வாசிப்பும், யோசிப்பும் – 30: ‘சோபி’யின் உலகம் ( தத்துவத்தின் வரலாறு பற்றிய நாவல்); அபுனைவின் புனைவு!

வாசிப்பும், யோசிப்பும் - 30: 'சோபீஸ் உலகம் ( தத்துவத்தின் வரலாறு பற்றிய நாவல்); அபுனைவின் புனைவு!எனக்கொரு பழக்கமிருக்கிறது. எங்கே நூல்கள் விற்பனைக்குக் கழிவு விலையிலிருந்தாலும் விடுவதில்லை.  ஒரே நூலின் பல்வேறு பதிப்பகங்களின் வெளியீடுகளென்றாலும் வாங்கிவிடுவேன். குறிப்பாக இங்கு ‘டொராண்டோ’வில் கோடைக் காலமென்றால்  பலர் வீடுகளில் ‘கராஜ் சேல்ஸ்’ நடக்கும். அவ்விதமான விற்பனை நிகழ்வுகளில் நூல்களிருந்தால் சென்று பார்க்காமல் இருப்பதில்லை. அவ்விதமான கழிவு விற்பனை நிகழ்வுகளில் இருபத்தைந்து சதம், ஐம்பது சதத்துகெல்லாம் நூல்களை வாங்க முடியும். மிகவும் நல்ல தரமான நூல்களையெல்லாம் வாங்கும் சந்தர்ப்பங்களுண்டு. பல ஆங்கில செவ்விலக்கியப் படைப்புகள் பலவற்றை அவ்விதமான நிகழ்வுகளில் வாங்கியிருக்கின்றேன். அதுபோல் இங்குள்ள நூலகக் கிளைகளில் அவ்வப்போது நடைபெறும் நூல் விற்பனை நிகழ்வுகளில் நூல்கள் வாங்கத் தவறுவதில்லை. அவ்விதமான சில விற்பனை நிகழ்வுகளில் மூன்று டாலர்களுக்கு நூலகம் விற்கும் துணிப்பையினை வாங்கினால், அந்தப் பை கொள்ளூம் அளவுக்கு நூல்களை அள்ள விடுவார்கள். புனைவு, அபுனைவு என்று பல்துறைகளிலும் மிகவும் தரமான நூல்களை நான் நூல் நிலைய விற்பனை நிகழ்வுகளில் வாங்கியிருக்கின்றேன். காப்ரியல் கார்சியா மார்கெவ்ஸ், பியோதர் தஸ்தயேவ்ஸ்கி, டால்ஸ்டாய், ஜேர்சி கொசின்ஸ்கி, ஜான் மார்டெல், சார்ள்ஸ் டிக்கன்ஸ், ஏர்னெஸ்ட் ஹெமிங்வே, ஸ்டீன்பெக், கார்ல் மார்க்ஸ், சிக்மண்ட் பிராய்ட், காலிட் ஹுசைன்..  என்று பலரது புகழ்பெற்ற படைப்புகளை வாங்கியிருக்கின்றேன். நூலகங்கள் விற்பனையில் மிகவும் நல்ல நிலையிலுள்ள நூல்கள் கிடைக்கும். நல்ல நூல்களென்றாலும், அந்தக் கிளையில் அந்நூல் அதிகம் வாசகர்களால் பாவிக்கப்படாமலிருந்தால் குறிப்பிட்ட காலத்தின்பின் விற்று விடுகின்றார்கள் போலும். ஏனெனில் நான் வாங்கிய பல நூல்கள் புதியவையாகவே காணப்பட்டன. ஒருமுறை ஸ்நேகா பதிப்பகத்தில் அக்காலகட்டத்தில் பணிபுரிந்துகொண்டிருந்த நண்பர் பாலாஜி ஜேர்சி கொசின்ஸ்கியின் ‘நிறமூட்டிய பறவைகள்’ நாவலினைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடவிருப்பதாகக் கூறியபோது என்னிடமிருந்த அந் நூலின் இரு பிரதிகளிலொன்றினை அனுப்பி வைத்தேன். அவ்விரு நூல்களையும் நூலகமொன்றின் புத்தக விற்பனையில்தான் வாங்கியிருந்தேன். அத்தமிழாக்கம் அண்மையில் வெளிவந்திருப்பதாக அறிந்தபோது மகிழ்ச்சியாகவிருந்தது.

இவ்விதமாக நான் வாங்கிய நூல்களில் முக்கியமானவையாக ஜான் மார்டெலின் ‘லை ஆஃப் பை’, ‘பெளலோ கொலொ’வின் ‘இரசவாதி’, கார்ல் மார்க்சின் ‘டாஸ் கபிடல்’ , ஹென்ரிக் இப்சனின் புகழ்பெற்ற நாடகங்களிலொன்றான ‘பொம்மை வீடு, காப்காவின் ‘உருமாற்றம்’ மெல்வில்லின் ‘மோபி டிக்’ என்று கூறிக்கொண்டே செல்லலாம். இந்த வரிசையில் அண்மையில் நான் வாங்கிய நூலொன்று பற்றிச் சில வரிகள் கூறலாமென்று நினைக்கின்றேன். நோர்வே எழுத்தாளரான ஜொஸ்டின் கார்டெர் (Jostein Gaarder) நோர்வீயிய மொழியில் Sofies verden  என்று வெளியாகிப் புகழ்பெற்ற நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான  SOPHIES’S WORLD ( A Novel About the History of Philosophy)  என்னும் பெயரில் வெளியான நூல்தான் அது. ‘சோபீஸ் உலகம் ( தத்துவத்தின் வரலாறு பற்றிய நாவல்) என்னும் மேற்படி நாவலை அபுனைவைவின் புனைவு என்று கூறலாம். இதுவரை கால மானுட வரலாற்றில் உருவான தத்துவங்களின் வரலாற்றைப் புனைவொன்றின் மூலம் நாவலாசிரியர் கூறுகின்றார்.

பாடசாலையிலிருந்து வீடு திரும்பும் சோபி என்னும் மாணவிக்கு ஓர் ஆச்சரியம் அவளது வீட்டு தபால் பெட்டியில் காத்திருக்கின்றது. அவளது பெயருக்கு இரு கடிதங்கள் பெயரறியாத ஒருவரிடமிருந்து வந்திருக்கின்றன. முதல் கடிதத்தில் ‘நீ யார்’ என்ற கேள்வியும், இரண்டாவது கடிதத்தில் ‘இந்த உலகம் எங்கிருந்து வந்துள்ளது?’ என்ற கேள்வியும் காணப்படுகின்றன. இக்கேள்விகள் பதினான்கு வயதுச் சிறுமியின் சிந்தனையினைத் தூண்டி விடுகின்றன. இதன் பின்னர் அவளுக்கு ஒவ்வொரு நாளும் கடிதங்கள் வருகின்றன. இக்கடிதங்களை அவளுக்கு அனுப்புபவர் நடுத்தர வயதினரான தத்துவவியற் பேராசிரியரான அல்பேர்டோ நாக்ஸ் என்பவர். அவரது கடிதங்களினூடு தத்துவங்கள் பற்றிய வகுப்பினை அவள் எடுக்கின்றாள். சமயங்களின் வாயிலாக அன்றைய மானுடர் இவ்வுலக இருப்பினை புராணங்கள், விதி போன்ற கோட்பாடுகள் மூலம் அறிய முயன்றது முதல் பிளேட்டோ, சோக்கிரடீசு போன்ற கிரேக்க தத்துவஞானிகளிகளிலிருந்து, ஹியூம், கான்ட், ஹெகல்,  மார்க்ஸ் போன்றோரின் பல்வகையான அரசியல் கோட்பாட்டுத் தத்துவங்கள், மறுமலர்ச்சிக்காலம், ‘ரொமாண்டிசக்’காலம், ‘பாரோக்’ காலம் பற்றிய கலை பற்றிய தத்துவங்கள், சிகமண்ட் பிராய்ட் போன்றோரின் உளவியற் தத்துவங்கள், நவீன வானியற் பெளதிகத்தின் ‘பெரு வெடிப்புக் கோட்பாடு’ பற்றியெல்லாம் சோபி என்னும் அச்சிறுமி தனக்கு வரும் கடிதங்களினூடு புரிந்து கொள்கின்றாள். வாசகர்களாகிய நாமும் அவளுடன் சேர்ந்து அறிந்துகொள்கின்றோம்; புரிந்துகொள்கின்றோம்.

புனைவுகளை விரும்பிப் படிக்கும் ஒருவர் மிக இலகுவாக மானுடரின் இதுவரை காலத் தத்துவக் கோட்பாடுகளின் வரலாற்றை இப்புனைவினூடு அறிந்துகொள்வார். அபுனைவினைப் புனைவினூடு படைத்திருக்கும் ஆசிரியரின் முயற்சி பாராட்டுக்குரியது; வித்தியாசமான முயற்சியும் கூட. 1991இல் நோர்வீயிய மொழியில் வெளியாகிய மேற்படி நாவலானது இதுவரை 50 உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. முப்பது மிலியன்களுக்கும் அதிகமான பிரதிகள் விற்பனையாகியுள்ளன. ஆங்கில மொழிபெயர்ப்பு 1995இல் வெளியானது. திரைப்படமாகவும், கணினி விளையாட்டாகவும் மேற்படி நாவல் வெளியானதும் குறிப்பிடத்தக்கது.


‘குவர்னிகா’ இலக்கிய மலர் பற்றிச் சில வார்த்தைகள் …….

'குவர்னிகா' இலக்கிய மலர் பற்றிச் சில வார்த்தைகள் .......‘குவர்னிகா’ இலக்கிய மலர் வாசிக்கிறேன் (இன்னும் முடியவில்லை). தொகுப்பாளர்களின் கடும் உழைப்பு தெரிகிறது. எழுத்தாளர்கள் சிலரின் ஒன்றிற்கு மேற்பட்ட படைப்புகளைத் தவிர்த்திருக்கலாமென்று பட்டது. வாசித்த அளவில் பல ஆய்வு பூர்வமான கட்டுரைகளை மலர் உள்ளடக்கியிருக்கிறது தெரிகிறது. கட்டுரைகளில் முனைவர் மு.நித்தியானந்தனின் ‘அஞ்சுகம்: மலையக இலக்கியத்தின் முதல் பெண் ஆளுமை’, ந.ரவீந்திரனின் ‘சர்வதேசவாதம் – தேசியம் -… இனத்தேசியம் – சாதியம்’, லெனின் மதிவானத்தின் ‘தோழன் ஏப்ரகாம் சிங்கோ’, தர்மினியின் ‘தேவதைகளின் தேவதை’, ராகவனின் ‘யாழ்ப்பாணத்துச் சாதிய ஆதிக்க வடிவங்கள்’ , லேனா மணிமேகலையின் அதிகாரத்தை நோக்கி எம் முலைகளால் பேசுவோம்’, விஜியின் ‘சீமான் வெய் அவர்களின் பெண்ணியவாதக் கருத்தியலை முன் வைத்து’, ராஜன் குறையின் ‘ஊழிக்காலத்து உலகப் பேரரசு’ , ச.தில்லை நடேசனின் ‘யாழ்ப்பாண தலித் சமூக உருவாக்கமும் அசைவியக்கமும்’, எம்.ஆர்.ஸ்ராலினின் ‘மரபுவழித் தாயகம்: எழுச்சியும் வீழ்ச்சியும்’, சி.ரமேஷின் ‘1950களுக்குப் பின் யாழ்ப்பாணத்துக் கவிதைகள்’ ஆகிய கட்டுரைகள் மலரின் முக்கியமான கட்டுரைகள். ஈழத் தமிழர்களின் சமூக, அரசியல் வரலாற்றினை விரிவாக, தர்க்கபூர்வமாக வெளிப்படுத்தும் கட்டுரைகளாக ராகவன், தில்லை நடேசன், ஸ்ராலின் ஆகியோரின் கட்டுரைகள் விளங்குகின்றன. லெனின் மதிவானத்தின் ‘தோழன் ஏப்ரகாம் சிங்கோ’ பற்றிய கட்டுரையும் மலையகத்தமிழர்களின் வரலாற்றில் முக்கியமானதோர் ஆளுமையினைப் பதிவு செய்கின்றது. அந்த வகையில் முக்கியத்துவம் மிக்கது. நேர்காணல்கள் அனைத்துமே நன்கு நேர்காணப்பட்டுள்ளன. ‘திருகோவலூர் கவியுகனின்’ நேர்காணலில் போர்க்காலச் சூழலில் தமிழ், முஸ்லீம் சமூகத்தவர்கள் மத்தியில் நிலவிய முரண்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பல்வேறு ஆளுமைகளை வெளிப்படுத்தும் காத்திரமான நேர்காணல்கள். தொகுப்பின் சிறுகதைகள் , கவிதைகளை இன்னும் வாசிக்கவில்லை. ‘குவர்னிகா’ இலக்கிய மலர் நிறையில் மட்டுமல்ல ,உள்ளடக்கத்திலும் கனமானதுதான். பாராட்டுகள்