நாவல்: ஹக்கில்பெர்ரிஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) – 26

- மார்க் ட்வைன் -

முனைவர் ஆர்.தாரணி

என் பால்ய ,பதின்ம வயதுகளில் மேனாட்டு நாவலாசிரியர்களின் நாவல்கள் பலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளை நான் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்துள்ளேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த நாவல்களாக  மார்க் ட்வைனின் ‘ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள்’, ரொபேர்ட் லூயி ஸ்டீவன்சனின் ‘புதையல் தீவு’ என்பவற்றைக் குறிப்பிடுவேன். பின்னர் வளர்ந்ததும் ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள் நாவலின் ஆங்கில; நூலினையும் வாசித்துள்ளேன். அண்மையில் முனைவர் ர.தாரணி ‘பதிவுகள்’ இணைய இதழுக்கு மார்க் ட்வைனின் சிறுகதையொன்றினைத் தமிழாக்கம் செய்து அனுப்பியபோது அவர் தமிழாக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.  உடனேயே ஒரு யோசனையும் தோன்றியது. அவரிடம் ஏன் அவர் ‘ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள்’ நாவலைத் தமிழாக்கம் செய்யக்கூடாது என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் உடனடியாகவே மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். உடனேயே அத்தியாயங்கள் சிலவற்றையும் தமிழில் எழுதி அனுப்பியிருந்தார். அவருக்குப் ‘பதிவுகள்’ சார்பில் நன்றி. இந்நாவல் இனி பதிவுகளில் தொடராக வெளிவரும். வாசித்து மகிழுங்கள். உங்கள் கருத்துகளையும் அறியத்தாருங்கள்.  – வ.ந.கிரிதரன், ஆசிரியர் ‘பதிவுகள்’


அத்தியாயம் இருபத்தி ஆறு

நாவல்: ஹக்கில்பெர்ரிஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) - 23 கூட்டம் கலைந்து போனதும், அந்த வீட்டில் படுக்கை அறைகள் மிகைப்படியாக உள்ளதா என்று ராஜா மேரி ஜேனை வினவினார். அதிகப்படியாக உள்ள ஒரு அறையில் சித்தப்பா வில்லியம் உறங்கலாம் எனக் கூறினாள். அவளது பெரிய படுக்கை அறையை ஹார்வி சித்தப்பாவுக்குக் கொடுத்து விட்டு அவளும், அவளது சகோதரிகளும் சிறிய அறையில் உள்ள கட்டிலில் படுத்துக் கொள்ளப் போவதாக மேரி ஜேன் கூறினாள். பரணில் உள்ள சிறு மூலையில் ஒரு வைக்கோல் படுக்கையில் ராஜாவின் வேலைக்காரனான நான் படுத்துக் கொள்ள வசதியாக இருக்கும் என்று ராஜா கூறினார்.

எனவே ராஜாவையும், பிரபுவையும் மேல் மாடிக்கு அழைத்துச் சென்று எளியதாகவும் ஆனாலும் நன்றாகவும் இருந்த அவர்கள் அறைகளைக் காட்டினாள் மேரி ஜேன். சித்தப்பா ஹார்வியின் வழியில் இருந்த தன்னுடைய நீண்ட அங்கி போன்ற ஆடைகளையும் மற்ற அலங்காரப் பொருட்களையும் அங்கிருந்து வெளியே எடுத்துச் சென்றுவிடுவதாக மேரி ஜேன் கூறியபோது வேண்டியதில்லை என்று ஹார்வி கூறிவிட்டார். நீண்டு தரையைத்தொடும் காலிகோ வகைத் துணியாலான திரைச்சீலையின் பின்புறம் உள்ள சுவற்றில் அவளின் நீண்ட அங்கிகள் மாட்டிவைக்கப் பட்டிருந்தன. ஒரு பழைய ட்ரங்க் பெட்டி ஒரு மூலையிலும், கிடார் இசைக் கருவி இன்னொரு மூலையிலுமாக வைக்கப்பட்டிருந்தன. பெண்கள் உபயோகப் படுத்தும் அலங்காரப் பொருட்கள், மேலும் அது போன்ற சில பொருட்கள் அறை முழுதும் இறைந்து கிடந்தன. இவ்வாறு அறை இருப்பது அவருக்கு சொந்த வீட்டிலுள்ளது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது என்பதால் அங்கிருக்கும் பொருட்களை வேறு எங்கும் எடுத்துப் போகவேண்டாம் என்று ராஜா (ஹார்வி) கேட்டுக் கொண்டார். பிரபுவின் அறை கொஞ்சம் சிறியதுதான் என்றாலும் மிகவும் வசதியாகவே இருந்தது. அது போன்றே பரணிலிருந்த என்னுடைய சிறு மூலை அறையும்தான்.

அன்றிரவு அங்குள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் என அனைத்து மக்களும் ஒன்று கூடி விருந்துண்டனர். ராஜாவும், பிரபுவும் அமர்ந்திருந்த இருக்கைகளுக்குப் பின்,அவர்களின் எடுபிடியாக நானும், மற்றவர்களுக்கு உதவி செய்ய ஒரு நீக்ரோவும் அங்கே நின்றிருந்தோம். மேசையின் தலைப்பகுதியில் மேரிஜேனும், அவளுக்கு அருகில் சூசனும் அமர்ந்திருந்தனர். பிஸ்கோத்துகள் நன்றாக இல்லாதது பற்றியும், பதப்படுத்தும் பொருட்களின் மோசமான தன்மை பற்றியும், வறுக்கப்பட்ட கோழிகள் கெட்டியாகவும், வளமற்றும் இருப்பது குறித்தும் அவள் பேசிக்கொண்டே சென்றாள். பாராட்டுதலைப் பெறுவதற்காக பலதரப்பட்ட குப்பைக்கு மதிப்பற்ற விஷயங்களை அங்கிருந்த பெண்கள் பேசிக் கொண்டிருந்தனர். அங்கிருந்த எல்லாருக்கும் மேசையின் மீது இருந்த அனைத்து வகையறாக்களும் முதல்தரமாக இருந்தது என்று நன்றாகவே தெரிந்திருந்தது. அதைச் சொல்லவும் செய்தார்கள். “எப்படி பிஸ்கோத்துகள் இத்தனை நன்றாக பொன்னிறமாக உள்ளது?” என்றும் “இப்படிப்பட்ட அருமையான ஊறுகாயை எங்கிருந்துதான் பிடித்தாயோ?” என்றும் இன்னும் பல முகஸ்துதிகளையும் அள்ளி வீசிக் கொண்டிருந்தார்கள் அவர்கள். பொதுவாக விருந்துகளில் மக்கள் செய்வதுதான் அது என்றுதான் நமக்குத் தெரியுமே!

விருந்து முடிந்ததும், நானும் மேலுதடு பிளவுற்ற பெண் ஜோனாவும் மிச்சம் இருந்த உணவுகளை சமயலறையில் அமர்ந்து உண்டோம். அதே சமயம் மற்றவர்கள் விருந்து நடந்த இடத்தை நீக்ரோவுடன் சேர்ந்து சுத்தம் செய்துகொண்டிருந்தார்கள். உதடு பிளவுற்ற பெண் இங்கிலாந்து பற்றி அதிகமான கேள்விகள் கேட்டாள். ஏதோ சன்னமான ஐஸ் கட்டிகளின் மீது நடப்பது போல நான் தடுமாறினேன் என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

அவள் கேட்டாள்: “எப்போதேனும் நீ ராஜாவைப் பார்த்திருக்கிறாயா?”

“யார்? நான்காவது வில்லியம்தானே! கண்டிப்பாக. நான் ….. அவர் தேவாலயம் தினமும் செல்வார்.”

அவர் இறந்து பல வருடங்கள் ஆயிற்று என்று எனக்குத் தெரியும். ஆனால் தெரிந்ததுபோல் நான் காட்டிக்கொள்ளப் போவதில்லை. எனவே அவர் தினமும் தேவாலயம் செல்வார் என்றதைக் கேட்ட அவள் சொன்னாள்: “நிஜமாவா? அடிக்கடி செல்வாரா?”

“ஆம், அடிக்கடி செல்வார். தேவாலயத்தில் அவர் அமர்ந்திருக்கும் இருக்கை மதகுரு உரையாற்றும் மேடைக்கு அருகே எங்களின் இருக்கைக்கு வலது புறத்தில் குறுக்கே இருக்கும்

“அவர் லண்டனில் வசிக்கிறார் என்றல்லவா நான் நினைத்துக் கொண்டிருந்தேன்.”

“ஆம். அங்கேதான் வசிக்கிறார். வேறு எங்கு அவர் வசிப்பார்?”

“ஆனால் நீங்கள் ஷெபீல்ட் எனும் ஊரில் வசிப்பதாக அல்லவா நான் நினைத்துக்கொண்டிருக்கிறேன்.”

நான் நன்றாக மாட்டிக்கொண்டேன் என்பது எனக்குத் தெரிந்தது. சாப்பிட்டுக் கொண்டிருந்த கோழியின் எலும்பு தொண்டையில் மாட்டி மூச்சுத் திணறுவது போல நடித்தேன். அந்த சமயத்தில் என்ன சொல்லிச் சமாளிப்பது என்று சிந்திக்கச் சிறிது அவகாசம் வேண்டுமல்லவா!

பின்னர் நான் சொன்னேன்: “நான் என்ன சொன்னேனென்றால், அவர் ஷெபீல்ட் நகரில் இருக்கும் எங்கள் தேவாலயத்திற்கு அடிக்கடி வருவது பற்றிக் கூறினேன். அதுவும் கோடைக்காலங்களின் போது, கடலில் குளித்துக் களிக்க அங்கே வருவார்.”

“என்ன உளறுகிறாய்? ஷெபீல்ட் கடலின் அருகே இல்லை.”

“நல்லது. யார் சொன்னார்கள் அது கடலின் அருகே உள்ளது என்று?”

“நீதான்.”

“நான் ஒன்றும் சொல்லவில்லை.”

“நீ சொன்னாய்.”

“இல்லை. நான் சொல்லவில்லை.”

“நீதான் சொன்னாய்.”

“அப்படி ஏதும் நான் சொல்லவே இல்லை.”

“ஓ! அப்படியானால் எப்படிச் சொன்னாய்?”

“அவர் கடல் குளியல் போட அங்கு வருவார் என்றுதான் நான் சொன்னேன்.”

“நல்லது. கடலே அங்கு இல்லாதபோது, அவர் எப்படிக் கடல்குளியல் போட அங்கே வருவார்?”

“இங்கே பாரு” நான் கூறினேன் “நீ எப்போதாவது உப்புநீர் ஊற்றில் குளியல் போட்டிருக்கிறாயா?”

“ஆமாம்.”

“நல்லது. அதற்காக அங்கே அந்த நீர் ஊற்றுக்குப் போயிருக்கிறாயா?”

“இல்லை.”

“நல்லது அதே மாதிரிதான் நான்காம் வில்லியம் கடலுக்குச் செல்லாமலேயே கடல் குளியல் எடுப்பார்.”

“அவர் எப்படி அவ்வாறு செய்வார்?”

“இங்கே மக்கள் எப்படி உப்பு நீரூற்றின் நீரை பீப்பாய்களில் வாங்கிப் பயன்படுத்துகிறார்களோ அதே போல்தான் அவருக்கும் கிடைக்கும். ஷெபீல்ட்டில் உள்ள அவரது அரண்மனையில் கொதிகலன்கள் இருக்கும். கடல் நீரை சூடுபடுத்தி அதில் அவர் சூடான கடல் குளியல் எடுப்பார். உண்மையான கடலில் குளித்தால் அவர் குளிக்கும் அளவு நீரை சூடுபண்ண இயலாது அல்லவா! அந்த மாதிரி கடலைச் சூடுபடுத்தும் தொழில் நுட்பம் அவர்களிடம் இல்லை.”

“ஓ! இப்போது எனக்குப் புரிகிறது. இந்த விஷயத்தை நீ முதலிலேயே கூறியிருந்தால் நேரம் இப்படி விரயமாகியிருக்காது.”

அப்படி அவள் சொன்னதும் எனக்கு தப்பித்தேன், பிழைத்தேன் என்று ஆகி விட்டது. எனவே நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தேன். பிறகு அவள் கூறினாள்:

“நீ தேவாலயம் கூடச் செல்வாயா?”

“ஆம். விடாமல் தொடர்ந்து செல்வேன்.”

“நீ எங்கே அமர்வாய்?”

“ஏன், எங்களுக்கென்று போடப்பட்டிருக்கும் இருக்கையில்தான்.”

“அது யாருக்கென்று போடப்பட்டிருக்கும் இருக்கை?”

“எங்களது. அதாவது உன்னுடைய சித்தப்பா ஹார்விக்கானது.”

“அவருடையது? அவருக்கு எதற்காக அங்கே இருக்கை?”

“அங்கே அமரத்தான். வேறு எதற்கு அவருக்கு இருக்கை தேவைப்படும் என்று நீ நினைக்கிறாய்?”

“நல்லது. அவர் மேடை மீது இருப்பார் என்று எண்ணினேன்.”

நாசமாகப் போயிற்று. அவர் ஒரு மதபோதகர் என்ற விஷயத்தை நான் சுத்தமாக மறந்துவிட்டேன். திரும்பவும் கிடுக்குப்பிடியில் மாட்டிக் கொண்டதை உணர்ந்தேன். எனவே இன்னொரு கோழி எலும்பைக் கடித்து அது தொண்டையில் சிக்கித் திணறுவது போல நடித்து நீர் குடித்துச் சமாளித்தேன். பின்னர் நான் சொன்னேன்:

“ரொம்ப அறிவுதான். ஒரு தேவாலயத்தில் ஒரே ஒரு மத போதகர் மட்டும்தான் இருப்பார்களா, என்ன?”

“ஒன்றுக்கு மேற்பட்ட போதகர்களுக்கு என்ன வேலை இருக்கும்?”

“என்னது? மதபோதகம் செய்வது ஒரு ராஜாவுக்கு! உன்னைப்போன்ற ஒரு சிறுமியை நான் கண்டதேயில்லை. குறைந்தபட்சம் பதினேழு மதபோதகர்களாவாது இருப்பார்கள்.”

“பதினேழு! அம்மாடி! இதனால் சொர்க்கத்திற்கு நான் போவேன் என்று சொன்னால் கூட இந்த பதினேழு பேரின் உரைகளை நான் அமர்ந்து கேட்டுக் கொண்டிருக்கமாட்டேன். கடவுள் பிரார்த்தனையை முடிக்க அங்கே அவர்கள் ஒரு வாரம் கூட எடுத்துக் கொள்ளக் கூடும்.”

“ஷ்ஷ்ஷ்! அவர்கள் அனைவரும் ஒரே நாளில் பிரசங்கம் செய்யமாட்டார்கள். ஒருவர் மட்டும்தான் செய்வார்.”

“அப்படியா! நல்லது. பின் மற்றவர்கள் அனைவரும் என்ன செய்வார்கள்?”

“ஓ! பெரிதாக ஒன்றுமிருக்காது. அவர்கள் அமர்ந்து கொண்டு, வசூல் தட்டை மக்களிடம் எடுத்துச் சுற்றி வருவார்கள். அந்த மாதிரி ஏதேனும் செய்வார்கள். ஆனால் அவர்கள் பொதுவாக ஒன்றும் செய்ய மாட்டார்கள்.”

“நல்லது. பின் எதற்காக அவர்கள் அங்கே இருக்கவேண்டும்?”

“ஏன், அங்கே அவர்கள் இருப்பது ஒரு பந்தாவுக்காக. உனக்கு அதெல்லாம் ஒன்றுமே தெரியாதா?”

“நல்லது. அந்தமாதிரி ஒரு மடத்தனம் பற்றி நான் தெரிந்துகொண்டு எதுவும் ஆகப்போவதில்லை. சரி. இது பற்றிக் கூறு. பணியாட்களை இங்கிலாந்தில் எப்படி நடத்துவார்கள்? இங்கே நீக்ரோக்களை நாங்கள் நடத்துவதை விடச் சிறப்பாக நடத்துவார்களா?”

“இல்லை. ஒரு பணியாள் என்பது அங்கு ஒரு மனிதனே அல்ல. அவர்களை ஒரு நாயை விடக்கேவலமாக நடத்துவார்கள்.”

“அவர்களுக்கு நாங்கள் இங்கே கொடுப்பது போல விடுமுறை கொடுக்க மாட்டார்களா? கிறிஸ்துமஸ், புது வருட வாரம் அப்புறம் ஜூலை நான்காம் நாள்?”

ஓ! நன்றாகக் கேள்! நீ பேசுவதைக் கேட்கும் யாரும் நீ இங்கிலாந்துப் பக்கம் தலை வைத்துக் கூடப் படுத்ததில்லை என்று அடித்துக் கூறிவிடுவார்கள். ஏன், ஜோனா! அங்கே இருக்கும் பணியாட்களுக்கு வருடம் முழுதும் ஒரு நாள் கூட விடுமுறை கிடையாது. சர்க்கஸ், தியேட்டர், நீக்ரோ காட்சிகள் என்று அவர்கள் எங்கேயும் போகவே முடியாது.

“தேவாலயம் கூடவா?”

” தேவாலயமும் கூடத்தான்.”

“ஆனால் நீ எப்படி எப்போதும் தேவாலயம் செல்கிறாய்?”

ஆஹா! திரும்பவும் குழிக்குள் விழுந்தேனே! அந்தக் கிழவனின் வேலையாள் நான் என்பதை மறந்துவிட்டேன். ஆனால் ஒரு நிமிடத்தில் ஒரு சமாளிப்புக் காரணம் கண்டுபிடித்தேன். ஒரு ஆணின் அந்தரங்க உதவியாளரான நான் மற்ற பணியாட்களிடமிருந்து வேறுபட்டிருப்பதால் அவர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவர் குடும்பத்துடன் தேவாலயம் சென்று அவருடன் அமருவது என் கடமை என்று கூறினேன். அதுதான் சட்டம் என்று கூறினேன். ஆனால் நான் சொன்ன விளக்கம் அவளுக்குச் சரியாகப் புரியாததால், நான் சொல்லி முடித்தும் கூட அவள் திருப்தியடைந்தது போல் தோன்றவில்லை.

அவள் கூறினாள்: “நெஞ்சைத் தொட்டுச் சொல்லு. என்னிடம் புளுகு மூட்டையாக அவிழ்த்து விட்டுக்கொண்டிருக்கிறாயா?”

“உண்மையாக அப்படியெல்லாம் இல்லை.”

“ஒன்று கூட பொய் இல்லையா?”

“ஒன்று கூட இல்லை. நான் சொன்ன எதிலுமே ஒரு பொய் கூடக் கிடையாது.” நான் கூறினேன்.

“அப்படியானால், இந்தப் புத்தகத்தின் மீது உன் கரத்தை வைத்துச் சத்தியம் செய்.”

அந்தப்புத்தகம் வேறொன்றுமில்லை, ஒரு சொல்லகராதி என்று நான் கண்டுகொண்டேன். எனவே எனது கரத்தை அதன் மேல் வைத்து நான் சொன்னது உண்மை என்று சத்தியம் செய்தேன். இப்போது அவள் கொஞ்சம் திருப்தியடைந்தமாதிரி தோன்றியது.
 அந்தப்புத்தகம் வேறொன்றுமில்லை, ஒரு சொல்லகராதி என்று நான் கண்டுகொண்டேன். எனவே எனது கரத்தை அதன் மேல் வைத்து நான் சொன்னது உண்மை என்று சத்தியம் செய்தேன். இப்போது அவள் கொஞ்சம் திருப்தியடைந்தமாதிரி தோன்றியது.
எனவே அவள் சொன்னாள்: “சரி. நல்லது. நீ கூறியதில் சிலது நான் நம்புகிறேன். ஆனால் அனைத்து விஷயங்களையும் என்னால் உண்மையாக நம்ப முடியவில்லை.

“எதை நீ நம்பவில்லை, ஜோ?” சூசன் தன்னைப் பின்தொடர்ந்து வர உள்ளே நுழைந்த மேரி ஜேன் வினவினாள். “அவன் இந்த ஊருக்கு புதியவன் மட்டுமல்லாது அவனின் குடும்பத்தை விட்டு இங்கே வந்துள்ளவனிடம் நீ இவ்வாறு பேசுவது முறையாகுமா? உன்னை அப்படி நடத்தினால் எப்படி இருக்கும்?” மேரி ஜேன் தொடர்ந்தாள்.

“நீங்கள் எப்போதுமே அப்படிதான் செய்கிறீர்கள், மைம்! மற்றவர்கள் காயப்படும் முன்னமே அவர்களின் உதவிக்கு வந்து குதிக்கிறீர்கள். நான் அவனை எதுவும் குறை கூறிவிடவில்லை. அவன் சிலவற்றை மிகைப்படுத்திக் கூறினான். அவன் கூறியது எதுவும் என்னால் நம்பமுடியாது என்று நான் நினைத்ததைக் கூறினேன். அவ்வளவுதான் நான் சொன்னேன். இந்த மாதிரி சிறு விஷயங்கள் அவனால் பொறுத்துக்கொள்ளமுடியும் என்று நான் நினைக்கிறேன். முடியாதா என்ன?”

“சிறிதோ, அல்லது பெரிதோ, அதுபற்றி எனக்குக் கவலையில்லை. இங்கே நமது வீட்டில் அவன் ஒரு வெளியாளாக வந்துள்ளான். அவனிடம் நீ இவ்வாறு குறை கூறுவது நல்லதல்ல. அவனிடத்தில் நீ இருந்திருந்தால், அது உனக்கு எவ்வளவு அவமானமாக இருந்திருக்கும். அதனால், மற்றவர்களை அவமானப்பட வைக்கும் எந்த ஒரு விஷயத்தையும் நீ அவர்களிடம் சொல்லக்கூடாது.”

“ஆனால் மைம்! அவன் சொன்னான் …….”

“அவன் என்ன சொன்னான் என்பது முக்கியமல்ல. நான் கூறுவது யாதெனில் அவனை அன்புடன் நீ நடத்த வேண்டும் என்பதே. தேவையற்ற வார்த்தைகளைப் பேசி அவனது ஊர் மற்றும் அவன் குடும்பம் பற்றிய நினைவுகளைக் கிளறி விட்டு நான் இப்போது அங்கு இருக்கமுடியவில்லையே என்று எண்ணி வருத்தப்பட வைத்து விடாதே.”

எனக்கு நானே மனதில் பேசிக் கொண்டேன் இந்த அருமையான பெண்ணின் பணத்தைத்தான் அந்த முதிய ஈனப்பிறவி திருடிக் கொண்டு போக நான் பேசாமல் பார்த்துக் கொண்டிருக்கப் போகிறேன்!

பின்னர் சூசனும் அவள் அக்கா போன்றே என்னை அவமரியாதையாக நடத்தியதற்காக உதடு பிளவுற்ற பெண்ணை நன்கு வைது தீர்த்தாள். மறுபடியும் எனக்கு நானே மனதில் பேசிக் கொண்டேன் இன்னொரு அருமையான பெண்ணின் பணத்தைத்தான் அவன் திருடிக் கொண்டு போக நான் பேசாமல் பார்த்துக் கொண்டிருக்கப் போகிறேன்!

அடுத்ததாக மேரி ஜேன் மறுபடியும் ஆரம்பித்து அவளின் பாணியில் மென்மையாகவும், அன்புடனும் அறிவுரை சொல்ல ஆரம்பித்தாள். அவள் முடித்ததும், உதடு பிளவுட்ட பெண்ணைத் திட்ட வேறு எதுவும் மிச்சம் இல்லாததால், அவள் கண்ணீர் விட ஆரம்பித்தாள்.

“சரி சரி. அழ வேண்டாம்!” மேரிஜேனும் சூசனும் ஒன்று சேர்ந்து கூறினார்கள் “அவனிடம் மன்னிப்புக் கேட்டுவிடு.”

அவள் அப்படியே செய்தாள். அதை மிகவும் அழகாகச் செய்தாள். அவளின் மன்னிப்பு கேட்க மிகவும் இனிமையாக இருந்தது. இவள் இப்படி ஒரு மன்னிப்பு மீண்டும் கேட்பதானால், இன்னும் ஆயிரம் பொய்கள் வேண்டுமானாலும் நான் சொல்லுவேன்.

மீண்டும் என்னிடம் நானே கூறிக் கொண்டேன். இன்னொரு நல்ல மனம் படைத்த பெண்ணிடமிருந்து திருட நான் அவனை அனுமதிக்கப் போகிறேன்.

அவள் மன்னிப்புக் கேட்டு முடித்தவுடன், மூன்று பெண்களும் நிம்மதியடைந்தார்கள். எனது நண்பர்களுக்கு நடுவே நான் இருப்பது போல நினைத்து என்னையும் நிம்மதியாக இருக்கச் சொன்னார்கள். மிகவும் கேவலமாகவும், மோசமாகவும், பரிதாபமாகவும் நான் உணர்ந்தேன். அந்த மோசடிக்காரர்களிடமிருந்து அந்தப் பணத்தை மீண்டும் திருடி இவர்களுக்குக் கொடுத்து விடவேண்டும் அல்லது குறைந்த பட்சம் அதை எடுத்து வர முயற்சியாவது செய்ய வேண்டும் என்று எண்ணினேன்.

எனவே உறங்கப் போவதாய் கூறிக் கொண்டு நான் வெளியே சென்றேன். உண்மையில், கடைசியாக எனது படுக்கைக்குத்தான் சென்றேன். தனித்திருக்கும்போது, நடந்த விஷயங்களை நான் மீண்டும் மீண்டும் அசை போட்டேன். அந்த டாக்டரிடம் சென்று தனிப்பட்ட முறையில் இந்த மோசடிக்காரர்களைப் பற்றிக் கூறிவிடலாமா என்று ஒரு கணம் நினைத்தேன். ஆனால் அது சரி வராது. அவர் ஒருவேளை இந்த உண்மையைக் கூறியது யார் என்று போட்டு உடைத்துவிடக் கூடும். பின்னர் ராஜாவும், பிரபுவும் என்னைத் துரத்த ஆரம்பித்துவிடுவார்கள். மேரி ஜேனிடம் தனிப்பட்ட முறையில் யாருக்கும் தெரியாமல் நான் சென்று கூறிவிட்டால்தான் என்ன? இல்லை. .அப்படிச் செய்வது மிகவும் ஆபத்தானது. அவள் முகமே அப்பட்டமாக அனைத்தையும் வெளியே காட்டிக்கொடுத்து விடும். அந்த நயவஞ்சகர்கள் கையில் பணம் வேறு வைத்திருக்கிறார்கள். அதை எடுத்துக் கொண்டு தப்பித்து ஓடி விடுவார்கள். பின்னர் உதவிக்கென்று அவள் அனுப்பினால் இந்த மொத்த மோசடியிலும் அவர்களுக்கு முன்பே நான் நன்கு மாட்டிக் கொள்வேன். அது நிச்சயம் நடக்கும். இல்லை. ஆகாது. இந்தப் பிரச்னையை சுலபமாக முடிக்க ஒரே ஒரு வழிதான் உள்ளது. எப்படியாவது அந்தப் பணத்தை நான் திருடிவிடவேண்டும். யாருக்கும் என்மீது சந்தேகம் வராதவாறு திருடி விடவேண்டும்.

ராஜாவுக்கும் பிரபுவுக்கும் நல்ல மரியாதையுடன் கூடிய கவனிப்பு இங்கே இருப்பதால், அவர்கள் கவனம் திசை திரும்பிய வேளையில் நான் திருடிவிட நிறைய சந்தர்ப்பம் உள்ளது. அவர்களின் மதிப்பு இந்தக் குடும்பத்திலும், ஊரிலும் கொடிகட்டிப் பறக்கும் வரை, அவர்கள் நடித்துக் கொண்டே இருந்து இங்கிருந்து வெகு சீக்கிரம் நகரப் போவதில்லை. அந்தக் காசுகளை முதலில் திருடி எங்கேனும் மறைத்து வைத்து விடவேண்டும். பின்னர் நான் இங்கிருந்து ஓடி, நதியின் கீழ்திசைக்குச் சென்றவுடன் அந்தக் காசுகள் எங்கே மறைத்து வைக்கப்பட்டுள்ளது என்று ஒரு கடிதம் எழுதி மேரி ஜேனுக்கு அனுப்பிவிடவேண்டும் என்று திட்டம் போட்டேன். ஆனால், என்னால் முடிந்தால், அன்றிரவே அதைத் திருடி விடவேண்டும் என்று யோசனை செய்தேன். ஏனெனில் இங்கிருந்து கோபமாக வெளியேறிய டாக்டர் கண்டிப்பாக இதை அப்படியே விடப்போவதில்லை என்று தோன்றியது. ராஜாவையும், பிரபுவையும் மிரட்டி இந்த ஊரை விட்டு அனுப்ப முயலக்கூடும்.

இவ்வாறெல்லாம் எண்ணிக்கொண்ட நான் மேலே உள்ள அறைகளுக்குச் சென்று அனைத்தையும் தேடிப்பார்க்க முடிவு செய்தேன். மேலே இருந்த முன்னறை மிகவும் இருட்டாக இருந்தது. இருந்தாலும், பிரபுவின் அறையை கண்டுபிடித்து கைகளால் தடவிக் கொண்டு அதனுள்ளே செல்ல ஆரம்பித்தேன். தன்னிடமிருக்கும் பணத்தை வேறு யாரிடமும் நம்பிக் கொடுக்கும் வழக்கம் ராஜாவுக்குக் கிடையாது என்ற விஷயம் பிறகுதான் எனக்குப் புலப்பட்டது.

எனவே ராஜாவின் அறைக்குச் சென்று அங்குள்ள பொருட்களை ஆராய்ந்து கொண்டிருந்தேன். கையில் விளக்கு இல்லாது என்னால் எதையும் தேடிப்பார்க்க முடியவில்லை என்றாலும் மெழுகுதிரி ஒன்று ஏற்றுவது மிகவும் ஆபத்தான வேலை என்றும் உணர்ந்தேன். எனவே இன்னொரு யோசனையை முயற்சிப்பது என்று நினைத்தேன். அவர்கள் அங்கே வரும்வரை மறைந்து காத்திருந்து, அவர்கள் தங்களுக்குள் பேசிக் கொள்வதை ஒட்டுக்கேட்பது என்று நினைத்தேன்.

அப்போதுதான் யாரோ நடக்கும் காலடியோசை கேட்க ஆரம்பித்தது. படுக்கையின் கீழ் ஒளிந்து கொள்ள நினைத்து அதை சென்றடைந்த போது அது படுக்கை அல்லாது வேறு ஏதோ ஒன்று போல இருளில் தோன்றியது. அதற்கு பதிலாக மேரி ஜேனின் உடைகள் வைத்திருக்கும் சுவற்றின் திரைச்சீலையை நான் தொட நேர்ந்தது. எனவே உடனடியாக திரையின் பின் உள்ள நீண்ட அங்கிகள் போன்ற உடைகளுக்குள் சுருண்டு படுத்து, சத்தம் செய்யாது அமைதியாக இருந்தேன்.

அவர்கள் உள்ளே வந்து கதவை மூடினார்கள். முதல் காரியமாக பிரபு கட்டிலின் கீழ் குனிந்து பார்த்து யாருமில்லை என்று உறுதி செய்து கொண்டார். அதைக் கண்ட நான் மனதளவில் மிகவும் மகிழ்ச்சி கொண்டேன். நல்ல வேளை! நான் தேடியபோது கட்டில் என் கைக்குக் கிடைக்காததை நினைத்து அமைதிப்பெருமூச்சு விட்டேன். எனினும், பொதுவாக ஒளிந்துகொள்ள நினைப்பவர்கள் கட்டிலுக்குக் கீழே செல்வது என்பது இயற்கைதானே.

அவர்கள் இருவரும் கட்டிலின் மீது அமர்ந்தார்கள். ராஜா கூறினார்:

“நல்லது. என்ன இது? சீக்கிரம் சொல்லு. அழுது கொண்டும், துக்கம் அனுசரித்துக் கொண்டும் கீழே இருப்பதுதான் சிறந்தது. அதை விடுத்து இங்கே தனியாக நாம் மேல்மாடியில் கூடிப் பேசிக்கொண்டால் அவர்கள் நம்மைப் பற்றி சந்தேகப்பட ஆரம்பித்து விடுவார்கள்.”

“அதேதான். இதோ சொல்கிறேன், பிரெஞ்சு ராஜா! இது சுலபமல்ல. எனக்கு இங்கே வசதியாகத் தோன்றவில்லை. அந்த டாக்டர் பற்றி எண்ணி நான் பயந்து கொண்டிருக்கிறேன். உன்னுடைய திட்டம் என்ன என்பது எனக்குத் தெரியவேண்டும். என்னிடம் நல்லதொரு லாபகரமான திட்டம் உள்ளது.”

“உன்னுடைய யோசனை என்ன, பிரபுவே!”

“அதிகாலை மூன்று மணிக்கு முன்பாக இங்கிருந்து கம்பி நீட்டி விடுவது பற்றி நான் சிந்தித்துக்கொண்டிருக்கிறேன். நாம் அவர்களிடம் இருந்து அடித்த கொள்ளையுடன் நதிக்கு ஓடி விடவேண்டும். அதுவும் நமக்கு அது சுலபமாகக் கிடைத்ததால், அவர்களே நமக்குத் திருப்பிக் கொடுத்ததால், நம்முடைய அதிர்ஷ்டத்தால் நம்மை நோக்கி வீசப்பட்டது என்றே நாம் கூறவேண்டும். இல்லாவிட்டாலும், மீண்டும் அதைத் திருடுவதாகத் திட்டம் போட்டோம். எனவே இத்தோடு விளையாட்டை முடித்துக் கொண்டு மூட்டையைக் கட்டுவோம் என்பதே என் எண்ணம்.”

மிகுந்த அதிர்ச்சியை எனக்கு அது கொடுத்தது. ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் முன்பு வேறு மாதிரி இருந்த திட்டம் இப்போது மாறியது எனக்கு ஏமாற்றத்தையும், வேதனையையும் கொடுத்தது.

ராஜா மிகுந்த எரிச்சலுடன் கூறினார் :”என்னது? மற்ற சொத்துக்களை விற்காமலா? எட்டு அல்லது ஒன்பது ஆயிரம் டாலர் மதிப்புள்ள சொத்துக்களை அல்வா போன்று வழித்து எடுத்துக் கொள்ளாமல் சும்மா விட்டுவிட்டு மூடர் கூட்டம் போல நடை போட்டுப் போகச் சொல்கிறாயா? அந்தச் சொத்துகள் அனைத்தும் விற்றால் காசு பார்க்க வைக்கும் லாபகரமான விஷயமும் கூட.”

பிரபு ஏதோ முணுமுணுத்தார். ஒரு பை நிறைய தங்கக்காசுகள் மட்டும் போதும் என்றார். அதற்குமேல் போக அவர் விரும்பவில்லை. இந்த அநாதைப் பெண்களின் அனைத்து சொத்துக்களையும் கொள்ளையடிக்கவும் அவர் விரும்பவில்லை.

“என்ன பேசுகிறாய்? நான் சொல்வதைக் கேள்” ராஜா கூறினார் “இந்தக் காசுகளைத் தவிர நான் எதுவும் இந்தப் பெண்களிடமிருந்து கொள்ளையடிக்கப் போவதில்லை. யார் நம்மிடமிருந்து அந்த நிலங்களை எல்லாம் வாங்குவார்களோ, அவர்களே நஷ்டப் படுவார்கள். உண்மையில் நாம் இந்தச் சொத்துக்களின் உண்மையான சொந்தக்காரர் இல்லை என்று பின்னாளில் நாம் ஊரை விட்டு ஓடியபிறகு, தெரிய வரும்போது, நாம் விற்றது செல்லாது என்று ஆகிவிடும். எனவே அந்தச் சொத்துக்கள் மற்றும் வீடுகள் அனைத்தும் திரும்ப இந்தப் பெண்களுக்கே வந்து சேரும். அது அவர்களுக்கு நல்லதுதானே. இளமைத் துடிப்போடு இருக்கும் இந்தச் சிறு பெண்கள் அவற்றை வைத்து தங்கள் வாழ்க்கைக்கு வழி தேடிக்கொள்வார்கள். அவர்கள் ஒன்றும் கஷ்டப்படப்போவதில்லை. ஏன். இப்படி சிந்தித்துப் பார்! எத்தனையோ ஆயிரக்கணக்கான வறுமையில் வாடும் மக்களை விட இந்தப் பெண்கள் நல்ல வசதியாகத்தானே இருக்கிறார்கள். நான் அடித்துக் கூறுகிறேன். அவர்கள் தங்கள் வாழ்வில் குறை கூறிக்கொண்டு இருக்க என்று எதுவுமே கிடையாது.”

நல்லது. ராஜா இவ்வாறாக சமாதானம் செய்து கொண்டே இருந்ததால், வேறு வழியில்லாத பிரபுவும் ராஜாவின் திட்டத்துக்கு ஒத்துக் கொண்டார். சரியென்று ஒத்துக் கொண்டாலும், அங்கே தங்கியிருப்பது முட்டாள்தனமான விஷயம் என்று பிரபு எச்சரித்தார். அந்த டாக்டரின் சந்தேகப் பார்வையில் அவர்கள் அங்கே நாட்களை கடத்துவது கடினம் என்றார். ஆனால் ராஜா கூறினார் “நாசமாய் போன டாக்டர்! யார் அவனை எதற்காகக் கண்டுகொள்ளப் போகிறார்கள்? இந்த ஊரில் உள்ள அனைத்து மடையர்களையும் நம் வசப்படுத்தி விட்டோமே! அதனால் நமக்கு இந்த ஊரில் பெரும்பான்மையோர் ஆதரவு உள்ளதுதானே?”

இவ்வாறு பேசிக்கொண்டே அவர்கள் படியில் இறங்கி கீழே செல்ல ஆயத்தமானார்கள். அப்போது பிரபு கூறினார் “அந்த காசு மூட்டையை நாம் சரியான இடத்தில் பத்திரப்படுத்தி வைக்கவில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது.”

இந்த வார்த்தைகள் என்னை உற்சாகமூட்டியது. கண்டிப்பாக பணமூட்டை பற்றி ஏதேனும் ஒரு குறிப்பு கிடைக்கும் என்று எனக்குத் தோன்றியது.

ராஜா கேட்டார் “ஏன்?”

“ஏனெனில் மேரிஜேன் இனி இந்த சமயத்திலிருந்து துக்கம் அனுஷ்டிக்க ஆரம்பித்து விடுவாள். முதலில் இந்த நீக்ரோ வந்து இந்த அறைகளை சுத்தம் செய்ய ஆரம்பிப்பான். இங்கிருக்கும் ஆடைகளை எடுத்து பெட்டியில் வைத்து வேறு பக்கம் எடுத்துச் செல்வான். அப்படிச் செய்யும்போது இந்தப் பை அவன் கையில் கிடைத்தால், அதிலிருந்து சில காசுகளை எடுக்க மாட்டான் என்று நீ நினைக்கிறாயா?”

“இப்போது நீ மீண்டும் சரியாக யோசிக்கிறாய், பிரபு!” ராஜா கூறினார்.

நான் இருக்கும் இடத்திற்கு இரண்டு மூன்றடி முன்னால் வரை அவர் திரையினுள்ளே தடுமாறிக் கொண்டே வந்தார். பல்லி போல் சுவரோடு ஒட்டிக் கொண்ட நான் பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்தாலும், அசைவற்று இருந்தேன். இவர்கள் கையில் மட்டும் நான் சிக்கிவிட்டால் என்ன சொல்லுவார்கள் என்றும் அப்படி அவர்கள் என்னைப் பார்த்து விட்டால் நான் என்ன சொல்லி சமாளிப்பது என்று நான் சிந்திக்க முயற்சித்துக் கொண்டிருந்தேன். ஆனால் அடுத்த அரை நொடியிலேயே, நான் சிந்தித்து முடிக்கும் முன்னரே, ராஜா அந்தப் பையை ஒரு மூலையிலிருந்து எடுத்தார். நான் அங்கு இருப்பது பற்றி அவருக்குத் துளிக் கூடத் தெரியவில்லை. பஞ்சு மெத்தையின் கீழ்புறம் உள்ள வைக்கோல் படுக்கையின் உள்புறமாக ஒரு கீறலிட்டு, அதனுள்ளே ஒன்றிரண்டு அடி உள்ளே அந்தப் பையை திணித்து வைத்தார்கள். இனி இது பிரச்னை இல்லை என்றும் நீக்ரோ அந்த பஞ்சு மெத்தையை மட்டுமே சரி செய்வான் என்பதால் யாரும் அதைத் திருட முடியாது என்றும் நிம்மதியடைந்தார்கள். கீழுள்ள வைக்கோல் படுக்கையை வருடம் இருமுறை மட்டுமே திருப்பிப் போட்டு சரி செய்வார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும்.

ஆனால் எனக்கு அது தெரிந்திருந்தது. அவர்கள் அதை அங்கே வைத்துவிட்டு பாதிப் படிக்கட்டுகள் கூட இறங்கி இருக்கமாட்டார்கள். நான் அதை எடுத்து விட்டேன். சுவர்களைப் பிடித்துத் தடவியவாறே, பரணிலிருந்த என்னுடைய மூலைக்குச் சென்று பணத்தை வேறு நல்ல இடம் பார்த்து ஒளித்து வைக்கும் முன் அங்கே ஒளித்து வைத்தேன். வீட்டின் வெளிப்புறம் ஏதேனும் நல்ல இடம் பார்த்து ஒளித்து வைக்க வேண்டும் என்று சிந்தித்தேன். ஏனெனில், பணம் காணவில்லையெனில், அவர்கள் இந்த வீடு முழுதும் ஒரு இடம் கூட விடாமல் சல்லடை போட்டு அலசிவிடுவார்கள் என்பது எனக்கு உறுதியாகத் தெரியும். எனது முழு உடுப்புடனே மெத்தையின் மீது படுத்துக்கொண்டேன். ஆயினும் தூங்க நினைத்தாலும் கூட எனக்குத் தூக்கம் வரவில்லை. இந்த வேலையைச் சரியான முறையில் செய்து முடிக்கவேண்டும் என்ற பரபரப்பு என்னிடம் நிறைந்திருந்தது. விரைவிலேயே ராஜாவும், பிரபுவும் படி ஏறிவரும் சத்தம் கேட்டது. எனவே நான் கோரைப்பாய் மஞ்சத்துக்குள் என்னைச் சுருட்டிக் கொண்டு ஏணியின் உச்சியில் எனது தாடையை வைத்துக் கொண்டு ஏதேனும் நடக்கப் போகிறதா என்று காத்துக் கொண்டிருந்தேன். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை.

எனவே இரவின் சத்தங்கள் அடங்கும்வரை, ஆனால் அதிகாலையின் சத்தங்கள் ஆரம்பிக்கும் முன் வரை பொறுமையாக நான் அங்கே காத்திருந்தேன். பின்னர் பூனை போல மெல்ல ஏணியில் கீழே இறங்கி வந்தேன்.

[தொடரும்]


முனைவர் ஆர்.தாரணி

– முனைவர்  ர. தாரணி M.A., M.Phil., M.Ed., PGDCA., Ph.D.  தமிழ்நாட்டில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தேவாரப்பாடல் பெற்ற சிவஸ்தலமான, திருப்புக்கொளியூர் என்று முன்பு திருநாமம் பெற்ற அவிநாசி என்ற ஊரில் உள்ள  அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆங்கிலத்துறையின் தலைவராக பணியாற்றி வருகிறார். ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றது கல்வித்துறையில் அவர் தேர்வு செய்த விஷயம் என்றாலும் அவரின் பேரார்வம் மொழிபெயர்ப்பின் மீதும்தான். –

akilmohanrs@yahoo.co.in