வாசிப்பும், யோசிப்பும் 224: கவிதை – கவிஞனொருவனின் நினைவுக் குறிப்புகள்..

வாசிப்பும், யோசிப்பும் 224: கவிதை - கவிஞனொருவனின் நினைவுக் குறிப்புகள்..இந்தக் கவிதை கவிஞனொருவனின் உள்ளத்துணர்வுகளை வெளிப்படுத்தும் கவிதைகளிலொன்று. இது போன்ற அனுபவங்களை பலவற்றை இன்று இணையம் சாத்தியமாக்கியிருக்கின்றது. நண்பனொருவனை நீண்ட காலத்தின் பின் சந்தித்தபொழுது அவன் தன் முதற் காதல் பற்றியும், முகநூல் அனுபவம் பற்றியும் தன் உணர்வுகளை என்னுடன் பகிர்ந்து கொண்டான். அப்பொழுது அவன் கூறினான் ‘ஒரு காலத்தில் அவன் நெஞ்சினை ஆட்டி வைத்த அந்தப்பெண் இன்று குடும்பம், குழந்தைகள் என்று மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்வதாகவும், அவளைத்தான் முகநூலில் மீண்டும் சந்தித்தபொழுது அது தனக்கு மகிழ்ச்சியினைத் தந்ததாகவும், உண்மையில் அவள் மகிழ்ச்சியுடன் வாழ்வது தனக்கு இன்பத்தைத்தந்ததாகவும்’ அவன் தன் உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டான்.

உண்மையில் முகநூல் ஆரோக்கியமான பல விடயங்களைச் சாதித்திருக்கின்றது. என் பால்ய காலத்து நண்பர்கள் பலரை மீண்டும் சந்திக்க வைத்திருக்கின்றது. இழந்த உறவுகள் பலவற்றை மீண்டும் புதுப்பித்திருக்கின்றது. புதிய உறவுகளை அறிய வைத்திருக்கின்றது.

அந்த நண்பனுக்காக , அவன் உணர்வுகளுக்காக எழுதிய சிறு கவிதை இது.

கவிதை: கவிஞனொருவனின் நினைவுக் குறிப்புகள்..

– வ.ந.கிரிதரன் –

இன்னும் ஞாபகத்திலிருக்கிறது
அதிகாலைகளில்
அந்திப்பொழுதுகளில்
நீ
ஆடி அசைந்து நடை பயின்ற
அந்தப்பொழுதுகள்.
உனது அந்தக் காந்தக் கண்கள்,
ஓரக்கண்களால் பார்த்தும் பார்க்காததுபோல்
பார்த்து நீ
சந்திகளில் திரும்புவது,
இன்னும் நினைவுப்பூங்காவில்
மணக்கும் மலர்களிலொன்றாக
பூத்துத்தான் குலுங்குகிறது.
எனக்கு உன்னிடம் பிடித்ததே
உனது அந்தப்புன்னகைதான்.
கண்களும், உன் இதழ்களும்
கூடி உருவாகுமொரு கவிதை அது.
மின்னலென என் இதய வானில்
வந்ததுபோலவே நீ
ஒரு நாள் ஒளிந்து போனாய்.

இருந்தும் அந்தக் கணத்தில்
உனது ஒளிர்தல் பாய்ச்சிய
இன்ப ஒளி நாட்டியம்
என் இதய மேடையிலே
இன்றும் சில வேளைகளில்
நடைபெறுவதை
என்னால் தடுக்க முடிந்ததில்லை.
இருக்கும் வரையில் இருக்கப்போகின்றது
இதயத்தின் ஆழ அடுக்குகளில்
பதிந்திருக்கும் அற்புதப் படிவுகளிலொன்றெனவே.
வதனப்புத்தகத்தினூடு மீண்டுமுனை
பல தசாப்தங்கள் கழிந்த நிலையில்
இன்று கண்டேன்.
உறவுகளும், இன்பமுமாக நீ இருந்தாய்.
அதுவே இன்பத்தையும் தந்தது.
எங்கிருந்தாலும் நீ
வாழ்வாய். வாழ்க.