[அண்மையில் இலண்டனில் ஆகஸ்ட் 14 தொடக்கம் – ஆகஸ்ட் 18 வரை நடைபெற்ற ‘உலகத் தமிழியல் மாநாடு 2013’இல் ஆகஸ்ட் 15 அன்று வாசிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரை.- நுணாவிலூர் கா. விசயரத்தினம். ]
தொல்காப்பியம் என்னும் நூலை ‘ஒல்காப் பெரும் புகழ்த் தொல்காப்பியன்’ எனப் போற்றப்படுபவரும் தி.மு. (திருவள்ளுவருக்கு முன்) அறுநூற்றி எண்பது (680 – கி.மு.711) ஆண்டில் வாழ்ந்தவருமான தொல்காப்பியனார் இவ்வரிய இலக்கிய இலக்கண நூலைப் பாடியருளினார். இந்நூல் தொன்மை, செழுமை, வளம், செப்பம், வனப்பு, நாகரிகம், பெருநிலை போன்றவற்றுடன் தோன்றிக் காலத்தால் பழமை வாய்ந்த ஓர் உயிர் நூலாய் நம் மத்தியில் உலா வருகின்றது. இந்நூலை யாத்த தொல்காப்பியனார் தலைச் சங்க இறுதியிலும் இடைச் சங்கத் தொடக்கத்திலும் வாழ்ந்தவருமாவார். ‘இடைச் சங்கத்தாருக்கும் கடைச் சங்கத்தாருக்கும் நூலாயிற்று தொல்காப்பியம்’ என்பது நக்கீரனாரின் கூற்றாகும். ‘தொல்காப்பியம் பண்டைத் தமிழர்களின் தொன்மையையும், நாகரிகச் சிறப்பையும் விளக்கும் பழம் பெருநூல்’ என்று டாக்டர் மு. வரதராசனார் கூறியுள்ளார். தொல்காப்பியனார் ஒரு காப்பியக்குடியில் தோன்றியவரென்றும், அவர் இயற் பெயர் தொல்காப்பியர் எனவும் சான்றோர் கூறுவர். வேறு சிலர் இவரின் இயற்பெயர் ‘திரணதூமாக்கினி’ எனவும், ‘சமதக்கினியாரின் புதல்வர்’ எனவும் கூறுவர். குறுமுனி அகத்தியனாரின் பன்னிரு மாணாக்கர்களுள் முதல் மாணவன் தொல்காப்பியனார் எனவும் ஒரு கூற்றுண்டு. இன்னும், இவர் பரசுராமரின் உடன் பிறந்தவரென்றும் ஒரு கதையுமுண்டு.