ஏப்ரல் 2013 கவிதைகள் -1

ஏப்ரல் 2013  கவிதைகள் -1

 1. ஏலே இளங்குருத்தே …..! 

– கவிஞர் மட்டுவில் ஞானக்குமாரன். (கனடா) –

விசித்திர மனிதர்களே
நெஞ்சுக்குள்ளே இன்னாரெண்டு அறிஞ்சுக்கவா
அவன் பிஞ்சு மார்பை
துளைத்துப் பார்த்தீhர்கள்.

ஏலே இளங்குருத்தே
அவனுகள் இனிப்பு விசமிகள்
அதனால் தானே சாக்குலேட்டு தந்து விட்டு சுட்டுக் கொன்றானுகள்
கொள்ளிவாய்க்காலை யார் வந்து உனக்கு
முள்ளிவாய்காலென்று சொன்னது

வெள்ளைக் கொடியை நீட்டியிருந்தா
கடிக்க வந்த பாம்பு கூட ஓடிப் போயிருக்கும்.
இவனுகள் உயிர் குடிக்க வந்த மனுசப் பயலுகளடா
என்ன செய்வானுக

குழந்தைகளை
வேலைக்கு வைத்தாலே குற்றமென
சொல்லும் உலகம்
அவன் கொல்லப்பட்டுக் கிடப்பதை ஏனோ
வழக்கம் போல Nடிக்கை பார்கிறது

சுட்டவன்
சுடச் சொல்லி கட்டளை இட்டவன்
துப்பாக்கி வித்தவன்
துப்புக் கொடுத்தவன்
தட்டிக் கேட்க தயங்கிய துப்புக் கெட்டவனையெல்லாம்
சபிக்கக் கூடாதோ

எவனை என சபிப்பது
வெள்ளைக் கொடி ஏந்தியவனின்
பிள்ளைக்கறி கேட்ட முசோலினியின் பேத்தி
கப்பல் ஓட்டிய தமிழனுக்கே
தண்ணி காட்டிய வல்லரசு எனும் கொல் அரசு
பாதுகாக்க வலையங்கள் வரைந்த
ஐநா எனும் பொய் நா
தமிழனை ஏய்த்த தமிழ்த் தாத்தா
இன்னும் எவனெவன்.எனத் தெரியவில்லை எனக்கு

இவன் ஒரு அபிமன்யுவுக்காக மட்டும் அழவில்லை
புவி எங்கு இது போல நடக்கிலும்
கேட்பேன் நான்

மணி எங்கே
மனு நீதி; தான் எங்கே
தேர் சில்லுமெங்கே எனக்கேட்பேன் நான்.

கேள்வி கேட்டிட வரிந்து கட்டி வரும் சபைகள்
வேள்வி வேளையிலே
எங்கு போயினவென தெரியவல்லையே
திட்டவும்
கெட்டவார்த்தை அள்ளிக் கொட்டவும்
விளைகிறது   மனசு …..

maduvilan@hotmail.com

 


 

 2.  மூதூர் முத்தே!

– தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா –

குடும்பத்தின் சுமை போக்க
குதூகலத்தை தினம் சேர்க்க
சவூதிக்குப் போனாயே இளஞ்சிட்டே
சடலமாய் ஆனாயே சிறு மொட்டே!

பதினெட்டும் நிரம்பாத
பருவ வயதில் நீ
பாலைவனத்தில் கால் பதித்தாய்..
வருடங்கள் சில கழிந்து
வாழ்க்கை தனை இழந்து
கைதியாய் சிறையில் தீ மிதித்தாய்!

பச்சிளம் குழந்தைக்கு
பாலைப் புகட்டப் போய்
பாவியாக நீ கணிக்கப்பட்டாய்..
ஹகொல்லவில்லை நம்புங்கள்’
எனக் கதறிச் சொன்ன போதும்
கொலை செய்ததாகவே பழிக்கப்பட்டாய்!

வெளிநாடு என சென்று
வெளிவாரியாகப் படித்து
பட்டங்கள் பெற்றவர்கள் பலர் இருக்க..
ஓட்டைக் குடிசைக்கு
ஓடு போடப் போய் – நீ
கொலைகாரியான நிலையை ஏதுரைக்க?

குடும்ப நிலை சீர் செய்ய
குமரியாகப் போன நீ
குழந்தையைக் கொண்டிருப்பாயா?
இல்லை..
மனதால்தான் எண்ணியிருப்பாயா?

வருமானம் வேண்டாமே – உன்
வருகைக்காய் காத்திருந்தோம்..
பெற்றோரும் நாமும்தான்
நீ வரும்வரை பார்த்திருந்தோம்!

வல்லோனின் தீர்ப்பு
வலுவாக ஆன பின்பு
வையகத்தில் அதைத் தடுப்பார்
யாருண்டு? – ஆனால்..
பல பெண்கள் வெளிநாடு
பயணிப்பதைத் தடுத்த உனக்கு
சரித்திரத்தில் அழியாத பேருண்டு!

ரிஸானா..!
சுவர்க்கத்தில் உனக்குண்டு
மேலான அந்தஸ்து..
அனைவரும் மன்றாடுகிறோம்
உனக்காக துஆக் கேட்டு!!!

riznahalal@gmail.com

 


 

3.  மீன்சமையல்காரன்

– பிச்சினிக்காடு இளங்கோ (சிங்கப்பூர்) –

வலையை விரிக்கிறேன்
விழித்து
விழிமூடும்வரை

வலையில் விழவேண்டும்
என்பதற்காக அல்ல

விழுபவை
வீணாகிவிடக்கூடாதே
என்பதற்காக

இருந்தநிலையில்
வந்துசேர்வதில்லை
அனைத்தும்

அவசர அவசியத்திற்காக
சந்தைக்கும்
சென்று திரும்புவதுண்டு

வலைவிரிக்கத்தெரியாதவர்களுக்கு
அரிய தருணங்கள்
அறியாத்தருணங்களே

கணமும் வலைகளோடு
கவனமாய்த்திரிகிறேன்
கர்வமடைகிறேன்

இருந்தும் தேடியும்
பெறவேண்டியதைப்
பெறவேண்டும் என்பதே
பெருநோக்கம்

pichinikkaduelango@yahoo.com

 


 

4. தமிழ்த்தேசிய இன முன்னேற்றம் தொடர்பான ஹைக்கூ கவிதைகள்!~

– முனைவென்றி நா. சுரேஷ்குமார், பரமக்குடி, இராமநாதபுரம் மாவட்டம், தமிழ்நாடு. –

1. சிந்திய இரத்தத்தில்
மீண்டும் துளிர்க்கிறது
ஈழ விடுதலைவேட்கை

2. கொல்லப்படும் மீனவன்
தமிழனா இந்தியனா
யோசிக்கும் இந்தியா

3. உலகநாடுகளில்
வீரத்தில் ஒன்பதாமிடம்
இந்தியா

4. போர்மரபு மீறல்
சிங்களனின் வெறியாட்டம்
அமைதியாய் ஐ.நா.

munaivendri.naa.sureshkumar@gmail.com