என் பால்ய ,பதின்ம வயதுகளில் மேனாட்டு நாவலாசிரியர்களின் நாவல்கள் பலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளை நான் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்துள்ளேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த நாவல்களாக மார்க் ட்வைனின் ‘ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்’, ரொபேர்ட் லூயி ஸ்டீவன்சனின் ‘புதையல் தீவு’ என்பவற்றைக் குறிப்பிடுவேன். பின்னர் வளர்ந்ததும் ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் நாவலின் ஆங்கில; நூலினையும் வாசித்துள்ளேன். அண்மையில் முனைவர் ர.தாரணி ‘பதிவுகள்’ இணைய இதழுக்கு மார்க் ட்வைனின் சிறுகதையொன்றினைத் தமிழாக்கம் செய்து அனுப்பியபோது அவர் தமிழாக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உடனேயே ஒரு யோசனையும் தோன்றியது. அவரிடம் ஏன் அவர் ‘ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்’ நாவலைத் தமிழாக்கம் செய்யக்கூடாது என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் உடனடியாகவே மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். உடனேயே அத்தியாயங்கள் சிலவற்றையும் தமிழில் எழுதி அனுப்பியிருந்தார். அவருக்குப் ‘பதிவுகள்’ சார்பில் நன்றி. இந்நாவல் இனி பதிவுகளில் தொடராக வெளிவரும். வாசித்து மகிழுங்கள். உங்கள் கருத்துகளையும் அறியத்தாருங்கள். – வ.ந.கிரிதரன், ஆசிரியர் ‘பதிவுகள்’
அத்தியாயம் முப்பது
அவர்கள் தோணியில் ஏறியதும் முதல் வேலையாக ராஜா என்னை நோக்கி வந்தார். எனது மேல் சட்டையின் கழுத்துப் பட்டையைப் பிடித்து உலுக்கியவாறே என்னிடம் கேட்டார்:
“எங்களை விட்டு ஓட முயன்றிருக்கிறாய், இல்லையா, பையா? எங்களின் நட்பு உனக்கு சலிப்புத் தட்டிவிட்டதா? ஹாஹ்?”
நான் கூறினேன் “அப்படி இல்லை அரசே! நாங்கள் அப்படி நினைக்கவில்லை. தயை கூர்ந்து அப்படி நினைக்காதீர்கள், மாட்சிமை பொருந்திய மன்னரே!”
“நல்லது. அப்படியானால், நீ என்ன செய்ய முயற்சித்தாய் என்று கூறி விடு. இல்லாவிட்டால், உன் உடலில் உள்ளிருக்கும் அனைத்தையும் வெளியே உருவி விடுவேன்.”
“சத்தியமாக என்னவெல்லாம் நடந்ததோ அதை அப்படியே கூறிவிடுகிறேன், மேன்மை பொருந்திய ராஜாவே! என் கரத்தைப் பிடித்து அழைத்துச் சென்ற அந்த மனிதன் என்னிடம் மிகவும் அன்பாக இருந்தான். கடந்த வருடம் என் வயதில் ஒரு சிறுவன் இறந்து போனது பற்றி அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தான். அதே போன்றதொரு பயங்கரமான ஆபத்தில் இன்னொரு சிறுவன் இப்போது இருப்பதைப் பார்க்க அவனுக்கு வருத்தமாக உள்ளது என்று கூறினான். தங்க மூட்டையைக் கண்டதும் அனைவரின் கவனமும் சிதறி சவப்பெட்டியை நோக்கி ஓடிய சமயம், அவன் என் கையை விடுத்து, “ஓடிச் செல். இல்லாவிடில், அவர்கள் உன்னைத் தூக்கில் போடுவது நிச்சயம்.” என்று என் காதில் கிசுகிசுத்தான். எனவேதான் நான் அங்கிருந்து ஓட்டம் எடுத்தேன்.”
“அங்கேயே நிற்பது எனக்கு நல்லதல்ல என்று தோன்றியது. என்னால் எதுவும் செய்ய முடியாது. தப்பிக்காமல் அங்கேயே இருந்து தூக்கில் தொங்குவதை நான் விரும்பவில்லை. கண் மண் தெரியாது ஓடி இங்கே வந்து தோணியைக் காணும் வரை நான் ஓட்டத்தை நிறுத்தவில்லை. இங்கே வந்து சேர்ந்ததும் ஜிம்மை அவசரமாகத் தோணியை செலுத்தச்சொன்னேன். இல்லாவிடில், நான் பிடிபட்டு தூக்கில் தொங்க நேரிடும் என்ற பயத்தால்தான். நீங்களும், பிரபுவும் இறந்திருப்பீர்கள் என்று நான் அஞ்சினேன் என்றும் கூறினேன். உங்களின் பரிதாப நிலைக்காக நான் மிகவும் மனம் வருந்தினேன். ஜிம்மும் அப்படியே வருந்தினான். இப்போது நீங்கள் வந்து கொண்டிருப்பதைக் கண்டவுடன் நாங்கள் இருவரும் கட்டுக் கடங்காத மகிழ்ச்சியை அடைந்தோம். இது உண்மையா என்பதை ஜிம்மிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.”
அது உண்மை என்று ஜிம்மும் ஆமோதித்தான். ஜிம்மை வாயை மூடும்படி ராஜா கோபத்துடன் கூறினார். பின்னர் “ஓ! கண்டிப்பாக! நம்பக்கூடிய நல்ல ஒரு கதை இது!” ராஜா நக்கலாகக் கூறினார்.
மீண்டும் என்னை வலுவாக உலுக்கினார். என்னை இழுத்துப் போய் அந்த நீரில் மூழ்கடிக்கும்வரை விடப்போவதில்லை என்று ஆவேசப்பட்டார். ஆனால் பிரபு இவ்வாறு கூறினார்:
“அந்தச் சிறுவனை முதலில் விடு, முதிய முட்டாளே! நீ வேறு ஏதும் வித்தியாசமாக செய்திருப்பாயா? நீ தப்பித்து ஓடும்போது அவனைப் பற்றிக் கவலைப் பட்டாயா? நீ அப்படிச் செய்ததாக எனக்கு நினைவில்லை.”
எனவே என்னை அவரின் கைப்பிடியிலிருந்து விடுவித்த ராஜா அந்த ஊரில் உள்ள ஒவ்வொருவரையும் சபிக்க ஆரம்பித்தார்.
ஆனால் பிரபு கூறினார்: “முதலில் உன்னை நீயே நிந்தித்துக் கொள். ஏனெனில் நீதான் அனைவரையும்விட அந்த சாபங்களுக்கு அருகதையானவன். கற்பனையில் தோன்றிய அந்த நீல அம்புக்கு குறி பற்றிக் கூறியதைத் தவிர, ஆரம்பத்திலிருந்தே எந்த ஒரு அறிவுப்பூர்வமான காரியத்தையும் நீ செய்யவில்லை. அந்த அம்புக்குறி பற்றிச் சொன்னது கொஞ்சம் சமர்த்து வேலைதான். உண்மையில் அது நம்மை அந்த இக்கட்டிலிருந்து காப்பாற்றியது என்றுதான் ஒத்துக்கொள்ளவேண்டும்.”
“அது மட்டும் நீ கூறாதிருந்தால், அந்த ஆங்கிலேயனின் பெட்டிகள் அவனிடம் வந்து சேரும் வரைக்கும் நம்மை சிறையில் அடைத்து வைத்திருப்பார்கள். அதன் பிறகு ஆயுள் தண்டனை கொடுத்து நம்மை அங்கேயே அடைந்து கிடக்க நிச்சயம் செய்திருப்பார்கள். உன்னுடைய சிறு தந்திரம் நம்மைக் கல்லறைத் தோட்டம் வரை அழைத்துச் சென்றது. அதற்கும் மேல் நம்மைக் காப்பாற்றியது அந்த தங்கக் காசு மூட்டைதான். அதில் மதிமயங்கிய முட்டாள்கள் நம்மைக் கவனிக்காது விட்டதால், பின்னங்கால் பிடரி பட நாம் ஓடித் தப்பித்தோம். இல்லையேல், கழுத்தில் சங்கிலி மாட்டிக் கொண்டு இன்று இரவு மட்டுமல்ல, ஆயுள் முழுக்க அங்கேதான் கிடந்தது உயிரை விட்டிருக்க வேண்டும்.”
ஒரு நிமிடம் சிந்தித்தவாறு அவர்கள் அங்கே நின்றார்கள். பிரபு எதையோ மறந்தவராக, ராஜா கேட்டார்” “ஹ்க் உம் ! நாம் அந்த நீக்ரோக்கள் அல்லவா அதைத் திருடினார்கள் என்று நினைத்தோம்!”
அது என்னைக் கொஞ்சம் சங்கடத்தில் நெளிய வைத்தது.
“ஆம்” மிக மெதுவாக அழுத்தத்துடன் கொஞ்சம் நக்கலான தொனியில் பிரபு கூறினார் “நாம் நினைத்தோம்.”
ஒரு அரை நிமிடத்திற்குப் பிறகு ராஜா வார்த்தைகளை அழுத்தம் திருத்தமாக உச்சரித்தார் “கடைசிக்கு அவர்கள் செய்தார்கள் என்று நான் நினைத்து விட்டேன்.”
அதே தொனியில் பிரபு பதிலிறுத்தார் “ஓ. நான்தான் செய்தேன்.”
பேச்சின் தன்மையைக் குலைக்கும் விதமாக எரிச்சலுடன் ராஜா இவ்வாறு கூறினார்:
“இங்கே பார், பில்ஜ்வாட்டர்! என்ன சொல்ல வருகிறாய்?”
பிரபு பட்டென்று பதிலளித்தார்.
“நீ அவ்வாறு ஏதோ நினைத்துக் கொண்டு கூறுகிறாயே. நான் உன்னைக் கேட்கிறேன். நீ என்ன கூற வந்தாய்?”
“ஹ்ஹ்க்கும்” ராஜா கேலியாகக் கூறினார் “எனக்குத் தெரியாது. ஒரு வேளை நீ அசந்து தூங்கிக் கொண்டிருக்கும் போது என்ன நடந்தது என்று உனக்குத் தெரிந்திருக்காது.”
பிரபு சிலிர்த்துக் கொண்டு பதில் கூறினார்: “இந்த மடத்தனத்தை நீ மறக்கவே மாட்டாயா? நான் என்ன ஒரு வடிகட்டின முட்டாள் என்று நினைத்துக் கொண்டாயா?அந்த சவப்பெட்டிக்குள் யார் அதை ஒளித்து வைத்திருப்பார் என்று எனக்குத் தெரியாதென்று நினைக்கிறாயா?”
“ஆம் ஐயா! உனக்குத் தெரியுமென்று எனக்கும் தெரியும். ஏனென்றால் அதை ஒளித்து வைத்தவனே நீதானே!”
“பொய்யன்” பிரபு கோபத்துடன் கூறியவாறே, ராஜாவின் கழுத்தை இறுக்கிப் பிடித்தார். ராஜா கதற ஆரம்பித்தார்.
“ஐயோ! எனது குரல்வளையிலிருந்து உன் கையை எடு. நான் சொன்னதைத் திரும்ப எடுத்துக் கொள்கிறேன்.” ராஜா கெஞ்சினார்.
“நல்லது. இப்போதாவது உண்மையை ஒத்துக் கொள். நீதானே அந்த மூட்டையை சவப்பெட்டியில் ஒளித்து வைத்தது? இன்னும் சிறிது நாட்கள் கழித்து என்னை ஏமாற்றி விட்டு நீ மட்டும் போய் அந்த கல்லறையைத் தோண்டி அந்த மூட்டையை எடுத்துக் உனக்கு மட்டுமே வைத்துக் கொள்வதுதான் உன் உத்தேசம்.” என்று பிரபு கூறினார்.
“ஒரு நிமிடம் இரு, பிரபு! ஒரு கேள்விக்கு மட்டும் பதிலை எனக்கு நேர்மையாகக் கூறி விடு. நீ அதை அங்கே வைக்கவில்லையென்றால், அந்த உண்மையை மட்டும் கூறு. நான் உன்னை நம்புகிறேன். நான் உன்னைப் பற்றிக் கூறிய அவதூறு வார்த்தைகளைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன்.”
“ஏய், கிழட்டுப்போக்கிரி! நான் செய்யவில்லை. நான் செய்யவில்லை என்று உனக்கே தெரியும்.”
“நல்லது. அப்படியானால் உன்னை நம்புகிறேன். ஆனால் எனக்கு இன்னுமொரு கேள்விக்குப் பதில் கூறிவிடு. இப்போது கோபம் கொள்ளாதே. உண்மையில் அந்தப் பணத்தைத் திருடி ஒளித்து வைக்க நீ திட்டமிட்டாய் அல்லவா?”
ஒரு நொடி பிரபு எதையும் கூறவில்லை. பின்னர் சொன்னார்:
“நல்லது. அப்படியே நான் திட்டமிட்டிருந்தாலும், அதனால் என்ன பயன்? நான் அப்படிச் செய்யவில்லை. நீ கூடத்தான் அப்படிச் செய்ய நினைத்திருந்தாய். அதையும் நீ செய்யத்தான் செய்தாய்.”
“அப்படி நான் செய்திருந்தால், நான் செத்துப் போகவே விரும்ப மாட்டேன். அதுதான் உண்மை. அப்படிச் செய்யத் திட்டமிடவில்லை என்று நான் கூறமாட்டேன். நான் அப்படி நினைத்தது உண்மைதான். ஆனால் நீ …… அதாவது ….. வேறு யாரோ நம்மை முந்தி விட்டார்கள் என்று நினைக்கிறன்.”
“அண்டப்புளுகன்! நீ செய்திருக்கிறாய். செய்தது நீதான் என்று ஒத்துக் கொள்வது நல்லது அல்லது …………”
சிறிது நேரம் வாயிலிருக்கும் எச்சில் வெளியே தெறிக்கும்படி ராஜா ஏதோ உளறினார். பிறகு மூச்சு வாங்கியபடியே கூறினார்:
“போதும்! நான் ஒப்புக் கொள்கிறேன்.”
அவ்வாறு அவர் சொல்வதைக் கேட்டு நான் மிகவும் நிம்மதியடைந்தேன். அனைத்து விஷயங்களும் சுலபமாக முடிய இது போதுமானதாக இருந்தது. எனவே ராஜாவை மேற்கொண்டு தொந்தரவு செய்யாது விட்ட பிரபு கூறினார்:
“இனி எப்போதாவது இதை நீ மறுத்துப் பேசினால், உன்னை நீரில் மூழ்கடித்து விடுவேன். அந்த ஓரத்தில் நீ அமர்ந்து குழந்தை மாதிரி அழுவது உனக்கு நல்லது. குறிப்பாக, நீ இவ்வளவு தூரம் நடித்த பிறகு அது உனக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். கண்ணில் கண்டதையெல்லாம் பிடுங்கித் தின்னும் பேராசை கொண்ட இவ்வகையான ஒரு கிழட்டுத் தீக்கோழியை நான் இதுவரை கண்டதேயில்லை. உன்னை என் சொந்த அப்பா போலக் கருதி முழு நேரமும் உன்னை நம்பியிருந்தேன். உண்மையில் தன்னைத் தற்காத்துக் கொள்ள இயலாத ஒரு நீக்ரோ கூட்டத்தின் மேல் அங்கே நின்று பழி சுமத்த நீ வெட்கம் கொண்டிருக்க வேண்டும். இந்தக் கேவலமான நடிப்பை ஒரு இளிச்சவாயனாக நானும் நம்பிக் கொண்டு இருந்ததை நினைக்கும் போது அற்பமான கேலிக் கூத்தாக எனக்கு இப்போது தெரிகிறது. தொலைந்து போனவனே! மற்ற இடங்களில் நான் திட்டமிட்டு அடித்த பணத்தைக் கூட அந்த மூட்டையில் போட்டுக் குறைவாக இருந்த தொகையை நீ நேர் செய்ய நினைத்ததன் காரணம் இப்போது எனக்குத் தெளிவாகப் புரிகிறது.”
இன்னமும் மூக்கை உறிஞ்சியவாறே ராஜா மிகுந்த பணிவுடன் கூறினார்:
“என்ன பிரபுவே! இப்படிச் சொல்கிறாய்? குறைந்த தொகையை நிரப்ப நீதான் யோசனை கூறினாய். நான் அல்ல.”
“அழுவதை நிறுத்து. இது பற்றி நான் வேறு எதுவும் உன்னிடமிருந்து கேட்க விரும்பவில்லை” கூறினார் பிரபு “இப்போது உன்னுடைய திட்டத்தால் என்ன நடந்திருக்கிறது என்று பார். ஒன்றிரண்டு காசுகளைத்தவிர அவர்களுக்கே அனைத்துக் காசுகளும் கிடைத்து விட்டது. அதில் நம்முடைய காசுகள் வேறு சேர்ந்து விட்டது. சென்று படுத்துறங்கு. இனி நீ வாழும் காலம் வரை நஷ்டத்தைப் பற்றி ஒரு வார்த்தை கூட என்னிடம் பேசாதே.”
ராஜா ஒன்றும் பேசாது அந்தக் கூம்புக் குடிலுக்குள் பதுங்கிச் சென்று, தன்னைத் தானே தேற்றிக் கொள்ள மது அருந்த ஆரம்பித்தார்.
சிறிது நேரத்திற்குப் பிறகு பிரபுவும் தனது மது பாட்டிலைக் கையிலெடுத்துக் குடிக்க ஆரம்பித்தார். அடுத்த அரைமணி நேரத்திற்குள் இருவரும் நல்ல நட்புகளாக மாறிவிட்டார்கள். எந்த அளவு மது உள்ளே செல்கிறதோ, அந்த அளவுக்கு நட்பு அவர்களிடம் வளர்ந்தது. விரைவிலேயே அவர்கள் ஒருவரை ஒருவர் அணைத்தவாறு குறட்டை விட்டபடி தூங்க ஆரம்பித்தார்கள். மிக அதிக அளவு மது அவர்கள் குடித்திருந்தாலும், ராஜா மட்டும் அந்த போதையிலும் தான் அந்த பண மூட்டையை ஒளித்து வைக்கவில்லை என்று இன்னுமொருமுறை மறுத்துக் கொண்டிருந்தார்.
அது எனக்கு கொஞ்சம் நிம்மதியைக் கொடுத்ததுடன், விஷயங்கள் எல்லாம் திருப்திகரமாகத்தான் சென்று கொண்டிருக்கின்றன என்று எனக்குக் காட்டியது. அவர்களின் குறட்டையின் அளவு அதிகரித்ததும், ஜிம்மும், நானும் ஒரு நீண்ட உரையாடல் நிகழ்த்தினோம். அவனிடம் நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் கூறினேன்.
[தொடரும்]
– முனைவர் ர. தாரணி M.A., M.Phil., M.Ed., PGDCA., Ph.D. தமிழ்நாட்டில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தேவாரப்பாடல் பெற்ற சிவஸ்தலமான, திருப்புக்கொளியூர் என்று முன்பு திருநாமம் பெற்ற அவிநாசி என்ற ஊரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆங்கிலத்துறையின் தலைவராக பணியாற்றி வருகிறார். ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றது கல்வித்துறையில் அவர் தேர்வு செய்த விஷயம் என்றாலும் அவரின் பேரார்வம் மொழிபெயர்ப்பின் மீதும்தான். –
akilmohanrs@yahoo.co.in