மீண்டும் வாசிக்கையில் தெணியானின் “காத்திருப்பு”

மீண்டும் வாசிக்கையில் தெணியானின் "காத்திருப்பு"எழுத்தாளர் தெணியான்‘காத்திருப்பு’ என்ற இந்த நாவல் ஈழத்து நாவல் இலக்கியத்தில் முக்கியமாகக்  குறிப்பிட வேண்டிய ஒரு படைப்பாகும். அது பேசும் பொருள் காரணமாக இங்கு அவதானிப்பைப் பெறுகிறது. பல நாவல்களையும் குறுநாவல்களையும் தந்தது மட்டுமின்றி, சிறுகதை, விமர்சனம், மேடைப் பேச்சு எனப் பரந்த படைப்பாளுமை வீச்சுக் கொண்டவர் தெணியான். இந்தப் படைப்பு ஒரு வித்தியாசமான படைப்பனுபவமாக அவருக்கு இருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. படைப்புலகில் தனது வழமையான பாதைகளில் நடந்து சலிப்புற்று புதிய பாதைகளை அவாவும் கலைஞனின் உள்ளார்ந்த தேடலை உணர்த்துகிறது எனலாம். ஏனெனில் இது ஒரு பாலியல் நாவல். பாலியல் நாவல்கள் எமக்குப் புதியன அல்ல. பதின்மங்களில் நான் படித்த எஸ்.பொ வின் எழுத்துக்கள் சில கிளுகிளுப்பூட்டின. கணேசலிங்கன், டானியல் போன்றோரும் பாலியல் பிரள்வுகளை அங்காங்கே தொட்டுச் சென்றுள்ளார்கள். சட்டநாதனின் பல சிறுகதைகள் அற்புதமானவை. பெண்களின் உணர்வுகளை, பாலியல் பிரச்சனைகளை அழகாகாத் தொட்டுள்ளார். கலைப் பிரக்ஞையுடனும்,  மொழி மீதான அக்கறையோடும் எழுதுபவர்களில் என்னைக் கவர்ந்தவர்களில் அவரும் ஒருவர். ஆனால் மிக நாசுக்காகவும் அழகாகவும் கையாண்டவர் தி.ஜானகிராமன் இவரின் மோகமுள், அம்மா வந்தாள் இரண்டும் மறக்க முடியாதவை. அதேபோல ஜெயகாந்தனின் ரிஷிமூலம் குறிப்பிட்டுக் கூற வேண்டிய படைப்பாகும். கவித்துவ மொழி நடை அழகும், ஆன்மீகத் தேடலும் கொண்ட லா.சா.ரா காதலும் பாலியலும் இழையோடத் தந்த ‘அபிதா’ தமிழின் சிறந்த நாவல்களில் ஒன்று.  இவர்கள் அனைவருமே பாலியல் உறவுகளையும், பிறழ்வுகளையும் யதார்த்தமாக எடுத்துச் சொன்னவர்களாவர். உண்மையில் அவர்கள் ஏதோ நடக்காத காரியத்தைப் புதிதாகச் சொன்னவர்கள் அல்ல. சமூகத்தில் ஆங்காங்கே மறைவாக நடக்கும் விசயங்களை, வெளிப்படையாக இலக்கியத்தில் கலை நயத்தோடு சொன்னார்கள்.

தெணியான் ஒரு முற்போக்கு எழுத்தாளர். அவரது படைப்புகள் பொதுவாக ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் எழுப்புவதாக இருக்கும். எனவே, இலங்கையின் வடபுலத்தில் நச்சுக் கொடியாகப் படர்ந்து தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தையும் தன்மானத்தையும் அடக்க முயலும் சாதியம் பற்றி நிறையவே எழுதியுள்ளார். சாதி ரீதியாக வஞ்சிக்கப்படும் மக்களுக்காக அவர் குரல் கொடுப்பது முற்போக்காளன் என்ற ரீதியில் எதிர்பார்க்கக் கூடியதே. அதேபோல தொழிலாளர்களுக்காகவும் எழுதியுள்ளார்.

சாதிப்பிரச்சனை பற்றிக் கூறுகையில் சாதியில் உயர்ந்த பிராமண சமூகத்தைப் பற்றியும் பரிவோடு எழுதியுள்ளமை இவரது வித்தியாசமான பார்வைக்குச் சான்றாகச் சொல்லக் கூடியதாகும். ஏனெனில் இங்கு பிராமணர்கள் சாதியில் உயர்ந்தபோதும், தமிழகம் போலல்லாது பொருளாதார ரீதியாக வெள்ளாளர்களில் தங்கிய சமூகமாக இருக்கிறது. எனவே அதுவும் ஒடுக்கபட்ட மக்கள் பற்றியே பேசுகிறது.

அவற்றிற்கு மாறாக ‘காத்திருப்பு’ ல் பாலியல் பிரச்சனை பற்றிப் பேசுகிறார். ஆனால் இவரது படைப்பு பச்சையாகப் பேசும் வக்கிர நாவலாக இருக்க முடியாது என்பதை இவரது படைப்புகளோடு பரிச்சயமுள்ள எவரும் அறிந்திருப்பார்கள். மிகுந்த நிதானத்தோடு நல்ல தமிழில் விரசமின்றி ரசனையோடு படிக்கும் வண்ணம் எழுதியுள்ளார்.

உண்மையில் பாலியல் என்றால் என்ன. ஓரினப் பால் சேர்க்கை அதிகம் இல்லாத அல்லது கண்டுகொள்ளப்படாத எமது சூழலில் ஆண் பெண் உறவும் அது பற்றிய உளவியலும் கூடியதுதானே. எனவே காதல் கதைகளும் இதில் அடங்குமா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் பாலியல் ரீதியான பல்வேறு ஆசைகள், எண்ணங்கள் கற்பனைகள், நிறைந்து கிடக்கின்றன. இருண்ட குகைக்குள் அடைந்து கிடக்கும் பெறுமதிமிக்க பொக்கிஷங்கள் போல ஒழிந்து கிடக்கின்றன. அவனைப் பொறுத்தவரையில் அவை யாவும் அவனுக்கு ஆனந்த சாகரங்களாகும்.

இவற்றிற்கு அப்பால் புறஉலகிற்கு தெரியாத பல பாலியல் செயற்பாடுகளும் எண்ணங்களும் ஒவ்வொருவருள்ளும் மறைந்து கிடக்கின்றன. அவையும் அவனைப் பொறுத்தவரையில் அவனது பொக்கஷங்களே. ஆனால் வெளியே தெரியவரும்போது மற்றவர்களுக்கு இவை தெளிந்த நீரின் கீழே மறைந்து கிடக்கும் சாக்கடைக் கழிவுகளாகவும், தான் வாழும் சூழலுக்கு  அல்லல் விளைவிக்கும் வல்லூறுகளாகவே புலப்படும்.

இதற்குக் காரணம் என்ன?

ஓவ்வொரு மனிதருள்ளும் பாலியல் ரீதியான பல்வேறு உணர்வுகள், விருப்புகள், நாட்டங்கள் இருக்கின்றன. ஆனால் அதே நேரம் கணவன் மனைவி குடும்பம் உறவுகள் சுற்றத்தவர்கள் என்ற சூழலில் இணைந்து வாழ வேண்டியுள்ளது. ஒழுங்கு முறைகளுக்குள் வாழ்வதற்காக சமூகம் தனிநபர்களுக்கு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஊர்வழக்கம், கலாசாரம் பண்பாடு போன்ற பெயர்களில் வழங்கும் அவற்றிக்கும் ஒரு தனிமனிதனது செயற்பாட்டிற்கும் இடையே முரண்பாடுகள் தோன்றும்போது பிரச்சனைகள் தோன்றுகின்றன. பாலியல் நாவல்கள் அவை பற்றியே பேசுகின்றன.

தெணியானின் காத்திருப்பு ஒரு முக்கோண நாவல். முக்கோணக் காதல் கதையல்ல. சுப்பிரமணியம், நந்தகோபாலன், ஈஸ்வரி என்ற மூன்று பேரினது வாழ்க்கைக் கோலங்களையும் உணர்வுகளையும் பேசுகிறது.

சுப்பிரமணியம் ஒரு அப்பாவி. பெற்றோரை இழந்ததால் பெரியம்மாவின் சேலைக்குள் மூடி மூடி வளர்க்கப்பட்டவன். பயந்த சுபாவமும் மற்றவர்களை எதிர்த்து நிற்கும் திராணியற்றவன். படிப்பும் அவ்வளவாக ஏறாததால் கூப்பன் கடையில் விற்பனையாளராக வேலை செய்கிறான். வறுமையில் உழலும் அவளுக்கு ஈஸ்வரியை கட்டி வைக்கிறார் பெரியம்மா. அவளில் மிகுந்த அன்பிருந்தாலும் அதை வெளிக்காட்டத் தெரியாத சங்கோசி. குழந்தை பிறக்கிறது. அதற்கு பால்மா வாங்கக் கூட வசதியில்லை.

இந்தநேரத்தில் கூப்பன் கடை மனேச்சராக வரும் நந்தகோபாலன் நிறைய உதவுகிறான். சுப்பிரமணியம் அவன் உதவிக் கரத்தை ஏற்கிறான். வீட்டிலும் அவன் புகழ் பாடுகிறான். இறுதியில் அவளும் நந்தகோபாலன் வலையில் அகப்படுகிறாள். அடுத்த இரண்டு குழந்தைகளுக்கும் அவள் தாயாகிறாள்.

தந்தையாக சுப்பிரமணியம் அவர்களது பிறப்பு சேர்ட்டிபிக்கற்றில் மட்டுமே இருக்க முடிகிறது.

சுப்பிரமணியம் பேச்சுப்புவாக மாறி, சுப்பிரமணியமாகி, மீண்டும் சுப்புவாகி, இறுதியில் சுப்பிரமணியக் கடவுள்போல படத்தில் வீற்றிருப்பதுதான் கதையின் சுருக்கம்.

அவள் ஏன் சோரம் போகிறாள்? ‘ஈசா .. என்ரை ஈசா… நீ சந்தோசமாக இருக்க வேண்டும்… வேறை என்ன எனக்கு வேணும்’ என அவள் மீது உயிரையே வைத்திருக்கும் தனது அன்புக் கணவனை விட்டு ஏன் மற்றொருவனை நாடுகிறாள்.?

அவள் மாத்திரமல்ல, எமது சமூக அமைப்பில் இன்னும் பல பெண்கள் அவ்வாறு மாறக் கூடிய குடும்பச் சூழலே இங்கு இருந்தது இன்னமும் இருக்கிறது.

இங்கு கணவன் உழைத்துப் போட வேண்டியவன். மனைவி வீட்டுப்பாடுகளை தலையில் ஏற்க வேண்டியவள். அதற்கு அப்பால் அவர்களுக்கிடையேயான அன்பு, நேசம், ஒட்டுறவு, புணர்ச்சி போன்ற எதுவுமே வெளிப்படையாகப் பேசப்படுவதில்லை. அன்பானது உணர்தப்படுவதில்லை. வார்த்தைகளால் வெளிப்படையாகப் பரிமாறப்படுவதும் இல்லை. ஒருவருக்கு மற்றவர் முகம் தெரியாத கும்மிருட்டில் கள்ள வேலை செய்வதுபோல அவசர அவசரமாக புணர்வதுடன் அவர்களது நெருக்கமும் உடலுறவும் முற்றுப் பெற்றுவிடுகின்றன. பிறர் முன் ஒருவரை ஒருவர் தொடுவதையும் நேசமுடன் பேசுவதையும் கூட எமது சமூகம் ஏளனமாகவே பார்க்கும்.

தெய்வச் சிலைகளையே காமரசம் மிக்கதாகப் படைத்து, அவற்றை கோபுரங்களிலும், தூண்களிலும் வெளிப்படையாக காட்சிப்படுத்தி, அவற்றை ரசிக்கும் அளவிற்கு திறந்த மனதுடைய சரித்திரத்தைக் கொண்டது தமிழ் சமூகம். ஆனபோதும் மூல மூர்த்திகளை இருண்ட கர்ப்பக்கிரகத்தில் அடைத்து வைத்ததுபோல தங்கள் பாலுணர்வுகளையும் உறவுகளையும் கும்மிருட்டில் அடைத்துவிட்டார்கள். ஆண்களுக்கு ஓரளவு சுதந்திரம் இருந்தபோதும் பெண்களின் உணர்வுகள் முற்று முழுதாகவே நலுங்கடிக்கப்பட்டன.

அன்புள்ளவனாக இருந்தபோதும் சங்கோசியானதால் அவளது உணர்சிப் பெருக்குகளைப் சுப்பிரமணியத்தால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவள் மீதான தனது மோகத்தை வெளிப்படையாக அவளுடன் பகிர முடியவில்லை. அவளது மனசு குளிரும் வண்ணம் தன் உள்ளுணர்வுகளை வெளிப்படுத்த முடியவில்லை. ஆனால் நந்தகோபாலன் அதைப் புரிந்து தனக்கு சாதகமாக்கிக் கொண்டான். தூசி படிந்து கிடந்த வீணையை மீட்டெடுத்து நளினமாகத் தடவி மோகனமான ரீங்காரத்தை அவளில்; ஒலிக்க வைத்தான். அவள் தானாக உணராதிருந்ததை உணரவைத்தான்.

‘ஆனால் நீ எனக்குத் தேவைப்பட்டாய். அந்தத் தேவையை நான் உணர… கண்டு கொள்ளச் செய்தவனும் நீதான். நீ என்னைச் சந்திக்காமல் இருந்திருந்தால், அந்தத் தேவையை நான் உணராமல் இருந்திருககக் கூடும். அதை உணர்த்தியவன் நீ..’ நாவலின் இறுதியில் அவளால் மௌன மொழியாகப் இவ்வாறு சொல்லப்படுகிறது.

எமது சமூகத்தில் பெண்களுக்கு வாய்த்த பாலியல் வறுமையையும், அதைத் தணிக்க மற்றவன் பிச்சை போலப் போடும் அவலத்தையும் மிகவும் நுணுக்கமாக நூலசிரியர் சொல்லியுள்ளார். இம் மூவருக்கும் இடையேயான இத்தகைய அந்தரங்க உணர்வுகளை தெணியான் மிக நாசுக்காக நாவலில் ஆங்காங்கே சின்னச் சின்னச் சம்பவங்கள் ஊடாக ஆனால் ஆபாசமின்றி வெளிப்படுத்தியுள்ளார். அவளது மாற்றத்திற்கு பாலியல் உணர்வுகள் பூர்த்தியாகாதது மட்டுமே காரணமா? இல்லை. பொருளாதார காரணிகளும் உள்ளன என்பதை ஏற்கனவே சுட்டியிருந்தேன். எந்தவொரு குடும்பத்திலும் அவர்களது அனைத்துத் தேவைகளுக்கும் பணம் அவசியமானது. பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும் என்பார்கள். பொருள் இல்லாத காரணத்தால் குடும்பத்தில் சிக்கல்கள் தோன்றுகின்றன. சிதைவுகள் நிகழ்கின்றன.
‘விளக்கு மட்டுமா சிவப்பு’ என்ற கண்ணதாசனின் நல்ல உதாரணம். குடும்பத்தைக் காப்பதற்காக ஒரு பெண் விபசாரத்தில் ஈடுபடுவதை அது சொல்கிறது. அவமானத்துக்குரிய தொழில் என்பதால் அக்குடும்பமே சிதைவடைய நேர்ந்தது. இங்கு அவள் விபசாரம் செய்யவில்லை. பொருளாதார பற்றாக் குறையை நிறைவு செய்ய முன்வந்தவனுக்கு இன்முகம் காட்டினாள். பின்னர் தனது பாலியல் வறுமையைப் போக்க அவனிடம் தஞ்சமடைய நேர்ந்தது. தெணியான் நாவலை மிக அழகாக நகர்திச் செல்கிறார். முக்கிய பாத்திரங்களான நந்தகோபாலன் மற்றும் சுப்பிரமணியத்தின் பாத்திரப் பண்பு மிக அற்புதமாக வளர்க்கப்படுகிறது. உளவியல் ரீதியாக அவர்களது செயற்பாடுகளைப் புரிந்து கொள்ள முடிகிறது.

கிராமியச் சூழலை அழகாகக் கொண்டுவரும் நாவல். கிராமிய மக்களின் வாழ்வு. பனந்தோப்புகள் நிறைந்த அவர்களது சூழல் போன்றவை ரம்யமாகச் சித்தரிக்கப்படுகின்றன.  ஒருவரது தோற்றம் மற்றும் பழக்கவழக்கங்களை உணர்தும் பட்டப் பெயர்கள் சூட்டுவது கிராமங்களில் வழக்கம். சொத்தி மணியம், கிளிச் சொண்டர், சுகதேகி, ஒட்டுண்ணி, அப்பிராணி இப்படிப் பல இந் நாவலில் வருகின்றன.வைரவர் கோயில்கள், அவற்றின் மர நிழல் அங்கு விளையாடும் சிறார்கள். காட்ஸ் அடிக்கும் இளசுகள், விiயாட்டுப் போட்டிகள், அதில் பங்கு பற்றும் இளைஞர் அணிகள், வெற்றி பெற்றவர்களுக்கு வாழைக் குலை, ஆட்டுக்கிடாய் போன்றவற்றைப் பரிசாக அளிப்பது போன்ற சம்பவங்கள் அழகாகச் சொல்லப்பட்டுள்ளன. இரண்டாம் ஷோ ஆங்கிலப் படங்களுக்கு இளைஞர்கள் படையெடுப்பது ஐந்து தசாப்தங்களுக்கு முந்தைய காலகட்டத்தை மனதிற்கு கொண்டு பழைய நினைவுகளில் திளைக்க வைக்கின்றது.

அன்னதானச் சோறு, பருத்தித்துறை தோசை போன்ற பல சுவையான சம்பவங்கள் நிறைந்து கிடக்கின்றன. பருத்தித்துறைத் தோசைக்கு சுவைமிகு சம்பல்கள பற்றிய குறிப்பு சுவைக்கிறது. ‘எள்ளைப் பதமாகக் காய வைத்து அதில் தயாரிக்கும் சம்பல்..’ என அதன் தயாரிப்புப் பற்றிக் கூறும்போதே நாவூறத் தொடங்கிவிடுகிறது.

பாலியல் நாவலான இது காத்திருப்பை மறைபொருளாகப் பேசுகிறது. அவனது காத்திருப்பு அவலமாக அவனது மரணத்தில், முடிந்திருக்கிறது. அவளது காத்திருப்பு என்னவானது? மரணம் அவளது மனமாற்றத்திற்குக் காலாகிறது. ‘இனித்தான் அவரோடு உண்மையாக வாழப் போகிறேன்’ என்கிறாள் ஈஸ்வரி. தெணியானின் இம் முடிவு மனதிற்கு நிறைவு தந்தது.

இம் முடிவு சரியானதாக இருப்பதாகவே, இந்த நாலுக்கு 1999ல் முன்னுரை எழுதியபோது நானும் எண்ணினேன்.

இன்று அப்படைப்பை மீள் வாசிப்பு செய்யும்போது, ஒரு நாவலை எதிர்பாராத திருப்பத்துடன் அல்லது சமூகத்தின் பண்பாட்டு அலைவரிசைகளுடன் முரண்படாத வகையில் இருப்பதற்கு மட்டுமே இம்முடிவு சரியானதாகப் படுகிறது.

உண்மையில் அவளது இறுதி மனமாற்றம் கணரீதியானது. குற்ற உணர்வும், கணவனின் மரணத்தால் எழுந்த திடீர் பட்சாபிதம் காரணமாவும் எடுக்கப்பட்டது என்றே தோன்றுகிறது. அவளுக்கும் நந்தகோபாலனுக்குமான உறவு முற்றுப் பெறுவதற்கு தர்க்கரீதியான மாற்றம் எதுவும் நிகழ்ந்துவிடவில்லை. அவளது உடல் உணர்வுகள் மரத்துப்போகும் வயதாகவில்லை.

மறுபுறம் அவளது பொருளாதாரத் தேவைகள் குறைந்துவிடவில்லை. கணவன் எடுத்துக் கொண்டு வந்த சிறுசம்பளமும் இனியில்லை, உறவுகளும் கைகழுவிவிட்டனர். இந்த நிலையில் மூன்று குழந்தைகளை பாராமரித்து வளர்க்க வேண்டிய பொறுப்பு தனியனான அவளது தலையிலே முழுமையாக வீழ்ந்திருக்கிறது. மாறாக இனித் திருமணம் செய்ய மாட்டேன் எனத் தாய்க்குச் செய்த சபதத்தாலும் அவனது இயல்பான வீம்புக் குணத்தாலும் அவனுக்கு வேறு துணை கிடைக்க வாய்ப்பில்லை. எனவே அவனும் இவளை விடப் போவதில்லை. இருவருக்கும் தேவைகள் இருக்கின்றன.

எனவே ‘முற்றத்தில் இறங்கி இருளோடு இருளாகக் கலந்து போகிறான்’ என்ற படைப்பின் இறுதி வாக்கியத்தை தெணியானின் முற்று முழுதான முடிவு எனக் கொள்ள முடியாதிருக்கிறது. இந் நாவலின் இரண்டாவது பாகத்தை தெணியான் மற்றொரு நேரத்தில் படைக்கும் நேரத்தில் இருளில் இருளாகக் கலந்தவன் ஒளி கொடுக்கவும் ஒளி பெறவும் மீண்டும் வரக் கூடும். மனதிற்கு இடறலாக இருந்தபோதும் அதுவே இன்றைய யதார்த்தமாகிறது.

மற்றொரு விதத்தில் யோசித்தால் ‘உனக்கொரு குறையில்லாமல் உன்னை நான் வச்சிருப்பன்’ என்ற நந்தகோபாலனின் வார்த்தைகள் எவ்வளவு கேவலமானவை. ‘வச்சிருப்பன்’ என்ற வார்த்தை பெண்களை கேவலாகப் பார்ப்பதாக இல்லையா? எதற்கும் தலைகுனியாதவனாக, உற்ற நண்பர்களிடையே தான் ஒரு விசேட பிரகிருதி என்று காட்ட முற்படும் ஒரு பாத்திரம் அவ்வாறுதான்  சிந்திக்க முயலும் என்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இது சாதிப்பிரச்சனை பற்றிய படைப்பு அல்ல. இது ஒரு உயர்சாதி சமூகத்தில் நடக்கும் கதை. ஆனால் அதற்குள்ளும் சாதீயம் பற்றிய தனது அக்கறையை தெணியான் சுட்டாமல் விடவில்லை. கோயில் கிணற்றில் பெண்கள் தண்ணி அள்ள முடியாத பிரச்சனையில் ‘எங்கடை பெண்டுகள்  குடங்களை வைச்சுப்போட்டு எளிய சாதி மாதிரி தண்ணி அள்ள மாட்டாமல் ஒதுங்கி நிற்குதுகள்’

பொருளாதார மற்றும் சாதீய காரணிகளுக்கு அப்பால் தனிமனித உணர்வுகளோடு இணைத்துப் பார்க்கும் சமூகம் பற்றிய விரிந்த பார்வையை இந்த நாவல் கொடுக்கிறது. அந்த வகையில் தெணியானின் ஒரு பரிசோதனை முயற்சி என்றும் சொல்லலாம்.

பரிசோதனை முயற்சி என்ற போதும் அவரது மிகச் சிறந்த படைப்புகளில் இதுவும் ஒன்று. நூலாசிரியரின் மிகுந்த உழைப்பைக் கோரிய படைப்பாக இது இருந்திருக்கிறது. சம்பவங்களை ஒழுங்காகக் கோர்த்தல், அவற்றிற்கான சூழலுடன் இணைத்தல், முகம் சுழிக்க வைக்காதவாறு ரசனையுடன் பாலியல் விடயத்தை எழுத்தில் கொண்டு வருதல் போன்ற பலவற்றையும் மிகச் சிறப்பாகச் செய்திருக்கிறார். சுற்றுச் சூழலை உணரும் திறன், யதார்த்தத்துடன் இணையும் கற்பனை வளம், நடை அழகு, இவற்றுடன் அனுபவ முதிர்ச்சியையும் இப் படைப்பில் காணுகிறோம்.

அவரது பல நாவல்களும் குறுநாவல்களும் நூலுருப் பெற்றிருக்கின்றன. கழுகுகள்’, ‘பொற்சிறையில் வாடும் புனிதர்கள்’, ‘மரக்கொக்கு’, ‘கானலில் மான், ‘சிதைவுகள் மற்றும் பரம்பரை அகதிகள்’, ‘பனையின் நிழல்’ போன்ற அனைத்தையும் படித்தவன் நான். இவற்றுள் ‘மரக்கொக்கு’ ஒன்றே இதை விடச் சிறந்த படைப்பாகப் பார்க்க என்னால் முடிகிறது.

தெணியான் தனது படைப்புலகில் 50 ஆண்டுகளைப் பூர்த்தி செய்கிறார் என்ற செய்தி மிகவும் மகிழ்வைத் தருகின்றது. நீண்ட காலமாக அவரது வாசகனாக இருந்தபோதும், தனியார் மருத்துவனாகப் பருத்தித்துறையில் பணியாற்றிய 16 வருடங்களாக அவருடன் மிக நெருங்கிய தொடர்பு வைத்திருந்தேன். அடிக்கடி கூட்டங்களிலும், வீடுகளிலும், சிலவேளை மருத்துவமனையிலும் சந்திப்போம். விவாதிப்போம்.

நெகிழ வைக்கும் அவரது நட்புணர்வில் தோய்ந்து மகிழ்பவன் நான். அவரது மனைவியும் பிள்ளைகளும் எமது குடும்பத்தவர்கள் போல உள்ளதால் ஒன்றியவர்கள். இன்று நெடும் தூரம் எம்மைப் பிரிக்கின்றபோதும் அடிக்கடி தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள முடிகிறது.

ஈழத்துப் படைப்புலகில் அவரது பணி முக்கியமானது. பாராட்டுகளும், விருதுகளும் கணிப்புகளையும் நிறையவே பெற்றிருக்கிறது. மதிப்பிற்குரிய ஒருவராக விளங்குகிறார். தொடர்ந்தும் அவரது வாழ்வும் பணிகளும் சிறக்க வாழ்த்துகிறேன்.

kathirmuruga@hotmail.com