தற்போது சொத்துக்குவிப்பு வழக்கில் உச்ச நீதி மன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் ஆனந்த விகடனின் தொலைக்காட்சியில் மறைந்த முன்னாள் முதல்வரை ஊழல் ராணி என்றும், கொள்ளைக்காரி என்றும் ஆவேசமாகத்திட்டித்தீர்க்கும் காணொளியினை யு டியூப்பில் கண்டேன்.
சட்டம் ஒரு கழுதை என்பார்கள். தனக்கெதிராகக்கூறப்பட்ட தீர்ப்புக்கு எதிராகச் சீராய்வு மனு செய்வதற்கும் சாத்தியமற்ற நிலையில் மரணித்த ஒருவர் மீது கூறப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் அவர் மீது அவதூறினை வாரி இறைப்பதில் அர்த்தமில்லை. ஜெயலலிதா மரணமடைந்துள்ள நிலையில் அவர் மீது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பினை இறுதியான தீர்ப்பாகக் கருத முடியாது. உச்ச நீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்துக்கூட ‘சீராய்வு’ மனுச்செய்யும் உரிமை குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஒருவருக்கு உண்டு. ஆனால் ஜெயலலிதா மரணமடைந்து விட்டதால் அவருக்கு அந்த உரிமை மறுதலிக்கப்படுகின்றது. அவர் உயிருடனிருந்திருந்தால் அவர் தீர்ப்பு மீதான சீராய்வு மனுச்செய்திருக்க முடியும். அதில் வெற்றி பெற்றிருக்கக்கூடச் சாத்தியமாகியிருக்கும். ஆனால் அவர் அந்தச் சந்தர்ப்பத்தைப் பாவிக்க முடியாதபடி அவரது மரணம் அமைந்து விட்டது. எனவே அவரை உச்ச நீதி மன்ற நீதிபதிகள் வழக்கிலிருந்து விடுவித்திருக்கின்றார்கள். அவரைக் குற்றவாளியென்று அறிவித்திருந்தாலும் கூட, ஜெயலலிதா மரணமடைந்த நிலையில், அவரால் நீதிபதிகளின் குற்றவாளி என்னும் தீர்ப்பினை எதிர்த்துத் தன் நியாயத்தை எடுத்துரைக்கக்கூடிய சட்டபூர்வமாக இருந்த சந்தர்ப்பத்தினைப்பாவிக்க முடியாமல் போய் விட்டது.