என் பால்ய ,பதின்ம வயதுகளில் மேனாட்டு நாவலாசிரியர்களின் நாவல்கள் பலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளை நான் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்துள்ளேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த நாவல்களாக மார்க் ட்வைனின் ‘ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்’, ரொபேர்ட் லூயி ஸ்டீவன்சனின் ‘புதையல் தீவு’ என்பவற்றைக் குறிப்பிடுவேன். பின்னர் வளர்ந்ததும் ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் நாவலின் ஆங்கில; நூலினையும் வாசித்துள்ளேன். அண்மையில் முனைவர் ர.தாரணி ‘பதிவுகள்’ இணைய இதழுக்கு மார்க் ட்வைனின் சிறுகதையொன்றினைத் தமிழாக்கம் செய்து அனுப்பியபோது அவர் தமிழாக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உடனேயே ஒரு யோசனையும் தோன்றியது. அவரிடம் ஏன் அவர் ‘ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்’ நாவலைத் தமிழாக்கம் செய்யக்கூடாது என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் உடனடியாகவே மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். உடனேயே அத்தியாயங்கள் சிலவற்றையும் தமிழில் எழுதி அனுப்பியிருந்தார். அவருக்குப் ‘பதிவுகள்’ சார்பில் நன்றி. இந்நாவல் இனி பதிவுகளில் தொடராக வெளிவரும். வாசித்து மகிழுங்கள். உங்கள் கருத்துகளையும் அறியத்தாருங்கள். – வ.ந.கிரிதரன், ஆசிரியர் ‘பதிவுகள்’
அத்தியாயம் இருபத்தி நான்கு
அடுத்த நாள் இரவு நேரம் நெருங்கி வருகையில், நதியின் மத்தியப் பகுதியில், கரையின் இருபுறங்களிலும் கிராமங்கள் காணப்பட்ட இடத்தில் ஒரு சிறிய மணல்திட்டில் இருந்த அடர்ந்த வில்லோ மரங்களின் கீழ் எங்களின் தோணியை மறைத்து வைத்தோம். அந்த ஊர்களில் உள்ள மக்களை தங்களின் நடிப்பில் நம்ப வைக்க நமது ராஜாவும் பிரபுவும் நல்லதொரு திட்டம் தயாரித்துக் கொண்டிருந்தார்கள். அங்கே சிறிது நேரம் மட்டுமே நிறுத்தி வைக்கப் போவதாக ஜிம் பிரபுவிடம் கூறினான். மறைக்கப் பட்டுள்ள தோணியில் உள்ள கூம்பு வடிவக் குடிலுக்குள் முழு நேரமும் கட்டிவைக்கப்பட்டு மறைந்து கிடப்பது ஜிம்முக்கு மிகவும் அலுப்புத் தட்டியிருக்க வேண்டும். தோணியில் நாங்கள் தனியாக அவனை விட்டுச்செல்லும் வேளையில் கட்டிவைத்துவிட்டுப் போவது வழக்கம். யாரேனும் எதேச்சையாக அவனைக் கண்டுபிடித்தால் கூட, தப்பி ஓடிப்போன நீக்ரோவை நாங்கள் பிடித்துக்கட்டி வைத்திருப்பதாகத் தோன்றும் என்ற காரணத்திற்காக அவ்வாறு செய்வது வழக்கம். அப்படி கைகால்கள் பிணைக்கப்பட்ட நிலையில் முழு நாளும் கிடப்பது மிகவும் கடினமான விஷயம்தான் என்று அந்தப் பிரபு ஒத்துக்கொண்டார். அதற்கும் கூடிய விரைவிலேயே ஒரு வழி கண்டுபிடிக்கப் போவதாகவும் அவர் கூறினார்.
பிரபு மிகுந்த அறிவுக் கூர்மை வாய்ந்தவராதலால், விரைவிலேயே அதற்கான ஒரு திட்டம் தயாரித்தார். ஜிம்முக்கு ராஜா லியரின் – King Lear (ஷேக்ஸ்பியர் நாடகத்தின் ஒரு முக்கியக் கதாநாயகன்) ஆடைகளை அணிவித்து விட்டார். நீண்ட திரைச்சீலையால் தைக்கப்பட்ட ஒரு காலிகோ கவுன் ஜிம்முக்கு அணிவித்து, தலைக்கு வெள்ளை நிற குதிரை முடிகளால் ஆன விக் பொருத்தி, வெள்ளை நிற ஓட்டு மீசையும் வைத்து விட்டார். பின்னர் நாடகத்திற்குப் பயன்படுத்தும் வர்ணக் கலவைகளுள் உள்ள மந்தமான இளம் நீல நிறத்தை எடுத்து ஜிம்மின் முகம், கைகள், காதுகள் மற்றும் கழுத்துப் பகுதிகளில் பூசிவிட்டார். நீரில் மூழ்கியதால் இறந்து ஒன்பது நாட்களுக்கும் மேலாக நீலம் பாரித்துக் கிடக்கும் ஒரு மனிதனின் சடலம் இருப்பதைப்போல் ஜிம் தோற்றமளித்தான். இதுவரை நான் கண்ட விஷயங்களிலேயே மிகவும் கோரமான விஷயம் அவனின் தற்போதைய தோற்றம்தான். பின்னர் ஒரு சிறு விளம்பரப் பலகை மரப்பட்டைகளால் பிரபு தயாரித்தார். அது கூறியதாவது:
நோயுற்ற அரேபியன் – கிறுக்குப் பிடிக்காதவரை ஒரு பாதிப்புமில்லை.
பிறகு அந்தப் பலகையை அந்த கூம்புக் குடிலின் முன்பக்கமாக ஐந்தாறு அடி உயரத்தில் இருந்த இன்னொரு மரப்பலகையில் ஆணி அடித்து மாட்டி வைத்தார். ஜிம் மிகவும் திருப்தியடைந்தான். கட்டி வைக்கப்பட்டு, ஒவ்வொரு நாளும் மணித்துளிகள் நகர்வது பல வருடங்கள் போலத் தோன்றுவதையும், ஏதேனும் சிறிய சத்தம் கேட்டாலும் கூட பயந்து நடுங்கி இருப்பதையும் விட இந்த வழி மிகவும் சிறப்பாக உள்ளதாக ஜிம் கூறினான். அங்கே வசதியாக இருக்கும்படி பிரபு அவனைக் கூறினார். அப்படி யாரேனும் உளவு பார்க்க அங்கே வந்தால், கூம்புக்குடிலிலிருந்து குதித்து வெளியே வந்து, பைத்தியக்காரனைப் போல் கோணங்கித்தனம் செய்து, பயப்படும்படியாக ஒரு காட்சியை உருவாக்கி, வனவிலங்கு போல ஒன்றிரண்டு தடவைகள் ஊளையிட்டுக் கத்தச் சொல்லி பிரபு சொல்லிக் கொடுத்தார். அங்கே வரும் ஆட்கள் இதைக் கண்டு நடுங்கி அவனை விட்டுவிட்டு ஓட்டம் எடுத்துவிடுவார்கள் என்றும் கூறினார். ஜிம் கத்தி ரகளை செய்யும் முன்பாகவே, அவனைக் கண்டதும் பார்ப்பவர்கள் கிலி பிடித்து தலைதெறிக்க ஓடிவிடுவதே நிஜம் என்றாலும் பிரபு கூறியது நல்லதொரு உபயோகமான யோசனை என்றே தோன்றியது. ஜிம்மின் தோற்றமே கடும் பீதியைக் கிளம்புவதாகத்தான் இருந்தது. ஒரு சடலத்தை விடப் படு கேவலமாக இருந்தான்.
செலவு ஏதும் அதிகமாக செய்ய வேண்டியில்லாதால்,முன்பு செய்ததுபோலவே அந்த பழையகால ராஜா விளையாட்டை, அந்தப் போக்கிரிகள் இங்குள்ள கிராமங்களிலும் செய்ய நினைத்தார்கள். ஆயினும் பழைய மோசடி பற்றி அந்தக் கிராமங்களிலிருந்து தகவல் ஏதும் நதியின் கீழ்ப்பக்கமாக உள்ள இவர்களுக்கு வந்து சேர்ந்திருந்தால், நமது போக்கிரிகளுக்கு ஆபத்தாகிவிடும் என்றும் யோசித்தார்கள். பொருத்தமான வேறு புதுத்திட்டத்தையும் அவர்களால் உடனடியாக சிந்திக்கமுடியாது போகவே அவர்களின் விவாதத்தைக் கைவிட்டார்கள். ஆர்கன்சாஸ் நகர்ப்பக்கம் உள்ள கரையில் வசிக்கும் மக்களை ஏமாற்ற ஏதேனும் மோசடித் திட்டம் தயாரிக்க இன்னும் ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் எடுத்து சிந்திக்க வேண்டும் என்று பிரபு சொன்னார். அதன் எதிப்புறம் உள்ள கரைக்கு சென்று பார்ப்பதாக ராஜா சொன்னார். அவர் மனதில் குறிப்பிட்ட திட்டம் ஏதும் இல்லாவிட்டாலும் அவருக்கு இயற்கையின் அருள்நலம் லாபகரமான விஷயத்தை நோக்கி வழிநடத்திச் செல்லும் என்றார்.
என்னைப் பொறுத்தவரை அவர் சொன்ன இயற்கையின் அருள் நலம் ஒரு சாத்தானாகத்தான் இருக்கவேண்டும் என்று எண்ணினேன். கடைசியாக நிறுத்திய இடத்தில் உள்ள துணிக்கடைகளில் நல்ல ஆடைகளாகப் பார்த்து வாங்கிக்கொண்டோம். ராஜா புது ஆடைகளை அணிந்து கொண்டு என்னையும் அவ்வாறே உடுத்திக் கொள்ளக் கூறினார். நானும் அப்படியே செய்தேன். ராஜாவின் ஆடைகள் கருப்பு நிறத்தில் விறைப்பாக இருந்தாலும் பார்க்க அவருக்கு நன்றாக இருந்தது, ஒரு மனிதனை ஆடைகள் இவ்வாறு நன்கு மாற்றிவிடமுடியும் என்பது எனக்கு அதுவரை தெரிந்திருக்கவில்லை. முன்பு பார்த்த ராஜா நீங்கள் என்றுமே பார்த்திருக்க முடியாத ஒரு கேவலமான கோமாளி போன்று இருந்தார். இப்போது புத்தாடை உடுத்து, விலங்கு ரோமத்தால் ஆன வெள்ளைநிறத் தொப்பியை கையில் லாவகமாக எடுத்துத் தலை குனிந்து வணங்கிச் சிரிக்கும் போது, மிகவும் ஆடம்பரமாகவும், அதே சமயம் பைபிளில் வரும் நோவா அல்லது லெவிட்டிகஸ் போன்று பயபக்தியுடனும் தோற்றமளித்தார். சிறு படகை ஜிம் சுத்தம் செய்யும் வேளையில், நான் துடுப்புக்களைத் தயாராக வைத்தேன். அந்த நகரின் மேல் புறமாக மூன்று மைல் தொலைவில், கரையினருகே ஒரு நீராவிப் படகு காணப்பட்டது. மூன்று மணி நேரத்திற்கும் மேலாக அங்கே நின்றிருந்த அந்தப் படகினுள்ளே மனிதர்கள் சரக்குகளை ஏற்றிக் கொண்டிருந்தார்கள். எனவே ராஜா கூறினார்:
“மிக நன்றாக நான் ஆடை அணிந்திருப்பதால், செயின்ட் லூயிஸ் அல்லது சின்சினாட்டி அல்லது அது போன்ற பெரிய நகரங்களிலிருந்து வந்திருப்பதாக நான் கூறிக் கொள்கிறேன். அந்த நீராவிப் படகை நோக்கிச் செல், ஹக்கில்பெரி! அந்த ஊரின் கரையின் கீழ்புறமாகச் செல்லுவோம்.”
படகுகளின் ப்ரியனான எனக்கு அந்த நீராவிப் படகு நோக்கிச் செல்ல இரண்டு முறை கட்டளையிட அவசியமில்லை. அந்த ஊரின் வடக்குப்புறமாக அரை மைல் தொலைவில் உள்ள கரைக்கு எங்கள் சிறிய படகைக் கொணர்ந்து சேர்த்தேன். கரையை ஒட்டியவாறே உள்ள சரிவான பகுதியில் அமைதியாக இருக்கும் நதி நீரில் துடுப்பைத் துழாவிக்கொண்டேசென்றேன். விரைவிலேயே நல்லவன் போன்றும் அப்பாவி போன்றும் தென்பட்ட ஒரு கிராமப்புற இளைஞன் மரத் தெப்பம் ஒன்றில் அமர்ந்து முகத்தைக் கழுவிக் கொண்டிருந்தான். அது நல்ல சூடான நேரம். அவன் அருகில் சில கெட்டித் தோல்பைகள் வைத்திருந்தான்.
“படகைக் கரையை நோக்கிச் செலுத்து.” என்று ராஜா கூறினார். நானும் அவ்வாறே செய்தேன்.
“எங்கே செல்கிறாய் இளைஞனே?” ராஜா கேட்டார்.
“அந்த நீராவிப் படகுக்கு. நான் நியூ ஆர்லியன்ஸ் செல்லப் போகிறேன்.”
“இந்தப் படகில் ஏறிக்கொள். ராஜா கூறினார் “ஒரு நிமிடம். என்னுடைய பணியாள் உன்னுடைய பைகளை வாங்கி உனக்கு உதவுவான். அடோல்பஸ்! (அவர் எனக்கு வைத்த புதுப் பெயர்-நான் புரிந்து கொண்டேன்) வெளியே குதித்துப் போய் அந்த கனவானுக்கு உதவி செய்!”
நானும் அவ்வாறே செய்த பின், நாங்கள் மூவரும் அந்த சிறு படகில் பயணம் செய்ய ஆரம்பித்தோம். அந்த இளம் வாலிபன் எங்களிடம் மிகுந்த நன்றியுடன் இருந்தான். இந்தக் கடுமையான வெயிலில் இத்தனை மூட்டைகளை இழுத்துக் கொண்டு செல்வது மிகவும் கடினம் என்றுரைத்தான். ராஜாவிடம் அவர் எங்கு செல்கிறார் என்று வினவினான். நதியில் பயணம் செய்து கொண்டு வந்த அவர் அடுத்துள்ள ஒரு கிராமத்தில் இன்று காலையில்தான் கரையிறங்கியதாகக் கூறினார். இப்போது நதியின் மேல் திசையில் இன்னும் சில மைல்கள் பயணம் செய்து அவருடய நீண்ட கால நண்பர் வசிக்கும் பண்ணைக்கு அவரைக் காணச் செல்வதாகக் கூறினார். அந்த இளம் வாலிபன் கூறினான்:
“நான் உங்களை முதலில் கண்டபோது நீங்கள்தான் மிஸ்டர். வில்க்ஸ் என்றும் சரியான சமயத்திற்கு வந்துள்ளீர்கள் என்றும் எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். பிறகு ஒரு நிமிடம் யோசித்த பிறகு இல்லை. இது அவரில்லை. அவர் எதற்காக துடுப்பு வலித்துக்கொண்டு இங்கே நதியில் செல்ல வேண்டும் என்று முடிவு செய்தேன். நீங்கள் மிஸ்டர். வில்க்ஸ் இல்லைதானே?”
“இல்லை. என் பெயர் ப்ளோட்ஜெட் – எலெக்ஸாண்டர் ப்ளோட்ஜெட் – மதிப்பிற்குரிய எலெக்ஸாண்டர் ப்ளோட்ஜெட் என்று நான் சொல்ல வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ஏனெனில் நான் கோமகனின் பணியாட்களுள் ஒருவன். எனினும் நீங்கள் எதிர்பார்த்த மிஸ்டர். வில்க்ஸ் சரியான நேரத்திற்கு வந்து சேராததற்கு வருத்தம் தெரிவிக்கிறேன். அவ்வாறு வராததால் ஏதேனும் தவற விட்டாரோ – அப்படி இருக்காது என்று நான் நம்புகிறேன்.”
“நல்லது. அவர் நேரம் கடத்தியதால், அவரது சொத்துக்களைக் கண்டிப்பாகத் தவற விடவில்லை. இறுதியில் அவர் அதை அடையத்தான் போகிறார். ஆனால் அவரின் சகோதரன் பீட்டர் சாவதை பார்க்கத் தவறிவிட்டார். அது பற்றி அவர் பெரிதாக கண்டுகொள்ளவும் போவதில்லை. உண்மையில் அது பற்றி யாருக்கும் எந்த விஷயமும் தெரியவும் தெரியாது. ஆனால் அவரின் சகோதரன் தான் சாகும் முன் அவரைக் காண்பதற்காக உலகிலுள்ள எதையும் கொடுக்கத் தயாராக இருந்தான்.” கடந்த மூன்று வாரங்களாக இதைத் தவிர அவன் வேறு எதுவும் பேசவில்லை.
“குழந்தைப் பருவத்தில் ஒன்றாக இருந்ததுடன் சரி. அதன் பின் இதுவரை அவன் தனது சகோதரனைக் காணவே முடியவில்லை. ஊமையும், செவிடுமான அவனின் இன்னுமொரு சகோதரன் வில்லியமை அவர் பார்க்கவே இல்லை. ஒரு முப்பது அல்லது முப்பத்தியைந்து வயது மட்டுமே வில்லியமுக்கு இருக்கும். பீட்டரும், ஜார்ஜும் மட்டுமே இங்கு இடம் பெயர்ந்து வந்து விட்டார்கள். ஜார்ஜுக்கு திருமணம் ஆகி அவனது மனைவி கடந்த வருடம் இறந்து விட்டாள். ஹார்வியும், வில்லியமும் மட்டும்தான் தற்போது உயிரோடிருக்கிறார்கள். இதோ, நான் இப்போது சொல்லிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் அவர்கள் சரியான நேரத்திற்கு இன்னும் இங்கு வந்து சேரவில்லை.”
“யாரவது அவர்களுக்குச் சொல்லி அனுப்பினார்களா?”
“ஆம். பீட்டர் முதலில் நோயில் விழுந்தபோது, ஒன்று அல்லது இரண்டு மாதம் முன்பு சொல்லி அனுப்பினோம். இந்த முறை தான் நோயிலிருந்து மீளப்போவதேயில்லை என்று அவன் நினைத்தான், தெரியுமா உங்களுக்கு! அவன் மிகவும் வயதானவன். ஜார்ஜின் பெண்களும் மிகவும் சிறியவர்கள். மற்றும் சிவப்பு முடிகள் கொண்ட மேரி ஜேன் தவிர மற்றவர்களாலும் அவனுக்குத் துணையிருக்க முடியாது. எனவே ஜார்ஜும், அவன் மனைவியும் இறந்த பிறகு, அவன் இந்த உலகில் வாழ்வதை அறவே வெறுத்து விட்டான்.”
“இறுதிக்கட்ட நிலையில் அவன் மிகவும் நம்பியது ஹார்வி மற்றும் வில்லியம் இருவரை மட்டுமே. உயில் எழுதுவதில் நம்பிக்கையற்றவனாக அவன் முதலில் இருந்தான். ஆனால் இறக்கும் தருவாயில் ஹார்விக்குச் சேர்க்கச் சொல்லி அவன் ஒரு கடிதம் எழுதி இருக்கிறான். அந்தக் கடிதத்தில் அவனது செல்வங்களை எங்கெல்லாம் வைத்திருக்கிறான் என்று அவன் முக்கியமாக குறிப்பிட்டிருக்கிறான். அதே போல் ஜார்ஜ் தனது மகள்களுக்கு சொத்து எதுவும் விட்டுச் செல்லாததால், தன்னுடைய சில சொத்துக்களை ஜார்ஜின் மகள்களுக்குப் பிரித்து கொடுப்பது தனக்கு சம்மதம் என்றும் கூறி உள்ளான். அந்தக் கடிதம் மட்டுமே அவனால் கடைசியாக எழுத முடிந்தது.”
“ஏன் ஹார்வி வந்து சேரவில்லை என்று நீ நினைக்கிறாய்? அவன் எங்கே வசிக்கிறான்?”
“ஓ! அவன் இங்கிலாந்தில் வசிக்கிறான். ஷெப்பீல்டு என்னுமிடத்தில் இருக்கிறான். அவன் அங்கே மத போதகனாக இருக்கிறான். இந்த நாட்டுக்கு அவன் வந்ததே இல்லை. அவனுக்குப் பயணம் செய்ய நேரம் இருப்பதில்லை. அத்துடன் அந்தக் கடிதம் அவனுக்குச் சென்று சேர்ந்திருக்காது என்று கூட நினைக்கலாம் அல்லவா!”
“மிகவும் மோசம். அவன் தனது சகோதரர்களைக் கடைசியாக பார்க்கக் கூட இல்லாமல் போனது மிகவும் மோசம்தான். பாவப்பட்ட ஆத்மா! நியூ ஆர்லியன்ஸ் இப்போது போவதாகத்தானே நீ கூறினாய்”
“ஆம். அது எனது பயணத்தின் ஒரு பகுதி மட்டுமே. அடுத்த புதன்கிழமை எனது மாமா வசிக்கும் ரியோ டி ஜெனிரோ நகருக்குச் செல்லும் கப்பலில் பயணம் செய்யப்போவதாக உள்ளேன்.”
“மிக நீண்ட பயணம் அது. ஆனால் மிகவும் இனிமையான பயணம் அது. நானும் அங்கே செல்ல வேண்டும் என்று விரும்புகிறேன். மேரி ஜேன் மூத்தவளா? மற்றவர்களுக்கு வயது என்ன இருக்கும்?”
“மேரி ஜேன் பத்தொன்பது வயது மிக்கவள். சூசனுக்கு பதினைந்து, பதினாலு வயது ஜோனாவுக்கு பிளவுபட்ட மேலுதடு இருக்கிறது. மற்றவர்களுக்கு உதவி செய்வதிலேயே அவள் தன்னை முழுநேரமும் அர்ப்பணித்துக்கொள்வாள்.”
“பாவப்பட்ட குழந்தைகள். இந்தக் குரூர உலகத்தில் அவர்கள் தனித்திருப்பது மிகவும் சங்கடம்தான்.”
“நல்லது. உண்மையில் மிகவும் மோசமாகத்தான் அவர்கள் நிலை போயிருக்கும். ஆனால் பீட்டர் கிழவனுக்கு அதிக அளவில் நல்ல நண்பர்கள் இருக்கிறார்கள். அந்தப் பெண்களுக்கு எதுவும் நேராமல் அவர்கள் காத்து நிற்கிறார்கள். ஹாப்ஸன், பாப்டிஸ்ட் மதபோதகர், டீக்கன் லாட் ஹோவி போன்றோர் உள்ளார்கள். அப்புறம் பென் ருகர் மற்றும் அப்னர் ஷாக்கள்போர்ட், கூடவே வக்கீல் லெவி பெல் இவர்களும் இருக்கிறார்கள். டாக்டர். ராபின்சன் மற்றும் இத்தனை ஆண்களின் மனைவிகள் அவர்களுடன் பார்ட்லி விதவை என நிறைய மனிதர்கள் இருக்கிறார்கள். இந்த மனிதர்கள்தான் பீட்டரின் உற்ற தோழர்கள். அவர்களைப் பற்றி வீட்டுக்கு எழுதும் கடிதத்தில் அதிகம் குறிப்பிட்டிருக்கிறான். எனவே ஹார்வி இங்கே வரும்போது யாரைச் சென்று பார்க்கவேண்டும் என்று அவனுக்கு நன்கு தெரியும்.”
நல்லது. அந்த இளம் மனிதன் சோர்ந்து போகும் வரை முதிய ராஜா கேள்விகளால் அவனைத் துளைத்தெடுத்து விட்டார். அந்தச் சிறிய ஊரிலுள்ள அனைத்து மனிதர்களைப் பற்றியும், அங்கு நடக்கும் விஷயங்களைப் பற்றியும், வில்க்ஸ் என்பாரைப் பற்றிய செய்திகளையும் துருவித் துருவிக் கேட்டுத் தெரிந்து கொண்டார். பீட்டர் என்பாரின் தொழில் (அவர் ஒரு தோல் பதப்படுத்தும் தொழில் செய்து வந்திருக்கிறார்), ஜார்ஜ் என்பாரின் தொழில் (அவர் ஓர் மரவேலை செய்பவர்) மட்டுமல்லாது மறுப்புக் கொள்கை போதகரான ஹார்வி என்பாரைப் பற்றியும் ராஜா கேட்டுத் தெரிந்து கொண்டார். இப்படியே பேச்சு போய்க்கொண்டே இருந்தது. பிறகு அவர் கூறினார்:
“எதற்காக நீ அந்த நீராவிப் படகு வரை நடந்து சென்று கொண்டிருந்தாய்?”
“ஏனெனில் நியூ ஆர்லியன்ஸைச் சேர்ந்த அது ஒரு பெரிய படகு. எனவே என்னுடைய சிறிய கிராமத்தில் நிற்காது என்று அஞ்சினேன். அந்தப் படகு முழுதும் நிரம்பிவிட்டால் எதற்காகவும் இடையில் நிற்காது. சின்சினாட்டியில் இருந்து வரும் படகுகள் நிற்கும். ஆனால் இந்தப் படகு செயின்ட் லூயிஸ் நகரிலிருந்து வருகிறது.”
“பீட்டர் வில்க்ஸ் பெரிய பணககாரரா?”
“ஓ. கண்டிப்பாக. மிகப் பெரிய செல்வந்தர். அவருக்கு நிறைய வீடுகள் மற்றும் நிலபுலன்கள் உள்ளது. அது போக நாலாயிரம் டாலர்களை பணமாக எங்கோ மறைத்து வைத்திருக்கிறார் என்று மக்கள் நினைக்கிறார்கள்.”
“அவர் எப்போது இறந்தார் என்று நீ கூறினாய்?”
“நான் கூறவே இல்லையே. ஆனால் அவர் இறந்தது நேற்று இரவு.”
“அவரது இறுதிச் சடங்கு நாளை நடக்கக்கூடுமல்லவா?”
“ஆமாம். நாளை மதியவேளை நடக்கும்.”
“நல்லது. அவர் வாழ்க்கை மிகவும் பரிதாபகரமானது. ஆனால் நாம் அனைவருமே ஒரு நாள் இறக்கத்தான் போகிறோம். எனவே நாம் அனைவரும் அதற்குத் தயாராக இருக்கவேண்டும். அப்படியெனில் நாம் சரியாக இருப்போம்.”
“உண்மைதான் சார். அதுதான் சிறந்த வழி. என் அம்மா அவ்வாறுதான் அடிக்கடி கூறுவார்கள்.”
ங்கள் அங்கே அடையும்போது சரக்கு ஏற்றி முடித்து படகு புறப்படத் தயாராக இருந்தது. நீராவிப் படகில் ஏறுவது பற்றி அந்த ராஜா கடைசிவரை எதுவுமே கூறவில்லை. நீராவிப்படகில் பயணம் செய்யும் பாக்கியம் நான் இழந்தேன். படகு புறப்பட்டுச் சென்றதும் ராஜா நதியின் மேற்புறமாக ஒரு மைல் அல்லது அதற்கும் கொஞ்சம் அதிகமான இடத்திற்கு துடுப்பு வலிக்கச் சொல்லி என்னைக் கூட்டிச் சென்றார். அங்கே சென்று கரையை அடைந்த பின்னர், ராஜா கூறினார் “நிற்காமல் ஓடிச் சென்று நமது பிரபுவை புதிய தோல்பையை எடுத்துக் கொண்டு வருமாறு கூறி இங்கே கூட்டி வா. கரையின் அடுத்த பக்கம் அவர் சென்றிருந்தால் அங்கே ஓடிச் சென்று அங்கிருந்து கூட்டி வா. அவர் என்ன செய்து கொண்டிருந்தாலும் அதை விட்டுவிட்டு இங்கே வரச்சொல்லி அழைத்து வா. நிற்காதே! புறப்படு உடனே!”
எனக்கு அவரின் திட்டம் நன்கு புரிந்தது. ஆயினும் நான் எதுவும் கூறவில்லை. நான் பிரபுவைத் திரும்பக் கூட்டி வந்ததும், எங்களின் சிறிய படகை ஒளித்து வைத்தோம். பின் அவர்கள் இருவரும் ஒரு மரக்கட்டையின் மீதமர்ந்து கொண்டார்கள். ராஜா பிரபுவுக்கு அந்த இளம் வாலிபன் கூறிய அனைத்தையும் ஒரு வார்த்தைகூட விட்டுவிடாமல் கூறினார். அவ்வாறு பிரபுவிடம் அனைத்தையும் கூறிக்கொண்டிருந்த வேளையில் அவர் பிரிட்டிஷ் ஆங்கில உச்சரிப்பை பயன்படுத்த முயன்றார். ஒரு நல்ல ஊர் சுற்றியைப் போல அருமையான வேலையே அவர் செய்தார். அவரைப்போல் என்னால் ஒருபோதும் நடிக்க முடியாது. நான் ஏதோ கொஞ்சம் முயற்சிக்கலாம். அவ்வளவுதான். மிகுந்த பாங்குடன் அவர் அந்த வேலையைச் செய்தார். பின்னர் அவர் சொன்னார்
“நீ எந்த அளவுக்கு செவிட்டு ஊமையாக நடிப்பாய், பில்ஜ்வாட்டர்?”
அந்த வேலையைத் தன்னிடம் விட்டுவிடும்படி ராஜாவிடம் பிரபு கூறினார். அவர் அது போன்று செவிட்டு ஊமையாக முன்பு நடித்திருக்கிறார் என்று கூறினார். பின்னர் அவர்கள் ஒரு நீராவிப் படகுக்காக காத்திருந்தனர்.
மதிய வேளையின் போது சில சிறிய படகுகள் வந்தன. ஆனால் நதியின் மேற்புறமாக வெகுதூரம் வரவில்லை. கடைசியாக, ஒரு பெரிய படகு அந்த வழியாக வந்தது. அவர்களை அதை அவர்கள் பக்கம் அழைத்தார்கள். அந்தப் படகு ராணியோ ரொம்பப் பிகு செய்து கொண்டு எங்கள் பக்கம் தன் முகத்தைத் திருப்பினாள். நாங்கள் மேல்தளத்திற்கு ஏறிவிட்டோம். சின்சினாட்டியிலிருந்து வரும் படகு அது. ஒரு நாலு மைல் தூரம் மட்டுமே செல்ல நாங்கள் ஏறி இருக்கிறோம் என்று தெரிந்த பிறகு, கப்பலின் குழு எங்களிடம் கோபப்பட்டார்கள். கடுமையாக வசை பாடிய அவர்கள் நாங்கள் செல்லும் இடத்திற்கு கொண்டு செல்ல மாட்டோம் என்று தீர்மானமாகக் கூறினார்கள். ஆனால் மிகவும் பொறுமையாக ராஜா கூறினார்:
“ஒரு மைலுக்கு ஒரு டாலர் என்றால் படகு எங்களை கூட்டிப் போகமுடியும்தானே!”
அவர்கள் அமைதியடைந்து சரி என்றார்கள். அந்தக் கிராமத்துக்குச் சென்றதும், படகு எங்களைக் கரையில் இறக்கிவிட்டது. படகு கரையினருகே வருவதைக் கண்ட இரண்டு டஜன் மனிதர்கள் நதியை நோக்கி கூட்டமாக வந்தார்கள். ராஜா கூறினார் :
“பீட்டர் வில்க்ஸ் எங்கே வசிக்கிறார் என்று உங்களில் யாரேனும் கூறமுடியுமா?”
அனைத்து மனிதர்களும் திடுக்கிட்டவாறு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள் .பின்னர் “நான் என்ன சொன்னேன்?” என்று கேட்கும் விதமாக தலையை ஆட்டிக்கொண்டார்கள். பின் அவர்களுள் ஒருவன் மிக மெதுவாக, மென்மையாகக் கூறினான்:
“மன்னித்துவிடுங்கள் ஐயா! எங்களால் சொல்ல முடிந்தது எல்லாம் நேற்று மாலை வரை அவர் எங்கே வசித்தார் என்பது மட்டுமே.”
கண்ணை இமை மூடித்திறப்பதற்குள், கைதேர்ந்த போக்கிரியான அந்த ராஜா முன்பக்கமாகத் தடுமாறி, அந்த மனிதனின் மேல் விழுந்து அவனின் தோள்பட்டையின் மீது தனது தாடையைப் பதித்து, அவர் கண்ணில் வழிந்த நீர் அவனின் முதுகுப்புறத்தில் உருண்டோடும்படியாகக் கதற ஆரம்பித்தார்.
பின்னர் கூறினார் “ஓ! இல்லை! ஓ! இல்லவே இல்லை. எங்களுடைய பாவப்பட்ட சகோதரன் ….. போய்விட்டான். நாங்கள் அவனைப் பார்க்க முடியாமலே போய்விட்டதே. ஓ! இது அடுக்கவே அடுக்காது. நாங்கள் தாமதமாக வந்து விட்டோம்.”
பித்துக்குளித்தனமான சில சைகைகள் செய்தார். அந்தப் போக்கிரியும் கையிலிருந்த பையைக் கீழே எறிந்துவிட்டு, பீறிட்டு அழ ஆரம்பித்தார். அடேங்கப்பா! இப்படி ஒரு அயோக்கிய சிகாமணிகளின் கூட்டத்தை நான் இதுவரை கண்டதே இல்லை.
நல்லது. அனைத்து மனிதர்களும் அவர்களைச் சுற்றிக் கூட்டம் கூடி அவர்களுக்காகப் பரிதாபப்பட்டார்கள். மனதுக்கு இதமான ஆறுதல் வார்த்தைகளைக் கூறி அவர்களைத் தேற்றி, அவர்களின் தோள் மீது படுத்துக் கொண்டு அழ அனுமதித்தார்கள். அந்த கனத்த பைகளை அந்த மனிதர்கள் சுமந்து கொண்டு மலை ஏறியவாறே அவர்களது சகோதரனின் கடைசி நிமிடங்களைப் பற்றிக் கூறினார்கள். அவர்கள் கூறியதை சைகையால் பிரபுவுக்கு ராஜா கூறிக் கொண்டே வந்தார். ஏதோ தங்களின் பன்னிரண்டு சீடர்களையும் இழந்தவர்கள் போல தோல் பதனிட்ட மனிதரின் இறப்பை நினைத்து அந்தக் கயவர்கள் கதறி அழுது கொண்டே இருந்தார்கள்.
,நல்லது. இனி இவ்வாறு ஒரு கண்றாவியை நான் பார்த்தேனென்றால், என்னை நீக்ரோ என்றே அழையுங்கள். மொத்த மனித குலத்தையும் நினைத்து அவமானப்பட அந்த ஒரு காட்சியே போதும்.
[தொடரும்]
– முனைவர் ர. தாரணி M.A., M.Phil., M.Ed., PGDCA., Ph.D. தமிழ்நாட்டில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தேவாரப்பாடல் பெற்ற சிவஸ்தலமான, திருப்புக்கொளியூர் என்று முன்பு திருநாமம் பெற்ற அவிநாசி என்ற ஊரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆங்கிலத்துறையின் தலைவராக பணியாற்றி வருகிறார். ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றது கல்வித்துறையில் அவர் தேர்வு செய்த விஷயம் என்றாலும் அவரின் பேரார்வம் மொழிபெயர்ப்பின் மீதும்தான். –
akilmohanrs@yahoo.co.in