அக்டோபர் கவிதைகள் -3

அக்டோபர் கவிதைகள் -3

 

1. பத்மினி சாகுமளவிற்கு உன்னை நேசித்தாள் சந்திரசோம

 

 

 

– தக்ஷிலா ஸ்வர்ணமாலி; தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை –

சந்திரசோம
நீ காலமானதும்
பத்மினி அழவில்லை
வேறு பெண்களென்றால்
நிலத்து மண் தின்று
உளறி உளறி ஓலமிட்டு
ஒப்பாரி வைத்தழுது
துயருறும் விதம் நினைவிலெழ
பத்மினி உன்னை நேசிக்கவில்லையென
கவலை கொண்டாயோ சந்திரசோம

எனினும்
நீயறியாய் சந்திரசோம
மூன்று நான்கு மாத காலத்துக்குள்
பேச்சு வார்த்தை குறைந்து
நடக்கவும் முடியாமல் போய்
திடீரெனச் செத்துப் போனாள்
பத்மினி

mrishanshareef@gmail.com


2. கவிதைகள்…

– செண்பக ஜெகதீசன் –

வியர்வை எழுதிடும்
உழைப்புக் கவிதை
உயர்வைத் தராதபோது,
கண்ணீர் எழுதும்
கசப்புக் கவிதை
காட்சியாய் அரங்கேறுகிறது..

அதுவும்,
அதற்கான பலனை
அளிக்காதபோதுதான்
அச்சேறுகிறது
இரத்தம் சிந்தும்
வேதனைக் கவிதை…!

vsnjag@gmail.com


3. இசையின் முகவரி

                –  வேலயையூர்-தாஸ் –

ஒளி இருளை விரட்ட ஆரம்பித்திருக்கிறது
கிழக்கில் சிகப்பழகை பூசிக்கொள்கிறது வானம்
மென் பனி பூமியை போர்த்திருக்கிறது

நட்சத்திரங்கள் மின்னும் மேகங்களிடையே
இசையின் அலகொன்று மிதந்து வருகிறது.

கேட்க்கின்ற காதுகளில் பரவசம்
அது மனவெளிகளில்
தொற்றி மீண்டும் மீண்டும்
சுழன்று கொண்டிருந்தது.

அது தருவது போதையா? பரவசமா?
ஆன்மீக அனுபவமா?
உலக ஞானத்தயும் ஒளியையும்
இசைவடிவாக செய்திருக்கிறார்களா?

மலைகளில் உருகி வழிகிற
நதியின் குழுமையையும்
கோடைகால தகிப்பும்
காதலைனை பிரிந்த
காதலியின் தாபமும்
உணர்ச்சிகளின் கலவையாய்
இந்த இசை வடிவை செய்தவர் யார்?

இந்த இசையின் நீட்சி என்ன
ஒரு காலத்தில் தோன்றி
யுகம் யுகமாய் தொடரும் காலங்களுக்குள்
இது எப்படி தொற்றிக் கொள்கிறது.
நிறையும் பிரபஞ்ச வெளிகளில்
கலந்தழியாது எப்படி தனித்துவ மாகிறது
மந்திரங்களின் சக்தியும்
மாயையின் அற்புதமும்
இதனுள்ளே எப்படி ஜக்கிய மானது

மனதை அடக்கி
முச்சை நிறுத்தி
உயிரின் முடிச்சு தேடி இழுத்து
உடலை நீங்கி
அந்த இசையில் கலந்தேன்

அருகில் இணைந்து
அதன் முகவரி கேட்டேன்

இசையின் பிறப்பிடம்
இறைவன்  இறைவன் என்றது

yarlelakiyakuviyam@gmail.com