சொல்லித் தீராத சங்கிலி
– எம்.ரிஷான் ஷெரீப் –
எறிகல்லோடு சேர்ந்து வீழ்ந்த தாரகையொன்று
வர்ணத் திரைச்சீலைக்கப்பால்
சமையலறையில் உறைகிறது
வரவேற்பறையிலிருந்து எழும்புகின்றன படிக்கட்டுக்கள்
யன்னலால் எட்டிப் பார்க்கும் வெயிலுக்கு
ஏறிச் செல்லப் பாதங்களில்லை
கூடத்தில்
வீட்டின் பச்சையைக் கூட்டுகிறது
பூக்கள் பூக்காச் சிறு செடியொன்று
காலணி தாங்கும் தட்டு
தடயங்களைக் காக்கிறது
ஒரு தண்ணீர்க் குவளை
தோலுரித்த தோடம்பழச் சுளைகள் நிறைந்த பாத்திரமொன்று
வாடாத ஒற்றை ரோசாப்பூவைத் தாங்கி நிற்கும் சாடி
வெண்முத்துக்கள் சிதறிய மேசை விரிப்புக்கு
என்னவோர் எழில் சேர்க்கின்றன இவை
பிரகாசிக்கும் கண்கள்
செவ்வர்ணம் மிகைத்த ஓவியமொன்றென
ஆகாயம் எண்ணும்படியாக
பலகை வேலிக்கப்பால் துள்ளிக் குதித்திடும்
கறுப்பு முயல்களுக்குத்தான் எவ்வளவு ஆனந்தம்
எந்த விருந்தினரின் வருகையையோ
எதிரொலிக்கிறது காகம்
அவர் முன்னால் அரங்கேற்றிடவென
வீட்டைத் தாங்கும் தூண்களிரண்டின் இதயங்களுக்குள்
ஒத்திசைவான நாடகமொன்று ஒத்திகை பார்க்கப்படுகிறது
இரவின் அந்தகாரத்துக்குள் ஒளிந்துபோன
காதலின் பெருந்தீபம்
சொல்லித் தீராத சங்கிலியொன்றோடு
மௌனத்தைப் பிணைத்திருக்கிறது
என்னிலும் உன்னிலும்
‘ரிஸானா’ என்னிதயம் உழுதுகொண்டிருக்கிறது உன்னை….
– நவஜோதி ஜோகரட்னம் , லண்டன்.-
கீரிமலையில்
மாலை போட்ட கிடாயும்;
வேள்விபோட்ட தலையின் நினைவும்;
நெஞ்சில் இருக்கிறது இன்னும்..
தயவில்லா ஒரு
சிட்டுக்குருவியின் தலையை
வேள்வி; பார்த்த அதிர்வில்
அரபுநாட்டில்; கடுங்கசப்பு எனக்கு
சிலிர்த்தது என்னிதயம்
சிவப்பாகி சிந்திக்கொண்டிருந்தது கண்கள்…
ஆ… கொடியவரே என்று
அத்துமீறி என்னை
அறையெங்கும் ஒலிக்க வைத்தது…
மன்னிப்பு இல்லாமல்போன
ஏழை ரீஸானா…
மூதூரில் சிறகடித்த பறவையே! …
சாவுகள் நிட்சயிக்கப்படுகிறதாம்
புதுவருடம் தை இரண்டாம்
புதன்கிழமை
புது வண்ண உடைக்குள்
ஓட்டிப் படிகிற உடலுக்கு
வெள்ளாடை போர்த்தி
உணர்வுகள் சாக
அரபு நாட்டின் அந்நிய வாள் உன்னை
அரிந்து கொண்டதா…?
ஐயோ என்று…தொலை தூரத்தில் கத்தும்; கோளை நான்…
பதினேழு வயதில் பயணித்த மாதே…
வயது பதினேழில்தான்;; எனக்குக் காதல் பெருக்கெடுத்தது..
அது என் முதல் காதல்…
துளிர்க்கும் என் சிரிப்பிற்கும்
என் பெண்மைக்கும்; ஒரு தனி மரியாதை..
ஆயிரம் கனவுகள் என்னுள்…
காற்றை அடித்து எழுப்பும் – பால்
நிலவைத் தொட்டுச் செல்லும் – என்
குடும்ப இதழ்கள் எழுந்து விரிந்து
என் உடலைத் தடவிக் கொடுக்கும்
வயது இருபத்துநாலில்
காதலில் உருவெடுத்த – என்
குட்டி மகன் என்னை கட்டி அணைத்தானடி – உன்னை
அரபு மண் கட்டி அணைத்ததோ!…
ரிஸானா நீ உம்மா…
மொட்டாக்குப் போட்ட எந்நாட்டுப்பெண்ணே
உன் இளமைக் கனவுகள்
உனக்குள்ளேயே திரும்பியதோ!
காற்றால் பறவையால் பாடலால் அரபுநாட்டால்
ரிஸானா நீ எங்கே…?
உன் கனவுகள் எங்கே?
உலகம் உன்னைத் தாலாட்டுகிறது …நீ தூங்கம்மா
பாசாங்கு இசையோடு;; நீ தூங்கம்மா… இன்னும்
சிதறும் உணர்வுகளை உணரத் தருவேன்
மறுபிறப்பு ஒன்று இருந்தால் மட்டும்;….
navajothybaylon@hotmail.co.uk
பெண்ணியம்!
– கலைமகள் ஹிதாயா ரிஸ்வி –
பலம் வாய்ந்தவர்கள் யார் ..?
ஆண்களா பெண்களா..?
விவாதம் இல்லை
ஆண்களே தான்
சமூகத்தில்
சமுதாயக் கண்ணோட்டத்தில்
சரீர வாகுவில்
எல்லாமே பலசாலிகள்
ஆண்கள் தான் !
விடுவோம் விவாதத்தை
பலசாலித் தனத்தை
அதிகமதிகமாய்ச்
செலவிடுபவர் யார் ..?
ஆண்களா பெண்களா..?
பெண்ணியம்
பேசப்படப் போகிறது என்றாலே
உதறலெடுக்கும் சிலருக்கு
இவர்களெல்லாம்
மனங்களின் அகலத்தை அறியாமல்
ஆழத்தை அறிவதற்காய்
ஆபத்தில் விழுந்தவர்கள் !
தாய்மை -பெண்மையின் துலாக்கோல்
குறை – யார் மீதிருப்பினும்
‘மலடி’ என்ற பட்டத்தின்
நூலை அறுத்துவிடும் கத்தரிக் கோல்
தாயின்
சுய நலங்களைக் கூட
சுரண்டியெடுக்கிறது -அந்த
உதிரம் கலந்த உதிரக் கட்டி
உலகை எட்டிப் பார்க்க முன்பே ,
எட்டி உதைக்கும் மழலையை
வெளிக் கொணர …..
மாது படும் துன்பம்
பிரசவித்த பின் பரவசப்படும்
பலருக்குத் தெரிவதில்லை
இயந்திர மயமாகி
நவீன யுகமாகியும்
இதற்கு மட்டும்
மனித வலு மாதுவின் பலம் –
மழலை கிடைத்து விட்டது
கொஞ்சுதற்கும் கெஞ்சுதற்கும்
நான் -நீ
ஆண் மழலையா ..?
சொல்லவே வேண்டாம்
நாளை தோள் சுமக்க வந்த யுகபுத்திரன்
நல்ல சக்தி வேண்டாமா ..?
உதிரமே ஊட்டமாக
தாயின் சமர்ப்பணம்
நானா வித சத்துக்கள்
அவன் உயிர்ப் பூவைச் சுமக்கும்
சாண் பிள்ளை -ஆனாலும்
ஆண் பிள்ளை அல்லவா ..?
நன்றாகச் சாப்பிடனும் !
பாட்டிமாரின் பாசப் புராணம்
கிழக்கை வெளுக்க வைக்கும் .
பெட்டைப் பிள்ளையா…?-எதற்கு
முட்டை கோப்பி .
அவனுக்கே அதிக பலம் வேண்டும் .
அண்ணாவுக்குத் தங்கையா ..?
இருக்கவே இருக்கிறாள்
குட்டி குட்டி வேலை வாங்க.
தமக்கையா …?
தம்பி களைந்து போடுகின்ற
துணி மணிகளைத்
துவைத்து அழுத்தும்
துடிப்பான இயந்திரம்
வாய்க்குச் சுவையாக
வேளைக்குச் சமைத்துப் போட
ஆயாவாய் -தாய் !
அடுக்களைக்குள்ளே
அடுப்பூதி ஊதி
அவள் வயிற்றறைக்குள்
உயிர்க் காற்று சுருங்கிப் போகும் .
பள்ளிக்குப் பிள்ளையை அனுப்பி
படிப்பித்தாக வேண்டும்
நாளை அவன் வீட்டின்
ராஜாவாக வேண்டும்
பள்ளி கொள்ளும் நேரத்தை
பாதியாய்க் குறைத்து விட்டு
பனியுதிரும் காலையிலே
சாதம் சமைத்தாக வேண்டும்!
கட்டிப் பொதி கொடுத்த பின்னே
காலைப் பரபரப்பில்
பிள்ளைகளையும் பதியையும்
அனுப்பி வழி பார்க்க வேண்டும்
புத்திரி வளர்ந்து விட்டாள்
மாற்றான் தோட்டத்துப் பூவுக்கு
நீர் வாக்கும் மனப்போக்கு .!
அடுப்பூதத் தெரிந்தால் தான்
அத்தையின் மோதிரக் குட்டு !
அடுக்கடுக்கான வேலைகள்
அத்தனையும் தெரிந்தாகனும் !
யௌவன வயதிலும்
சுழலும் பம்பரமாய் ,
சுந்த்தர வதனத்தாள் !
வதுவைக்குப் பின்னால்
பதியின் பணிவிடைக்கு
தயார் நிலையில் தாரம் !
தன்னையிழந்து
தன் சுகத்தை இழந்து ….
மறந்து விட முடியுமென்றால்
விடும் மூச்சுக் கூட
இவளுக்கு இரண்டாம் பட்சமே !
நீராவியாகி முகிலாகி
மழையாகி…..
மீண்டும் நீராவியாகி
பிரதியுபகாரம் கருதாத
நீர் வட்டம் போல
பெண்ணவளின் வாழ்க்கை வட்டம்….!
தனக்கென்று எதுவுமில்லாமல்
தன்னையே உருக்கிக் கொள்ளும்
மெழுகுவர்த்தியாய் …!
அன்னை ஓர் ஆலயமாம்
யார் சொன்னது இல்லையென்று?
ஆமாம்!
அன்னை ஒரு
காரியாலயம்…!
கவிதை வந்தது…
-செண்பக ஜெகதீசன் –
இனிய மாலைப் பொழுது,
இசைக்கும் தென்றல் காற்று,
கனியைச் சுவைக்கும் கிளிகள்
கானம் பாடுது பாராய்,
தனியே ஒருபெண் நிலவு
தரையில் வந்தாள் உலவி,
குனிந்தே பார்வை வீசிட
குதிக்குது இதயம் ஆசையில்…!
இயற்கை என்பது இதுதான்
இவளின் பார்வை மதுதான்,
முயற்சி செய்து பார்த்தேன்
முடிய வில்லை விலக,
கயற்கண் விழிகள் கண்டேன்
காட்சியை மனதில் கொண்டேன்,
பயிற்சி ஏது மில்லை
பாய்ந்து வந்தது கவிதை…!
மரணம்
– மெய்யன் நடராஜ் –
சுவாசத்தின் மறதி
வாழ்வின் இறுதி
எல்லோருக்கும் உறுதி
வாழ்தலின் மகத்துவம்
உணர்த்தும்
தெய்வத்தின் தத்துவம்
வியாதிகளின் விடுதலை
நரகத்தின் முற்றுப்புள்ளி
சொர்க்கத்தின் திறப்பு விழா
உயிர்ப்பின் காலங்களில்
உணர முடியாத
ஆத்மாவின் அந்தபுரத்து
கனவுகள் அரங்கேறும்
நாடக மேடை
உருவகிக்க முடியா
உலகத்தின் மாளிகையில்
குடியேற படியேறும்
உயிர்களுக்கு
திறக்கப்படும் தேவலோக கதவு
வழங்கும் அனுமதி பத்திரம்
யாரும் முண்டியடித்து
முயற்ச்சிக்காவிட்டாலும்
முறையோடு வாங்கிக் கொள்ள வேண்டிய
காலத்தின் கட்டாயம்
meiyan nadaraj Doha Qatar
மன்னார் அமுதன் கவிதைகள்!
1.
கர்த்தாவே! என் வாய்க்குக் காவல் வையும்
கர்த்தாவே,
என் வாய்க்குக்
காவல் வையும்
என்
உதடுகளின் வாசலைக்
காத்துக்கொள்ளும்.
அவனும் நானும்
ஆணாகவே இருந்தோம்
இருந்தும்
அவன் மேன்மையானவனானான்
திருடனென்றாலும்
உமக்கு
வலப்பக்கம் வீற்றிருக்கும்
திருடனாய்
அவன் மேன்மையானவனானான்
கடைச்சரக்கா இலக்கியமென
காணுமிடமெலாம்
பேசித் திளைப்பதில்
அவன் மேன்மையானவனானான்
எனது வாயை
மிதித்தபடி
அவன் பேசிய
சுதந்திரமும் பிறப்புரிமையும்
கேட்டவர்கள் கூட
சொன்னார்கள்
அவன் மேன்மையானவனென
கலாச்சார உடையில்
வெள்ளையும் கறுப்புமான
மேன்மையானவனே
தயக்கம் வேண்டாம்
சேலையும் கலாச்சார உடைதான்
ஒருமுறை அணிந்துபார்
அழகாய்த்தானிருக்கும்
கர்த்தாவே,
என் வாய்க்குக்
காவல் வையும்
என்
உதடுகளின் வாசலைக்
காத்துக்கொள்ளும்.
2.
கோயிலும் கடவுளும்
கர்த்தாவே,
என் வாய்க்குக்
காவல் வையும்
என்
உதடுகளின் வாசலைக்
காத்துக்கொள்ளும்.
அவனும் நானும்
ஆணாகவே இருந்தோம்
இருந்தும்
அவன் மேன்மையானவனானான்
திருடனென்றாலும்
உமக்கு
வலப்பக்கம் வீற்றிருக்கும்
திருடனாய்
அவன் மேன்மையானவனானான்
கடைச்சரக்கா இலக்கியமென
காணுமிடமெலாம்
பேசித் திளைப்பதில்
அவன் மேன்மையானவனானான்
எனது வாயை
மிதித்தபடி
அவன் பேசிய
சுதந்திரமும் பிறப்புரிமையும்
கேட்டவர்கள் கூட
சொன்னார்கள்
அவன் மேன்மையானவனென
கலாச்சார உடையில்
வெள்ளையும் கறுப்புமான
மேன்மையானவனே
தயக்கம் வேண்டாம்
சேலையும் கலாச்சார உடைதான்
ஒருமுறை அணிந்துபார்
அழகாய்த்தானிருக்கும்
கர்த்தாவே,
என் வாய்க்குக்
காவல் வையும்
என்
உதடுகளின் வாசலைக்
காத்துக்கொள்ளும்.
3. சோல்ஜர் @ சொறிநாய்
சொறிநாயைப் பிடித்து
“சோல்ஜர்” எனப் பெயர் வைத்து
கறியோடு சோறும்
வெறியேற அபினும்
குழைத்துண்ணக் கொடுத்து
வடக்கே போ என்றான்
வேட்டைக்கு
காவாலி சோல்ஜர்
கடைசித் தெருதாண்டி
முக்கி முனகி
மோப்பம் பிடித்தபடி
கால்தூக்கி
எல்லை வரைகின்றான்
என் வீட்டுச் சுவரில்
அடித்து விரட்ட
ஆளில்லா வீடொன்றில்
நாநீட்ட
தாகம் தணித்தவளின்
கைநக்கி
கோரைப்பல் தெரியச்
சிரித்தான்
வேட்டை நாயில்லா
வீடொன்றாய்ப் பார்த்து
கோழி இரண்டையும் -தென்னங்
குலை நான்கையும்
தேசியச் சொத்தாக்கினான்
சிதறுண்ட கால்கொண்ட
சிறுபுலியின் கதவுடைத்து
பெண்மையை அரசுடைமையாக்கினான்
காலம் பொறுமையாய்
காத்திருக்கிறது
காலம் வருவதற்காய்
4. தேவதைகளின் தனிமை
நீயென்னைத்
தனித்திருந்த
நாட்கள் நான்கும்
நரகங்களாகிப் போயின
பார்க்கும் பொம்மைகளில்
கூட நிழலாடியது
உன் முகம்
அதிகாலை அணைப்பும்
முத்தமும் சிணுங்கலும்
எதுவுமற்று விடிந்திருந்தது
வாழ்க்கை
உன்னை வந்தடைந்த
ஐந்தாம் நாள் காலையில்
ஊர்க்குருவிகளோடும்
ஓட்டுப்பல்லிகளோடும்
தோட்டத்துப் பூக்களோடும்
பேசிக்கொண்டிருந்தாய்
மனிதர்கள் அற்ற
தனிமைப் பெருவெளியில்
நீ
மகிழ்ச்சியோடு
மட்டுமேயிருந்தாய்
கண்டவுடன்
பொம்மைகளைப் புறமொதுக்கி
கட்டிக்கொண்டாய்
அக்கணத்தில்
அர்த்தப்படுத்தியிருந்தாய்
என்
வாழ்க்கையையும்
தனிமையையும்
5. தேவதைகளின் மொழி
பல்லிகளைக் காட்டி
“ஊ.. ஊ..”
பறவைகளைக் காட்டி
“கீ.. கீ.”
அடிக்கவோ
பிடிக்கவோ போனால்
“அப்பா ஹூ ஹூ”
வாலாட்டி நாநீட்டி
விளையாடி மறைகின்றன
பல்லிகள்
நாளை வருமாறு
கொஞ்சி அனுப்புகிறாள்
பறவைகளை
தேவதைகளின் மொழியறிய
நாயைக் காட்டி
“தோ… தோ…” என்கிறேன்
சிரித்து மறுத்து
“நா….ய்..ய்” என்கிறாள்
திக்கித்திக்கி
6. நானற்ற பொழுதுகளில்
நீ
முட்டியை மடக்கி
முகத்தில் குத்தியதில்
முத்திரை குத்தப்பட்ட
கடிதத்தைப் போலவே
கிழிந்து போயிருந்தது
என் தாடை
மருந்திடச் சொல்கிறாய்
முட்டிக்கு
பெண்ணென்றான பின்
பெரிதாய் என்ன செய்திடுவாய்
எல்லா இராணுவங்களும்
செய்ததைவிட
அடுப்படியில் கூட
எனக்கான
கருத்தோ கொள்கையோ
கருக்ககட்டக் கூடாதெனும்
கொள்கையோடே வாழ்கிறாய்
விதிமுறைகளை
என்னிடமும்
விதிவிலக்குகளை
எல்லோரிடமும்
பேசுபவனே
எழுதி முடிக்கப்பட்ட
கவிதையிலிருந்து
தூக்கி வீசப்பட்ட
சொற்களைப் போலவே
நிராகரிக்கப்பட்டிருப்பாய்
7. யுத்தசாட்சி
மும்முறை வீழ்ந்த
என்னிறைவா
நானும் பாரம் சுமக்கின்றேன்
நீர் தாகமாயிருந்தீர்
நானோ பசித்திருக்கின்றேன்
யாருக்கெதிரான போரிலும்
முதலில் தோற்கடிக்கப்படுவது
நாங்கள் தானே
எப்படியிருக்கிறாயென
எவரும் கேட்பதில்லை
எத்தனை முறையென்றே
கேட்கிறார்கள்
உடல் கிழிந்து
உயிர் கருகிய நாட்கள்
எத்தனை என்று
தெரியவில்லை
முள்முடிகள் குத்தியதில்
முட்டிக்கால் தாண்டியும்
ஓடிக்கிடக்கிறது இரத்தம்
எத்தனை பேரென்று
எண்ணவில்லை
காடையர்கள்
பகிர்ந்துண்ட
கடைசி அப்பத்தைப் போல்
நானும் சிதறிக்கிடக்கிறேன்
எத்தனை முறையென்றும்
நினைவிலில்லை
கிழிசல் வஸ்திரங்களைக் கீழிறக்கி
மீண்டும் மேலேறுபவனை உதறித்தள்ளி
காத்திருப்போரிடம் கேட்கிறேன்
“உணவுப் பொதிகளை
வைத்திருப்போரே
உங்களில் பாக்கியவான்கள்.
அவர்களுக்கு
நான் சித்தமாயிருக்கிறேன்”
தமிழைப் படி பக்தனே!
– வே.ம.அருச்சுணன் – மலேசியா –
நாட்டின் தொலைதூரத்திலிருந்து
என்னைப் பக்தியோடு காண வந்த பக்தனே
உன்னை ஒன்று கேட்பேன்
தெளிவாகப் பதில் கூறு……!
தமிழ்க்கடவுளே……!
பத்துமலை முருகனே
அன்பின் பிறப்பிடமே
என் தெய்வமே
உண்மைப் பக்தனான என்னிடம் கேள்வியா……?
என்ன சொல்கிறாய் முருகா…?
எனக்கு ஒன்றும் விளங்கவில்லையே
என் பக்திமீது சந்தேகமா முருகா….?
விளக்கமாகக் கூறுங்கள்
பக்தனே……!
நான் சொல்லப் போவதைக் கவனமுடன் கேள்
நீ பேசும் தமிழைக் கேட்டேன்
தமிழை நீ உச்சரிக்கும் முறையக் கேட்டேன்
காதில்…….!
ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போல் இருக்கிறது……!
முருகா……!
இதுவென்ன சோதனை…….?
என் தமிழ் உச்சரிப்பில் பிழையா….?
பக்தா…..உண்மையைக்கூறு
தமிழ்க்கடவுளான என்னை வணங்கும் பக்தனே
நீ தமிழ்ப் படித்தாயா……?
பக்தனே………ஏன் மௌனமாகிவிட்டாய்.?
உன் உடல் ஏன் நடுங்குகிறது?.
ஏன் உன் தலையைத் தொங்கப்போட்டுக் கொண்டாய்?
நீ தமிழ்ப்பள்ளிக்குச் சென்றாயா……?
அங்கு முறையாகத் தமிழ்ப் படித்தாயா…..?
முருகா……உங்கள் முகத்தைப் பார்க்க
எனக்குத் தைரியம் வரவில்லை…..!
தமிழுக்குக் கடவுளாக வீற்றிருக்கும்
தங்கள் தமிழைப் படிக்காமல் போய்விட்டேன்
தங்களுக்குத் துரோகம் செய்துவிட்டேன்….!
என்னை மன்னியுங்கள் முருகா….!
தமிழ் மக்களுக்காக
நான் பாடியப் பாடல்களை
நீ படிக்காமல் போய்விட்டாயே
பயில உனக்கு மனம் இல்லையா……?
உன்னைப் பெற்ற தாய் பேசிய தமிழை
நீ உதாசினம் செய்துவிட்டாயே
தமிழை மறந்தவன்
பெற்ற தாயை மறந்தவன் ஆயிற்றே……!
‘தமிழைப் பழித்தவனைத் தாய்
தடுத்தாலும் விடேன்’ என்றாரே
புரட்சிக்கவி பாரதிதாசன்
அவர் கருத்தை மறந்து விட்டாயா… ?
முருகா,
மதி கெட்டு கடமையை மறந்து விட்டேன்
வயிற்றுப் பிழைப்புக்காக
தாய்மொழியை மறந்துவிட்டேன்
என்னை மன்னித்துவிடுங்கள்
என்னை ஒன்றும் செய்து விடாதீர்கள்
உங்களை நம்பி வாழ்கிறேன்……!
இப்போது நான் திருந்திவிட்டேன்
என் பிள்ளைகளை இனி மறக்காமல்
தமிழ்ப்பள்ளிகளுக்கே அனுப்புவேன்
மெத்த படித்த
ஒவ்வொரு தமிழரும் தம் பிள்ளைகளைத்
தமிழ்ப்பள்ளிகளுக்கே அனுப்பச் சொல்லி
நேரில் சென்று எடுத்துச் சொல்வேன்…….!
நம்மிடையே நிலவும் பேதங்களை மறந்தது
நமது சகோதரர்கள் அனைவரும் இங்கே
தமிழுக்காக இணைவதற்கு
கடுமையாக உழைப்பேன்
என் பங்கிற்கு தோள் கோடுப்பேன்
தேவைப் பட்டால்
என் உயிரையும் கொடுப்பேன்….!
arunveloo @ yahoo.com