* இவ்வறிவித்தலைப் பதிவு செய்வதிலேற்பட்ட தாமதத்துக்கு வருந்துகின்றோம். ஒரு பதிவுக்காக இங்கு பதிவாகின்றது.
தொல்காப்பியத்திலும் நன்னூலிலும் ”இரண்டாம் வேற்றுமை” என்று செயப்படுபொருள் வேற்றுமை கூறப்படுகின்றது. ”செயல் படுகின்ற பொருள்” என்பார் முனை. அகத்தியலிங்கம். செயப்படுபொருள் என்பது வினைக்குத் தகுந்தபடி மாறுகின்ற ஒன்று. எனவே செயப்படுபொருளை வரையறுப்பது கடினம் எனபார் முனை. கு.பரமசிவம். (இக்காலத்தமிழ் மரபு, 1983, பக் – 138).
தமிழிலும் மலையாளத்திலும் செயப்படுபொருளை ஏற்கும் சொற்களாக இருப்பவை பெயர்களும், பதிலிடு பெயர்களும் ஆகும். எனவே இதன் உருபுகள் பெயரிலும் பதிலிடு பெயரிலும் அமையும் என்பது இதனால் பெறப்படுகின்றது.
ஆங்கில மொழியில் சொல்வரிசைமூலம் செயப்படுபொருள் குறிக்கப்படுகின்றது. (Dr.K.M.George, Malayalam Grammar and Reader, 1983, page -77). ஆனால் தமிழிலும் மலையாளத்திலும் பெயர்ச்சொற்களில் குறிப்பிடப்படும் அளவில் மாற்றத்தினை ஏற்படுத்தி செயப்படுபொருள் சுட்டப்படுகின்றது. அதனால் தமிழிலும் மலையாளத்திலும் சொல்வரிசைக் கட்டுப்பாடு இல்லை.
தமிழில் செயப்படுபொருள் வேற்றுமை உருபு ”ஐ”.
”ஐ” யெனப் பெயரிய வேற்றுமைக்கிளவி என்பது தொல்காப்பியம். (தொல்.சொல்.555).
நன்னூலாரோ இரண்டாவனதனுருபு ”ஐ” யே என்பார். (நன்னூல் 299).
தமிழில் செயப்படுபொருளை உணர்த்தும் உருபாக ”ஐ” மட்டுமே உள்ளது. மலையாளத்தில் இவ்வுருபு “எ” ஆகும்.