நண்பர் எழுத்தாளர் மைக்கல் தனது முகநூல் பதிவொன்றில் சண்முகம் முத்துலிங்கம் (Sanmugam Muttulingam) அவர்களின் மறைவு பற்றிய செய்தியினைப் பகிர்ந்துகொண்டிருந்தார். அறிந்தபோது உண்மையிலேயே அதிர்ச்சியாகவிருந்தது. இரு நாட்களுக்கு முன்புகூடத் தனது முகநூலில் பதிவுகள் பலவற்றை இட்டிருந்தாரே. மிகவும் துயர் தருவது. அண்மையில்கூட எழுத்தாளரும் இவரது நண்பருமான நந்தினி சேவியர் அவர்களின் இவரது உடல் நலம் பற்றிய குறிப்பொன்றுக்கான தனது பதிலினைத் தனது முகநூலில் பின்வருமாறு பகிர்ந்துகொண்டிருந்தார்.
“//விரைந்து குணமடைக முத்தரே. (நந்தினி)// அப்பனே நந்தினி, 52 வருடத்தோழனே, உன் அன்புக்கு … நன்றி … மூன்றாவது மார்படைப்பிலிருந்து மீண்டுள்ளேன். உடல், மனம், இரண்டுக்கும் போதிய ஓய்வு கொடுக்கிறேன். முகநூல் — எனது மூளைக்குத் தேவையான உயிர்ப்பைத் தருகிறது … எனது உடல் யாழ் மருத்துவ பீடத்துக்குத் தானம் என்றும், மரணச்சடங்கு என எதுவிதமான கேலிக்கூத்தும் இருக்கக்கூடாது எனவும், வீட்டில் உறுதியாகச் சொல்லி வைத்துள்ளேன். உடல் இயங்கும் போதே உனக்கும், என்மீது அன்புள்ள யாவர்க்கும், உங்கள் அன்புக்கு நன்றி கூறி விடை பெறுகிறேன் ! இறுதி மூச்சு வரை — “மீண்டும் தொடங்கும் மிடுக்குடன் …” வாழ்வேன் ! 🙂 ‘கிழட்டுக்கிளி’ சண்முகம் முத்துலிங்கம்.”