தொலைக்காட்சிகள் பெருகியதன் காரணத்தினால் நாடகங்களும், நாடக அரங்குகளும் குறைந்து வீட்டினுள் இருந்து தொலைக்காட்சி நாடகங்களைப் பார்ப்பது கலை ரசிகர்களினால் வழக்கமாகிக் கொண்டு வருகின்ற இன்றைய சூழ்நிலையில், மூன்று தசாப்தங்களுக்கு மேலாக ஈழத்துத் தமிழ் நாடகத்துறையில் தொடர்ந்து பணியாற்றிவரும் ‘தமிழ் அவைக்காற்றுக் கலைக்கழகத்தின்’ நாடக விழா – 2011 இலண்டன் வின்சன் சேர்ச்சில் மண்டபத்தில் அண்மையில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது. மொழிபெயர்ப்பு நாடகங்களை மேடையேற்றுவதில் தமிழ் அவைக்காற்றுக் கலைக் கழகம் கூடுதலாகக்கவனம் செலுத்துகின்றது என்ற கருத்து பலரால் முன்வைக்கப்பட்டபோதும், இம்முறை நாடக விழாவில் ‘தர்மம்’ (மனோ மனுவேற்பிள்ளை), ‘அயலார் தீர்ப்பு’(பேராசிரியர் சி. சிவசேகரம்), ‘படிக்க ஒரு பாடம்’(மாவை. தி. நித்தியானந்தன், ‘என் தாத்தாவுக்கு ஒரு குதிரை’(செழியன்) ஆகிய ஈழத்துப் படைப்பாளிகளின் எழுத்துருவாக்கத்தில் அமைந்த நாடகங்களை மேடையேற்றியிருந்தமை சிறப்பு அம்சமாகும்.
திரு. பாலேந்திரா, திருமதி ஆனந்தராணி பாலேந்திரா தம்பதியினரால் கடந்த ஏழு வருடங்களாக நடாத்தப்படும் ‘லண்டன் தமிழ் நாடகப்பள்ளி மாணவர்கள் ‘அயலார் தீர்ப்பு’, ‘படிக்க ஒரு பாடம்’ நாடகங்களை நடித்திருந்தார்கள். உண்மையில் சிறுவர்களின் உடை அலங்காரங்கள் உட்பட சிறுவர்களின் முகப்பூச்சுக்கள், பாத்திரங்களுக்கேற்ப முகபாவங்கள், உணர்வுகளை வெளிப்படுத்துகின்ற பாங்கு, தமிழ் மொழியை உச்சரிக்கின்ற விதம் போன்றவற்றை நுட்பமாக அவதானித்தபோது முறையான அரங்கப் பயிற்சிகளை அதாவது முறையான ஒத்திகைக்குப் பின்னரே மேடையேற்றம் கண்டுகொண்டதை உணர்த்தி நின்றது. கதையின் அடிப்படைக் கருவினை பாடல் மூலமாக வெளிப்படுத்தும் முயற்சி இவ்விரு நாடகங்களிலும் பார்க்கமுடிந்தது. பாடல் வடிவில் தாள லயத்தோடு நாடகங்களின் பல குறிப்புக்களை விவரப்படுத்தி, நாடக உயிரோட்டத்தினை பார்வையாளர்களிடம் கொண்டு சென்றமை இங்கு குறிப்பிட்டுக்கூற வேண்டியதொன்றாகும். பாடல்களை நெறிப்படுத்திய கலைஞர் ஆ.வேந்தன் பாராட்டுக்குரியவர்.
தமிழ் அவைக்காற்றுக் கலைக் கழகத்தின் நீண்டகால நடிகரும், ‘ஓர் இதயத்திலே’என்ற திரைப்படத்தின் மூலம் லண்டனில் நன்கு அறியப்பட்டவருமான திரு. மனோ மனுவேற்பிள்ளையின் பிரதியாக்கத்தில் அமைந்திருந்த ‘தர்மம்’ என்ற குறு நாடகத்தினை திரு. மனோ மனுவேற்பிள்ளையுடன் நாடகத்துறையில் பல விருதுகளைப்பெற்ற ஆனந்தராணி பாலேந்திரா, தனித்துவமான நடிப்பாற்றல் படைத்த ச.வாசுதேவன் ஆகியோர் சேர்ந்து நடித்திருந்தனர். புலம்பெயர்ந்த தமிழ்மக்கள், பல்வேறு துன்பங்கள்மத்தியில் ஈழத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் மக்களுக்கு நிதி சேர்க்கும்போது எதிர்கொள்ளும் பிரச்னைகளை நகைச் சுவையோடும், இலாவகமான நடிப்போடும் சித்தரித்த காட்சிப் படிமங்கள் பார்வையாளர்களை யதார்த்தமான பலகோணங்களில் சிந்திக்கவைத்து மகிழ்ச்சிப்படுத்தியது என்றால் அது மிகை ஆகாது.
பழைய பகட்டில் தற்கால நிதர்சனத்தை மறந்து செயற்படுவதால் ஏற்படும் விபரீதத்தை விளக்கும் புதிய கவித்துவமான ‘என் தாத்தாவுக்கு ஒரு குதிரை இருந்தது’ என்ற நாடகத்தினை ஆனந்தராணி பாலேந்திரா, ச.வாசுதேவன் போன்ற சிறந்த நடிகர்களுடன் பா.சத்தியேந்திரனும் சேர்ந்து மிகச் சிறப்பாகநடித்திருந்தார். எதுவித தடங்கலுமின்றி பாத்திரங்களினூடான தொடர்பாக்கி சமூகங்களிடையே இடம்பெறும் சம்பவங்களை உரையாடிய விதமும், அவற்றைப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்த நடிப்பும் புலம்பெயர் அவசர வாழ்வோட்டத்தில் எவ்வளவுதூரம் அரங்கப் பயற்சிகள் சாத்தியமாகின என்பதை வெளிப்படுத்திக் காட்டியது.
கவிஞர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், இசைக்கலைஞர்கள், நாடகக் கலைஞர்கள், ஊடகவியலாளர்கள், கலை ஆர்வலர்கள் எனப் பலரும் இந்த நாடக விழா 2011 இற்கு வருகைதந்து மண்டபம் நிறைந்து காணப்பட்டமை தமிழ் அவைக்காற்றுக் கலைக்கழகத்தின் நாடகத்துறைக்கு கிடைத்த பெரும் வெற்றியாகக் கருதமுடிகின்றது. நாடகங்கள் அனைத்தையும் நெறிப்படுத்திய க.பாலேந்திரா அவர்கள் மிகுந்த பாராட்டுக்குரியவர். நாற்பது ஆண்டுகளாக நாடகத்துறையை நெறிபடுத்தியவர்… வெறும் மகிழ்வூட்டுதலைக் கொடுப்பது மட்டுமன்றி, சமூகப் பணியிலும் மாபெரும் அங்கமாக ஓங்கி நிற்கும் இந்த நாடகக் கலையை அவர்கள் தொடரவேண்டுமென தமிழ் ரசிகர்கள் சார்பில் வாழ்த்துகின்றது என்மனம்.
நீலாவணனின் ‘ஓவண்டிக்காரா…’என்ற பாடலின் மூலம் பிரபலமான மா.சத்தியமூர்த்தி, தர்சினி சிவசுதன், விஜயகுமாரி பரமகுமரன், மஞ்சுளா சத்தியேந்திரன் ஆகியோர் மகாகவி, நீலாவணன், சு.வில்வரத்தினம், சி.சிவசேகரம், சண்முகம் சிவலிங்கம், வ.ஐ.ச.ஜெயபாலன், மு.நித்தியானந்தன் போன்ற ஈழத்துக் கவிஞர்களது கவிதைகளை, எம். கண்ணனின் இசையமைப்பில் பாடல்களாக ‘கானசாகரன்’ இசைநிகழ்ச்சியினூடாக மகிழ்வித்து, நாடக விழாவை இனிதே நிறைவு செய்திருந்தனர். ‘இளையோர்களே எமது எதிர்காலம். தொடர்ந்த நாடக மேடையேற்றங்களே தீவிர நாடக இயக்கத்தை வலுப்படுத்தும்’ என்ற தமிழ் அவைக்காற்றுக்கலைக் கழகத்தின் குறிக்கோள் தொடர்ந்தும் வலுப்பெறட்டும்!
Navajothy Baylon : navajothybaylon@hotmail.co.uk
28.5.2011.