– மங்கை பதிப்பகம் (கனடா), ஸ்நேகா பதிப்பகம் (தமிழ்நாடு) இணைந்து வெளியிட்ட அமெரிக்கா தொகுதியானது ‘அமெரிக்கா’ என்னும் நாவலையும் (அளவில் சிறியதானாலும் இது நாவல்தான்) , சில சிறுகதைகளையும் உள்ளடக்கிய தொகுதியாகும். இவை அனைத்துமே ‘பொந்துப்பறவைகள்’ மற்றும் ‘மான் ஹோல்’ தவிர , கனடாவிலிருந்து வெளியான ‘தாயகம்’ பத்திரிகை, சஞ்சிகையில் பிரசுரமானவை (தாயகம் ஆரம்பத்தில் பத்திரிகையாகவும் , பின்னர் சஞ்சிகையாகவும் வெளியானது). முதற் பதிப்பின்போது ஒழுங்காக சரி, பிழை பார்க்காமல் போனதால் பல எழுத்துப்பிழைகள் ஏற்பட்டு விட்டன; சில வசனங்கள் விடுபட்டுப்போயின, மேலும் இந்நாவல் ஈழத்துத்தமிழ் அகதிகள் சிலரின் நியூயார்க்கிலுள்ள சட்ட விரோதக் குடிகளுக்கான தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்குமொரு நாவல். இந்நிலையில் மீண்டும் அத்தொகுப்பில் வெளியான ஆக்கங்களை சரி, பிழை பார்த்துப் ‘பதிவுகள்’ இணைய இதழில் பிரசுரித்தாலென்ன என்ற எண்ணம் தோன்றியது. அதன் விளைவுதான் ‘அமெரிக்கா’ என்னும் இந்நாவலின் மீள்பிரசுரிப்பு. இவ்விதம் பிரசுரிப்பதன் மூலம், அவற்றைச்சரி, பிழை பார்த்து, மீள எழுதுவதன் மூலம் அடுத்த பதிப்புக்குத்தயார் படுத்தலாம் என்றெண்ணுகின்றேன். அத்துடன் பதிவுகள் வாசகர்களும் அவற்றை இணையத்தின் மூலம் வாசிக்க வழி வகுக்கும் என்றுமெண்ணுகின்றேன். – வ.ந.கிரிதரன் – –
அத்தியாயம் மூன்று: புரூக்லீன் தடுப்பு முகாம்.
மழை விட்டும் தூவானம் விடவில்லை என்பது எங்கள் விடயத்தில் சரியாகி விட்டது. இரண்டு நாள்கள் ஹில்டன் ஹொட்டலில் வைத்திருந்தார்கள். பொஸ்டன் குளோப் பத்திரிகையில் எங்களைப்பற்றிய செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்துப் படத்துடன் பிரசுரித்திருந்தார்கள். ‘வோய்ஸ் ஒவ் அமெரிக்கா , பி.பி.ஸி ஆகியவற்றிலெல்லாம் எங்களைப்பற்றிய செய்தியை ஒலிபரப்பினார்கள். இலங்கை இனக்கலவரம் சர்வதேச வெகுசனத் தொடர்பு சாதனங்களில் பரபரப்பாக அடிபட்டுக்கொண்டிருந்த சமயத்தில்தான் எங்களது பயணமும் தொடங்கியிருந்தது. இதனால்தான் எங்களைப்பற்றிய செய்தியும் பிரபலமாகியிருந்தது. எங்களைப்பற்றிய பூர்வாங்க விசாரணைகள் முடிந்ததும் எங்களை நியூயார்க்குக்கு அனுப்பினார்கள். அப்பொழுதுகூட எங்களுக்குத்தடுப்பு முகாமுக்கு அனுப்பும் விடயம் தெரிந்திருக்கவில்லை.
பிரத்தியேக பஸ்ஸொன்றில் எங்களை நியூயார்க் அனுப்பியபொழுது ஏற்கனவே இரண்டு நாள்கள் ஆடம்பர ஹொட்டலான ஹில்டனில் இருந்த சந்தோசத்தில் நாங்கள் சந்தோசமாகவேயிருந்தோம். நியூயார்க் நகரைப்பற்றி, அதன் பிரசித்தி பற்றி இலங்கையிலேயே அறிந்திருந்தோம். அத்தகையதொரு நகருக்குச் செல்வதை நினைத்ததுமே நெஞ்சில் களிப்பு. பல்வேறு கனவுகள், திட்டங்களுடன் படம் விரித்தன. அன்று மட்டுமல்ல இன்றும் கூட என் நெஞ்சை ஒரு கேள்வி குடைந்தபடிதானிருக்கின்றது. பொஸ்டனில் ;பிடிபட்ட எங்களை எதற்காக நியுயார்க் அனுப்பினார்கள். பொஸ்டனில் தமிழ் அமைப்புகள் மிகுந்த செல்வாக்குடன் விளங்கின. இந்நிலையில் எங்களை அங்கேயே வைத்திருந்தால் அரசியல்ரீதியில் அமெரிக்க அரசுக்குப் பிரச்சினை வரலாமென்று அமெரிக்க அரசு எண்ணியிருந்திருக்கலாம் என்ற ஒரு காரணம்தான் எனக்குப்படுகின்றது.
பொஸ்டனிலிருந்து நியூயார்க்குக்கான எங்களது பயணம் எமக்கு இன்பமாகவேயிருந்தது. முதன் முதலாக ‘எகஸ்பிரஸ்வே’யில் பயணம். பல்வேறு வகைகளினான் ட்ரக்குகளை வியப்புடன் பார்த்தோம். அடிக்கடி இரண்டு ட்ரெயிலர்களை ஒன்றாக இணைத்தபடி செல்லும் ட்ரக்குகள் நெஞ்சில் ஆச்சரியத்தை விளைவித்தன. அப்பாடா, ஒரு வழியாக எதிர்ப்பட்ட தடைகளையெல்லாம் கடந்து விட்டோமென்று பட்டது. எல்லாரும் ஒருவிதமான ஆனந்தத்தில் மூழ்கியிருந்தோம். எனக்கு வீட்டு ஞாபகங்கள் எழுந்தன. எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் உழைத்து வீட்டுப்பிரச்சினைகளை முடித்து விடவேண்டும். தம்பியை மெதுவாக இங்கு இழுத்து விடவேண்டும். அக்காவின் திருமணத்தைக்கோலாகலமாக நடத்தி வைத்து விட வேண்டும். எல்லாவற்றையும் ஒரு வழியாக முடித்து விட்டுத்தான் கெளசல்யாவின் நிலையைப்பார்க்க வேண்டும். கெளசல்யாவின் நினைவுகள் நெஞ்சுக்கு இதமாகவிருந்தன். கெளசல்யாவுக்கு எத்தனையோ தடவைகள் எடுத்துக்கூறி விட்டேன். எனது பொறுப்புகள், பிரச்சினைகள் பற்றி விரிவாக விளங்கப்படுத்தி விட்டேன். அவள் பிடிவாதமாக என்னைத்தான் மணப்பதாகக் காத்து நிற்கப்போவதாகக் கூறுகின்றாள். இந்நிலையில் நானென்ன செய்ய? காத்து நிற்கும் பட்சத்தில் ஏற்பதைத்தவிர வேறு வழியில்லை.
நியூயார்க் நகருக்குள் நுழைந்தபோதும் எங்களுக்கு நிலைமை விளங்கவில்லை. பஸ் நியூயார்க்கின் வறுமை படர்ந்த பகுதியொன்றினுள் நுழைந்தபோதுதான் நெஞ்சை ஏதோ நெருடியது. வறுமையான தோற்றத்தில் விளையாடிக்கொண்டிருந்த கறுப்பினப்பிள்ளைகள் , பழமை வாய்ந்த கட்டடங்கள்.. இவ்விதமானதொரு பிரதேசத்தினூடு பஸ் சென்றபோது எங்களுக்கு நிலைமை விளங்காமற் போனாலும், எங்கேயோ பிழை யொன்றிருப்பது புரிந்தது. கடைசியில் பஸ் பழைமையானதொரு கட்டடம் ஒன்றின் முன்னால் சென்று நின்றது.
நாங்கள் எங்கள் உடைமைகளுடனிறங்கப் பணிக்கப்பட்டோம். அப்பொழுதும் எங்களுக்கு நிலைமை வடிவாகப்புரியவில்லை. ஐந்தாவது மாடியை அடைந்தபோதுதான் நிலைமை ஓரளவு புரிந்தது. நாங்கள் சென்றடைந்த பகுதி ஐந்தாவது மாடியில் அமைந்திருந்த வரவேற்புக்கூடம். சிறைக்காவலரைப்போன்ற தோற்றத்துடன் மேசையில் கோப்பொன்றில் மூழ்கியிருந்தவரிடம் எங்களை ஒப்படைத்த பொஸ்டன் குடிவரவு அதிகாரி ‘குட் லக்’ கூறிவிட்டுப்போனபோதுதான் சூழலின் யதார்த்தமே எங்களுக்கு உறைத்தது. ஏதோ ஒரு வகையான சிறையொன்றுக்கு நாங்கள் கொண்டு வரப்பட்டிருக்கின்றோமென்ற உண்மையை உணர்த்தியது.
கம்பிக் கதவுகளுக்குப் பின்னால் எங்களை ஆவலுடன் , சிறை ஆடைகளுடன் நோக்கியபடியிருந்த விழிகள் புரிய வைத்தன. சிறைக்காவலர்கள் ஆங்காங்கே காணப்பட்டார்கள். எங்கள் உடமைகளெல்லாம் எங்களிடமிருந்து நீக்கப்பட்டன. எங்களிடமிருந்த பணம் எடுக்கப்பட்டது. நாங்கள் அவ்விடத்திலிருந்து வெளியேறும் சமயத்தில் அவை மீண்டும் தரப்படும் எனக்கூறப்பட்டது. லோகன் சர்வதேச விமான நிலையத்தில் நடைபெற்றது போல் பூர்வாங்க சோதனைகள் நடத்தப்பட்டன. கைரேகைகள் எடுக்கபட்டன. ஒரு வழியாகச் சோதனைகளெல்லாம் முடிவடைந்த பின்னர் எங்களுக்குச் சிறை ஆடைகள் தரப்பட்டன. அணிந்து கொண்டு உள்ளே சென்றோம்.
‘”கிணறு வெட்டப் பூதம் கிளம்பிய கதைதான்” இவ்விதம் இராகசுந்தரத்தார் ஒரு வித விரக்தியுடன் கூறினார். “பனையாலை விழுந்தவனை மாடேறி மிதித்ததாம்” இவ்விதம் சிவகுமார் சலித்துக்கொண்டார். “ஊரிலை பிரச்சினையென்று வெளிக்கிட்டால்… இப்பிடி மாட்டுப்படுவமென்று தெரிந்திருந்தால் அங்கேயே கிடந்து செத்துத்தொலைத்திருக்கலாமே” இவ்விதமாக ரவிச்சந்திரன் முணுமுணுத்துக்கொண்டான். அருளராசா எதுவுமே பேசாமல் மெளனமாகவிருந்தான். “நடப்பதைப்பார்ப்போம்” இவ்விதம் கூறினேன்.
எங்களுக்குப் பின்னால் சிறைக்கதவுகள் மூடப்பட்டன. மல்லர்களைப்போல் கறுப்பினத்துக் காவலர்கள் ஆங்காங்கே காணப்பட்டார்கள். ஐந்தாவது மாடித்தடுப்புமுகாமின் கூடம், இணைக்கும் நடைபாதை, கூடம் என்னும் மாதிரியானதொரு அமைப்பில் காணப்பட்டது. ஒவ்வொரு படுக்கைக்கூடத்துக்கும் எதிராக ஒரு கூடம் பொழுது போக்குவதற்காகக் காணப்பட்டது. இப்பொழுதுபோக்குக் கூடத்தில் ஒரு மூலையில் தொலைக்காட்சிப்பெட்டி, ‘வென்டிங் மெஷின்’ (காடு போட்டுப்பொருளெடுக்கும் இயந்திரம்), டேபிள் டெனிஸ் விளையாட மேசை, தொலைபேசிகள் ஆகியவை காணப்பட்டன. படுக்கைகளுக்கான கூடத்தில் ‘பங்பெட்ஸ’ (Bunk Beds) .. கப்பல்களில், மாணவர் விடுதிகளில் இருப்பதுபோல் , ஒரு கட்டில்கள் ஒன்றுக்கு மேல் ஒன்றாகக்காணப்பட்டன. கூடங்களை இணைக்கும் நடைபாதைகள் பலமான இருப்புக்கதவுகளுடன் , காவலர்களுடன் காணப்பட்டன.
இரு கூடங்களையும் இணைக்கும் நடைபாதையுடன் சேர்ந்து குளியலறை, மலசலக்கூடம் ஆகியவை காணப்பட்டன. இது தவிர உணவுண்ணும் கூடம், தேகப்பயிற்சி செய்வதற்கான கூடம் ஆகியவையுமிருந்தன. நோய் வாய்ப்படும் சந்தர்ப்பத்தில் மருத்துவ வசதிகள் பெறுவதற்கான வசதிகளும் அளிக்கப்பட்டன. மருத்துவரின் அறை தடுப்பு முகாமின் முன் பக்கத்தில், வரவேற்புக் கூடத்துக்கு முன்பாக அமைந்திருந்தது.
எங்களது பகுதியில் தடுப்புக் கைதிகள் அனைவரும் ஆண்களே. பெண்கள் வேறொரு பகுதியிலிருந்தார்கள். உணவுக்காகக் காத்து நிற்கும்போது மட்டும் முன்னதாகவே உணவை முடித்து விட்டுச் செல்லும் பெண் கைதிகளைப் பார்ப்பதற்கு ஆண்கள் முண்டியடித்துக்கொள்வார்கள். இதற்காகவே சமையலறையில் வேலை செய்வதற்காகப்போட்டி போடுவார்கள். இவ்விதம் வேலை செய்தால் ஒரு நாளைக்கு ஒரு டொலர் சம்பளமாகத்தருவார்கள்.
[தொடரும்]
ngiri2704@rogers.com