– எழுத்தாளர் அந்தனி ஜீவா அவர்கள் அறிஞர் அ.ந.கந்தசாமி பற்றித் தனது நூலான ‘இவர்கள் வித்தியாசமானவர்கள்‘ என்னும் நூலில் எழுதிய ‘அறிஞர் அ.ந.கந்தசாமி’ என்னுமிக் கட்டுரையினை அவர் நினைவாக இங்கு மீள்பிரசுரம் செய்கின்றோம். மேற்படி நூலினை பூபாலசிங்கம் பதிப்பகத்தினர் வெளியிட்டிருக்கின்றார்கள். – பதிவுகள் –
கொழும்பில் என்னை ஓர் இளைஞர் தேடி வந்தார். “கலாநிதி சபா” ஜெயராசா உங்களிடம் அனுப்பினார். இலக்கிய முன்னோடி அ.ந. கந்தசாமியைப் பற்றிய குறிப்புகளைத் தந்துதவ வேண்டும், அ.ந. கந்தசாமியைப் பற்றிய பல்கலைக்கழக ஆய்வுக்கு குறிப்புகள் தேவை என்றார். அந்தப் பல்கலைக் கழக மாணவருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தினகரன் வார மஞ்சரியில் சில வாரங்கள் தொடராக எழுதிய அறிஞர் அ.ந. கந்தசாமியைப் பற்றிய ‘சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன் என்ற கட்டுரையையும், மற்றும் அ.ந.க.வை பற்றி எழுதிய மற்றும் குறிப்புகளையும் கொடுத்து அனுப்பினேன்.
நினைவு நாள்
அதற்குச் சில தினங்களுக்கு பின்னர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் அறிஞர் அ.ந. கந்தசாமியின் நெருக்கமான நண்பரான தான் தோன்றிக் கவிராயர் திரு.சில்லையூர் செல்வராசன் அவர்களைச் சந்தித்தேன். பெப்ரவரி மாதம் அ.ந.க.வின் நினைவு நாள் வருகிறது என நினைவூட்டினேன். நானும் சில்லையூரும் அ.ந.க.வைப் பற்றிய பழைய நினைவுகளை இரைமீட்டிப் பார்த்தோம். பின்னர், வீடு திரும்பிய பின்னர் அறிஞர் அ.ந.க.வைப் பற்றிய நினைவுகள் என் நெஞ்சில் திரைப்படம் போல் விரிந்தன.