காட்சிகள்
தமிழ் இணைய உலகு பரந்துபட்டது. அதன் விரிவு என்பது ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஆசியா, ஐரோப்பா ஆகிய கண்டங்களை உள்ளடக்கி வளர்ந்துவருகிறது. சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற பகுதிகளின் தமிழ்வளர்ச்சியை வெளிப்படுத்தும் ஒன்றிணைக்கும் ஊடகம் இணையம் மட்டும்தான். இவ்வகையில் அயல்நாடுகளின் இணையத் தமிழ் வளர்ச்சி ஒரு புறமும், தாயகமான தமிழ்நாட்டின் இணைய வளர்ச்சி ஒருபுறமும் வளர்ந்து வந்தாலும் இவையிரண்டும் ஒன்றுக்கொன்று சார்ந்தும், இணைந்தும் இயங்கும் நெருக்கத்தை இணையம்சார் போட்டிகள், இணைய இதழ்கள் அமைத்துத் தந்துவிடுகின்றன. இதன் காரணமாக இணையாத தமிழ்உள்ளங்கள் இணைந்து கரம் கோக்கும் புதுஉலகம் பிறந்துள்ளது.
சவாலே சமாளி
இருப்பினும் இணையத்தின் வளர்ச்சி ஒரு மூடுபொருளாகவே இருக்கிறது. இதற்கான காரணம் யாதென ஆராய வேண்டும். முக்கியமாக இணைய எழுத்தாளர்கள் தங்களை, தங்களின் தகவல்களை வெளியிடாமை அல்லது வெளிப்படுத்தாமை என்பது முக்கியமான காரணமாக அமைகின்றது. தம் எழுத்துகளை இணைய எழுத்தாளர்கள் கொண்டாடாமையும் ஒரு காரணம். நூல் வெளியீடு, பாராட்டுவிழா, விருதளிப்பு எதுவும் இணைய எழுத்திற்கு இல்லை என்பது மிக முக்கியமான காரணம். யாதாவது ஓர் அமைப்பு இணைய எழுத்துகளைப் பரிசளித்துப் பாராட்டி வெளிப்படுத்தும் நிகழ்வுகளை நடத்தினால் இக்குறை நீங்கும். இணைய எழுத்துக்கான தனித்தன்மை எதுவும் இல்லை என்பது இன்னுமொரு குறை. இணையத்தி்ல் எழுதி அச்சாக்குவது அல்லது அச்சாக்கி இணைய எழுத்தாக்குவது என்ற நிலையில் இணைய எழுத்திற்கான தனித்தன்மை இழக்கப்பெறுகிறது. இற்றைப் படுத்தப்படாமை என்பதும் மற்றொரு குறை. வலைப்பூ, முகநூல். இணைய இதழ், என்று பல பரிணாமங்களிலும் இணைய எழுத்தாளர்கள் கால்பதிக்க வேண்டி இருக்கிறது. இதன் காரணமாக ஒன்றை இற்றைப்படுத்துதல் மற்றதை விடுதல் என்ற நிலை ஏற்பட்டுவிடுகிறது.