வாசிப்பும், யோசிப்பும் – 24: கவிஞர் சேரனின் பன்முக இலக்கியப் பங்களிப்பு.

கவிஞர் சேரன் கவிஞர் சேரன் இன்று சர்வதேசரீதியில் நன்கறியப்பட்ட தமிழ்க் கவிஞர்களிலொருவர். வின்சர் பல்கலைக்கழகத்தில் இணைப் பேராசிரியராகச் சமூகவியல், மானுடவியல் மற்றும் குற்றவியல் துறைகளை உள்ளடக்கிய பிரிவில் பணிபுரிபவர்.  இரண்டாவது சூரிய உதயம், யமன், கானல் வரி, எலும்புக் கூடுகளின் ஊர்வலம், எரிந்து கொண்டிருக்கும் நேரம், நீ இப்பொழுது இறங்கும் ஆறு, உயிர் கொல்லும் வார்த்தைகள், மீண்டும் கடலுக்கு என இவரது பல கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. அண்மையில் இவரது கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் ‘எரிந்து கொண்டிருக்கும் நேரம்’ (IN A TIME OF BURNING), ‘இரண்டாவது சூரிய உதயம் ( A SECOND SUNRISE), தொகுதிகளாக வெளிவந்து வரவேற்பினைப் பெற்றுள்ளன. செல்வா கனகநாயகத்தால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட சேரனின் கவிதைகள் You Cannot Turn Away என்னும் பெயரில் வெளியாகியுள்ளது. இத்தொகுதி சேரனின் நாற்பது கவிதைகளை உள்ளடக்கியுள்ளது. அத்துடன் தொகுதி தமிழ் / ஆங்கிலத்தில் இருமொழித் தொகுப்பாக வெளிவந்திருப்பது குறிப்பிடத்தக்கது.  ‘எரிந்து கொண்டிருக்கும் நேரம்’ என்னும் லக்சுமி ஹோம்ஸ்றம்ம்மின் ஆங்கில மொழிபெயர்ப்பில் வெளியான சேரனின் கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் இங்கிலாந்து பேனா அமைப்பினரின் மொழிபெயர்ப்புக்கான 2012 ஆண்டு விருதினைப் பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது. மேற்படி தொகுப்பும் தமிழ் / ஆங்கில இருமொழித் தொகுப்பாக வெளிவந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

முனைவர் சேரனின் ஆர்வம் நாடு கடந்த தேசியம், நிர்ப்பந்திக்கப்பட்ட குடியேற்றம், புகலிட அடையாளங்கள் மற்றும் தமிழர் பற்றிய ஆய்வுகள் என்பவற்றை உள்ளடக்கியுள்ளது. இலங்கைத் தமிழர்களின் தேசியப் பிரச்சினைகளை முன்வைத்து இவரது ஆங்கில நூலான PATHWAYS OF DISSENT , TAMIL NATIONALISM IN SRI LANKA என்னும் நூல் மின்னூலாகவும், வன் அட்டை நூலாகவும் SAGE பதிப்பகத்தினரால் வெளியிடப்பட்டுள்ளது. தர்சன் அம்பலவாணர், செல்வா கனகநாயகம் ஆகியோருடன் இணைந்து இவர் பதிப்பித்த New Denarcations Essays in Tamil Studies என்னும் ஆங்கில நூல் ‘டொராண்டோ’வில் வெளியாகியுள்ளது.  மேலும் History and Imagination: Tamil Culture in the Global Context (2007), மற்றும் லக்சுமி விமலராஜாவுடன் இணைந்து எழுதிய Empowering Disporas: Dynamics of Post War Tamil Transnational Politics ஆகிய ஆங்கில நூல்கள் வெளியாகியுள்ளன (2011).   சேரன் கவிதைகள், கட்டுரைகள், ஆய்வுக் கட்டுரைகளுடன் நாடகங்களும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதி மேடையேற்றியுள்ளார். இவை சேரனின் பன்முக இலக்கியப் பங்களிப்பினை வெளிப்படுத்துவன.

சேரனின் கவிதைகள் காதல், போர், கடல் ஆகியவற்றை அதிக அளவில் அவற்றின் கூறு பொருள்களாகக் கொண்டிருக்கின்றன. இது தவிர ஈழத்தமிழர்களின் முப்பதாண்டுக் கால யுத்தத்தின் வடுக்களை விபரிக்கும் ஆவணப் பதிவுகளாகவும் விளங்குகின்றன. தமிழ் மக்கள் மீதான அரச பயங்கரவாதம் (யாழ் பல்கலைக்கழக மாணவன் விமலதாசன் படுகொலை, கேதீஸ்வரன் படுகொலை போன்றவற்றை விபரிக்கும் கவிதைகள்), தமிழ் அமைப்புகளுக்கிடையிலான உட்கட்சி மோதல்களின் விளைவான படுகொலைகள்,  மாற்றுக் கருத்துகள் மீதான படுகொலைகள்  (இறைகுமாரன், உமைகுமாரன் படுகொலை, ராஜினி திரணகமா படுகொலை போன்றவற்றை விபரிக்கும் கவிதைகள்), இந்தியப் படைகள் தமிழ் மக்கள் மீது நடாத்திய அநீதி மிக்க செயற்பாடுகள் படுகொலைகள், தமிழ்ச் சமூகத்தில் நிலவும் தீண்டாமைக் கொடுமைகள் (‘கைதடி 1979 கோபுரக் கலசமும், பனைமர உச்சியும்’ போன்ற கவிதைகள்), இலங்கை அரசு தமிழ் மக்களின் பண்பாட்டு மையங்களின் மீது நடாத்திய தாக்குதல்களை (‘இரண்டாவது சூரிய உதயம’ யாழ்ப்பாணப் பொதுசன நூலக எரிப்பையொட்டி எழுதப்பட்ட கவிதை) யுத்தகாலச் செயற்பாடுகளை (அரச படையினரின் தமிழ் மக்கள் மீதான ஆக்கிரமிப்பு, சட்ட விரோதக் கைதுகள், படுகொலைகள், தாக்குதல்களை விபரிக்கும் கவிதைகள்) இவரது கவிதைகளை வாசிக்குமொருவர் அறிந்து கொள்ளலாம். போராட்ட காலகட்டத்தில் தமிழ், இஸ்லாமிய மக்களிடையே நிலவிய முரண்பாடுகளைக் குறிப்பாகக் காத்தான்குடியில் பள்ளிவாசலில் தொழுகையிலிருந்தவர்கள் மீதான படுகொலையினை விபரிக்கும் ‘காத்தான்குடி’ கவிதை முக்கியமானதோர் ஆவணப்பதிவு. இவை தவிர காதல், யுத்தம், போராட்டம் பற்றிய தனி மனித உணர்வுகளை வெளிப்படுத்தும் கவிதைகளையும் இவர் படைத்துள்ளார். இவரது மொத்தக் கவிதைகளையும் இரு பிரிவுகளாக அகம், புறம் என்று பிரித்துப் பார்க்க முடியும். அக உணர்வுகளை வெளிப்படுத்தும் கவிதைகளை அகம் என்னும் பிரிவிலும், புறத்தில் நிகழ்ந்தவற்றை விபரிக்கும் கவிதைகளைப் ‘புறம்’ என்னும் பிரிவிலும் உள்ளடக்கிப் பார்க்க முடியும். இவரது புகழ்பெற்ற ஆரம்பகாலத்துக் கவிதைத் தொகுப்பான ‘இரண்டாவது சூரிய உதயம்’ தொகுதிக்கவிதைகளை ஒரு பதிவுக்காக இங்கு பிரசுரிகின்றோம்.

மேற்படி ‘இரண்டாவது சூரிய உதயம்’ தொகுதியானது சி. உதயகுமார், நா. சபேசன் ஆகியோரால் தொகுக்கப்பட்டு வயல் கலை இலக்கிய வட்டத்தினரின் காலாண்டுக் கவிதை இதழான ‘வயல்’ இதழின் முதலாவது இதழாக 1983இல் வெளியிடப்பட்டது. இந்த இதழுக்கான ஓவியத்தையும் சேரனே வரைந்துள்ளார். இதழின் முன்னுரையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 


வயல் கலை இலக்கிய வட்டம்

தமிழ் மக்களிடம் கவிதை பற்றிய ஆர்வம் அதிகரித்து வரும் இன்றைய சூழலில் ‘வயல்’ வெளிவருகிறது. சிற்றிலக்கிய ஏடுகள் மத்தியில் உள்ள ‘கவிதை’யைப் பரவலாக வெவ்வேறு மட்டங்களிலுள்ள மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் முயற்சி இது. ஈழத்து தமிழ் இலக்கியத்தில் கவிதைகளே முனைப்பாக்கம் பெற்றுள்ளதும் ‘வயல்’ கவிதையைப் பிரதானப்படுத்துவதன் காரணம் என்றும் சொல்லலாம்.

இதே அளவுடன் காலாண்டிதழாகத் தொடர்ந்தும் ‘வயல்’ வெளிவரும். ஒவ்வொரு இதழும் ஒரு தனிக் கவிஞருக்கு என ஒதுக்கப்பட்டுத் தெரிந்தெடுத்த கவிதைகள் இடம்பெறும். ‘வயலி’ன் தொடர்ந்த வருகைக்கு உங்களது பங்களிப்பும் தவிர்க்க முடியாதது. பிரதிகளின் விற்பனையிலும் சந்தாதாரர்களைச் சேர்ப்பதிலுந்தான் எங்களுக்கு உதவ முடியும். சந்தாதாரர்களைச் சேர்த்து உதவிய நண்பர்களுக்கு எமது நன்றிகள். தங்களையே உத்தரவாதம் கொடுத்து சந்தாக்கள் சேர்த்தவர்கள் அவர்கள்.

‘கவியரசன்’ என்று இலக்கிய உலகிலும், ‘சேரன்’ என்று பரவலாகவும் அறியப்பட்டுள்ள உருத்திரமூர்த்தி சேரனின் மூன்று நெடுங்கவிதைகளும் ஏழு சிறு கவிதைகளும் ஒரு பாடலும் இந்தத் தொகுப்பில் உள்ளன. இருபத்துநான்கு வயதான சேரன், சிறு கதைகள், விமர்சனக் கட்டுரைகள், பாடல்கள் எழுதியுள்ளார். நவீன ஓவியத்திலும் மிகுந்த ஈடுபாடு கொண்ட இவரது அரசியற் கவிதைகளின் ஒரு தொகுதியே இது. விஞ்ஞானப் பட்டதாரியான சேரனால் 1978-க்கும் 1982-க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் எழுதப்பட்ட கவிதைகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன. இவற்றில் ‘இரு காலைகளும் ஒரு பின்னிரவும்’, ‘மரணமும் வாழ்வும்’, ‘கோபுரக் கலசமும் பனைமர உச்சியும்’, ‘மயானக்காண்டம்’ ஆகிய கவிதைகள் முறையே அலை, புதுசு, பொதிகை, நுட்பம் ஆகியவற்றில் பிரசுரிக்கப்பட்டவை.
இத் தொகுதி பற்றிய உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்.

சி. உதயகுமார், நா. சபேசன் தொகுப்பாளர்கள்
மகாஜனாக் கல்லூரி வீதி, தெல்லிப்பழை, இலங்கை.


நாள்

மூங்கில்கள் நெரியும் கரை
மஞ்சளாய் நெளிகிற நதி
அக் கரையருகே நீ…..

எனது புரிதல் நிகழாதென்று
உனக்குத் தெரிந்தும்
உனது மொழியில்
உரத்துச் சொல்கிறாய்.
எனக்கு,
எனது மொழியில் தான்
பேச இயலும்.
உனக்குக் கோபம் வருகிறது
நான் என்ன செய்ய?

மீண்டும் மீண்டும்
உனது மொழியில் கடிதம் எழுதுவாய்,
சிரமம் எடுத்துப்
புரிந்து கொள்வதற்கான
குறைந்த பட்ச நேசமும் அற்றுப் போயிற்று;
இப் போதைக்கு நட்டம் எனக்குத்தான்
எனினும்,
நான் அவற்றை அடுப்பில்
போடுகிறேன்;
கிழித்தே எறிவேன்!

இனி –
அவர்கள், எனது மக்களும்
அதைத்தான் செய்வார்கள்.

காற்று வீசுகையில்
மூங்கில்கள் நெரியும் கரையில்
நெருப்புப் பற்றும்
பிறகு,
உனது வீட்டிற்கும் பரவும்.


இரு காலைகளும்
ஒரு பின்னிரவும்

இன்றைக்கு, இப்படித்தான்
விடியல்:
இருள் முழுதும் பிரியாது,
ஒளி நிறைந்து விரியாத
ஒரு நேரம்
விழித் தெழுந்து வெளியில் வரக்
கிணற்றடியின் அரசமரக் கிளைகளிலே
குயில் கூவும்;
‘ஓ’வென்று நிலத்தின் கீழ்
ஆழத்துள் விரிந்திருந்த
கிணறு,
சலமற்று உறங்கியது
என்மனம் போல.

இன்றைக்கு இப்படித்தான்
விடியல்!

நாளைக்கும்,
இப்படித்தான் விடியும்
என்று நினையாதே
பாதி ராத்திரியும் மெதுவாகப்
போனபின்பு, ‘கேற்’றடியில்
அடிக்குரலில் ஜீப் வண்டி உறுமும்,
சப்பாத் தொலிகள் தடதடக்கும்.
அதிர்ந்ததென
எம் வீட்டுக் கதவுகளோ
விரிந்து திறந்து கொள்ள,
அப்போதுதான்,
அடுத்தநாள் பரீட்சைக்கு
விரிவுரைக் குறிப்புகள்
விழுங்கிக் களைத்ததில்
விழிகள் மூடிய
அந்த இரவிலே –

‘அவர்கள்’ கூப்பிடுவது
கேட்கும். காதில்
ஊளையிடும் காற்று.
‘எங்கே அவன்’ என்று
கேட்பார்கள். கேட்கையிலே
பிழைபட்ட தமிழ், நெஞ்சில்
நெருட எழுந்து வரும்.

வார்த்தையற்று,
அதிர்ந்து போய்,
‘இல்லை’ எனத் தலையாட்ட
இழுத் தெறிவார்கள் ஜீப்பினுள்
நிறுத்தாத எஞ்சின்
அப்போதும் இரைந்தபடி.

பிஙகு – ?
பிறகென்ன, எல்லாம்
வழமைப்படி.

காலை; வெறும் சூரியன்.
வெய்யில்! நிலத்தில்
எனக்கு மேல்
புல்!

சிலவேளை – வீடுவந்து
கதவு திறப்பதற்காய்க்
குரல் காட்டித் திறக்கமுன்பு
இருமிச் சளி உமிழ
முகந் திருப்ப
உள் ளிருந்தும்,
அம்மா இருமும் ஒலி கேட்கும்!

கதவு திறப்பதற்காய்க்
காத்திருந்தேன்
வெளியுலகம்
இப்போதும் முன்போல
அடங்கி இருக்கிறது.


மரணமும் வாழ்வும்

இருள் மெதுவாகச்
சூழ்ந்து வருகையில்
மரங்களும் இலைகளும்
நிறங்களை இழந்தன.
அத்துவான் வெளியில்
முகில்கள்தான் சிதைந்தன
என்று தோன்றிற்று.

யார் நினைத்தர் இதை?

‘அடி வானத்தில் மிதந்தது புகை’
எனச் சொல்லி,
இதழ்கள் மூட முன்பு தொலைவிலிருந் தொரு குரல்;
கூக்குரல்,
பிறகு நெருப்பு –
காலையில்

ஆத்து வாழைகள்
பூத்துக் கிடந்ததில்
கத்தரிப் பூவாய் நீர்;
நிறம்பெற்றது வாவி;
அருகே
தொடர்வது பாதை…..

மாலையில்,
வருகிறார்கள்.
அவர்கள் மீதும்]
நெருப்புச் சுடரும்
அவர்களின் கைகளில்
வாட்கள் மினுங்கும்,
தன்னந் தனியனாய்
அவர்களை எதிர்த்து
ஒற்றை இறகுடன் பறந்தாய்!

உனது
தோள்களை வெட்டி
மண்டையைப் பிளந்து
குரல்வளை நரம்பில்
கத்தியால் கிழித்து
ஆற்றில் போட்டனர்…..!
குருதியில் நனைந்தது ஆறு

‘பிள்ளையான் தம்பி’

துறை நீலாவணை
வாவிக் கரையில்
புலம் பெயர்ந் தகலும்
கோடைக் காற்று,
உனது பெயரை எனக்கும்
ஒலித்தது;
கண்ணகி கோவில்
மரங்களின் கீழே
வெய்யிலில்,
உரத்து நெடுமூச்செறியும்
கருங்கற்களின் மீதும்
அலைகள்,
உனது நினைவை எழுதும்……

இப்படி,
உனது வாழ்வு
மரணத்தில் ஆயிற்று…..!

– ‘பிள்ளையான் தம்பி’ 1981 இனக் கலவரங்களில் அம்பாறைப் பிரதேசத்தில் கொல்லப்பட்டவர்களில் ஒருவர். –


ஒரு கவிதை

துப்பாக்கிகள் சுடுவதற்காகவா?
அல்லது குத்துவதற்கா?
வெயில் தொட,
மினுங்கும் கத்திமுனை ஒன்று
அதில் இருப்பது
உங்களுக்குத் தெரியுமென்று நம்புகிறேன்.
இம்முனையிலிருந்து அம்முனைவரையும்
மனிதர்கள் திரிகிற தெருவின் நடுவில்
விறைப்பாய்,
நீட்டிய துவக்குடன் நிற்கிற அவனைக்
கேட்கலாம்.
ஆனால், அவனோ
இறுகிய கையுடன் நகர்கிற மனிதரைக்
கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறான் –
உடனே என்றில்லா விட்டாலும்
ஒரு இளைஞன்,
அல்லது வேட்டியுடனான, நரை விழுந்த
ஒரு மனிதர்,
அல்லது ஒரு பாடசாலைப் பயல்
யாரென்றில்லை யாரையாவது
அவன் சுடலாம் என்றுதான் தோன்றுகிறது….
அவனைக் கேட்பது உசிதம் இல்லை,
நல்லது.
இரண்டாம் உலகப் போர்க்காலத்து
யப்பானியச் சிப்பாய்களைக் கேட்டாலோ,

“நிராயுத பாணிகளான மனிதரை
நெடு நேரம் சுடுதல் இயலாது;
சலிப்புத்தான் எஞ்சும்;
இன்னும்,
குழந்தைகள் பெண்கள் இவர்களைப் பொறுத்தும்
ஒரு மாறுதலுக்காகக்
கத்தி முனையைப் பாவிக்கலாம்” என்று
இடுங்கிய கண்களுடன்
அந்த நாளைய இரத்தம் தோய்ந்த
நினைவுகளோடு
அவர்கள் சொல்லக் கூடும்!

எல்லா இராணுவத்தானும்,
சிங்களவனோ
யப்பானியனோ
ஞேர்மனியனோ
துவக்குடன் ஒருவித நட்பை
ஆரம்பித்துக் கொள்கிறார்கள்!

இது உண்மைதான்
அந்தத் தெருவின் நடுவில்
நிற்கிற அவனையும்
அவன்பின் தொடர்கிற மற்றையவர்களையும்
பார்த்து,
இது முற்றிலும் உண்மை என உணருங்கள்.

ஒரு பிரியமான ஆட்டுக் குட்டியைப் போல
அல்லது ஒரு வளர்ப்புப் புறாவைப்போல
அதனைத் தாங்குகிறார்கள்…..
அனல் தெறிக்க
அதனைப் பற்றவைக்கிற போது
அவர்கள் தங்கள் அரசுக்கு
எவ்வளவோ நன்றியுடையவர்களாக
இருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்…..
அப்படி ஒன்றுமல்ல…..

அலவன்சுகளும் வசதிகளும் இங்கே
நெடுங்காலம் அவர்களைத்
தங்க வைக்க முடியாது…..

புரிகிறதா?

————————————————————-

இரண்டாவது
சூரிய உதயம்

அன்றைக்கு காற்றே இல்லை;
அலைகளும் எழாது செத்துப் போயிற்று
கடல்.

மணலில் கால் புதைதல் என
நடந்து வருகையில்
மறுபடியும் ஒரு சூரிய உதயம்.

இம்முறை தெற்கிலே –

என்ன நிகழ்ந்தது?
எனது நகரம் எரிக்கப்பட்டது;
எனது மக்கள் முகங்களை இழந்தனர்,
எனது நிலம், எனது காற்று
எல்லாவற்றிலும்
அந்நியப் பதிவு.

கைகளைப் பின்புறம் இறுகக் கட்டி
யாருக்காகக் காத்திருந்தீர்கள்?
முகில்களின் மீது
நெருப்பு,
தன் சேதியை எழுதியாயிற்று!
இனியும் யார் காத்துள்ளனர்?

சாம்பல் பூத்த தெருக்களிலிருந்து
எழுந்து வருக.


எனது நிலம்

சிறகுவலை விரித்த பரவைக் கடல்.
மேலே மூச்செறியும் காற்று
கடல் நடுவில்,
கலையும் தலைமயிரை
விரல்களாலழுத்தி நிமிர்கையிலெல்லாம்
கரை தெரிகிறது,
பனைமரமும் இடையிடையே ஓடுகளும்.

அலையும், எஞ்சின் இரையும்பொழுது
சிதறும் துளியும்……
ஒன்றரை மணி நேரம்
எப்படி முடிந்ததாம்?

பிறகு, மணல் நிமிர்ந்த வெளி
அதனுள் புதைந்த பனைகள்,
ஒவ்வொன்றும் ஓராள் உயரமெனக்
கன்னி மணல் மீது தலைநீட்டும்…
மணலோ,
கண்ணாடி விதையிட்டுச்
சூரியன் போய்க் குடியிருந்த
பொன்னின் துகள்….
அதன் கீழ் –
இரண்டாயிரம் ஆண்டுகள்
முன்பாக, என்முன்னோர் நடந்த
நிலப்பரப்பு.
ஒரு காலடி ஆனால்
ஓராயிரம் ஆண்டு
எம்வேர் நீண்டுள்ளது.

துயிலாது, இந்த அலைகரையில்
நின்று
விண்மீன் சிதறிக் கடலுள்
விழுகின்றதைப் பார்த்திரங்கிய ஒருத்தியின்
அல்லது
தொடுவான் வெளி பிளந்து
கரை சேரும் நாவாய்க்குக்
காத்திருந்த இன்னொருத்தியின்
வெறும் மார்பில் புரண்ட மணி ஒன்றில்
பின்மாலை, அந்திப் பொழுது
புடமிட்ட
தென்னோலை காற்றாடும் வெளியின்
மண் மூடிய சுவடுகளில்,
என்முன்னோர்
விட்டுப் போயுள்ளார்கள்
எனக்கொரு செய்தி;

நூறுநூறாயிரம் தோள்களின்மீது
ஏறி நின்று
எனது நிலம் என உரத்துச் சொல்கிறேன்.
ஏழு சமுத்திர வெளிகளைத் தாண்டி
அதன் மேல் எழுகிற அலைகளை மீறி
அதனைக் கொண்டு போய்,
எங்கும் ஒல்லிக்கிறது காற்று

“எனது நிலம்
எனது நிலம்”


கைதடி 1979
கோபுரக் கலசமும்
பனைமர உச்சியும்

நிர்வாணம் கொண்டு,
தமிழர்கள் அனைவரும்
தெருக்களில் திரிக!

மீண்டும் ஒருதரம்,
ஆதிமனிதனை நெஞ்சில் நினைத்திட
நிர்வாணம் கொண்டு
தமிழர்கள் அனைவரும்
தெருக்களில் திரிக!

கவனியுங்கள்……
நேற்றுமாலை என்ன நடந்தது?
கைதடிக் கிராமத் தெருக்கள் முழுவதும்
மனித விழுமியம், நாகரீகங்கள்
காற்றில் பறந்தன……
வரம்பு நிறைய இலைகள் பரப்பிய
மிளகாய்ச் செடிகள் கொலையுண்டழிந்தன!
தமிழர்களது மான நரம்புகள்
மீண்டும் ஒருதரம் மின்னால் அதிர்ந்தும்,
பாதிப்பற்று வெறுமனே இருந்தன.

கவனியுங்கள்……
பனைமர உச்சியும் கோபுரக் கலசமும்
உயரவே உள்ளன……
அரசியல் பிழைப்பில் ஆழ்ந்து போயிருக்கும்
அனைவரும் உணர்க…..
உங்கள் முதுகுநாண் கலங்கள் மீதும்
சாதிப் பிரிவினைப் பூஞ்சண வலைகள்…….!

கங்கை கொண்டு,
கடாரம் வென்று
இமய உச்சியில் விற்கொடி பொறித்துத்
தலைநிமிர்வுற்ற தமிழர் ஆளுமை
குனிந்த தலையுடன், அம்மணமாகத்
தெருக்களில் திரிக –

ஆலயக் கதவுகள்
எவருகாவது மூடுமேயானால்,
கோபுரக் கலசங்கள்
சிதறி நொருங்குக……!

மானுட ஆண்மையின்
நெற்றிக் கண்ணே
இமைதிற! இமைதிற!

கவனியுங்கள்;
அனைவரும் ஒன்றாய்……
பனைமர உச்சியும்
கோபுரக் கலசமும் உயரவே உள்ளன,
உயரவே உள்ளன!

யாழ்ப்பாணத்தின் சராசரி இதயமே,
உனது உலகம் மிகவும் சிறியது.
கிடுகு வேலி;
வேலியில் கிளுவை;
எப்போதாவது வேலியின் மீது
அழகாய்ப் பூக்கும்
சிவப்பு முள் முருக்கு.

யாழ்ப்பாணத்துச் சராசரி இதயமே,
ஆயிரம் ஆயிரம் கோவில் கதவுகள்
உன்னை உள்ளே இழுத்து மூடின.
மன்மதன் உடல்களாய்
அவைகள் எரியும்….
அதுவரை,

நிர்வாணமாக,
உயர்த்திய கையுடன்
தெருவில் திரிக.
தமிழர்கள்!
ஓ! இந்தத்
தமிழர்கள்……….!


மயான காண்டம்

அன்றைய இரவு
அடர்ந்தகான கறுப்புப் போர்வையுள்
பூமி இருந்ததாய் எனக்குத் தெரிந்தது
அதுவுமல்லாமல்,
வெளிச்சம் இருந்த ஞாபகமும் இன்றி
ஓலையின் அசைவு, ஒரு குழந்தையின் அழுகை,
தொலைவிருந் தெழுந்து வருகிற ரயிலின் நீண்டகுரல்,
ஒன்றுமில்லாது, ஒரு எழுதப்படாத சோகம்………………….

பாருங்கள்,
ஒரு கதை போல சனங்கள்
எனக்கு அதைச் சொல்ல முன்பு
அன்றைய இரவு நான் உணர்ந்த சோகம்
அதிசயமில்லையா?
முகமும், விழிகளும் இல்லாத வெறும் மனிதர்களுக்கு
அவனது மரணம் ஓர் செய்தி போல
நீளவும் தூக்கம் வரும்வரை
கதைக்கிற செய்தி…………

இன்றைக்கு இரவு அன்றுபோலல்ல
நிலவு தெறித்த இலைகள் சுவரில் மிதக்கின்றன
விளக்கில்லாத தெருவில் விட்டில்களுமில்லை…….
நான் இதை எழுதத் தொடங்கும் போது
முகமற்றவர்கள் தூங்கப் போய்விட்டார்கள்………….

அன்றிரா,
நான் போனபோது, வைத்தியசாலையின்
‘கேற்’ றின் வெளிப்புறம் குனிந்த தலையுடன்
நின்றனர் சிலர்.
மிக மெதுவாக உள்ளே சென்று
வைத்தியசாலையின் நீள நடந்து
மாடிப்பாடிகளை நுனிக்கால் கடக்க

18ஆம் வார்ட்
விறாந்தையில் கூட ஓரிரு கட்டில்கள்
விளக்கு வெளிச்சம், வெள்ளைச் சீருடை
அங்கேதான் உன்னை வளர்த்தியிருந்தனர்……..
வெண்முகில் பரப்பாய் உயரே இருந்து
கட்டிலின் விளிம்பு வரையும் தொங்கிய
வெண்ணிறத் துகிலை நீக்கி,
உடலைக் காட்டினாள் ஒருத்தி, மற்றவள்
ஒருபுறம் சரிந்து கிடந்த முகத்தை
ஓரக் கைகளால் அசைத்து நிமிர்த்தவும்…
ஒரு கணம்,
எனது குருதி நாடிகள் உறைந்து போயின
கால்களின் கீழே
பூமி பிளந்து சரிவதான உணர்வு எழுந்தது………….

என்ன விதமாய் இப்படி நிகழ்ந்தது…….?

உன்நிமிர்ந்த நடையும், நறுக்கிய மீசையும்
சுருண்டு கிடந்த குழல்களும்
எனது நினைவில் இருந்தன்
வடலிகள் விரியும் சுடலையின் பக்கமும்
கிழக்கே, பனைவெளிப் புறத்திலும்
அப்பால், உயனை வெளியிலும்,
உனது ஆடுகள் திரிய, அவற்றின் பின்
நீ சீட்டி ஒலியுடன் தொடர்தலும்
எனது நெஞ்சில் உள்ளது…….

செம்மண் நிலத்தின் மார்பு பிளந்து
வேர்விடும் கிளுவையைச் சிவப்புமுள் முருக்கைத்
தோண்டவே உயரும் அலவாங்கின் நுனி
எவ்விதம் உனது நெஞ்சுள் இறங்கிற்று…….
முன்னைய நாளின் நினைவுகள்
எனது நெஞ்சில் இருந்தன………

பொன் வண்டுகள் மினுங்கும் என்று
இலந்தை மரங்களை மேய்ந்து திரிந்ததும்,
மணிப்புறா பிடிக்க வைத்த கண்ணியில்
அடுத்த வீட்டுக் கோழிகள் நெரிந்ததும்
உனக்கும் தெரியும்.
மீண்டும் மீண்டும் பிள்ளையார் கோயிலின்
தீர்த்தக் கரையில் குந்தி இருந்ததும்
பயறு கொய்ததும்,
பாய் விரித்தது பசும்புல் என்று
படுத்துக் கிடந்ததும்,
அடுத்த வீட்டுச்
சந்திரன் ‘அலி’ எனச் சொன்னதில் அவனை
இழுத்து வந்து அப்பால் விரித்த
சணல் மரப்புதர்களுள் அவனைப் புரட்டி
இடுப்பில் இருந்து துணியை உருவித்
திகைப்புக் கொண்டதும், திரும்பிப் பறந்ததும்……..

இவற்றை மறத்தல் இயலுமா எனக்கு?
மேற்கே போனாய் நீ.
நான் இன்னும் கிழக்கே நடந்தேன்.
நண்ப, இன்று
இப்படித்தான் உனைக் காண நேர்கிறது :
“இரத்தமும் சதையும்
நிணமும் எலும்பும்…….”

அன்று,
வானை நோக்கி எலும்புகள் நீட்டிச்
செத்துப்போன ராட்சத மரமாய்
நெருப்பில் கருகி நின்றது வீடு……….

உனது வீட்டை இரவில் கொளுத்தினர்……..

சூரியன் பிளந்து சிதறும் குருதியாய்
கிடுகுகள் விலக்கி ஒளிரும் கதிர்களை
தெருவில் நின்று பார்க்க நேர்ந்தது…….

உனது நிலத்தை அவர்கள் பறித்தனர்………
இன்று,
உன்னைக் கொன்றனர்.
உன்னை அவர்கள் கொன்றனர்……

இன்றோ,
பழைய கதையை மீண்டும் பார்க்கிறேன்:
ஆவரசஞ் செடி, அதன்புறம் கள்ளி
ஆட்களே இன்றிச்
சூரியன் மட்டும் தனித்துப் போன இவ்வெளியில்
இன்றும்,
ஆள்காட்டிகளே கூக்குரல் எழுப்ப
உன்னை எரித்துத் திரும்பினர்.
பிறகு நாங்களும் !

நெருஞ்சி மலர்கள் மஞ்சளாய் நிமிர்கிற மண்ணில்
ஒருபிடி கூட உனக்குச் சொந்தம் இல்லை.
உனது அப்பன்,
பனையில் இருந்து தவறி வீழ்ந்ததில்
ஒரு கணப்பொழுதில் வார்த்தைக ளிழந்து
ரத்தமாய் உறைந்தவன்.
அவனது அப்பன்,
செத்துப் போனதும்
‘காய்க்கும் நன்றாய்’ என்பதனாலே
மாதுளம் பாத்தியுள் ஆழப் புதைந்தவன்.
இன்று, ஒன்றுமேயில்லை.
உன்னையும் வெட்டினர்
ஆயிரம் விரல்கள் உன்னை நோக்கித்
துவக்கு முனைகளாய் நீண்ட போதும்
கோடையில் வெடிக்கிற யாழ்ப்பாணத்தின்
பாலைமண்ணில் உறுதியாய் நிமிர்ந்தாய்……..

உன்னைக் கொன்றனர்……..
உன்னை அவர்கள் கொன்றனர்…….

எழுதப்படாத சரித்திரம்,
துயர் சூழ்ந்து,
ரத்தம் சிந்திய நிலங்களின் மீது
நெல் விளைகிறது; சணல் பூக்கிறது….
மழை பெய்கிறது……….!

நீ துயில்!
அந்நியர்கள் வந்து விட்டார்கள் என்பதையாவது
நான்,
அவர்களுக்கு நினைவூட்ட வேண்டும்……..


தொலைந்து போன நாட்கள்

நீ எங்கு போனாய்
என்பது தெரியாது;
நான் எங்கு போவேன்
என்பதும் அறியேன்.
தெருவிலே எமது
தலைவிதி உள்ளது.
உன்னையும் பிடிக்கலாம்
என்னையும் பிடிக்கலாம்
யார் இதைக் கேட்க?

அந்த இரவுகள்
அதற்குள் மறக்குமா?

21-04-1981

காலைநேரம்
முகில்களும் எழுந்து
திரியத் துவங்கிய
காலை நேரம்
காகமும், குயிலும் குக்குறுவானும்
கொல்லையின் திராட்சைத் தோட்டத்திலிருந்து
கூக்குரல் போட,
எழுந்து வருகிறார்.
வெய்யில் இன்னும்
நிலத்தில் இல்லை.
ஆயிரம் குருவிகள்
ஆயிரம் ஆயிரம் திராட்சைக் குலைகள்…….

எழுந்து வந்தவர்
மனிதர்.
அவரது பரந்த மார்பின் ரோமக்காடு
பெனியனை மீறி எட்டிப் பார்த்தது.
கொளுத்திப் போட்டார்
சீன வெடிகளை.
பறந்து போயிற்று பறவைக் கூட்டம்;
பிறகு வந்தது மிருகக் கூட்டம்.
அறைந்தன மார்பில்;
அதிர்ந்தது இதயம்
மாண்டு போனார்
மனிதர்.

22-04-1981

இரவு முழுவதும்
புகையிலை நிறைகிற குடிலுள் வேலை.
கொஞ்ச நேரம் படுக்கலாம் என்று
பாயை விரித்துச் சரிந்தாள்,
-‘ஈஸ்வரி’

வெளியில் விறாந்தையில்
அண்ணன் துயில்கிறான்.

காற்று மெல்லென
வேம்பினை வருடும்……..

இரவு மீண்டும் தோற்றுப் போகிற
இன்னொரு காலை விடிந்து கொள்கிற
நேரம்.
திடீரென
மூன்று ஜீப்புகள்
ட்ரக்குகள் மூன்று……
வாசலில் அதிர
சடாரென உடைந்தது
‘சங்கடப் படலை’
வாயைப் பிளந்து வீரிட்டபடி
கோடியுள் மறைந்தது
கறுப்புநாய்.

உள்ளே வந்தனர்.
அண்ணனை ஒருவன்
உதைத்து எழுப்பி
ஜீப்பினுள் உருட்டினான்.
ஈஸ்வரி துயின்ற பாயை இழுத்து
அவளது கூந்தலைப்
பிடித்து உலுப்பி

‘போடி வெளியே……

போனாள்! துவண்டு
போனாள்.

அன்று போனவன் அண்ணன்
இன்னும் இல்லை.
வேலியில் உலர்த்திய
வேட்டி காய்கிறது
வெய்யிலில் இன்னும்……..

23-04-1981

மீண்டும் அதே ‘கதை’

காலை.
திடீரென வந்தனர்
தலைமயிர் உதிரும்படி
அவன் தலையைச் சுவரில் மோதினர்.
மேசை அதிர்ந்து
கவிழ்ந்து கொண்டது.
அதன்மேல் இருந்த
தொய்வுக் குளிகைகள்
காலணியின் கீழ்
நசுங்கித் தேய்ந்தன……
நிலத்தின் மீது இரத்தம்
உறைந்தது.

நீ எங்கு போனாய்
என்பது தெரியாது
நான் எங்கு போவேன்
என்பதும் புதிர்தான்.

மறுபடி, மறுபடி
தொடர்வது இதேகதை!

எனது வீட்டின் முன்
ஒழுங்கையில் நின்றால்
காற்று வீசும்
நிலவு திரள்கிற நேரம்
கொஞ்சம் நடந்து திரியவும்
சுதந்திரம் இல்லை
காக்கி உடையில்
எவனும் வரலாம்
யாரையும் உதைக்கலாம்
யாரையும் சுடலாம்………

உனது வீட்டில் நெருப்பு வரும்வரை
உறங்கிக் கிடப்பாய்!
உறக்கம் கலையவும்
அவசரமாக எழுந்து வந்து
காணி உறுதியைப்
பத்திரப் படுத்துவாய்…….
தங்க நகைகளை
அப்புறப் படுத்துவாய்……
உனது பொருட்களை
மீட்டு எடுக்கிறாய்…….

அப்புறமாக
வெளியில் வந்து
வாசலில் நின்று
பக்கத்து வீட்டின்
சுந்தரம் பிள்ளையை, அல்லது
சண்முக சாமியை
உரத்த குரலில்
அழைத்துப் பார்ப்பாய்…….
ஒன்றுமே இராது.

சாம்பல்,
அதன் மேல் எலும்புகள்
தலைக்கு மேல் நீலமாய்
வானம்.

அதிர்ந்துதான் போவாய் நண்ப,
இருந்தும்
இனி உன்ன செய்யலாம்?
நாளை,
உனது நிலையும் இதுதான்…..

உனது நிலம்,
இதோ பரந்து கிடந்தது…….
தலையை விரிக்கும் பனைகளை
அதன் வழி, நுழைக்கிற நிலவை
அசைக்கிற காற்றை,
மலைகளை முடியிடும்
காட்டுப் பூக்களை
வயல்களில் நெளிகிற
தானிய மணிகளை,
உனது நிலத்தை
உனது மக்களை
நேசிக்கிறாய் ?

தெருவிலே எமது
தலைவிதி உள்ளதை,
நெருப்பிலே எமது
நாட்கள் நகர்வதை
அனுமதிக்கிறாய்?

‘இல்லை…..’

எழுந்து வெளியில்வா
தெருவில் இறங்கு
காலம், மறுபடி, மறுபடி
இரையும்……….

உனது வயல்களில்
நட்சத்திரங்கள்
உனது வாசலில்
நூறு மலர்கள்……!


யுத்த காண்டம்

எனக்கென்று ஒன்றுமில்லா
இவ்வெற்றுப் பிரபஞ்சத்தில்
மனதின் மெல்லிய நரம்புகள் மீது
அதிர்ந்தும் உரத்தும்
மரணம்,
தன்னுடைய முகங்களை அறிவிக்கிறது.

வயல் வெளிகளிலும்
சந்தித் திருப்பங்களிலும்
உறைந்து போன குருதி,
உறைந்து போன விழிகள்….

காலமும் நேரமும் காற்றும்
பெருமழையும்
கடலோரப் பெரு மணல் விரிப்பும்
இல்லாத ஓர் வெளியில்
மனித இருப்பை மறுத்துவிட்டுக்
குருதி படர்ந்து வருகிறது……

மனிதன் மீதான
நம்பிக்கையின் மரணத்தை
இப்போ அறிவித்து விடலாம்
ஒரு சொல்.
ஒரு வசனம்,
ஒரு நீண்ட தொடர்
போதும் எனக்கு.

‘நேற்று மனிதன் இறந்து விட்டான்’
அப்போ இருப்பது யார்?
பொலிஸ்காரர்களா?
மிருங்களா?
புல், புழு, பூச்சி, புளியம் இலைகள்,
நண்டுகள் மட்டுமா?

தோழர் இருவரின் உயிரற்ற உடல்கள்
என் நெஞ்சை உலுப்பியபோது
ஒருகணம்

மனித இருப்பில் நம்பிக்கை இழந்தேன்
உங்கள் மரண நெடிய ஊர்வலத்தின்
ஒவ்வொரு முகத்திலும்
இன்று இந்த,
ஆயிரம் தலைசூழ் நெடு மண்டபத்தின்
ஒவ்வொரு முகம், ஒவ்வொரு தலை
ஒவ்வொரு விழியிலும்
மக்களைப் பிரிந்த மனிதரின் மீதான
அதிருப்தியை எழுத
நான் விரும்புகிறேன்…!

நடுநிசி.
அமைதியோ அரவமோ
அதைப்பற்றி என்ன?

‘எழும்பு; நட்
திரும்பு’

தலைக்குள் நூறு சன்னங்கள்.
நெல்லும் சணலும் இல்லாது
முந்தநாள் உதிர்ந்த சிறுமழைத் தூறலில்
அறுகம் புற்கள் படரத் துவங்கிய
வயல் வெளிப் படுகையில்,
காற்றும் உறுமித் தன் கவலையைச்
சொல்ல,
விலாவையும், மார்பையும்
காதுப் புறத்தையும்
துப்பாக்கி வேட்டுகள் துளைக்க
நிமிர்ந்து,
பிணமாய்க் கிடந்தீர்.

மக்களைப் பிரிந்த தனிமனிதர்களின்
அராஜகத்தின் மேல் காறி உமிழ்கிறேன்!
போராளிகளை இருட்டிலே கொன்ற
துரோகத் தனத்தைப் பறைசாற்றுகிறேன்;

காற்றையும் மீறி
வலியது என் சொல்
நெருப்பையும் மிஞ்சிச்
சுடும் என் விழிகள்…….

அன்றொரு சுந்தரம்;
ஆட்களும் அடிக்கடி நகர்கிற தெருவில்,
ஓர் திரும்பலில்,
ஒரு கண அசைவும் சாத்தியமற்று
இறந்தவன்,
இன்றோ உமாவும் இறைவனும்,
இதுதான் வழியா?

எனது கண்முன் எமது தோழர்கள்
யுத்த காண்டத்தில்,
விழிகளுக்குப் பதில் நெருப்பு,
விரல்களுக்குப் பதில் துவக்கு,
இதயங்களுக்குப் பதில் இரும்பு.

தயவு செய் நிறுத்து!
இல்லையேல்
அநுபவி; துயர்ப்படு;
நொந்து சுருங்கு!
வெடித்துச் சிதறு.

உமா அல்லது இறைவன்
அவர்கள் மனிதர்கள்
உச்சியிலிருந்து உள்ளங்கால்வரை
விடுதலைக்காகத் தம்மை வழங்கிய
வீரப் போராளிகள்.

அதற்காக என்தலை ஒருமுறை குனியும்!

எனது நிலத்தை
எனது மொழியை
எனது மக்களை, எனது காற்றை
அந்நியன் காலின்கீழ் அடகு வைக்கிற
அண்ணன் மார்களை
இன்றைய கால உக்கிரச் சூழலில்
உறுதியோடு எதிர்த்தவன்

ஆதலால் என்தலை மறுபடி குனியும்!

விடுதலை உணர்வின் எழுச்சிக் குரலை
அபிவிருத்தியால் மூடி வைக்கிற
அரசியல் தலைவரை,
‘புத்தருடைய புனிதப் பல்லைக்
காவித் திரிந்து காவித் திரிந்தே
செத்துப்போ’
என
வன்னி மண்ணுக்கு அப்புறமாக
நாம் அடித்துத் துரத்திய
யானையின் முதுகின் பின்
விடுதலைச் சூரிய ஒளியை மறைக்கும்
பாராளுமன்ற அரசியல் தலைமையை,
பாராளுமன்றப் பாதையை,
வெறுத்து,
போராளிகளாகப் புறப்பட்டு வந்தீர்.

ஆதலால் என்தலை இன்னும் குனியும்!
நேற்று,
நானும் நீங்களும் ஒருவழி நின்றோம்!
நமது விடுதலைத் தடத்தில் சென்றோம்!
நமது மக்களை விழித்தெழு என்றோம்!
நமது தலைவரை ஒதுங்குக என்றோம்.
இன்றோ,
உங்களைக் கொன்றனர்.
நான் வழி தொடர்வேன்!
நூறு நூறாயிரம் துணைவர்கள் வருவர்,

மறுபடி மறுபடி தவறுகள் செய்பவர்
மனிதரேயல்லர்

மரணம் வாழ்வின் ஒரு முடிவல்ல-
உங்கள் சொற்களை விடவும்
செயல்களை விடவும்
உங்கள் மரணம் மிகவும் வலியது.


திருநாள் பாடல்-81

அதிகாலையின் பனி யாழ்நகர்மீது படிகிறது!
புனைமர உயரமும், பண்ணை வெளியும்
கண் தொடு மிடமெலாம் மறைகிறது….

ஒருநாளுமிலாத ஆழ்ந்த அமைதி கவிகிறது
திருநாள் இன்று எனினும்
துயர் சூழ்ந்த நாள் தொடர்கிறது….

தெருநீளம் எங்கும் துவக்கோடு வாகனம் திரிகிறது….
திரிவார்கள் மக்கள் எனினும்
அவர் வாழ்வோ இங்கு நடுத்தெருவில்….

மழையோ மணல்மீது வந்தால், என்றும் மறைகிறது
மனமோ இடிவந்த போதும்
இங்கு நிமிர்கிறது….

அதிகாலையின் பனி யாழ்நகர்மீது படிகிறது….