யோ.கர்ண்னின் ‘தேவதைகளின் தீட்டுத்துணி’ வடலி பதிப்பக வெளியீடாக வெளிவந்த சிறுகதைத் தொகுதி. அண்மையில் வெளிவந்த சிறுகதைத் தொகுதிகளில் முக்கியமானதோரிடம் இதற்குண்டு. அதற்கு முக்கியமானதொரு காரணம் இதன் ஆசிரியர்தான். முள்ளிவாய்க்காலில் முடிவுக்கு வந்த யுத்தத்தின் பாதிப்பை நேரில் கண்டவர் இவர். அதுவரை நடைபெற்ற ஆயுதப் போராட்டத்தில் நேரில் பங்குபற்றிய சாட்சியாக இருந்தவர் இவர். அக்காலகட்டத்திலும், அதன் பின்னர் யுத்த காலகட்டத்திலும் நடைபெற்ற மனித உரிமை மீறல்களையெல்லாம் சாட்சியாக நின்று அவதானித்தவர் இவர். யுத்தம் காரணமாகக் காலினை இழந்தவர் இவர். இவற்றின் காரணமாக இவரது அனுபவங்களை அடிப்படையாகக்கொண்டு உருவான கதைகளிவையென்பதால் முக்கியத்துவம் வாய்ந்தவை இத்தொகுதிக் கதைகள். யோ.கர்ணனின் கதைகள் ஆயுதப் போராட்ட நிகழ்வுகளை, யுத்த காலகட்டத்தின் அவலங்களை, ‘மனிக் பார்ம்’ தடுப்புமுகாம் அனுபவங்களைப் பதிவு செய்யும் ஆவணங்களாக விளங்குகின்றன. அதே சமயம் நடைபெற்ற நிகழ்வுகளின் மீதான விமர்சனங்களாகவும் விளங்குகின்றன. இத்தொகுப்பு பல்வேறுபட்ட அவலங்களை, நிகழ்வுகளை வெளிக்கொணர்ந்திருக்கிறது. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் வாழ்ந்த மக்களின் அன்றாட வாழ்பனுவங்களை விபரிக்கும் சிறுகதைகள், யுத்த்தில் மக்கள் அடைந்த துன்பங்களையும், அழிவுகளையும் வெளிப்படுத்துகினறன. போராளிகளுக்கும், படையினருக்குமிடையில் நடைபெற்ற ஆயுத மோதல்களை எந்தவிதப் பிரச்சார நோக்கமுமின்றி விபரிக்கின்றன. உதாரணமாகத் தொகுதியின் முதலாவது கதையான ‘ஆதிரையும் நாற்பது ஆமிக்காரரும்’ கதையினை எடுத்துக்கொண்டால் அக்கதையிலிருந்து பல்வேறு தகவல்களைப் பெற முடியும். அக்காலகட்டத்தில் வன்னிப் பகுதியில் நடைபெற்ற போராட்டத்திற்கு ஆள்சேகரிப்புக்கான தெருக்கூத்துகள் பற்றி, போராளிகளுக்கான நான்கு மாதப் பயிற்சி பற்றி, அதன் பின்னர் அவர்களுக்குக் கொடுக்கப்படும் ஆயுதங்கள் பற்றி, ஜெயசிக்குறு காலகட்ட இராணுவத்துடனான மகளிர் அணியொன்றின் போராட்ட நடவடிக்கைகள் பற்றி, தன்னை அழிப்பதற்கு முன்னர் பொறுப்பாளருடன் ‘வாக்கி டோக்கி’யில் தொடர்புகொண்டு ‘புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்’ என்று கூறிவிட்டுத் தன்னை அழிப்பது போன்ற நடைமுறைகள் பற்றி பல்வேறு தகவல்களை இச்சிறுகதையினை வாசிக்குமொருவர் அறிந்துகொள்ள முடியும். இவ்விதமான தகவல்கள் மிகவும் முக்கியமானவை. அந்தச் சூழலில் வாழாத ஒருவரால் இதுபோன்ற தகவல்களையெல்லாம் விபரிக்க முடியாது. அந்த வகையில் யோ.கர்ணனின் சிறுகதைகள் கூறும் தகவல்கள் ஈழத்தமிழர்களின் யுத்தகாலகட்டத்து வாழ்வை மையமாக வைத்துப் புனைவுகளைப் படைக்க விரும்பும் எழுத்தாளர்களுத் துணைபுரியும் ஆவணங்களாகவிருக்கின்றன.