‘சின்ன அம்மா’ சசிகலாவுக்கு அ.தி.மு.கவினரின் சட்டசபை உறுப்பினர்களின் ஆதரவு இருக்கும் பட்சத்தில் தமிழக ஆளுநர் அவரை அழைத்து அவருக்குப் பெரும்பான்மை உள்ளது என்பதை நிரூபிக்க அழைப்பு விடுக்க வேண்டும். சசிகலாவால் முடியாவிட்டால் தற்காலிக முதல்வர் பன்னீர்செல்வத்தை அவருக்குத்தான் அ.தி.மு.க சட்டசபை உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு உள்ளதென்பதை நிரூபிக்க அழைப்பு விடுக்க வேண்டும். இருவருக்கும் தம் கட்சிச் சட்டசபை உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு கிடைக்காத பட்சத்தில் தி.மு.க.வினருக்குச் சந்தர்ப்பம் வாய்க்கலாம். ஒருத்தராலும் இப்பரீட்சையில் வெற்றியடைய முடியாவிட்டால், தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி அமுல்படுத்தப்பட்டு, சட்டசபைத்தேர்தல் நடத்தப்படலாமென்று கருதுகின்றேன். ஆனால் இதுபற்றி இந்தியத் தேர்தல் சட்டதிட்டங்களை அறிந்த வல்லுநர்கள்தாம் சரியான கருத்துகளை முன் வைக்க வேண்டும்.
‘அரசியல் கோமாளி’ என்று சுப்பிரமணிய சுவாமியைக் கூறினாலும், அவர் இந்தியச் சட்டதிட்டங்களை அறிந்த அரசியல்வாதி. அவர் சசிகலாவை அழைப்பதில் ஆளுநர் ஏன் தாமதம் செய்கின்றார் என்று கருத்துத்தெரிவிக்கின்றார். அதில் நியாயம் இருப்பதாகவே கருதுகின்றேன்.
தமிழக ஆளுநரின் பொறுப்பு தன் கடமையைச் சட்டரீதியாகச்செய்வது. சசிகலா, பன்னீர்ச்செல்வத்தின் மீதான தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளின் அடிப்படையில் மக்கள் கூறுவதை வைத்து அவர் செயற்பட முடியாது. அவ்விதம் அரசியல்ரீதியாக அவர் செயற்படுவதை அனுமதிக்கவும் கூடாது. அவ்விதம் அனுமதிப்பது பின்னர் பாரதூரமான விளைவுகளைத் தமிழ்நாட்டுக்கு ஏற்படுத்தும்.