல்கலைக் கழகத்தில் படிக்க வரலாம். அப்போதும் அவனுடைய படிப்புக்கு நடுவே கிடைக்கும் சில நிமிடங்களில், ஆர்ட் ம்யூஸியத்துக்கு ஓடி வரலாம். ஏன் சிலருக்கு மட்டும் இது போன்ற அற்புதமான தாய் அமைந்து விடுகிறார்கள்? கடவுள் என்ற ஒருவர் இருந்தால், இவர்கள் எல்லாம் அவரால் அனுப்பப் பட்ட தேவதைகளாக இருந்திருப்பார்கள்.
“எனக்கு மட்டும் அப்படி ஒரு தாய் அமைந்திருந்தால் நானும் விக்ரமப் போலத்தான் இருந்திருப்பேன்,” என்று கெளதமின் எண்ணம் ஓடியது. அப்படி ஒரு தாய் அமையாத கொடுமைதான் இன்று இப்படி உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளியுள்ளது என்ற நினைப்பும் ஓடியது.
இரு மாதங்களுக்கு முன், அப்பா திடீரென்று மாரடைப்பில் இறந்து போனது முதலாகத் தாயின் மீது அவனுடைய வெறுப்பு கூடிக் கொண்டுதான் இருக்கிறது. விக்ரம் கூறியது போல எல்லா இந்திய அம்மாக்களும் போலக் கெளதமின் அம்மாவும் அவனுக்கு எட்டு வயதாகும் வரை அவனை ஒரு இந்தியப் பையனாக, அதுவும் ச்லோகங்களும், சாஸ்திரங்களும் தெரிந்த ஒருவனாக வளர்க்கப் பிரயத்தனம் செய்யத்தான் செய்தாள். அவள் செய்த பூஜைகளுக்கும், செய்த ஹோமங்களுக்கும் குறைவில்லை. ஆனால் அதனாலெல்லாம் என்ன பலன் என்று அவனுக்கு அன்றும் புரிந்ததில்லை, இன்றும் புரியவில்லை. அர்த்தம் தெரியாத மந்திரங்களையும், ஸ்லோகங்களையும் முழங்கி விட்டுப் பின், எட்டு வயது மகனையும், அன்பான கணவனையும் விட்டு ஒரு வெள்ளைக்கார மருத்துவனுக்குப் பின் சென்ற அந்த ஒழுக்கமின்மையை என்னவென்று சொல்வது? அப்பா ஒரு சாதாதாரணப் பொறியாளராக இருந்தது அம்மாவுக்கு எப்போதுமே உறுத்தலாக இருந்துள்ளது என்பது அவனுக்கு விபரம் தெரிந்த போது புரிய வந்தது. அம்மா மாபெரும் அழகி. அவளுடைய அழகில் மயங்கிய மிகப் பெரிய இருதய அறுவை சிகிச்சை நிபுணருடன் அம்மா தொடர்பு கொண்ட போது, அவள் பாடிய ஸ்லோகங்களும், மந்திரங்களும் அவளுக்கு எந்த விதத்திலும் ஒழுக்கத்தையும், அடிப்படை மனித நல்லியல்புகளையும் கற்றுத் தரவில்லையென்றே அவனுக்கு இன்றும் தோன்றுகிறது. அதற்குப் பின்னும் அவள் தன் ஜெப தபங்களையும், மந்திரங்களையும் முழங்கிக் கொண்டுதான் இருக்கிறாள். வேடிக்கை என்னவென்றால் அந்த வெள்ளைக்கார மருத்துவனுக்கும் பட்டு வேஷ்டி கட்டி விட்டு, அவனுடன் பெற்ற மகனுக்கு பூணூல் கல்யாணமும் செய்து வைக்கிறாள்.
அம்மா, அப்பாவிடம் இருந்து விவாகரத்து வாங்கிக் கொண்டு விலகிப் போன நாள் முதலாகவே அப்பாவும் இந்த வெற்றுச் சம்பிரதாயங்களில் நம்பிக்கை அற்றுப் போனவராகத்தான் இருந்தார். அவருடைய தாய், அவரைச் சந்தியாவந்தனம் செய்யச் சொல்லி வற்புறுத்திய போது, “இது பண்றதால மட்டும் நான் ஒரு முழு மனுஷனாவோ, நல்ல மனுஷனாவோ ஆகிட மாட்டேன். உன் மாட்டுப்பொண் பண்ணாத பூஜையும் இல்லை, செய்யாத ஹோமமும் இல்லை. ஆனால் உறவுகளுக்கு முக்கியம் தராமல் பணத்துக்காக, புருஷனையும், புள்ளையையும் விட்டுட்டு ஒரு வெள்ளைக்கார டாக்டர் கூட ஓடிப் போனாளே? அதுனாள் வரை நீ பண்ண பூஜையும், நான் சொன்ன மந்திரமும் எந்த விதத்தில் எனக்கு உதவியது?”, என்ற போது பாட்டியால் ஒன்றும் கூற இயலவில்லை. அதன் பின் அம்மா மீதுள்ள கசப்பு அவருக்குப் போன பின்பும் கூட, அவருக்குக் கடவுள் மீதோ, பூஜைகள் மீதோ மீண்டும் எந்த நம்பிக்கையும் ஏற்பட்டு விடவில்லை.
ஏழு வயதில் அம்மா பண்ணிய செயலின் தீவிரம் அவனுக்குப் பனிரெண்டு வயதில்தான் புரிந்தது. வார இறுதி விடுமுறைகளை, அவளுடன் கழிக்க வேண்டும் என்று கோர்ட் உத்தரவு. அம்மா இன்னமும் தன் பூஜை, புனஸ்காரங்களை நிறுத்திய பாடில்லை. தன்னுடைய ஆசாரத்தை, சைவ உணவை உண்ணுவதால் மட்டுமே நிலை நிறுத்திக் கொண்டிருந்தாள். டாக்டருக்குக் கோழியும், மாடும், பன்றியும் சமைக்க ஒரு தென் அமெரிக்கப் பெண் இருந்தாள். ஆறாயிரம் சதுர அடிகள் கொண்ட வீட்டில் வசிப்பதில் அவள் ஜென்மம் சாபல்யமாகி விட்டதாகத்தான் தெரிந்தது. வீட்டில் இருந்த டென்னிஸ் கோர்ட்டில் விளையாடி, நீச்சல் குளத்தில் நீந்தி, உடலையும் சிக்கென வைத்துக் கொண்டு, டாக்டருக்கு, தான் இன்னும் இளமையாகவே இருப்பதாகவும் காட்டிக் கொண்டாள்.
எல்லாத் தவறுகளும் செய்து கொண்டு அவள் வாழ்க்கை சந்தோஷமாகத்தானே கழிகிறது? கெளதமுக்குத் தொண்டை கசந்தது. அப்பா என்ன பாவம் செய்தார்? தன் கடமைகளை எப்போதும் தவறாமல் செய்து கொண்டு, மனித நேயம் பேணிய அவரை வாழ்க்கை ஏன் இவ்வளவு அலைக் கழித்தது? இதில் எந்த விதத்தில் நியாயம் இருக்கிறது? அம்மா சொகுசான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்க, அப்பா தனியாக, இந்த அமெரிக்க மண்ணில் அவனை வளர்க்க எத்தனை சிரமப்பட்டார்? அவன் மனமெல்லாம் பரவியிருந்த கசப்பைக் கண்டு அவரே எத்தனையோ முறை திகைத்திருக்கிறார். அவருக்கு ஒன்றிரண்டு வருடங்களில் அம்மா மீது இருந்த வருத்தமெல்லாம் மாறி விட்டது.
“We were not meant to be together,” என்பார் ஒரு நாள்.
” நானே அவள் பண்ணியதை ஏத்துக்கிட்டாச்சு. அவளை மன்னிச்சுட்டேனான்னு நீ கேக்கறே? யோசிக்க யோசிக்க, அவள் பண்ணியது ஒண்ணும் பெரிய பாவமில்லன்னுதான் தோணுது. அம்மா அப்பா சொல்றாங்கன்னு என்னக் கல்யாணம் பண்ணிக்கிட்டா. இப்பத்தான் தெரியுது, அவ என் கூட இருந்த எட்டு வருஷமும் அவ்வளவு சந்தோஷமா இல்லன்னு. எந்த மனுஷனுக்கும் வழ்க்கையில முக்கிய குறிக்கோள் சந்தோஷம்தான? ஸோ, சந்தோஷத்தத் தேடி அவ போனதுல நான் தப்பு சொல்ல மாட்டேன். என்னோட நடந்த அவ கல்யாணமும், நீ பிறந்ததும் அவ வாழ்க்கையில அவ சந்தோஷத்துக்கு இடையில வந்த குறுக்கீடுகள்னுதான் நாம எடுத்துக்கணும். நீ ஒரு தாயில்லாமல் வளர்வது உன்னுடைய துரதிர்ஷ்டம்தான். ஆனா, ஒண்ணு ஞாபகம் வச்சுக்கோ. உன்னிடம் இருந்து ஒன்று பறிக்கப் பட்டதுன்னா, வேறு ஒன்று உனக்குக் கிடைக்கும். அம்மா செஞ்சது பெரிய தப்புன்னு நினைச்சியானால், அவளை மன்னிச்சுடு. உன்னுடைய வெறுப்பே உன்னுடைய கைவிலங்கா மாறிடுமோன்னு பயமா இருக்கு,” என்பார் இன்னொரு நாள்.
அவருக்கு அடுத்தபடியாக அவனால் விக்ரமுடன் மட்டுமே அப்படியெல்லாம் பேச முடிகிறது. விக்ரம் உடன் அவன் கழிக்கும் நேரமெல்லாம் அவன் மிக சந்தோஷமாக உணர்கிறான். விக்ரம் மிகவும் சந்தோஷமானவன். எதையும் சுலபமாக எடுக்கத் தெரிகிறது அவனுக்கு. மறுனாள் ‘அனாட்டமி’யில் பரீட்சை வைத்துக் கொண்டு, இன்று அவனால் சியெர்ரா க்ளப் மீட்டிங்கில் கலந்து கொண்டு சுற்றுப் புறச் சூழலைப் பற்றிப் பேச முடிகிறது. மருத்துவக் கல்லூரியில் உடன் படிக்கும் மாணவியை டின்னருக்கு அழைத்து அவள் வர மறுத்ததை, அவன் அம்மாவிடம் சொல்லி, அவள் கேட்கும் ஆயிரம் கேள்விகளுக்கும் சிரித்துக் கொண்டே பதில் சொல்ல முடிகிறது. வீட்டுக்குத் திடீரென்று எட்டு இந்திய மாணவர்களை அழைத்துச் சென்று, அவன் அம்மாவின் சமையலறையில் நின்று அவன் அம்மாவுக்கு எடுபிடியாக எட்டு பேருக்கும் சமைக்க முடிகிறது. தந்தூரிச் சிக்கனையும், ரசத்தையும் ருசிக்கும் அளவு, மங்கோலியன் பார்பெக்யூ உணவையும் ரசிக்க முடிகிறது. மதங்கள் எதிலும் நம்பிக்கை இல்லை என்று சொல்லிக் கொண்டே, தலாய் லாமாவின் புத்தகங்களை வாசிக்க முடிகிறது. நேரம் கிடைக்கும் போதெல்லாம், சூப் கிச்சனுக்குச் சென்று எழைகளுக்குப் பரிமாறி, பாத்திரம் கழுவ முடிகிறது. இதையெல்லாம் அவன் எங்கிருந்து கற்றான் என்ற ஆச்சர்யம் கெளதமுக்கு எப்போதும். அவனுடன் சந்தோஷமாக எதைப் பேசினாலும், கடைசியில், அது அம்மாவைப் பற்றி பேசுவதில்தான் முடிகிறது.
“நீயேன் இன்னும் அம்மா பண்ணியதை உன் தோளில் சுமந்துட்டுத் திரியறே? பர்கெட் இட், கெளதம். இவ்வளவு பெரிய யுனிவர்ஸில, நீயும், நானும் உன் அம்மாவும், அப்பாவும் ஒரு துளி கூட இல்லை. சுயனலவாதி பிழைக்கிறான், உன் அம்மாவைப் போல. சந்தோஷமாகவும் இருக்கிறான். இதிலெல்லாம் நீ ஒரு ஜஸ்டிசைத் தேடினியானால், உனக்குத்தான் ஏமாற்றம். இந்த வாழ்க்கைக்கு அர்த்தமில்லையென்று நினைக்காதே. உன் வாழ்க்கையின் அர்த்தத்தை நீதான் தேட வேண்டும். உன் அம்மாவுக்கு அர்த்தம் பணத்தில் இருந்தது. அந்த பணத்தால் கிடைகிற வசதிகளில் இருக்கிறது. உன்னுடைய அப்பாவுக்கு அர்த்தம் உன்னை வளர்ப்பதிலும், மனித நேயத்திலும் இருக்கிறது. அவர்கள் இருவரும் சேர்ந்து வாழ முடியாமல் போனது உன்னுடைய துரதிர்ஷ்டம் மட்டுமே. அவர்கள் இருவரும் சேர்ந்து இருந்திருந்தாலும் அவர்கள் சந்தோஷமாக இருந்திருப்பார்களா என்ன? அவர்கள் இருவருக்கும் வேறு வேறு தேடல்கள் அல்லவா? உன்னுடைய அர்த்தம் எதில் இருக்கிறது என்று நீ தேடு,” என்றான் விக்ரம்.
ஆனால் இன்று அவனுடைய தேடல்களுக்கு எல்லாம் முடிவுதான் என்று நினைத்துக் கொண்டான். அப்பா இருக்கும் வரை அவனுடைய வாழ்க்கைக்கு அர்த்தம் இருந்தது போலவும் அவர் இறந்த பின்னே அவன் இருப்பிற்கே அர்த்தம் இல்லாதது போலவும் தோன்றியது. விக்ரம்தான் அவன் முழுதும் உடைந்து போகாமல் இன்று வரை தாங்கிக் கொண்டிருக்கிறான். ஆனாலும் வெறுமை அவனைச் சூழ்ந்து இருப்பது போன்ற துயரம்! மிச்சிகன் பல்கலைக் கழகத்தில் எம்.பி.ஏ சேர்ந்த போது இருந்த சந்தோஷம் எல்லாம் அப்பாவின் மரணத்துடன் மறைந்து விட்டது. படிப்பதிலும் ஆர்வம் குறைந்து விட்டது. எந்த நேரத்திலும், ப்ரொபஸர்கள் கூப்பிட்டு அவனை எச்சரிக்கலாம். எதிர்காலமே ஒரு சூன்யமாகத் தெரிந்தது.
அப்பா இறந்த புதிதில் இரு வாரங்கள் விக்ரம் வீட்டில்தான் தங்கி இருந்தான். அப்போது ஒரு நாள், அவன் துக்கத்தில் கண்ணீர் வடித்த போது விக்ரமின் தாய் அவனை அணைத்துக் கொண்டாள். அது அவனுக்கு ஒரு புது அனுபவமாக இருந்தது.
“உன்னை அழாதேன்னு சொல்ல முடியாது. நல்லா அழு. அழுது உன் துக்கததையெல்லாம் கரைச்சுடு.” என்றாள். அவனுடைய தாய் அவனை அணைத்த ஞாபகமே இல்லை அவனுக்கு. அன்றும் அவனுக்கு இதே கேள்விகள் இருந்தன. பணத்துக்காக, கட்டிய புருஷனையும், பெற்ற பிள்ளையையும் விட்டுப் போன அம்மா சகல செளபாக்கியங்களுடன் சந்தோஷமாக ஐரோப்பா டூர் போந நேரம், அப்பா தனியாக வீட்டில், இரவில் மாரடைப்பில் சாவானேன்? அன்றும் இப்படித்தான் அம்மா மீது கோப வெறியில் குமுறினான்.
“அதுக்கு என்ன பண்றது, கெளதம்? அவரவர்க்கு விதிச்சதுன்னு இருக்குல்லியா? உன் அம்மாவுக்கு விதிச்சது அவளுக்கு. அப்பாவுக்கு இப்படி விதிச்சுருக்கு. அதது அதன் போக்கிலேதான் போகுது. இதுதான் முரண்பாடே. நீ அம்மா தப்பானவள்னு நினைக்கிறே. Right and wrong is very relative தான் இல்லியா? உனக்கு ரைட்டாத் தோண்றது எனக்குத் தப்பாத் தெரியலாம். உன் அம்மா கெட்டவள் அப்படின்னு நீ நினைக்கிறே? எதனால்? அவள் உன்னையும், உன் அப்பாவையும் விட்டுப் போனதாலா? அவளைப் பொறுத்த வரை அவளுக்குப் பணம் முக்கியமா இருந்திருக்கு. அவள் மனசு அவளுக்குக் காட்டிய பாதையில்தான் அவ போயிருக்கா? அவள் எடுத்த அந்த முடிவு உன்னையும், உன் அப்பாவையும் பாதிச்சிருக்கு. ஆனா, உன் அப்பா அவளை மன்னிச்ச மாதிரி நீயும் மன்னிச்சுப் பாரேன், உன்னுடைய வருத்தங்களும் , சோகங்களும் மறைஞ்சிடும். இன்னொண்ணும் தமிழில் இருக்கு, ‘தீதும், நன்றும் பிறர் தர வாரா’, அப்படின்னு,” என்றவள், “அப்படின்னா என்ன தெரியுமா? நல்லதும், கெட்டதும் மற்றவங்களால நமக்கு வர்றது இல்லை,” என்றதும்,
“பின்ன என்னையும், அப்பாவையும் இப்படி விட்டுட்டு அவன் கூடப் போனது சரின்னா சொல்றீங்க?” என்றான் கோபத்துடன்.
“அவளப் பொறுத்த வரை சரி. உன்னப் பொறுத்த வரை தப்பு. ஆனால் உன்னுடைய கஷ்டமெல்லாம் அவளாலதான்னு நீ சொல்றதுதான் தப்பு. நல்லா யோசிச்சுப் பார். புரியும்,” கூறி விட்டுக் கீழே சென்று விட்டாள்.
விக்ரம் அவனைக் கலக்கத்துடன் பார்த்தான். “அம்மா இப்படித்தான். பட்டுன்னு உண்மைன்னு அவள் நினைக்கிறதைச் சொல்லிடுவாள். ஆனால் அவள் சொன்னதால அதுதான் உண்மைன்னும் நீ எடுத்துக்க வேண்டாம். அவளைப் பொறுத்தவரை அது சரின்னு அவ நினைக்கிறா. நீயே யோசி. உன் அப்பா இறந்த துக்கத்தில், நீ உன் அம்மாவிடம் வருத்தப் படுவதில் என்ன அர்த்தம் என்று யோசி. உன் அம்மா விட்டுப் போய் பதினெட்டு வருடங்கள் கழித்துதான் அப்பா இறந்திருக்கார். அவர் ஹார்ட் அட்டாக்கில் இறந்ததற்கு அவள் இத்தனை வருடங்கள் கழித்து எப்படிப் பொறுப்பாக முடியும்? உன்னுடைய அம்மா அவள் குடும்பத்தில், பணக்கார வாழ்க்கையில் சந்தோஷமாக இருப்பதுதான் உன்னுடைய கோபத்துக்குக் காரணம். அவளை அவள் கணவன் விட்டுப் பிரிந்தாலோ, வேறு எந்த வகையிலோ அவள் சிரமப்படுகிறாள் என்றால், நீ உன் அம்மாவை மன்னித்திருப்பாயோ?” என்றான்.
விக்ரம் கூறியதில் இருந்த உண்மை அவனைத் தாக்கினாலும், அந்த உண்மையை அவன் மனம் நிராகரித்து விட்டது.
இன்று இந்த ஆர்ட் ம்யூஸியத்தின் முன்னால் அமர்ந்து, தற்கொலைக்கு உரிய நாளாகத் தேர்ந்தெடுத்த இந்த நாள் முதல் அம்மாவின் மேல் கோபம் கூடத்தான் செய்கிறதே தவிர குறையவில்லை. தான் தற்கொலை செய்து கொண்ட செய்தி கிடைத்ததும் அம்மா என்ன செய்வாள் என்ற எண்ணம் ஓடியது. அவளால் முகம் சுழித்துப் பெருங்குரலெடுத்து அழக் கூட முடியாது. வெள்ளைக்காரக் கணவன் முன்னே எப்போதும் அழகு முகத்தை மட்டுமே காட்ட வேண்டும் என்று நினைப்பவள் அல்லவா என்று தோன்றியது. விக்ரமுக்குத் தெரிய வரும் போது அவன் என்ன செய்வான் என்று நினைத்தான். விக்ரம் வருத்தமாக இருந்தே பார்த்ததில்லை அவன். இவனுடைய மரணத்தையும் அவன் ரெம்பச் சாதரணமாகத்தான் எடுத்துக் கொள்வானோ என்று தோன்றியது, கெளதமுக்கு. இல்லை, இவ்வளவு பரந்து, விரிந்திருக்கும் யுனிவர்ஸில் கலந்து விட்ட துளி என்று கூட அவன் நினத்துக் கொள்வான் என்று நினைத்த போது, கெளதமுக்குச் சிரிப்பு வந்தது. தற்கொலை எண்ணம் மனத்தைக் கான்சராக அரித்துக் கொண்டிருக்கும் நாள் முதலாக அந்த எண்ணத்தைப் பற்றி விக்ரமிடம் சொல்லவில்லை, அவன். விக்ரமிற்குத் தெரிந்திருந்தால் வற்புறுத்திக் கவுன்சிலிங்கிற்கு அழைத்துச் சென்றிருப்பான், உயிர் வாழ மில்லியன் காரணங்களைத் தொகுத்து வழங்கியிருப்பான், ‘வாழ்க்கையில் மாற்றங்கள் மட்டுமே நிரந்தரம்’ என்று தலாய் லாமா புத்தகத்தில் படித்திருப்பதைச் சொல்லியிருப்பான். விக்ரம் நினைவில் சிறிது நேரம் அமர்ந்திருந்தான்.
இரண்டு மணி நேரம் அந்தப் பெஞ்சிலேயே அமர்ந்திருக்கும் உணர்வு வர, பார்வையை ஓட விட்டான். பல்கலைக் கழக வகுப்பு நேரம் துவங்கி விட்டிருக்கும். தெருக்களில் மாணவர்கள் நடமாட்டம் குறைந்திருந்தது. இனி பகல் உணவு நேரம் மீண்டும் தெருக்களில் கூட்டம் கூடும். அந்த இடத்தைத்தான் அவன் தற்கொலைக்குத் தேர்ந்தெடுத்திருந்தான். ஸ்டேட் ரோடும், லிபர்ட்டி ரோடும் சந்திக்கும் இடத்தில் எலெக்ட்ரிக் சிக்னல் இல்லை. வெறும் ஸ்டாப் சைன் மட்டுமே உள்ளது. போக்குவரத்து குறைந்த நேரங்களில், ஹார்மோன்களின் உந்துதலில் அதிவேகமாக கார் ஓட்டி வரும் அமெரிக்க மாணவர்கள் அங்கு வேகத்தைக் குறைக்காமலேயே போய் போலீஸில் மாட்டியதை கெளதம் அடிக்கடி கவனித்திருக்கிறான். அது போன்ற ஒரு கார் வேகமாக வரும் தருணத்துக்காகக் காக்கத் துவங்கினான். ஆர்ட் ம்யூஸியத்துக்குள்ளும் வெளியேவும் வரும் கூட்டம் குறைந்திருந்தது. உள்ளே போயிருந்த அந்தத் தாயும், மகனும் வெளியே வந்து கொண்டிருந்தனர். அந்தச் சிறுவன் முகத்தில் சந்தோஷம் துள்ளிக் கொண்டிருந்தது. ரோடுகள் சந்திக்கும் முனையில் ‘ஹாட் டாக்’ ஸ்டாண்டைப் பார்த்ததும் ஏதோ தாயிடம் கேட்பது தெரிந்தது. அந்தக் குட்டிப் பையனின் வாழ்க்கை இது போன்ற தாயால் சந்தோஷமாக இருக்கும் என்ற நினைப்பு மின்னல் போல கெளதமுக்கு ஓடியது. இபோது அவனுக்கு ஆர்ட் காலரியில் பார்த்த எதுவும் பாதித்திரா விட்டாலும், வளர்ந்தவனானதும்கவன் ஒரு பண்பட்டவனாக இருப்பான் என்றும் நினைத்துக் கொண்டான். கலையையும், வாழ்க்கையையும் ரசிக்கத் தெரிந்த மனிதனாக வளரும் அதிர்ஷ்டசாலியாக இருப்பான்.
பார்த்துக் கொண்டிருக்கும் போதே அந்த விபரீதம் நடந்தது. ஹாட் டாக் ஸ்டாண்ட் அருகே போன போது, அந்தச் சிறுவன் திடீரென்று ஒரே ஓட்டமாகச் சாலையை கடக்க, அதிர்ச்சியில் உறைந்த அவனது தாய், பின்னாலேயே ஓடும் போது, ஸ்டாப் சைனில், நிற்காமலேயே போன கார் அவளைத் தூக்கி எறிந்தது.
அதன் பிறகு நீண்ட நாட்களுக்குக் கெளதமுக்குக் கவுன்ஸலிங் வேண்டியிருந்தது.
[தற்போது அமெரிக்காவில் வசிக்கும் அலர்மேல்மங்கை ‘கல்லுக்குள் ஈரம்’ நாவலை எழுதிய எழுத்தாளர் ர.சு.நல்லபெருமாளின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.]