பண்டைய தமிழ் மக்களின் பண்பு, நாகரிகம், சமயம், அரசியல், தொழில் முதலியவற்றை அறிவதற்குத் தமிழ் நாட்டிலுள்ள கல்வெட்டுகள் பண்டைய நாணயங்கள் பிறநாட்டார் எழுதி வைத்த நூல்கள் முதலின கருவியாக விளங்குகின்றன. இவற்றைக் காட்டிலும் பண்டைய தமிழ் மக்களின் பண்பினை அறிவதற்கு தமிழ் இலக்கியங்களே சிறந்த சான்றாக அமைகின்றன. உலகம் நல்வழியில் இயங்குவதற்கு பண்பாடு (அ) பண்புடையார் வாழ்தல் மிகவும் பயனுள்ளது.
“பண்புடையார் பட்டுண் டுலகம் அதுவிறெல்
மண்புக்கு மாய்வது மன்”1
என்பது வள்ளுவர் வாய்மொழி. அன்பும் அறனும் எங்கெங்கும் பரவிப் பெருகி வாழும் வாழ்க்கைப் பண்பும் பயனுமாக மிளிர்வது பண்பாட்டின் நோக்கமாகும். தனிமனிதனின் ஒழுக்கமும் பண்பும் மிகவும் இன்றியமையாததாகும். இத்தகையப் பண்பாட்டுப் பதிவுகளை நம் முன்னோர்கள் வடிவமைத்த சங்க இலக்கியங்கள் வாயிலாகப் பகிர்ந்து கொள்வதே ஆய்வின் நோக்கமாக அமைகின்றது
தனிமனிதப் பண்பாடு
பண்பாடு என்பது பண்பட்ட எண்ணமும் சொல்லும் செயலும் ஒருங்கிணைந்து திருந்திய நிலையாகும். எல்லோருடைய இயல்புகளும் அறிந்து ஒத்த நன்னெறியில் ஒழுகுபவர் பண்பாடு உடையவர் ஆகின்றார். சங்ககாலத்தில் தனிமனித வாழ்க்கையில் நட்பும், பகையும், விருப்பும், வெறுப்பும், அன்பும், அன்பின்மையும் ஆகிய பல்வேறு உணர்ச்சிகளும் இடம்பெற்றன. ஆனால் சங்கப் புலவர்கள் சமுதாயப் பொதுமைக்காகவும், பண்பாட்டைக் காப்பாற்றுவதற்காகவும் பிறர் பழிதூற்றாமல் இருப்பதற்காகவும் தனி மனிதனின் உயர்ந்த பண்பினையே தேர்ந்தெடுத்துக்கூறியுள்ளனர். இதனையே,
“நல்லது செய்தல் ஆற்றீராயினும்
அல்லது செய்தல் ஓம்புமின்……”2
என்று குறிப்பிட அறியலாம். நல்வினை செய்யவில்லை என்றாலும் தீவினையைச் செய்யாதீர்கள் என்று தனிமனித பண்பாட்டை சங்க நூல் குறிப்பிடுவதனை அறியமுடிகிறது.
Continue Reading →