அறிவியல் புனைகதைகள் என்றாலே மிக ஆழமாக நம்முள் பதிந்து போயிருக்கும் பெயர் சுஜாதா. அவரின் எழுத்தை மீறி நம்மால் எதையும் ரசிக்க முடியுமா என்ற சந்தேகத்தோடே இந்தப் புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தேன். உண்மையிலேயே மிக அருமையான கதைகளைப் போட்டியின் மூலம் தேர்ந்தெடுத்துப் பரிசு வழங்கி இருக்கிறது ஆழி பதிப்பகம். இதன் தொகுப்பாசிரியர் சந்திரன் , இரா. முருகன் அவர்களின் துணையோடு தேர்வு செய்திருக்கிறார். பல்பரிமாணங்களிலும் அறிவியல் புனைகதைகளை அடுத்த தளங்களுக்கு எடுத்துச் செல்ல தமிழ் மகன், தி.தா. நாராயணன், நளினி சாஸ்த்ரிகள், ஆர். எம். நௌஸாத், கே.பாலமுருகன், வ.ந. கிரிதரன் முயன்றிருக்கிறார்கள். கி.பி.2700 இல் முப்பரிமாண உருவத்திலுள்ள ஒருவனை, நாற்பரிமாணங்களைக் கொண்ட வெளிநேரப் பிரபஞ்சத்தில் கொண்டு சென்று 180 பாகை உருவ மாற்றத்தைக் கொண்டு வந்து அவனை மரண தண்டனையிலிருந்து மேல் முறையீடு செய்யச் சொல்லிச் செல்கிறது ஒரு அண்டவெளி உயிரினம். இது “ நான் அவனில்லை “ என்ற கிரிதரன் ( கனடா) அவர்களின் கதை.. கொஞ்சம் விலாவரியாக இருந்தாலும் வித்யாசமாக இருந்தது.
மனிதனுக்கு எல்லாமே இரண்டா தெரியலாம். ஆனா இரண்டாகி தான் அடுத்த பத்து வினாடிகளுக்குப் பின் செய்யப் போகும் செயல்கள் எல்லாம் இரண்டு இரண்டு பிம்பங்களாகத் தெரிந்தால் என்ன ஆகும். இது நியூட்டனின் முதல் விதியோடு சம்பந்தப்படுத்தி இருக்கு இந்தக் கதையில். திடீர்னு நம்ம ரூம்ல நாமே அணுக்களின் பிளவில் இரண்டாகி தள்ளி நின்னு பார்க்கிறார்போன்ற உணர்வை ஏற்படுத்திய கதை. கே. பாலமுருகனின் ( மலேசியா) மனித நகர்வும் இரண்டாவது பிளவும் கொஞ்சம் அச்சப்பட வைத்த கதை.
சுஜாதா நினைவுப் புனைகதை என்றால் காதல் கலக்காமல் இருக்குமா என்ன. ”சாகும் தலம்” அந்த வகை. புராணப் பாத்திரப் பேர் கொண்ட அறிவியல் கதை. மானுட உணர்வு இணைப்புக் கொடுக்கப்பட்ட சகுந்தலை, துஷ்யந்தன் ரோபோக்கள் காதல் வயப்பட்டு மேலும் மனிதாபிமானமுற்று பூச்சிய வெளியில் பூமியின் 317 பகுதியைக் காப்பாற்றத் தற்கொலை செய்து கொள்ளும் இடம் நெகிழ வைத்தது. ஆர். எம். நௌஸாத் ( இலங்கை) அதிகபட்சமான சுஜாதா கதையோடு ஒத்துப் போவது போன்ற புனைவை எழுதி இருந்தார்.
சூரியன் கொஞ்சம் கொஞ்சமாக வெள்ளைக் குள்ளனாகி சிவப்பு பூதமாக மாறி உலகை எரித்து விடும் என்ற பயம் எனக்கும் உண்டு. ஆனால் அண்டவெளியின் அதிதாவல் புள்ளிகளில் ஒன்றைக் கடக்கும் சூரியன் மங்குவதாக அவர்கள் நினைக்க பூமி விலகி இன்னொரு விண் தாவல் புள்ளியைத் தாண்டி மேற்கே உதிக்கும் இன்னொரு சூரியக் குடும்பத்துள் நுழைகிறது. இதில் ஜோ, ஜி இருவருக்கும் மூளைத் திருத்தம் செய்து விண்வெளி தொழில்நுட்பஅறிவை ஒரே நாளில் புக வைப்பது அதிசயம். இதை நளினி சாஸ்த்ரி ( இந்தியா) ஈ.சா. வாஸ்ய உபநிஷதம், ஸ்லோகமெல்லாம் சொல்லி சூரியப் பெயர்ச்சியை இயல்பானதாக்குகிறார்.
பரிணாமம் கருவடைந்து பிள்ளை பெற்றுக் கொள்ளும் முறையில் ஐக்யூ அதிகமான வேற்றுகிரகப் பிள்ளையை தான் நினைத்த இயல்பான முறையில் ரம்யா பெற்றுக் கொள்ளும் கதை. மிகச் சிறப்பான கதை. கார்பன் டை ஆக்ஸைடு அதிகமானால் பூமியில் என்ன ஆகும், ரோபோக்களுடன் உறவு, கடல் பாசியைப் போன்ற உணவுகள் ( இடப் பற்றாக்குறையால் ) ., ஜீனோம்களில் குறிப்பிட்ட குரோமோசோம்களைத் திருத்தி பின் வரும் வயதில் ஏற்படப் போகும் வியாதிகளை நீக்கி சாகாவரம் பெற்ற மனிதர்களை உருவாக்குவது என அதிகம் சிந்திக்க வைத்த கதை. செய்யாறு தி. தா. நாராயணனின் ( இந்தியா) இந்தக் கதை மனித குலம் தற்போது செய்து வரும் சுற்றுச்சூழல் சீர்கேட்டை எச்சரிப்பதாகவும் இருந்தது.
கிளாமிடான் கதை உண்மையிலேயே அதிர்ச்சிக் கதைதான். மனிதர்களையே தாவரங்களாக உணவு வழங்காமல் குளோரொ ப்ளாசினைச் செலுத்தி பச்சையம் மூலம் சூரிய ஒளியில் ஸ்டார்ச் தயாரித்துக் கொள்ள வைப்பதும், ஆர். என் ஏக்கள் மூலம் அவர்களை தாவரத் தன்மை உள்ள மனிதர்களாக மாற்றுவதும் , அவன் முதுகில் சல்லி வேர் முளைப்பதும், மனிதர்களுக்கு எல்லாம் பதினாறு இலக்க எண் வழங்கப்படுவதும். உ. நா. சபை, நெ. சா. மனிதன், இதெல்லாம் படித்ததும் நம் தற்போதைய கிராமங்கள் ஞாபகம் வந்தன. உண்மைதானே நகரங்களில் வாழும் நாம் சொகுசாக இருக்க கிராமங்களில் வயல்களில் அவர்கள் கருகிக் கிடக்கிறார்கள் பயிர்களோடு பயிர்களாக. மிக வீர்யமாகப் பாதித்த இந்தக் கதைதான் முதலிடம் பெற்றிருக்கிறது. விவசாயத்தை, விவசாயிகள் படும் பாட்டை அறிவியல் புனைகதை மூலம் சொல்லி இருக்கும் இந்தக் கதை நீண்ட நேரம் நினைவை விட்டு அகலவில்லை. எங்கே கிராமத்துக்காரர்களை, விவசாயிகளைப் பார்த்தாலும் மனதில் கொஞ்சம் வருத்தத்தை உண்டு செய்தது. இவர்களை உறிஞ்சி நாம் உயிர்க்கிறோமோ என.
மிக கஷ்டமான பணி இந்த மாதிரி சிறப்பான கதைகளைத் தேர்வு செய்வதுதான். சுஜாதா என்னும் நாற்றங்காலில் விளைந்தவர்கள் என்ற அறிமுகத்தோடு ஆழி பதிப்பகம் இதைத் தொகுத்து வெளியிட்டிருப்பது சிறப்பு.
நூல் :- சுஜாதா நினைவுப் புனைவு 2009 அறிவியல் புனைகதைத் தொகுப்பு.
தொகுப்பாசிரியர் :- சந்திரன்.
பதிப்பகம் :- ஆழி பப்ளிஷர்ஸ்.
விலை :- ரூ. 45/