(குறிப்பு – பிரதேசம் சார்ந்த நவீன இலக்கிய வளர்ச்சி தொடர்பாக 2000 ற்குப் பின்னர் யாழ்மாவட்ட இலக்கியச் செயற்பாடுகள் தொடர்பாக ஒரு வினாவை மகுடம் ஆசிரியர் அனுப்பியிருந்தார். அதற்கு எழுதப்பட்ட சுருக்கமான பதிலே இங்கு தரப்படுகிறது.)
2000 ற்குப் பின்னரான காலம் அரசியல் ரீதியில் பல மாற்றங்களைக் கொண்டதாக இருக்கிறது. போரும் – சமாதானமும், போரும் – அழிவும் என மாறியகாலம். இக்காலங்களில் எழுந்த கலை இலக்கியங்களும் மக்களின் துன்பங்களையும் அதிலிருந்து மீளமுடியாத வாழ்க்கையையும் எடுத்துக் காட்டுவனவாகவே அமைந்திருந்தன. இவற்றை மிக நுண்மையாகத்தான் நோக்கவேண்டும். ஆனாலும் சில பொதுவான ஓட்டங்களை இங்கு சுட்டிக்காட்டலாம். கவிதையைப் பொறுத்தவரையில் குறிப்பிடத்தக்க முயற்சிகள் நடந்தேறியிருக்கின்றன. குறிப்பாக யாழ்ப்பாணம் ஏனைய பிரதேசங்களில் இருந்து முற்றாகத் துண்டிக்கப்பட்டு மூடுண்ட காலமாக இருந்தபோது வெளிவந்த படைப்புக்கள் மக்களின் இயல்புவாழ்க்கை அழிக்கப்பட்டதன் வெளிப்பாடுகளைப் புலப்படுத்துவனவாக அமைந்திருந்தன. இக்காலத்தில் ஆயுதம் தரித்த எல்லாத்தரப்பினரிடம் இருந்தும் மக்கள் பல்வேறுவிதமான வாழ்க்கை முரண்பாடுகளை எதிர்கொண்டனர். குறிப்பாக அக்காலத்தில் வெளிவந்த தீபச்செல்வன், சித்தாந்தன், துவாரகன், சத்தியபாலன் ஆகியோரின் கவிதைகளின் ஊடாக இந்த மூடுண்ட காலங்களை அறிந்துகொள்ள முடியும். அப்போது வெளிவந்த மூன்றாவது மனிதன் சஞ்சிகையில் ஹரிகரசர்மா எழுதிய ‘யாழ்ப்பாண நாட்குறிப்புகள்’ என்ற புனைவுசாரா எழுத்துக்களையும் இக்கவிதைகளோடு இணைத்து நோக்கலாம்.