வட மாகாண சபைத் தேர்தலுக்கான நாளை தேர்தல் ஆணையாளர் நீண்ட காத்திருக்குப் பின்னர் அறிவித்துள்ளார். தேர்தல் எதிர்வரும் செப்தெம்பர் மாதம் 21 ஆம் நாள் நடைபெறவுள்ளது. தேர்தல் நடைபெறுவது உறுதி செய்யப்பட்டாலும் தேர்தல் அறிவித்த படி நடக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. காவல்துறை, காணி அதிகாரங்களை நீக்கும் வரை அரசு வட மாகாணசபைத் தேர்தலை நடத்தக்கூடாது என வலியுறுத்தியும் 13 ஆவது சட்ட திருத்தத்தையிட்டு இந்தியாவின் தலையீட்டுக்கு எதிராகவும் சிங்கள மக்களை அணிதிரட்டி, கொழும்பில் பெரும் போராட்டங்களை சிங்கள தேசியவாத அமைப்புகள் நடத்தி வருகின்றன. வட மாகாண சபைத் தேர்தல் நடைபெறுவதை எதிர்த்து சிங்கள தேசியக் கூட்டமைப்பு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது. அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ள நீதிமன்றம் தேர்தல் நடைபெறுவதற்கான நாளை ஒத்திப் போடலாம்.
இலங்கையில் இன, மத, மொழி பேதங்களைக் கடந்து, அனைத்து இன மாணவர்களும் எல்லா இனத்தவர்களதும் புனித ஸ்தலங்களுக்கு சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந் நிலையில் அண்மையில் பதுளை, கத்தோலிக்கத் திருச்சபையின் பாதிரியார் திரு.பிரியலால் அவர்களுடனான கலந்துரையாடலின் போது இலங்கையில் கல்வித் திட்டத்தில் நடைமுறையிலுள்ள பல விடயங்கள் குறித்து அவர் தெளிவுபடுத்தினார்.
நாம் காண்பதைத் தாண்டியும் ஏதோவொன்று எல்லாவற்றுக்குள்ளும் இருக்கிறதென்பதை பாதிரியாரின் கருத்திலிருந்து விளங்கிக் கொள்ள முடிந்தது. அதாவது தமிழ் மொழி மூல மாணவர்கள் பௌத்த விகாரைகளை வழிபட வருவதென்பது கல்விச் சுற்றுநிருபம் மூலம் உருவாக்கப்பட்ட பலவந்தமான கட்டளையொன்றின் பிரதிபலன் எனலாம். வெசாக் உற்சவ வாரத்தினை முன்னிட்டு அனைத்து தமிழ் மற்றும் முஸ்லிம் பாடசாலைகளுக்கு, பௌத்த மத வழிபாட்டு நிகழ்வுகளில் கலந்துகொள்ளும்படி சுற்றுநிருபங்கள் அனுப்பப்பட்டிருந்தன. எமது அரசியல் அதிகாரங்கள், பலவந்தமாகவும் ஒருதலைப்பட்சமாகவும் உருவாக்க முற்படும் இவ்வாறான சில நியமங்களின் காரணமாகவே, மத ஒற்றுமைக்கும் இன ஒருமைப்பாட்டுக்குமிடையில் விரிசல்களும், குழப்பங்களும், தடைகளும் ஏற்படுவதாக பாதிரியார் கூறுகிறார்.